நிர்மலா ராகவன்

மகிழ்ச்சி எங்கே?

உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது?

மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது.

கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது.

எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்: நான் எதிர்பார்த்ததிற்கு மேலேயே என் படைப்பு வெற்றி பெற்றால்.

இவர்கள் எல்லோருடைய பதில்களிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அனைவருமே கடுமையாக உழைத்துப் பெற்ற வெற்றியால்தான் மகிழ்வடைகிறார்கள்.

மாணவரை எடுத்துக்கொண்டால், குருட்டாம்போக்கில் எவரும் பரீட்சைகளில் சிறப்பான தேர்ச்சி பெற முடியாது. எத்தனை நேரம் படித்திருக்க வேண்டும்!

இரண்டு அல்லது மூன்று மணிநேர கலைநிகழ்ச்சிக்காக ஒருவர் வருடக்கணக்கில் பயிற்சி பெறவேண்டுமே!

வாசகர் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கும் கதையை எழுத ஒரு எழுத்தாளர் ஆராய்ச்சி செய்திருப்பார், நிறைய சிந்தித்திருப்பார். அத்துடன், அதை எழுத நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருப்பார்!

ஆனால், வெற்றி பெறுகையில், பட்ட கஷ்டங்களும் செலவிட்ட நேரமும் பெரிதாகப்படுவதில்லை. பொறுக்க முடியாதவைகளையும் அனுசரித்துப்போனால்தான் நன்மையோ, வெற்றியோ கிடைக்கும்போது திருப்தியுடன் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

வாழ்வில் பிரச்னைகளே இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே தொடர்ந்து வரவேண்டும் என்றால் நடக்கிற காரியமா? பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் முதிர்ச்சி இருக்கிறது.

சிந்திப்பதும் பேசுவதும்

பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள், ஆண்கள் தமக்குத் தெரிந்ததைப்பற்றிப் பேசவே பிரியப்படுகிறார்கள் என்று கூறுவதுண்டு.

`பிடித்தது’ என்றால் அதில் வேண்டாத விஷயமும் இருக்கும். ஓயாமல் தொல்லை கொடுக்கும் மாமியார், எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிக்கும் மேலதிகாரி அல்லது கணவன் – இப்படி யார் தலையையாவது உருட்டிக்கொண்டிருப்பார்கள்.

நமக்குப் பிடிக்காத உத்தியோகமோ, வாழ்க்கைத்துணையோ அமைந்துவிட்டால், அதையே எண்ணிக் குமைவதால் என்ன பலன்? `அப்படிச்செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதால் நடந்ததை மாற்ற முடியுமா, என்ன!

நான் விளையாட்டுப் பொம்மையா?

யாரோ நம்மை இழிவாகப் பேசினால்கூட ஆத்திரம் எழுகிறது. ஒரு நிமிடம் ஆத்திரப்பட்டால், அறுபது வினாடிகள் நம் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். இதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்! பொம்மைக்குச் சாவி கொடுப்பதுபோல் பிறர் நம்மை ஆட்டுவிக்க நாமே ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்? ஒருவரது மகிழ்ச்சியைப் பறிக்க நினைப்பவர் தம்மால் அப்படி மகிழ முடியவில்லையே என்று ஏங்குபவராக இருக்கலாம் என்று புரிந்து, அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

நமக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைப்பற்றிச் சிந்திக்கும்போதும், பேசும்போதும் நம் முகம் எப்படி இருக்கும்? அவர்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு சிடுசிடுக்கிறோம். முகத்தில் மலர்ச்சி எப்படி வரும்?

கதை

இரண்டு வயதுக் குழந்தை கௌதம் கீழே விழ, நெற்றியில் காயம் பட்டு, வீங்கிவிட்டது. நான் பரிவுடன் அவன் கன்னத்தைத் தடவினேன். அப்போதுதான் வலி அவனுக்கு உறைக்க, “இந்தப் பாட்டிதான் அடிச்சா!” என்று என்மேல் குற்றம் சாட்டிவிட்டு அழுதான். சிறிது பொறுத்து, “பாட்டி அடி, அடின்னு அடிச்சா! வலி!” என்றான். பிறகு அதுவே மூன்று முறை நான் அடித்ததாக ஆக, அழுகை பலத்தது.

ஒரு பிரச்னையைப்பற்றி இடைவிடாமல் பேசினால், இப்படித்தான் பூதாகாரமாக உருவெடுத்துவிடும். `எனக்குச் சந்தோஷமே இல்லை!’ என்பது இதனால்தான். மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பி, வேண்டாத எண்ணங்களையும் நடைமுறையையும் பிறருடன் பகிர்ந்துகொள்வது வீண்.

நல்லது செய்தால் மகிழ்ச்சி

ஒரு முறை, நான் இரண்டு வெள்ளி டிக்கட்டுக்கு பத்து வெள்ளியை அளிக்க, பேருந்து ஓட்டுநர் பாக்கிப் பணத்தைக் கூடுதலாக கொடுத்துவிட்டு, முன்னால் போய்விட்டார். சிறிது பொறுத்துத்தான் கவனித்தேன். நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். நின்றுகொண்டிருந்த என் மகளிடம், அவரிடமிருந்து தவறாகப் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி அளிக்குமாறு கூறினேன். பலரையும் தள்ளிக்கொண்டு போக அவள் தயங்கினாள். “அம்மா கொடுக்கச் சொன்னதாகச் சொல்லு,” என்று அனுப்பினேன். நான் கடைசியாக இறங்கும்போது, அந்த மனிதர் என்னைப் பார்த்து நன்றியுடன், மகிழ்ந்து சிரித்தார். நான் கொடுத்திருக்காவிட்டால், அவர் கைப்பணத்தைப்போட்டு ஈடுகட்டி இருக்க நேரிட்டிருக்கும்.

சிறு சமாசாரம்தான். ஆனாலும், ஒருவரை மகிழ்வித்த மகிழ்ச்சி என் மனதில் நிலைத்திருக்கிறது.

மனமுவந்து பாராட்டுங்கள்!

ஒரு மருத்துவசாலையில் வேலைபார்த்த இளம்பெண், `குறைந்த சம்பளத்தில் ஓயாத வேலை!’ என்று சிடுசிடுப்பாக இருப்பாள்.

`சரியான சிடுமூஞ்சி!’ என்று எவர்மீதாவது குற்றம் கண்டுபிடிப்பதால் நாம் உயர்ந்துவிடுவதில்லை. தகுதியான பாராட்டுக்குத்தான் ஒருவரை மகிழ்விக்கும் சக்தி உண்டு.

ஒரு முறை, தான் கொடுக்கவேண்டிய மாத்திரைகளை எண்ணும்போது, அவள் கை இயந்திரகதியில் வேலை செய்ததைப் பார்த்து நான், “ஐ..யோ! என்ன வேகம்!” என்று வியந்தேன்.

சட்டென தலை நிமிர்ந்து, “பழகிப்போச்சு!” என்றாள். முகம் புன்னகையில் மலர்ந்தது. (`ஏன் இந்த சிடுசிடுப்பு? கொஞ்சம் சிரியேன்!’ என்றால் அவள் முகம் மலர்ந்திருக்குமா?)

முக மலர்ச்சியும் அழகும்

ஒருவரது கண், மூக்கு, வாய் போன்ற அவயவங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றனவோ, இல்லையோ, முகத்தில் மலர்ச்சி இருந்தால், முகம் அழகாகத் தென்படும். எவ்வளவுதான் அலங்காரம் செய்துகொண்டாலும், சுயநலம் கொண்டவர்களாக இருப்பவர்கள், அல்லது தெரிந்தே பிறருக்கு இன்னல் விளைவிப்பவர்கள் போன்றவர்கள் பிறர் கண்களுக்கு அழகாகத் தென்படமாட்டார்கள்.

நல்லதை மட்டும் எடுத்துக்கொள்!

வெளிநாட்டுப் பூங்கா ஒன்றில் மரத்தின்கீழ் ஒரே குப்பையாக இருந்தது. உடன் வந்திருந்த என் மகள் முகத்தைச் சுளிக்க, “கீழே பார்க்காதே, மேலே பார்!” என்றேன்.

மரக்கிளைகளில் கண்கவரும் மலர்கள்!

குப்பையா, மலர்களா? எதைக் கவனித்தால் மனம் மகிழும்?

மரம் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படித்தான். நம்மை வாட்டும் ஒருவரது குறையையே எண்ணி மனம் நோகாமல், அவரிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைக் கவனிக்கலாமே!

அப்படி எதுவும் தென்படவில்லையா? விட்டுத்தள்ளுங்கள்! பிறரைப்பற்றிய வேண்டாத யோசனையில் நம் அமைதியை, மகிழ்ச்சியை, பறிகொடுப்பானேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *