Blog

  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (15)

    Sangeetha

    15.KALE

    Kale is the most popular of the greens these days: it’s delicious, versatile, and incredibly nutritious. Kale contains beta-carotene and the antioxidants lutein and zeaxanthin—which are associated with eye health—as well as potassium, vitamin A, vitamin C, fiber, iron, and calcium. Plus, you get 2 grams of protein in a serving.

    Fighting Disease
    Kale aids in releasing toxins in the body that can cause and lead to life-threatening diseases. It helps fight off and alleviate various cancers, especially colon, prostate and ovarian. The vitamin K helps with Alzheimer’s disease as it may forestall the effects of mental aging. The folic acid and B6 provide cardiovascular support and prevent heart disease.
    Detoxification and Weight loss
    The fiber (5 grams in one cup) and sulfur in kale aid with digestion and liver health. The Vitamin C it contains hydrates your body and increases your metabolism, leading to weight loss and healthy blood sugar levels. The fiber in kale also lowers cholesterol.

    One cup of kale has zero fat and only 36 calories and is high in vitamins and antioxidants.The vitamin A and C in kale improves your immune system and fights off viruses and bacteria. So if you feel like you’re getting a cold, add some kale to your diet. It helps more oxygen get to your blood and greatly helps those who are anemic.
    Vitamin A keeps your eyes from optical diseases that come with age. It also helps store vitamins in the retina. The calcium and vitamin K and D keep your bones strong. And if you have stiff joints, the Vitamin C keeps them flexible.

    KALE PORIYAL


    Heat oil in a pan, splutter mustard, cumin seeds, split black gram, dry red chili and curry leaves. Sprinkle asafoetida, add diced onions and garlic. Fry them till slightly translucent, add the chopped kale greens, turmeric and water. Let it cook uncovered for 6 minutes over medium flame or until all the water is absorbed. When it looks fully wilted and dry, add salt and garnish with coconut. Switch off and serve hot with rice.

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-24

     பெருவை பார்த்தசாரதி

    சென்ற மாதம் வெளிவந்த 23 வது தொடருக்குக் கிடைத்த வல்லமை வார விருது, என்னை மேன்மேலும் சிந்திக்க வைத்துவிட்டது. விருதை வழங்கிய எழுத்தாளர் மதிப்பிற்குறிய திவாகர் அவர்கள், தனது முன்னுரையில் “நேரத்தின் முக்கியத்துவத்தை”ப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது, நேரமும், காலமும் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, இந்த ‘பொன்னான நேரத்தை’ இந்த வாரத் தொடருக்காக அற்பணிக்கிறேன்.

    நேரம் கிடைக்கும் போது, அதைத் திட்டமிட்டுச் செலவிட்டால் அதன் பலனுக்கு எல்லையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரமுடியும். நேரத்தை நல்வழியில் செலவிடும்போது, பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது, நண்பர்களின் தொடர்பு விரிவடைகிறது, உறவினர்களுக்கிடையே இருந்த உறவு மேலும் பலப்படுத்தப்படுகிறது, புதிய சுற்றத்தார்களின் நட்பு கிடைக்க வாய்ப்புகள் வருகிறது. இதே நேரத்தை வாசிப்பிலே செலவிடும்போது, பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடிகிறது. நேரத்தைக் கணக்கிட்டு, சரியாகப் பயன்படுத்துபவர்கள் “நேரம் போவதே தெரியவில்லை’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா?… ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வழிகள் பல இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நேரத்தைச் சேமிக்க முடியும். நேரத்தைச் சிக்கனமாக்கி பயனுள்ள வழிகளில் சிந்தனையைச் செலுத்தும்போது, சிறிது நேரமாவது, இப்பிரபஞ்சத்தில் சந்தித்துக்கொண்டிருக்கும் தொந்தரவுகளிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும் அனுபவத்தை அனைவரும் உணரமுடியும். பரபரப்பான நம் வாழ்க்கையில், எல்லாவிதமான ஆடம்பரமும் அத்தியாவசியமாகிவிட்ட இன்று, எதையுமே விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இல்லாமல் ‘நேரம்’ என்பது பல சமயங்களிலெ வீணே வெகுசீக்கிரம் கழிந்துவிடுகிறது என்பதும் உண்மை.

    இன்றைக்கு, கிடைக்கும் நேரத்தில் நாம் அதிகமாக செலவிடுகின்ற இடம் இணையதளம், பொதுவாக அனைவரின் மனதையும் வெகுவாகக் கவரக்கூடிய தன்மையைப் பெற்றது. ஏனென்றால் வேறு எங்கும் தேடியது, இங்கு தேடாமலே கிடைக்கிறது. இவ்வாறு பயனடைபவர்கள், பயனை முழுவதுமாகப் பெற்றபின், தங்கள் கருத்துகளை பதிலாகத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லா வலைப்பூக்களிலும் “comments please” என்ற வாசகத்தைப் படைப்பாளர்கள் பதித்திருப்பார்கள். தனக்கு வேண்டிய அத்துணை தகவல்களையும் முழுமையாகப் பெற்ற பிறகு கூட நன்றி தெரிவிக்காமல் ‘பதில்’ என்கிற விசையை அழுத்துவதற்கே நேரமில்லை சார்’? என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தமக்கு வரும் அஞ்சல்களை திறந்து பார்ப்பதே கிடையாது. நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு,பல்லாயிரக்கணக்காண அஞ்சல்கள் பார்வைக்காக (Mail-Inbox) தேங்கியிருக்கின்றன, அவை அனைத்தையும் பார்க்க வேண்டுமானால் இனி மறுபிறவி எடுத்தால் கூட முடியாது. அஞ்சல் எழுதுவதாவது? படிப்பதாவது?..அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்பச்சுமை, இத்யாதிகள்… இதற்கே நேரம் போதவில்லை, சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்குவதற்கே நேரமில்லை, இதற்கெல்லாம் ஏது நேரம்?…….என்று அலுத்துக் கொண்டு மேட்ச் (cricket) பார்ப்பதில் மூழ்குபவரும் இருக்கிறார்கள்.

    யதார்த்த எழுத்தாளர் திரு லேணா தமிழ்வாணன் அவர்கள் நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு, நேரத்தைத் திட்டமிட்டு செலவிட பலவழிமுறைகளுடன் கையடக்கமாக ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டிருக்கிறார், நேரமிருந்தால் வாங்கிப் படித்துப் பயனை நேரத்தின் பயனை அனுபவிக்கலாம். நான் படித்த துணுக்கு ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவரிடம் எதைப் பற்றிக்கேட்டாலும் ‘நேரமில்லை’, ‘நேரமில்லை’ என்பாராம். இதற்கு அவருடைய நண்பர் ஒரு உபாயம் சொல்லியிருக்கிறார். உன்னுடைய மனைவி நிறையப் படித்தவர் ஆயிற்றே, உன்னிடம் இருக்கும் சில பொருப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாமே. அவசியம் ஏற்ப்பட்டால் அவரையே ‘பர்சனல் செகரட்டரியாக’க் கூட நியமிக்கலாம் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, ‘என்ன உங்கள் மனைவி உங்களுக்கு உதவிகரமாக செயல்படுகிறாரா’?.. என்றாராம். அதற்கு அவர் எல்லாம் சரியாய்ச் சென்றுகொண்டிருக்கிறது, என்னுடைய பாதி வேலையை அவளே கவனிக்கிறா…இப்ப அவ்வளவா!….நேரங்கறது……ஆனா……என்று இழுத்திருக்கிறார். என்ன ஆனா, ஆவன்னா பதில் சொல்லுங்கள் என்று நண்பர் அதட்டலாகக் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: ‘அவ என்னோட வேலைகளைச் செய்யும் போது, 24 மணி நேரமும் அவகூட நான் இருப்பதுதான் மிகவும் கொடுமையானது’ என்றாராம்.

    நம் மனதைக் கவருகின்ற ஒரு முக்கியச் செய்தியைப் பற்றி படிக்கும்போது, அச்செய்தியைப்பற்றி எங்காவது ஓரிடத்தில் நேரம் கிடைக்கும்போது குறித்து வைத்தோமானால் அது என்றைக்காவது ஒருநாள் எழுதுவதற்கு உதவும். நேரம் போகவில்ல்லை, வேறு எதுவும் வேலையுமில்லை, என்ன செய்வது, இப்படி தூக்கம் வராமல் படுக்கையில் புரள்பவர்கள் உடனே பேனாவை எடுத்து எதையாவது மனதில் தோன்றுபவைகளை எழுதிப் பாருங்கள், உடனே தூக்கம் வந்துவிடும். நமது குழந்தைகள் சில சமயம், புத்தகத்தை கையில் பிரித்தபடி வைத்துக்கொண்டு அப்படியே தூங்குவது இதற்கோர் உதாரணம். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கையில் எப்போதும் ஒரு பேனாவும், சிறிய நோட்டுப் புத்தகமும் இருக்கும். எங்காவது பொதுக்கூட்டங்களில் பங்கு பெறும்போது, சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும், சிறு சிறு குறிப்புகளையும், நீதிக்கதைகளையும் ஞாபகம் வரும்போதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போது, தனது உரையில் அச்சிறு குறிப்புகளை நினைவு கூறும் நற்பழக்கம் அவரிடையே இருந்தது.

    தங்களுக்கு தெரிந்த ஒரு தகவல், மற்றவருக்கு தெரிந்திருக்கும் என்று யூகிக்க முடியாது, அதேபோல், மற்றவர்களுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களையும் நாமும் அறிந்திருக்க வாய்ப்பில்லையாதலால், அறிந்தவைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க வழிவகுக்கிறது. இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும்போது நூலகத்தையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நிறைய படிக்கவேண்டியிருக்கும். படிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வதைவிட, கிடைக்கும் நேரத்தை படிப்பதற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்!………பண்டித நேரு அவர்களும், அண்ணல் காந்தி அடிகளும் நேரம் தவறாமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். அண்ணல் பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது, பிறந்த நாளையும், இறந்த நாளையும் கொண்டாடத் தவறியதில்லை. நமெகெல்லாம் காந்தியை நினைவிருக்கிறது, ஆனால் ‘காந்தியக்கொள்கை’ நினைவிருக்கிறதா?.. அண்ணல் அவர்கள் மனிதர்கள் மத்தியிலே தெய்வமாக வாழ்ந்தவர், இந்தியாவின் பிரதமர் பதவிக்கோ, ஜனாதிபதி பதவிக்கோ ஆசைப்படவில்லை, கடைசிவரை எளிமையாக ஒரு சந்நியாசியைப் போல வாழ்ந்து காட்டியவர். நேரம் தவறாமை என்பதும் அவரது கொள்கையில் ஒன்று. டால்ஸ்டாயின் பண்ணையில் பணிசெய்தபோது, பள்ளிச் சிறார்களுக்கு நேரத்தைச் செலவிடுவதற்கு திட்டமிட்டுக் கொடுத்தவர். பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழந்தைகள் ஏதாவதொரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் போன்றவர்களிடம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டார். பள்ளிக் குழந்தைகள் ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் இருக்க, தச்சுவேலை, நூல்நூற்றல், சமையல் போன்ற கைத்தொழிலை பள்ளிச் சிறார்களுக்குப் பயிற்றுவிக்க ஊக்குவித்தார். ஒருமுறை பொதுக்கூட்டத்துக்குச் செல்ல சற்று தாமதமாகி விட்டது. அவர் செல்லும் வழியில் ஒரு சைக்கிளில் சென்றவரிடம் அந்த சைக்கிளை இரவல் வாங்கி அவரே சைக்கிளை மிதித்துச் சென்று சரியான நேரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு நூலில் படித்திருக்கிறேன்.

    இதே போல் பண்டித நேரு அவர்கள் தனியாக லிஃப்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். பிறகு லிஃப்ட் சரிசெய்யப்பட்டு, வெளியில் வரும்போது அருகிலிருக்கும் அதிகாரிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “இனிமேல் எல்லா லிஃப்ட்களிலும் தவறாமல் ஒரு நல்ல விஷயங்களைத் தரக்கூடிய ஒரு தரமான புத்தகம் வைக்கப்படவேண்டும்” என்பதே. “எனக்குக் கிடைத்த இந்த அரிய அரைமணி நேரத்தில் நான் பல நல்ல விஷயங்களைப் படித்திருப்பேனே”?…….என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாராம். அன்றைக்கு இருந்த பெருந்தலைவர்களெல்லாம், நேரம் தவறாமைக்கு (punctuality) மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள், இன்று நாம் சொல்லிப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு நாளும் எப்படிக் கழிந்தது?..கழிந்த நாட்கள் திரும்ப வருமா?..என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம். ஒரு நாளில் இருபத்திநான்கு மணிநேரம் என்பது, அதில் உண்பதற்கு மூன்று மணிநேரம் (மூன்றுவேளை), அரசியல் கலந்த அலுவலகத்தில் பத்துமணி நேரம், மீதி இருக்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, இடையில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத வெட்டிப்பேச்சு, இத்யாதிகள் போன்றவற்றில் காலம் வீணே கழிந்து விடுகிறது. அனுதினமும், மூன்று வேளை உணவு உண்டு, இரவு தவறாமல் உறக்கம் செய்து மறுபடி திரும்பத் திரும்ப செய்த வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றோம்!…நமக்கு ஏதாவதொரு அற்பவிஷயம் தெரிந்து விட்டால் போதும், அதையே மறுபடி பேசிப்பேசி நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறோம், புதிதாக வேறு ஒன்றையும் கற்றுக் கொள்ள மனம் இயம்பவில்லை என்பதைச் சிந்தித்து மனம் வருந்துவதை!……..
    “உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
    உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
    கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
    கழிந்தன கடவுள் நாள் எல்லாம்”
    என்று நான்கு வரிகளில் மிக அழகாக ‘இறைவன் நமக்களித்த வாழ்நாள்’ என்றும், நித்தமதை வீணே கழிக்கிறோமே!……..என்றும், மாதுறவு நீக்கி மா-துறவு (மகத்தான துறவு வாழ்க்கை) விரும்பி ஏற்ற பட்டிணத்தடிகள் நம்மிடம் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.

    மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றி வாழுகின்றன. உணவு, உழைப்பு, உறக்கம் இம்மூன்றையும் காலத்தோடு செய்து முடிக்கிறது. இப்பூவுலகைச் சுற்றியுள்ள கிரகங்களும் இம்மி பிசகாமல் திட்டமிட்டால்போல செயல்படுகின்றன, ஒரு நிமிடம் அவை மாறிச் செயல்பட்டால் இவ்வுலகில் எத்தகய மாற்றம் நிகமும்!…என்பதைச் சற்று சிந்தித்தால் வியப்பாக இருக்கிறதல்லவா?….இவை யாவுமே கிரமப்படி, திட்டமிட்டபடி செய்ல்படுவதால்தான் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்யமுடிகிறது. இப்படி காலமும் நேரமும் இயற்கையோடு இணைந்து செயல்படுகின்றன. நிமிடங்கள் பலருக்கு பொருட்டே இல்லை, ஆனால் அதே நிமிடங்கள் சிலருக்குத் திருப்பு முனையாகவோ, சாதனையாளராகவோ மாற்றுவதற்குத் துணை போகிறது. மகாபாரதத்தில், அருச்சுனன் தவசு பற்றி அறியாதவர் இலர். சிவபெருமானிடமிருந்து ‘பசுபதாஸ்த்திரம்’ என்ற அரிய அஸ்த்திரத்தைப் பெற தன்னைத் முற்றிலுமாக நேரத்தைத் திட்டமிட்டு காலைமுதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில் தனது அன்றாட அலுவல்களை முறைப்படுத்தி ஒரு நாளில் கிடைக்கும் நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என மாற்றி அமைத்துக் கொள்கிறான். சாதாரண மனிதனைப் போலல்லாது, படிப்படியாக தனது உணவு உண்ணும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்கிறான். முதல் ஆறு மாதத்திற்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் மூன்று வேளை உணவு உண்கிறான், அடுத்த ஆறு மாதம், அதற்கடுத்த ஆறு மாதம் என்று படிப்படியாக ஒரு வேளை உணவைக் குறைத்து, பதினெட்டாவது மாதத்திலிருந்து முற்றிலும் உணவு உண்பதைத் தவிர்க்கிறான். கடைசியில் வெறும் தண்ணீரையும், காற்றையும் உண்டு, சுவாசித்து, ஒற்றைக்காலில் நின்று கடும் தவமிருந்து, அவன் நினைத்த பசுபதாஸ்த்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றதாக மாபாரதத்தில் தகவல் உள்ளது. இந்தச் சம்பவத்தை, இத்தருணத்தில் நாம் நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு மனிதனும் நேரத்தின் அவசியத்தை உணர்ந்து திட்டமிட்டு செயல்படமுடியும்.

    இந்த உலகத்தில் கண் இமைக்கும் நேரத்தில் என்னவெல்லாம் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவதொரு அதிசயம் நிகழ்வதாக கூறுகிறார்கள். நமது நினைவுகளை ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றால் அன்று நேரத்தைக் கணக்கிடுவதிலும், செலவழிப்பதிலும் அதிக சிரமம் இருந்தது என்பதை உணரமுடியும். ஏனென்றால் அன்று பொழுதைக் கழிப்பதற்கு பொழுது போக்கு சாதனங்கள் (Electronic gadgets) அவ்வளவாக இல்லை. அன்றய சூழ்நிலையில் இணையதளம் (Net), டிவி (TV), கணிணி (Computer), முகநூல் (Facebook) முதலியவை இல்லை. ஒரு நிமிடம்தானே என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம், ஆனால் இந்த ஒரு நிமிடத்தில் நடக்கும் ஒன்றிரண்டு அதிசயங்களைச் சற்று கூர்ந்து படிப்போம்: ஒரு நிமிடத்தில் இந்தியாவில் 54 ஜனனமும், 10 மரணமும் நிகழுகிறது, 780 அலைபேசிகள் (cellphones) உருவாக்கப்படுகின்றன, உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் வருமானம் 15,000 டாலருக்கு மேல், இணையதளத்தில் 7,75,000 பேர் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள், 141 மில்லியன் மக்கள் மெயில் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். முகநூலில் (Facebook) 50,000 பேர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, 1,35,800 பேர் தங்களது படங்களை தரவேற்றம் (uploading photos) செய்து கொண்டு, 5,10,000 கருத்துக்களும் (comments) எழுதப்படுகின்றன என்பதை இணைய ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இது போல் ஒரு நிமிடத்திற்குள் நடந்தேறும் இன்னும் பல ஆய்வுக் குறிப்புகளை நேரம் போவது தெரியாமல் அடிக்கிக் கொண்டே போகலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கின்ற நமது இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடித்திருக்கும், 15 முறை கண்சிமிட்டி இருக்கும். அற்ப ஜீவியான கொசு ஒரு நிமிடத்துக்கு 750 முறை தமது சிறகை அடித்துக் கொள்ளுகிறதாம். இத்தகய வியக்கத்தக்க அதிசயங்களை, சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும்படி கழிந்துகொண்டு இருக்கிறது. நேரம் கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள, படித்த, சேகரித்த நல்ல தகவல்கள், செய்திகள் போன்றவைகளை மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கின்ற பழக்கத்தைக் (Hobby) கடைபிடிக்கும்போது ‘இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமே!..என்ற ஆதங்கத்தை எழுத்தாளர்களாக இருப்பவர்கள் உணரமுடியும். ‘ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ என்ற பாடலும், ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், வீணாய் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என்ற திரையிசைப் பாடல்களின் வரிகளை நினைவு கூர்ந்து திட்டமிட்டு கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டால் எந்நேரமும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல நேரமாக அமையும் என்பதை உணரலாம்.

    தொடரும்………

    Share
  • செயற்கைக் கதிரியக்கம் ஆக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் & ஜோலியட் கியூரி தம்பதிகள்

    சி. ஜெயபாரதன்

     

    (1897-1956)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada

     

    புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி

    1903 ஆண்டில் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்தி ரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஐரீன் கியூரி, அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் இருவருக்கும் செயற்கைக் கதிரியக்கம் ஆக்கியதற்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டது. அப்போது ஐரீன் அருகில் அவரது புகழ் பெற்ற தாய் மேரி கியூரி அமர்ந்திருக்க வில்லை! அவர் ரேடியத்தின் வீரியக் கதிரியக்கம் பல்லாண்டுகள் தாக்கி ஓராண்டுக்கு முன் இரத்த நோயில் இறந்து போனார்! பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற முதற் பெண்மணி, மேரி கியூரி! இரண்டாவது பெண்மணி புதல்வி ஐரீன் கியூரி! தாய் உயிரோடு இருந்திருந்தால், நோபெல் பரிசு கிடைத்த புதல்வியைப் பெற்றதற்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் ?

    சில விஞ்ஞானிகள் வெறும் தத்துவ வாதிகள்! சில விஞ்ஞானிகள் சோதனைகளைத் திறம்படச் செய்யும் திறமைசாலிகள்! சில விஞ்ஞானிகள் மேம்பட இயக்கும் நிர்வாகிகள்! ஐரீன் ஜோலியட் கியூரி மேற்கூறிய முத்திறமும் படைத்தவர்! ஐரீன் பாரிஸ் கியூரி ஆராய்ச்சிக் கூடத்தின் ஆணையாளர். அங்கே தனியாக ஐரீன் கணவருடன் ஆய்வுகள் செய்தும் வந்தார்! பிரென்ச் அணுசக்திப் பேரவையில் ஓர் உறுப்பினர். அத்துடன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியர்! ஆய்வுக் கூடத்தில் ஐரீன் ஓர் யதேட்சை அதிகாரி! எதுவும் துப்புரவாகத், தூய்மையாகத், துல்லியதாக [Meticulous] இருக்க வேண்டுமென அவரது பதவி அதிகாரத்தைக் காட்டுவார்!

    கதிரியக்கம் கண்டு பிடித்து, உலகப் பெயர் பெற்ற மேரி கியூரி, பியரிக் கியூரி ஆகிய விஞ்ஞானத் தம்பதிகளுக்குப் பிறந்த மூத்த புதல்வி ஐரீன் கியூரி! இதுவரை யாரும் அடையாத இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்று, நவீன விஞ்ஞானத்துக்கு அடிகோலிய மேரி கியூரியின் அருமைப் புதல்வி, ஐரீன் கியூரி! ‘தாயைப் போல பிள்ளை’ என்ற முதுமொழியை மெய்ப்பித்து, முதன் முதல் செயற்கைக் கதிரியக்கத்தைச் [Artificial Radioactivity] செய்து காட்டி தாயைப் போல் தானும் தன் கணவருடன் 1935 இல் நோபெல் பரிசு பெற்றவர்! மூலக மாற்றத்தைப் [Transmutation of Elements] புரிந்து ஏராளமான கதிரியக்க ஏகமூலங்களைப் படைத்து [Radioactive Isotopes], மூலகங்களின் அணி அட்டவணையைப் [Periodic Table of Elements] பெரிது படுத்திய விஞ்ஞானப் பெண் மேதை, ஐரீன் ஜோலியட் கியூரி!

    தாய் மேரி கியூரியைத் தெரிந்த அளவுக்கு, தாயைப் போல் வாழ்வு முழுவதையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பபணித்த ஐரீன் கியூரியைப் பற்றி, பலர் அறிய மாட்டார்கள்! புகழ் பெற்ற விஞ்ஞானப் பெற்றோர்களால் புதல்வி ஐரீன் மறைக்கப் பட்டாள்! அவளுடன் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட அவளது விஞ்ஞானக் கணவன், பிரடெரிக் ஜோலியட்டால் அவள் பெயர் மறைந்து போனது! விஞ்ஞானி யில்லாத அவரது தங்கை ஈவ் கியூரி 1937 இல் தாயின் சரிதையைப் புத்தகமாக எழுதி, பலரைக் கவர்ந்ததால் ஐரீன் புகழ் சிறிது மறைவு பட்டுப் போனது! கதிரியக்கத்தை விளக்கி, நவீன விஞ்ஞானத்திற்கு பாதை வகுத்த மேரி கியூரியின் கால் தடத்தைப் பின்பற்றிச், செயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்கி, அணுவைப் பிளக்க அடிகோலிய ஐரீன் கியூரிக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும், மேரி கியூரியின் புகழ் பன்மடங்கு பெருகியதே தவிர, புதல்வியின் புகழ் உலகில் மறைந்தே கிடந்தது!

    ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் விஞ்ஞான வாழ்க்கை வரலாறு

    1897 செப்டம்பர் 12 ஆம் தேதி பாரிஸில் மேரி கியூரி, பியரி கியூரி விஞ்ஞானத் தம்பதிகளுக்கு ஐரீன் மூத்த புதல்வியாய்ப் பிறந்தார். இரண்டாம் புதல்வி பெயர் ஈவ் கியூரி. தாய்மைப் பணிகளை ஒருபுறம் கவனித்துக் கொண்டே, மறுபுறம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் கைவிடாது கண்காணித்து வந்தார், தாய் மேரி கியூரி. மேரியின் முக்கியப் பணி புதல்விகள் இருவருக்கும் உயர்ந்த கல்வியைப் புகட்ட ஆவன செய்வது.

    சிறிய வயதிலிருந்தே, ஐரீன் எதிலும் மிகத் திறமைசாலியாக மிளிர்ந்தாள்! கணிதத்தில் அவள் மித மிஞ்சிய சாமர்த்தியசாலி! பத்து வயதிலேயே ஐரீன் கணக்கில் கொண்டிருந்த வலிமை பளிச்செனத் தெரிந்தது! வல்லுநர்களின் பிள்ளைகள் பத்துப் பேருடன் ஒருத்தியாக, தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளியில் ஐரீன் படிக்கத் தொடங்கினாள். அப்பள்ளியின் ஆசிரியர்கள்: மேரி கியூரி, பெளதிக விஞ்ஞானி பால் லாங்கிவின் [Paul Langevin], ஜீன் பெர்ரின் [Jean Perrin] ஆகியோர்.

    செவைன் கல்லூரியில் [College of Sevigne] உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஐரீன் சார்போன் பல்கலைக் கழகத்தில் [Sorbonne, Now University of Paris] 1914 இல் கணிதமும், பெளதிகமும் பயின்றார். ஐரோப்பாவில் முதல் உலகப் போர் 1916 இல் துவங்கவே, ஐரீன் கல்லூரிப் படிப்புத் தடையுற்றது! அப்போது ஐரீன் தாய் மேரி கியூரியுடன் சேர்ந்து, போரில் காயப் பட்டவர்களுக்குப் பணி செய்ய, எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து முதல் உதவி செய்தாள். மேலும் ஐரீன் அப்பணியைப் பிரான்ஸ், பெல்ஜியம் ராணுவ மருத்துவக் கூடங்களில் நீடித்து, எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ எற்பாடு செய்தாள். அவ்வரிய சமூக சேவை யானது பாராட்டப் பட்டு, ஐரீன் ராணுவப் பதக்கத்தைப் பெற்றாள்.

    பிரடெரிக் ஜோலியட் 1900 ஆம் ஆண்டில் பாரிஸில் பிறந்தவர். சிறு வயதில் விளையாட்டுப் பிள்ளையாய்த் திரிந்து குடும்பத்தின் சொத்து, சுகங்கள் கரைந்து போகவே, பிரடெரிக் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய தாயிற்று! பெளதிகத் தொழிற்துறைக் கல்லூரியில் பொறியியல் பயின்று, பட்டம் பெற்று முதல்வராகத் தேர்ச்சி அடைந்தார். ராணுவச் சேவை செய்த பிறகு, ஆராய்ச்சி செய்ய அவருக்கு உபகார நிதி வெகுமதி யாகக் கிடைத்தது.

    1918 இல் 21 வயதாகும் போது, ஐரீன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் கியூரி ரேடிய ஆய்வுக் கூடத்தில் [Curie Radium Institute], தாயின் துணையாளி ஆகப் பணிபுரியச் சென்றாள். அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுத்து ‘போலோனியத்தின் ஆல்ஃபாக் கதிர்கள் ‘ [Alpha Rays of Polonium] என்னும் விஞ்ஞானக் கோட்பாடை எழுதி, 1925 இல் டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு பெளதிக விஞ்ஞானி பால் லாங்ஜிவின் சிபாரிசின் பேரில் மேரி கியூரியிடம், உதவி விஞ்ஞானியாய் ஆராய்ச்சி புரிய வந்தார், பிரடெரிக் ஜோலியட் [Frederick Joliot]. ஆய்வுக் கூடத்தில் கதிரியக்கச் சூழ்நிலையில் பணி செய்ய, அவருக்கு முன்னறிவிப்பாய் சோதன முறைகளைச் சொல்லிக் கொடுக்கும் முதல் வேலை ஐரீனுக்குத் தரப்பட்டது! ஐரீன், பிரடெரிக் இருவரும் விஞ்ஞானம், கலைத்துவம், மனிதத்துவம், விளையாட்டு, பொழுது போக்கு ஆகியவற்றில் ஒரே மாதிரி ஆர்வத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் காதல் வயப்பட்டு 1926 அக்டோபர் 28 இல் மணம் புரிந்து, தாய் தந்தையரைப் போன்று விஞ்ஞானத் தம்பதிகள் ஆயினர்! 1928 முதல் ஐரீன், பிரடெரிக் இருவரும் ஒன்றாய் இணைந்து நீண்ட நேரம் விஞ்ஞான ஆராய்ச்சிகள் புரிந்தனர்! 1930 இல் பிரடெரிக் ஜோலியட் எழுதியக் கதிர் மூலகங்களின் மின்னியல் ரசாயனக் [Electrochemistry of Radio Elements] கோட்பாடுக்கு டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். ஐரீன் பிரடெரிக் தம்பதிகளுக்கு ஹெலென் [1927] என்ற புதல்வியும், பியர் [1932] என்ற புதல்வனும் பிறந்தனர்.

    ஐரீன், பிரடெரிக் தம்பதிகள் ஆக்கிய செயற்கை மூலகங்கள்

    பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் 1896 இல் யுரேனிய உப்பு எக்ஸ்ரே போல் கதிர்வீசுவதை முதலில் ஆராய்ச்சியின் போது கண்டார். அதைத் தொடர்ந்து மற்ற தாதுக்களை ஆய்வு செய்த மேரி, பியர் கியூரித் தம்பதிகள் 1898 இல் ஆல்ஃபாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் வீசும் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] ரேடியம், போலோனியம் ஆகிய இரண்டு கதிரியக்க மூலகங்களை முதலில் கண்டு பிடித்தார்கள். ஆல்ஃபாத் துகள் ஓர் ஹீலிய அணு. பீட்டாத் துகள் எதிர்மின் கொடை [Negative Charge] உள்ள ஓர் எலக்டிரான். காமாக் கதிர்களுக்கு எக்ஸ்ரே [X-Rays] போன்று எந்த வித மின்கொடையும் கிடையாது. அடுத்து 1932 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] அணுக்கருவுள் இருக்கும் நியூட்ரான் என்னும் புதிய துகளைக் கண்டு பிடித்தார். நியூட்ரான் துகளுக்கும் எந்த வித மின் கொடையும் இல்லை! அதே ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டேவிட் ஆன்டர்ஸன் நேர்மின் கொடை யுடைய பாஸிட்ரான் துகளைக் [Positron] கண்டு பிடித்தார். அதன் இருக்கையை ஐரீன் பிரடெரிக் தம்பதிகளும் சோதனை மூலம் நிரூபித்து உறுதிப் படுத்தினர்.

    இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] மூலக மாற்றம் புரிய ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் அவருக்கு 1929 இல் உதவி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow], விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் ரசவாதம் அல்லது மூலக மாற்ற முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பயன்படுத்திப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

    அணுவின் மையமான அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் உள்ளன. சூரியனை மையமாகக் கொண்டு, அண்ட கோளங்கள் சுற்றி வருவதைப் போல், அணுக்கரு நடுவை எலக்டிரான்கள் சுழல்வீதியில் [Orbits] சுற்றி வருகின்றன. புரோட்டான் நேர்மின் கொடையும் [Positive Charge], எலக்டிரான் எதிர்மின் கொடையும் [Negative Charge] கொண்டவை.

    நியூட்ரானுக்கு எவ்வித மின் கொடையும் [Neutral Charge] இல்லை! ஓர் மூலகத்தின் புரோட்டான் எண்ணிக்கை அணு எண் [Atomic Number] என்றும், புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை நிறை எண் அல்லது பளு எண் [Mass Numer] என்றும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்களின் அணுக்கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்து, நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டிருந்தால், அவற்றை ஏகமூலங்கள் [Isotopes] என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரே அணு எண்ணைக் கொண்டு வேறுபட்ட நிறை எண்களைப் பெற்ற மூலகங்களை நிலையான மூலகத்தின் ஏகமூலங்கள் என்று சொல்கிறார்கள்.

    ஐரீன் கியூரியும் பிரடெரிக் ஜோலியட்டும் மூலக மாற்றத்தில் [Transmutation of Elements] புரிந்த அரும் பெரும் விஞ்ஞானச் சாதனைகள் என்ன ? அவர்கள் இருவரும் மேரி கியூரி, பியர் கியூரித் தம்பதிகள் போல் நோபெல் பரிசு பெறும் அளவுக்கு, ரசாயனத்தில் ஆக்கிய தென்ன ? ஐரீனுடைய பெற்றோர்கள் தனித்தெடுத்த ரேடியம், போலோனியம் என்னும் இரண்டு சுயமாய்த் தேயும் மூலகங்களில் [Spontaneous Decay of Elements], ரேடியத்தை விடப் போலோனியம் பதினாறு மடங்கு மித மிஞ்சி நிலையற்று [Highly Unstable], அதன் அணுக்கரு வேகமாய்த் தேய்வடைகிறது! அதாவது ஒரே அளவு எடை எடுத்துக் கொண்டால் போலோனியம், ரேடியத்தை விட அதி வேக முள்ள ஆல்ஃபாத் துகளை அதிக எண்ணிக்கையில் வெளியாக்குகிறது! ஆல்ஃபாத் துகள் என்பது ஹீலிய அணுவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

    1934 ஆம் ஆண்டில் ஐரீன், பிரடெரிக் இருவரும் செய்து காட்டிய ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ [Artificial Radioactivity] என்பது என்ன ? தம்பதிகள் தமது ஆராய்ச்சியின் போது போரான், அலுமினியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தனித் தனியாக [Boron, Aluminium, Magnesium], அதி வேக ஆல்ஃபாத் துகளைக் கணையாகக் கொண்டு தாக்கிய போது இதுவரை யாரும் அறியாத விந்தை விளைவுகளைக் கண்டார்கள்! முதல் இயக்க முடிவில் கதிர்வீசும் புதிதான நைட்ரஜன் மூலகம் [Radioactive Nitrogen] உண்டானது! அதாவது போரான் மூலகம் நைட்ரஜனாக மாறி விட்டது! இது ஓர் மூலக மாற்றம்[Transmutation of Element], அல்லது ரசவாதம் [Alchemy] என்று சொல்லப் படுகிறது. இந்த அணுக்கரு இயக்கத்தின் சிறப்பு என்ன வென்றால், நைட்ரஜன் கதிரியக்கம் கொண்டிருந்தது! ரேடியம், போலோனியம் போல் அணுக்கருச் சிதைவு அடைந்து தேய்ந்தது! அதன் அரை ஆயுள் [Half Life], அதாவது பாதி நிறை யாகும் காலம் சுமார் 10 நிமிடம்! மேலும் அக்கதிரியக்கம் செயற்கை முறையில் ஆக்கப் பட்டது! முதல் இயக்க விளைவில் உண்டான நைட்ரஜன்13, நிலையற்றுத் தேய்ந்து கதிர் வீசியது! நிலையற்ற நைட்ரஜன்13 நிலையான நைட்ரஜன்14 மூலகத்தின் ஓர் ஏகமூலம் [Unstable Nitrogen13 is an isotope of the stable Nitrogen14].

    [போரான்10] + [ஹீலியம்4] –>[நைட்ரஜன்13]* + [நியூட்ரான்1]

    [அலுமினியம்27] + [ஹீலியம்4] –>[ஃபாஸ்ஃபரஸ்30]* + [நியூட்ரான்1]

    [மக்னீஷியம்24] + [ஹீலியம்4] –>[சிலிகான்27]* + [நியூட்ரான்1]

    [எண்கள் நிறை எண்ணைக் (Mass Number) குறிப்பன. (*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள்]

    அடுத்து அலுமினியம், மக்னீஷியம் ஆகிய உலோகங்களைத் தனியே வைத்து ஆல்ஃபா கணைகளைக் கொண்டு தாக்கியதில், அவையும் மாற்றப்பட்டு புதிய செயற்கை மூலகங்கள் அணுக்கரு இயக்கங்களில் விளைந்தன! அவை முறையே ஃபாஸ்ஃபரஸ்31, சிலிகான்28 நிலையான மூலகங்களின் ஏகமூலங்கள். அத்துடன் ஃபாஸ்ஃபரஸ்30, சிலிகான்27 ஆகிய இரண்டு புது மூலகங்களும் கதிரியக்கம் உள்ளவை! ஜோலியட் தம்பதிகள் ஆக்கிய அவ்வரிய மூலக மாற்றங்களைப் பின் தொடர்ந்து, சுமார் 700 மேற்பட்ட கதிர் ஏகமூலகங்கள் [Radio Isotopes] உண்டாக்கப் பட்டு, மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] பின்னால் சேர்க்கப் பட்டன!

    செயற்கை மூலக மாற்றக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசவாதிகள் [Alchemists] தாமிரம், பித்தளை போன்ற அடித்தள உலோகங்களை மாய மந்திரம், போலி ரசாயன முறைகளைக் கையாண்டு, அவற்றைத் தங்கமாக மாற்றப் பல முறை முயற்சி செய்தார்கள்! ஐரீன், பிரடெரிக் பழைய ரசவாத முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்து, செயற்கை விஞ்ஞான முறையில், மூலக மாற்றத்தைச் [Transmutation of Elements] செய்து காட்டினர்! ரேடியம், போலோனியம், யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்கள் இயற்கையில் தாமாகவே சிதைந்து தேய்ந்து கதிர்களைக் கக்கி, வேறுவித உலோகங்களை விளைவித்தன! அந்த அணுக்கரு இயக்கங்களை விஞ்ஞான மேதைகள் பெக்குவரல், மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோர் ஆராய்ச்சியின் போது கண்டு பிடித்தனர்! இப்போது ஐரீன், பிரடெரிக் இருவரும் செயற்கை முறையிலும் புது மூலகத்தை, கதிர்வீசும் மூலகத்தை உண்டாக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினர்! அவ்வரியச் செயற்கைக் கதிரியக்கத்திற்கு ரசாயன விஞ்ஞானத்தின் நோபெல் பரிசையும் 1935 இல் பெற்றார்கள்.

    Carbon Isotopes

    அடுத்து நேர்மின் கொடையுள்ள புரோட்டான்களை [Positively Charged Protons] மின்காந்தத் தளங்களில் கணைகளாய்த் துகள் விரைவாக்கிகளில் [Particle Accelerators] வேகப் படுத்தி, குறியாக மற்ற உலோகங்களை வைத்துப் புது மூலகங்களை விஞ்ஞானிகள் உண்டாக்க ஆரம்பித்தனர். அப்பணியில் கணைகளை வேகப் படுத்த ‘நேரடி விரைவாக்கிகள் ‘ [Linear Accelerators], ‘சுழல் விரைவாக்கிகள் ‘ [Cyclotrons] என்னும் பூத மின் யந்திரங்கள் அமைக்கப் பட்டன. உதாரணமாக கீழே காணப்படும், விரைவாக்கிய புரோட்டான் லிதிய மூலகத்தைத் தாக்கும் போது, அணுக்கரு இயக்கத்தில் புதிய மூலகம் பெரிலியம் விளைகிறது.

    புரோட்டான் கணை, லிதியம் குறி மூலக அணுக்கரு இயக்கம்:-

    லிதியம்7 + புரோட்டான்1 –>பெரிலியம்7 + நியூட்ரான்1

    ஐரீன், பிரடெரிக் தம்பதிகளின் படைப்பான ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை [Modern Nuclear Physics] வளர்த்தது! மேலும் மேலும் விருத்தி செய்தது! முதன் முதல் அணுவைப் பிளக்க வழி வகுத்து, அதன் உள்ளிருந்த அளவற்ற சக்தியை வெளியேற்றத் தூண்டியது! மனித இனத்தை அழிக்க உலகில் ராட்சத அணு ஆயுதங்கள் உண்டாக்கப் பாதை இட்டது! ஆக்க வினையாய் மின்சக்தி நிலையங்கள் தோன்ற உதவியது! புதுப்புது மூலகங்கள் ஆக்கிட வழி திறந்தது! விஞ்ஞானிகள் ஆய்வு அணு உலைகளை [Atomic Reactors] அமைத்து, மின்கொடை யற்ற நியூட்ரான் [Neutrons] கணைகளைப் பயன்படுத்தி யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்களைத் தாக்கும்படி செய்து ஆராய்ச்சிகள் செய்தனர்! நீர் அல்லது கனநீர் மிதவாக்கித் திரவம் [Heavy Water Moderator], அல்லது கரித்திரள் மிதவாக்கி [Graphite Moderator] ஆகியவற்றால் நியூட்ரான்கள் வேகத்தைக் கட்டுப் படுத்தி அணு உலைகளில் ஆய்வுகள் செய்தனர். மித வேக நியூட்ரான்கள், சிலவற்றை யுரேனியம் [Uranium238] விழுங்கியது! சில மித வேக நியூட்ரான்கள் யுரேனிய அணுவை இரு கூறாய்ப் பிளந்தன! அதி வேக நியூட்ரன்கள் சில சமயம் யுரேனியம்238 தாக்கிப் புது மூலகம் புளுடோனியத்தை [Plutonium239] முதன் முதலாகப் படைத்தன! பிளவுப் பிண்டமான [Fissile Material] புளுடோனியம்239 அணு ஆயுதங்களுக்குப் பயன் பட்டது!

    மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம்:-

    யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

    –>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

    மாலிப்டினம், லாந்தனம் இரு பிளவான சிறு துணுக்குகள்!

    ஒவ்வோர் அணுப்பிளவிலும் புது நியூட்ரான்கள் இரண்டு விளையும்!

    அளவற்ற சக்தி அணு ஆயுதத்தில் வெடிக்கிறது! அல்லது

    மின்சக்தி யாக மாற்றி மின்சாரம் பரிமாறுகிறது!

    அதிவேக நியூட்ரான், யுரேனியம்238 அணுக்கரு இயக்கம்:-

    புது மூலகம் புளுடோனியம்239 விளைவு.

    யுரேனியம்238 + நியூட்ரான்1 –>யுரேனியம்239*

    யுரேனியம்239* (தேய்ந்து) –>நெப்டினியம்239* + பீட்டாத் துகள்

    நெப்டினியம்239* (தேய்ந்து) –>புளுடோனியம்239* + பீட்டாத் துகள்

    [(*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள் (Radioactive Elements)]

    பிரான்ஸில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் ஆக்கிய தம்பதிகள்

    1934 ஆம் ஆண்டு முதன் முதலில் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி நியூட்ரான் கணைகளால் யுரேனிய அணுவைத் தாக்கி, அணுக்கருவை இருகூறாகப் பிளந்தார்! ஆனால் அவ்வரிய விஞ்ஞான சாதனை அவருக்கு அப்போது தெரியாமலே போயிற்று! அணுக்கருவைப் பிளக்க முதலில் ஆலோசனை கூறியவர் ஐரீன் கியூரி! அதன் விளைவைப் புரிந்து கொண்டு ‘அணுப்பிளவு ‘ என்று விளக்கம் தந்த பெண் மேதை, ஆஸ்டிரியப் பெண் விஞ்ஞானி லிஸ் மெயிட்னர்! ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானிடம் [Otto Hahn] முப்பது ஆண்டுகள் துணையாளி ஆகப் பணி ஆற்றியவர், லிஸ் மெயிட்னர்!

    ஐரீன் கியூரி செயற்கைக் கதிர் ஊட்டம் [Irradiation] சம்பந்தமாக உரையாற்றிய சமயம், நியூட்ரான்களை கணையாய் ஏவி, யுரேனிய அணுவைப் பிளக்க முடியும் என்று கூறியதைப் பின்பற்றி, ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர் ஸ்டிராஸ்மன் இருவரும் 1938 இல் யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தை உண்டாக்கினார்கள்! ஆனால் அந்த இயக்க விளைவில் உண்டான சிறு கதிர்த் துணுக்குகளைக் கண்டு வியந்ததைத் தவிர, அதன் முக்கியத்துவத்தை அவர்களால் விளக்க முடியவில்லை!

    அந்த ஆண்டு செப்டம்பரில் ஐரீன் கியூரியும், அவரது துணையாளி ஸாவிட்ச்சும் [P. Savitch] ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் செய்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தைத் திருப்பிச் செய்தார்கள். அப்போது அணுப்பிளவின் ஒரு சிறு துணுக்கான லாந்தனம் [Lanthanam] மூலகத்தின் கதிர்வீச்சைக் கண்டார்கள். ஆனால் லிஸ் மெயிட்னர் அவரது நண்பர் ஆட்டோ பிரிஷ் [Otto Frisch] இருவரும்தான் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் புரிந்த அணுக்கரு இயக்க நிகழ்ச்சியை, ‘அணுப்பிளவு ‘ [Fission] என்று முதன் முதலில் விளக்கப் படுத்தி விஞ்ஞான வெளியீட்டில் உலகுக்குப் பறைசாற்றினர்.

    அவ்வெளியீட்டைப் படித்தபின் உடனே பிரடெரிக் ஜோலியட், அணுப்பிளவைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு பிளவும் வெளியாக்கும் பிளவு சக்தி 200 MeV என்றும், பிளவு விளைவுத் துணுக்குகள் புரோமின் [Bromine, Atomic Number 35] முதல் சீரியம் [Cerium, Atomic Number 58] வரையுள்ள மூலகங்களுக்கு இடைப்பட்டவை என்றும் முதலில் அறிவித்தார்! அத்துடன் நிகழும் ஒவ்வொரு யுரேனிய, நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தின் விளைவில் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உண்டாகின்றன என்றும், அவற்றைக் கட்டுப்படுத்தி அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] ஏற்படுத்தி, அளவற்ற சக்தியை வெளிப்படுத்தலாம் என்றும் முதன் முதல் உலக விஞ்ஞானிகளுக்கு முன்னறிவித்தார்!

    1940 இல் ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றவே ஐரீன், பிரடெரிக் இருவரது அணுப்பிளவு ஆராய்ச்சிகள் மூடப் பட்டன! ஐரீன் தன்னிரு பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு சுவிட்ஜர்லாந்துக்கு ஓடி அங்கே சரண் புகுந்தார்! பெயரை மாற்றிக் கொண்டு, தனியாக பிரடெரிக் மட்டும் பாரிஸில் காலம் தள்ளினார்! 1944 இல் நேச நாடுகள் போரிட்டுப் பிரான்ஸை விடுவித்ததும், பிரசிடென்ட் சார்ல்ஸ் டிகாலே [Charles de Gaulle] நாட்டைச் சீர்ப்படுத்தினார். பிரடெரிக் பிரான்ஸின் அணு ஆராய்ச்சித் துறைகளை ஒழுங்கு படுத்தி, பிரான்ஸில் அணுசக்திப் பேரவை [French Atomic Energy Commission] நிறுவ ஏற்பாடுகள் செய்தார்! 1946 இல் டிகாலே பிரான்ஸ் அணுசக்திப் பேரவையைத் திறந்து வைத்து, பிரடெரிக் ஜோலியட் அதிபதியாக நியமிக்கப் பட்டார்!

    1942 இல் இத்தாலிய அமெரிக்க விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி, அணு ஆயுதத்தைப் படைக்கச் சிகாகோவில் முதன் முதல் அணுக்கருத் தொடரியக் கத்தைச் செய்து காட்டி, அணுயுகத்தின் பிரம்மாண்டமான நுழை வாயிலைத் திறந்து வைத்தார்! 1948 பிரான்ஸின் முதல் ஆராய்ச்சி அணு உலை பிரடெரிக் மேற்பார்வையில் சான்டில்லன் கோட்டையில் [Fort de Chantillon] இயங்க ஆரம்பித்தது! பிரான்ஸில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஐரீன் கியூரியும், அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட்டும் அணுக்கருத் தொடரியக்கம் செய்து காட்டி, அணுசக்தி ஆக்க வரலாற்றில் முதல்வர் வரிசையில் அவர்களும் நின்று உலகப் புகழ் பெற்றார்கள்! 1960 பிப்ரவரி 13 இல் பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை ஸகாரா பாலை வனத்தில் வெடித்துச் சோதனை செய்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டது!

    Natural Isotopic Abundances of light stable isotopes.

    Hydrogen                Carbon                 Nitrogen                     Oxygen

    1H – 99.984%     12C – 98.89%      14N – 99.64%        16O – 99.763%

    2D – 0.0156%      13C – 1.11%         15N – 0.36%           17O – 0.0375%

    +++++++             ++++++               ++++++              18O – 0.1995%

    மனித இனத்திற்குப் பயன்படும் கதிரியக்க ஏகமூலங்கள்

    கதிரியக்க ஏகமூலங்கள் [Radioactive Isotopes] மனித இனத்துக்குப் பயன் படாத துறையே இல்லை! உலகெங்கும் மருத்துவம், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்ய நூற்றுக் கணக்கான கதிர் மூலகங்கள் உபயோகம் ஆகின்றன! நேரடி, சுழல் விரைவாக்கி யந்திரங்கள் [Linear, Cyclotron Accelerators], அணு உலைகள் ஆகியவற்றில் கதிர் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகமூலங்கள் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் பட்டுள்ளன! அவற்றில் இயற்கையாகக் கிடைப்பவை 276. கதிரியக்கம் கொண்டவை 740.

    அமெரிக்காவில் டென்னஸி மாநிலத்தின் ஓக் ரிட்ஜ் அணு உலைகளில் [Oak Ridge Atomic Reactors] நூற்றுக் கணக்கான கதிர் ஏகமூலங்கள் உற்பத்தியாகி, உலகம் எங்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 78% மருத்துவ ஆய்வுகளுக்கும் [Medical Diagnosis], புற்று நோய் குணப்பாடுக்கும் [Cancer Treatment] பயன் படுகின்றன! 12% ஏகமூலங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், 6% தொழிற்துறைப் பணிகளுக்கும், 4% வேளாண்மை விருத்திக்கும் உபயோக மாகின்றன. மருத்துவ, உயிரியல் பணிகளுக்கு ஹைடிரஜன், கரி, ஸல்ஃபர், ஃபாஸ்ஃபரஸ், குளோாரின், கால்ஸியம், ஆர்செனிக், ஐயோடின், வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இப்போது அகில நாடுகளும் தமது அணு உலைகளில் எண்ணற்ற கதிர் ஏகமூலங்களை ஆக்கி வருகின்றன.

    ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் இறுதிக் காலம்

    முதல் உலகப் போரின் சமயத்தில் காயப் பட்டோர்களுக்குச் சிகிட்சை செய்ய எக்ஸ்ரே கதிர்ப்பட [Nurse Radiographer] பணிப் பெண்ணாக ஐரீன் கியூரி, தாயுடன் சேர்ந்து சேவை செய்தார். பிரென்ச் விஞ்ஞானக் கழகம், [French Academy of Science] பிரென்ச் மருத்துவப் பேரவை இரண்டும் நோபெல் பரிசு பெற்ற பிரடெரிக் ஜோலியட்டுக்குச் சிறப்புநர் தகுதியை அளித்தது. ஆனால் நோபெல் பரிசு பெற்ற பெண்மணி ஐரீன் கியூரிக்கு பிரென்ச் விஞ்ஞானக் கழகம் சிறப்புநர் மதிப்பைத் தர, பிரென்ச் ஆடவர் குழு மறுத்தது! அதே போல் இரட்டை நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரிக்கும் பிரென்ச் விஞ்ஞானக் கழகம் அங்கத்தினர் பதவி கூடத் தர எதிர்த்தது! ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ‘ [Liberty, Equality & Fraternity] என்று பிரென்ச் புரட்சியின் போது முழக்கிய பிரான்ஸ், விஞ்ஞானக் கழகத்தில் சமத்துவத்தைப் பெண்ணினத்திற்கு அளிக்காமல் அவர்களை இரண்டாம் தரக் குடியினராகத் தாழ்த்தியது, வருந்தத்தக்க செய்தி!

    1956 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் ஐரீன் ஜோலியட் கியூரி கதிரியக்கச் சூழ்நிலையில் நீண்ட காலம் பாதிக்கப் பட்டு, இரத்த நோயில் [Leukemia] தாய் மேரி கியூரி போல் தானும் அவதியுற்று, பாரிஸில் 59 ஆவது வயதில் காலமானார்! பிரிட்டானியில் [Brittany] ஓய்வெடுக்கச் சென்ற போது விபத்தில் காயமுற்று, சில நாட்கள் கழித்துப், பிரடெரிக் 1958 ஆகஸ்டு 14 ஆம் தேதி தனது 58 ஆவது வயதில் காலமானார். தாய் ஐரீன் கியூரி, தந்தை பிரடெரிக் ஜோலியட் இருவரும் விட்டுச் சென்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புதல்வி ஹெலனும், புதல்வன் பியரும், தன் பெற்றோர் கடைப்பிடித்தது போலப் பரம்பரையான குல வித்தையைப் பின்தொடர்ந்தனர்!

    ***************

    Information :

    1.  http://www.answers.com/topic/irene-joliot-curie (Biography: Irene Joliot-Curie)

    2.  http://en.wikipedia.org/wiki/Ir%C3%A8ne_Joliot-Curie [January 3, 2013]

    3.  http://en.wikipedia.org/wiki/Fr%C3%A9d%C3%A9ric_Joliot-Curie  [December 3, 2012]

    +++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 8, 2013 [R-1]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • அந்திவானமும், அவனும் அவளும் – 2

    திவாகர்

    நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன். இறைவா.. எப்படி விவரித்தால் இவள் முதலில் நம்புவாள்..

    “என்ன யோசிக்கிறாய்.. ஏதாவது கதை அளக்கலாமா இந்தப் பெண்ணிடம் என்று யோசித்துப் பார்க்கிறாயோ.. பொய் சொன்னால் எனக்குத் தெரிந்து விடும்..”

    ஏதோ ஒரு உத்வேகத்தில் அவளிடம் அங்கே அன்று நடந்ததை அப்படியே சொன்னான். அவன் கண்ணுக்கு அவள் சின்னப் பெண்ணாகத் தோன்றவில்லை.. ஆருயிர் நண்பன் ஒருவன், தன் நலம் விரும்பி, தன்னை எப்போதும் சீண்டிக் கொண்டிருக்கும் சகோதரி, தன்னை அரவணைத்துப் பாலூட்டும் தாயாகத்தான் நினைத்தான்..

    “நான் மெய்யாகத்தான் சொல்கிறேன்.. என் இரு கண்களாலும் அந்தத் தாமரைச் செங்கணானைப் பார்த்தேனே” கெஞ்சினான் கிருஷ்ணா..

    “ஓ.. பார்த்து விட்டாயா.. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே.. நான் சொல்லவில்லை அப்போதே.. விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று தீர்க்கமாகப் பார்த்தாலே அவன் தெரிய வருவான்.. அன்று உனக்கு அவன் தெரிந்ததால் அப்படி ஒன்றும் விசேஷமில்லை..”

    ”கண்ணம்மா! என் செல்லப்பெண்ணே!.. இப்படி ஒரேயடியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடாதே! விண்ணிலே எல்லாருக்கும் அந்தத் தரிசனம் கிடைத்து விட்டதா.. என் ஒருவனுக்கு மட்டும் ஏன் அப்படித் தெரியவேண்டும், நீயே சொல்லேன்..”

    “அடடா. ஏன் இப்படி புலம்புகிறாய்? ஒன்று சொல்லட்டுமா.. நீ அவனை சரியாக தரிசனம் செய்யவில்லை என்று கூட சொல்வேன்.. சரி, நீ பார்த்த விஷ்ணுவின் மார்பில் என்ன கண்டாய்?

    ”அதுதான் சொன்னேனே.. கௌஸ்துபமணியைப் பற்றி..”

    “நன்றாக உற்றுப்பார்த்தாயா?”

    ”பார்த்தேனே!”

    ”இல்லை பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அங்கே லக்குமியும் உள்ளே இருப்பதை உணர்ந்திருப்பாய்.. இல்க்குமி அவன் மார்பில் குடி கொண்டவள் அல்லவா..!”

    ”ஆமாம்.. அது என்னவோ சரியானதுதான்.. ஆனால் அவள் ஏன் அவனுடன் கருடபக்‌ஷியில் பக்கத்தே அமர்ந்து  தரிசனம் தரவேண்டும்?”

    சிரித்தாள் சின்னப்பெண். “அவள் மகா கருணையுள்ளவள்.. கௌஸ்துபமணியில் பார்க்க முடியாதவன் தனியாகவாவது பார்க்கட்டுமே என்று காட்சியளித்திருக்க வேண்டும்.. தமிழில் சொல்கிறேன்.. கேட்டுக் கொள்!”

    ஆணையிடுவது போல வந்த குரலில் அடிபணிவதுபோன்ற நிலைக்கு ஆளானான்.. “அப்படி சொல் செல்லம்மா!”

    இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையை என்னென்பேன்

    அப்படியே உருகிப் போனான் கிருஷ்ணதேவன்.. யார் இந்தப் பெண்.. தெய்வமா.. மகாலட்சுமியா, தன்னை என்றும் காக்கும் குலதெய்வமா.. மகேசுவரன் பத்தினி மகாசக்தியா.. இல்லை இல்லை இவள் நம் திம்மராசுவின் பேத்திதான். அவரும்தான் எத்தனையோ சமயங்களில் மிக நேர்த்தியாக எத்தனையோ விஷயங்கள் சொன்னவர் ஆயிற்றே.. கனவிலிருந்து வெளி வந்தவன் போல மயக்க நிலையில் இருந்தான் கிருஷ்ணா.

    ”அதோ பார் செவ்வானம்.. மெல்ல மெல்ல அந்திவானம் வெள்ளையிலிருந்து செம்மைக்கு மாறி வரும் விந்தையைப் பார்.” அவள்தான் சந்தோஷமாக கையைத் தட்டிக் கொண்டே கூவினாள்.

    அவளோடு சேர்ந்து அவனும் மேற்கே உயரப் பார்த்தான்.. ஆமாம் எத்தனை அழகிய வானம்.. ஆஹா வெண்மை நிறம் போய் பல நிறங்களாகக் கலந்து செம்மையில் முடிகிறதே.. இந்த வானத்தை ஏன் குருஷேத்திர பூமிக்கு ஒப்புவமையாக்கினாரோ அந்த தமிழ்க் கவிஞர்..

    ”இந்த செவ்வானத்தைப் பார்த்தால் உனக்கு என்ன ஞாபகம் வருகிறது..”

    “ஓ அதுதானே ஏற்கனவே பேசினோமே.. யுத்தகளம் பற்றி”

    அவள் சிரித்தாள்.. அந்த அந்தி மாலை நேரத்தில் அவள் கண்களில் கூட அந்த சிரிப்பின் மலர்ச்சியைக் கண்டான்.

    “எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?”

    “சொல்லேன்..”வியப்பாகக் கேட்டான் கிருஷ்ணா.

    “அந்த செங்கணான் விழிகள்தான் இந்த அந்தி வானம்.. நன்றாகப் பார்.. எப்படி சிறுகச் சிறுக விழித்து எழுகிறான் பார்.. வெண்மையானவை எல்லாம் நிறம் மாறி தன் கண்ணின் நிறத்துக்குக் கொண்டு வரும் அற்புதம் பார்த்தாயா.. தமிழில் கோதையின் பாடல் கேட்டதுண்டா..

    ”கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்  விழியாவோ”.. என்று பாடினாளே.. பார்த்தாயா.. நீ அன்று பார்த்த தாமரைக் கண்ணானும் இவனும் ஒன்றுதானே..

    கிருஷ்ணதேவன் மறுபடி அந்தி வானத்தைப் பார்த்தான். தான் முன்னம் பார்த்த விஷ்ணுவின் ரூபமும் கூடவே அவன் நினைவில் வந்தது.. ஆமாம். அவன் செங்கணான்.. ’அந்தி வானத்து செங்கண்ணா! நீ எப்படியெல்லாம் காட்சி தருகிறாய்.. நான் சாதாரண மந்த புத்தியுள்ள மானிடன் என்பதால் முழு உருக்கொண்டு நான் மனதில் வேண்டியதற்கேற்ப அன்று அர்ச்சாரூபத்தில்  ஸ்ரீதேவி சமேதராக காட்சி தந்தாய்.. அதை நானல்லவோ கர்வப்பட்டு அரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு வருகிறேன்.. இதோ இன்று இந்த தெய்வீகப் பெண் மூலம் இயற்கையாகவே உன்னைப் பார்க்க முடியும் என்ற எளிய தத்துவத்தைப் புரிய வைத்தாய்.. நீ எங்குதான் இல்லை.. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே.. உன் கருணையை இவள் மூலம் தெளிய வைத்தாயே..’

    கிருஷ்ணதேவன் இமைகளில் கண்ணீர் ததும்பியது.. நாம் திம்மராசுவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டாளின் பாடல்களுக்காகத்தானே நாமே அவள் ஆசி பெற இந்த ஊர் வந்தோம்.. இறைவனே சமயம் பார்த்து இந்தப் பெண்ணை இங்கே அனுப்பினானோ.. பகவான் இயற்கையாகவும், தேவதேவனாகவும் காட்சி அளிப்பவன் மட்டுமல்ல, அவன் ’மனுஷ்ய ரூபிணே’ என்பது கூட எத்தனை சத்தியம்.. திம்மராசு மாமாவின் பேத்தியால் எத்தனை அறிந்து கொண்டோம்..

    ”அடடே.. நீ இப்படி யோசித்துக் கொண்டே இரு.. இதோ இருள் வந்துவிட்டது.. என்னை தாத்தா வீட்டில் தேடுவார்.. உனக்கென்ன குதிரை இருக்கிறது.. நீ பறந்து வந்து விடுவாய்.. நான் இப்படியே வயலுக்குள் குறுக்காகப் புகுந்து அல்லவா ஓடவேண்டும்.”

    அவள் இனிய குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தததால் அவனிடம் இப்போது சலனம் இல்லை.. அவன் தலையசைத்தான்…

    “பார்த்தாயா.. முதலில் பார்த்தபோது ஏதோ பெரிய மனிதன் போல வெளி வேஷம் போட்டிருக்கிறாய்.. ஒரே மாயவார்த்தை பேச்சுதான்.. குதிரையில் ஏறி வா, நான் வேண்டுமானால் நடந்து வருகிறேன்.. என்றெல்லாம் அழைத்தாய்.. இப்போது பார்.. மௌனியாகிவிட்டாய்.. ஒரு வார்த்தைக்குக் கூட என்னைக் குதிரையில் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லவில்லை.. போகட்டும்.. எனக்கு வயலில் ஓடுவதெல்லாம் நித்தமும் பழக்கம்தான்.. நீ சொன்னாயே என்று நம்பி உன்னுடன் குதிரையில் இன்று வந்தால் நாளையும் இந்த ஆசை பெருகும்.. வேண்டாம்.. வேண்டாம்.. நீ மட்டும் நிதானமாக வா..”

    கிருஷ்ணாவின் கண்கள் இன்னமும் கலங்கித்தான் கிடந்தன.. அவள் அதைக் கண்டு விட்டபின்னாலும் கூட சிரித்தாள்..

    “ஒரு முக்கியமான விஷயம்.. என்னைப் பற்றி தாத்தாவிடம் கோள் மூட்டி விடாதே.. பிறகு நாளை என்னால் இங்கே வரமுடியாது.. விஷ்ணுவின் கண்களைக் காணவும் முடியாதபடி செய்யாதே.. அட, என்னைக் கண்டதாகவே பேசாதேயேன்..என்ன.. வரட்டுமா..

    சொன்னவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் குறுக்கே கிடந்த வயல்களின் ஒத்தையடிப் பாதையில் ஓடத் துவங்கியதும்தான் சற்று நினைவுக்கு வந்தான்..

    “அட.. பார்த்துப்போ செல்லம்மா.. ஓடாதே.. ஓடாதே.. விழுந்து விடப்போகிறாய்”

    பரிவுடனே வந்த வார்த்தைகள் காற்றில் கலந்து வீணாகிப் போனதுதான்.. அவள் ஓட ஓட  அவள் உருவமும் தன் கண்களுக்கு மறைந்ததோடு இருளும் சட்டென வருவது போல வந்துவிட்டதால் அவன் அவள் போகும் திக்கையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. போகட்டும்.. திம்மராசு மாமாவுக்குதான் எத்தனை பாக்கியம்.. இவர் பிரதம அமைச்சராக இத்தனை வருடங்கள் நல்லாட்சி தந்து பரிபாலனம் செய்தார் என்றெல்லாம் புகழ்ந்தோமே.. அதுவா பாக்கியம்.. இல்லை.. இவளைப் பேத்தியாகப் பெற்றதுதான் அவர் பாக்கியம்.. அப்படி பாக்கியம் செய்த மகானைத் தான் காணப்போவதும் தான் செய்த முன்வினைப் பயனே..

    குதிரையில் ஏறி மெல்லச் செல்லுமாறு அதைச் சிமிண்டினான்.. நிதானமாகவே செல்வோம்..அவள் போன பின்பு அங்கு செல்வோம்.. அதுதான் முறையும் கூட..இவளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல வேண்டாம்தான்.. ஆனால் மீண்டும் ஒருமுறை இந்த அழகிய கண்மணியைப் பார்க்கலாம் அல்லவா..

    குதிரையும் சற்று நிதானமாகவே நடந்ததுதான்.. ஆனாலும் தூரம் அதிகமில்லை என்பதால் ராஜபாட்டை பிரிந்து ஊருக்கு செல்லும் வழியாகக் குறுகி வழிவிட்டது.. இருள் படர்ந்தாலும் அங்கே தெரிந்த அந்தக் கோயிலின் கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருந்தீபங்கள் அதன் உயரத்தை அழகாகக் காண்பித்ததோடு, அந்தக் கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காண்பித்தன. சமீபத்தில் கட்டப்பட்ட நெடிதுயர்ந்த கோபுரம்.. பகலில் பார்க்கவேண்டுமே இதன் அழகை..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் கோயில் அருகே குதிரையை நிறுத்தினான்.. கோயிலுக்குள் செல்லாமல், கோயில் அருகாமையில் உள்ள அந்தக் குடிலுக்குள்தான் அவன் காலடிகள் பட்டன..

    பெரிய குடில்தான்.. இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ முறை வந்துவிட்டோம்.. திம்மராசு மாமா இந்தக் கோயில் அருகேதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கட்டிக் கொண்ட குடில் இது.. பகலில் வெளியிலிருந்து பார்த்தால் குடிசை போலத்தான் இருந்தாலும் உள்ளே அதன் தெய்வீகத்தைப் பார்த்து யார்தான் பரவசப்படமாட்டார்கள்..

    அவன் உள்ளே நுழைந்ததுமே எதிர்வந்து அழைத்துக்கொண்டார் திம்மராசு..

    “நேற்றே வருவாய் என்று காத்திருந்தேன் கிருஷ்ணா, அப்படித்தான் செய்தி வந்தது.. இருக்கட்டும்.. மதுரையில் நண்பர்களைப் பிரிந்து வருவது சற்று கஷ்டம்தான்.. அதுவும் கூடவே அல்லுடு ராமராஜுவும் வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான் உன்னுடைய ஆள். அவனிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்கச்சொல்.. அச்சுதன் இப்போது எங்கே இருக்கிறான்?”

    சடசடவென கேள்விகள் கேட்ட தன்னுடைய முன்னாள் முதன்மை அமைச்சரை முதலில் பாதம் தொட்டுப் பணிந்தான் கிருஷ்ணா.. திம்மராசு இப்போதெல்லாம் அரசியல் அதிகம் பேசுவதில்லை என்றாலும் மாமாவுக்கு என்றும் தங்கள் குலத்து நலன் முக்கியம் என நினைப்பவர் ஆயிற்றே..

    “தம்பி அச்சுதன் காளஹத்தி கோபுரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறான் இல்லையா.. அங்குதான் தற்சமயம் வாசம்.. அல்லுடுவைப் பற்றி நன்றாகவேத் தெரியும்.. சிறுவயது அல்லவா.. சற்று துள்ளும்தான்.. மதுரையில் நாகம நாயகனுக்கும் செஞ்சி வையப்ப நாயகனுக்கும் சில சண்டைகள்.. அச்சுதன் பக்கத்தில் இருந்தால் சண்டையிட்டிருக்கமாட்டார்கள்.. இருவருமே அவனுக்கு நண்பர்கள்.. அல்லுடு ராமராஜு துடுக்கால் இருவருக்கும் கோள் மூட்டி விட்டான்.. நான் சற்றுப் பேசி சரிசெய்து விட்டுதான் வந்தேன். மாமா! தாங்கள் இல்லாத விசயநகரம் எனக்கு தலைநகரம் இல்லை.. தலைவலி நகரம்.”

    “ஓ.. அதை விடு, சென்ற மாதம் ஸ்ரீகாகுள நிகழ்ச்சியை நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்து கொண்டிருக்கிறேன்.. அதைப் பேசு.. அரசியலே வேண்டாமென்றுதானே இங்கே வந்தேன்.. வா.. உட்கார்ந்து பேசுவோமா..” என்ற திம்மராசு, சட்டென ஞாபகம வந்தவராக ”இல்லை.. இல்லை.. இரவுப் பூசைக்குக் கோயிலுக்குள் சென்று திரும்பாவிட்டால் என் பேத்திக்குக் கோபம் வந்து விடும்.. வா.. முதலில் அங்கு போவோம்.. ஆனாலும் பிரயாணக் களைப்புடன் இருப்பாய்.. ஏதானும் சத்தன்னம் அருந்துகிறாயா” என்றவர் அவன் பதிலுக்குக் காத்திராமல் குடில் உள்ளே சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.. சென்றவர் உடனடியாகத் திரும்பவும் வந்தார். கிருஷ்ணாவுக்கு விஷயம் புரிந்தது. உதட்டில் ஒரு மென்னகை கூட வந்தது. சுட்டிப் பேத்திதான் முழுவதும் தின்றுவிட்டு ஏப்பம் விட்டுதான் அங்கே பாறைக்கு வந்தாள் என்ற விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்..

    “உனக்கு அதிர்ஷ்டமில்லை கிருஷ்ணா! மதியம் நைவேத்தியம் செய்துவிட்டு, நானும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியில் பாலை சற்று அதிகமாகவே ஊற்றி வைத்தேன்.. இப்போது பார்த்தால் சத்தன்னப் பானையில் ஒரு பருக்கை கூட இல்லை.. இந்தப் பூனைகளின் தொல்லை சில சமயங்களில் தாங்கமுடியவில்லை கிருஷ்ணா.. போகட்டும் அவைகளுக்கென பிரத்தியேகமாக யாராவது உணவிடுவார்களா.. என்ன.. பூனையும் தெய்வ ரூபம்தானே.. கோயில் மடைப்பள்ளியில் உனக்குப் பிரத்தியேகமாக சுடச் சுடச் செய்து வைக்க வைத்தால் போயிற்று..”

    கிழவர் முகம் சற்று வாட்டமாக வைத்துக்கொண்டு பேசினாலும் அந்தச் சமயத்திலாவது சட்டியில் உள்ள சத்தன்னத்தைத் தின்று விட்டது அவர் பேத்திதான் என்பதைச் சொல்லலாமா என்று யோசித்தான்.. வேண்டாம், அது தவறு.. குழந்தைக்குப் பசித்திருக்கும்.. பாவம்..

    கொடுத்து வைத்தவள்.. இல்லை இல்லை.. இவர்தான் கொடுத்து வைத்தவர். எப்படிப்பட்ட தெய்வ குணம் படைத்தவள் அவள்.. ஆமாம்..எங்கே அவள்.. இன்னுமா வரவில்லை.. வந்திருப்பாள்.. கோயிலுக்குள் போயிருப்பாள் போலும்.. மாமாதான் சொன்னாரே..

    இருவரும் பேசிக்கொண்டே பக்கத்திலே உள்ள ஆலய கோபுரத்தருகே வந்தனர். உயரமான அந்தக் கோபுரத்தை கழுத்தை உயர்த்திப் பார்த்தான்.

    “காளஹஸ்தி காலி கோபுரத்தைக் கூட அச்சுதன் இப்படித்தான் உயரமாகக் கட்டி வருகிறான்.. தலைநகரம் திரும்புமுன் அங்கே செல்லவேண்டும்..”

    “கிருஷ்ணா, இந்தக் கோபுரம் வந்த கதை தெரியுமா.. ஆண்டாள் பிரத்தட்சயமாக வந்து தனக்கு வேண்டுமெனக் கட்டிக் கொண்டது இந்த கோபுரம், இதற்கு நானே சாட்சி!”

    இந்த சம்பவம் கிருஷ்ணதேவன் கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் இவர் வாயால் இன்னொருமுறை சொல்லட்டுமே..

    முப்பது வருடங்களுக்கு நானும் நரசிங்கராஜாவும் இங்கே உள்ள பாண்டியமன்னரின் மறைவுக்காக வந்திருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.. இந்த வழியாகத்தான் வந்தோம். இதோ இந்த இடங்களெல்லாம் புதர்களும் முட்செடிகளும், பாழடைந்த இடிபட்ட மண்டபங்களும் சிலந்தி வலைகள் எங்கெங்கும் காணப்பட நரசிங்கர் அதிர்ந்துபோய்விட்டார். இந்த ஊர் கேட்பாரற்றுக் கிடந்தது. ஊரில் கோயில் இருந்தும், வேளா வேளைக்கு பூஜை இருந்தும் பாழடைந்த மதில்கள், கோயில் சிலைகள் என எல்லாமே பழமையாக இருந்ததைப் பார்த்த நரசிங்க ராஜா மிகவும் வருத்தப்பட்டு ஏதாவது செய்யவேண்டும்..என்று சொல்லிக்கொண்டே இந்தக் கோயிலுக்குள் நுழையாமல் ஊரைக் கடந்துவிட்டோம். இந்த ஊர் எல்லையில்தான் அந்த அதிசயம் நடந்தது.”

    திம்மராசு பூர்த்தியாக பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விட்டார். அவர் மனம் அந்தப் பழைய காட்சியில் நினையாக நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது போலும். கிருஷ்ணாதான் கேள்வி கேட்டான்..

    “கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் சொல்லுங்களேன்..”

    “கிருஷ்ணா.. நீ கேள்விப்பட்டதை விட நேரடியாக அனுபவித்தால்தான் அந்த மகிமை புரியும்.. சென்ற மாதம் கங்கர்களுடன் நடந்த போரின் கடைசி நாளன்று காலை உனக்குக் காணக்கிடைக்காத காட்சி கிடைத்ததே.. அதை நீ உணர்ந்து சொல்லும்போதுதான் அதன் மகிமை எனக்கே புரியும்..”

    “ஆமாம்.. உண்மைதான் மாமா!”

    ”நாளைக் காலை இந்த ஊரைப் பகலில் பார்த்தாயானால் இதன் புதுமையையும், இந்தக் கோயிலில் புனிதத்தையும் பார்த்து ஆச்சரியப்படுவாய்.. ஆனால் அன்று அப்படியில்லை.. கோபுரம் இல்லாத அனாதைக் கோயிலாக இருந்தது. ஒருகால கட்டத்தில் இந்தக் கோயிலிலா விஷ்ணுசித்தர் பூசை செய்து வந்தார் என்ற கேள்வி வரும்.. ஏன் எங்களுக்கே விஷ்ணுசித்தர் நினைவு கூட அன்று வரவில்லை.. அப்படிப்பட்ட நிலையில்தான் ஊர் எல்லையில் எங்கள் ஆண்டாள் எங்கள் குதிரைகளுக்கு முன் நின்று நிறுத்தினாள்..”

    (அடுத்த பகுதியில் நிச்சயமாக முடியுமென நினைக்கிறேன்)

    படங்களுக்கு நன்றி : kothairangan.blogspot.com and Flikr

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் .. (40)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    2013 பிறந்தவுடன் கனத்த நெஞ்சுடனும், பனித்த விழிகளுடனும் இம்மடலை வரைகின்றேன். பெண்களின் மதிக்கும் அடிப்படை வலுத்த கலாச்சாரமிக்க பின்புலங்களிலிருந்து வந்தவர்கள் நாம்.

    நாகரீகம் எனும் பெயரில் இந்த உலகம் வெகுவேகமாக இன்று ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடுவதை போல ஓடிக் கொண்டிருக்கிறது போலத் தென்படுகிறது.

    பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க செந்தமிழ்ப்புலவன் பாரதி தன் தமிழெனும் சாட்டையெடுத்து சமுதாயத்தை நோக்கி வீசினான். தீந்தமிழ்ப் பாடல்களிலே பெண்களுக்கு இழைக்கப்படும் ஆநீதிகளை தெட்டத்தெளிவாக எடுத்துச் சொன்னான்.

    சமுதாயத்தில் ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் தாழ்ந்தவளில்லை என்னும் நிலைப்பாட்டை அந்நாட்களில் பின் தங்கிய சமுதாயம் என வர்ணிக்கப்பட்ட கீழைத்தேச சமூகங்களை நோக்கி வலியுறுத்திச் சொன்னான்.

    1893ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி சுவாமி விவேகானந்தரின் பேச்சு சிக்காகோவில் ஓங்கி முழங்கியது. ஆமாம் இந்திய நாட்டு கலாச்சாரத்தின் மகிமையைப் பற்றிப் பேசும் போது ” தாய்மார்களே ” என அவர் விளித்த போது அவரைப் பார்த்து நகைத்தவர்களைப் பார்த்து எமது நாட்டில் தனது மனையாளைத் தவிர்ந்த அனைத்துப் பெண்களையும் நாம் தாயே என்றுதான் அழைக்கிறோம் ஏனெனில் அவர்களை அத்தகைய ஒரு கெளரவத்திற்குரிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார்.

    ஆனால் இன்றோ ?

    அத்தகைய உன்னத பண்பு நிறைந்த நாட்டின் தலைநகரிலே மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் மானபங்கப் படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    உள்ள‌ம் கனக்கிறது ! உணர்வுகள் கொதிக்கின்றன ! ஏதோ இனம்புரியா பீதியுடன் கலந்த வேதனை நெஞ்சத்தின் ஓரங்களை நெருஞ்சி போல் தைக்கின்றது.

    சரி மிருகவெறி கொண்ட காடையர் கூட்டமொன்றின் செயல் என்றுமே நடந்திராத ஒன்று என்ற எண்ணத்தை வீழ்த்தியடிப்பது போல் தினந்தோறும் கற்பழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை என்று ஒரு புள்ளி விபரமும், குடும்பத்திற்குள் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் புள்ளி விபரமும் ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப் படும்போது விடையில்லா வினா நெஞ்சில் பூதாகரமாக எழுகின்றது.

    சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட அந்தச் சமூகம் , கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட இக்காலச் சமூகம் வரை எத்தகைய மாற்றங்களுக்குள்ளாகியதால் இப்படியான் நிகழ்வுகள் நிகழக்கூடிய சூழல் தோன்றியது ?

    சிக்கலான கேள்வி, விடை தெரியாமல் உள்ளம் தடுமாறுகிறது. 19ம் நூர்றாண்டிலே வாழ்ந்த விவேகானந்தர் காலச் சமுதாயமும் 22ம் நூற்றாண்டு காலத்திலே வாழும் எக்காலச் சமுதாயமும் உடைகளணியும், உத்தியோகம் பார்க்கும் , பிரயாணம் செய்யும் வழிமுறைகளிலே பெரும் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கலாம். ஆனால் அன்று “அம்மா” என்று அழைத்த குழந்தை இன்றும் “அம்மா” என்றுதானே அழைக்கிறது ? அந்த உறவின் அழுத்தம் மாற்றம் காணக்கூடியதா ?

    இல்லையே ! அப்படியாயின் எப்படி தாரத்தைத் தவிர்ந்த மற்றைய பெண்களைச் ச்கோதரிகளாகவும், தாய்மார்களாகவும் கெளரவிக்கும் பண்பை மட்டும் மாற்ற‌த்துக்குள்ளாக்கலாம் ?

    காலத்துக்குக் காலம் வாழ்க்கையின் நடைமுறை வழக்கங்களினால் காலம் எம்மீது எறியும் சில மாற்றங்கள் , அவை மானிடத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்காதவரை எம்மைக் காலமாற்றத்தை உள்வாங்கப் பண்ணுவதைத் தவிர்க்க இயலாது.

    அதற்காக தூய பண்புகளின் தன்மையைக் காலம் மாற்றத்தையோ அன்றி நாகரீக வளர்ச்சியையோ காரணமாகக் கூறி மாற்றிக் கொள்வது என்பது ஏற்றுக் கொள்ள‌ முடியாத ஒன்று.

    சில தினங்களுக்கு முன்பு இது சம்பந்தமாக இந்தியாவில் நடைப்பெற்ற போராட்டங்களைப் பற்றிக் காட்டிய இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் பேட்டி காணப்பட்ட இந்தியப் பெண் ஒருவரின் கூற்றுப்படி ” இப்படியான சம்பவங்கள் நடப்பதன் அடிப்படைக் காரணம் பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை என்பது மட்டுமல்ல, சமுதாயம் பெண்களின் மீது கொண்டுள்ள ஒரு தாழ்ந்த பார்வையுமே ” என்று கூறினார்.

    இப்படியான பிரச்சனைகளை அரசாங்கம் மட்டுமே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் தீர்த்துவிட முடியுமா?

    சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சில அழுக்கு மனப்பான்மைகளை கழுவியகற்றும் பணியில் முக்கியத்துவம் வகிக்க வேண்டியது எமது இளைய தலைமுறையே !

    வாலிப வயதில் பெண்களின் மீது காதல் கொள்வது வாலிபரின் வழக்கம் அதே போல மனம் கவர்ந்த வாலிபனிடம் தன் மன‌தைப் பறிகொடுப்பதும் வனிதையரின் உரிமை. ஆனால் இவை அவரவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கெள்ரவம் எனும் எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

    பெண்களைக் காமப் பொருட்களாகப் பார்க்கும் ஆண்களின் மனப்பான்மை முற்றிலும் மாற்றப்பட வேண்டும், அதே போல தமது கட்டழகை காமத்தின் அடிப்படையில் காட்சிப் பொருளாக்கும் பெண்களின் மனோபாவமும் மாறவேண்டும்.

    கெள்ரவமாக நாகரீகமான முறையில் உடையுடுத்தி ஆண்களுடன் சகஜமாகப் பழகும் பெண்கள் அனைவரும் தமது விளையாட்டுப் பொருட்கள் என எண்ணும் ஆண்கள் பலர் நம்மிடையே இருப்பது உண்மை. அத்தகையவர்களின் தவறைச் சுட்டிக்காட்டி புதுமையான  பெண்களை மதித்துக் கெளரவிக்கும் புரட்சிகர தலைமுறையைத் தோற்றுவிப்பது எமது ஆற்றல்மிக்க இளைய தலைமுறையின் கடமையாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வாயு தேவன் புலம்பல்

     

    சு. கோதண்டராமன்

    வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
    விரைந்து செல்லும் இயல்புடனும்
    சூடு என் மேல் பட்டவுடன்
    சுர்ரென மேலெழும் இயல்புடனும்
    இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
    இவ்விதி மாற்றல் எளிதாமோ

    வீடுகள் தோறும் கூரையினில்
    விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
    முக்கரம் விரித்துச் சுழன்றிடும் இச்
    சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

    தலைவா உன்னை மறந்துவிட்டு
    தானே விதியெனத் தருக்குகிறார்
    மக்கள் உடலைக் குளிர்வித்து
    மற்றவர் வெப்பம் நான் பெற்று
    மேலே செல்ல முயலுகையில்
    மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
    கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
    தரையில் தள்ளி மோதுகிறார்
    குனிய வைத்துக் குட்டுகிறார்
    கொடுமை அந்தோ நான் சகியேன்
    இறைவா உன்னை வேண்டுகிறேன்
    இனிப் படமுடியாது இத்துயரம்
    சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
    சற்றே மாற்ற மாட்டீரோ ?

    Share
  • அந்திவானமும் அவளும் அவனும் – 1

    திவாகர்

    கிருஷ்ணா அந்த அத்துவான பிரதேசத்தில், ராஜபாட்டையில், போக்குவரத்தே இல்லாத சூழ்நிலையில் அதுவும் அந்தி நெருங்கும் நேரத்தில் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சின்னப்பெண்ணா, இளைய கன்னியா.. யாராயிருந்தால்தான் என்ன.. இந்த வேளையில் தனிமையில் இங்கு அவளுக்கு என்ன வேலை.. ஒருவேளை இடம் தெரியாமல் வந்து விட்டாளோ.. நிற்கும்போதெல்லாம் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கும் தன் குதிரை கூட அவளைப் பார்த்ததும்  அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்கத்தான் செய்தான். இது தன் குதிரைதானா அல்லது இவள் தேவலோகத்துக் கன்னியா? புரியவில்லை..

    “ஆஹா.. இந்த அத்துவான இடத்தில் யாருமே காணப்படாத பாட்டையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்குத் துணையாக யாரும் வரவில்லையா.. சரி, நீ எந்த ஊர்.. உனக்குத் தெரியுமோ தெரியாதோ.. எனக்கு இங்கு எல்லா ஊர்களும் பழக்கம்தான்.. நீ எந்த ஊர் என்று சொல்லு.. என் குதிரை உன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வரும்..”

    ”அட! இந்தக் குதிரையில் என்னைப் போகச் சொல்கிறாயே.. இது தனியாகப் போகுமா.. இதற்கு ஊர் வழிகள் தெரியுமா.. இதன் பெரிய செவியில் ‘அந்த ஊருக்குப் போய்க் கொண்டு விட்டு வா’ என்று சொன்னால் அது என்னை அழைத்துக் கொண்டு வேகமாக  ஓடி என்னை விட்டு விட்டு வந்து விடுமா.. அல்லது ஒருவேளை யாரிடமாவது விசாரித்து சரியான வழி கேட்டு விட்டு விட்டு வருமா?”

    சொல்லி விட்டு அவனைப் பார்த்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள். கொள்ளை அழகுதான்.. யார் பெற்ற பெண்ணோ..

    கலகலவென அந்தப் பெண் சிரித்தது அவனை மிகவும் கவர்ந்தது.. சிரித்ததோடு இல்லாமல் தன்னை யாரென்று தெரியாமல் எகத்தாளத்தையும் சேர்த்துப் பேசுகிறாளே.. சடாரென்று குதிரையின் மேலே இருந்து கீழே குதித்தவனைப் பார்த்து சற்று மிரள்வது போல பாதையோரத்தில் ஒதுங்கினாள்.

    இவள் மிரள்கிறாளா அல்லது மிரள்வது போல நடித்தாளா..புரியாமல் பார்த்தவன் தான் நின்ற இடத்திலிருந்தே பேசினான்.

    “என் குதிரையைப் பற்றி உனக்குத் தெரியாது.. அதனுடன் பழகப் பழகத்தான் உனக்கும் புரியும். அது போகட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.. நீ எந்த ஊர்..?

    கேள்வி கேட்டவனை ஆவலுடன் பார்ப்பது போலப் பார்த்தவள் பின்னால் இருந்த தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் “புதூர்தான்”..

    “ஓ.. இங்கேதானா.. சரி வா.. நானும் அங்குதான் போகிறேன்.. நீ குதிரையில் ஏறிக்கொள்.. நான் நடந்தே வருகிறேன்..”

    “ம்ஹூம்.. நான் வரமாட்டேன்.. நீதான் சொன்னாயே.. நீ பழக்கிய குதிரை என்று.. ஏதாவது ஏடாகூடமாக என்னை வேகமாக வேறு ஏதாவது ஊருக்குக் கூட்டிப்போய்விட்டால்.. என் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வார்கள்?”

    ”ஓ.. சரி, சரி, வா. நானும் நீயும் நடந்து கொண்டே போவோம்.. உன் தாத்தா யார்.. அவர் என்ன செய்கிறார்..”

    அவள் நகரவில்லை.. “திம்மராசு தாத்தாவை உனக்குத் தெரியாதா.. அய்யய்ய.. என் தாத்தாவைத் தெரியாது என்று ஊருக்குள் யாரிடமும் சொல்லாதே.. உன்னை ஒருவிதமாகப் பார்ப்பார்கள்”.

    சற்று அதிர்ந்துதான் போனான் கிருஷ்ணா.. என்ன திம்மராசு மாமாவின் பேத்தியா இவள்.. அட.. அதுதான் இத்தனை அழகாகப் பேசுகிறாள்.. சரி, இவள் ஏன் இந்த சாயங்கால வேளையில் யாருமில்லா இந்த பிரதேசத்தில் வரவேண்டும்.. ஆண்டவா.. இவள் தைரியசாலிதான்..

    ”ஆஹா.. உன் தாத்தாவைப் பார்க்கத்தானே நானே தலைநகரத்திலிருந்து வருகின்றேன்.. உன் தாத்தா எனக்குக் குருதேவர் போன்றவர்.. எங்கள் குலவிளக்கு..”

    இப்படிச் சொன்னாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வித ஆவலும் இல்லைதான்.. இவன் சொல்வதையே காதில் வாங்காதது போல அந்த ராஜபாட்டையில் ஓரத்தில் உள்ள பாறைமேல் ஏறினாள் அவள். இதையும் கவனித்தான்.. சின்னப்பெண் தானே..இவள் தாத்தா இந்த தேசத்துக்கு செய்த சேவை இவளுக்கென்ன தெரியும்.. திம்மராசு என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த விஜயநகர சாம்ராஜ்யமே எப்போதோ அழிந்திருக்கும் என்பதை இவள் அறிவாளா.. இந்த தென்னகத்தையே ஒருங்கிணைத்து ஆண்ட நரசிங்க ராஜா இறந்த குழப்பத்தில் எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது துணிந்து முன்னின்று தன் தந்தைக்கு பட்டம் கட்டி துளுவ வம்சத்தை சிம்மாசனத்தில் ஏற்றிய மகான் அவர் என்று இவள் அறிவாளா..இந்த விஜயநகர தேசத்துக்கே பிரதம அமைச்சராக எத்தனையோ ஆண்டுகள் இருந்து எத்தனையோ ஆலயங்கள் எழுப்பித் தந்து, எதிரிகளை அழிக்க போர்க்களங்களையெல்லாம் சந்தித்து, தன் தோளோடு தோள் நின்று சாதித்த பெருமைகளை இவள் அறிவாளா.. இப்போதும் கூட அவரைத் தனியாக சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கிச் செல்கிறோம் என்பதில் நண்பர்கள் பலர் ஆவலுடன் தாமும் வருவோம் என்று வேண்டிக்கொண்டாலும் அவர்களை கூட வரவேண்டாம் என்று ஒதுக்கியதில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடன் மதுரையில் தனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை இவளுக்குப் புரியும்படி சொல்லமுடியுமா.. ஆனால் இதுவெல்லாம் இவளுக்குத் தேவையில்லைதானே. இனிமையான இளமைக் காலத்தில் இத்தனை அரசியல் விஷயங்கள் எதற்கு.. இவள் இன்பமாகத்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்..

    “நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின் பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன் குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா.. உன் பெயர் என்ன..”

    அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம் கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

    “அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்.. ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

    “இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம் வரை வரவேண்டுமா என்ன?”

    “இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல் முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

    “ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

    “இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும் கேட்பார்..”

    “அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

    அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை.. பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

    “சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

    அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும் இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது உனக்குத் தெரியுமா?”

    பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான் ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால் நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான் பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச் சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய் படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா.. ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச் செல்ல வேண்டும்..

    “சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு இருப்பேன்..”

    “பசிக்குமே”

    “உனக்குப் பசிக்காதோ?”

    ”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக் குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

    “சுட்டிப் பெண்ணே! தாத்தாவைப் பற்றிய கவலையை விடு.. அவர் பசியை நான் போக்குவேன்.. அத்தோடு என் குதிரைப் பையில் ஏராளமான தின்பண்டம் கூட இருக்கிறது.. மதுரையில் கொடுத்து அனுப்பினார்கள்.. இன்னும் சிறிது நேரம் போனால் என் வீரர்கள் கூட என்னைத் தேடி வரலாம்.. நான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக பிரயாணம் செய்வதில் அவர்களுக்கு வருத்தம்..”

    இத்தனை பேசினோமே.. இவள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே அவள் முகத்தில் பாவனை ஒன்றும் காணோமே என்று சற்று கவலைப்பட்டான் கிருஷ்ணா..  சிறு பெண்.. என்னமாய்ப் பேசுகிறாள்..ஆனாலும் இவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.. சாலையோரத்தில் ஒரு பாறையின் மீதமர்ந்து சாவகாசமாகப் பேசும் இவளிடம் எத்தனை நேரமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலும்.. ஆனாலும் அந்தி மாலை நேரம்.. சற்று போனால் இருள் கூட வந்து சேர்ந்துவிடும்..

    ”அது சரி.. ஆகாயத்தைப் பார்த்தாயா.. என்று கேட்டேனே.. உன் காதில் விழவில்லையா? நான் அதற்குதான் இங்கு வந்தேன்.. நீயும் வேண்டுமானாலும் கொஞ்ச நேரம் இங்கு என்னோடு இருந்து இந்த அந்தி மாலை வேளையிலும் இருட்டு வேளையில் நட்சத்திரம் வரும்போதும் ஆகாயத்தைப் பார்..”

    அவளருகே சற்று தள்ளி அந்த அகன்ற பாறையில் அமர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். இதோ இப்படி வெள்ளையாக இருக்கும் ஆகாயம் இன்னும் சற்று நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.. ஆனால் கருப்பாக இருந்த ஆகாயம் வெள்ளையாக மாறிய அந்த சுபோதய வேளையில் கண்ட காட்சி மட்டும் மறுபடியும் நினைவுக்கு வந்தது.. நினைவுக்கு ஏன் வரவேண்டும் அதுதான் தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டதே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    ”காதில் நன்றாகவே விழுந்தது.. நானும் ஆகாயத்தைத் தனியாகவே பார்த்திருக்கிறேன்..”

    “எப்போது பார்த்தாய்?”

    ”அதிகாலை வேளையில்.. சென்ற மாதம் ஒரு அதிகாலை வேளையில் பார்த்தபோதுதான்..” என்று ஏதோ சொல்லவந்தவன் அவள் முகத்தை சட்டென்ப் பார்த்தான். அவனையே ஆவலுடன் பார்த்தவள் அவளும் தன் பார்வையை விலக்கி மறுபடியும் ஆகாயத்தைப் பார்த்தாள். இவள் தன்னிடம் விளையாடுகிறாளோ.. மாமாவிடம் இதையெல்லாம் தனியாகச் சொல்லி மகிழவேண்டும்.. தன் பேத்தி எத்தனை சுட்டியாக இருக்கிறாள் என்று அவரும் மகிழ்வாள்..

    ”அதிகாலையில் பார்த்தாயா.. அப்போதெல்லாம் பார்ப்பதை விட சாயங்காலம் முடியும்போது வானத்தைப் பார்க்கவேண்டுமே.. அதுவும் இந்தப் பாறையிலிருந்து மேற்கே பார்க்கவேண்டும் என்றுதான் இப்போது வந்தேன்..”

    ”சாயங்கால வானம் என்ன அத்தனை உசத்தி?”

    ”ஓஹோ.. நீ தமிழ் படிக்கவில்லை போலும்..”

    “அதென்ன அப்படி சொல்லிவிட்டாய்.. இரண்டு புலவர்களை மதுரையிலிருந்து வரவழைத்துக் கற்றுக் கொண்டவனாக்கும், இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயின்றவன் தெரியுமா”

    ”ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கையில்லை.. அப்படிப் படித்தவனானால் அந்தி நேரத்து வானம் அதுவும் மேற்கே வானம் என்றதும் உனக்கு ஏதும் நினைவு வரவில்லையா?”

    “ம்.. இரு.. இரு.. ஆமாம்.. மேற்கே வானம் செவ்வானமாக மாறப்போவதையும் அந்த செவ்வானத்தை கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த யுத்தத்தில் ரத்தமாக சிவந்து போன யுத்தகளத்தை ஒப்பிட்டும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.. எனக்கு நன்றாக நினைவு உள்ளது.. பெரும்பாணாற்றுப் படை, சரிதானே”

    “ஓஹோ.. நீயும் யுத்தத்தில் கலந்து கொள்வாயா.. பார்த்தாயா.. சிவந்த யுத்தபூமியை அந்தி நேரத்து செவ்வானத்துக்கு ஒப்பீடாக வைத்தார்களே.. அழகு எங்கே உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது போலும்..”

    சட்டென அதிர்ந்தான் அவன்.. இவள் சின்னப்பெண்ணா.. தனக்குள் கேட்டுக்கொண்டவன் தன்னையே சமாதானம் செய்துகொள்ளவும் செய்தான்.. தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எல்லா உவமைகளையும் ஒப்பிட்டுப் பாடித்தொலைத்துவிட்டன.. படித்தவர்கள் அறியத்தானே செய்வர்..இதில் சிறியவர் என்ன பெரியவர் என்ன?

    ”என்ன, என்னை மனதுக்குள் திட்டிக்கொள்கிறாயா.. சரி சரி,, உனக்கு வானத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை போலும்.. போய் என் தாத்தாவைப் பார்.. உருப்படியான காரியம் செய்.. நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துதான் வருவேன்..”

    ”செல்லப்பெண்ணே!.. நான் அப்படியெல்லாம் உன்னை விட்டு விட்டுப் போகமாட்டேன்.. நானும் நீயும் சேர்ந்தே செல்வோம்.. சரி, நீ உன் வேலையைப் பார்.. ஏதாவது விசித்திரம் கண்டால் சந்தேகம் கேள்.. நான் பதில் சொல்கிறேன்..”

    ”நீயா!  உனக்கு செவ்வானத்தைப் பற்றியே ஏதும் தெரியவில்லை.. இதில் என் சந்தேகத்தைத் தீர்க்கப்போகிறாயா? எதையும் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.. சட்டென எதுவும் தோணாது.. கொஞ்சம் பொறுமை தேவை.. உனக்குத் தெரியுமா.. இந்த வானம் முழுதும் ஒருவன் ஆள்கிறான். அவன் பெயர் தெரியுமா?”

    கிருஷ்ணதேவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தன்னைப் போலவே சிந்திக்கும் ஒரு பிறவியை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறான். திம்மராசு மாமாவின் பேத்தியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்தான்..

    ”செல்லப்பெண்ணே! ஆமாம்.. அவன் எனக்கும் பிடித்தவன்.. அவனை விஷ்ணு என்போம்.. நீ எப்படி கூப்பிடுகிறாயோ?

    ”ஆஹா.. உனக்கு உன் மூளை இப்போதுதான் வேலை செய்கிறது.. சரி, விண்ணை ஆள்பவன் விஷ்ணு என்கிறாய் அல்லவா.. இதோ விண்ணைப் பார்க்கிறாயே.. அந்த விஷ்ணுவையும் பார்க்கவேண்டுமே..”

    திம்மராசு பேத்தியின் வார்த்தைகள் அவனை மயக்கின. மறுபடியும் சென்ற மாதத்தில் கடந்து போன கிருஷ்ணை நதி தீரத்துப் போர்க்களமும் துவாதசித் திதியும் அந்த விண்ணை ஆளும் விஷ்ணுவும் கண்முன் வந்தனர்.. எப்படிச் சொல்வேன்.. இவளிடம்..தான் என்ன பேசினாலும் மறுத்துப் பேசும் சாமர்த்தியம் உள்ளவள்.. இவளுக்கு வாய்க்கும் இளைஞன் மிக அரிதான் அறிவு படைத்தவனாக அமையவேண்டும்.. சரி, விடக்கூடாது இவளை, இனி அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்போமே..

    “என்ன, வாய் மூடி மௌனமாகி விட்டாய்.. விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லையல்லவா..”

    “எதற்காக அந்தப் பேச்சையே எடுக்கிறாய்.. நீ பார்த்தாயோ?”

    ”அட, இடக்கு முடக்காக இதென்ன கேள்வி..  முன்பே சொன்னேனே.. சரியாகச் செவியில் விழவில்லை போலும்.. ஓஹோ செவிட்டு வீரனோ?”

    இந்த வார்த்தையைப் பிறர் யாரேனும் பேசியிருந்தால் அவர்கள் நிலைமை தலைநகரத்தில் என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்து சிரித்தான்..”செல்லப்பெண்ணே!.. சரி, நான் செவிடு இல்லைதான்.. உன் பதிலைச் சரியாகத்தான் சொல்லேன்.. உன்னளவு எனக்கு தமிழில் பரிச்சயமில்லை என்றுவேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன் போதுமா?”

    “ஆங்.. அப்படி வா வழிக்கு, விண்ணை ஆள்வதால் மட்டும் அவன் விஷ்ணு அல்ல, அவன் விண்ணில் பரந்து கிடக்கும் அத்தனை பிரதேசங்களிலும் வியாபித்துக் கிடக்கிறான்.. அதனால்தான் அவன் விஷ்ணு.. சரி, அவனைப் பார்க்க வேண்டுமென்றால்  வெகு சுலபமான வழி இருக்கிறது..”

    இப்போது கிருஷ்ணதேவன் ஆலோசனை சுத்தமாக அவனிடத்தே இல்லை..எங்கோ கிருஷ்ணை நதி தீரத்துக்குப் போய்விட்டது. கடும்போர்.. கங்கர்கள் மிகத் தீரமாகத்தான் போரிடுகிறார்கள்.. ஆனால் அவர்கள் வெல்லப்படவேண்டும்.. அன்று ஏகாதசித் திருநாள் வேறு.. ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருப்பவன்.. அன்று அந்த ஸ்ரீகாகுள கிராமத்து கோயிலில் இருந்த பெருமாளை நினைத்துக் கொண்டே அந்தக் கோயிலின் முன்னறையில் வெறுந்தரையில் படுக்கிறான்.. அவன் தளபதிகள் வெளியே என்ன செய்வது என்பது புரியாமல் காத்துக்கிடக்கிறார்கள்.. எதிரிகள் ஓய்ந்து கிடக்கின்றனர், இன்னமும் ஓரிரு நாளில் அவர்களை எளிதாக வென்றிடமுடியும்தான்,  ஏகாதசி தின விரதம் இன்றா நேற்றா.. எத்தனையோ வருடங்களாகத்தான் மன்னர் செய்துவருகின்றார்.. ஆனாலும் யுத்த பூமியிலும் தொடரவேண்டுமா என்பதுதான் அவர்களின் மனக் கவலை.. இவை எதுவும் கவனம் கொள்ளாமல் மனத்தில் இறைவனையே நிறுத்தி ஜபம் செய்து கொண்டே இருந்ததும் விடிகாலையில் யாருமறியாமல் கிருஷ்ணை நதிக்குச் சென்று நதியில் ஸ்நாநம் முடித்து கருமையிலிருந்து வெளுப்புக்கும் வரும் வானத்தை சாதாரணமாகத்தான் பார்த்தான்..

    ஆஹா.. எப்படி வர்ணிப்பது அந்த அதிசயக் காட்சியை…

    படங்களுக்கு நன்றி:

    Raja Ravi Varma (Google) Picture

    www.pbase.com

    Share
  • இஸ்ரேல் பயணம்- 5

    நாகேஸ்வரி அண்ணாமலை

    யூதர்கள் சாலைகள், ஸ்தாபனங்கள் அமைத்ததால் அரேபியர்களும் பயன் அடைந்தாலும், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுடைய தனி நாடு அமைக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு கலக்கம் அடைந்தனர்.  பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கே என்று நினைத்திருந்ததற்கு மாறாக, நிறைய யூதர்கள் மேலும் மேலும் குடியேறுவதும், அவர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான பல இடங்களை வாங்கிப் போடுவதும் இவர்களின் கோபத்தைக் கிளப்பியது.  யூதர்களின் குடியேற்றத்தை நிறுத்தும் பொருட்டு 1920-இல் யூதர்கள் தனியாக இருந்த குடியிருப்புகளை அவர்கள் தாக்கினர்.  இதில் யூதர்களின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டார்.  சாகும் தறுவாயில் அவர் கூறிய ‘நாட்டிற்காக உயிர் விடுவது நல்லது’ என்ற வார்த்தைகள் அவரை ஒரு பெரிய தியாகி ஆக்கின.  யூத நாட்டை உருவாக்கியே தீருவது என்பதில் யூதர்கள் முடிவாக இருந்தனர்.  தங்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அசெம்பிளியையும், கமிட்டியையும் அமைத்துக்கொண்டனர்.  பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறாமலே தங்களைக் காத்துக்கொள்ள ஒரு சிறு படையையும் அமைத்துக்கொண்டனர்.  இது பின்னால் இஸ்ரேலின் ராணுவத்தின் முக்கிய அங்கமானது.  இவற்றோடு தொழிலாளர் அமைப்பு ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

    முதல் உலகப் போருக்குப் பின் ஆட்டோமான் பேரரசு பாலஸ்தீனம் உட்பட பல இடங்களை இழந்தது.  ஜூலை 1922-இல்  சர்வதேச சங்கம் (League of Nations) பாலஸ்தீன அரசியலை மேற்பார்வை செய்ய பிரிட்டனை நியமித்தது. பல நேசநாடுகளின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட இந்த நியமனம் (இதை ஆங்கிலத்தில் British Mandate என்றார்கள்.) யூதர்களின் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.  இதையடுத்து பிரிட்டன் தன் ராணுவ நிர்வாகத்தை நீக்கிவிட்டு, சிவில் நிர்வாகத்தை பாலஸ்தீனத்தில் அமைத்தது.  ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் பிரிட்டிஷ் யூதரை பாலஸ்தீனத்திற்குத் தன் பிரதிநிதியாக நியமித்தது.  இவரும் பாலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவராகையால், அப்போது பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களுடைய கடவுளின் தூதர் அவர் என்று – முதலிலாவது – எண்ணி வரவேற்றனர்.

    பாலஸ்தீனம் பிரிட்டனின்  அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டதால் எப்படியும் பிரிட்டன் பேல்ஃபர் அறிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தில் தனி நாடு அமைக்கத் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று நம்பினர்.  இதை  யூதர்கள் தங்களுடைய பெரிய  வெற்றியாகக் கருதினர்.

    தொடர்ந்து யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து  பாலஸ்தீனத்தில் குடியேறி வந்ததாலும் அங்கு நிலங்களை வாங்கிக்கொண்டிருந்ததாலும்  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே  சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த  அரேபியர்கள் பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வந்து தங்கும்  முக்கிய இடமான ஜாஃபாவைத்  தாக்கினர்.  அதைத் தொடர்ந்து  அதற்கு வடக்கிலும் தெற்கிலும் இருவருக்கும் இடையே கலவரங்கள் வெடித்தன.  யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதுதான் கலவரங்களுக்குக் காரணம் என்று நினைத்த ஹெர்பெர்ட் சாமுவேல் தற்காலிகமாக யூதர்கள் வருவதைத் தடைசெய்தார்.  ஆனால் சீக்கிரமே அந்தத் தடை நீக்கப்பட்டது.

    இதற்கிடையில் லண்டனில், பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை உருவாக்க பாலஸ்தீன் உருவாக்க நிதி (Palestinian Foundation Fund) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.  அதே சமயத்தில் அங்கு அவர்களின் விவசாயக் குடியிருப்புகளை நிறுவ ஸயோனிஸ்ட் சங்கம் இன்னொரு நிதியை ஏற்படுத்தியது.  ரஷ்யாவிலிருந்து குடியேறிய ஒரு யூதர் பாலஸ்தீனத்தில் மின்நிலையங்களை அரசு அனுமதியுடன் தொடங்கினார்.  இதனால் டெல் அவிவ் (Tel Aviv), ஹைஃபா (Haifa), டிபீரியஸ் (Tiberius) போன்ற யூதர்கள் வாழ்ந்த பகுதிகள் தொழில்வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டன.  யூதர்களின் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே போனதால் பீதியடைந்த அரேபியர்களின் பயத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசு யூதர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தியது.

    கட்டுப்பாடுகள் இருந்தாலும்  பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வருவது குறையவில்லை.  1924-1929 வரை போலந்திலிருந்து பல யூதர்கள் போலந்து அரசு யூதர்களுடைய வருமானவரியை அதிகரித்ததால் போலந்தை விட்டு பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இந்தச் சமயத்தில் இவர்களுக்கு அமெரிக்காவிற்குப் போக அனுமதி கிடைக்கவில்லை.  இந்த வணிகர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி வணிக நிறுவனங்களைத் தொடங்கினர்.  முன்னால் வந்த யூதர்களைப் போல் அல்லாமல் இவர்கள் நகரவாசிகள் ஆயினர்.  இதனால் டெல் அவிவ் போன்ற நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன.  கட்டடப் பணி வளர்ந்தது.  யூதர்கள் வாழ்ந்த நகரங்கள் விரிந்துகொண்டே போயின.  யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே அவ்வப்போது கலவரங்களும் வெடித்தன.

    1932-க்கும் 1939-க்கும்  இடையில் 175,000 யூதர்கள் ஜெர்மனியிலிருந்தும் போலந்திலிருந்தும் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,00,000 ஆனது.  ஸயோனிஸ்ட் அமைப்பின் தலைவர்களுக்கும் ஜெர்மன் அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஜெர்மானிய யூதர்கள் தங்களுடைய சேமிப்பின் ஒரு பகுதியை ஜெர்மனியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் பாலஸ்தீனத்திற்குள் நிறையப் பணம் கொண்டுவரப்பட்டு அதன் பொருளாதாரம் சிறப்படைந்தது.  உலோகங்கள், துணி, வேதியல் பொருள்கள் ஆகியவற்றின் வணிகம் பெருகியது.  மேலும் இப்படி வந்தவர்களில் பலர் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கியதால் ஹீப்ரு பலகலைக்கழகமும் மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களும் மேம்பாடடைந்தன.  கலைகளும் கலைக்கூடங்களும் சிறப்புற்றன.  இவர்கள் நகரங்களில் வாழத் தொடங்கியதால் யூதர்களின் நகரங்களும் விரிவடைந்துகொண்டே போயின.

    யூதர்களின் செல்வமும்  செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே போனதால் அரேபியர்களின்  பயமும் அதிகரித்தது.  அது  பெரிய கலவரமாக வெடித்தது.  புதிதாக யூதர்கள் வாங்கும் விவசாய நிலங்களில் ஏற்கனவே  அரேபியர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு ஒரு சிறிய பகுதியை விட்டுவிட்டுத்தான் நிலத்தை வாங்க வேண்டும் என்று பாலஸ்தீனத்தை ஆண்ட பிரிட்டிஷ் அரசு உத்தரவு போட்டிருந்த போதிலும், யூதர்கள் அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரித்துவிட்டு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லாத நிலங்களையே வாங்கினர்.  மேலும் அந்த நிலங்களில் பாடுபட யூதர்களையே நியமித்தனர்.  தாங்கள் இது வரை உழைத்து வந்த நிலங்கள் தங்கள் கைகளை விட்டுப் போனதுமல்லாமல் தங்களுக்கு வேலையும் போய்விட்டதால் அரேபியர்களின் கோபம் அதிகமானது.  யூதர்களுக்குப் பணமும் தொழில்நுட்ப அறிவும் இருந்ததால் அவர்களின் விளைபொருள்களான காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து அரேபியர்களின் பொருள்களைச் சந்தையிலிருந்து விரட்டியடித்தன.  யூதர்கள் தங்களுக்கென்று யூதர்கள் நிறைய வாழும் டெல் அவிவ் நகரில் ஒரு சிறிய துறைமுகத்தையும் அமைத்துக்கொண்டனர்.  யூதர்களின் வளர்ச்சியை நிறுத்தும் நோக்கத்துடன் அரேபியர்கள் ஆரம்பித்த கிளர்ச்சி, யூதர்கள் தங்களை மேலும் வலுப்படுத்திக்-கொள்வதற்குப் பயன்பட்டது.

    மேலும், யூதர்கள் முதலில் இரகசியமாக ஆரம்பித்த படைக்குத் தடை விதித்திருந்த பிரிட்டிஷ் அரசு அந்தத் தடையை நீக்கி. யூதர்கள் தங்களுக்கென்று ஒரு படையை வைத்துக்கொள்ள அனுமதித்தது.  1939-இல் 14,500 ஆட்களைக் கொண்டதாக இந்தப் படை இருந்தது.

    அடிக்கடி யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே  மோதல்கள் ஏற்பட்டதால் பிரிட்டிஷ் அரசு 1936-ல் லண்டனிலிருந்து லார்ட் பீல் (Lord Peel) என்பவரை பாலஸ்தீனத்திற்கு அங்குள்ள நிலைமையை அறிந்துவர அனுப்பியது.  அவர் தன்னுடைய நீண்ட அறிக்கையில், யூதர்கள் பழங்காலத்திலிருந்தே பாலஸ்தீனத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்பால் அதற்கு உரிமை கொண்டாடுவதும், அரேபியர்கள் பதிமூன்று நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துவருவதால் அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுவதும் சரியே என்றும் வாதிட்டு, இருவருக்கும் பாலஸ்தீனத்தைப் பகிர்ந்து கொடுப்பதே சரியான தீர்வு என்றும் அப்படிச் செய்வதின் மூலம்தான் அங்கு ஏற்படும் கலவரங்களுக்கு முடிவு காணமுடியும் என்றும் கூறினார்.

    பாலஸ்தீனத்தின் வட மேற்குப் பகுதியில் இருந்த கலீலி மற்றும் கடற்கரையை  ஒட்டிய சமவெளிப் பிரதேசத்தை – இது பாலஸ்தீனத்தின் பரப்பளவில் 20 சதவிகிதம்; ஆனால் வளம் நிறைந்த பகுதி –  யூதர்களுக்கும் மற்ற இடங்களைப் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுப்பதென்றும் முடிவாகியது.  இருவரும் தனித்தனியே தங்கள் நாடுகளை அமைத்துக்கொள்வதென்றும், அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதி பின்னால் ட்ரானஸ் ஜோர்டன் (Transjordan) என்ற பகுதியோடு சேர்க்கப்படும் என்றும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.  ஜோர்டன் நதிக்குக் கிழக்கே இருந்த நிலப் பகுதி ட்ரான்ஸ் ஜோர்டன் என்றும் மேற்கே இருந்த பகுதி வெஸ்ட் பேங்க் (West Bank) என்றும் அழைக்கப்பட்டன.    வெஸ்ட் பேங்க் பாலஸ்தீன அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  பின்னால் ட்ரான்ஸ் ஜோர்டன், ஜோர்டான் என்ற தனி நாடாகியது.

    தங்களுக்குப் பாலஸ்தீனம் முழுவதும் வேண்டும் என்று  கேட்டுக்கொண்டிருந்த யூதர்களில் ஒரு பிரிவினர் பீலின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாயினும், மற்றவர்கள் அப்போதைக்கு அதை ஏற்றுக்கொள்ளுவதென்றும் பின்னால் பிரிட்டிஷ் அரசோடு பேசி இன்னும் கொஞ்சம் இடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்ததால் பீலின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  மேலும், ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பிறகு யூதர்களின் நிலை மோசமாகிக்கொண்டே போனதால் யூதர்களுக்கென்று உடனே ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்திலும் யூதர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.  தங்களிடம் ஒரு படை இருந்ததால் பின்னால் அரேபியர்களோடு சண்டைபோட்டு அவர்கள் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம் என்று இரகசியமாகத் திட்டமிட்டதும் இன்னொரு காரணம்.

    ஆனால், சிரியாவில் நடைபெற்ற அரேபியர் மாநாட்டில் பல அரபு நாடுகளிலிருந்து வந்திருந்த 400 பிரதிநிதிகள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  அரேபியர்களுக்கு மட்டுமே உரிய அரபு நாட்டை (பாலஸ்தீனத்தை) யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.  பீலுக்குப் பிறகு பாலஸ்தீன நிலையைக் கண்டறிய அனுப்பப்பட்ட இன்னொருவர் பாலஸ்தீனத்தைப் பிரிப்பது மிகவும் சிக்கலான காரியம் என்று அறிக்கை கொடுத்ததால் பீல் திட்டம் கைவிடப்பட்டது.

    யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும்  இடையே நடக்கும் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்தன.  யூதர்கள் தங்கள் குடியிருப்புகளை  நிறுவும் திட்டங்களும் தொடர்ந்தன.  பிரிட்டன் இரு தரப்பையும் கூட்டி ஒரு முடிவிற்கு வர முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.  இதற்கிடையில் 1939-இல் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் சூழ்ந்துவந்ததால் பிரிட்டன் அதில் கவனம் செலுத்த விரும்பியது.  யூதர்கள் அதிகமாக பாலஸ்தீனத்தில் குடியேறுவதும் யூத-அரேபிய போராட்டங்களுக்குக் காரணம் என்று பிரிட்டன் முடிவு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு வரலாம் என்று வரையறுத்தது.  சுதந்திரம் அடையப் போகும் பாலஸ்தீனத்தில் அரேபிய பெரும்பான்மையோடு தாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணிய யூதர்கள், பிரிட்டன் ஸயோனிஸத்தின் எதிரி என்று நினைக்க ஆரம்பித்தனர்.

    இருப்பினும், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனின் பக்கம் சேர்ந்து சண்டையிட்டால் யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையைப் பல யூதர்கள் வைத்திருந்தனர்.  இவர்களால் பிரிட்டனை எதிர்த்த பிரிவினர் நசுக்கப்பட்டனர்.  பிரிட்டனோடு சேர்ந்து சண்டையிட்ட பல யூதர்கள் யுத்தத்தில் உயிர் இழந்தனர்.

    யுத்தம் முடிவடைந்ததும் பிரிட்டனில் தொழில் கட்சி  (Labour Party) ஆட்சிக்கு வந்தது.  இது கொள்கையளவில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், செயல்களில் யூதர்களுக்கு எதிராகவே இருந்தது.  இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை யூதர்கள் எதிர்த்து, யுத்த முடிவில் ஐரோப்பாவில் அகதிகளாக்கப்பட்ட யூதர்களைப் பாலஸ்தீனத்திற்குள் சட்டவிரோதமாகக் கூட்டிவந்தனர்.  ஐரோப்பாவில் அவர்கள் புறப்பட்ட இடங்களிலிருந்தும் பாலஸ்தீனத்தில் அவர்கள் நுழைய முயன்ற இடங்களிலும் அவர்களைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    பாலஸ்தீனத்தில் பலரை இழந்த பிரிட்டன் அதற்கு மேல் அங்கு இருப்பதால் தனக்குப் பலன் எதுவும் இல்லை என்று  எண்ணிப் பாலஸ்தீனப் பிரச்சினையை  மறுபடி ஐ.நா.-விடமே கொடுத்தது.  ஐ.நா. சபை பாலஸ்தீனப் பிரச்சினையைத்  தீர்க்க ஒரு குழுவை நியமித்து  பாலஸ்தீனத்திற்குச் நேரில் சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியது.  இந்தக் குழு ஜெருசலேமில்  ஐந்து வாரங்கள் தங்கியிருந்த போது யூதப் பிரதிநிதிகள், குழு அங்கத்தினர்களைச் சந்தித்துத் தங்கள் பக்கக் கோரிக்கைகளைக் கூறினர்.  ஆனால் அரேபிய பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கவில்லை.  பாலஸ்தீனத்தை பிரிட்டனின் அதிகாரத்திலிருந்து விடுவித்துவிடுவது என்றும், பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் கொடுப்பது என்றும் ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.  1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிப்பது என்ற தீர்மானத்தை 33 நாடுகள் ஆதரித்தன; 13 நாடுகள் எதிர்த்தன; 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.  இத்தீர்மானத்தின்படி ஆறு லட்சம் யூதர்களுக்கு 5700 சதுர மைல் இடமும் 14 லட்சம் அரேபியர்களுக்கு 4300 சதுர மைல் இடமும் கொடுக்கப்பட்டது.  ஜெருசலேம், பெத்லஹேம் முதலான புண்ணிய தலங்கள் ஐ.நா.வின் பார்வையில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  யூதர்களுக்கு அவர்களே எதிர்பார்த்ததை விட அதிக நிலம் கிடைத்தது.

    இதை எதிர்த்த அரேபியர்கள்  பாலஸ்தீனத்தை முழுவதுமாகப் பெறப் போவதாகச் சூளுரைத்தனர்.  இதையடுத்து அரேபியர்களும்  யூதர்களும் உள்நாட்டு யுத்தத்தில்  ஈடுபட்டனர்.  முதலில் அரேபியர்களின்  கை ஓங்கியிருப்பதாகத் தோன்றினாலும், யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் பிடித்துக்கொண்டனர்.  முதலில் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் முடிவை அமெரிக்கா வெகுவாக ஆதரித்து ஐ.நா.வின் அந்த முடிவைச் செயலாக்கத் தன் வோட்டை அளிக்கத் தயாரானது,  ஆனால் உள்நாட்டுப் போர் தீவிரமடையவே தன் முடிவிலிருந்து பின்வாங்கி ஐ.நா.வின் கீழ் பாலஸ்தீனம் இருப்பதே சரி என்று நினைத்தது.

    அமெரிக்க ஆதரவுத்  தங்களுக்குக் குறைவதை உணர்ந்த  பாலஸ்தீன யூதர்கள் தங்கள் படைபலத்தால் தங்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட  இடங்களைத் தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டுவந்தனர்.  அதே சமயத்தில்  அமெரிக்காவையும் பாலஸ்தீனப் பிரிவினைக்குச் சம்மதிக்க  வைக்க முயன்றனர்.  இதனால் அமெரிக்காவும் அங்கு அமைதியை  நிலைநாட்ட முன்றது.  யூதர்கள் அரேபியர்களும் யூதர்களும் வாழ்ந்த இடங்களையும் பிடித்துக்கொண்டனர்.  இந்தச் சமயத்தில்தான் பல அரேபியர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு விட்டு வெஸ்ட் பேங்க் பகுதியிலும் சிரியா, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளிலும் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர்.  மிஞ்சியிருந்த சிலரையும் யூதர்கள் பலவந்தமாக வெளியேற்றினர்.  1948 ஏப்ரலில் டேர் யாசின் (Deir Yassin) என்ற இடத்தில் 110 அரேபியர்கள் யூதர்களால் கொல்லப்பட்டதை அடுத்து 7,50,000 பாலஸ்தீன அரேபியர்கள் பாலஸ்தீனத்தை விட்டே வெளியேறினர்.  இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகியது.

    1948 மே 15-ஆம் தேதி பாலஸ்தீனத்தை  விட்டு வெளியேறப் போவதாக  பிரிட்டன் அறிவித்தது.  மே 14-ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு  யூதர்கள் ஐ.நா.வால் தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட இடங்களை  இஸ்ரேல் என்ற நாடாகப்  பிரகடனம் செய்துகொண்டனர்.  அரேபியர்கள் ஐ.நா.வின்  தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல்  மறுபரிசீலனை செய்யும்படி  கேட்டுக்கொண்டிருந்ததால், இன்று வரை அரேபியர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட, இறையாண்மை உள்ள (sovereign) பாலஸ்தீன நாடு உருவாகவில்லை.

    படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/United_Nations_Partition_Plan_for_Palestine

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    தொடரும்

    Share
  • தமிழின் இமயம் திருவள்ளுவர்

     

     

    கவிஞர் இரா .இரவி

     

     

    படத்திற்கு நன்றி:

    http://foter.com/f/photo/3138264542/5719167fda/

     

    Share
  • சொல்லின் செல்வன்

    கவிநயா

     

    இராமயணத்தில் ஸ்ரீ ராமனை நாராயணானாக உணர்ந்தவர்கள், அவனை ஆண்டவனாக அறிந்தவர்கள், ஒரு சிலரே. அவர்களில் ஒருவன் அனுமன்.  ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, அனுமன் ஸ்ரீராமனைச் சந்திக்கும் படலத்தைப் பற்றி இங்கே பேசலாம். எத்தனையோ பெரியவர்கள் மிகவும் விசேஷமாக அனுபவித்துச் சொல்லும் கதை இது. என்றாலும், இந்தச் சிறிய அணிற்பிள்ளைக்கும் இப்படிப்பட்டதொரு ஆசை வந்து விட்டது. ஸ்ரீ ராமனும், அனுமனும் பொறுத்தருள வேண்டும். ஸ்ரீ ராமஜெயம்.

     

    சுக்ரீவன், தன் அண்ணன் வாலிக்குப் பயந்து, அவன் வரமுடியாத இடமான ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வாலி அங்கே வர மாட்டான் என்ற நிம்மதியோடு தன்னுடைய சில மந்திரிகளோடும், பரிவாரத்தோடும் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றைக்கு ஒரு சோதனை வருகிறது. இரண்டு வில்லாளிகள், இவர்கள் இருக்கும் மலை நோக்கி வந்து கொண்டிருப்பதை, தொலைவில் இருந்து பார்த்து விடுகிறான். உடனே பயம் பிடித்துக் கொள்கிறது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, யாரைப் பார்த்தாலும் வாலியின் ஆட்களாகவே தெரிகிறது அவனுக்கு.

     

    சுக்ரீவனின் நல்வினைப் பயன் இரண்டு விதங்களில் அருமையாக வேலை செய்கிறது. ஒன்று, தன்னிகரில்லா ஆஞ்சநேயன் அவனுக்கு மந்திரியாக அமைந்தது. இரண்டு, பரம்பொருளான ஸ்ரீ ராமன் அவனைத் தேடி வந்தது! நாம் தேடி, வேண்டி, விழைந்து, முயன்று, காணத் தவிக்கும் பரமானந்தமே அவனைத் தேடி வருகிறது என்றால், அவன் செய்த நல்லூழ்தான் என்னே!

     

    செய்வதறியாத போதுகளில் செய்வது போல், அப்போதும் தன் மதி மந்திரியான அனுமனைத்தான் அழைக்கிறான். அவனிடம் தன் அச்சத்தைத் தெரிவித்து, தொலைவில் வந்து கொண்டிருக்கும் வில்லாளிகள் யாரென அறிந்து வரும்படி பணிக்கிறான்.

     

    பாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷம்தான் பொங்கி வருகிறது; அதைக் கண்ட அனைவரும் பீதியடைந்து கலங்குகையில், முக்கண்ணன் அங்கே வந்து, ‘அஞ்சற்க’ என்று சொல்லி, தானே அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்தருள்கிறார். அந்த சிவனைப் போலவே இங்கே கலங்கி நின்ற வானரர்களுக்கு, ‘அஞ்சற்க’ என்று அனுமன் அபயம் அளிக்கிறானாம். அனுமனும் சிவ பெருமானின் அம்சமாகவே கருதப்படுவதால் கம்பனின் உவமையும் அப்படியே இருக்கிறதாம்.

     

    அபயம் அளித்த ஆஞ்சநேயன், “நான் போய் அவர்கள் யாரென்று அறிந்து வருகிறேன்”, என்று சொல்லி, ஒரு மாணவப் பிரம்மச்சாரியின் வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். (ஒரு வேளை அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களாகவே இருந்து விட்டால்?).

     

    அவ்வுருவுடன் அவர்கள் இருக்கும் பக்கம் செல்கிற வாயு புத்திரன், அவர்கள் கண்களில் படாதபடி மறைந்து நின்று கொண்டு, அவர்களை உற்று நோக்குகிறான். இங்கேதான் அனுமன் body language –ஐப் படிப்பதில் எவ்வளவு தேர்ந்தவன் என்று அழகாகக் காட்டுகிறார் கம்ப நாட்டாழ்வார்.

    “வில்லேந்தி இருந்தாலும் இவர்கள் இருவரும் தவ வேடமும் பூண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இருக்கிறதே.  நடந்து வந்த களைப்பையும் மீறி, புழுதி படிந்த தோற்றத்தையும் மீறி, அவர்களின் தேஜஸானது விழிகளைக் கூசச் செய்கிறது. அதனோடு கூட இவர்களிடத்தில் ஏதோ ஒரு பெருங் கோபமும், சோகமும் தெரிகிறது. ஏதோ ஒரு விலைமதிப்பில்லாத பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்தபடியே இருக்கிறார்கள்.  ஒரு வேளை இவர்கள் முத்தேவர்களோ? இருக்காது, இருவர் மட்டும் தானே இருக்கிறார்கள்? கொடிய மிருகங்கள் கூட இவர்களைக் கண்டதும் தன் கன்றுகளைக் கண்டது போல் மனம் நெகிழ்ந்து அன்பைப் பொழிகின்றன. மயில்கள் தங்கள் தோகைகளை விரித்து அவர்களுக்குக் குடை பிடிக்கின்றன. இவர்கள் நடந்து வரும் பாதையில் கிடக்கின்ற கற்களும் புற்களும் கூட இவர்கள் பாதங்களை அழுத்தாமல் மலர்களைப் போல் குழைந்து கொடுக்கின்றன. இவர்களைப் பார்த்தாலே மனித உருவில் வந்த பரம்பொருள் போலல்லவா இருக்கிறது.”

     

    இப்படியாக பலவாறு எண்ணமிடும் புத்திமானான அனுமனுக்கு, இவர்கள் உயர் குணத்தோர் என்பதும், தருமத்திலும், நல்லொழுக்கத்திலும், கருணையிலும் தமக்கு நிகரில்லாதவர் என்பதும் புரிகிறது.  அவர்களைக் காணக் காணத் தன் என்பும் உருகும் அளவு அன்பு பெருக்கெடுப்பதை உணர்கிறான். முன் எப்போதோ விட்டுப் பிரிந்தோரை வெகு காலத்திற்குப் பின் பார்ப்பது போல் செயலற்று நிற்கின்றான். தன்னையறியாமலேயே தன் உள்ளத்தில் எல்லையில்லாமல் ஊறும் அன்பிற்குக் காரணம் அறியாது திகைக்கிறான்.

     

    அனுமனின் அத்தகைய நிலையை, ஸ்ரீ ராமன்  யாரென அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் அன்பூற நிற்கின்ற நிலையை நினைத்தாலே நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. இறைவனை அறியும் முன்பு இருக்கக் கூடிய மனநிலையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் வர்ணிக்கையில் “கதிரவன் உதிக்கும் முன்பு கீழ்வானம் சிவந்து, அவனை வரவேற்கத் தயாராக இருப்பது போல் இருக்கும்” என்பார். அதைப் போன்ற மனநிலையில்தான் அனுமனும் இருந்தான் போலும்.

     

    பிறகு அவர்களைப் பற்றி பயம் கொள்ளக் காரணம் இல்லையென்று நிச்சயித்து, அவர்கள் கண்களில் படும்படியாக முன்னால் வந்து, “உங்கள் வருகை துன்பம் இல்லாததாக இருக்கட்டும்”, என்று வாழ்த்துகிறான். பதிலாக இராமனும், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று வினவுகிறான்.

     

    “மேகங்கள் திரண்டிருப்பது போல அழகான நீல நிறத்தைக் கொண்டவனே! பெண்களுக்கு நஞ்சு போல இருப்பவனே! குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போல மலர்ந்திருக்கும் சிவந்த அழகிய விழிகளை உடையவனே! நான் வாயுதேவனுக்கு அஞ்சனையிடத்தில் பிறந்தேன். அனுமன் என்பது என் பெயராகும்” என்கிறான்.

     

    அனுமன் பேசுவதிலிருந்தே அவனுக்கு ஸ்ரீ ராமனிடம் ஏற்பட்டு விட்ட ஈடுபாடு விளங்குகிறது. அதிலும் “நளிரிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண” என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. ‘குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போன்ற சிவந்த’ என்ற நேரடிப் பொருள் மட்டும் அல்லாமல் இன்னொரு பொருளையும் காண முடிகிறது. கண்ணீர் துலங்கும் கண்களை, பனித் துளி படிந்த மலருக்கும் ஒப்பிடலாம்.  அதாவது சீதா பிராட்டியைக் காணாமல் கண்கள் கலங்கிய வண்ணமே இருக்கிறான் ராமன். இடைவிடாது கலங்கும் காரணத்தால் அவனுடைய விழிகள் சிவந்திருக்கின்றன.  அப்படி இருந்த போதிலும் அவன் விழிகள் செந்தாமரை மலர்கள் போல விரிந்து அத்தனை அழகாகக் காட்சி தருகின்றன என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.

     

    “இந்த மலையில் தங்கி வாழ்ந்து வருகின்ற சூரியனுக்கு மகனாகப் பிறந்த சுக்ரீவன் ஏவிய பணிகளைச் செய்பவன் நான். உங்கள் வருகையைப் பார்த்து மகிழ்ந்த சுகிரீவன், தாங்கள் யாரென்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தான்”, என்கிறான்.

     

    அனுமன் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டு வரும்போதே, அவன் யாரென்று தெரிந்து விடுகிறதாம், இராமனுக்கு. “இவனே சிறந்த குணங்கள், கல்வி, கல்வியால் வரும் அடக்கம், அறிவு, இவை அனைத்தின் வடிவமாவான்”, என்று தெரிந்து கொண்டு, தம்பிக்கும் அதனை எடுத்துரைக்கிறான். கல்வி இருக்கும் இடத்தில், அது உண்மையான கல்வியாக இருக்கும் பட்சத்தில் கூடவே பணிவும் இருக்கும் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார், கம்பர்.

     

    “தம்பீ, இவன் பேசிய பேச்சிலிருந்தும், பேசிய விதத்திலிருந்தும், இவன் அறியாத வேதங்களோ, கலைகளோ இல்லையெனும்படியான அறிவுத் தெளிவு தெரிகிறது பார்த்தாயா? இப்படி சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ, அல்லது சிவபெருமானேதானோ?” என்று வியக்கிறான், இராமன்.

     

    அந்த அளவிற்கு அன்பும், பண்பும், அடக்கமும், மட்டுமின்றி, அனுமனின் பேச்சு தெளிவாகவும், இலக்கணப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ அற்றும், அதிக சப்தமாக இல்லாமலும், மிக மெதுவாக இல்லாமலும், கேட்பதற்கு தெளிவாகவும் இனிமையாகவும் இருந்ததாம். அப்படிப் பேசக் கூடியவர்கள், அந்த அளவு கல்வியும் அறிவும் தெளிவும் பெற்றவர்கள் பிரமனுடைய அல்லது சிவனுடைய அம்சமாகவோதான் இருக்க வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று வியக்கின்றானாம் இராமன். இந்த இடத்தில் இராமன் தானே நாராயணன் என்று அவன் அறிந்திருப்பது போலக் காட்டி இருக்கிறார் கம்பர். தான் இங்கு இருக்கையில் மற்ற இருவரில் ஒருவனாகத் தானே இவன் இருக்கக் கூடும் என்று கேட்கிறான் போலும்.

     

    மேலும், “இவன் உருவத்தைப் பார்த்து இவன் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. உலகத்துக்கே அச்சாணி போன்று இருக்கும் இவனுடைய திறமைகளை எல்லாம் நான் தெரிந்து கொண்டேன்; நீயும் கூடிய விரைவில் தெரிந்து கொள்வாய்”, என்கிறான்.

     

    பிறகு அனுமனை நோக்கி, “உன் அரசன் சுக்ரீவன் எங்கே இருக்கிறான் என்று சொல். அவனைப் பார்க்கத்தான் நாங்களும் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் அழைத்துச் செல்”, என்கிறான்.

     

    இவ்வாறு இராமன் சொன்னதைக் கேட்டு அனுமனும், தங்களையும் சுக்ரீவனையும் காப்பதற்கெனவே வந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆற்றலைப் போற்றிப் புகழ்கிறான் . சுக்ரீவனின் வரலாற்றை விளம்புகிறான்… தான் ‘சொல்லின் செல்வன்’தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறான். “நீங்கள் யார் என்று” என்று நேரடியாகக் கேட்காமல், “யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை”, அதாவது, “எங்கள் குலத் தலைவனாகிய சுக்ரீவனிடம் சென்று நீங்கள் யாரென்று சொல்வேன்?” என்று கேட்கிறான். இராமனின் ஆணைக்கிற்கிணங்க தம்பி இலக்குவன் தங்களுக்கு நேர்ந்தவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறான்…

     

    இவ்விதமாக அனுமன் இராமனைச் சந்தித்த கணம் முதலாகவே அவர்கள் இருவருக்கும் இடையேயான பரஸ்பர அன்பு வெளிப்பட்டு விட்டது.

     

    ஆஞ்சநேயனுக்கு ஸ்ரீராமன் மேல் இருந்த பிரேமையும், அன்பும், பக்தியும் போல் நமக்கும் ஏற்பட அஞ்சனா புத்திரன் அருளட்டும்.

     

    ஸ்ரீ ராமஜெயம்.

     

    படத்துக்கு நன்றி: http://smilemakerkrishna.blogspot.com/2012/08/lord-rama-and-hanuman.html

     

     

     

     

    Share
  • தொல்லை காட்சி :சூப்பர் சிங்கரில் உலக நாயகன்-இளமை-புதுமை !

    மோகன் குமார்

    சூப்பர் சிங்கரில் கமல்

    கமல் மற்றும் விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா சூப்பர் சிங்கருக்கு வந்திருந்தனர் (ஆண்ட்ரியா வருவார் என அய்யாசாமி தினம் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போனார்)

    கமல் பல நேரம் எளிமையாய் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. “இப்படி நல்லா பாடுபவர்களை முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகம் பாடியிருக்க மாட்டேன்” என்றார் கமல் சிரித்தபடி. DTH பற்றியும் மனம் விட்டுப் பேசினார்.

    திவ்யதர்ஷினி மற்றும் மா. கா. பா என இரு தொகுப்பாளர்கள் இருந்தும் கமல் இருந்த 3 நாளும் மா. கா. பா அநேகமாய் வாயே திறக்கலை. திவ்யதர்ஷினி தான் பேசித் தள்ளினார்.

    பசங்க எல்லாரும் as usual ” இவர் கடவுள் மாதிரி ; இவரை ஒருமுறை பார்ப்பதே பூர்வ ஜன்ம புண்ணியம் ” என்று பேசினர் (கமலும் இதற்கு வழக்கம்போலவே நாத்திகம் பேசினார்)

    சன் மியூசிக்கில் படப்பிடிப்பு தளம்

    சினிமா- படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சன் மியூசிக்கில் இயக்குனர்களே வந்து பேசும் “கட் டு கட் ” என்கிற நிகழ்ச்சி சன் மியூசிக்கில் வருகிறது. புது படங்களுக்கு அல்ல சில வருடம் முன்பு வெளியான படங்களுக்கு ! ஆடுகளம் படம் எடுத்த போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் வெற்றிமாறன். தெருவில் தனுஷும் தாப்சியும் பேசிக்கொண்டு நடக்கும் அந்த அழகான இரவுக் காட்சிக்கு தாப்சி பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டு நடக்க, டப்பிங்கில் தான் ஒழுங்கான வசனம் போட்டு நிரப்பிக் கொண்டோம் என்றார் இப்படி சினிமாவின் பின்னணியில் இருக்கும் பல கதைகள், ரீல் இவற்றை அறிய சுவாரஸ்யமாய் இருக்கிறது. நாமெல்லாம் சினிமா கிசு கிசுவை ரசிக்கிற ஆட்கள் தானே ! இணையத்திலாவது அந்துமணி துணுக்கு மூட்டை வாசித்துக் கொண்டு தானே இருக்கிறோம் !

    பிளாஷ்பேக் : இளமை -புதுமை

    சன் டிவியில் இந்த நிகழ்ச்சி வாராவாரம் வரும் நாளும், நேரமும் கூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு புதன் மாலை ஏழரைக்கு ஒளிபரப்பாகும். சொர்ணமால்யா தொகுப்பாளராக வந்த முதல் நிகழ்ச்சி. அப்போல்லாம் அவருக்கு என்னா fan following தெரியுமா !

    ஐந்தாறு இளைஞர்கள், இளைஞிகள் உடன் அமர்ந்து அவர்களை ஜோக் அடிக்க வைத்து, சொர்ணமால்யாவும் களாய்ப்பது தான் நிகழ்ச்சி. நடு நடுவே காமெடி சீன்களும் போடுவர்.

    தலைப்புக்கேற்றவாறு இளமையும், மகிழ்ச்சியும் ததும்பும் இந்நிகழ்ச்சி ஒரு காலத்தில் பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து பின் அர்ச்சனா தொகுப்பாளராக வந்து, சில வருடங்கள் கழித்து fade out ஆனது !

    கலைஞர் டிவி – குடும்ப திரைப்புதிர்

    குடும்ப திரைப்புதிர் என்கிற சினிமா குவிஸ் நிகழ்ச்சி (நமக்கெல்லாம் திரைப்புதிர் என்றால் தெரியாது. சினிமா குவிஸ் என்றால் தான் புரியும் 🙂

    ஒரு குடும்பத்திலிருந்து மூன்று பேர் வந்து பங்கேற்க ஏதாவது வீடியோ ஆடியோ கிளிப்பிங் காட்டி கேள்விகள் கேட்கிறார்கள். வருவோரில் வயதானோர் பலர் இருப்பதால் இவர்கள் கேட்கும் இக்கால கேள்விகளுக்கு சரியே பதில் சொல்வதில்லை

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? சொர்ணமால்யா ! இன்றைய சொர்ணமால்யாவை சின்னத் திரைக்குள் அடக்குவது சற்று சிரமம்தான் ! ரெண்டு வித குரலில் பேசி பயமுறுத்துகிறார்.

    நிகழ்ச்சி பார்க்கிறீர்களோ இல்லையோ, சினிமா என்பது பலருக்கும் பிடித்த ஒன்று தானே ! விருப்பமுள்ளோர் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் !

    செட் அப் பாக்ஸ் அப்டேட்

    அரசு டிவி கனக்ஷன் தருகிறோம்; செட் அப் பாக்ஸ் தேவையில்லை என லோக்கல் கேபிள் டிவி காரர்களே தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள். எங்களுக்கும் வழக்கமாய் காணும் பெரும்பாலான சானல்கள் வருவதால் அதில் தொடர்கிறோம். நிறைய புது தமிழ் சானல்கள் கூட வருது. இரண்டு முக்கிய ஸ்போர்ட்ஸ் சானல்களும் உண்டு ! செட் ஆஃப் பாக்ஸ் செலவு இப்போதைக்கு இல்லை. நூறு ரூபாயில் மாதம் டிவி பில் முடிஞ்சிடுது !

    ஆரோகணம் – லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி

    ஏனோ இவ்வார இறுதியில் பல சானல்களிலும் ஆரோகணம் பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி வந்து கொண்டிருந்தது. எனக்குக் கூட படத்துக்கு ஏதும் தேசிய விருது கிடைச்சிடுச்சோ என சந்தேகமே வந்திடுச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது. புத்தாண்டுக்கு பல சானல்களும் அவரிடம் பேட்டி எடுத்துட்டு அதை இன்று மறு ஒளிபரப்புகின்றன என்பது !

    ஆரோகணம் மலையாளம், தெலுகு, கன்னடா எல்லாவற்றிலும் ரீ மேக் ஆகுதாம். லட்சுமி ராமகிருஷ்ணா அவர்களின் பெண்ணுக்குத் திருமணம் ஆவதால் (என்னாதிது ! அவருக்கு கல்யாண வயசில் பெண்ணா !) தற்போது எந்த ப்ராஜக்ட்டும் எடுக்கவில்லை என்றார்.

    ஆரோகணம் படம் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கணும் !

    Share
  • ஆசான்

    பி .தமிழ்முகில் நீலமேகம்

    அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.

    நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.

    சற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு,       “மாணவிகளே ! உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.

    “என்ன ஆர்த்தி? ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

    “மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு  வருஷம்  வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

    பேப்பரை வாங்கிப் பார்த்தாள்  சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.

    “மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக்  குடுத்த போது,  ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.
    சசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.

    ஆத்திரம் மேலோங்க, “சிந்தியா !  உன்  பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.

    மாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம்   நிழலாடியது.

    “சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால்,  ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ! ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.

    “நாளை சிந்தியாவை,  அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப  தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும்  தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.

         ” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை !!! “
                           

    Share
  • இயற்கை

     

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    இறைவனின் திறமையில் உருவான

    கற்பனை  ஓவியம் …….. உலகம்….

    இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை

    தனது உலக ஓவியத்தில்

    தீட்டி வைத்துள்ளான்……….

    நீரோடையென……..கடலென ……

    மலையென…… நிலமென ……..

    நீரென…..காற்றென…..

    அந்த வண்ண ஓவியத்தில்

    நாமும் நடமாடும்

    கதாபாத்திரங்கள்……

    நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை

    பொக்கிஷமாய் காப்போம் அன்றோ???

    காத்திடுவோம் – இறைவன்

    நமக்களித்த இயற்கையை…….

    நம் பொக்கிஷமென……

    விட்டுச் செல்வோம் – நம்

    சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்……..

    படத்திற்கு நன்றி:

    http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

    Share
  • பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போரூர் கிளை சார்பாக ” தூய்மை நகரம்” என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

     

    • குடியிருப்பு பகுதிகளில் ‘தூய்மை குழுக்கள்’ உருவாக்கி செயல்பட வைப்பது.
    • பிளாஸ்டிக்கின் விளைவுகள் பற்றி வலுவான விழிப்புணர்ச்சியினை உருவாக்கி, அதன் பயன்பாட்டினை குறைக்க செய்வது மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்த செய்வது.
    • திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பிட மேலாண்மையில் கவனம் செலுத்துவது, குறுந்திட்டங்கள் உருவாக்கி, குடியிருப்பு பகுதி அளவில் செயல்படுத்துவது.
    • பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என பொது இடங்களில் தூய்மையினை படைப்பது.
    • இன்றைய நகர சூழல் உருவாக்கும் நோய்கள் / அபாயங்கள் பற்றி மக்களை உணர வைப்பது. அதை எதிர் கொள்ளவும், தடுப்பு முறைகளை உருவாக்கவும் மக்களை பங்கேற்க வைப்பது.
    • வீட்டுத் தோட்டம், நகரப் பூங்காக்கள், வீதியோர மரங்கள் – இவைகளில் மக்களின் கவனத்தினை ஈர்ப்பது போன்ற செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே தூய்மை நகரம் துவக்கப்பட்டுள்ளது.

    ” தூய்மை நகரம்” மக்களிடம் அறிமுகப்படுத்த “பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி ” 06/01/2013 அன்று நடைப்பெற்றது.

     

    இந்த பேரணியை சென்னை மாநகராட்சி 11வது மண்டல குழு தலைவர் திரு. K. சேகர் அவர்கள் மற்றும் 153வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி லதா குமார் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இணைத்தலைமை பொறியாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

    இந்த பேரணியில் போரூர் 153, 151 வட்டப் பகுதியில் உள்ள 23 குடியிருப்போர் நல சங்கங்களின்  பொறுப்பாளர்களும் பகுதி  வாழ் மக்களும் கலந்து கொண்டனர். அனைத்து வணிக சங்கங்கள்  தென் சென்னை சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் என பல தரப்பட்டனரும் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களும், காட்டராம்பாக்கம் ஊராட்சி  நடுநிலைப்பள்ளி துளிர் இல்லக் குழந்தைகளும் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி  அருகில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க அலுவலகத்தில் நிறைவுற்றது. மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் திரு K. பீமாராவ் அவர்கள்  பேரணியினை நிறைவு செய்து உரையாற்றினார்.

    சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியினை திரு. லட்சுமி நாராயணன் அவர்கள்  துவக்கி வைத்தார். திரு. A. ரவீந்திரன், திரு. சக்திவேல், திரு. ரவிக்குமார், திரு. கலைச்செல்வன் இக்கண்காட்சியினை உருவாக்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் (TNSF) சேர்ந்த 

    திரு. கு. செந்தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், TNSF,

    திரு. உதயன், மாவட்ட துணைத்தலைர் , TNSF,

    திரு ஜெகதீசன், மாவட்ட செயலாளர், தென் சென்னை , TNSF

    போரூர் கிளைத் தலைவர் திரு. ரகுநாதன், , TNSF

    போரூர் கிளை செயலாளர் திரு மாசிலாமணி, , TNSF

    போரூர் கிளை பொருளாளர்  திரு. செங்கன் , TNSF மற்றும்

    நகரின் முக்கிய நபர்கள்  பலரும் கலந்து செயல்பட்டனர்.

    நன்றி,
    கு.செந்தமிழ் செல்வன்
    மாநில துணைத் தலைவர்.
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
    9443032436

    Share
  • சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

                                                                                                             வைகைச் செல்வி

                                                                                         வனம்பாடி, வானம்பாடி, வனராணி
         
         
                                                                                                      சி. ஜெயபாரதன், கனடா

    இந்த பூமி நமது
    இந்த வானம் நமது
    இந்த நீர்வளம் நமது
    முப்பெரும் சூழ்வளத்தை
    துப்புரவாய் வைக்கும்,
    ஒப்புரவு நமது பொறுப்பு.

    இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல் களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங்களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச் சீர்கேடுகளை உலகப் பேரவைகளில் உரை யாற்றிக் காட்டி வருபவர், வைகைச் செல்வி. ‘கூடுவிட்டுக் கூடு பாயத் தனிப் பறவைக்குக் காலெதற்கு ? சிறகெதற்கு ? ‘ என்று கேட்கும் வானம்பாடி வைகைச் செல்வி, தமிழகத்தில் திருச்சி, நெய்வேலி, மதுரை, சிவகாசி, சென்னை, கரூர், கோவை, திருப்பூர், நாகை போன்ற தளங்களுக்கு அடிக்கடிச் சென்று சூழ்வெளி மாசுப் பிரச்சனைத் தீர்வுகளில் பங்கெடுத்தும், பெண்டிர் உரிமை பற்றிக் கருத்தரங்குகளில் உரையாற்றியும் வருகிறார். தனிப் பறவையாகக் காலில் சக்கரங்கள் பூட்டிக், கைகளில் இறக்கைகளைக் கோர்த்து, இப்பணிகளைக் கனிவோடும், பூரிப்போடும், அயராது, அலுக்காது செய்து வரும் வைகைச் செல்விக்கு இணை எவருமில்லை. ‘செவிக் குணவில்லாத போது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘ என்ற வள்ளுவர் வாக்குப்படி வைகைச் செல்வி, ஊழியப் பணிபுரிந்து ஓய்வான வேளைகளில், எழுத்துப் படைப்புகளில் ஈடுபட்டுக் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வருகிறார். பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்று, வைகைச் செல்வியின், ‘அம்மி ‘ என்னும் ‘கவிதைகள் நாற்பது ‘ புதுயுகத் தமிழ்க் காவியப் பூங்காவில் பூத்த வாடா மலர்கள்!

    வைகைச் செல்வியின் சாதனைகள்

    வைகைச் செல்வி என்னும் புனைப்பெயர் போர்த்திய ஆனி ஜோஸ்ஃபின் மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரையில் மேற் படிப்பை முடித்து மூன்று கல்லூரிப் பட்டங்கள் [M.A.(Eng.Literature), M.Com., M.B.A.] பெற்றவர். அவற்றிலும் திருப்தி அடையாமல் மேலும் சிறப்பு நுட்பங்களைப் பயின்று வேறு சில மேல்நிலை டிப்ளோமாக்களையும் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) வாங்கியவர். ‘கற்றது கடுகளவு! கல்லாதது கால் பந்து அளவு ‘, என்னும் கல்வி நெறியை மேற்கொண்டு, முனைவர் பட்டப் படிப்புக்குத் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] தன்னைப் பதிவு செய்திருக்கிறார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வந்தவர்.

    பள்ளிப் பருவம் முதலே கவிதைகள் எழுதத் துவங்கி கடந்த 20 வருடங்களாகக் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள் சிலவற்றிலும், உலக சூழ்மண்டலப் பேரவைகள் சிலவற்றிலும், தமிழ்நூல்கள் வெளியீடுக் கூட்டங்களிலும் பெண்டிர் நிலை மேம்பாடு பற்றிப் பலமுறை உரையாற்றி யிருக்கிறார். 2005 ஜூன் முதல் உதயமாகி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும், ‘வானகமே, வையகமே ‘, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் ‘இது நம்ம பூமி ‘ என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கெளரவ ஆசிரியராகப் பணிபுரிந்து அதற்கு மெருகேற்றி, ஒளியேற்றி வருகிறார்.

    2002 டிசம்பரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இவரது முதற் காவியம், ‘அம்மி ‘ என்னும் கவிதைத் தொகுப்பு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக மதிப்புப் பெற்றுள்ளது! பணிபுரியும் பெண்டிர் பாலியல் சீண்டல் இன்னல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி வைகைச் செல்வி ‘பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு ‘ என்னும் ஒரு நூலில் எழுதியுள்ளார். தமிழகத்தின் சில கவிஞர்களைச் சூழ்வெளியைப் பற்றி எழுத வைத்து ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2003 இல் அந்நூல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொண்டுள்ளது. அவரது கதைகளை எல்லாம் ஒன்று திரட்டிக் ‘கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும் ‘ என்னும் தலைப்பு நூலைக் காவ்யா பதிப்பகம் 2004 டிசம்பரில் வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டில் ‘ஊழியப் பணிபுரியும் பெண்டிர் படும் பாலியல் சீண்டல்கள் ‘ பற்றி அவரது கைநூல் ஒன்றும் வெளியானது.

    நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2002 ஆண்டில் வைகைச் செல்வியைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பரிசும் அளித்தது. சிறந்த பெண் எழுத்தாளியாகச் சக்தியின் 2003 ஆண்டுப் பரிசும் அவருக்குக் கிடைத்தது. திருப்பூர் லயன்ஸ் கிளப் 2003 இல் அவரைப் பாராட்டிச் சிறந்த பெண் கவிஞர்ப் பரிசைக் கொடுத்தது. 2006 பிப்ரவரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய, ‘சூழ்வெளியும், சுத்தமய நிலைப்பாடும் ‘ [Environment & Sustainability] எனப்படும் உரை அரங்கில் அவர் வாசித்த, ‘பாரதத்தில் சூழ்வெளிப் பாதுகாப்பு நிலைப்பாடு ‘ என்னும் கருத்துரைப் பத்துச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திருச்சி ஸெயின்ட் ஜோஸஃப் கல்லூரி ஏற்படுத்திய, ‘விஞ்ஞானத் தமிழ் தேசீயச் சொற்பொழிவு விழாவில் ‘ [National Seminar on Scientific Tamil] வைகைச் செல்விக்குச் ‘சூழ்வெளிக் கவிஞர் ‘ [Environmental Poet] என்னும் சிறப்பு விருதை அளித்துள்ளது. திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் அவரை வெற்றிப் பெண்மணி என்று பாராட்டிக் கெளரவித்துள்ளனர். 2006 மார்ச் 8 ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள ‘மாதர் பொதுத்துறைப் பணியகம் ‘ வைகைச் செல்விக்குப் ‘பெண் சாதிப்பாளி ‘ என்னும் விருதைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறது.

    அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர், ‘வைகைச் செல்வியின் கவிதைகளில் பெண்ணியம் ‘ பற்றிய ஒரு தெளிவுரையைத் [Thesis] தயாரித்துள்ளார். 2004 டிசம்பரில் நேர்ந்த தெற்காசிய சுனாமிப் பாதிப்பு பற்றிய ஓர் ஆய்வுரையை, 2005 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி முதலாண்டு நினைவுப் பூர்த்தி விழாவில் வைகைச் செல்வி உரையாற்றி வெளியிட்டார். மாதம் ஒருமுறை அண்ணா பல்கலைக் கழக வானொலி நிலைய ஒலிபரப்பில், ‘சக்தி அறிவாயடி ‘ என்னும் வழக்கமான வாயுரையில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சூழ்வெளி மாசுகள் சம்பந்தமாகக் குட்டித் திரைப்பட வெளியீடுகள் சிலவற்றைத் தயாரித்துள்ளார். அவரது கவிதைகளைச் சென்னைப் பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளன. பாமரக் கலைக்கூத்து மூலம் [Folk Arts] தமிழகம் எங்கும் பரப்பும் பயிரின, உயிரினச் சூழ்வெளிக் கலாச்சாரக் குழுப் [Eco Cultural Awareness Team] படைப்புநரும் அவரே.

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வைகைச் செல்வியின் சிறப்புப் பணியை மெச்சி அவரை மூன்று மாத மேற்பயிற்சி பெற டென்மார்க் தேசத்திற்கு 2001 ஆண்டு அனுப்பியது. அந்த மகிழ்ச்சியான பயிற்சி சமயத்தில் நோய்வாய்ப்பட்ட அவரது அருமைத் தந்தையார் சென்னையில் எதிர்பாராது காலமாகி, வைகைச் செல்விக்கு அதிர்ச்சி அளித்து ஆறாத துயரை, நெஞ்சில் அழியாதவாறு பதித்து விட்டது!

    வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

    மதுரை வைகை ஆற்றங்கரையில் துவங்கி, சென்னைக் கடற்கரை வரையில் என் கவிதைகள் பயணம் செய்கின்றன என்று வைகைச் செல்வி தனது ‘அம்மி ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முச்சங்கம் வைத்து, முத்தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்களின் பாதம் பட்ட மதுரை மாநகரில் பிறந்து, வளர்ந்து, கன்னித்தமிழில் புலமை பெற்று, ஒளவையார், ஆண்டாள் வழித்தோன்றலாய் அரியதோர் காவியம் படைத்ததில் பெருமிதம் கொள்கிறார். வெள்ளமோ அல்லது வெற்று மணலோ எது காணப்பட்டாலும், தன் கற்பனைக்கு ஊற்றாய் இருந்ததோடு பெரும்பாலான துயரங்களையும், ஏமாற்றங்களையும் கவிதைகளாக மாற்றயதே அந்த வைகை ஆறுதான் என்று மனதின் உள்ளோட்டத்தைக் காட்டிக் கொள்கிறார்.

    பல்வேறு வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், போர்க்கள அவசரத்தில் ஏற்படும் வேதனைக்கு நடுவில் எவ்வித முயற்சியும் செய்யாமலே பல சமயங்களில் தானாக முகையவிழ்ந்த வரிகளே கவிதைகளாகப் பரிணமிதுள்ளன என்று சொல்கிறார். பூவைத் தொடுவது போல், பூவாசத்தை எப்படி ஈர்ப்பது ? கவிதை வரிகளுக்குள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒருமணம் இழையோட வேண்டும் என்று கூறுகிறார் வைகைச் செல்வி. சொல்ல நினைப்பதைச் சொல்ல இயலாமல் ஏற்படும் நெஞ்சுத் துடிப்பைப் போல், கவிதையின் தாக்க மிருக்க வேண்டும். நிரம்ப மெய்ப்பாடும், சிறிது கற்பனையும் கலந்தவை அவரது கவிதைகள். வைகைச் செல்வியின் படைப்புக்கு வித்திட்டவை வானவில், மழை, இலைகள், மரங்கள், மலர்கள், காதல், கனவு, காட்டு வெளி, காலம், நட்பு, சினம், மோதல், அநீதி, சுயநலம், அடிமைத்தனம், பதவி உயர்வு, பொய்வாசம் போன்றவை. அம்மி கூடத்தான் அவரது கவிதைப் பூக்களில் ஒன்றாக மலர்கிறது. படைப்புகள் உள்பட தனது எல்லா முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் சேர்ந்து உழைத்து, காயம் பட்டபோது மனதைத் தேற்றி, போராட்டங்களில் தனக்கு உதவியாகத் தோள் கொடுத்து, மேம்பட்ட கல்வியையும், இறைப்பற்றையும் ஊட்டி, உன்னத நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்தவர், அருமைத் தந்தை திரு. ஆபிரகாம் ஞானமுத்து இஸ்ரேல் என்று தனது முன்னுரையில் போற்றுகிறார், வைகைச் செல்வி.

    எது கவிதை ? என்ன செய்யும் கவிதை ?

    கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு கவிதையும்… பல கவிதைகளும் ‘ என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல், வரிகள் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிக் கொண்டு உட்கருத்து விளங்காமல் சிக்கலானவை; படிப்போருக்குப் பொருள் மயக்கம் அளிப்பவை; வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார் வைகைச் செல்வி. கவிதைகளின் வரிச் சொற்கள் செங்கல் சுவர்போல் அணிவகுத்துக் கட்டப் படாமல், தெளிந்த சிற்றோடை போல் சிரித்தோடிக் கலைத்துவ மணம் பரப்ப வேண்டும். வரிகளின் மொழிகள் நளினமாகத் தாளமுடன் நடனமாடி நாதசுரக் கீதம் போலும், வீணையின் நாதம் போலும் ஒலித்து நெஞ்சில் அரங்கேற வேண்டும். வெறும் சொற்களை மட்டும் சுடவிட்டுப் பட்டாசு போல் வெடிக்க விட்டால் பார்க்க விந்தையாகவும், வேடிக்கையாகவும் மனதைத் துள்ள வைக்கும்! ஆனால் அவை எல்லாம் ஒளியற்று விண்ணில் புகையாக மறைந்து, மண்ணில் குப்பையாக நிறைந்து மாசுகளாக மண்டிக் கிடப்பவை!

    மரபில் விளையாடி
    புதுமைப் பூச்சூடி,
    நடந்த இளங் கவிதை
    நவீனப் புயலில் சிக்கி விட்டது!….

    நவீனத்தில், மேலும்
    இடியாப்பச் சிக்கல்கள்!
    மடக்கிய வரிகளுக்குள்
    அடங்குமோ ஓர் கவிதை ?

    என்று சுட்டிக் கேட்டபின் வைகைச் செல்வி தொடர்கிறார்,

    பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துருக்கி,
    வார்த்தை விதை ஒன்று,
    மூளைக்குள் தெறிக்க,
    முளை விட்டு உணர்வுக்குள்
    கணுக் கணுவாய்ப் பயிர் வளர,

    செங்குருதிப் புனல் பாய,
    மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
    மனசெல்லாம் சர்க்கரையாய்,
    நெஞ்சுக் குழிக்குள்ளே,
    இறங்கி வழிந்தோடி
    உறங்கும் உயிர்ப் பந்தை,
    (உசிப்பிப்)
    புரட்டுவது கவிதை

    என்று ஓர் அரிய விளக்கம் தருகிறார்.

    எது கவிதை என்னும் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலிதுதான்: கவிதை என்பது,

    உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
    உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
    வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
    வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

    பொய்யுலகைக் கண்முன்னே காட்டுவது!
    பூரணத்துவம் நோக்கிக்கை நீட்டுவது!
    மெய்யுலகைத் தூண்டிலிட்டு மீட்டுவது!
    மேம்பாட்டை மின்னல்போல் ஊட்டுவது!

    கவிஞர் திலகம் புகாரியின் ‘அன்புடன் ‘ வலையிதழில் எழுந்த ‘எது கவிதை ‘ என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலுடன் பின்னாங்கு வரிகளைச் சேர்த்துள்ளேன்.

    கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல். காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு. பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்! தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அவற்றின் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது! நேரமின்றி நோக்கும் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது!

    மூச்சை எடுத்துக் கொண்டு கடைசியாக ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்துபோய்த் தொடர்ச்சி அறுபடுகிறது! முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது! அவ்விதச் சிரம மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக் கடலில் மூழ்கி எடுத்தெழுதிய சின்னஞ்சிறு முத்துக்கள்! உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்! உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்! பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!

    சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை ? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை ? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் ஆட்டம் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லிக் கதை புனையும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி [Theme], சொல்லாட்சி [Word Power], நடையாட்சி [Style], அணியாட்சி [Simile, Metaphor, Allegory, Alliteration, Antithesis, Irony, Personification (Figure of Speech)] மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது! அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் காவியக் கவிதைகள்! அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் வெறும் குட்டிக்கரணம் போடவில்லை! சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை! வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!

    வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை. வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன! கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன! கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு சொல்கின்றன! புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை! காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகப் பதுங்கிக் கொண்டிருப்பதால்தான்! தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை; ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம். படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது கவிதைக் காவியம் படைக்கபட வில்லை!

    வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை. கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன. கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன. வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் பிறருக்கு உபதேசிக்க வில்லை! ஒரு கவிதை சங்கை வாயில் வைத்துக் கொண்டு சிங்கம் போல் உறுமிக் கர்ஜிக்கும் போது அதன் சப்தம் செவிப்பறையில் விழுவதற்குப் பதிலாக அதைக் கிழித்துப் போட்டு மூளையில் பதியாமல் நழுவுகிறது. சொல்லாமல் சொல்லும் நெறியும், செய்யாமல் செய்த உதவியும் என்னாளும் மறக்கப் படுவ தில்லை. வைகைச் செல்வியின் வரிகள் வாழ்க்கை நெறியைச் சொல்லாமல் சொல்கின்றன. ஒவ்வொரு கவிதையும் அவரது மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. ‘அம்மி ‘ என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் மின்னல்போல் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது! ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது! சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது!

    வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன! மெய்த்துவ வாழ்க்கை முறைகளை மெல்லிய நடையில் சொல்லுகின்றன. சில கவிதைகளில் முடிவில் வரும் ஓரிரு வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது! சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

    பெண்மையும், விடுதலையும்

    கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் வைகைச் செல்வி, ‘உள்ளே ஒரு வானவில் ‘ என்னும் கவிதையில்:

    தாழ் திறக்கும் என்றால்தான்
    காத்திருத்தல் சுகம்,
    இல்லையெனில்
    மரண வேதனை!
    தாழ் திறக்கா விட்டாலும்
    மரண வேதனை!

    அந்திப் பொழுதின் வானவில்!

    பரிதி மறையும் போது செவ்வானின் சிவப்பொளி பட்டால், அந்திப் பொழுதின் வானவில் எந்த நிறத்தில் ஒளிக்கும்! நிச்சயம் ஏழு நிறங்களைக் காண முடியாது! வெண்ணிற ஒளி ஒன்றுதான் மழைத்துளிகளின் ஊடே நுழையும் போது பன்னிற வானவில் தோன்றும். செந்நிற ஒளியில் வானவில்லின் கண்சிவந்து போகும், கதவு திறக்கும் என்று காத்திருக்கும் மங்கையின் விழிகளைப் போல்!

    பகலென்று தெரிந்தால்,
    சிறகுகளை விரிக்கலாம்!
    இரவென்று தெரிந்தால்
    கூட்டுக்குள் ஒடுங்கலாம்!

    அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
    சில்லென்ற குளிர்காற்றும்,
    சிங்காரப் பூமணமும்,
    உன் முத்தம் தந்திடுமோ ?

    கால மயக்கத்தில்
    கண் விழித்துப் பார்க்கையில்
    பகலா, இரவா ஏதும் புரியவில்லை!
    அந்திப் பொழுதின் வானவில் ….

    செந்நிறத்தில் மங்கிக் கலங்கிப் போயிருக்கும் மங்கையின் மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.

    பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

    பாரதத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்! காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன! ஆனால் இந்திய சமூதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்க வில்லை! உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே! அதுவும் யாருக்குக் கிடைத்தது ? பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே! மீதித் தொகையானப் பெண்டிருக்கு ? விடுதலைப் பதில் ஆடவரின் தடுதலை பெண்ணுக்குக் கிடைத்தது! பெண்களின் விடுதலை களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்துடன் ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகள் ஆக்கப் பட்டார்! அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவருக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இவ்வுலகம் ஆடவரின் உலகம்! ஆடவர்களால் உண்டாக்கப் பட்ட உலகம்! ஆடவருக்காக உண்டாக்கப் பட்ட உலகம்! பாரத தேச வீடுகளின் கூரையைப் பிரித்துப் பார்த்தால் இப்போதும் பெரும்பான்மையான வீடுகளில், பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். பிறருக்குத் தெரியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் பல்லாயிரக் கணக்கான பாரதப் பெண்டிர், ஆடவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு அடிமைகளாய், சேடிகளாய்ப் பணிசெய்து மெளனக் கண்ணீர் விட்டு ஊமைகளாய் நெஞ்சுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள்!

    அன்று

    அடிமைச் சிறையில் இருந்தோம்.
    காந்தியும், நேருவும், பட்டேலும், ….
    பாரதியாரும்,
    வீர சுதந்திரம் வேண்டிப்
    (போராட)
    (சிறைக்) கதவுகள் திறந்தன!
    தலைமறைகள் கடந்தோட
    (பெண்களாகிய) நாங்கள்,
    இன்றும் சிறையில்தான்!
    ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
    சாவி
    எங்களிடமே உள்ளது!

    பாரத தேசத்தில் பூரண சுதந்திரம் அடைந்தவர் மெய்யாக ஆடவர் மட்டுமே! தேவையான மானிட உரிமைகளுக்குப் போராடி ஏமாற்றம் அடையும் பெண்டிருக்கு எப்படிக் கிடைக்கும் விடுதலை ? எப்போது கிடைக்கும் உரிமைகள் ? அடிமைப் பட்ட பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை படாரென்று உடைக்கவோ அல்லது பூட்டைக் கிளிக்கென்று திறக்கவோ அவரிடமே உறுதியும், சாவியும் உள்ளது என்று சுட்டிக் காட்டுவது அவரது புரட்சி மனதை வெளிப்படுத்துகிறது. ஆனால் வல்லமை பெற்ற ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடி, நெஞ்சுறுதியை நசுக்கி வருகிறது என்பது கட்டுரையாளர் கருத்து!

    ‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ? ‘ என்னும் கவிதையில் வாழ்வின் இன்ப துன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் கூறுகிறார். தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு, வெகு அழகாகக் கூறுகிறார்! வாழ்க்கையில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் அன்னிய ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது, உலவி வருவது முற்றிலும் தவறு; அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது! ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதோடும் தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனிதப் பண்பு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் [ ‘தாயின் மடியில் ‘] கனிவாக வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

    ‘சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
    கற்றுக்கொள்!
    பிறகு கற்றுக்கொடு!
    இல்லாவிடில்,
    நம் கல்லறைகளை
    நாமே கட்ட ஆரம்பிபோம்! ‘

    ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! ‘
    ‘செந்தீ யணைக்க நீருண்டு!
    சினத்தீ யணைக்க யாருண்டு ?

    ‘மங்கையராகப் பிறப்பதற்குப் பெரும்
    மாதவம் செய்திட வேண்டு மம்மா! ‘

    என்று கவிமணி பாடினார்.

    ஆனால் வைகைச் செல்வி பெற்ற தாயைப் பார்த்துப் பெண்ணைப் பெறுவதற்கு நீ மாதவம் செய்யத் தேவையில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்! பெண்ணென்று உளவிப் பெண்கருவை நீக்கும் கண்ணிய மனிதர் வாழும் இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பதே பாபமாகக் கருதப்பட்டுப் பெண்டிர் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

    என் தாயே! ..
    என்னைப் பெற நீ
    மாதவம் செய்திருக்கத்
    தேவை யில்லை!
    அந்தக் கூட்டத்தில்
    எந்தன் பிரிய நண்பன் இருக்கிறான்.
    பகற் பொழுதினிலேயே
    அவனுடன் நானமர இயல வில்லையே!
    (ஆனால்) இவ்விரவில்… ?
    அவன் ஓர் ஆணாம்!
    நானோர் பெண்ணாம்!
    என் மனத்தின் ஆண்மை
    யாருக்குப் புரியும் ?
    ஆதாமுக்குப் பிறகு ஆடவனு மில்லை!
    ஏவாளுக்குப் பிறகு பெண்டிரு மில்லை!
    இது இங்கே யாருக்குப் புரியும் ?

    நட்பு, சுமை, சுயநலம், மெளனம்!

    ‘நட்பு ஓர் அழகிய கண்ணாடிக் கிண்ணம்! அது ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்! ஆனால் எளிதில் உடைந்து ஒட்டாமல் போகும் கண்ணாடிக் கிண்ணம் ‘ என்று ஓர் இனிய சிறு கதையைத் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார் நமக்கு.

    ஒரு முரட்டுக் குதிரை முட்செடி ஒன்றை மிதித்த பின் கூறுகிறதாம்: ‘தளிர்ச் செடியே! உனது முள் என் காலை யிடறிக் காயப் படுத்தியது; எனக்கு வலித்தது உண்மைதான்! ஆனால் அந்த முள்ளில்லா விட்டால், நான் உன்னைக் கடந்தல்லவா போயிருப்பேன், ‘ என்று தணிவாய்ச் சொன்னது.

    குதிரைக் கால் நசுக்கிய முட்செடி கால்பட்டுக் கசங்கினாலும், கசிந்த இலைகள் ஒளியுடன் பலபலக்க, ‘குதிரையே! உன்னைத் தெரியாமல் குத்தி விட்டேன் நான். மன்னித்துவிடு என்னை ‘ என்று கனிவாய் சொல்லியது.

    குதிரை வெட்கத்துடன் தலைகவிழ்ந்து, ‘தளிர்ச் செடியே! நானும் உன்னைத் தெரியாமல் மிதித்து விட்டேன், என்னை நீ மன்னித்து விடு ‘ என்று பணிவாய்ச் சொன்னதாம்.

    இதுதான் நட்பு என்று தன் குட்டிக் கதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. ‘நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் அதைத் தவறப் பார்க்கின்றன! அவனும் நானும் ஆணும் பெண்ணுமாக அல்லாமல், என்றென்றும் தோழர்களாய், அருகருகே நிற்கிறோம்! ஆயினும் எங்களுக்குள் ஓர் சிறு இடைவெளி, முகக்கண்களின் இடைத்தூரம், எமக்கு நடுவில்! அச்சிறு அகலத்திலே காலநதி கரை புரண்டோடுகிறது, ‘ என்று ஆண்-பெண் இடையே நேரும் புனித நட்பைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்! கணவனின் பிணைப்பிலோ, நண்பனின் உறவிலோ அல்லது ஆண்-பெண் நட்பிலோ பழக்க, வழக்க முறைகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது வெகு வெகு அபூர்வம்! பிரச்சனைகள் தீவிரமாய்ப் பற்றி எரியாமல் இருப்பதற்கு யாராவது ஒருவர் ஊமையாகவோ, செவிடாகவோ அல்லது குருடாகவோ இருக்க வேண்டும்! குதிரையும், முட்செடியும் எதிர் எதிரே நின்று தானிழைத்த தவறை உணர்ந்து வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்வது, ஒரு மகத்தான சமூகக் காட்சி! மெய்யான தம்பதிகளோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ யாரும் அவ்வித அமைதி வழியில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அபூர்வம்!

    வாழத் தெரியாத தோழன் ஒருவனுக்கு, ‘மெளனம் ‘ என்னும் கவிதையில் பெண்ணொருத்தி ஓர் ஊசி போடுகிறாள். அவனுக்கு கடிதத்தில் என்ன எழுதுவது ? புறக்கணிக்கும் தன் மனதை எழுத்தில் தோழனுக்கு எப்படிக் காட்டுவது ? கண்ணெதிரே காணும் போது, உறவை முறிக்கப் போகும் பெண்ணொருத்தி எப்படி அதைத் தெரிவிப்பாள் ?

    நானுனக்கு
    என்ன எழுத வேண்டுமென்று
    தெரியவில்லை!
    ஆனால் (உனக்கு)
    என்ன எழுதக் கூடாதெனத்
    தெரிகிறது!

    உன்னிடம் நான்
    என்ன பேச வேண்டும் என்று
    இதுவரையில் தெரிய வில்லை!
    ஆனால் (உன்னிடம்)
    என்ன பேசக் கூடாதெனத்
    தெரிகிறது!

    அதனால்தான் நீ
    நேரில் இருக்கையில் பேசாமலும்,
    தூரப் போய்விட்ட பிறகு
    எழுதாமலும் இருக்கிறேன்!

    இவ்விதம் வாழத் தெரியாத தோழன் மீது வாளெடுத்து வீசாமல், எளிய வாதத்தின் மூலமாக மெளன ஊசி போட்டு வெளியே தள்ளும் பெண்ணை எவராவது பார்த்ததுண்டா ? தோழனைக் காயப் படுத்தாமல், ‘போயொழி, திரும்பி வராதே ‘ என்று புறக்கணிப்பதை இத்தனை மென்மையாக, மெழுகு மொழியில் எந்தப் பெண்கவி சொல்லி யிருக்கிறார் ?

    ‘உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும், ‘ என்று கவிஞர் கண்ணதாசன் வெள்ளித் திரைப் படமொன்றில் பாடல் புனைந்தார். பிரியப் போகும் நண்பன் ஒருவன் தனது தோழி மீது பூவை வீசி விட்டாலும், பூவிலுள்ள முள் அவளது கண்ணைக் குத்தி விடுகிறது! அவன் அவளிடம் சொல்லாமல் போகிறான். பிரிவுத் துயரைச் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் மிருகத்தைப் போல் நீங்குகிறான். அதைக் கண்டு மனம் வருந்துகிறாள் ஒரு மாது! படிப்போர் நெஞ்சைத் தொடுகிறது, அவரது பாடலின் பரிவு வரிகளும், ஊசிமொழி நடையும்!

    நண்பனே!

    எந்நேரத்திலும், எதற்காகவும் நீ
    என்னைப் பிரிந்து போகலாம்! அது
    உன்னுடைய சுதந்திரம்!
    பிறரைப் போல நீயும்,
    என் மீது
    கல்லெறியலாம்! ….

    என்னைக்
    காயப் படுத்தலாம்!
    கூழாங் கற்கள் முதல்
    பாறாங் கற்கள் வரை, எனக்குப்
    பரிச்சயமே!
    அன்பின் மிகுதியால்
    பளிங்குக் கற்களை வீசியவரும் உண்டு!
    ஆனால்
    உனக்கு உரிமை அதிகம்..!

    நண்பனே! நீதான்
    கதவைத் திறந்து
    (என்னை) எட்டிப் பார்த்தாய்!
    ஆச்சரிப் பட்டாய்!
    அன்பு காட்டினாய்!
    முகம் தெரியாத போதும்,
    பெயர் சொல்லி அழைத்தாய்!
    பிறகென்ன ?
    எல்லா வற்றையும், நீயே மூடலாம்!
    ஆயினும்
    நீ திறந்தது சாளரக் கதவுதான்!

    யாரென்று அறிவதற்குள்
    பிரிந்திட்டாய்!
    கற்களை வீசியவர்
    மத்தியில்
    நீயோ பூவை வீசினாய்!
    முள்ளொன்று
    கண்ணில் தங்கி விட்டாலும்,
    என்னில்
    ஒருகணம் மென்மை (உணர்ச்சி)!
    கண்ணிமைக்க மறந்தது
    என் குற்றம்தான்!

    என்னைப் போல் நிறமுடைய
    அத்தூதனைத் தவிர
    வேறெவனும்
    எனக்குச் சொந்த மில்லை!
    சொல்லாமல் பிரிந்திட்டாய்!
    தண்ணிலவும், செங்கதிரும்
    யார் அழைத்து வந்தன ?
    யார் சொல்லிப் போயின ?
    நீயும் பிரிந்து செல்லலாம்,
    அது உன் சுதந்திரம்!

    என்று கசப்பு மொழிகளை உதிர்த்து, நண்பனுக்கு நிரந்தர ஓய்வை அளிக்கிறார், வைகைச் செல்வி!

    சினமென்னும் கொல்லியைப் பற்றிக் கூறும் போது, ஒளவை மூதாட்டி போல் முதுமொழியில் கூறுகிறார்:

    செந்தீ யணைக்க நீருண்டு!
    சினத்தீ யணைக்க யாருண்டு ?

    என்று தீப்பறக்கச் சொல்லும் சொற்கள் மனப்பாறையில் அழுத்தமாகப் பொறிக்கப் படுகின்றன!

    எரிமலை வெடிக்க
    அக்கினிப் பொறிகள்
    சரமாய்ச் சொரியும்! …
    மல்லிகை பந்தலில்
    அனற் கங்குகள்! …
    வெள்ளை உள்ளம்,
    மெல்லிய தளிர்க்கொடி எல்லாம்…
    கோபத் தீயில் ..
    உருகி யோடும்! …
    அறிவு மயங்கி, ஆன்மா மறைய
    உணர்ச்சிக் கொதிப்பில்… ஆட்டம் போடுது
    மனித மிருகம்!

    வேரை அழிக்கும் செந்தீக்கு
    உன்னில் அசையும்,
    உயிர்ப்பூத் தென்றலைச்
    சுவைத் தறிய வழியேது ?

    தொழிற் துறைகளில் பெண்டிர் பணியாற்றும் போது, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் என்பது பாலைவனக் கனவுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதையில் வருந்துகிறார். ஆடவருக்கு ஊழியப் பயிற்சி அளித்த மூத்த அனுபவப் பெண்ணுக்கு முன்பாக, அதே வாலிபர் பதவி உயர்வு பெற்று அதே பெண்ணுக்கு அதிபதியாக ஆவது, ஆடவர் உத்தியோக உலகில் வழக்கமாக நேரும் அதிர்ச்சி நிகழ்ச்சிகள்.

    ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
    இறுதியில்
    (பதவி உயர்வென்னும்)
    அந்த ஏணியை அடைந்தேன்!
    கூரிய கற்களும்… கொடிய முட்களும்
    குத்திக் கிழித்தும்
    (உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
    ஓடிய கால்கள் ….!
    ஏணியின் உயரம்
    அயர்ச்சியை அளிக்க ….
    புத்துயிர் பெற்றுக்
    கண்களைத் திறந்தேன்!

    காலை எடுத்து
    முதற்படி வைப்பதற்குள் ….
    என்னைத் தாண்டிச்
    (சென்றன) சில காகங்கள் ….
    கழுத்தில் சலங்கையுடன்,
    காலில் எலியுடன்,
    ஏணியைத் தள்ளி
    (என்னையும் மிதித்துக் கொண்டு)
    இடத்தை நிரப்பின!

    என்று மனவேதனைப் படுகிறார்!

    ‘பலி ‘ என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றி வர்ணிக்கிறார். பெண்ணின் உடல் உழைப்பும், வேலை ஊதியமும் பிறருக்கு அனுதினமும் பயன்பட்டாலும், புகழ் கிடைப்பதற்குப் பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வருவது யாருக்கு ? அதே அந்தப் பெண்களுக்குத்தான்!

    ‘நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம் தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார், ‘ என்று குற்றங்கள் சாட்டி அவரது அம்மிக் கவிதை தொகுப்பின் மீது ஆய்வுக் கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகில் ஓங்கி இப்படி அடிக்காமல் விட்டிருக்கலாம்!

    என் வீட்டு ரோஜாப்பூ
    யாருடைய வீட்டு மேஜையிலோ ?
    நான் கோர்த்த மணிமாலை
    எந்தப் பொம்மை கழுத்திலோ ?
    என் தோட்ட மருதாணி
    யாருடைய விரல்களிலோ ?
    என் வீட்டுத் தென்னங் கீற்று
    யார் வாசல் தோரணமோ ?

    ஆனால்
    யார் யாருக்கோ வரவேண்டிய
    வலியும், துக்கமும்
    ஒட்டுமொத்தமாய்
    (வருவது)
    எனக்கு மட்டும்தான்!

    பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத, இன, மாநில வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு நிலைகள் மக்களிடையே உண்டாக்கிப் பேரளவில் பிளவு படுத்திக், குழுவினங்கள் ஒன்றுக் கொன்று போரிட்டும், தீயிட்டும், கொன்றழித்தும் பழிவாங்கும் படலங்களைப் பல கவிதைகளில் காட்டுகிறார், வைகைச் செல்வி.

    காஷ்மீர் முதல் கன்னியா குமரி முனைவரை இந்திய மக்களுக்கு இராமன் மீதுள்ள பற்றுபோல, பாரத நாட்டின் மீது பற்றுமில்லை, பாசமுமில்லை, பரிவுமில்லை. சுமார் 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமை பூமியாக மிதித்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 50 கோடி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி செய்தோம், போராடினோம், முடிவில் வெற்றி பெற்றோம். விடுதலை பெற்றோம். ஆனால் இப்போது அனைவரும் மீண்டும் பிளவுபட்டு சுயநலக் குழுக்களாய் பிரிந்து கொண்டு யார் பலசாலி என்று நிரூபிக்க ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

    ‘நமக்குள் ஓர் வல்லரசு ‘ என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், கோயில்களை இடித்தும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான கோரக் கொடுஞ் செயல்களே!

    என்னைப் பார்த்து
    ஊர் கூடிச் சொல்கிறது:
    ‘நான் பள்ளத்தில் இருக்கேனாம் ‘
    அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
    என் தட்டு மட்டும்
    தாழ்ந்தி ருக்கிறது!
    நான் மறைந்து விட்டேனாம்!

    கட்டைகள் மிதக்கையில்,
    கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!….
    மலைதான் என்னை இடறிற்று,
    கூழாங்கற்கள் அல்ல! ….

    ஏறிக் கொண்டிருக்கையில்
    ஏணியை எடுத்திருந்தால்
    ஏற்றுக் கொண்டிருப்பேன்!

    மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! ‘கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு ‘ என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளைக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி.

    ஆணவத் தேரேறி

    (என்னை)
    ஒடுக்கப் பார்த்தாலும்,
    கண்ணாடிக் குப்பிக்குள்
    (வெடித்து விடும் பெண்மை எனும்)
    புயல்காற்று ஒடுங்குமோ ?

    என்று பெண்ணென்பவள் ஒரு புயல் என்று ஆணவச் செவியில் அறைகிறார், வைகைச் செல்வி.

    ‘நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், நங்கையர்க்கு அல்ல ‘ என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை அடித்து வெளியிடுகிறார்.

    அச்சம் எனக்கில்லை!
    தாழ்வும் எனக்கில்லை!
    எதிராளி பலம் பார்த்து (நான்)
    போருக்கு வரவில்லை!
    இந்நெருப்பில் கைவைக்க
    எவர் வந்தால் என்ன ? ….

    தொடர்ந்து விழுகின்ற
    சம்மட்டி அடிகள்…
    உலைக் களத்தில் புரள்கையில் ….
    வலியின் கீற்றுகள்
    உடலெங்கும் பரவும்!
    சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
    பறக்கையில்
    எனக்கெதற்கு மரக்கால்கள் ?

    என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை வீசி எறிகிறார்.

    ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ?

    ‘இமயம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் பாரதத்தில் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் பல்லாண்டு காலம் பகையுடன் புகையும் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!

    உணர்ச்சி முழக்கங்கள்

    தீக்குச்சி போலாகி,
    மனத்தை உரசுகையில்
    (கனல் பற்றி எரிந்து விளைபவை)
    ஆறாத ரணங்கள் அம்மா! ….
    சமுதாய இருட்டிற்கு
    வெளிச்சம் தேவைதான்!

    அதற்காக
    உன்னை நானும்,
    என்னை நீயும்
    எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? ….
    ரயில்பெட்டி எரித்துச்
    சவப்பெட்டி செய்யலாமா ?

    என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.

    புத்தருக்கு அசோக மன்னர் எழுப்பிய கற்தூண்கள் போல எந்த மன்னனும் இராமனுக்கு பிறந்த மண்ணான அயோத்தியா புரியில் தூண்கள் கட்டவில்லை. அங்கே மசூதி யிருந்த தளத்தில் கோயிலிருந்ததாக ஒரு புனைகதை. இராமன் தன்னை அவதார நாயகனாக் கருதவில்லை என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இந்து மதவாதிகள், அரசாங்க ஆதிக்கவாதிகள் இராமனைத் தேவனாக நம்பிக் கொண்டு, இந்த்துக்களையும் நம்ப வைத்துச் சட்டத்துக்கு விரோதமாய், புதியதோர் ஆலயம் கட்ட இஸ்லாமியரின் மசூதியை ஓரிவில் இடித்துத் தள்ளினார்கள். புனிதன் இராமன் பிறந்த புண்ணிய பூமியே முதலில் இந்து முஸ்லீம் கலவரத்துக்கு அடித்தளமாகி, பிறகு அது குஜராத்தில் கொந்தளிப்பாகி, டெல்லியில் ரயில்பெட்டி எரிப்பாகி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தீயிட்டுக் கொளுத்தி தற்காலத்து முற்போக்கு மாந்தர், கற்காலத்தை நோக்கிப் பிற்போக்கில் சென்று, அரசியல் வாதிகளின் தூண்டுகோலில் மாட்டி நாட்டிலெங்கும் வினை விதைத்தார்கள்.

    இனிய இந்தியனே!
    பிறனை நேசித்துப்
    பிறனைப் புரிந்து கொண்டால்
    (உறுதியாய்) நமக்குள்
    ஓர் வல்லரசு தோன்றாதா ?

    இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்குகிறார்.

    ‘உயிரின் ஒலியில் ‘ என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குக் கனிவாகச் சொல்கிறது. இங்கே ஒரு சிறுகதை உருவாகிறது. துன்ப முடிவை நோக்கிப் பயணம் செய்யும் அன்பின் அத்தமன நாடகம்!

    உயிர் ஊசலாடுகிறது, அந்தி நேரத்தில் மங்கி அணைந்திடும் வெளிச்சம் போல். ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா ? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து போய் விட்டன! சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு ? உறுதி படைத்த நம்பிக்கை அது என்பதை ஐம்புலன்கள் உணருமா ? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது ஏன் உனக்கு தெரியாமல் போயிற்று ?

    இப்ப்போது உடலும், உணர்வும் மெளனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! மூழ்கும் படகின் மூச்சுப் நின்று பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! …தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா ? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!

    பந்தக்கால் வேண்டாம்! சொந்தக்கால் போதுமடா!

    ‘என்ன விலை காதலே ‘ என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் புரிகையில் அவரது இருதரப்புக் குடும்பத்தாருடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஓர் உல்லாசத் தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! ஆனால் உல்லாசத் தீவில் அன்னை, தந்தை, தமையன், தமக்கை இல்லாமல் தனியாக வாழ முடியுமா ? தற்காலக் குடும்பங்களில் முக்கியமாக தம்பதிகளின் வயோதிகப் பெற்றோர் பாரமாகிக் கண்காணிக்கப் படாமல் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர, சகோதரிகள் உறவாட முடியாதபடி விலக்கப் படுகிறார். தம்பதிகளின் வீட்டுப் பிரச்சனையே கைவச நிதிப் பற்றாக்குறைக்குப் பிறகு, வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்புதான்! பொறுப்பு யார் மீது விழுகிறது என்னும் தீராத போரே! பெண்ணின் பெற்றோர் அறவே வரவேற்கப் படுவதில்லை! ஆனால் ஆண்டுதோறும் வேண்டும் தீபாவளிச் சன்மானங்கள் பெண் வீட்டார் கொண்டு வந்தால் பேரானந்தம், பெருமதிப்பு, பெரு வரவேற்பு! தீபாவளி விளக்குகள் அணைந்த பிறகு மறுபடியும் அவர்மீது பெருவெறுப்பு, அருவருப்பு, கடுகடுப்பு! இவை யாவும் வீடுகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.

    பெண்ணின் பெற்றோருக்குக் கணவன் தரும் வெறுப்பு வெகுமதி போல், பலரது வீடுகளில் மனைவியும் கணவனின் பெற்றோரை வரவேற்பதில்லை. புற்று நோயுடன் மருத்துவம் பெற, ஊரிலிருந்து அழைத்து வந்த வயோதிகத் தாயைப் படியிலே நிறுத்தி ‘வீட்டுக்குள் அழைத்து வரக் கூடாது, மருத்துவ மனைக்குக் கொண்டு செல், ‘ என்று கணவனுக்கு கட்டளை யிட்ட ஒரு கருணையற்ற மாதை நான் அறிவேன்.

    ‘சென்ற நிமிடம் வரை
    நீயும் நானும் காதலித்தது….
    உண்மை!
    (திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)

    இப்போது நீ சொல்கிறாய்,
    அண்ணன் ஒரு தண்டச் சோறு,
    அவன் வேண்டாமாம்! ….
    அணியணியாய்க் கழற்றி
    (பொன் நகைகள்)
    அத்தனையும் விற்று
    என்னைப் படிக்க வைத்த
    என்னருமை அம்மா வேண்டாமாம்!
    எட்டு விரல்களைத்
    தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
    என் அக்காள் வேண்டாமாம்!
    ஓய்வு பெற்ற பின்னும்
    ஒன்னே கால் லட்சத்தை
    அன்பளிப்பாய்த் தந்த
    (என்னருமை)
    அப்பாவும் வேண்டாமாம்!

    ‘அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே!

    கேளடா அறிவு கெட்டவனே!
    கல்யாணம் ஆகிவிட்டால்,
    கல்லாகி விடுவேனா ?
    கயவர்கள் உலகத்தில்
    சுயநலமே வாழ்க்கை யெனில்
    எனக்குப்
    பந்தக்கால் தேவை யில்லை!
    சொந்தக்கால் போதுமடா !

    என்று காதலன் கன்னத்தில் பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில் இடிச் சத்தம் போல் எதிரொலிக்கிறது! தன்னை மட்டும் நேசித்து தன்னுடன் பிறந்தாரைத் தூசிக்கும் காதலன் உண்மையான காதலனா என்று ஐயுற்று அவனைப் புறக்கணிக்கிறார். திருமணம் புரியும் ஒருவன் தன்னை நேசிக்கும் ஒரு தனிப் பெண்ணை மணப்பதாகத் தெரிந்தாலும், மெய்யாக அவன் மணம் புரிவது ஒரு கூட்டுறவுப் பண்பில் வளர்ந்த குடும்பப் பெண்ணைத்தான். ஆக திருமணச் சந்திப்பு நிலையத்தில் சேரும் இரயில் தொடர்கள் இரண்டு. இருதரப்பு எஞ்சின்கள் ஒரே பாதையில் ஒதுங்கி ஓய்வெடுக்கும் போது மோதிக் கொள்ளாமல் இருப்பது அபூர்வம். சந்திக்கும் போது அடுத்தடுத்த பாதைகளில் இணையாக இயங்கி, மோதாமல் போதல் அறிவுடைமை.

    வனம்பாடி, வானம்பாடி, வனராணி

    வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே ‘சூழ்வெளிக் காப்பாளர் ‘ என்று நான் சுட்டிக் காட்டினேன். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் துப்புரவு குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி எளிதாகத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கவிஞர்கள் 66 பேர் சூழ்வெளித் தூய்மைப்பாடு பற்றி எழுதிய 70 கவிதைகளை ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ‘ என்னும் தலைப்பில் தொகுத்து 2003 டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2003 இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொள்ளப் பட்டது அந்நூலின் ஒப்பில்லாத் தகுதிக்கும், உயர்வுக்கும் சான்றாக நிற்கிறது. வானம்பாடியான வைகைச் செல்வி ஒரு வனம்பாடி, ஒரு வானகம்பாடி, ஒரு வனராணி!

    ‘திக்குத் தெரியாத காட்டில் ‘ சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழலில் சுகங் கண்டு அதன் கீழ் களைப்பாறிப் பூரிப்படைகிறார்.

    நிலையற்ற இன்பத்தில்
    நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
    போதை தெளிந்த பின்னும்
    புறப்பட மனமில்லை! ….
    போதி மரத்தின் கீழ்
    பொழுதெல்லாம் தூங்கியதால்
    ‘நான் ‘ மட்டும்
    என்னில் விசுவரூபம் எடுத்தது!
    நீதியும், நேர்மையும் ….
    ஓங்கி அழைத்தாலும்,
    மரத்தின் நிழலே
    சுகமாய்ப் போயிற்று!

    ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் ‘ என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன. கழிவுத் துணுக்குகள் வாயுவாகவோ, திரவமாகவோ அல்லது திடவத் தூளாகவோ வெளித் தள்ளாத தொழிற்சாலைகள் உலகில் எங்கும் கிடையா! தொழில் நிர்வாகிகள் கழிவுத் துணுக்குகளை சூழ் வெளியைத் தொடுவதற்கு முன்பு வடிகட்டியோ, ரசயான முறையில் பிரித்தெடுத்தோ அவற்றைச் சுத்தீகரிக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாடு ஆணையாளர் அவ்விதம் செய்யப் படுவத்துவதை அடிக்கடி உளவு செய்து, மீறித் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். அல்லாவிடில் அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் கவிதையில் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் புரியும் யுத்தம்!

    நான்கு திசைகளிலும்
    புகை போக்கிகள்!
    நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
    மனித நாற்றுகளை
    மெளனமாய்த் தலைசாய்க்க
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!

    நாள்தோறும் பேருந்து,
    வாகனங்கள், வண்டிகளின்
    கரிய புகையால்
    வெளியை நிரப்பும்! ….
    ஓங்கியுயர்
    மரங்களை வெட்டி விட்டார்.
    மழையும்தான் பொய்க்காதோ
    மண்ணுலகம் தன்னில் ? ….

    ஆலைகள் வைத்தார், அருகில்தான் கல்விச்
    சாலைகள் வைத்தார்!
    ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
    மாணவருக்கு
    அங்கே இலவசமாய் அளிக்கப்படும்!

    மனிதரால் மாசுபட்ட
    வாயு மண்டலத்துக்கோர்
    முகமிருந்தால்
    அம்மைத் தழும்புகள்
    நிறைந்திருக்கும்! ….
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!
    சத்தமின்றி வருவதால்
    யாருக்கும் கவலை யில்லை!
    ஊருக்கும் புரிய வில்லை!

    சுற்றுப்புறம் என்பது
    எங்கோ யில்லை!
    என்னைச் சுற்றி …. உன்னைச் சுற்றி
    நம்மைச் சுற்றித்தான்.

    சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
    கற்றுக்கொள்!
    பிறகு கற்றுக்கொடு!
    இல்லாவிடில்,
    நம் கல்லறைகளை
    நாமே கட்ட ஆரம்பிப்போம்!

    வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் உயிர்த்தோழி! மரங்களை நேசிக்கும் வனராணி அவர். அவற்றைப் பின்வருமிரண்டு கவிதைகளில் காணலாம்.

    ‘மரங்களே!… ஓ மரங்களே! ‘ என்னும் கவிதையில் வனராணி தன் கனவுகளை நமக்குக் காண்பிக்கிறார்.

    மரங்களை நேசிக்கிறேன்,

    மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
    இனிய வசந்தத்தில்
    இலைகள்
    பகலில்.. பல்வேறு நிறத்தில்
    மெல்லிய மஞ்சலில், ..
    அரக்கு வண்ணத்தில்
    கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
    கண்சிமிட்டிச் சிரிக்கும்!
    என்னை அருகே அழைக்க ..
    தவம் செய்கின்றன.
    அருகிருக்கையில்

    தாழக்கிளை பரப்பி, (என்னைத்)
    தொட்டுவிடத் துடிக்கும்!
    தூரத்தி லிருந்தாலும்
    கரமசைத்துக் கூப்பிடும்! ….
    என்னைப் போல
    நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்!
    இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
    என்னை நேசிக்கின்றன!

    அதனால் சொல்கிறேன்,
    மரங்களை வெட்டாதீர்!
    வெட்டுகையில்
    இதயத் துடுப்பு எனக்கு
    மெல்ல, மெல்லக் குறையும்!

    இறுதியாக ‘வரம் வேண்டும் ‘, என்னும் கற்பனைக் கவிதை அவரது அம்மிக் கவிதைத் தொகுப்பில் ஓர் உன்னதப் படைப்பு என்பது என் கருத்து. அவர் கிறித்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவ ராயினும், அவர் தன்னை ஓர் இந்துவாகக் கருதிக் கொண்டு, இறைவனிடம் வரம் கேட்கிறார். வனராணி ஆயினும் வனாந்திரத்தில் பல்லாண்டுகள் முனிவர் போல் தவம் செய்யாது ஓர் வரம் கேட்கிறார்.

    இறைவா! ஒரு
    வரம் வேண்டும் எனக்கு.
    மரமாய் மாற வரம் வேண்டும்!

    அந்த மரத்தில்
    ஆயிரம் கரங்கள் வரும்!
    எதற்கு ? … (கனிகள் பறிக்க)
    ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
    காக்கை, குருவி தேடி வரும்!
    கவிதை சொல்லக் கூடு கட்டும்!

    வெட்ட வெளியில் நின்றாலும்,
    பட்ட மரமாய் ஆனாலும்,
    பூங்கதவாய் உருவெடுப்பேன்!
    வெட்ட வரும் மனிதனை
    விரட்டிப் பிடித்து
    உயரே தொங்க விடுவேன்!

    ஏ மனிதா!
    நீ ஊதித் தள்ளும் புகையால் நாற்றம்,
    நீ கட்டிய ஆலைப் புகையால்
    மூச்சு முட்டும்!
    நீ ஓட்டும்
    வாகனக் கரிப் புகையால்,

    வாயு மண்டலம் மாசுபடும்!

    நானோ
    தென்றல் காற்றைத் தவழ விட்டுக்
    கொண்டல் தொட்டு
    மழை பெய்து,
    சுற்றுச் சூழலைச் சீர் செய்வேன்!
    இறைவன் படைத்த பூமியிது!
    இதைத்
    தூசுபடுத்த, மாசுபடுத்த
    எவர்க்கு மிங்கே உரிமை யில்லை!

    மரத்தை வளர்த்திடுவாய்,
    பரம்பொருள் கட்டளை
    இது வென்பேன்.

    (மரத்தை)
    வெட்டிப் போட எத்தனித்தால்,
    கட்டிப் போடுவேன்
    காலமெல்லாம்!

    கடைசியில் ஒளவை மூதாட்டி அறிவுரை போல், ‘சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்! ‘ என்று மனிதருக்குப் பறைசாற்றுகிறார்.

    காடும் மலையும் இல்லை யென்றால்
    வீடும் நாடும் இனி யேது ?
    சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
    அற்றுப் போகும் மனித இனம்!

    ‘காட்டு வெளியினிலே ‘ என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறு கதையைக் கேளுங்கள்.

    ‘என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! ‘மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை! ‘ என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.

    உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று சகுந்தலைக்கு அவ்விதம் நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து எங்கே போனாய் ? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே கவலையைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம். துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று மனதைக் கலைத்தது! அது நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை மீண்டும் நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும் ? ‘ என்று கண்களில் வெந்நீர்த் துளிகளைச் சிந்துகிறாள் பாவை! மரத்தில் இலையுதிர் காலத்து இலைகளைப் போல், மங்கையின் கண்ணீர் துளிகள் பொலபொலவென உதிர்ந்தன வென்று உவமை காட்டுகிறார்.

    என் கூடு எதுவெனத் தெரிய வில்லை!

    ‘கல்லும், வில்லும்…புல்லாங்குழலும் ‘ என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.

    எல்லாப் பறவைகளும்
    கூடுகளுக்குப் போய்விட்டன!
    அந்தி மயங்கும் வேளையில்
    தனிப் பறவையாய் அலைந்தும்
    என் கூடு எதுவென
    எனக்குத் தெரிய வில்லை!
    பிறிதோர் கூட்டில்
    யார் என்னைச் சேர்ப்பார் ?

    அத்துவானக் காட்டில்
    வேடரைத் தவிர யாருமறியேன்!
    உன் கையில்
    வில்லையும், கல்லையும்
    எதிர்பார்த்தேன்!
    (ஆனால் நீ)
    புல்லாங் குழலுடன்
    வந்தாய்!
    கூடு விட்டுக் கூடு செல்ல
    காலெதற்கு ? சிறகெதற்கு ?
    கலைந்த கூடுகள்
    காணாமல் போய்விட்டால்,
    பிறிதோர் கூட்டில்
    யார் என்னைச் சேர்ப்பார் ?

    நானுனக்குப் பல்லக்குத் தூக்கியல்லவா ?

    ‘பல்லக்குத் தூக்கி ‘ என்னும் கவிதைப் படைப்பில், திருமணமாகித் தன்மனை விட்டுப் புதுமனையில் அடிமையாய்ப் புகுந்த ஒரு பெண் படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!

    நான் உன் நாட்டுக்குத்
    திரும்பி வந்த அகதி!
    உன் மூச்சுக்கள் நிறைந்த
    காற்றைச் சுவாசிக்கிறேன்.
    ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
    ஒரு குவளை நீருக்கும்
    கையேந்தி நிற்கையில்
    கட்டிப் பிடித்தென்னை
    (நீ) முத்த மிடுகையிலே,
    நெஞ்சக்குழி
    கண்ணீரால் நிரம்பியது!

    உன் சன்னதியில்
    நின்றாலும்,
    தூபக் காட்டும்
    (தீபப் பூசாரி) அல்ல நான்!
    நாயகன் பொற்பாதம் கழுவிட
    வாசற் படியோரம்
    (என்னேரமும்)
    காத்திருக்கும் அடிமை நான்!

    என் அரசே!
    கம்பீரமாக நீ உலா வருகையில்,
    உன்னோ டிருப்பதற்கு
    கட்டாயத் தகுதி….
    (என்ன எனக்கு ?)
    பட்டத்து ராணியா ?
    ஆமென்று சொல்லாதே!
    (பாமரனே!)
    பல்லக்குத் தூக்கி யன்றோ ?
    எந்நாளும் நானுனக்கு ?

    அடுத்துச் ‘சுயநலக் ‘ கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:

    பக்கத்தில் வந்தால் …
    பல்லிளிக்கும் பச்சோந்தி…!
    விரட்டிப் பயனில்லை!
    ஒன்று பலவாய்ப் பெருகி
    கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
    போராடிப் போராடி
    எதிர்க்கப் பலமின்றிச்
    சடலம் சரியும்!
    காக்கையும் காத்திருக்கும்,
    நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

    பெண்சிசுக் கொலையைப் பற்றி, சுமை ‘ என்னும் கவிதையில் வைகைச் செல்வி பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: ‘பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே, ‘ என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.

    கேட்பாரற்ற தொரு
    அழுக்கு மூட்டையாக,
    வேண்டாத குப்பையாகத்தான்
    ஒரு மூலையில் கிடக்கிறேன்!
    கப்பலின் சுமை
    மிதமிஞ்சிப் போனாலும்
    என்னை.. நடுக் கடலில்
    எறிந்து விடாதே! …
    பிணைப்புக் கயிறை
    அறுத்து விடாதே!

    ‘கருவில் பெண்ணை அழிப்போர்க்குக்
    காட்டை அழித்தல் பெரிதாமோ ? ‘

    என்றும் ‘மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும் ‘ என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.

    பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், ‘பாரதியின் கனவுகளே ‘ என்னும் ஒரு கவிதையில் பணக்கார வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: பதவி ஆசை பெருகிப் பணத்தைக் கொட்டி பேராசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

    வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்ற பிறகு, ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல்வாதி வெள்ளையனைப் பின்பற்றி அவனுக்குச் சமமாகி விட்டனர்! ஒரு புறத்தில் வெள்ளையன் முன்னேறி நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காக அங்கே குழி தோண்டுகிறான்! ஆனால் நம் ஆட்சியாளர் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை வெட்டிப் பூமியில் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது மரக் கனிகள் அகப்படுமா என்ற பேராசையில்!

    ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:

    மனிதன் படைக்கப் பட்டதோ
    தேவ சாயலில், அவன்
    உருமாற்றம் ஆனதோ
    ஹிட்லராய்,
    முசோலினியாய்!
    இன்றவன்
    கடவுள் பாதி
    மிருகம் பாதி
    கலந்து செய்த கலவை!

    மனிதன் ஆளுவது மிருக நாடாயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு நாடுதான்!

    கடவுளும், மனிதனும்
    ஒன்றிணைந்த அற்புதம்,
    என்பதை நினை வூட்டவே
    இன்று [கிறிஸ்மஸ் தினத்தில்]
    மறுபடி பிறக்கிறது,
    பெத்லகேம் குழந்தை.

    என்று மெல்லோசையில் ஏசுவெனும் தெய்வச்சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.

    அம்மி நூலில் நாற்பது கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரிய வில்லை. ‘அம்மி ‘ என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, மரத்துக்கு மதிப்பளிக்கும் ‘வரம் வேண்டும் ‘ என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது கட்டுரையாளர் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், சிந்தனையில் ஊறிய வேட்கையும், காவியப் கலைப் படைப்புத் திறனையும் அந்த தலைப்பு ஒன்றாக இணைக்கிறது. மண்ணில் மரம் வேண்டும் என்று கடவுளிடம் வரம் வேண்டும் வனராணி வைகைச் செல்வி.

    இறுதியாகத் தமிழ்க் கவியரசி வைகைச் செல்விக்கு எனது வேண்டுகோள்! ‘நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த ‘கவிதைகள் நாற்பது ‘ ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் ‘கவிதைகள் நானூறு ‘ என்னும் சோலை வனங்களாய் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்! நாற்பது கவிதைகளில் அவரது இன்ப, துன்ப, ஏமாற்றங்கள், இலட்சியங்கள், மனத் தாக்கல்கள் மின்மினி போல் மின்னி மின்னிப் பயணம் செய்து வரலாற்று மைல் கற்களாய் கண்ணில் படுகின்றன.

    தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் ‘வையகச் செல்வியாக’ வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.

    ++++++++++++++++++

    வைகைச் செல்வியின் ‘அம்மி ‘ காவ்யா வெளியீடு,
    [முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
    14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
    கோடம்பாக்கம், சென்னை: 600 024

    +++++++++++++++

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 10, 2006)]

    http://jayabarathan.wordpress.com/

    Share