Blog

  • பழந்தமிழக வரலாறு – 7

    பாலன் நாச்சிமுத்து

     

    பண்டைய தக்காண அரசுகள்

                 (சாதவாகனர்களும் காரவேலனும்)

    சாதவாகனர்:

            அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

         டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

    மொழிபெயர் தேயம்:

        தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

    கலிங்க மன்னன் காரவேலன்:

               கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

    Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

    Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

     Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

    11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

    13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

    பித்துண்டா நகரம்:

          “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

        மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

         சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

         அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

         பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

         நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

    பார்வை:

    1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

    2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

    3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

    5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது…..!

    ”நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா
    ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக்
    கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க்
    கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    விண்டனன் ஓங்கார விஷ்ணு…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    Share
  • என்றும் இளமையோடு!

    ’’இடுக்கண் வருங்கால் இளிக்காய், துவர்க்கும்
    கடுக்காயை உண்ண இடர்போம் -படுக்கையில்
    இஞ்சி அளவு இரப்பையில் சேர்கடுக்காய்
    கஞ்சியின் கல்லும் கனி’’….கிரேசி மோகன்…..!

     

     

    என்றும் இளமையோடு வாழ#திருமூலர் கூறும் எளிய வழி!

     

    நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில்,

    #உஷ்ணம், #காற்று, #நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

    உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

    நமது தேகத்தை நீட்டித்து,ஆயுளை விருத்தி செய்ய

    திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

    ஒருவனுடைய உடல், மனம்,ஆன்மா ஆகிய மூன்றையும்

    தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

    கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

    தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய

    அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

    “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது

    என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

    கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம்

    வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

    கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

    நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

    எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

    நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

    துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

    ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து

    பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

    பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

    அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால்,

    நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான

    அளவில் பெற்று வரலாம்.

    கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

    கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு,

    நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்

    சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

    கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

    #கண் பார்வைக் கோளாறுகள்,

    #காதுகேளாமை,

    #சுவையின்மை,

    #பித்த நோய்கள்,

    #வாய்ப்புண்,

    #நாக்குப்புண்,

    #மூக்குப்புண்,

    #தொண்டைப்புண்,

    #இரைப்பைப்புண்,

    #குடற்புண்,

    #ஆசனப்புண்,

    #அக்கி, #தேமல், #படை,

    #தோல் நோய்கள்,

    உடல் உஷ்ணம்,

    வெள்ளைப்படுதல்,

    மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,

    #மூத்திரஎரிச்சல், #கல்லடைப்பு,

    #சதையடைப்பு, #நீரடைப்பு,

    #பாதஎரிச்சல், #மூலஎரிச்சல்,

    #உள்மூலம், #சீழ்மூலம், #ரத்தமூலம், #ரத்தபேதி,

    #பௌத்திரக்கட்டி,

    சர்க்கரைநோய், இதயநோய்,

    மூட்டு வலி, உடல் பலவீனம்,

    உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,

    ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற

    அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

    இதை பற்றி சித்தர் கூறும் பாடல்…

    “காலை இஞ்சி

    கடும்பகல் சுக்கு

    மாலை கடுக்காய்

    மண்டலம் உண்டால்

    விருத்தனும் பாலனாமே.-“

    காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

    நண்பகலில் சுக்கு-

    இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம்

    (48 நாட்கள்) சாப்பிட்டுவர,கிழவனும் குமரனாகலாம்

    என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

    எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு

    வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

    கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

    Share
  • வெல்லும் சொல்

     

     

    பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே

    சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே

    பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே

    பிறர் விரும்பும் சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!

    சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே

    பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே

    இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன்

    பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

    அவையறிந்து சொல்லைச் சொல்பவன் அறிவுடையவன் ஆவான்

    தவறான சொல்லை சொல்பவனே முட்டாள் எனப்படுவான்

    சொல்லாற்றல் மனிதனை என்றும் மண்டியிடச் செய்யாது

    எவர் எதிர்த்து வரினும் அவர் எதிரில் தலை வணங்காது !

    சொன்னதை எல்லாமே உடனே செய்துவிட முடியுமா

    காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா

    பழி பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா

    நியாயத்தை நினைந்து உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

    கவிஞ்சன் சொல்லைக் கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான்

    பேச்சாளனோ பேச்சாற்றலால் சபையில் மதிக்கப்படுகின்றான்

    சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு ஏதாவது விலையுண்டா

    வெல்லும் சொல்லை உடையவனுக்கு பகைமை உண்டா !

    Share
  • நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

     

     எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்
    கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
    நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
    எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

    அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
    அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
    அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
    அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே !

    தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
    தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
    கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
    வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

    எல்லோர்க்கும் திருமணம் நடந்துவிட்ட போதிலுமே
    இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
    அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும்
    அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே !

    கறுப்பான ஆண்கள்பலர் கட்டழகாய் இருந்தாலும்
    வெறுப்பான பார்வையினை வீசியவள் நின்றதனால்
    பொறுப்பான வயதினிலே திருமணமும் ஆகாமல்
    பொழுதெல்லாம் அவளுக்கு வீணாகிப் போனதுவே !

    வீட்டிலே தங்கையின் வளைகாப்பு நடந்ததுவே
    வெளியிடத்தார் பலபேரும் வீட்டுக்கு வந்திருந்தார்
    பட்சணங்கள் செய்வதிலே பலபேரும் ஈடுபட்டார்
    வெள்ளைநிற வடிவழகி விருப்பமின்றி உதவிநின்றாள் !

    சமயலறை தனிலிருந்து சலசலப்புக் கேட்டவுடன்
    சகலருமே அவசரமாய் ஓடியங்கே போனார்கள்
    வெள்ளநிற வடிவழகி முகமதிலே கொதியெண்ணெய்
    விழுந்துவிட்ட காரணத்தால் வேதனையால் அவள்துடித்தாள் !

    கறுப்புநிறம் கொண்டஅப்பா கண்ணீரில் மூழ்கிநின்றார்
    வெறுத்துநின்ற கறுப்பண்ணா விரைந்தோடி வந்துநின்றான்
    வெள்ளைநிற பெண்ணவளை கொண்டுசென்றார் மருந்துசெய்ய
    கொள்ளைநிற அழகங்கே கொட்டிண்டு போனதுவே !

    கொதியெண்ணெய் பட்டதனால் கொப்புளங்கள் வந்தங்கே
    பொலிவான வெள்ளைநிறம் பொசுங்கிக் கறுப்பாகியதே
    தலைமயிரில் தாக்கியதால் முன்மயிரும் கருகியதே
    தளதளத்து அழகுமுகம் தான்கறுப்பாய் ஆகியதே !

    ஓரளவு சுகமாகி வீடுவந்த பின்னாலே
    கண்ணாடி முன்னின்று தன்முகத்தைப் பார்த்தாளே
    ஓவென்று ஓலமிட்டு உன்மத்தம் பிடித்தவளாய்
    ஒருவரையும் பாராமல் உட்கார்ந்தாள் தனிமையிலே !

    அப்பாவும் அண்ணாவும் ஆறுதல்கள் கூறிநின்றார்
    அப்போது தானவளும் அவர்கள்முகம் பார்த்தனளே
    அப்பாவும் அண்ணாவும் அழகெனவே அவள்நினைத்தாள்
    அழுதபடி ஓடிவந்து அணைத்தபடி அவள்நின்றாளே !

    கறுப்புநிறம் அப்போது கட்டழகாய் தெரிந்தது
    வெறுத்துநின்ற வெள்ளழகி வெளிவந்தாள் திரைவிலகி
    நிறமென்னும் பேய்பிடித்து நின்றாடி நின்றஅவள்
    நிறமெல்லாம் அழகெனவே நெஞ்சுக்குள் நிறைத்தாளே !

    Share
  • படக்கவிதைப் போட்டி 164-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வனிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தத் தலையாட்டி பொம்மையை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. மங்கையர் இருவர்க்கும் என் மனங்கனிந்த நன்றி!

    மனத்தில் நாணம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இயங்குதல், மரப்பாவையைக் கயிற்றால்கட்டி இயக்கி உயிருள்ளதைப் போல் மயங்கவைத்தலுக்கு ஒப்பானது என்று நாணில்லாதோரைப் பழித்துரைப்பார் செந்நாப்போதார்.

    நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி யற்று. 
    (1020)

    பிறரால் அசைத்துத் தலையாட்ட வைக்கப்படும் தலையாட்டி பொம்மையின் நிலையும் அஃதே.

    தலையாட்டும் பொம்மைகண்டு கலைவல்ல நம் கவிஞர் உள்ளத்துள் ஊறும் கற்பனையைக் கண்டுவருவோம்!

    *****

    தலைமைப் பதவியில் இருப்போர் தலையாட்டி பொம்மைகளாய் இருப்பதால் தமிழ்நாடு அடைந்துவரும் கேட்டைத் தன் பாட்டில் தொகுத்துரைக்கிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

    ஞ்சாவூரு பொம்மையிது… தலையாட்டும் பொம்மையிது…

    தஞ்சாவூரு பொம்மையிது…
    தலையாட்டும் பொம்மையிது…
    தொட்டுவிட்டால் போதுமே…
    தைதையென ஆடுமே…!

    தலைமைப்பதவி வகித்திட…
    தகுதியிது போதுமா…?
    ஆட்டுமந்தைக் கூட்டமாய்…
    ஆகிடுதல் நியாயமா…? (தஞ்சாவூரு…)

    தனதுபதவி நிலைத்திருக்க…
    தாழ்பணிதல் ஆகுமா…?
    தலைநிமிர்ந்துப் போராடும்…
    துணிவிருக்க வேண்டாமா…? (தஞ்சாவூரு…)

    காசுவாங்கி ஓட்டுப்போடும்…
    கயமைத்தனம் ஒழியணும்…!
    டாசுமாக்கு கடையெல்லாம்…
    தமிழ்நாட்டைவிட்டு ஓடணும்…! (தஞ்சாவூரு…)

    நீட்டுத்தேர்வு என்பதெல்லாம்…
    நாட்டிற்குத் தேவையா…?
    நியாயமானப் போராட்டத்தை
    நசுக்கிடுதல் நல்லதா…? (தஞ்சாவூரு…)

    நாதியற்ற மக்களுக்கு…
    நல்லவழி பிறக்குமா…?
    நேர்மையற்ற ஆட்சி நாட்டில்…
    நிலைத்திடுதல் ஆகுமா…? (தஞ்சாவூரு…)

    *****

    மத்திய அரசுக்குக் காவடி தூக்குவதையும் அவர்தம் சேவடி தொழுவதையுமே முழுநேர வேலையாய்ச் செய்துவரும் தமிழ்மாநிலக் கரைவேட்டிகள் மக்களின் துயர்துடைப்பதில் அக்கறை காட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தலையாட்டும் நடன பொம்மை

    நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் நாட்டியமாடும் பொம்மை
    ஒருகை மேலே, ஒரு கை கீழே நின்று ஆடும் நடன பொம்மை
    இன்றைய ஆட்சியும் மேலிடத்திற்கு கீழ்ப்படிந்து நடக்குதே
    தன்னாட்சி கவிழாமல் இருக்க மேலிடத்திற்குப் பணிந்து நடக்குதே!
    இன்றைய அரசியல்வாதிகளே தலையாட்டும் பொம்மைகள்
    ஆட்சி கவிழாமலிருக்க மேலிடத்து உறவை நாடும் மனித பொம்மைகள்
    கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் கொடுங்கோலர்கள்
    ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்துச் செய்யும் கொடுமைகள்!
    தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
    மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம்
    பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
    மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப் பிரசாரக் கூட்டம்
    பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
    அக்ஷய பாத்திரத்தைக் கொடுத்துப் பிச்சைஎடுக்கும் கூட்டம்
    புதிய மதுபானக் கடைகளை எதிர்த்துப் போராடும் கூட்டம்
    நடுத்தெருவில் கூடி நடத்தும் போராட்ட கூட்டம்
    ஆளுநரும், மந்திரிகளும் கைப்பொம்மையாய் செயல்படுதே
    இப்பொழுதும் மக்களின் குறைகளைத் தீர்க்கத் தயக்கம் காட்டுதே
    மக்கள் எதிர்த்தாலும், அடக்கு முறையைத் தயக்கமுமின்றி செய்யுதே
    ஜனநாயக நாடா, எதேச்சதிகாரம் கொண்ட அரசாக விளங்குதே
    மக்களே! பணத்திற்காகத் தன்மானத்தை அடகு வைக்காதீர்
    தண்ணீருக்காகவும், மணல்கொள்ளைக்கும் எதிர்த்து போராடுவீர்
    தமிழனின் தனித் தன்மையை உணர்ந்து உயிருள்ளவரை போராடுவோம்
    மக்களின் துயர் துடைக்காத அரசை பதவியில் இருந்து இறங்குவோம் !

    *****

    ”தன்னலம் செழிக்கத் தலையாட்டும் பொம்மைகளாய் மனிதர்கள் மாறிப்போனதால் நாட்டைச் சூழ்ந்தது கேடு” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டம்…

    ஆடும் பொம்மை ஆட்டமென
    ஆடியே அகில வாழ்வினிலே
    நாடும் நன்மைகள் நமக்கெனவே
    நாளும் தலையை ஆட்டிடுவர்,
    கேடு சூழ்ந்து வருவதையே
    கருத்தில் யாரும் கொள்வதில்லை,
    தேடு வாழ்வில் நல்லதையே
    தெரிந்து நடந்தால் இடரிலையே…!

    *****

    ”களிமண் தந்த கொடையால் உருவாகித் தனியே கொலுவிருந்து, கண்களுக்கு விருந்துபடைக்கும் தலையாட்டி பொம்மையின் சிங்காரச் சிற்றுடையும் ஓர் அழகுதான்!” என்று வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கலைக்கு அழகு

    வாடாது முகம்மலர வந்தவரை
    ……….வரவேற்பதில் ஒரு மகிழ்ச்சியாம்..!
    ஆடாது நிற்குமொரு காட்சியிலே
    ……….அருமை நடனமாடும் மங்கையாம்..!
    மூடாது கண்ணிமை விழித்திருக்கும்
    ……….முந்தானை இல்லாத பொம்மைதான்..!
    கூடாது மற்றொன்றுடன் தனிநின்று
    ……….கொலுவிலே வீற்றிருக்கும் நாயகி..!

    வீட்டுக்குள் உள்ள அலமாரியில்
    ……….வியக்கு மாறுநீயும் அலங்கரிப்பாய்..!
    பூட்டுப் போடவும் அவசியமில்லை
    ……….பொம்மைதானே எங்கே ஓடுவாய்..!
    ஆட்டுவிப்போர் இல்லாமலே நீ
    ……….ஆட்டம் போடுவது கடினம்தான்..!
    கூட்டுக் கொள்ளை அடிப்போரை
    ……….கண்டு விட்டால் கூத்தாடுவாயா..?

    தலையாட்டும் செய்கையைத் தானே
    ……….தன்னிச்சையாய்ச் செய்ய முடியாது..!
    விலை கொடுத்து வாங்கியபின்னே
    ……….விளையாடத் தட்டுவார் தலையை..!
    சிலைபோல நின்றாலும் உனக்குச்
    ……….சிங்காரச் சிற்றுடையும் அழகுதான்..!
    கலைப் பொருளாக உன்னையாக்க
    ……….களிமண்ணும் கொடுக்கும் கொடை..!

    *****

    பாவையே! அசையாது அசையும் அதிசயம் நீ! ஓசையொழிந்த உன் ஆடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே! பயனில பேசாது நீ இதழ்மூடியிருப்பதும் சிறப்பே! என்று பொம்மையின் மெய்ப்பாடுகளைப் பாடுபொருளாக்கி நம்மை இரசிக்கவைக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    அசையாதசையும் நினதிசயம் என்னென்பேன் என்னென்பேன் பாவாய்
    ஆசைபடுமனம் தேடும் புனைவேடம் ஒழியெனக் காட்டுகிறாய் எம்பாவாய்
    இசைவதுவசையாதென்றோ ஏதொன்றும் பேசாயடி எந்தன் பாவாய்
    ஈசைவாழ்த்து ஈசை வாழ்த்துவெனவோ நின்வலக்கரம் வாழ்த்துது எம்பாவாய்
    உசைத்தாலும் விசைத்தாலும் நிலைநடுங்காது நில் என்பாய் எம்பாவாய்
    ஊசைமேனிமினுக்குள் மின்னமாய் ஞானம் சேரெனப் பார்க்குமென் பாவாய்
    ஒசித்தயோசனை பின்னி நிமிர்நெஞ்சுகொள்ளெனப் பணித்தனை எம்பாவாய்
    ஓசையொழிந்த உன்னாடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே எம்பாவாய்
    ஒளவியம் கூடாதென பயனில பழுதென இதழ்பூட்டி இறுக்குமென் பாவாய்
    அஃ றிணைக்குயர்திணை சார்பெனவோ அபிநயநடை எடுத்தனை எம்பாவாய்?

    *****

    பொம்மைக்குச் செம்மையான கவிதைகளை அணிகளாய்ப் பூட்டிய பாவலர்க்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    பொம்மை சொன்ன உண்மை

    நான் நடனம் ஆடுகின்ற பொம்மை!
    காற்றிலாடும் பொம்மை!
    சொல்வதெல்லாம் உண்மை!
    இதைச் செவிமடுத்தால் விளையும் என்றும் நன்மை!
    பயனில்லா நிகழ்வுதானே மனிதனின் ஆட்டம்!
    நூல் இருக்கும் வரையில் தானே பட்டத்தின் ஆட்டம்!
    இலக்கில்லாப் பயணம்தானே மனிதா உன் ஆட்டம்!
    உயிர்இருக்கும் வரைதானே மனிதா உன் ஆட்டம்!
    ஆணவத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் வாழ்வை அழித்துவிடும் ஆட்டம்!
    மதுஅருந்தி நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் குடும்பத்தை அழித்துவிடும் ஆட்டம்!
    ஆடம்பரத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் அடுத்த தலைமுறையை அழித்துவிடும் ஆட்டம்!
    கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாகும்!
    காற்றின் ஆட்டம் புயலாகும்!
    பூமியின் ஆட்டம் பூகம்பமாகும்!
    ஆற்றின் ஆட்டம் வெள்ளமாகும்!
    அளவிற்கு மீறிய ஆட்டமென்றும் அழிவாகும்!
    அடங்கி நடந்தால் உன் வாழ்க்கை இனிதாகும்!

    ”கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாய், காற்றின் ஆட்டம் புயலாய், புவியின் ஆட்டம் பூகம்பமாய் உருமாறி உலகை அழிப்பதுபோல் மனக்கட்டுப்பாடின்றி மனிதன் ஆ(போ)டும் ஆட்டம் அவன் நல்வாழ்வைக் குலைத்துவிடும்!” என்று அமைதியாய் நிற்கும் பொம்மையின் மூலம் அரிய கருத்தை அவனிக்குச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (165)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 111

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது?

    மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது.

    கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது.

    எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்: நான் எதிர்பார்த்ததிற்கு மேலேயே என் படைப்பு வெற்றி பெற்றால்.

    இவர்கள் எல்லோருடைய பதில்களிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அனைவருமே கடுமையாக உழைத்துப் பெற்ற வெற்றியால்தான் மகிழ்வடைகிறார்கள்.

    மாணவரை எடுத்துக்கொண்டால், குருட்டாம்போக்கில் எவரும் பரீட்சைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியாது. எத்தனை நேரம் படித்திருக்க வேண்டும்!

    இரண்டு அல்லது மூன்று மணிநேர கலைநிகழ்ச்சிக்காக ஒருவர் வருடக்கணக்கில் பயிற்சி பெறவேண்டுமே!

    வாசகர் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கும் கதையை எழுத ஒரு எழுத்தாளர் ஆராய்ச்சி செய்திருப்பார், நிறைய சிந்தித்திருப்பார். அத்துடன், அதை எழுத நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருப்பார்!

    ஆனால், வெற்றி பெறுகையில், பட்ட கஷ்டங்களும் செலவிட்ட நேரமும் பெரிதாகப்படுவதில்லை. பொறுக்க முடியாதவைகளையும் அனுசரித்துப்போனால்தான் நன்மையோ, வெற்றியோ கிடைக்கும்போது திருப்தியுடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    வாழ்வில் பிரச்னைகளே இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே தொடர்ந்து வரவேண்டும் என்றால் நடக்கிற காரியமா? பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் முதிர்ச்சி இருக்கிறது.

    சிந்திப்பதும் பேசுவதும்

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள், ஆண்கள் தமக்குத் தெரிந்ததைப்பற்றிப் பேசவே பிரியப்படுகிறார்கள் என்று கூறுவதுண்டு.

    `பிடித்தது’ என்றால் அதில் வேண்டாத விஷயமும் இருக்கும். ஓயாமல் தொல்லை கொடுக்கும் மாமியார், எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிக்கும் மேலதிகாரி அல்லது கணவன் – இப்படி யார் தலையையாவது உருட்டிக்கொண்டிருப்பார்கள்.

    நமக்குப் பிடிக்காத உத்தியோகமோ, வாழ்க்கைத்துணையோ அமைந்துவிட்டால், அதையே எண்ணிக் குமைவதால் என்ன பலன்? `அப்படிச்செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதால் நடந்ததை மாற்ற முடியுமா, என்ன!

    நான் விளையாட்டுப் பொம்மையா?

    யாரோ நம்மை இழிவாகப் பேசினால்கூட ஆத்திரம் எழுகிறது. ஒரு நிமிடம் ஆத்திரப்பட்டால், அறுபது வினாடிகள் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். இதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்! பொம்மைக்குச் சாவி கொடுப்பதுபோல் பிறர் நம்மை ஆட்டுவிக்க நாமே ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்? ஒருவரது மகிழ்ச்சியைப் பறிக்க நினைப்பவர் தம்மால் அப்படி மகிழ முடியவில்லையே என்று ஏங்குபவராக இருக்கலாம் என்று புரிந்து, அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

    நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைப்பற்றிச் சிந்திக்கும்போதும், பேசும்போதும் நம் முகம் எப்படி இருக்கும்? அவர்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிடுசிடுக்கிறோம். முகத்தில் மலர்ச்சி எப்படி வரும்?

    கதை

    இரண்டு வயதுக் குழந்தை கௌதம் கீழே விழ, நெற்றியில் காயம் பட்டு, வீங்கிவிட்டது. நான் பரிவுடன் அவன் கன்னத்தைத் தடவினேன். அப்போதுதான் வலி அவனுக்கு உறைக்க, “இந்தப் பாட்டிதான் அடிச்சா!” என்று என்மேல் குற்றம் சாட்டிவிட்டு அழுதான். சிறிது பொறுத்து, “பாட்டி அடி, அடின்னு அடிச்சா! வலி!” என்றான். பிறகு அதுவே மூன்று முறை நான் அடித்ததாக ஆக, அழுகை பலத்தது.

    ஒரு பிரச்னையைப்பற்றி இடைவிடாமல் பேசினால், இப்படித்தான் பூதாகாரமாக உருவெடுத்துவிடும். `எனக்குச் சந்தோஷமே இல்லை!’ என்பது இதனால்தான். மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பி, வேண்டாத எண்ணங்களையும் நடைமுறையையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது வீண்.

    நல்லது செய்தால் மகிழ்ச்சி

    ஒரு முறை, நான் இரண்டு வெள்ளி டிக்கட்டுக்கு பத்து வெள்ளியை அளிக்க, பேருந்து ஓட்டுநர் பாக்கிப் பணத்தைக் கூடுதலாக கொடுத்துவிட்டு, முன்னால் போய்விட்டார். சிறிது பொறுத்துத்தான் கவனித்தேன். நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். நின்றுகொண்டிருந்த என் மகளிடம், அவரிடமிருந்து தவறாகப் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கூறினேன். பலரையும் தள்ளிக்கொண்டு போக அவள் தயங்கினாள். “அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லு,” என்று அனுப்பினேன். நான் கடைசியாக இறங்கும்போது, அந்த மனிதர் என்னைப் பார்த்து நன்றியுடன், மகிழ்ந்து சிரித்தார். நான் கொடுத்திருக்காவிட்டால், அவர் கைப்பணத்தைப்போட்டு ஈடுகட்டி இருக்க நேரிட்டிருக்கும்.

    சிறு சமாசாரம்தான். ஆனாலும், ஒருவரை மகிழ்வித்த மகிழ்ச்சி என் மனதில் நிலைத்திருக்கிறது.

    மனமுவந்து பாராட்டுங்கள்!

    ஒரு மருத்துவசாலையில் வேலைபார்த்த இளம்பெண், `குறைந்த சம்பளத்தில் ஓயாத வேலை!’ என்று சிடுசிடுப்பாக இருப்பாள்.

    `சரியான சிடுமூஞ்சி!’ என்று எவர்மீதாவது குற்றம் கண்டுபிடிப்பதால் நாம் உயர்ந்துவிடுவதில்லை. தகுதியான பாராட்டுக்குத்தான் ஒருவரை மகிழ்விக்கும் சக்தி உண்டு.

    ஒரு முறை, தான் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை எண்ணும்போது, அவள் கை இயந்திரகதியில் வேலை செய்ததைப் பார்த்து நான், “ஐ..யோ! என்ன வேகம்!” என்று வியந்தேன்.

    சட்டென தலை நிமிர்ந்து, “பழகிப்போச்சு!” என்றாள். முகம் புன்னகையில் மலர்ந்தது. (`ஏன் இந்த சிடுசிடுப்பு? கொஞ்சம் சிரியேன்!’ என்றால் அவள் முகம் மலர்ந்திருக்குமா?)

    முக மலர்ச்சியும் அழகும்

    ஒருவரது கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றனவோ, இல்லையோ, முகத்தில் மலர்ச்சி இருந்தால், முகம் அழகாகத் தென்படும். எவ்வளவுதான் அலங்காரம் செய்துகொண்டாலும், சுயநலம் கொண்டவர்களாக இருப்பவர்கள், அல்லது தெரிந்தே பிறருக்கு இன்னல் விளைவிப்பவர்கள் போன்றவர்கள் பிறர் கண்களுக்கு அழகாகத் தென்படமாட்டார்கள்.

    நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

    வெளிநாட்டுப் பூங்கா ஒன்றில் மரத்தின்கீழ் ஒரே குப்பையாக இருந்தது. உடன் வந்திருந்த என் மகள் முகத்தைச் சுளிக்க, “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்றேன்.

    மரக்கிளைகளில் கண்கவரும் மலர்கள்!

    குப்பையா, மலர்களா? எதைக் கவனித்தால் மனம் மகிழும்?

    மரம் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படித்தான். நம்மை வாட்டும் ஒருவரது குறையையே எண்ணி மனம் நோகாமல், அவரிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைக் கவனிக்கலாமே!

    அப்படி எதுவும் தென்படவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்! பிறரைப்பற்றிய வேண்டாத யோசனையில் நம் அமைதியை, மகிழ்ச்சியை, பறிகொடுப்பானேன்!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 24

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

    கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன் நெருப்பின் உபயோகத்தை சிந்தனையின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தான். உணவுகளைப் பக்குவப்படுத்தவும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் நெருப்பை உபயோகித்தான். அவன் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. கற்களை செதுக்கி ஆயுதங்களைப் படைத்தான். அவன் வேட்டையாடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.. தொடர்ந்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். கூட்டாக வாழ ஆரம்பித்தன. விவசாய முறைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு பல தானிய வகைகளை வளர்க்க ஆரம்பித்த்தான். மாற்றங்கள் தொடர்ந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் சார்ந்த சமூகத்தில் தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். உடுக்கும் முறைகள் வாழும் முறைகள், தொழில் முறைகள், உறவு முறைகள், சிந்தனை முறைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இந்த மாற்றங்களின் பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது ?

    மாற்றங்களைக் கண்டு வியந்து மனமுவந்து அவற்றை ஏற்றுக்கொண்டது ஒரு சார்பு. மாற்றங்களைக் கண்டு பயந்து அவைகளால் தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று அவற்றை மறுத்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாக இருந்தவர்களை தாக்கவும் அழிக்கவும் முற்பட்டது மற்றொரு சார்பு. மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் சரித்திரத்தின் போக்கையும் சமுதாயங்களின் முற்போக்கு வளர்ச்சியையும் நிர்ணயித்தன. அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களின் வேகத்தையும் திறன்களையும் தேவைகளையும் ஊக்குவித்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாகவும் இருந்து வந்தன.

    மாற்றங்களை எதிர்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் உள்ள சில காரணங்கள்:

    1. மாற்றத்தினால் தற்போது இருக்கின்ற பாதுக்காகாப்பான நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சி.
    2. மாற்றங்கள் நம்மிடம் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துமே. அவைகளை நாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்க உணர்ச்சி.
    3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் படச்சத்தில் புதிய கற்றலும் புதிய திறன்களும் நமக்குத் தேவைப் படுமே. அவைகளை நம்மால் கற்றுக்கொள்ளவோ சாதிக்கவோ முடியுமா என்ற இயலாமை உணர்ச்சி
    4. இருப்பது நன்றாகத்தானே இருக்கின்றது. இருந்துவிட்டுப் போகட்டுமே. மாற்றம் இப்பொழுது எதற்கு என்ற முயற்சியைத் தடுக்கும் துணிவின்மை.
    5. மாற்றங்கள் வரும்பொழுது அவைகளில் திறனுள்ளவர்களால் நாம் பின்தள்ளப்படுவோமே? அது ஏற்புடையதா ? அதை எப்படி சமாளிப்பது என்ற தாழ்வு மனப்பன்மை
    6. எனக்கு வயதாகி விட்டதே. இதற்கு மேல் இவைகளை எல்லாம் என்னால் எப்படிக் கற்க முடியும் ? எனவே மாற்றங்கள் எல்லாம் இளைய சமுதாயத்திற்குத் தான் நமக்குத் தேவையில்லை என்ற வளர்ச்சியை விட்டு விலகி நிற்கும் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.

    இன்னும் இது போல பல காரணங்கள் நமது மாற்றங்களைக் கண்டு அஞ்சி நிற்பதற்கும் அதில் பங்குதாரர்களாக இல்லாததற்கு காரணமாக இருந்துள்ளது; இருக்கின்றது.

    மாற்றங்கள் – இயற்கையின் வரப்பிரசாதம்

    மாற்றங்கள் – வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் விளக்கங்கள்

    மாற்றங்கள் – புதுமையின் சுயசரிதைக்கு முன்னுரை

    மாற்றங்கள் – மற்ற உயிருள்ள உயிரில்லாத வாழ்வினங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் சாராமல் இயற்கை எழுதும் புதுக்கவிதை.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்களைத் தவிர வேறு எதுவும் மாறுவதில்லை !

    மாற்றங்கள் இயற்கையின் இயல்பென்றால் அவைகளை நாம் எப்படித் தடுக்க முடியும்? எனவே துணிவுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளின் உதவியுடன் வாழ்வில் முன்னேற்றப்பாதையை வழிவகுத்துக்கொள்ளவும் அவைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    “நாம் எப்படி இருக்கவேண்டும் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது. நம்முடைய மாற்றங்களே அவைகளுக்கு வழிவகுக்கும்” என்று பல தத்துவ மேதைகள் கூறியிருக்கின்றனர்.

    மாற்றங்கள் நமக்குத் தயக்கத்தை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு பய உணர்ச்சியை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு எதிர்ப்புகளை உருவாக்கலாம். மாற்றங்கள் நம்முடைய தற்போதைய நிகழ்வுகளின் அழிவுக்கு அடிக்கல்லாக அமையலாம். ஆனால் மாற்றங்களை நாம் ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும். மாற்றங்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

    மாற்றங்களை ஏற்க மறுக்கின்றவர்கள் இருக்கும் இடத்திலேயே நிலைத்துவிடுகின்றனர். மாற்றங்கள் உயிர்ப்பிற்கும் துடிப்பிற்கும் ஒரு சாட்சி. மாற்றங்களை மறுத்து ஒதுங்குபவர்கள் தங்கள் தேக்கத்திற்கும் வளர்ச்சியின் முடிவிற்கும் ஒப்புதலை அளித்து விடுகின்றனர்.

    நான் படித்த ஒரு புத்தகத்தின் கதை நினைவுக்கு வருகின்றது. (The iceberg is melting  by John Kotter). இது அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்தப் பனிப்பாறையில் பென்குவின் பறவையினத்தைச் சார்ந்த பல பறவைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றது. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அந்தப் பனிப்பாறையின் முகப்பில் அமர்ந்து அடுத்த பனிப்பாறையில் என்ன நடக்கின்றது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அது இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றது.

    ஒன்று;  எதிரே உள்ள பனிப்பாறையின் உயரம் குறைந்துகொண்டே வருகின்றது.

    இரண்டு: பனிப்பாறையிலிருந்து உருகும் நீரின் வேகத்தின் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்குகின்றது.

    இந்தப் பார்வை அதனுடைய சிந்தனையைத் தூண்ட அதற்குப் புரிகின்றது – ” எதிரே உள்ள அந்த பனிப்பாறை உருகுகின்றது. அதனால் தான் நீரின் வேகமும் அதிகமாகின்றது. அந்தப் பனிப்பாறையின் உயரமும் குறைகின்றது.

    இந்தக் கருத்து மீண்டும் அதனுடைய சிந்தனையைத் தூண்ட எழுகின்ற சில கேள்விகள் :

    1. அந்த பனிப்பாறை உருகினால் அதில் உள்ள பறவைகளின் கதி என்ன? அவைகள் தங்களைக் காத்துக்கொள்ள வேறு ஏதாவது பனிப்பார்வைக்கு மாறிச் செல்ல வேண்டுமா ?
    2. அவை வேறொரு பனிப்பாறைக்கு மாறினாலும் அந்தப் பனிப்பாறை உருகாது என்பது என்ன நிச்சயம்? அவ்வாறென்றால் அதுவும் உருகினால் அவைகள் அங்கிருந்து இன்னொரு பனிப்பாறைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுமா ?
    3. அந்த பனிப்பாறை உருகும்பொழுது நான் இருக்கின்ற பனிப்பாறை உருகாமல் இருக்குமா? நானும் எனது குடும்பமும் இன்னொரு பனிப்பாறைக்குச் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டுமா ?
    4. இவ்வாறு பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருந்தால் நாம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமே! மாற்றங்களே வாழ்க்கையின் உண்மை நிலையென்றால் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு நம்மைத் தயார் செய்துகொள்வது?

    இந்தக் கதை விடுக்கும் செய்தி: பனிப்பாறைகள் உருகிக்கொண்டுதான் இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    நமது அறிவு, திறன்கள், வாழ்வு முறைகள், அறிவியல் கருத்துக்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் பனிப்பாறைகளே ! அவைகள் உருகிக் கொண்ட இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருத்தல் அவசியம்.

    மாற்றங்கள் புதுமைகளாக இருக்கலாம்; புதிர்களாக இருக்கலாம் ! ஆனால் மாற்றங்கள் இயற்கை அயராது நமது வாழ்விற்கும் சிந்தனைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் சவால்கள் .. அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாமே !

    மாற்றங்களுக்கு ஏற்றபடி வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

    -கி. ரேவதி

    தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம்.

    நாட்டுப்புற கலைகள்

    பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து வளர்ந்து கொண்டே போவதற்கு அடிப்படைக்காரணம் அக்கலைகளுடன் பழகும் மனிதனது உணர்ச்சியே ஆகும்.

    கூத்துக்கலை

    தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்றாகும். இசைக் கலையோடு இணைந்து வளர்ந்த கலை இதுவாகும். விழாக்களின்போது மக்களைத் தம் ஆடல்பாடல்களால் மகிழ்வித்தனர். பண்டையக் காலத்தில் கூத்து நடத்தியவர்கள், கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப்பெயர் பெற்றனர்.

    வள்ளிக்கூத்து

    பண்டைய மக்கள் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும், வெற்றியும் பெற்றுத்தந்த வள்ளிக்கொடியின் பெருமையைப்பாடி ஆடுவது ஆகும்.

    “வாடா வள்ளியின் வளம்பல தருஉம்
      நாடுபல கழிந்த பின்றை”     (பெரும்.பாண்.370- 371)

    என்ற பாடல்வரிகள் இக்கூத்துப் பற்றி விளக்குகின்றன. இக்கூத்தினை ஆடவரும், பெண்டிரும் ஆடுவர்.

    குரவைக்கூத்து

    பண்டைய கலைகளின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் குரவைக்கூத்து விளங்குகின்றது. சிறுபறையைக் கொண்டு மகிழ்வோடு ஆடியது இக்கூத்தாகும்.

    ”பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப    (மதுரைக்காஞ்சி 96-97) என்னும் அடியின் மூலம் குரவை ஆடினர் என்ற செய்தியை அறிய முடிகின்றது.

    துணங்கை ஆட்டம்

    துணங்கை என்பது மற்றொரு வகைக் கூத்தாகும். பண்டைய மக்கள் விழாக்களின் போது துணங்கை ஆடினர். இதனை,

    ”விழவு நின்ற வியன் மறுகில்
    துணங்கை
             (மதுரைக்காஞ்சி 327 – 329) என்ற பாடல் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. துணங்கைக் கூத்தில் ஆண்கள், பெண்கள் எனக் குடிமக்களும் அரசரும் கலந்து கொண்டனர்.

    துடிக்கூத்து

    வெட்சித்திணையில் இடம்பெறும் கூத்துகளில் துடிநிலையும் ஒன்றாகும்.

    ”மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
    கொற்றவை
    நிலையும் அகத்திணைப்புறனே  (தொல்.பொருள்.புறத்.நு.4)

    தங்களின் விருப்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வணங்கித் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்யுமாறு வேண்டுதல்  நிகழ்த்துவர். போர் மறவர்கள் துடி என்னும் இரு முகப்பறையை முழக்கிக் கொற்றவையை வணங்குதலே துடிநிலை எனப்படும்.

    போர்க்காலங்களில் போருக்கு முன் வெற்றி பெறவேண்டும் என்று கொற்றவையை வணங்கித் துடியை இயக்கிக்கொண்டு ஆடியதால் இக்கூத்து எனப்பெயர் பெற்றது. மிகுந்த வெறியுடன் ஆடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். துடிக்கூத்து போர் மறவர்களால் மட்டுமின்றி முருகனாலும் ஆடப்பட்டுள்ளதாகப் பத்துப்பாட்டு பதிவு செய்துள்ளது.

    முருகன் திருச்சீரலைவாய்க் கடலில் சூரபதுமனை அழித்ததான். அவனது ஆறு முகங்களில் ஐந்தாவது முகம் இச்செயலைச் செய்துள்ளது என்பதைச்,

    ”செறுநர்த் தேயத்துச் செல்லும் முருக்கி
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்”  (திரு.99-100)

    என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் கூறுகின்றன. கடலில் மரமாக நின்ற சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிச் சென்றவன். கெட்டவனை அழிக்கக் கொற்றவையிடம் வேலை வாங்கிச் சென்றான். போரில் எதிர்க்கும் எதிரிகளை வேலால் குத்தி வீசித் துடியடித்து அவன் அன்னை கொற்றவையைப் பரவினான். திருப்பரங்குன்றத்து இயல்புகளைப் பேசும் பரிபாடலில்,

    ”துடியின் அடி பெயர்த்து தோளசைத்து தூக்கி
    அடுநறா மகிழ்தடப ஆடுவான் தகைமையின்” (பரி.21)

    என்னும் அடிகள் முருகன் ஆடிய துடிக் கூத்தையே குறிப்பதாகப் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் நூலில் காணலாம்.

    துடியின் ஓசை

    துடியின் ஓசை மிகக் கடுமையுடையதாக இருக்கும் என்பதைப் பல சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
    கடுங்குரற்
    குடிஞையநெடும் பெருங்குன்றம்” (அகம்.19)

    என்றும்,
    இழிபிறப் பாளன் கருங்கை வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு
    நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்” (புறம்.170)

    என்றும்,
    கடுந்தடித் தூங்கும் கணைக் காற் பந்தர்”              (பெரு.124)
    என்றும்,
    கோள் தெங்கின் குலை வாழை
    கொழுங்காந்தள்
    மலர் நாகத்து
    துடிக்
    குடிஞைக் குடிப் பாக்கத்து”                    (பொரு.208)

    என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    துடியன்

    துடியை இயக்குபவர் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

    உவலைக் கண்ணித் துடியன் வந்தென” (புறம்.269-6)
    துடியன் கையறு வேலே அடிபுணர்” (புறம்.285-2)

    துடியர்கள் போர்க்காலங்களில் மட்டும் துடியை இசைக்கும் கலைஞர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.

    துடியன் எனப்படுபவன் பலப்பல மலர்களால் ஆன மாலைகளைச் சூடிக்கொண்டு போரைத் தொடங்குவதற்கான துடியை முழங்குவான். துடியின் கடுமையான ஒலியால் எதிரிகள் மிரண்டு செல்வர். அவ்வாறு மிரண்டு ஓடும்போது கடுமையான ஒலியை எழுப்பி வீரர்கள் துடியை இசைத்துள்ளனர். இதனை,

    அருமுனை அலைந்த பெரும்புகல் வலத்தார்
    கனைகுரற்
    கடுந்துடிப் பாணி தூங்கி” (அகம்.159-8-9)

    என்றும்,

    வில்லோர் குறும்பில் ததும்பும்
    வல்வாய்க்
    கடுந்துடிப் பாணியும் கேட்டே” ( அகம்.261 14-15)

    என்றும் அகப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    தொகுப்புரை

    நாட்டுப்புற ஆடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் மரபு சார்ந்த கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    அடிக்குறிப்பு:

    1.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை,2004.

    2.நாகராசன். வி, குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.நாகராசன். வி, புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 2002.

    4.நாகராசன். வி, அகநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    5.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை  அம்மாள்  மகளிர்க்  கல்லூரி, (தன்னாட்சி), விழுப்புரம்.

     

    Share
  • பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.

    பாணர்களின் தோற்றம்

    பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும்  நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர்.  பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார்.  ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பார். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.  வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.

    மேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்
    வாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா
    செம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்
    நேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்
    இதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது.  இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது.  இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.

    தொல்காப்பியத்தில் பாணர்

    தொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும்.  தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது.  மேலும்

    ”தோழி தாயே பார்ப்பான் பாகன்
    பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
    யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)

    என்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது.  இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது.  தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது.  ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது.  சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்று ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.  மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.  யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.  இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர்.  மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,

    பழுமரம் தேரும் பறவை போல
    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென யாக்கைப் புலவுவாய் பாண
    (பெரும்பாணாற்றுப்படை)

    என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில்  பல  கதைகள் வழங்குவதைக் காணலாம்.

    கைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார்.  பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும்   நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,

    ஏதும் ஒந்நுமே இல்லாத்தானு
    ஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா
    மலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு
    விளக்குடனே கொளுத்துமடா
    அறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா
    விலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது
    ஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். –  (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.

    சிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.  என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார்.  யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும்.  இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர்.  பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர்.  வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர்.  பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர்.  பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு.  பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர்.  பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

    பாணப்பாட்டில் பண்பாட்டு மரபுகள்

    சமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது.  பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணலாம்.  ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின்  பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,

    ’நந்நு நந்நே திருவரங்கா
    இத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)

    என்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.

    ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,

    ஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்
    ஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி
    ஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ
    ஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)

    என்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது.  பாணர்கள் துயிலுணர்த்தி  இறைவன் புகழ் பாடியதற்கு,

    ஒரு நெல்லுமே அன்னம் வேண்டா
    ஒருழக்குப் பாலும் வேண்டா’   ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.

    மாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.

    வச்சுண்ணான் கொச்சுருளி
    இட்டுண்ணான் இலத்தளிக
    கண்கான்மானணி விளக்கு
    நீர்குடிப்பான் வெள்ளிக்கிண்டி
    வெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.

    ஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது.  பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.

    பாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில்  இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது.  காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.

    *****

    துணை நூல் பட்டியல்

    1. ஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்,  நியூ        செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.
    2. இராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.
    3. குளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008
    4. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள்,   நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.
    5. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது

     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
    ++++++++++++++
     
     
     
    ++++++++++++++++
     
     
    நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி
     
    ++++++++++++++++++
     
    நிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது,  பனித்தள வழுக்கி காலணியில்  சுற்றும் மாது, மெதுவாகும் சமயம்  கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.
     
    எங்களது குறிக்கோளில் ஒன்று :  வானியல் காலநோக்கு  [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது.  பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட  பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில்  [Radioisotope Dating] அளப்பது.
     
    டாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ்  [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.]  துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்]  [ஜூன் 4, 2018]  
     
     
     
    ++++++++++++++++
     
     
    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பரிதிக் கப்பால் வெகு தொலைவில்
    தங்கி விடும் பூமி !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    வெய்யிலில் எரிந்து  விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    கடைந்து கலக்க  அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் சிறகுகள்
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    முடங்கும், தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் ஓரிடம் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வாயு வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    ஒன்றை அங்குல தூரம் 
    அப்பால் நகரும் !
     
    +++++++++++
     
     
     
     
    பூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு 
     
    2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4  பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது !  அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.
     
    இப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது.  ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [?] நேரமாக மாறிவிடலாம் !
     
     
     
     
     
    நிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி  தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது.  அப்போது நாட்பொழுது நீள்கிறது.  நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது.  இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில்  [National Academy of Sciences]  வெளியாகி உள்ளது.  வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.
    விண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது.  அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது.  இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.
     
     
     

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி.

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2

    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1

    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளை குடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்தி ருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides

    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டு களில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகை யாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1

    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் நமது பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    first-man-on-the-our-moon1

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    20. https://youtu.be/j91XTV_p9pc

    20 (a)  https://youtu.be/0tqgWuSIZUg

    21. https://newslikethis.com/2018/06/04/thank-moon-earth-s-lengthening-day [June 4, 2018]

    22.  https://news.wisc.edu/thank-the-moon-for-earths-lengthening-day/  [June 4, 2018]

    23.  https://phys.org/news/2018-06-moon-earth-lengthening-day.html  [June 4, 2018]

    24.  https://www.sciencedaily.com/releases/2018/06/180604151200.htm [June 4, 2018]

    25.  http://mentalfloss.com/article/546952/moon-making-days-earth-longer  [June 6, 2018]

    26. https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles  [ June 8, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] [June 9, 2018] [R-1]

    Attachments area

    Preview YouTube video Earth’s Moon: Why One Side Always Faces Us

    Preview YouTube video Study: Moon is Causing Earth Days to Lengthen Each Year

    Preview YouTube video Earth’s Days Are Getting Longer—Thanks to the Moon

    Preview YouTube video Naked Science – Moon Mysteries

    Preview YouTube video Milankovitch Cycles

    Preview YouTube video 7 Milankovitch and Climate

    Share