அந்திவானமும் அவளும் அவனும் – 1

திவாகர்

கிருஷ்ணா அந்த அத்துவான பிரதேசத்தில், ராஜபாட்டையில், போக்குவரத்தே இல்லாத சூழ்நிலையில் அதுவும் அந்தி நெருங்கும் நேரத்தில் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சின்னப்பெண்ணா, இளைய கன்னியா.. யாராயிருந்தால்தான் என்ன.. இந்த வேளையில் தனிமையில் இங்கு அவளுக்கு என்ன வேலை.. ஒருவேளை இடம் தெரியாமல் வந்து விட்டாளோ.. நிற்கும்போதெல்லாம் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கும் தன் குதிரை கூட அவளைப் பார்த்ததும்  அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்கத்தான் செய்தான். இது தன் குதிரைதானா அல்லது இவள் தேவலோகத்துக் கன்னியா? புரியவில்லை..

“ஆஹா.. இந்த அத்துவான இடத்தில் யாருமே காணப்படாத பாட்டையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்குத் துணையாக யாரும் வரவில்லையா.. சரி, நீ எந்த ஊர்.. உனக்குத் தெரியுமோ தெரியாதோ.. எனக்கு இங்கு எல்லா ஊர்களும் பழக்கம்தான்.. நீ எந்த ஊர் என்று சொல்லு.. என் குதிரை உன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வரும்..”

”அட! இந்தக் குதிரையில் என்னைப் போகச் சொல்கிறாயே.. இது தனியாகப் போகுமா.. இதற்கு ஊர் வழிகள் தெரியுமா.. இதன் பெரிய செவியில் ‘அந்த ஊருக்குப் போய்க் கொண்டு விட்டு வா’ என்று சொன்னால் அது என்னை அழைத்துக் கொண்டு வேகமாக  ஓடி என்னை விட்டு விட்டு வந்து விடுமா.. அல்லது ஒருவேளை யாரிடமாவது விசாரித்து சரியான வழி கேட்டு விட்டு விட்டு வருமா?”

சொல்லி விட்டு அவனைப் பார்த்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள். கொள்ளை அழகுதான்.. யார் பெற்ற பெண்ணோ..

கலகலவென அந்தப் பெண் சிரித்தது அவனை மிகவும் கவர்ந்தது.. சிரித்ததோடு இல்லாமல் தன்னை யாரென்று தெரியாமல் எகத்தாளத்தையும் சேர்த்துப் பேசுகிறாளே.. சடாரென்று குதிரையின் மேலே இருந்து கீழே குதித்தவனைப் பார்த்து சற்று மிரள்வது போல பாதையோரத்தில் ஒதுங்கினாள்.

இவள் மிரள்கிறாளா அல்லது மிரள்வது போல நடித்தாளா..புரியாமல் பார்த்தவன் தான் நின்ற இடத்திலிருந்தே பேசினான்.

“என் குதிரையைப் பற்றி உனக்குத் தெரியாது.. அதனுடன் பழகப் பழகத்தான் உனக்கும் புரியும். அது போகட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.. நீ எந்த ஊர்..?

கேள்வி கேட்டவனை ஆவலுடன் பார்ப்பது போலப் பார்த்தவள் பின்னால் இருந்த தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் “புதூர்தான்”..

“ஓ.. இங்கேதானா.. சரி வா.. நானும் அங்குதான் போகிறேன்.. நீ குதிரையில் ஏறிக்கொள்.. நான் நடந்தே வருகிறேன்..”

“ம்ஹூம்.. நான் வரமாட்டேன்.. நீதான் சொன்னாயே.. நீ பழக்கிய குதிரை என்று.. ஏதாவது ஏடாகூடமாக என்னை வேகமாக வேறு ஏதாவது ஊருக்குக் கூட்டிப்போய்விட்டால்.. என் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வார்கள்?”

”ஓ.. சரி, சரி, வா. நானும் நீயும் நடந்து கொண்டே போவோம்.. உன் தாத்தா யார்.. அவர் என்ன செய்கிறார்..”

அவள் நகரவில்லை.. “திம்மராசு தாத்தாவை உனக்குத் தெரியாதா.. அய்யய்ய.. என் தாத்தாவைத் தெரியாது என்று ஊருக்குள் யாரிடமும் சொல்லாதே.. உன்னை ஒருவிதமாகப் பார்ப்பார்கள்”.

சற்று அதிர்ந்துதான் போனான் கிருஷ்ணா.. என்ன திம்மராசு மாமாவின் பேத்தியா இவள்.. அட.. அதுதான் இத்தனை அழகாகப் பேசுகிறாள்.. சரி, இவள் ஏன் இந்த சாயங்கால வேளையில் யாருமில்லா இந்த பிரதேசத்தில் வரவேண்டும்.. ஆண்டவா.. இவள் தைரியசாலிதான்..

”ஆஹா.. உன் தாத்தாவைப் பார்க்கத்தானே நானே தலைநகரத்திலிருந்து வருகின்றேன்.. உன் தாத்தா எனக்குக் குருதேவர் போன்றவர்.. எங்கள் குலவிளக்கு..”

இப்படிச் சொன்னாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வித ஆவலும் இல்லைதான்.. இவன் சொல்வதையே காதில் வாங்காதது போல அந்த ராஜபாட்டையில் ஓரத்தில் உள்ள பாறைமேல் ஏறினாள் அவள். இதையும் கவனித்தான்.. சின்னப்பெண் தானே..இவள் தாத்தா இந்த தேசத்துக்கு செய்த சேவை இவளுக்கென்ன தெரியும்.. திம்மராசு என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த விஜயநகர சாம்ராஜ்யமே எப்போதோ அழிந்திருக்கும் என்பதை இவள் அறிவாளா.. இந்த தென்னகத்தையே ஒருங்கிணைத்து ஆண்ட நரசிங்க ராஜா இறந்த குழப்பத்தில் எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது துணிந்து முன்னின்று தன் தந்தைக்கு பட்டம் கட்டி துளுவ வம்சத்தை சிம்மாசனத்தில் ஏற்றிய மகான் அவர் என்று இவள் அறிவாளா..இந்த விஜயநகர தேசத்துக்கே பிரதம அமைச்சராக எத்தனையோ ஆண்டுகள் இருந்து எத்தனையோ ஆலயங்கள் எழுப்பித் தந்து, எதிரிகளை அழிக்க போர்க்களங்களையெல்லாம் சந்தித்து, தன் தோளோடு தோள் நின்று சாதித்த பெருமைகளை இவள் அறிவாளா.. இப்போதும் கூட அவரைத் தனியாக சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கிச் செல்கிறோம் என்பதில் நண்பர்கள் பலர் ஆவலுடன் தாமும் வருவோம் என்று வேண்டிக்கொண்டாலும் அவர்களை கூட வரவேண்டாம் என்று ஒதுக்கியதில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடன் மதுரையில் தனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை இவளுக்குப் புரியும்படி சொல்லமுடியுமா.. ஆனால் இதுவெல்லாம் இவளுக்குத் தேவையில்லைதானே. இனிமையான இளமைக் காலத்தில் இத்தனை அரசியல் விஷயங்கள் எதற்கு.. இவள் இன்பமாகத்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்..

“நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின் பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன் குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா.. உன் பெயர் என்ன..”

அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம் கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

“அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்.. ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

“இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம் வரை வரவேண்டுமா என்ன?”

“இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல் முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

“ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

“இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும் கேட்பார்..”

“அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை.. பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

“சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும் இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது உனக்குத் தெரியுமா?”

பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான் ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால் நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான் பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச் சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய் படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா.. ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச் செல்ல வேண்டும்..

“சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு இருப்பேன்..”

“பசிக்குமே”

“உனக்குப் பசிக்காதோ?”

”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக் குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

“சுட்டிப் பெண்ணே! தாத்தாவைப் பற்றிய கவலையை விடு.. அவர் பசியை நான் போக்குவேன்.. அத்தோடு என் குதிரைப் பையில் ஏராளமான தின்பண்டம் கூட இருக்கிறது.. மதுரையில் கொடுத்து அனுப்பினார்கள்.. இன்னும் சிறிது நேரம் போனால் என் வீரர்கள் கூட என்னைத் தேடி வரலாம்.. நான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக பிரயாணம் செய்வதில் அவர்களுக்கு வருத்தம்..”

இத்தனை பேசினோமே.. இவள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே அவள் முகத்தில் பாவனை ஒன்றும் காணோமே என்று சற்று கவலைப்பட்டான் கிருஷ்ணா..  சிறு பெண்.. என்னமாய்ப் பேசுகிறாள்..ஆனாலும் இவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.. சாலையோரத்தில் ஒரு பாறையின் மீதமர்ந்து சாவகாசமாகப் பேசும் இவளிடம் எத்தனை நேரமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலும்.. ஆனாலும் அந்தி மாலை நேரம்.. சற்று போனால் இருள் கூட வந்து சேர்ந்துவிடும்..

”அது சரி.. ஆகாயத்தைப் பார்த்தாயா.. என்று கேட்டேனே.. உன் காதில் விழவில்லையா? நான் அதற்குதான் இங்கு வந்தேன்.. நீயும் வேண்டுமானாலும் கொஞ்ச நேரம் இங்கு என்னோடு இருந்து இந்த அந்தி மாலை வேளையிலும் இருட்டு வேளையில் நட்சத்திரம் வரும்போதும் ஆகாயத்தைப் பார்..”

அவளருகே சற்று தள்ளி அந்த அகன்ற பாறையில் அமர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். இதோ இப்படி வெள்ளையாக இருக்கும் ஆகாயம் இன்னும் சற்று நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.. ஆனால் கருப்பாக இருந்த ஆகாயம் வெள்ளையாக மாறிய அந்த சுபோதய வேளையில் கண்ட காட்சி மட்டும் மறுபடியும் நினைவுக்கு வந்தது.. நினைவுக்கு ஏன் வரவேண்டும் அதுதான் தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டதே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

”காதில் நன்றாகவே விழுந்தது.. நானும் ஆகாயத்தைத் தனியாகவே பார்த்திருக்கிறேன்..”

“எப்போது பார்த்தாய்?”

”அதிகாலை வேளையில்.. சென்ற மாதம் ஒரு அதிகாலை வேளையில் பார்த்தபோதுதான்..” என்று ஏதோ சொல்லவந்தவன் அவள் முகத்தை சட்டென்ப் பார்த்தான். அவனையே ஆவலுடன் பார்த்தவள் அவளும் தன் பார்வையை விலக்கி மறுபடியும் ஆகாயத்தைப் பார்த்தாள். இவள் தன்னிடம் விளையாடுகிறாளோ.. மாமாவிடம் இதையெல்லாம் தனியாகச் சொல்லி மகிழவேண்டும்.. தன் பேத்தி எத்தனை சுட்டியாக இருக்கிறாள் என்று அவரும் மகிழ்வாள்..

”அதிகாலையில் பார்த்தாயா.. அப்போதெல்லாம் பார்ப்பதை விட சாயங்காலம் முடியும்போது வானத்தைப் பார்க்கவேண்டுமே.. அதுவும் இந்தப் பாறையிலிருந்து மேற்கே பார்க்கவேண்டும் என்றுதான் இப்போது வந்தேன்..”

”சாயங்கால வானம் என்ன அத்தனை உசத்தி?”

”ஓஹோ.. நீ தமிழ் படிக்கவில்லை போலும்..”

“அதென்ன அப்படி சொல்லிவிட்டாய்.. இரண்டு புலவர்களை மதுரையிலிருந்து வரவழைத்துக் கற்றுக் கொண்டவனாக்கும், இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயின்றவன் தெரியுமா”

”ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கையில்லை.. அப்படிப் படித்தவனானால் அந்தி நேரத்து வானம் அதுவும் மேற்கே வானம் என்றதும் உனக்கு ஏதும் நினைவு வரவில்லையா?”

“ம்.. இரு.. இரு.. ஆமாம்.. மேற்கே வானம் செவ்வானமாக மாறப்போவதையும் அந்த செவ்வானத்தை கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த யுத்தத்தில் ரத்தமாக சிவந்து போன யுத்தகளத்தை ஒப்பிட்டும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.. எனக்கு நன்றாக நினைவு உள்ளது.. பெரும்பாணாற்றுப் படை, சரிதானே”

“ஓஹோ.. நீயும் யுத்தத்தில் கலந்து கொள்வாயா.. பார்த்தாயா.. சிவந்த யுத்தபூமியை அந்தி நேரத்து செவ்வானத்துக்கு ஒப்பீடாக வைத்தார்களே.. அழகு எங்கே உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது போலும்..”

சட்டென அதிர்ந்தான் அவன்.. இவள் சின்னப்பெண்ணா.. தனக்குள் கேட்டுக்கொண்டவன் தன்னையே சமாதானம் செய்துகொள்ளவும் செய்தான்.. தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எல்லா உவமைகளையும் ஒப்பிட்டுப் பாடித்தொலைத்துவிட்டன.. படித்தவர்கள் அறியத்தானே செய்வர்..இதில் சிறியவர் என்ன பெரியவர் என்ன?

”என்ன, என்னை மனதுக்குள் திட்டிக்கொள்கிறாயா.. சரி சரி,, உனக்கு வானத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை போலும்.. போய் என் தாத்தாவைப் பார்.. உருப்படியான காரியம் செய்.. நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துதான் வருவேன்..”

”செல்லப்பெண்ணே!.. நான் அப்படியெல்லாம் உன்னை விட்டு விட்டுப் போகமாட்டேன்.. நானும் நீயும் சேர்ந்தே செல்வோம்.. சரி, நீ உன் வேலையைப் பார்.. ஏதாவது விசித்திரம் கண்டால் சந்தேகம் கேள்.. நான் பதில் சொல்கிறேன்..”

”நீயா!  உனக்கு செவ்வானத்தைப் பற்றியே ஏதும் தெரியவில்லை.. இதில் என் சந்தேகத்தைத் தீர்க்கப்போகிறாயா? எதையும் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.. சட்டென எதுவும் தோணாது.. கொஞ்சம் பொறுமை தேவை.. உனக்குத் தெரியுமா.. இந்த வானம் முழுதும் ஒருவன் ஆள்கிறான். அவன் பெயர் தெரியுமா?”

கிருஷ்ணதேவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தன்னைப் போலவே சிந்திக்கும் ஒரு பிறவியை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறான். திம்மராசு மாமாவின் பேத்தியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்தான்..

”செல்லப்பெண்ணே! ஆமாம்.. அவன் எனக்கும் பிடித்தவன்.. அவனை விஷ்ணு என்போம்.. நீ எப்படி கூப்பிடுகிறாயோ?

”ஆஹா.. உனக்கு உன் மூளை இப்போதுதான் வேலை செய்கிறது.. சரி, விண்ணை ஆள்பவன் விஷ்ணு என்கிறாய் அல்லவா.. இதோ விண்ணைப் பார்க்கிறாயே.. அந்த விஷ்ணுவையும் பார்க்கவேண்டுமே..”

திம்மராசு பேத்தியின் வார்த்தைகள் அவனை மயக்கின. மறுபடியும் சென்ற மாதத்தில் கடந்து போன கிருஷ்ணை நதி தீரத்துப் போர்க்களமும் துவாதசித் திதியும் அந்த விண்ணை ஆளும் விஷ்ணுவும் கண்முன் வந்தனர்.. எப்படிச் சொல்வேன்.. இவளிடம்..தான் என்ன பேசினாலும் மறுத்துப் பேசும் சாமர்த்தியம் உள்ளவள்.. இவளுக்கு வாய்க்கும் இளைஞன் மிக அரிதான் அறிவு படைத்தவனாக அமையவேண்டும்.. சரி, விடக்கூடாது இவளை, இனி அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்போமே..

“என்ன, வாய் மூடி மௌனமாகி விட்டாய்.. விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லையல்லவா..”

“எதற்காக அந்தப் பேச்சையே எடுக்கிறாய்.. நீ பார்த்தாயோ?”

”அட, இடக்கு முடக்காக இதென்ன கேள்வி..  முன்பே சொன்னேனே.. சரியாகச் செவியில் விழவில்லை போலும்.. ஓஹோ செவிட்டு வீரனோ?”

இந்த வார்த்தையைப் பிறர் யாரேனும் பேசியிருந்தால் அவர்கள் நிலைமை தலைநகரத்தில் என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்து சிரித்தான்..”செல்லப்பெண்ணே!.. சரி, நான் செவிடு இல்லைதான்.. உன் பதிலைச் சரியாகத்தான் சொல்லேன்.. உன்னளவு எனக்கு தமிழில் பரிச்சயமில்லை என்றுவேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன் போதுமா?”

“ஆங்.. அப்படி வா வழிக்கு, விண்ணை ஆள்வதால் மட்டும் அவன் விஷ்ணு அல்ல, அவன் விண்ணில் பரந்து கிடக்கும் அத்தனை பிரதேசங்களிலும் வியாபித்துக் கிடக்கிறான்.. அதனால்தான் அவன் விஷ்ணு.. சரி, அவனைப் பார்க்க வேண்டுமென்றால்  வெகு சுலபமான வழி இருக்கிறது..”

இப்போது கிருஷ்ணதேவன் ஆலோசனை சுத்தமாக அவனிடத்தே இல்லை..எங்கோ கிருஷ்ணை நதி தீரத்துக்குப் போய்விட்டது. கடும்போர்.. கங்கர்கள் மிகத் தீரமாகத்தான் போரிடுகிறார்கள்.. ஆனால் அவர்கள் வெல்லப்படவேண்டும்.. அன்று ஏகாதசித் திருநாள் வேறு.. ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருப்பவன்.. அன்று அந்த ஸ்ரீகாகுள கிராமத்து கோயிலில் இருந்த பெருமாளை நினைத்துக் கொண்டே அந்தக் கோயிலின் முன்னறையில் வெறுந்தரையில் படுக்கிறான்.. அவன் தளபதிகள் வெளியே என்ன செய்வது என்பது புரியாமல் காத்துக்கிடக்கிறார்கள்.. எதிரிகள் ஓய்ந்து கிடக்கின்றனர், இன்னமும் ஓரிரு நாளில் அவர்களை எளிதாக வென்றிடமுடியும்தான்,  ஏகாதசி தின விரதம் இன்றா நேற்றா.. எத்தனையோ வருடங்களாகத்தான் மன்னர் செய்துவருகின்றார்.. ஆனாலும் யுத்த பூமியிலும் தொடரவேண்டுமா என்பதுதான் அவர்களின் மனக் கவலை.. இவை எதுவும் கவனம் கொள்ளாமல் மனத்தில் இறைவனையே நிறுத்தி ஜபம் செய்து கொண்டே இருந்ததும் விடிகாலையில் யாருமறியாமல் கிருஷ்ணை நதிக்குச் சென்று நதியில் ஸ்நாநம் முடித்து கருமையிலிருந்து வெளுப்புக்கும் வரும் வானத்தை சாதாரணமாகத்தான் பார்த்தான்..

ஆஹா.. எப்படி வர்ணிப்பது அந்த அதிசயக் காட்சியை…

படங்களுக்கு நன்றி:

Raja Ravi Varma (Google) Picture

www.pbase.com

9 thoughts on “அந்திவானமும் அவளும் அவனும் – 1

 1. என்ன சொல்வது திவாகரா? அருமை. என்ன தான் பார்த்தான் அவன் வானத்தில். பொறுமையை சோதிக்கிறாயே! அடுத்த பாகம் எப்பொழுது?
  விசாகை மனோகரன்

 2. திவாகரின் முன்மொழி இது: “இது ஸ்ரீகிருஷ்ணதேவராயன் ‘அமுக்தமால்யதா’ எனும் காவியம் எழுதும் பணியில் ஈடுபட முனைந்த கதை. அவன் இதற்காக தன் குருவான திம்மராசுவை கலந்தோலோசிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறான்.. அப்போது நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை மூன்று பகுதிகளாக வல்லமையில் எழுதப்படுகிறது.”  

  நல்லதே. 

  என் குறுக்கு புத்தியின் கேள்விகள்:

  1. உரையாடல் மொழியின் அடிப்படை என்னவோ? காட்டாக, “செல்லப் பெண்ணே!” என்பது  எங்கேயிருந்து? எந்தக் காலத்தில், எங்கே, அப்படி ஒரு பெண்ணை, அதுவும் முன்பின் தெரியாத ஒரு பெண்ணை, வரிக்கு வரி இப்படி அழைத்தார்கள் என்று அறிய ஆவல்.
  இந்த மாதிரியான விளி நாடக முறைக்கு மட்டுமா அல்லது உண்மையான வாழ்க்கையிலுமா? எதுவென்றாலும் எந்தக் காலத்தில் இப்படி என்று சொன்னால் தெளிவாக இருக்கும். 

  2. இந்த … “தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் …” என்பதற்குப் பின்னணி எங்கேயிருந்து? உண்மையாகவே பழைய காப்பியங்களில் அப்படிச் சொல்லியிருக்கிறார்களா அல்லது இது கற்பனையா?
  எனக்குத் தெரிந்தவரை, உண்மை வாழ்க்கையில் எந்தப் பெண்ணும் தன் பின்னலை இப்படி முன்னுக்கு இழுத்துப்போட்டுப் பேசியதில்லை. உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கிறீர்களா? அல்லது, இது கதை/நாடக வழக்கா?

  +++++++

  இது ஒரு வரலாற்றுக் கதை என்பதால் … மேலே நான் குறிப்பிட்ட கருத்துகள் என்னை  அரிக்கின்றன. 🙂

  நிற்க.

  ஒரு வேண்டுகோள். படங்கள் எங்கேயிருந்து எடுக்கப்பட்டன என்று சொல்லி ஒரு சிறு “நன்றி” சொல்லுதல் நயநாகரிகம். 🙂 

 3. ராஜம் அம்மாவுக்கு..உங்கள் ஊடுறுவும் கேள்விகளை ரசிக்கின்றேன்.. நன்றி!

  1.‘செல்லப்பெண்ணே’ என்றழைக்கும்போதே அவன் பாசம் தெரிவிக்கப்படுகின்றது, காரணம் அவனுக்குக் குருவானவரும் மாமா என்ற்ழைக்கப்படுபவருமான திம்மராசுவின் பேத்தி என்று தெரிந்தததால். அத்தோடு தன்னைக் கவர்ந்த அந்தப் பெண்ணை பாசத்தோடு விளிப்பதாக அவன் நினைத்திருக்கலாம் அல்லவா..
  2. பின்னல் விஷயம் பெண்கள் விஷயம்.. ஊம்ஹூம்.. எனக்குத் தெரியாது,, கை அப்படியே போயிற்று.. உங்கள் ஊர்க்காரரான பாரதி ‘பின்னலைப் பின்னின்றுழுப்பான்’ என்று வேறு எழுதியிருக்கிறார்.. பாரதியையும் ஒரு பிடி பிடிக்கலாம்..
  3. கதை முழுவதும் (மூன்றே பாகம்தான்) படித்தவுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  அந்த படங்களுக்கு நன்றி என்பதும் போட்டிருக்கிறோமே..  அதையெல்லாம் கட்டாயம் செய்வேன்.. 
  அன்புடன்
  திவாகர்

 4. மனோகரன், கீதாம்மா, ஸ்ரீதேவி!
  நன்றி!!
  இந்தக் கதை முதலில் சிறுகதையென்றே நினைத்து எழுதினேன்.. ஆனால் சற்று நீண்டுவிட்டது. படிப்பது சுலபமாக இருக்க மூன்று பகுதிகளாக பிரித்துள்ளேன். மார்கழி மாத நிறைவுடன் இக்கதையையும் நிறைவடையும்.

 5. அந்திவானம் பார்த்து அதிசயித்து லயித்திருக்கும்
  சிந்திவிழும் சிரிப்பெல்லாம் சொந்தமாகச் சேர்த்திருக்கும்
  இந்திரலோகப் பெண்ணிவளோ எனவியக்கும் சிறுமியிடம்
  முந்திதான் கண்டிருந்த அதிகாலை வானழகைச்சொல்லிடவே
  வந்திருக்கும் மன்னனிவன் கதையிங்கு அற்புதமே!

 6. கதையின் நடையும் அருமை, அதை ரசித்துப் பாராட்டி எழுதிய Sankar Kumar ன் பின்நூட்டமும் அருமை. அனைவரும் சொற்களால் விளையாடுகிறார்கள்.

  ….. தேமொழி

 7. ஆஹா! டாக்டர்.. அருமையான கவிதை.. நன்றி!! 

  தேமொழி: நன்கு ரசித்தமைக்கு நன்றி!!

Leave a Reply

Your email address will not be published.