Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள்

    Standard Model

    (கட்டுரை: 13)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++

    https://youtu.be/BQR7Zl_saVo

    https://youtu.be/c-iCw8EnhSY

    +++++++++++++++++++++++++++

    எங்கெங்கு காணினும் இயங்கும்
    அங்கோர் அகிலம்  !
    அகிலக் கதிர்கள்
    அகிலாண்ட நாயகியின் கருங்கூந்தல்
    உதிர்க்கும் பூக்கள் !
    அவற்றில் சிதறும் பரமாணுத் துகள்கள்
    அகிலக் கருந்துளையின்
    மகரந்த விதைகள் !
    அணுவுக் குள்ளேயும்
    நுணுக்கமாய் ஓர் அகிலம் சுழலும் !
    அணுக்கருவின்
    பரமாணுவுக் குள்ளேயும்
    பம்பரமாய்ச் சுற்றும்
    குவாண்ட அகிலங்கள் உள்ளனவா ?
    உட்கருத் துகள்களைச்
    சுற்றிவரும்
    குட்டி மின்மினி ஒன்று !
    சுட்டிப் பராமணுக்களும்
    முட்டையிடும் !
    அவற்றில் பொரித்த
    குஞ்சுகள் தான் குளுவான்கள்,
    குவார்க்குகள் !
    போஸான்கள் ! லிப்டான்கள் !
    ஃபெர்மியான்கள் !

    +++++++

    primary-cosmic-ray-showers.jpg

    நாமறிந்தவை அளவுக்கு உட்பட்டவை !  நாமறியாதவை அளவுக்கு மிஞ்சியவை !  அறிவுத் திறமையுடன் கரையற்ற கடலின் நடுவே ஒரு விளக்க முடியாத தீவில் நிற்கிறோம் !  ஒவ்வொரு பிறப்பிலும் நமது தொழில் மேலும் சிறிதளவு நிலப் பரப்பைக் கைப்பற்றுவதே !

    தாமஸ் ஹக்ஸ்லி விஞ்ஞான மேதை [Thomas Henry Huxley (1825-1895)]

    ஓர் ஆப்பிள் பையைத் (Apple Pie) தயாரிப்பதற்கு முன் முதலில் நீ ஓர் பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டும்.

    ஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் !  மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் !  பரமாணுக்களுக்குள்ளே அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் !

    ஒன்று இருப்பதற்குச்  சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை !

    கார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல்துறை மேதை

    மனதைத் துள்ள வைக்கும் உச்சநிலைச் சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது.  இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.  அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

    கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine) 

    Particles Forces

    அனுதினம் மனிதரைத் தாக்கும் விண்வெளி அகிலக் கதிர்கள் !

    மனிதரைத் தாக்கும் இயற்கையான பின்புலக் கதிரியக்கம் இருவகைப் பட்டவை.  ஒன்றாவது: விண்வெளிப் பொழிவான அகிலக் கதிர்கள் !  இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் !  அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன !  மனிதர் வாங்கிக் கொள்ளும் தணிவான பின்புலக் கதிரிக்கக் கதிரடி சுமார் 7%-10% (Background Radiation Dose).  அகிலக் கதிர்களில் பிரதானமாக நேர்முகக் கதிர் ஏறிய புரோட்டான் முதல், இரும்பு அணுக்கரு போன்றவை உள்ளது ஒரு காரணம்.  அடுத்து இரண்டாம் விளைவுக் கதிரியக்க அலை/துகளான எக்ஸ்-ரே, காமாக் கதிர், எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான், ஆல்ஃபாத் துகள், மியூவான், பையான் போன்றவை இருப்பது.

    Standard Model -1

    அகிலக் கதிர்கள் என்பவை உயர்ச்சக்தி ஏறிய துகள்களை (High Energy Particles) ஏந்திக் கொண்டு விண்வெளியிலிருந்து பூமியில் வீழுகின்ற கதிர்கள்.  அந்தத் துகள்கள் ஏறக்குறைய ஒளிவேகத்துடன் பூமியை எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்குகின்றன !  அகிலக் கதிர்களில் பிரதானத் துகள்களாகப் புரோட்டான்கள், எலெக்டிரான்கள், அடுத்து இரண்டாம் விளைவாகச் சதுர மீட்டரில் வினாடிக்குச் சராசரி 100 எண்ணிக்கைத் திரட்சியில் பெரும்பான்மையாக மியூவான்கள் (Muons) பொழிகின்றன.  பூமியில் விழும் அகிலக் கதிர்களின் அடர்த்தி சிறிதாயினும், விண்வெளியில் அவற்றின் பொழிவு அடர்த்தி மிகையானதால் விண்வெளி வீரருக்குப் பெருங்கேடு விளைவிக்கும்.  அதே சமயத்தில் பூமியில் பொழியும் சிறிதளவுக் கதிரடி அகிலக் கதிர்களால் என்ன பாதகம் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.  அந்தத் துறையில் இதுவரை ஆராய்ச்சிகள் புரிந்து மனிதருக்கு ஏதேனும் அகிலக் கதிர்கள் தீங்குகள் விளைவிக்கின்றனவா என்பது அறியப் படவில்லை !

    விண்வெளியில் துணைக்கோள்களில் இயங்கி வரும் மின்னியல் கருவிகளைப் பாதிக்கின்றன அகிலக் கதிர்கள்.  அவற்றின் மின்னேறிய துகள்கள் துணைக்கோளில் உள்ள கணினியின் நடப்புக்கி இன்னல் தருகின்றன.

    பரிதி விண்மீன் உதிர்க்கும் அகிலக் கதிர்கள்

    இங்குமங்கும் அகிலக் கதிர்களைப் பொழியும் ஓர் உற்பத்திச் சாதனமாக சூரியனும் இருந்து வருகிறது.  அவற்றின் கதிரியக்க அணுக்கருவும், எலெக்டிரானும் சூரிய தீ வீச்சுத் தோரணங்களின் (Solar Corona) அதிர்ச்சி அலைகளாலும், காந்த சக்தியாலும் விரைவாக்கம் (Acceleration) பெறுகின்றன.  அகிலக் கதிர்களின் சூரியத் துகள்கள் கூடிய பட்சம் 10 முதல் 100 MeV (Million Electron Volt Energy) சக்தி பெற்றவையாக உள்ளன. சில சமயம் உச்சநிலை ஏறி 1-10 GeV (Gega Electron Volt Energy) சக்தி கொண்டவையாக எழுகின்றன !

    விண்வெளியில் வீழும் அகிலக் கதிர்கள் விண்மீன் மந்தைகளின் காந்த மண்டலம் வளைத்து விட்டவையே !  சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும்   எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை.  ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை !  விண்வெளியில் சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டும் விண்கப்பல்கள் காலாக்ஸிகளின் அகிலக் கதிர்களின் தாக்குதலில் பாதிக்கப் படுகின்றன !

    மூன்றாம் விதத்தில் பொழியும் முரண்பாட்டு அகிலக் கதிர்கள்

    மின்னூட்டச் சிரமமான மூலகங்களைக் (ஹீலியம், நைடிரஜன், ஆக்ஸிஜென், நியான், ஆர்செனிக்) கொண்ட விண்வெளிக் கதிர்களை விஞ்ஞானிகள் “முரண்பாட்டு அகிலக் கதிர்கள்” (Anomalous Cosmic Rays) என்று அழைக்கிறார்கள்.  வேறுபாடான மூலகங்களைப் பெற்றிருப்பதால் அவை முரண்பாட்டுக் கதிர்கள் ஆயின.  அத்தகைய அகிலக் கதிர்கள் நடுநிலை மின்னோட்டத்தில் உள்ள விண்வெளி விண்மீன்களின் துகள்களிலிருந்து (Electrically Neutral Interstellar Particles) வெளியாகுபவை.  காலாக்ஸிகளிலிருந்து வெளியேறும் அகிலக் கதிர்கள், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் சூப்பர்நோவா வெடிப்பிலிருந்து சக்தியைப் பெறுகின்றன !

    அகிலக் கதிர்களில் உள்ளங்கிட மூலகங்கள் என்ன ?  ஏறக்குறைய மூலகங்களின் அணி அட்டவணையில் (Periodic Table of Elements) இருக்கும் அத்தனை மூலகங்களும் அகிலக் கதிர்களில் உள்ளன.  பெரும்பான்மை யாக (88%) ஹைடிரஜன் அணுக்கரு (புரோட்டான்கள்), 10% ஹீலியம், 1% பளு மூலகங்கள் & 1% எலெக்டிரான்கள்..  அகிலக் கதிர்களில் உள்ள பொதுவான பளு மூலகங்கள் எவை ?  கார்பன் எனப்படும் கரி, ஆக்ஸிஜென், மக்னீஷியம், சிலிகான், இரும்பு முதலியன.  அவை விண்வெளி விண்மீன் மந்தைகளின் வாயுக்களோடு மோதும் போது,  அரிதான மூலகங்களான லிதியம், பெரிலியம், போரான் ஆகியவை உண்டாகுகின்றன.

    பூத விரைவாக்கி யந்திரங்களில் அடிப்படைத் துகள்கள் படைப்பு

    சுவிட்ஜர்லாந்தின் தென்மேற்கு மூலையில் ஜெனிவாவுக்கு அருகில் அமைந்துள்ள “செர்ன்” (CERN Particle Accelerator) அடித்தளக் குகைக் குழல்களில் சூரியனை மிஞ்சிய உஷ்ணத்தை உண்டாக்கி, விஞ்ஞானிகள் அணுவின் அடிப்படைத் துகள்களை உண்டாக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  செர்ன் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தும் அடிப்படைத் துகள் விரைவாக்கி ஆய்வுக் கூடம்.  நான்கு மைல் நீளமாகச் சுருண்ட குழலில் அமைக்கப்பட்ட, உலகிலே மிகப் பெரிய ஒரு பூத விரைவாக்கி.  அந்த வீரிய காந்தக் குழல்களில் 7000 டிரில்லியன் [(1 Trillion = 10^12) 1 followed by 12 Zeros] டிகிரி செல்ஸியஸ் உஷ்ணம் உண்டாக்கப் படுகிறது !  செர்ன் விரைவாக்கியை ஒரு பூத நுண்ணோக்கிக் கருவியாகப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், பிண்டத்தின் அணுவுக்குள்ளே அடங்கியுள்ள பரமாணுக்களின் அகிலத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக உளவு செய்து புதிய மூலத் துகள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

    unnamed (3)

    செர்ன் புரோட்டான் விரைவாக்கி

    1960 ஆண்டு முதல் விரைவாக்கி யந்திரங்களில் அணுவின் 12 மூலாதாரத் துகள்களைப் பற்றி விஞ்ஞானிகள் இதுவரை அறிந்துள்ளார்கள்.  அணுவின் உள்ளமைப்பு எளிதானது என்னும் பழைய பௌதிகக் கருத்துக்கு அவை எதிர்த்து நின்றன !  1961 இல் முர்ரே ஜெல்மன் (Murray Gellmann) 8 அடுக்கு வழியின் மூலம் அடிப்படைத் துகள்களின் கணிதச் சீரமைப்பை (Eightfold Way to Relate Particles by Mathematical Symmetry) எடுத்துக் கூறினார்.  அடுத்து தனியாக ஜியார்ஜ் ஸ்விக் என்பவர் (George Zweig) இன்னும் அடிப்படையான “குவார்க்ஸ்” போன்ற துகள்களைக் காட்டி, துகள்கள் சீரமைப்பை விளக்கினார்.  முதலில் மூன்று குவார்க்குகள்தான் உள்ளன என்று கூறினர்.  பிறகு 1974 இல் பர்டன் ரிக்டர் (Burton Richter) என்பவர் இரண்டு மைல் நீள “ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கியில்” (Stanford Liner Accelerator) நான்காவது குவார்க் கண்டுபிடிக்கப் பட்டது.  அதே சமயத்தில் ஸாமுவேல் திங் (Samuel Ting) என்பவரும் அதைக் கண்டுபிடித்தார்.

    1977 இல் ஃபெர்மி ஆய்வகத்தின் (Fermilab) லியான் லேடர்மான் (Leon Lederman) மிகக் கனமான ஐந்தாவது குவார்க்கைக் கண்டுபிடித்தார்.  அடுத்து 1984 இல் ஐரோப்பாவில் செர்ன் ஆய்வகத்தில் ஆறாவது குவார்க் காணப் பட்டது.  ஆறு குவார்க்குகள் மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் (Up, Down, Charm, Strange, Top & Bottom) என்று பெயரிடப் பட்டன.  அந்த ஆறு வகை குவர்க்குகள் மேலும் மூன்று நிறப் பிரிவில் “சிவப்பு, பச்சை, நீலம்” என்று கூறப்பட்டன.  முதல் நிலை மாதிரி அட்டவணையில் (Standard Model) மூலாதாரத் துகள்கள் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்கள், [ஹிக்ஸ் என்னும் ஆறாவது யூகிப்பு போஸான் பிறகு இணைந்தது).  பிறகு மூன்று இயக்க விசைகள் (Physical Forces).  குவார்க்குகள் கனமான அடிப்படைத் துகள்கள். லெப்டான் என்பவை பளு குன்றிய அடிப்படைத் துகள்கள்.  போஸான்கள் மூன்று வித விசைகளைக் (Strong & Weaker Nuclear Forces, Electromagnetic Forces) கொண்டு செல்பவை (Bosons are Force Carriers). (ஈர்ப்பு விசை இன்னும் சேர்க்கப் படவில்லை).  குளுவான் என்பது குவார்க்குகளைப் பிணைத்திருக்கும் பிசின்.  குவார்க்குகளும், லெப்டான்களும் ஃபெர்மியான்கள் (Fermions) என்று அழைக்கப் படுகின்றன.

    Particles -1

    (தொடரும்)

    https://youtu.be/BQR7Zl_saVo

    https://youtu.be/c-iCw8EnhSY

    +++++++++++++++++

     

     

     

     

    Image Credits : Scientific American (May 2003), National Geographic Magazine (May 1985)

    தகவல்:

    1.  Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2.  National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3.  National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4.  Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku  (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11  Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12  Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ”  By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13  Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan  (February 20, 2006)

    14. Cosmic Rays By : R.A. Mewaldt, California Institute of Technology (1996)

    15. National Geographic Magazine “Worlds Within The Atom” By :  John Boslough (May 1985)

    16. Cosmos Book By : Carl Sagan (1980)

    17.  Astronomy Facts on File Dictionay (1986)

    18. A Short History of Nearly Everything By : Bill Bryson (2003)

    19 Cosmic Radiation By : Wikipedia.

    20.  http://onlinelibrary.wiley.com/doi/10.1002/andp.201500146/full  [June 25, 2015]

    21. https://en.wikipedia.org/wiki/Cosmic_ray  [August 15, 2016]

    22.  http://www.pas.rochester.edu/~pavone/particle-www/particle_physics.html

    23. https://en.wikipedia.org/wiki/Particle_physics  [May 27, 2016]

    24.  https://en.wikipedia.org/wiki/Elementary_particle [July 25, 2016]
    *******************************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 28, 2016] [R-1]

    Attachments area
    Share
  • ’’குமாரசம்பவம்’’….!

    கிரேசி மோகன்
    ———————————————–

    பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
    உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
    தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
    விந்தை புரிந்தாய் வகுத்து….(66)

    ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
    காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
    ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
    வாழி விரிஞ்சன் விறல்….(67)

    காரணனே பாருக்கு, காரணம் பாராத
    பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
    தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
    இல்லை உமக்கிங்கே ஈடு….(68)

    தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
    காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
    தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
    ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)

    திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
    அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
    பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
    ஏராள மானஏ கா….(OR)
    ஏராளம் உந்தன் எடுப்பு….(70)

    ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
    ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
    செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
    பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ”என் காலைக் கடன் கேசவ்வால்
    வெண்பாவில் தொழும் (திரு)’’மாலைக் கடன்’’….!

    kesav

    தென்னிந்தியாவில் கண்ணன்….
    வட இந்தியாவில் கன்னையன்….
    எனக்கு கனன்யன்….!

    ”அனன்ய அனவரதன் ஆவிற்காய், ஆயர்
    மனன்யன் மனிதா பிமான -குணன்யன்
    தினம்என் கணினியில் தோன்றிடும், கேசவ்
    கனன்யன்(கன்னையன்)என் காலைக் கடன்’’….!கிரேசி மோகன்….!

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

    கிரேசி மோகன்

    ————————————————-
    lhvzi10806
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா-தனதான
    பொது
    ———
    “எங்கு துச்சம் தூய்மையா குதோ
    எங்கு மிச்சம் பூர்ணமா குதோ
    எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்;
    எங்கு சுத்தம் சோறுபோ டுதோ
    எங்கு பித்தம் ஆலவா யனார்
    நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே
    எங்கு சித்தம் ஏகமா குதோ
    எங்கு சத்தம் கீதையா குதோ
    எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட
    பொங்கு வெற்பு சோணைமீ திலே
    தங்கி சுத்த நானில்மூழ் கியே
    நின்ற நிட்டை ஞானநா யனார் -ரமணேசர்
    முங்கு புத்த வாவிவா சனாய்
    இங்கி ருக்க காளைவா கனார்
    பங்கு சக்தி சோதரா விடா -தருள்வாயே
    சங்கு சக்ர வாளும்கோ லுமாய்
    அம்பு விற்கை ஆளும்மா லனே
    பொன்பு விக்கு மாதுசே ரவே -புளிலேறி
    இங்கெ னக்கு யாவுமா கநீ,
    என்ப தைப்பு ஓயவே கமாய்
    மண்ப றித்த ஏனரூ பனே-வருவாயே
    வெஞ்சி றைக்குள் வாசுதே வனாய்
    வந்து தித்து வாழஆ யனாய்
    மண்கு தித்த நீலமே கமே -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • வீணில்லை அன்பு

    நிர்மலா ராகவன்

    “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!”

    “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?”

    `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான்.

    பரிதாபமாகத் தோற்றம் அளித்த அந்நிலையில் அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தாள். சிறு குழந்தை மாதிரி, சாப்பிடுவதற்கு அவன் முரண்டு பிடித்ததோ, மாத்திரை கொடுக்க வந்தவளை பிடித்துத் தள்ளியதோ பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

    `எப்படி இருந்தவர்!’ அழுகைதான் வந்தது.

    “ஹலோ, கலா! குட் மார்னிங்! எப்படி இருக்கே இன்னிக்கு?” மேலதிகாரி என்ற படாடோபம் இல்லாது, சத்யா வலிய வந்து, மரியாதை தவறாது சிறுகச் சிறுகப் பேசியதால்தானே அவள் மனதளவில் அவனுடன் நெருங்கிப் போனாள்!

    முதலில் எட்டடி தூரத்தில் நின்று உரையாடியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இரண்டடி தொலைவில் நின்று, தாழ்ந்த குரலில் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு முன்னேற ஓராண்டு பிடித்தது.

    அலுவலகப் பிரச்னைகள், சண்டை பூசல்கள், பிறகு டி,வி, பிடித்த இசையமைப்பாளர், பத்திரிகை என்று பொதுப்படையாக ஆரம்பித்த பேச்சு, மெள்ள மெள்ள அவரவர் குடும்பப் பின்னணி என்று முன்னேறியது.

    கலாவின் வாழ்வோடு பார்த்தபோது, தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பிரமிப்புதான் ஏற்பட்டது சத்யாவுக்கு.

    `எங்கப்பா குடிப்பாரு!’ என்று ஒரு நாள் ஆரம்பித்தவளை அலட்சியமாக இடைமறித்தான் சத்யா. `இங்க எவன்தான் குடிக்கலே? உலகத்திலேயே பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறது மலேசியாவிலேதான்னு பேப்பரிலே போட்டிருந்தாங்களே!’

    அப்பாதான் எப்படி அடிப்பார் அம்மாவையும், அவளையும்! அவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே இருவரும் மேசை அடியில் ஒளிந்துகொண்டதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

    எலிகள் செத்துக் கிடந்த ஏதோ மட்டமான சரக்கைக் குடித்ததன் விளைவாக பார்வையிழந்து, இப்போது கையாலாகாதவராக இருந்தாலும், அப்பா உண்டாக்கிய பாதிப்பு என்னவோ நீங்கவே இல்லை.

    இதையெல்லாம் சத்யாவிடம் சொல்லலாம் என்று தோன்றியது. சொன்னால், தன்னை மட்டமாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.

    தயங்கத் தயங்கி அவள் பேசியபோது, அக்கண்களையே உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு, அவளுடைய நான்கு வாக்கியங்களுக்கு ஒரே வாக்கியம் குரல் அதிராமல் அவன் பேசியபோது, அதுவே அவளுடைய நொந்த மனத்துக்கு அருமருந்தாக அமைந்தது.

    அவனுடன் பேசும் அந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கலா.

    `தன்னை எப்படியாவது வளைத்துப் போடுவதற்காகத்தான் இப்படி, தன் நலனில் அக்கறை உள்ளவர்போல் நடிக்கிறாரோ!’ இரவின் தனிமையில் அவனைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், தனக்குத்தானே சிரித்துக் கொண்டும் இருக்கும்போது, இப்படி ஒரு சந்தேகம் தலைகாட்டும்.

    `நாளையிலிருந்து வளவளவென்று பேசாது, ஒரு அளவோட பழகணும்!’ என்று முடிவெடுத்துக் கொள்வாள்.

    ஆனால், மறுநாள் அவனுடைய கண்களை, அதில் காணப்பட்ட கபடின்மையை, அன்பை உணர்கையில், தன்மேலேயே எரிச்சல் வரும் — இப்படி ஒரு பண்பாளரைத் தவறான நோக்குடன் எடைபோட்டதற்கு. அவளையும் அறியாமல், அவர்களது உறவு பலப்படும்.

    இரண்டு ஆண்டுகள் இவ்விதம் பழகிவிட்டு, `நம் இருவருக்கும்தான் ஒத்துப்போகிறதே! வாழ்நாளெல்லாம் இணைந்தால் என்ன?’ என்ற ஒரு கேள்வியைப் போட்டான் சத்யா. எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதிர்ச்சியாக இருந்தது கலாவிற்கு.

    தன் தாயின் அலங்கோலமான வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்துப்போய், தானாவது சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே இரவு பகலாக உழைத்துப் படித்து, வேலையிலும் அமர்ந்தாள்!

    அவளால் உடனே பதில் கூற முடியவில்லை. சத்யாவும் வற்புறுத்தவில்லை.

    இரண்டு மாதங்களுக்குப்பின் மீண்டும் அவன் அதே கேள்வியைச் சற்றுக் கெஞ்சலாகக் கேட்டபோதும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. `கல்யாணம், குடும்பம்னாலே பயமா இருக்கு, சத்யா!’ என்று உண்மையை ஒத்துக்கொண்டாள்.

    `நான் குடிக்கறதில்ல. ஆல்கொஹால் அலர்ஜி. கட்டினவளை அடிக்கவும் மாட்டேன்!’ என்று அவன் சிரித்தான்.

    ஆனால் அவள் கண்களில் நம்பிக்கை காணப்படவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், பயமாத்தான் இருக்கு!” என்றாள்.

    சற்று யோசித்து, `இப்படிச் செஞ்சா என்ன? ஒரு ஆறு மாசம் நாம்ப ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கலாம். அப்புறம் பார்ப்போம்!’ என்ற அவனுடைய திட்டத்தை கலா ஏற்றுக்கொண்டாள்.

    சில நாட்களிலேயே அவன் குரல் எங்கே கேட்டாலும் மனம் துடிக்க, அவள் பக்கமே திரும்பாது அவன் அவளைக் கடந்து போகையில், இருவருமே தமது படபடப்பை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தபோது, முதலில் வேடிக்கையாக இருந்தாலும், நாளடைவில் ஏக்கமாக மாறியது.

    இரண்டு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது அவளால்.

    அந்தச் சமயத்தில் அவள் தந்தை இறக்க, அவள் குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டு, எல்லா விஷயங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தான் சத்யா. அதன்பின், தங்கள் போட்டியின் முடிவைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை இருவருக்கும்.

    கல்யாணத்துக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தாம் இருக்கையில், ஒரு புதிய குழப்பம்!

    ஏன்தான் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததோ!

    இரவு பத்து மணிக்கு, ஒரு டோல் அருகே சத்யா பல கார்களுக்குப் பின்னால் காத்திருந்தபோது, இரண்டு பேர் அவனை வெளியில் இழுத்துப் போட்டு, அவனுடைய கைக்கடிகாரம், பர்ஸ், காரின் முன்னிருக்கையில் இருந்த மடிக்கணினி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதோடு நில்லாது, தலையில் பலமாகத் தாக்க, மூர்ச்சையடைந்தவன் கோமாவில் கிடந்தான் மாதக்கணக்கில்.

    ஒரு வழியாக, சத்யா மீண்டும் ஆபீசுக்கு வந்தபோது, அவனுடைய இடத்தில் சின் என்பவர் அமர்த்தப்பட்டு, அவனுக்குப் பெயரளவில் ஏதோ எளிதான வேலை கொடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தான்.

    எல்லாரும் தன்னைக் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.

    `உனக்கு மூளை கெட்டுவிட்டது!’ என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
    இதுவரைக்கும் குடும்பம், படிப்பு, காதல், எதிலும் ஒருவித குழப்பமும் இல்லாத வாழ்க்கை அமைந்ததெல்லாம் இப்படி ஒரு பேரிடியைத் தாங்க வேண்டும் என்பதற்காகத்தானா? மண்டைக்குள் எரிச்சல் உண்டாக, தலையே பிளந்துவிடுவதைப்போல ஒரு வலி.

    அந்தச் சமயத்தில்தானா சின்னுடைய அறையிலிருந்து கலா வெளியே வரவேண்டும்!

    தன் வேலையைப் பறித்ததும் இல்லாது, எதிர்கால வாழ்க்கையையே சூறையாடுவது என்றே எல்லாரும் தீர்மானித்துவிட்டார்களா?

    இந்த உலகத்தின் மேலேயே பொதுவாக ஆத்திரம் வந்தது.

    “ஏ கலா! `இவன் எப்படி தொலைவான்’னு காத்துக்கிட்டு இருந்திட்டு, என் தலை மறைஞ்சதும், இன்னொருத்தனை வளைச்சுப் போட்டுட்டியா?”

    அத்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்த்திராத கலா விக்கித்துப்போய் நின்றாள். அவள் கையிலிருந்த ஆவணங்கள் சிதறின. அவைகளைத் திரட்டக்கூட தோன்றாமல், அசையாமல் நின்றாள்.

    “மொதல்லேயே ஒனக்கு சிவப்பா, உயரமா இருக்கிற ஒருத்தனைக் கட்டிக்கணும்னு மனசுக்குள்ளே இருந்திருக்கு. அதனாலதானே என்னை அவ்வளவு தூரம் கெஞ்ச வெச்சே?”

    அவனுடைய கத்தல் அருகேயிருந்த மலாய், சீனர்களுக்குப் புரியாவிடினும், `காதலர்களுக்குள் ஏதோ தகறாறு!’ என்று அனைவரும் ஓடிவர, அவமானத்தால் சிறுத்த முகத்துடன், “இவருக்கு இன்னும் உடம்பு தேறவில்லை,” என்று ஆங்கிலத்தில், குரலே எழும்பாது மன்னிப்புக் கேட்டவள், அங்கிருந்து விரைந்தாள்.

    பகல் சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன்பாகவே எழுந்து, கலாவின் மேசைக்கருகில் தயங்கி நின்றான் சத்யா.

    அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். வேலை ஓடவில்லை.

    “சாப்பிடப் போகலாமா?” அவனது தாழ்ந்த, ஆழமான குரல் அவள் மனதைத் தொட்டது. அந்தக் கண்களில் தெரிந்த வேதனை அவளை என்னவோ செய்தது. தன்னையுமறியாமல் எழுந்தாள்.

    வழக்கம்போல் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுகையில், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அவ்வப்போது தன்மேல் நிலைத்ததை கலா உணர்ந்தாலும், அவளால் நிமிர முடியவில்லை. எந்த நிமிடமும் அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

    “கலா! என்னை விட்டுட்டுப் போயிட மாட்டியே?” கெஞ்சலாக ஒலித்த அவன் குரல் அவள் கண்களில் நீரை வரவழைத்தது.

    எவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள்! உடல் நெருங்கினால்தானா உறவு? `பிணைப்பு’ என்பது மனதைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

    எதுவும் சொல்லாமல் எழுந்துகொண்டாள். அவள் மனதில் ஓயாது எழும்பிய கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

    `கல்யாணமே வேண்டாம்!’ என்றிருந்தவள் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா?

    இப்போது, தாயின் வாழ்க்கையைப்போல தன்னுடையதும் ஆகிவிடுமோ?
    மூளை கலக்கம் அடைய எத்தனை வழிகள் இல்லை!

    குடித்தால்தான் கத்துவார்களா, அடிப்பார்களா, என்ன!

    இப்படியெல்லாம் அடுக்கடுக்காக யோசனைகள் வந்தபோதே, தன் சுயநலம் கலாவை வெட்க வைத்தது.

    முன்பெல்லாம் சத்யா எத்தனை வகைகளில் தனக்கு ஆதரவாக இருந்தார்! எதை எதிர்பார்த்து அப்படி நடந்துகொண்டார்?

    தான் அப்படி ஒன்றும் பிரமாதமான அழகி என்று அவள் நம்பத் தயாரில்லை. தானும்தான் அவரிடம் எதைப் பார்த்து மயங்கி, உறுதி குலைந்து, மணக்கச் சம்மதித்தோம்?

    அவனுடைய அதிக உயரமில்லாத உருவமும், கறுப்பில் சேர்த்தியான நிறமும் அவளை எங்கே பாதித்தது! உள்ளத்தையே ஊடுருவது போன்ற அந்தக் கண்களின் கூர்மையும், அவள் சிறிது மன அயர்ச்சி கொண்டிருந்தாலும் அதைக் குறிப்பாலேயே உணர்ந்து, உடனே அவள் பக்கம் விரையும் அவனது ஆண்மைத்தனமும்தானே, இயற்கையாகவே இன்னொருவரைச் சார்ந்து நிற்கவைக்கும் அவளுடைய பெண்மையை விழிக்கச் செய்தது?

    இது என்ன உணர்வு?

    எந்தப் பெயராக இருந்தால் என்ன!

    ஆனால், தங்கள் இருவரின் நிலையும் இப்போது தலைகீழாக மாறி இருப்பது என்னவோ விளங்கியது.

    சத்யாவுக்கு இப்போது பக்கபலம் அவசியம். தலையில் அடிபட்டால், இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சில சமயம், பத்தாண்டுகள்கூட பொறுக்க முடியாமல் வலிக்குமாமே! பாவம்! அதை எப்படித் தாங்கப் போகிறார்?

    ஜூர வேகத்தால் அழுது அமர்க்களம் செய்யும் குழந்தையை அதன் தாய் மடியில் கிடத்திக்கொண்டு, இரவெல்லாம் — தன் உறக்கம் கெடுவதை நினைத்தும் பாராது — அதற்கு ஆறுதலாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதில்லையா?

    குழந்தையாக இருந்தால் என்ன, கணவராக இருந்தால் என்ன! அன்பு செலுத்துவது என்று வந்துவிட்டால் அதில் யார், எவர் என்ற பேதம் ஏது!

    சத்யாவால் பழையபடி வேலைப் பளுவுக்கோ, அன்றாட வாழ்க்கையின் அவசரத்துக்கோ ஈடு கொடுக்க முடியாதுபோக, அதனால் பிறந்த ஆத்திரமே சிறுமை உணர்ச்சியாக மாறியிருக்கிறது என்று கலா புரிந்துகொண்டாள்.

    மூளையில் ஒரு பகுதியிலுள்ள அணுக்கள் அழிந்துவிட்டால், அவை திரும்ப தோன்ற முடியாது; ஆனால், வேறொரு பாகம் பழைய வேலைகளைச் செய்யப் பழகிவிடும் என்று அவள் படித்திருந்தாள்.

    இந்த வேளையில் சத்யாவுக்கு முக்கியமாக வேண்டியது அவருடைய உள்ளக் குமுறலைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தாது, தனது பலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு துணை.

    பிறருடைய நலனுக்காக நாம் செலவிடும் அன்போ, பணமோ, எதுவுமே வீணில்லை என்றுதான் கலாவுக்குத் தோன்றியது.

    “ஏம்மா? என்னோட வெளிர் மஞ்சள் புடவையை கஞ்சி போட அனுப்பியிருந்தேனே! வந்திடுச்சா?” என்று உரக்கக் கேட்டவள், `சத்யாவுக்கு அதில என்னைப் பாத்தா, எப்பவுமே சந்தோஷமா இருக்கும்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed
    அஷ்டாவக்ர கீதை, ரிபு கீதை போல் இது ‘’வானர கீதை’’….!

     

    வைகுண்டமும் விட்டதம்தான், அதில் உள்ள ‘’விஷ்ணுவே’’ உறிவெண்ணை….!

    ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
    விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
    கண்ணனுக்கு வானரம் கீதை உரைத்தது
    விண்ணிருக்கும் வைகுண்ட வாழ்வு’’….!
    (OR)
    ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
    விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
    கிட்டவந்து கைவல்ய கீதையைக் கூறியது
    கிட்டனுக்கு மேலே குரங்கு’’….கிரேசி மோகன்….!

    பாரதத் தேரில் தேரோட்டி கண்ணனுக்கு(கிட்டன்)
    மேலே கொடியில் குரங்கு(அனுமார்)…..!
    கைவல்ய கீதை-கைவெண்ணை கீதை….!

    Share
  • கிருஷ்ணகாளி

     

    கிரேசி மோகன்
    ———————-

    kali
    “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள்
    யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல்
    கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா
    மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்….
    Kannamma!

    Kali and Krishna are one and the same. Both names mean “Black”…

    Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple
    stands on a cremation ground associated with the great Kalighat Temple in Kolkata…G.KAMESHVAR….
    ‘

    The great Shakta saint, Ramaprasad sings:

    Mother with disheveled hair has world-charming beauty ;
    so I love Her black complexion …
    Black complexion is the life of Vrindavana ,
    Who makes the Gopis indifferent to the world!
    [Krishna] wearing a garland of wild flowers with a flute in
    hand becomes Kali with a sword …
    Prasada says, “When the knowledge of non-difference dawns,
    black forms blend with one another”
    *

    Arunachala!

    Lovely!

    Indeed kali and krishna are same. Shyama and shyam.

    Sarva deva namaskarah kesavam prati gachati

    Arunachala!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    கிஷ்கிந்தா மந்திகள் முன்பு ராமர் பாலத்திற்காய்(சேது பாலம்)
    மண்,கல் சுமந்தபோது, ஒரு அணிலும் மண்
    சுமந்தது….ராமர் அதன் முதுகில் பரிவாகப் பின்கோடிட்டார்….
    அன்னை மிரட்டலுக்கு பயந்தது போல் நடித்து,
    ‘’ராமனாய் வந்த கண்ணன் தன்னை அணிலின் அவதாரம்
    என்று சொல்லி அன்னையை ஏமாற்றுகிறான்….அதை நம்பாமல்
    யசோதை வாய்திறக்கச் சொல்ல அன்னைக்கு வாய்க்குள்
    அகிலத்தைக் காட்டியது கண்ணன் லீலை….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….!

    ”மந்திகோள் மாதாமுன் மூட்ட மணல்தெருச்
    சந்தியில் உண்டவன் சாகஸம்: -சந்திர
    வம்சத்தோன்(கண்ணன்) சூரிய வம்சத்து(ராமர்) சேதுவிற்காய்(சேது பாலம்)
    அம்ஸயித்த கண்ணன் அணில்’’….கிரேசி மோகன்….!

    அம்ஸயித்தல் -ஆண்டவனுக்கு உணவு அர்பணித்தல்….
    இவ்விடம் ஆண்டவனுக்கு(ராமருக்கு) ஆண்டவனே(கண்ணனே)
    அம்ஸயித்தல் பெரிய கடவுள் போல ‘’பெரிய பிரசாதம்’’….!யோசிக்க வைத்த
    ‘’கேசவ்வுக்கு” நன்றி….!

    Share
  • கண்ணன்

    ’’அய்யங்காரர்களுக்கு இன்று ஸ்ரீஜயந்தி….வைஷ்ணவ ஜனதோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’….!

    “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….

    crazy

    கண்ணன் திருப் புகழ்
    ————————–

    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….

    ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
    பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது….
    ‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ————————————————-
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)….கிரேசி மோகன்….!

    ———————————————————————-

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது!

    போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது இந்தவாரம் அதே செவ்வாய் இரவு தமது தேசத்தை நிலஅதிர்வு ஒரு உலுக்கு உலுக்கப் போகிறது என்பதை இத்தாலிய மத்தியப் பிரதேச மக்கள் அறிந்திருந்தார்களா என்ன? அதே போலப் போனவாரம் புதன்கிழமை வாழ்வைச் சகஜமாகக் கழித்த ஐந்து மிகவும் இளவயது ஆசிய இளைஞர்கள் இந்தப் புதன்கிழமை “கம்ப சாண்ட்ஸ் ” எனும் கடற்கரையில் தாம் நீந்திக் களித்திருக்கையில் உயிரிழக்கப் போகிறோம் என்று எண்ணியிருந்தார்களா என்ன?

    எத்தனையோ அழகாக எமது வாழ்வின் கனவுகளைச் சாதனைகளாக்கத் திட்டம் தீட்டி வைத்துள்ளோம். அதன் நிறைவேற்றங்களினால் நாமடையப் போகும் ஆனந்தம் எனப் பலவற்றைச் சிந்தித்து அதன் நினைவுகளில் மூழ்கியிருந்திருப்போம். ஒரேயொரு வினாடி நிகழ்வுகள் அவையனைத்தையும் தரைமட்டமாக்கி விடும் எனும் உண்மையை மட்டும் ஏனோ மறந்து போய்விடுகிறோம். உண்மையில், மறந்துதான் போகிறோமா ? இல்லை மறக்கிறோம் எனும் மாயையில் எம்மை மூழ்கடிக்கிறோமா?

    எனது நண்பர் ஒருவர் ஈழத்திலிருந்து இலண்டனுக்கு எழுபதுகளின் முடிவில் வந்தார். அவர் வரும்போது ஒன்றும் எனக்கு நண்பரல்ல. எனது நல்ல நண்பன் ஒருவனின் உறவினராக எனக்கு அறிமுகமானார். என்னைவிட வயதில் சில வருடங்கள் மூத்தவர்; காலநேரத்தின் விளைவாக இலண்டனில் ஒரு பணி தேடுவதற்காக என் உதவியை நாடினார். அவர் பணி தேடுவதற்காக இலண்டனில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். என்னுடைய ஓர் இனிய நண்பரானார்.

    மிகவும் கடினமான உழைப்பாளி. அதிகாலை முதல் இரவுவரைக் கடினமாக உழைக்கும் வல்லமை கொண்டவர். மனைவியையும் குழந்தைகளையும் ஈழத்தில் விட்டு விட்டுத் தான் பணிபுரிந்த வேலையையும் விட்டுத் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மிகவும் சிக்கலான தீர்மானம் எடுத்து இலண்டன் வந்திருந்தார்.

    தூரதிருஷ்டவசமாக அவருக்கு இலண்டனில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. பல சிக்கல்களுக்கிடையில் ஒருவாறு தனது மனைவி பிள்ளைகளையும் இலண்டன் தருவித்தார். அதற்காக அவர் எடுத்த சிக்கலான முயற்சிகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். மிகவும் சிரமப்பட்டு மூன்றுமுறைகள் தோல்வியுற்றும் தனது விடாமுயற்சியால் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.அங்கும் அவர் கடினமாக உழைக்கத் தவறவில்லை. தனக்காக ஒரு சிறு சுயதொழில் ஆரம்பித்துக் கடின உழைப்பால் முன்னேறித் தனக்குக் கீழ் கனேடிய மக்களை வைத்துத் தொழில் நடத்தும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தார். இன்று தனது மைந்தனையும், மகளையும் மிகவும் ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி மனைவியோடு தனது ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கழித்து வருகிறார்.

    எனது மற்றொரு நன்பன் ஏறத்தாழ நான் இலண்டனுக்கு வந்த சமயம் இலண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தவன். என்னைப் போலவே இந்த நாட்டையே தனது வாழ்வாதாரத்திற்கான நாடாக்கி வாழ்ந்து வந்தான். அவனும் மிகவும் கடினமாக உழைத்து 64 வயதை அடைந்ததும் அடுத்த வருடம் தனக்குக் கிடைக்கப் போகும் ஓய்வூதியத்துடன் தனது வாழ்நாளைத் தனக்குப் பிடித்த வகையில் கழிக்க விரும்பியவன். ஆனால் அந்தோ பரிதாபம்… ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில் மாபெரும் மாரடைப்புக்கு இலக்காகித் தனது கனவினை இழந்து விட்டான்.

    இவ்விருவர்களையும் நான் இங்கே குறிப்பிட்டதன் காரணம் காலதேவனின் மாற்றம் இவர்கள் இருவரினது வாழ்விலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அவர்கள் எதிர்பார்த்திருக்காததே!ஆயினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒற்றுமை இவர்கள் இருவருமே காலம் தமது திசையை மாற்றி விடக்கூடும் எனும் அச்சத்தினால் ஏதோ வாளாது இருந்தவர்கள் அல்ல. வாழ்வின் இடர்களை, அவை அவர்களின் மீது வீசிய சவால்களை எதிர்த்துப் போரிட்டவர்களே!

    இன்றிருப்போர் நாளை இருப்பது சந்தேகமே! ஆனால் அதற்காக நாம் எமது வாழ்வின் இலட்சியங்களை அலட்சியம் செய்து விடலாமா? முயற்சியைக் கைவிடலாமா? ஒருபோதும் இல்லை. அவ்விலட்சியங்கள் எம்மால் எட்டப்படக்கூடிய யதார்த்தமான இலட்சியங்களாக இருக்குமேயானால். மட்டுமே!

    இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்தப்பாகத்திலும் எத்தகைய வழியிலும் பதவியையும், பணத்தையும் சம்பாதித்து விடலாம் என்பதே பலரிடம் காணக்கூடிய தன்மையாக உள்ளது.அதற்கு அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும், அச்சமுதாயத்தில் எத்தகையவர்கள் அவர்களுக்கு வெற்றி பெற்ற முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே உள்ளது. இது சாதாரண வியாபாரியிலிருந்து , மிகப்பெரிய அரசியல்வாதிகள்வரை காணப்படும் தன்மையாக உள்ளது. இதற்குத் தனிமனிதர்களாகிய நாம் எவ்விதத்திலும் பொறுப்பானவர்கள் இல்லை என்று சொல்வது மாபெரும் தவறாகும்.

    ஒவ்வொரு தனிமனிதனுடைய அபிலாஷைகளுமே ஒரு சமுதாயத்தின் நடைமுறையின் முதுகெலும்பாகிறது. சமுதாயத்தின் போக்கே அச்சமுதாயத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளை உருவாக்குகிறது. சமுதாயத்தின் தேவைகளின் தன்மையே அச்சமுதாயத்தின் வியாபாரிகளுக்கு அடிப்படை மூலதனமாகிறது. எம்மால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள், எமது தேவைகளின் அடிப்படையில் எம்மிடமிருந்து பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் இவர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வெறும் பார்வையாளர்களாக நாம் நடக்கும் வரை, இத்தகைய நிலைமைகள் மாறப் போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து கொள்வோமானால் ஒரு புத்தம் புதியதோர் உலகம் உருவாகும் சாத்தியம் உண்டு.

    எதற்காக இந்தத் திடீர் அலசல் என்று கேட்கிறீர்களா ? நாம் நினைப்பதும், இங்கு நடப்பதும் வேறு என்பதும் இவ்வுலக நிர்ணயம் என்பது நிலையற்றது என்பதும் எவ்வளவு உண்மையோ நாம் வாழும் காலம் வரை உழைப்பில் கடினமும், உள்ளத்தில் நேர்மையும், அடுத்தவரை நோக்கிய எமது பார்வையில் மனிதாபிமானமும் கலந்திருக்குமேயானால் எம் ஒவ்வொருவருடைய வாழ்வும் இந்நிலையற்ற உலகில் நிலைபெற்று நிலைத்திருக்கும் என்பதினை உங்களோடு சேர்த்து எனக்கும் சத்தமாய்ச் சொல்லிக் கொள்வதற்கே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    ***

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  •   ஆறுமுகன் அருட்பா (இரண்டாம் பகுதி )

    க. பாலசுப்பிரமணியன்

    Aarumugavelan-2

    11

    வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும்

    வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும்

    வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும்

    வள்ளியின் காதல் கனியே !

    12.

    கனியே ! கரும்பே ! கலைகளின் கருவே  !

    குவலயம் அறியா கலைஞனின் உருவே !

    குருவாய் நின்று அருளிய அறிவே !

    காத்திட வருவாய் இனிதே !

    13.

    இனிதே  இனிதே சேவடி ஆட்சி

    இனிதே இனிதே வேலின் மாட்சி

    இனிதே இனிதே கந்தனின் காட்சி

    இனிதே கண்டவர் விழியே !

    14

    விழியும் கூர்மை வேலும் கூர்மை

    மதியும்  கூர்மை கூற்றுவன் கூரிடும்;

    கதியென வந்தோர் விதியினை மாற்றி

    நிதியென வளர்ந்திடும்  குமரா!

    15.

    குமரா!  முருகா!  மாலனின் மருகா !

    குன்றுகள் தோறும் நின்றிடும் அழகா!

    கூவிடும் சேவல் கொடியினை  ஏந்தி

    குறைகளைத் தீர்க்கும் கோனே !

    16.

    கோனாய் பிறப்பினும் குடிலினில் வாழ்ந்தும்

    கோலங்கள் கலைந்திடக் குன்றிடும் வாழ்வில்

    கூட்டினில் நின்ற கூற்றுவன் அழைப்பை

    கூரிட வருவதும் வேலே !

    17

    வேலுடை வேந்தா! விழி தந்த மைந்தா!

    விரும்பியே அழைத்தேன் விரைவில் வருவாய் !

    வேதத்தின் பொருளே, வீரத்தின் வடிவே

    வினைகள் தீர்க்கும் வித்தே!

    18.

    வித்தும் நீயே , வரும்விளைவும் நீயே!

    விடியல் கதிரின் வெப்பச் சுடரே !

    விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் தேவே

    விழிகள் தேடிடும் தேடலே !

     

    19.

    தேடிய உள்ளத்தில் தேனாய் இனிப்பாய்

    தேங்கிய வாழ்வைத் தேராய் இழுப்பாய்

    தேவர்கள் போற்றிடும் தெய்வத் திருவே

    திருவருள் தீராக்  கருணைக்கடலே !

    20

    கடலின் அலைகளாய் ஆசைகள் பொங்கிட

    காலத்தின் கைகளில் கதறிடும் மனத்தைக்

    காக்கும் தெய்வமே ! கலியுக மருந்தே !

    காத்திடு கந்தா ! போற்றினேன் !

    Share
  • சுகவனம் 3

     

    -இன்னம்பூரான்

     

    sukavanam

     

    மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

    1. சுகவனம் 2-இல் கூறப்பட்டது.
    2. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில் இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
    3. Eat Well: உணவே மருந்து. அதைத் தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
    4. Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாசாரத்தில் அது ஒரு அங்கம் வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடித் தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகைக் கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாகக் கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
    5. Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சுயமரபுகள் முட்டுக்கட்டை போட்டாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
    6. Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்கப் பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. எனது மனநிறைவுடன் இயங்கும் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
    7. Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
    8. Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததைச் செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்தத் தொடரில் இறங்கியது போல.
    9. Accept who you are: ஒருவர்போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி…‘விடுதலைப் புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளைக் கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதைக் காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
    10. Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாகப் பேசப்படும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg

    Mental Health Foundation Copyright © 2016.

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine

    Share
  • கண்ணா! மணிவண்ணா!

    பவள சங்கரி

    9683172469_b013279de8_z

    கண்ணா! மணிவண்ணா! தத்துவஞான ஒளியே!
    மாயமாய் மனதினூடே ஒளிருமணியே!
    சேயே யானுனை நெஞ்சாரத் தழுவிடவே
    சேவடியைத் தொழுதிடவே வாடாயென் மன்னா!

    கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
    நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
    கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
    கொல்லெந்தன் பாவம்யாவும் பரம்பொருளோனே!

    ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
    தரணிகாப்போன் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
    பைம்பொழில் மாதவனே பரிதவிக்கும் ஏழையெனை
    கடைக்கண்ணால் பார்த்தருளுமய்யா!

    Share
  • வாழ்வே இதுதான்!

     

     

    பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

    மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு

    —————————————————————————————

     

    வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்

    இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)

            காலை ஒளியும் மாலை இருளும் (2)

            உறவும் முறிவும் வருமே மாறியே              (வாழ்வே)

     

     

            சுற்றம் என்ன சூழல் என்ன

                    நிலையானதாகுமோ (2)

            சொந்தம் என்ன பந்தம் என்ன

                    செல்லாமலே நில்லுமோ?

                            ஒரு நாள் இன்பம் ஒரு நாள் துன்பம்

                            மாறாதே இக் கோலம்              (வாழ்வே)

     

     

            கன்னி என்ன காதல் என்ன

                    வண்ணமெல்லாம் மாறுமே             (கன்னி)

            பாசம் என்ன நேசம் என்ன

                    வந்து பின்னே போகுமே

                            ஒரு நாள் இங்கே ஒரு நாள் அங்கே

                            எங்கே எந்தன் வீடும்                (வாழ்வே)

     

    —————————————————————————-

    mani

    In 1996 I did a water-colour painting of a tribal woman.
    It was displayed in an art exhibition.
    A doctor from Germany, who was visiting Canada, 
    bought the painting from me.
    Fortunately I have a photograph of the painting.
     
     

     

    Our life is in constant flux. No one can stop the changes taking place in the body. And old age is inevitable. But there is light at the end of the tunnel!

    R.S.Mani

    Share
  • இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்

    Earthquake Location 2016 August


    Image 2016 Aug

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
     fig-1-italy-earthquake-disasterபூமித்தாய் குலுக்கித்
    தோள சைத்தாள் ! இடிந்து
    தாமாக வீழ்ந்தன
    மாளிகைகள் !
    தரை மட்ட மாகின
    கட்டடங்கள் !
    சட்டென மக்கள்
    சடலமாய்ப்  புதைந்தார் !
    கடற்தட்டு கால் உதைத்தால்
    படை யெடுக்கும் சுனாமி அலைகள்  !
    அடித்தட்டு தொடை அசைந்தால்
    இடித்திடும் அதிர்வுகள் !
    நிலம்நடுங்கி
    நடனமிடும்  புவித்தளம் !
    குடற் தட்டு கூத்தாடி
    உடல் நடுங்கும், உயிர் நசுங்கும் !
    நிலையாமை மெய்யாகும் !

    ++++++++++++++++

    Image 2016 Aug -1

    Image 2016 Aug -2

    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும்
    தொல்லை யப்பா !
    மனிதப் பிறவிக்குப்
    பாதுகாப்பகம்
    ஏதுவும்
    இல்லை யப்பா  !
    சூழ்வெளி மட்டும்
    மாசோ  டில்லை யப்பா !
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் மண்டி
    ஊர்ந்து செல்லும்
    புற்று நோய்க ளப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயக் கோரம் உலகெங்கும்
    அரங்கே றுதப்பா !

    +++++++++


    Image 2016 Aug -3

    Image 2016 Aug -4

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]



    Image 2016 Aug -5

    Image 2016 Aug -6

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற்செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் அயராது அதன் கரம் !
    உலுக்கி உலுக்கி மீண்டும் உலுக்க வரும் !

    புதிய உமர் கையாம்


    Image 2016 Aug -7
    Image 2016 Aug -8

    Image 2016 Aug -9

    fig-1c-earthquake-death-zones1

    இத்தாலிய நாட்டின் மத்தியப் பகுதியில் மாபெரும் பூகம்பம்

    2009 ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய இத்தாலியில் ரோமாபுரிக்கு 60 மைல் (100 கி.மீ) தூரத்தில் உள்ள லாகுயிலா (L’Aquila) என்னும் நகரில் (5.8 – 6.3) ரிக்டர் அளவுப் பூகம்ப அதிர்ச்சிகள் நள்ளிரவில் ஏற்பட்டுக் கட்டடங்கள் தகர்ந்து தூங்கிக் கொண்டிருத்த மக்கள் பலர் மீண்டும் எழ முடியாமல் மாண்டு போயினர் !  இல்லங்களை இழந்தோர் 28,000 (?) பேர் என்றும் 18,000 பேர் தற்காலியக் கூடாரங்களில் குடியுள்ளார் என்றும் சுமார் 10,000 பேர் கடற்புற விடுதிகளில் தங்கி இருக்கிறார் என்று அறியப்படுகிறது.  இறந்தவர் எண்ணிக்கை 280 (ஏப்ரல் 9) என்றும், காண இயலாமல் இன்னும் தகர்ந்த கட்டடங் களுக்குள் புதைந்து போனர் எத்தனை பேர் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடமாய் இருந்து வருகிறது !  மாண்டவரில் பெரும்பாலோர் 13 ஆம் நூற்றாண்டு மலைச்சிகர நகரமான லாகுயிலா பகுதியைச் (ஜனத்தொகை : 70,000) சேர்ந்தவர்கள்.

    aj

    இடிந்த இல்லங்களின் எண்ணிக்கை 3000 முதல் 10,000 வரை இருக்கலாம்  ! காயமடைந்தோர் எண்ணிக்கைச் சுமார் 1500 என்று கணிக்கப் படுகிறது.  முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய இந்த பூகம்பத்தால் பல்வேறு இல்லங்கள், மாளிகைகள், சரித்திரப் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்கள் பல இடிந்து வீழ்ந்தன.  இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி (Sivio Berlusconi) 2009 நிதிமுடக்கக் காலத்து நெருக்கடி யால் அபாயத் தேவைக்குப் பணக்கடன் தேடி அலைந்தார் !  இத்தாலியின் மற்ற இடங்களில் பணிபுரியும் மருத்துவ டாக்டர்களும் பணிப்பெண் நர்ஸ்களும் லாகுயிலா நகர்ப் பகுதிக்கு அழைக்கப் பட்டார் !  அதே சமயம் அவரது அரசாங்கம் பெயர்ச்சி அடைந்த மக்கள் நிவாரணப் பணிகளுக்கு 30 மில்லியன் ஈரோ உதவி நிதியை (40.6 மில்லியன் டாலர்) அளிக்கும் என்றும் அறிவித்தார்.  அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகள் புரிய 1000 இராணுவப் படையினரை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

    fig-1b-the-faulty-tectonic-plates-under-italy

    இத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

    1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் !  2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம்.  காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை !  இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன !  லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின !  லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன !  அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.

    நிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது.  பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது.  இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்).  முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின.  அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன !  அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.

    fig-2-earthquake-force-in-tnt

    காப்பாற்றப்பட்டோர் விபரங்களில் சில விந்தையானவை !

    1.  முப்பது மணி நேரங்கள் அடைப்பட்டுப் பிழைத்துக் கொண்ட 98 வயதான ஒரு கிழவி லகுயிலாவில் காப்பாற்றப்பட்டு வெளியே கொண்டுவரப் பட்டார்.

    2.  நான்கு மாணவர் தகர்ந்து போன பல்கலைக் கழக விடுதிகளில் ஒன்றில் அடைபட்டுக் கிடந்ததை தீயணைப்புப் படையினர் கண்டுபிடித்தார்.  ஆனால் அவர்கள் உயிருடன் மீட்கப் பட்டாரே அல்லது மாண்டு போனாரா என்பது தெரியவில்லை.

    3.  22 மணி நேரங்கள் இடிந்த கட்டடத்தில் முடங்கிப் போன 23 வயது மாணவன் ஒருவன் உயிருடன் மீட்கப் பட்டான் !

    4.  லாகுயிலா மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் நீர் வசதி முழுவதும் நிறுத்த மடைந்தது !

    fig-1e-italian-zone-tectonic-plates-movements

    இத்தாலியில் பூகம்பம் எழுப்பும் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள்

    (Plate Tectonics Faults)

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட வில்லை !  எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து முன்னெச்சரிக்கை  இப்போது செய்ய முடிகிறது ! ஆனல் பூகம்பக் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள வேண்டும் !

    fig-1e-seismic-sensors

    மாபெரும் அட்லாண்டிக் கடலின் விளிம்பில் அடித்தட்டுகள் ஒன்றின் கீழ் ஒன்று புகுந்து அழிக்கப் பட்டதால் (Subduction) மேற்கு மத்திய தரைக்கடல் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள் (Plate Tectonics Faults) மிகவும் சிக்கலாகப் போய் விட்டன !  ஆ·பிரிக்கா ஐரோப்பா ஆகிய இரண்டின் அடித்தட்டுகள் ஒருபோக்கில் ஒருங்கே நகர்வது அதற்கொரு காரணம் !  கடந்த 40 மில்லியன் ஆண்டுகளாக அப்பகுதியின் கடல் அடித்தட்டு யாவும் “பின் வளைவுப் பரவலில்” (Back-Arc Spreading) உண்டானவை !  காரணம் படத்தில் செந்நிறத்தில் காணப்படும் கோடு ஸிசிலி மூலமாகச் சென்று வட ஆ·பிரிக்காவில் முடிந்து மோதிக் கொள்ளும் அரங்கம் (Collision Zone) ஐரோப்பாவுக்கு அப்பால் தென்புறம் நோக்கிச் செல்கிறது !  ஆதலால் அந்த அடுத்தட்டுகள் அகண்ட அரங்குகளில் மோதுவதாகத் தோன்றினாலும் பொதுவாக அவை இத்தாலியின் உட்புற நிகழ்ச்சியாகவே பாதிக்கின்றன.

    fig-3-plate-tectonics-in-north-america

    இத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது.  மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது.  அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது.  மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன.  பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன !

    fig-4-the-himalayan-fault-line

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    fig-5-the-indian-plate-monitoring-satellite

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்!

    fig-5-indo-eurasian-plate-movements

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது!  இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    major-earthquakes-1

    தகவல்:

    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)
    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Scismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/scismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
    (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html(Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html(Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html(Major Earthquake in Iran)
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html(Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9.  Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)

    14. https://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Italy  [August 24, 2016]

    Share