’’குமார சம்பவம்’’….!
கிரேசி மோகன்
———————————
”தேவர்கள் பிரம்மனைத் துதித்தல்’’….!
————————————————————————-
காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….
விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
குயவன் களிமண் கரம்….(73)
யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)
வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
பேசப் புகுந்தான் பதில்….(75)
வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
நான்கு முகத்தினால் நான்கு முகமாக
வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)
வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….கிரேசி மோகன்….
‘’பிரம்ம விசாரணை’’
—————————————-
காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
பாட்டன் எனக்குப் பகர்….(78)
விருத்திரன் மாய வரைகள் சாய
நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
குச்சியாய் ஆனதேன் கோன்….(79)
மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
தன்திறம் விட்டுத் தவழ்வதேன்-உன்தரப்பு- காரணம என்னவோ கார்முகில் காவலா
வாருணா கூறுவாய் விட்டு….(80)
சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
அபார கதாயுதம் அற்ற -குபேரா
கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
களையிழந்தீர் கூறும் கலி….(81)
துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
படியாம் எமனேன் பயம்….(82).
வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….கிரேசி மோகன்….!