-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் உருவான இந்தப் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

mom and child

 

வைத்தகண் வாங்காமல் அன்னையை நோக்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் வசியப் பார்வை நெஞ்சைக் கொள்ளையிடுகின்றது.

இயற்கையின் படைப்புக்களில் ’master piece’ என்று சொல்லத்தக்க உச்சப் படைப்பு, குதலைமொழி பேசிக் குவலயத்தை மயக்கும் குழந்தையே அல்லவா?

இவ்வழகிய  புகைப்படத்திற்குத் தம் எண்ணதூரிகை கொண்டு நம் கவிஞர்குழாம் தீட்டியிருக்கும் கவிதை ஓவியங்களை இரசித்துவருவோம் இனி!

***

’காலம் மாறலாம்…கொண்ட கோலம் மாறலாம்; தாயன்பு என்றும் மாறாது தரணியிலே’ என்பதைத் தன் கவிதையில் அழகாக உணர்த்துகின்றார் முனைவர். பா. பத்மபிரியா.

காத்திருக்கும் அன்னை மடி
ஒளி விழியால்
ஓராயிரம் கதை பேசும்
கனியமுதே!
நெஞ்சில் உலா வரும்
பௌர்ணமியே!
அந்திமேவும் ஆதவனின் செந்நிறமே!
தந்தி மீட்டிடும் யாழிசையே!
தத்தித் தாவும் தாரகையே!
தாய்மடி தேடும் ஓவியமே!
[…]
கார்பிரேட் கம்பெனிகளும்
கரன்ஸி நோட்டுகளும்
செல்லப்பிள்ளை வளர்ப்பில்
செய்து வைத்த சூனியத்தால்
தாலாட்டு பாட நேரமில்ல – நீ
தாய்மடி தூங்க யோகமில்ல
அலுவலக வேலைக்காக
விடிகாலை சென்றவளுக்கு
வடிகாலாய் உன் சிரிப்பு
வேலைப் பளுவிலே
மனதை பலூனாய் மாற்றும்
வித்தையடி உன்நினைவு
கொசுவஞ் சேல கட்டினாலும்
ஜீன்ஸில் உடை மாறினாலும்
தாய்மை மாறாது
தாயன்பும் மாறாது
காலம் மாறினாலும்
கோலம் மாறினாலும்
காத்திருக்கும் அன்னை மடி
கண்மணியே உனக்காக
ஆராரோ பாட்டுடனே…

***

’பிள்ளையின் முத்துச்சிரிப்புக்கும், மனங்கரைக்கும் அழுகைக்கும் காரணமறிந்தவள் அன்னை ஒருத்திதான்! அதனால் அவளே மானுடர்க்குக் கண்கண்ட முதல்தெய்வம்’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

அன்னை அறிவாள் பிள்ளைமொழி
அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
சின்ன வயதில் செய்யும்பல
சேட்டை யெல்லாம் அறிவதுடன்
பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
அன்னை யென்பவள் அதனால்தான்
அறியும் முதலாம் தெய்வமாமே…!

***

மடியில் தவழும் நிலவைப் பிரிந்து மடிக்கணினியோடு போராடவேண்டிய பணிச்சுமையைக் குறித்து வேதனையோடு விளம்பும் அன்னையைக் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

பார்த்தாயா உன் அன்னையின்
பரிதாபத்தை
பகலெல்லாம் கணினிதான்
அலுவலக வேலையால்
என் மடியில்
இரவுதான் நீ நிலவைப்போல்
என் மடியில்தவழமுடிகிறது
வேலையையும் விட முடியவில்லை
வேதனையும் தீர்வதில்லை
பொருளாதார சிக்கலினால்
சோதனையை சகிக்கிறேன்
உன் புன்னகை ஒன்று போதும்
என் இன்னல்கள் மறைந்தே போகும்
[…]
உன்னையும் என்னையும்
பிரிப்பது வேலை வேலையை
பிரியமுடியாதது ஒன்றேஎன் கவலை
மழலைக்கு ஈடான சொர்க்கம் இல்லை
மகனே நீ வந்தாய் சொர்க்கத்தை காட்ட

***

தாயின் பெருமையைத் தரணிக்குப் புகலும் அற்புதக் குழந்தையைத் தன் கவிதையில் காட்டுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்!

எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்!
தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய்!உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும்!உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
உனது மூச்சே எனக்கு அடைக்கலம்! 
தவறு செய்தாலும் என்னை அன்புடன் நேசிக்கும் 
தாயே,   நீயே  என் கண்கண்ட தெய்வம்!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்து அறிமுகப்படுத்துகிறேன்!

”…மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே”
என்கிறது புறநானூறு. மன்பதையிலுள்ள செல்வங்களெல்லாம் ’குறுகுறு நடந்து சிறுகை நீட்டும்’ குழந்தைக்கு ஈடாமோ?

”முந்தித் தவமிருந்து முந்நூறு நாள்சுமந்து பெற்ற பிள்ளையிது என்றும் சாதி மத பேதமின்றி  அனைவர்க்கும் குழலாய் யாழாய் அதனினும் இனிதாய் ஒலிப்பது குழந்தையின் கனிமொழியே” என்றும் பிள்ளைத்தமிழ் பாடும் கவிதை ஒன்று!

தாயாகி விட்டேன்
நீ என்னுள் பிரவேசித்த அன்றே
பிரசவம் வரை காத்திருக்க வில்லை
[…]

தாய்மையை உணர
இறைவனும் இந்நாட்டில் தாயுமானான்
வாரி அணைத்து உச்சி முகர
எட்டினேன் இமயத்தின் உச்சிதனை
நான் மட்டும் உணரவில்லை இதனை
பாரதியும் பாவலர்களும் பாடியுள்ளனர் 

குழந்தை மட்டுமல்ல நீயெனக்கு
குல குருவும்தான்
கற்றுத்தருகிறாய்
கல்லூரியில் கற்காத பல கல்வியைப்
பிரிந்தும் பிரியாமல் உன் உதடுகள்
உதிர்க்கும் மோகனப் புன்னகை
இறைவன் உனக்களித்த வரம்! 

மொழி தேவையில்லை
உன்னுடன் பேச
சாதி சமயம் நிறம் மொழி எல்லை கடந்தது
உன் மொழி எல்லோருக்கும் புரியும் மொழி
உலகம் உய்ய ஒற்றுமையை வளர்க்க
உன்னால்தான் முடியும்

கருணையை கற்க
தாய்மையை கொடுத்தானோ இறைவன்?
[…]

நான் உனக்கு மட்டும் தாயல்ல
காணும் எல்லா உயிருக்கும் தாய்தான்
மாரில் பால் மட்டும் வழியவில்லை
கருணையும்தான் இன்று வழிகிறது
காணும் எல்லா உயிரும் என் குழந்தைகளே

பெண்மையில் புதைந்த தாய்மை
பெற்ற பரிசு கருணையே என்றதனை
புரிய வைத்தாய் நீயெனக்கு…

தாய்மையின் தூய்மையை வாய்மையோடு பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமதி. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *