அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69
தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து
(நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)
முனைவர்.சுபாஷிணி
உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.
ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.
அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.
புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.