பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அண்ணாகண்ணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி (165)

 1. ————————————–
  வீட்டுமுற்றத்திலே தூளி கட்டி
  ஆட்டிஅழகு பார்க்கும்
  அம்மாமார் பார்த்ததுண்டு..
  மரக்கிளையில் சேலை கட்டி
  மழலை தனைத்தூங்கவைக்கும்
  மாதாக்கள் இங்கு உண்டு…
  எட்டி ஓடுகிற கங்காரு – தன்
  குட்டி சுமக்கின்றலாவகம் போல்
  மட்டிலா மகிழ்ச்சி ததும்ப
  சுட்டிக்குழந்தையை முதுகிலே
  கட்டித்தூக்கிச்செல்லும் தாய்!!
  எந்த ஊரோ? ..எந்த நாடோ?
  எங்கேயிருந்தாலும்-அன்பை
  மங்காமல் காப்பாற்றுவதில்
  இங்கு பங்கு இருப்பதாய்
  உலகத்தோர் எல்லோர்க்கும்
  உரக்க உரைப்பதுவாய்
  உயிர்களுக்கு உணர்த்துகிற
  பாங்கினைப்போற்றினால்
  பாருயரும்!பண்புயரும்!!!
  அன்புப்பரிமாற்றம்ஒன்றுதான்
  சண்டையில்லா உலகத்தை
  சாத்தியமாக்கிடும் என்பதுவே
  சத்தியத்திலும் சத்தியம்!!….
  ????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி….ஈரோடு….
  9442637264…..
  ????????????

 2. அவசரம்.

  கட்டிக்கொண்டவன்
  கவலையற்று,
  வெட்டியாய்க்
  கள்ளுக்கடையில் காலந்தள்ள

  விட்டுச் செல்ல வழியின்றி
  வேலைக்குப் போகும்போதும்
  கூடவே
  கட்டுத் துணியில்
  முதுகில் குழந்தை.

  கை பிடித்து நடக்கவே
  இன்னும் காலம் உண்டு.
  அதற்குள்
  காலுக்குச் செருப்பெதற்கு?

  அப்பனைப் போல் ஆகிவிடாமல்
  ஆகாத காலத்துக்கு,
  எனக்கு
  அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற
  உழைத்துச் சம்பாதிக்க
  உருப்படியாய் வளரவேணும்.
  அவசரமாய்.

  அ.இராஜகோபாலன்.

 3. சுமை தாங்கி :::::::::::: பத்து மாதம் பிள்ளையைச் சுமந்தாய்
  உன் உதிரத்தை உணவாய் தந்தாய்!
  கண்ணை இமை காப்பது போல!
  பிள்ளையை காத்தாய்!
  பிள்ளையைக் கருவில் சுமந்தாய்!
  கணவனை உள்ளத்தில் சுமந்தாய்!
  குடும்பத்தை தோளில் சுமந்தாய்!
  உன் சுகத்தை நினைக்க மறந்தாய்!
  வலியை நெஞ்சில் புதைத்தாய்!
  வயிற்றில் சுமந்தது போதாதென்றா!
  முதுகிலும் நீ சுமந்தாய்!
  சுமப்பதைக்கூட சுகமாய் நினைத்தாயோ!
  சுமப்பதினாள் பூமியும் தாயானாள்!
  தாயன்பிற்கு உலகில் ஈடென்பதேது!
  தாயை கடவுள் படைத்தது பிள்ளைகள் செய்த பேறு!

 4. தாயன்பு
  ________

  ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
  பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
  நீராட்டி சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
  துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
  மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
  இமைபொழுதும் நீங்காத சிந்தனை சுவடுகளில்
  உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
  உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
  புன்னகை விரித்து பொழுதெல்லாம் ரசித்து
  கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
  தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

 5. மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்…
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  உலர்ந்த நிலப் பரப்பில்… பொழிந்திட்ட மழையைப் போல…
  அலர்ந்த மலர் ஒன்று… பரப்பிட்ட மணத்தைப் போல…
  வளர்ந்த தரு வொன்று… தந்திட்ட நிழலைப் போல…
  புலர்ந்த பொழு தெனவே… பிறந்த தன் மகவினாலே…
  குளிர்ந்த நில வெனவெ… இருக்கிறது அத்தாயின் முகமும்…!

  மலர் போன்ற பிள்ளைதன்னை… தன் முதுகில் சுமந்துகொண்டு…
  தளர்வறியாச் சூரியன் போன்று… தன் பணியைச் செய்வதுகண்டு…
  சிலரேனும் நினைத் திருப்பர்… சிக்கலான வாழ்க்கை யென்று…
  அளறுவென நினைக்கும் படி… அவணி வாழ்க்கை இருந்தாலும்…
  பலர் போற்ற வாழ்வோரும்… பாரினிலே மெத்த உண்டு…!

  எத்தனை எத்தனை இன்பங்கள்… இறைவன் படைப்பில் இருந்தாலும்…
  அத்தனையும் நமக் கில்லை… என்பது போல் இருந்துவிட்டால்…
  மொத்தமாய் துன்பமே மேலோங்கும்… என்பதை நன்கு ணர்ந்து…
  இத்தாயின் உறுதி கண்டு… சளைக்காத வலிமை கண்டு…
  எதற்குமயராத நிலை கொண்டால்… மகிழ்ச்சி நமக்கு உண்டு…!

 6. தாயன்பு
  ________

  ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
  பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
  நீராட்டி சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
  துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
  மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
  இமைபொழுதும் நீங்காத சிந்தனை சுவடுகளில்
  உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
  உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
  புன்னகை விரித்து பொழுதெல்லாம் ரசித்து
  கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
  தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

 7. முதுகிலே…

  தொட்டில் கட்டி விட்டுவந்தால்
  தூங்க வில்லை வீட்டினிலே,
  விட்டுப் போன கணவனாலே
  வேலை பார்த்துப் பிழைக்கவேண்டும்,
  எட்டிப் பார்த்துப் பசியாற்ற
  எளிய வழியைத் தாய்கண்டாள்,
  கட்டிச் சுமக்கும் தூளியிலே
  கொண்டாள் பிள்ளையை முதுகினிலே…!

  செண்பக ஜெகதீசன்…

 8. உழைக்கும் அன்னை..!
  ====================

  வயிற்றில் சுமந்தது
  ……….வளையும் முதுகில்
  பயிற்சி வேண்டும்
  ……….பணிவாய்ச் சுமக்க
  குழந்தை பெற்றும்
  ……….குடும்பம் இல்லை
  அழுதால் மட்டுமே
  ……….அன்னை வருவாள்
  வியர்வை சிந்தி
  ……….வேலை செய்தும்
  துயரை நீக்க
  ……….தூளியே ஆறுதல்
  தாய்ப் பாசம்
  ……….தானாக வருவது
  தாய்மை என்பது
  ……….தரத்தினில் ஒன்றே

  தொட்டிலில் இட்டுக்
  ……….தாலாட்டி அன்னை
  பாட்டு ஒன்றைப்
  ……….பாடவும் முடியா
  கயிற்றுத் தூளியில்
  ……….குழந்தை போட்டால்
  வயிற்றை நிரப்ப
  ……….வழியிலா தாகிடும்
  பெற்ற குழவியால்
  ……….பெருமை உற்றும்
  பற்று கொண்டு
  ……….பகல் முழுதும்
  அன்னை முதுகில்
  ……….அதுவே சுமை
  தன்னைக் காக்க
  ……….தனிமை உழைப்பே

  நிலைமண்டில ஆசிரியப்பா
  (16 அடிகள்-32 அரையடிகள்)

 9. தாயும் குழந்தையும்

  மண்ணுக்கு மரம் பாரமாகுமா,

  மரத்திற்கு கிளை பாரமாகுமா,

  கொடிக்கு காய் பாரமாகுமா
  குழந்தை தாய்க்கு பாரமாகுமா

  பிழைப்பிற்காக குழந்தையை
  தோளை தூளியாக்கிச் சுமந்து
  வயிற்று பிழைப்பிற்காக தினம்
  சுமந்து செல்லும் மலைஜாதிப்
  பெண்ணே !

  உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
  உழைத்து பிள்ளையை காப்பாற்று
  கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
  நல்லறிஞ்சனாய் வளர்ப்பாயாக

  இன்று உன் நிழலில் உன் பிள்ளை
  நாளை அவன் மடியில் உன் தலை
  அவனே உன்னை தாங்கும் தூண் !
  என எண்ணி செயலாற்று !

  ரா.பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *