Blog

  • ’’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்
    ———————————

     

    ”தேவர்கள் பிரம்மனைத் துதித்தல்’’….!
    ————————————————————————-

    காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
    சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
    அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
    சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….

    விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
    தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
    அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
    குயவன் களிமண் கரம்….(73)

    யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
    தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
    தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
    நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)

    வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
    சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
    ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
    பேசப் புகுந்தான் பதில்….(75)

    வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
    போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
    நான்கு முகத்தினால் நான்கு முகமாக
    வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)

    வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
    அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
    கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
    வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….கிரேசி மோகன்….

    ‘’பிரம்ம விசாரணை’’
    —————————————-
    காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
    மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
    கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
    பாட்டன் எனக்குப் பகர்….(78)

    விருத்திரன் மாய வரைகள் சாய
    நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
    வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
    குச்சியாய் ஆனதேன் கோன்….(79)

    மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
    தன்திறம் விட்டுத் தவழ்வதேன்-உன்தரப்பு- காரணம என்னவோ கார்முகில் காவலா
    வாருணா கூறுவாய் விட்டு….(80)

    சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
    அபார கதாயுதம் அற்ற -குபேரா
    கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
    களையிழந்தீர் கூறும் கலி….(81)

    துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
    கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
    தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
    படியாம் எமனேன் பயம்….(82).

    வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
    கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
    சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
    வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….கிரேசி மோகன்….!

    Share
  • காத்துவிட வருவீரா !

     எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக

    சாரத்தை நிறைத்தவரே

    பாருக்கு வேராகி பக்குவத்தை

    ஊருக்கு உரைத்தவரே

    ஞானத்தின் திருவுருவே வாழ்வில்

    மோனத்தைக் கண்டவரே

    நால் வேதத்தை உள்வாங்கி

    நல்வாழ்வுக்கு அளித்தவரே !

     

    பாரதத்தாய்  ஈன்றெடுத்த பண்புளமே

    பார்வியக்க பலபகன்ற பகலவரே

    ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே

    உண்மையினை உணரத் துடித்தவரே

    சீரான குருதேடித் திருந்தவரே

    சிறப்புடனே உபதேசம் பெற்றவரே

    பாரைவிட்டு விரைவாக சென்றவரே

    பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா !

     

    சமயநெறி அத்தனையும் பார்த்துவிட்டு

    சரியான நெறிதேர்ந்து சொன்னவரே

    சராசரி சாமியார் தமைவெறுத்து

    சன்மார்க்க தொண்டனாய் நின்றவரே

    உலகினுக்கு புதுக்கருத்தை உரைத்தவரே

    ஒவ்வாத அத்தனையும் வெறுத்தவரே

    நிலவுலகில் நிலையாக நிலைத்தவரே

    நீழ்புவியை காத்துவிட  வருவீரா !

    Share
  • சுகவனம் 5

    இன்னம்பூரான்
    29 08 2016

     

    sukavanam 5

     

    ‘சுகவனம்’ தொடரின் முதல் ஐந்து பதிவுகள் ஒரு அறிமுகத்தொடர் என்க. ஐந்தாவது ‘புள்ளி வைத்து அடிக்கும்’ ரகம். புள்ளியியல் துறை குறி வைத்தபடி பணி செய்தால், உண்மை சவுக்கடி போல் வெளிவரும். பொய்ச்சான்றுகள் கூற, அதே புள்ளியியலை துஷ்பிரயோகம் செய்வது எளிது. மெத்த கெட்டிக்காரர்கள், புள்ளி விவரத்தைத் தாமதம் செய்து அளித்து, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்க முயல்வதும் உண்டு.

    இந்தியமக்களின் சுகவனம் பொருட்டான புள்ளி விவரங்கள் பத்து வருடங்களுக்கு பிறகு 2013-14 வரையான காலகட்டத்துக்கு இந்த வாரம் வெளியிடப்பட்டன. அவையாவன:

    1. 2013-14 வது வருடம் மக்களின் சுகவனத்துக்குச் செலவிடப்பட்ட5 லக்ஷம் கோடி ரூபாய், ஜிடிபியின் 4% மட்டுமே;
    2. நமது தேசீயச் சுகாதாரக் கோட்பாடே, இது போதாது, உலகெங்கும் 5-6% செலவிடப்படுகிறது என்கிறது;
    3. அதுவும் பெரும்பாலும் அரசு செலவு என்று ஒப்புக்கொள்கிறது;
    4. அந்த5 லக்ஷம் கோடி ரூபாயில் 93% தற்காலச் செலவுக்கும், 7% முதலீடுகளுக்கும் செலவாயின;
    5. அதிர்வு தரும் புள்ளி விவரம் யாதெனில்: மற்ற நாடுகளைப்போல் இல்லாமல், ஏழையோ, பாழையோ, செல்வந்தரோ, அவரவர்கள் செய்யும் கைவிட்டு செய்யும் செலவு 69%;
    6. மேற்படி ஆதாரம் மிகுந்த புள்ளி விவரங்கள் படைத்தவர்களில் ஒருவரான டாக்டர் சக்திவேல் செல்வராஜ், இந்த தண்டச் செலவை பற்றி அதிகம் கவலைப்பட்டு, மியான்மரைத் தவிர, வேறு எங்கும் இந்த நிலை தென்படுவதில்லை என்கிறார்;
    7. இதற்கு அடிப்படைக் காரணம், அரசின் மெத்தனம், கருமித்தனம்: 1.15% தானே அவர்கள் செய்யும் செலவு;
    8. அதை அதிகப்படுத்துவது சிக்கல் அவிழ்க்காது; தேவை இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது;
    9. சரி. இவ்வாறு செலவு செய்த பணம் எங்கு போகிறது என்று கேட்டால்: மருந்துக்கடைக்கு7%, 21% தனியார் ஆஸ்பத்திரிகள், 9.9% அரசு மருத்துவமனைகள், 6.7% மருத்துவப் பரிசோதனைகளில்:
    10. சுகாதாரத்துறையில் வருமுன் காப்போன் திட்டங்கள் மிகவும் பலன் அளிப்பவை. ஆனால், அவற்றுக்காக6% மட்டுமே அரசு செலவு செய்கிறது;
    11. நோயாளிகளை அழைத்து செல்லும் வாஹனம் வகையில்5% மட்டுமே செலவு; அதாவது மக்கள் தன் கையிலிருந்து செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது;
    12. சுத்திகரிப்பும், பரிசுத்தமான குடிநீரும் சுகவனத்தின் அஸ்திவாரம்; ஆனால், அந்தச் செலவை பற்றி இங்கு பேச்சில்லை.

    முகவுரைத் தொடர் முற்றிற்று. பிற பின்னர்.

    ***

    உதவியது:

    “http://www.thehindu.com/eae-logger/Logger?rt=1&ctxId=1721&pubId=4&cat=&objId=9042742&title=Health+in+India%3a+Where+the+money+comes+from+and+where+it+goes%3f&url=news%2c2016-08-28+15%3a33%3a26.0%2chttp%3a%2f%2fwww.thehindu.com%2fdata%2fsamarth-bansal-on-health-finance-health-in-india-where-the-money-comes-from-and-where-it-goes%2farticle9042742.ece&type=article&meta=ns

    ***

    சித்திரத்துக்கு நன்றி:

    http://media.newindianexpress.com/Report.JPG/2014/07/18/article2335955.ece/binary/original/Report.JPG

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • அவனவன் வாழ்க்கை

    ரா.பார்த்தசாரதி

     

    மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?

    வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,

    ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,

    சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

     

    பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமாலையா, மரணமாலையா?

    அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,

    மணமாலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது

    மரணமாலையானால் மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

     

    மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான்

    மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான்

    மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான்

    மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

     

    மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?

    மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?

    அவன் பிறந்த ஜாதகத்தினால் விதி  கணிக்கப்படுகிறதா ?

    அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

     

     

    Share
  • மகனும் தாயும்

    ரா.பார்த்தசாரதி

     

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்

    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்

    உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய்

    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்

    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

    உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்

    என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் !

    உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்

    உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !

    நான் தவறு செய்தாலும் என்னிடம் அன்புடன் நேசிக்கும்

    நீயே  எனது கண்கண்ட தெய்வமாகும் !

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”காவென்(று) அடைக்கலம் கொள்ளுது கன்றுகள்
    கோவிந்தன் கைகளால் கோதிட: -பூவொன்றின்
    பக்கத்(து) இலைகளாய் பசுங்கன்று கள்முளைத்து
    சொர்கத்தில் சேரும் சுகம்’’….கிரேசி மோகன்….!

    கா- காத்தல்….!
    பஜ கோவிந்தம்….
    —————————–

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….

    வேறு
    ——-

    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….!கிரேசி மோகன்….!

     

    கேசவ்வின் இந்த ஓவியம் பார்க்கையில் ஏனோ ‘’பொறந்தாத்து’’ சமேதராய்(பலரார்-சுபத்ரா) ஜகன்னாத் புரியில்(பூரி என்று பாடலுக்காக வைத்துள்ளேன்) எழுந்தளியிருக்கும் கண்ணன் நினைவு வந்தது….!கண்ணன் & அண்ணா பலராமர் & தங்கை சுபத்ரா(இரண்டு கன்றுகளாய்) சமேத ‘’பெருமாள் திருப்புகழ்’’….!

    தனனதன தானதத்த தனனதன தானதத்த
    தனனதன தானதத்த -தனதான

    பூரி ஜகன்னாதர்
    ——————–
    “மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க
    மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
    அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
    உளமதனில் நானகற்றி -உயர்வாக
    அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
    கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
    பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
    கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
    பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
    நடனமிடு காளியத்து -விடராசா
    மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
    கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
    ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
    சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
    ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
    ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து
    வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த
    குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர்
    மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்….

    மார்ஜரம் -பூனை(பூனைக்க்குட்டி ந்யாயம்-அம்மா பாத்துப்பா….!
    மற்கடம் -குரங்கு(குரங்க்குக் குட்டி ந்யாயம்-கிளை தாவுகையில் நீதான்(குரங்குக்குட்டி அம்மாவைப் பிடித்தவண்ணம் உன்னைப் பாத்துக்கணும்….!)
    மற்கடத்துக்கே(குரங்கு) மார்ஜரம்(பூனை) மால்….!

    மார்ஜர, மற்கட ந்யாயம் ஆச்சார்யாள் அருள் வாக்கு படித்து விட்டு அப்பாலே எழுதுகிறேன்….!

     

    மனம் ஒரு குரங்கு….!
    —————————————-
    ”தாய்ப்பூனை கண்ணாநீ தோளிரெண்டைக் கவ்விச்சென்(று)
    ஆய்க்குடி யில்காவல் ஆட்படுத்து, -பேய்க்குடி(குடித்தனம்)
    பாழகந்தை பூமியில், கூழாட்பட் டானேன்பொய்,
    வாழ்விக்க வாயாத வா’’….!கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து

    (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)

    முனைவர்.சுபாஷிணி

    உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

    as1

    ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.

    as2

    அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.

    as3

    புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    as4

    இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

    as5

    இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (19)

    நிர்மலா ராகவன்

    சிரிப்புத்தான் வருகுதையா!

    நலம்-1-2-2

    `சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி.

    `பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி.

    `பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை.

    `எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள்.

    இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி `ஹாஹ்ஹா` என்று சிரிக்கிறார்கள் இவர்கள்.
    `எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம்.

    என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. `இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை.

    ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ — கேட்கவே வேண்டாம்!

    மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன்.

    “திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்!

    அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள்.

    `துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்?

    தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே!

    வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் அவை காட்டுகின்றன.

    பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா?

    பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி.

    `அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், `அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள்.

    பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி.

    சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி:

    “அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும்.

    மலாய்க்கார முதியவர் ஆமென்றார்.

    “உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு.

    “நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல).

    “எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!”
    சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்க சிரித்தோம்.

    “எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர்.

    “உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார்.

    “ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது.

    சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, `நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா.

    சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது!

    சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் தேவை. (சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று தசைகள்). மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே!

    தொடருவோம்

    Share
  • சுகவனம் 4

    இன்னம்பூரான்
    28 08 2016

     

    ematharman

     

    ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன.

    அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ!’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ?

    சுகாதாரப் பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்டத்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

    குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர்தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமானப் பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாகச் சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

    அதிகாரிகள் டெங்கு எதிர்பாராதபோது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாகப் பரிசுத்தப் பயணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களைக் கவனமாகக் காய்ச்சல் செய்தி கிடைக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

    பொன்னேரியிலும் இதே கதிதான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு தெய்வமே துணை.

    இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்தபோது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலைமறைந்தவுடன், பிடுங்கப்பட்டன!

    ***

    Printable version | Aug 28, 2016 8:17:29 PM | http://www.thehindu.com/news/cities/chennai/fever-in-tiruvallur-the-why-and-the-how/article9040905.ece
    © The Hindu

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-jD1u-OrKXAc/TvOVp9UFQiI/AAAAAAAAHOY/BWZHbYMCnzc/s1600/ematharm+an.jpg

    ***

    Chittoor: Expressing serious concern over ill-functioning of government and corporate hospitals, Chairman of Public Accounts Committee (PAC) of AP Legislature B Rajendranath said that his panel would review the functioning of the government hospitals.

    Speaking to the media at Roads and Buildings Guest House here on Wednesday, Rajendranath said that a report would be submitted to the government after ascertaining facts about the government hospitals. He stated that Chief Minister N Chandrababu Naidu has a strategy for ensuring effective functioning of government hospitals.

    Rajendranath said that the government has proposed to construct the super specialty hospitals in the State and the PAC panel would seek public opinion in this regard. “The quality of medical services in government hospitals has been coming down due to various reasons despite allocating huge funds in the budget,” he opined. He stressed on the need for strengthening government and private hospitals in the State.

    He stated that the PAC would also examine the Comptroller and Auditor General (CAG) report of 2013-14 to know about utilization of funds for construction of the government hospitals and the maintenance of the medical institutions. He asked private hospitals to be accountable while providing medical services to the people.

    The PAC panel members, MLA Chevireddy Bhaskar Reddy and others were present. It is learnt that the proposed PAC meeting with the district officials slated on Wednesday was cancelled as they were assigned duties for Krishna Pushkaralu.

    http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-08-24/Public-Accounts-Committee-to-review-functioning-of-government-hospitals/250294#.

    http://images.elections.in/political-corner/2014/04/Role-of-Public-Accounts-Committee-in-India.jpg

    ***

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -42

    க. பாலசுப்பிரமணியன்

    இளமையில் கல் – ஏன் ?

    education

    கற்றல் – புரிதல் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில கருத்துக்களும் கோட்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் மறுக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மூளையில் கற்றல் நிகழ்வு ஏற்படும் செயல்கள் புதிதாகவும், சில நேரங்களில் மிக விந்தையாகவும் அறியப்பட்டுள்ளன.

    மைகேல் மெர்ஸினிச் (Micheal Merzenich) என்ற மூளை- நரம்பியல் விஞ்ஞானி இந்த ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வம் காட்டியவர். ஒரு முறை ஒரு உயிரின் வளரும் மூளையில், கற்றல் என்னும் நிகழ்வு  எவ்வாறு நடைபெறுகின்றது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டபொழுது, ஒரு பூனையை ஆராய்ச்சியின் மையப் பொருளாக எடுத்துக்கொண்டார். அந்தப் பூனையின் கண்களிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எவ்வாறு பார்வையில் இருக்கும் பொருள்களின் உள்ளீட்டுக்களை மூளைக்கு அனுப்புகின்றன; மற்றும் மூளை அவைகளை எவ்வாறு அறிந்துகொள்கிறது,  தக்கவைத்துக்கொள்கின்றது என்று ஆராய்ந்தார். அவ்வமயம் அதன் வலது கண்ணினிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் தங்கள் பதிவுகளை ஓரிடத்திலும், இடது கண்ணினிலிருந்து செல்லும் நரம்புகள் மற்றோர் இடத்திலும் பதிவு செய்தாலும் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொருளையும் கருத்துக்களையும் உருவாக்குவதை அறிந்தார். உடனே, அந்தப் பூனையின் இடது கண்ணை மூடி ஊசியால் தைத்துவிட்டு, ஒளிக்கதிர்கள் செல்லாதவாறு நிறுத்திவிட்டு அப்போது மூளையில் அந்தக் கண்ணைலிருந்து வரும் ஒளிக்கதிர்களை பதிவு இடத்தில்  என்று ஆராய்ந்தார்.  அவருக்கு ஒருஅதிசயம்    காத்திருந்தது !

    அந்த ஒளிக்கதிர்களை தக்கவைக்கும் மூளையின் பகுதிக்கு இப்போது வலது கண்ணின் ஒளிக்கதிர்கள்  கொண்டிருந்தன. சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பூனையின் இடது கண் முழுவதுமாகப் பார்வையை இழந்ததால் அந்தகே கண்ணின் ஒளிக்கதிர்களுக்குப் பதில் வலது கண்ணின் கதிர்களை அது பதிவு செய்து சிறப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

    தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அவர் ஒவ்வொரு மூளையிலும் ஒவ்வொரு தனிப்பட்ட கற்றலுக்கு ஒரு சிறப்பான கற்றல் பகுதி (Crtical Learning Area ) இருப்பதாகவும், அது உபயோகத்தில் இல்லாவிட்டால் அது  பலமிழந்து விடுவதாகவும் அறிந்தார். ஆகவே இளம் வயதில் கற்கப்படுபவை நினைவில் அதிகமாக இருப்பதையும் திறனுள்ள கற்றலாக அமைவதையும் சுட்டிக்காட்டினார். “இளமையில் கல் ” வெறும் பழமொழியாக இல்லாமல் அறிவியல் மூலமாகவும் உண்மையுள்ள கருத்தாக அமைகின்றது.

    இந்தக் கருத்தை மேலும் ஆராய்ந்த  கல்வி  ஆய்வாளர்கள் ஒருவர் இளம் வயதில் கற்கும் தாய் மொழி (Mother Tongue) எவ்வாறு ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெறுகிறது என்றும், அதன் வல்லமை எவ்வாறு ஒளிர்கிறது என்றும் விளக்கினர். இதனால் தான் இரண்டாம் மொழியாக (Second language ) மற்றொரு மொழியை வயது முதிர்ந்தபின் கற்றுக்கொள்ளும் பொழுது அதில் குறைந்த திறனும் வல்லமையும், மற்றும் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போன்று பேசமுடியாத நிலையும் உண்டாகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினர். ஆகவே இளம் வயதில் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில்  சங்கடங்கள் மிகக் குறைவு.

    “If two languages are learned at the same time, during the critical period, both get a foothold. Brain scans, says Merzenich, show that in a bilingual child all the sounds of its two languages share a single large map, a library of sounds from both languages. ‘

    அது மட்டுமல்ல .. நீதிக்கருத்துக்கள்,  வாழ்க்கை நெறிகள் ஆகியவையும் இளம் வயதில் கற்றுக்கொள்ளும் பொழுது அவை மனதில் ஆழப்பதிந்து உள்ளூட்டத்தையும் மேம்பட்ட சிந்தனைகளையும் தருகின்றன. I

    இதைப் பற்றி நார்மன் டோய்ட்ஜ் , என்ற மற்றொரு -உளவியல்- நரம்பியல் வல்லுனரின் கருத்துக்கள் இதோ :

    “நம்மில் பலரும் மூளையை ஏதோ ஒரு பாத்திரத்தைப் போல கருதுகிறோம்; தேவைப் பட்ட பொழுது அதனுள் பொருள்களை வைப்பதுபோல்.கருத்துக்களை வைக்கலாம்  என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு கெட்ட பழக்கம் நமக்கு ஏற்படும் பொழுது, அது நமது மூளையில் தனக்கென ஒரு வரைபடத்தைத் தயாரித்து வைத்துக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றி சிந்திக்கும்பொழுது அந்த வரைபடம் வலுப்பெற்று விடுகிறது. அந்தக் கற்றலை மூளையின் வலைத்தளத்திலிருந்து நீக்குவது மிகவும் கடினமான செயல். ஆகவேதான், குழந்தைகளுக்கு இளமையில் கற்றல் அதிக முக்கியயத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. கெட்ட பழக்கங்கள் முந்திக்கொண்டு நல்ல பழக்கங்களுக்குள்ள இடத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக. “

    Most of us think of the brain as a container and learning as putting something in it. When we try to break a bad habit,  it takes over a brain map  and each time we repeat it, it claims more control of that map and prevents the use of that space for “good habits” That is why “unlearning” is often more harder than learning and why child education is so important – it is best to get it right early, before the “bad habit” gets a competitive advantage.  (Dr. Norman Doidge)

    மூளையின் கற்றல் திறன்களின் ஆராய்ச்சியின்படி இளம்பிராயத்தில் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு மொழிகளை சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இவைகளில் தாய் மொழிக்குத்தான் கற்றலில் என்றும் முன்னுரிமை அளித்தல் அவசியம்.

    (வளரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(135)

    –செண்பக ஜெகதீசன்

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து            
    மாண்ட வுஞற்றி லவர்.   (திருக்குறள்-607: மடியின்மை)

     புதுக் கவிதையில்…

    சோம்பலில் சுகம் கண்டு,
    செய்யும் கடமையில்
    முயற்சியற்றவர்கள்,
    பிறர்
    இடித்துரைக்கும்
    இழிசொல் கேட்கும் நிலையடைவர்…! 

    குறும்பாவில்…

    செயலில் முயற்சியிலாது
    சோம்பியிருப்போர், பிறர்
    இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்…! 

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலில் முயற்சியின்றிச்
    -சோம்பல் தன்னில் சுகங்காணும்
    பொய்யாம் வாழ்வை வாழ்வோர்கள்,
    -புவியில் வாழும் காலமட்டும்
    மெய்யாய் மற்றோர் இடித்துரைத்தே
    -மிகவும் கொடிதாய் இழிசொல்லைப்
    பெய்யும் மழைபோல் பேசுகின்ற
    -பாழாம் நிலையை அடைவாரே…! 

    லிமரைக்கூ…

    சோம்பலில்லா முயற்சிவேண்டும் செயலில்,
    இடித்துரைப்பார் பலரும், சோம்பியிருப்போர்
    இன்னலுறுவர் இழிசொல்லாம் புயலில்…! 

    கிராமிய பாணியில்…

    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத,
    செய்யணும்செய்யணும் செயலச்செய்யணும்
    முயற்சியோடச் செயலச்செய்யணும்…
    சோம்பலால செயலச்செய்யாதவன்
    எல்லாருக்கும் எளச்சவனாவான்,
    ஏளனப்பேச்சிக்கு ஆளாவான்
    ஏல்லாருக்கும் கீழாவான்… 

    அதால,
    சோம்பல்படாத சோம்பல்படாத
    செய்யும்செயலுல சோம்பல்படாத…! 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 77-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் உருவான இந்தப் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    mom and child

     

    வைத்தகண் வாங்காமல் அன்னையை நோக்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் வசியப் பார்வை நெஞ்சைக் கொள்ளையிடுகின்றது.

    இயற்கையின் படைப்புக்களில் ’master piece’ என்று சொல்லத்தக்க உச்சப் படைப்பு, குதலைமொழி பேசிக் குவலயத்தை மயக்கும் குழந்தையே அல்லவா?

    இவ்வழகிய  புகைப்படத்திற்குத் தம் எண்ணதூரிகை கொண்டு நம் கவிஞர்குழாம் தீட்டியிருக்கும் கவிதை ஓவியங்களை இரசித்துவருவோம் இனி!

    ***

    ’காலம் மாறலாம்…கொண்ட கோலம் மாறலாம்; தாயன்பு என்றும் மாறாது தரணியிலே’ என்பதைத் தன் கவிதையில் அழகாக உணர்த்துகின்றார் முனைவர். பா. பத்மபிரியா.

    காத்திருக்கும் அன்னை மடி
    ஒளி விழியால்
    ஓராயிரம் கதை பேசும்
    கனியமுதே!
    நெஞ்சில் உலா வரும்
    பௌர்ணமியே!
    அந்திமேவும் ஆதவனின் செந்நிறமே!
    தந்தி மீட்டிடும் யாழிசையே!
    தத்தித் தாவும் தாரகையே!
    தாய்மடி தேடும் ஓவியமே!
    […]
    கார்பிரேட் கம்பெனிகளும்
    கரன்ஸி நோட்டுகளும்
    செல்லப்பிள்ளை வளர்ப்பில்
    செய்து வைத்த சூனியத்தால்
    தாலாட்டு பாட நேரமில்ல – நீ
    தாய்மடி தூங்க யோகமில்ல
    அலுவலக வேலைக்காக
    விடிகாலை சென்றவளுக்கு
    வடிகாலாய் உன் சிரிப்பு
    வேலைப் பளுவிலே
    மனதை பலூனாய் மாற்றும்
    வித்தையடி உன்நினைவு
    கொசுவஞ் சேல கட்டினாலும்
    ஜீன்ஸில் உடை மாறினாலும்
    தாய்மை மாறாது
    தாயன்பும் மாறாது
    காலம் மாறினாலும்
    கோலம் மாறினாலும்
    காத்திருக்கும் அன்னை மடி
    கண்மணியே உனக்காக
    ஆராரோ பாட்டுடனே…

    ***

    ’பிள்ளையின் முத்துச்சிரிப்புக்கும், மனங்கரைக்கும் அழுகைக்கும் காரணமறிந்தவள் அன்னை ஒருத்திதான்! அதனால் அவளே மானுடர்க்குக் கண்கண்ட முதல்தெய்வம்’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அன்னை அறிவாள் பிள்ளைமொழி
    அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
    சின்ன வயதில் செய்யும்பல
    சேட்டை யெல்லாம் அறிவதுடன்
    பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
    பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
    அன்னை யென்பவள் அதனால்தான்
    அறியும் முதலாம் தெய்வமாமே…!

    ***

    மடியில் தவழும் நிலவைப் பிரிந்து மடிக்கணினியோடு போராடவேண்டிய பணிச்சுமையைக் குறித்து வேதனையோடு விளம்பும் அன்னையைக் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பார்த்தாயா உன் அன்னையின்
    பரிதாபத்தை
    பகலெல்லாம் கணினிதான்
    அலுவலக வேலையால்
    என் மடியில்
    இரவுதான் நீ நிலவைப்போல்
    என் மடியில்தவழமுடிகிறது
    வேலையையும் விட முடியவில்லை
    வேதனையும் தீர்வதில்லை
    பொருளாதார சிக்கலினால்
    சோதனையை சகிக்கிறேன்
    உன் புன்னகை ஒன்று போதும்
    என் இன்னல்கள் மறைந்தே போகும்
    […]
    உன்னையும் என்னையும்
    பிரிப்பது வேலை வேலையை
    பிரியமுடியாதது ஒன்றேஎன் கவலை
    மழலைக்கு ஈடான சொர்க்கம் இல்லை
    மகனே நீ வந்தாய் சொர்க்கத்தை காட்ட

    ***

    தாயின் பெருமையைத் தரணிக்குப் புகலும் அற்புதக் குழந்தையைத் தன் கவிதையில் காட்டுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்!

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
    உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்!
    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய்!உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
    என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும்!உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
    உனது மூச்சே எனக்கு அடைக்கலம்! 
    தவறு செய்தாலும் என்னை அன்புடன் நேசிக்கும் 
    தாயே,   நீயே  என் கண்கண்ட தெய்வம்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்து அறிமுகப்படுத்துகிறேன்!

    ”…மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே”
    என்கிறது புறநானூறு. மன்பதையிலுள்ள செல்வங்களெல்லாம் ’குறுகுறு நடந்து சிறுகை நீட்டும்’ குழந்தைக்கு ஈடாமோ?

    ”முந்தித் தவமிருந்து முந்நூறு நாள்சுமந்து பெற்ற பிள்ளையிது என்றும் சாதி மத பேதமின்றி  அனைவர்க்கும் குழலாய் யாழாய் அதனினும் இனிதாய் ஒலிப்பது குழந்தையின் கனிமொழியே” என்றும் பிள்ளைத்தமிழ் பாடும் கவிதை ஒன்று!

    தாயாகி விட்டேன்
    நீ என்னுள் பிரவேசித்த அன்றே
    பிரசவம் வரை காத்திருக்க வில்லை…
    […]

    தாய்மையை உணர‌
    இறைவனும் இந்நாட்டில் தாயுமானான்
    வாரி அணைத்து உச்சி முகர‌
    எட்டினேன் இமயத்தின் உச்சிதனை
    நான் மட்டும் உணரவில்லை – இதனை
    பாரதியும் பாவலர்களும் பாடியுள்ளனர் 

    குழந்தை மட்டுமல்ல நீயெனக்கு
    குல குருவும்தான்
    கற்றுத்தருகிறாய்
    கல்லூரியில் கற்காத பல கல்வியைப்
    பிரிந்தும் பிரியாமல் உன் உதடுகள்
    உதிர்க்கும் மோகனப் புன்னகை
    இறைவன் உனக்களித்த வரம்! 

    மொழி தேவையில்லை
    உன்னுடன் பேச‌
    சாதி சமயம் நிறம் மொழி எல்லை கடந்தது
    உன் மொழி எல்லோருக்கும் புரியும் மொழி
    உலகம் உய்ய ஒற்றுமையை வளர்க்க‌
    உன்னால்தான் முடியும்

    கருணையை கற்க‌
    தாய்மையை கொடுத்தானோ இறைவன்?
    […]

    நான் உனக்கு மட்டும் தாயல்ல‌
    காணும் எல்லா உயிருக்கும் தாய்தான்
    மாரில் பால் மட்டும் வழியவில்லை
    கருணையும்தான் இன்று வழிகிறது
    காணும் எல்லா உயிரும் என் குழந்தைகளே

    பெண்மையில் புதைந்த தாய்மை
    பெற்ற பரிசு கருணையே என்றதனை
    புரிய வைத்தாய் நீயெனக்கு…

    தாய்மையின் தூய்மையை வாய்மையோடு பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமதி. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 221

    -மலர்சபா

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல்

    கண்ணகியின் ஏவலின்படி
    தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது;
    காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக்palace in fire
    கோட்டை வாயிலை விட்டு நீங்கினர்.
    அரசர்க்கெல்லாம் அரசன்
    பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன்
    தன் தவற்றால் வளைந்த செங்கோலைத்
    தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான்.

    பெரிய நிலமகளுக்குத்
    தன் செங்கோல் நலம் காட்ட,
    கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன்
    அரியணையிலேயே இறந்தான்.

    அரசனும் அரசியும் மாண்டதை அறியாமல்
    ஆசான், தலைமைச் சோதிடன்,
    அறக்களத்தின் தலைவன், ஓலை எழுதுபவர்,
    அரண்மனைப் பணியாளர்,
    வளையல் அணிந்த பணி மகளிர் அனைவரும்
    அதிர்ச்சியுற்றுப் பேச்சு வராமல்
    ஓவியமாய் வரையப்பட்ட
    அரசியல் மாந்தரைப் போல்
    செய்வதறியாது நின்றனர்.

    மன்னவன் கோவிலில் தீயைக் கண்டு காவலர் முதலியோர் நீங்குதல்

    அங்குசம் ஏந்தும் யானைப்பாகரும்
    விரைந்து தேரை ஓட்டிச் செல்லும் தேர்ப்பாகரும்
    வீரவாள் ஏந்தும் மறவரும்
    அரசரின் அரண்மனையில் தீயைக் கண்டு,
    தீக்கான உண்மைக் காரணத்தை அறியாமல்
    வேறு காரணம் என நினைத்து,
    அதனை அறிவிக்க வாயிலில் கூட்டமாய் நின்றனர்.

     

     

    Share
  • நிதானம் என்பது நிழலாய்!

    மணி முத்து

    அதிகாலை 6மணி, ஒருவழியாக அடித்துப்பிடித்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து விட்டேன். அதிகாலை வேளையை ரசித்தப்படி பயணித்துக் கொண்டிருந்தேன் சுற்றுச்சூழலையும் மறந்து நானும் ஒரு பயணியாக. என்னுடனே இயற்கையும் பயணித்துக் கொண்டிருந்தது என்னைவிட வேகமாக பின்னோக்கி.

    அப்போதுதான், அந்த சத்தம் என்னை மட்டுமல்ல பேருந்திலிருந்த எல்லோரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. திடீரென அந்த தனியார் பேருந்து வேகமாக ஒரு திருப்பத்தில் திரும்ப, ஓரமாக வந்த இரு சக்கர மோட்டார் வாகனத்தைக் கவனிக்காமல் அடித்துத் தூக்கியது.

    ஒருவரை இரத்தக்காயத்துடன் பார்த்தபோதுதான், என்னுள் இருந்த தைரியசாலி காணாமல் போனதை முதன் முதலில் உணர்ந்தேன்.

    அதைவிட அதிர்ச்சி என்னவென்றால், ஓட்டுநர் சட்டையை மாற்றிக்கொண்டு அவசரமாக இறங்கி ஒடியது. ஒருவேளை அவரும், என்னைப்போலத்தானோ என்னவோ அல்லது மாட்டிக் கொள்வோம் என்ற பயமா, எதுவான போதிலும் அது எனக்கு சரியாகப் படவில்லை.

    பேருந்திலிருந்த ஒருசில பயணிகள் அந்த இளைஞனுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மனிதநேயம் இன்னும் நம் உலகில் வாழ்கிற உண்மை புரிந்தது. மற்ற பயணிகள் எல்லாம் அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினர்.

    அது நெடுஞ்சாலை என்பதால், வந்த எல்லாப் பேருந்துகளுமே அடைத்தபடி வர, மூன்று மணிநேர தாமதத்திற்குப் பிறகு இறுதி ஆளாக ஒரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றேன்.

    அன்றைய வகுப்பு ஆய்வரங்கில் சொதப்பியதும், முக்கியமான வகுப்பை தாமதமாகச் சென்று தவறவிட்டதும், என எதுவுமே என்னில் பதியவில்லை. காலை நிகழ்வு, அந்த ஓட்டுநர் அப்படி பொறுப்பில்லாமல் சென்றது, அடிபட்டவருக்கு என்ன ஆனதோ என்று எல்லா நினைவுகளும் என்னைத் தூங்கவிடமால் செய்தது.

    அடுத்தநாள் விடியும் வரை காத்திருந்து அனைத்து நாளிதழ்களையும் புரட்டினேன் கடவுளை வேண்டியபடி, எங்கேனும் அந்த செய்தி இருக்கிறதாவென்று, ஆனால் அப்படி எதுவும் கண்ணில் படவில்லை. அதுவே ஒரு பொய்யான திருப்தி எனக்கு, அந்த இளைஞனுக்கு எதுவும் ஆகவில்லை என.

    லேசாக மன ஆறுதல் அடைய, நாளிதழை மூடியபோது, அக்கா மகன் “Slow and Steady win the Race” என்பதன் பொருள் கேட்டான், அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டு, தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, முயல், ஆமை கதையைச் சொல்லத் தொடங்கினேன். அவனுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான். ஏனென்றால், என் அகராதியில் கூட நிதானம் என்ற இடம் அதுவரை வெறுமையாய்தான் இருந்தது.

    Share