நலம் .. நலமறிய ஆவல் .. (19)
நிர்மலா ராகவன்
சிரிப்புத்தான் வருகுதையா!
`சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி.
`பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி.
`பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை.
`எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள்.
இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி `ஹாஹ்ஹா` என்று சிரிக்கிறார்கள் இவர்கள்.
`எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம்.
என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. `இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை.
ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ — கேட்கவே வேண்டாம்!
மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன்.
“திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்!
அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள்.
`துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்?
தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே!
வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் அவை காட்டுகின்றன.
பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா?
பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி.
`அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், `அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள்.
பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி.
சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி:
“அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும்.
மலாய்க்கார முதியவர் ஆமென்றார்.
“உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு.
“நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல).
“எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!”
சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்க சிரித்தோம்.
“எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர்.
“உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார்.
“ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது.
சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, `நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா.
சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது!
சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் தேவை. (சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று தசைகள்). மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே!
தொடருவோம்