கிரேசி மோகன்
———————————————–

பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
விந்தை புரிந்தாய் வகுத்து….(66)

ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
வாழி விரிஞ்சன் விறல்….(67)

காரணனே பாருக்கு, காரணம் பாராத
பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
இல்லை உமக்கிங்கே ஈடு….(68)

தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)

திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
ஏராள மானஏ கா….(OR)
ஏராளம் உந்தன் எடுப்பு….(70)

ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *