Blog

  • நவகண்டம் – அரிகண்டம்

    பவள சங்கரி

    ‘நவகண்டம்’ என்பதன் பொருள் நவம் – ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது.

    ‘அரிகண்டம்’ என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது.

    திருவாசி_சிவாலய_அரிகண்டம்

    பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும், அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய நலப்பணித் திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்களே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

    panrutti-11century

    கொற்றவைக்கு அவ்வாறு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் தங்கள் உடலை ஒன்பது பாகங்களாக, அதாவது கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாகத் தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர். இதனை வெளிப்படுத்தும் “நவகண்ட சிற்பங்கள்’ தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக பழம்பெரும் நாடான கொங்கு நாட்டில் மிக அதிகமாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.

    01mp_mamp_thenkari-_938170g

    அரச விசுவாசிகளான படை வீரா்கள் தம்மைத் தாமே பலியிட்டுக் கொள்வதற்கான பலிபீடங்கள் பட்டினப்பாக்கத்தில் இருந்தமையை இளங்கோவடிகளின் கீழ்கண்ட பாடலின் மூலம் அறியமுடிகிறது:

    வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
    நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
    உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
    மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி
    ( இந்திர விழவூரெடுத்த காதை 85-88 )

    மேற்கண்ட அடிகள் மூலம் வீரா்கள் தமது தலையைத்தாமே வெட்டி பலிபீடத்தில் வைப்பதைக் குறிப்பிடுகின்றன.

    மேலும் கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம் – திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.

    கம்பவர்மன் காலத்து நடுகல் ஒன்றில் இதைப்பற்றி சிறப்பாகக் கூறுவதைக் காணலாம்.

    “ஸ்ரீகம்ப பருமற்கி யாண்டு இருபதாவது
    பட்டை பொத்தவனுக்கு ஒக்கொண்ட நாதன்
    ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மேதவம்
    புரிந்ததென்று படாரிக்கு நவகண்டம் குடுத்து
    குன்றகத் தலை அறிந்துப் பிடலிகை மேல்
    வைத்தானுக்கு…”

    என்பது அந்தக் கல்வெட்டு வாசகம்.

    பழங்குடிகள் நிறைந்த கொங்கு நாடு பலப்பல தொன்மை வரலாறை தனக்குள்ளே கொண்டுள்ளது. இன்றளவிலும் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் பழங்குடியினர் வாழ்கின்றனர். சங்ககாலம் தொட்டு கொங்குச் சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினரில் குறிப்பிடத்தக்கவர்கள், குறும்பர், பூலுவர், காவலர், ஆவியர், சோழர் பூர்வபட்டயம் மாவலவர், குறும்பிலார், வேட்டுவர், அவ்டர், படைத்தலை போன்றவர்கள் இருந்தாலும், அவ்டர், ஆவியர், குறும்பர் போன்ற இனத்தவர் சமூக நீரோட்டத்தில் இணைக்கப் பெற்றதற்கான சான்றுகள் இல்லாவிட்டாலும், அவ்டநாடு, ஆவியர்நாடு, குறும்பநாடு போன்ற பெயர்கள் அரசியல் சமூகவியல் நீரோட்டத்தில் இருந்திருக்கின்றன. கொங்கு நாட்டில் சோழர் காலத்து பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலும் எழுத்துகள் அதிகமில்லை. கொங்கு நாட்டின் எல்லைப்புறத்தில் கிடைத்த நடுகற்கள் போன்றவற்றில் சேர, சோழ, பாண்டிய பேரரசின் முயற்சிகளால் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கொங்கு நாட்டின் வட பகுதியிலும், கருநாடக நாட்டின் தென் பகுதியிலும் வாழ்பவர்கள் வேட்டுவர்கள் என்ற கிராதர் என்கிறார் டி.என்.சுப்ரமணியம். கங்கமன்னன் சிவமாறனின் செப்பேடுகள், ‘வேட்டுவ அரசர்களின் அரன்களை எறிந்து வேட்டுவ அரசிகளைச் சிறை பிடித்தான்’ எனும் அது வடமொழியில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிற்காலச் சோழர்களின் முதலாம் ஆதித்தன் கொங்கில் ‘வேட ராஜாக்களை வென்றான்’ என்று கொங்குதேச இராஜக்கள் என்ற மரபுவழி நூல் கூறும். சிவமாறன் போரும் ஆதித்தன் போரும் கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது. ஆதித்தன் காலத்து வேட்டுவ இராஜாக்கள் பலர் இருந்தனர் என்று வேட்டுவ இராஜாங்கம் என்ற நூல் கூறுகின்றது.

    தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் …..

    தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் . வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என்றாயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி, வேட்டுவ கவுண்டர் மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். “வேர் வகையை எண்ணினாலும், வேட்டுவர் வகையை எண்ணமுடியாது” எனும் முதுமொழியும் ஏற்பட்டுள்ளது.

    வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்றும் செப்புகின்றன. வேட்டுவக் கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துகள்) உள்ளன. அவை, வேட்டுவர் நாகர் இனத்தவர், குரு குலத்தவர், கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர், கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்.

    கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறு” வரலாற்று வித்தகர், களஞ்சியச் செம்மல் பேராசிரியர் ம இரா தங்கமணி.

    ’வெட்டவெட்டத் தழைக்கும் வேட்டுவர் படை’ என்பர் அண்ணன்மார். பழங்குடி வாழ்க்கையில் படையென்று ஒரு தனிப்பிரிவு கிடையாது. பழங்குடி இனம் மொத்தமுமே ஒரு படையாகச் செயல்படும். ஒரு குழுவினர் போரில் மாண்டுவிட்டால் அடுத்த குழுவினர் போருக்குத் தயாராகிவிடுவர். உடல் பலம் உள்ளோர் அனைவரும் போர் வீரர்களே. அதனால் அவர்களை மொத்தமாக அழிக்கவே முடியாமல் இருந்திருக்கின்றனர்.

    நவகண்டச் சிற்பங்கள் – தலைபலி சிலைகள்

    mdu-navakandam

    கொங்கு நாட்டுச் சிவன் கோவில்களில் நவகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, விறல் வெய்யோன் வெட்சி சூடுக எனத்தம் அரசனை வாழ்த்தினர். வேட்டுவவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.

    இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
    சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
    சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
    குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
    இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
    வளை வெண் கோடு பறித்து, மற்று அது
    முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;

    மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
    மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
    வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
    உரிவை மேகலை உடீஇ; பரிவொடு
    கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
    திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
    பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
    கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
    பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;
    வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
    புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
    பூவும், புகையும், மேவிய விரையும்,
    ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
    ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,
    கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
    கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
    விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,
    கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி- 2. வேட்டுவ வரி 20 – 40

    இராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை இராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரசித் ஆகியோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.

    பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகின்றாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!

    ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.

    கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட, வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.

    அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

    களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்

    IMG_20171107_153621581_HDR-1-1024x576

     

     

    மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் சென்ற வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த நவகண்ட சிற்பங்கள் மண்ணிலிருந்து மீட்டெடுத்து சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் காப்பும் சாத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தினரால் மேலும் ஒரு நவகண்ட வீரர் சிற்பம், இடப்புறம் மனைவியுடனும், வித்தியாசமான ஆடை, ஆபரணங்கள் அணிந்தவாரும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இன்றும் ஈரோடு, சென்னிமலை, திருச்செங்கோடு, கபிலர்மலை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் “சாவான் சாமி’ கோயில்கள் உள்ளன. சேலத்தில் எடப்பாடி, புதுப்பாளையம், தாரமங்கலம், அத்தனூர், மணப்பள்ளி, கல்யாணி, சிங்களாந்தபுரம் ஆகிய ஊர்களில் நவகண்ட சிற்பங்கள் உள்ளன.

    காரைக்குடிக்கு மேற்கே 9.கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. இங்குள்ள குடைவரைக் கோயிலிலுள்ள கொற்றவை சிற்பம் எழில் மிக்கது. கொற்றவையின் வலப்புறத்தே வீரன் ஒருவன் “நவகண்டம்’ அளிக்க, தன் வலக்கையால் வாளை ஏந்தி அடிக்கழுத்தில் நெடுஞ்சிரத்தை அரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதேபோல கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம் – திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.

    அத்தனூர் அம்மன் கோவில் (ராசிபுரம்), சிங்களாந்தபுரம் சந்தைப்பேட்டை, புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவிலில் மூன்று நவகண்ட சிற்பங்கள் (எடப்பாடி), தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள பெண்ணேசுவர மடம் கோயிலின் முன்புறம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவகண்ட சிற்பம் என பல்வேறு சிற்பங்களைக் காணமுடிகிறது. திருவான்மூரிலுள்ள கி.பி. 889 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பட்டிப்பொத்தன் என் பவன் நவகண்டம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. அம்பலக் கூத்தன் என்ற வீரன் தன் படைத் தலைவனின் நோய் குணமாக நவகண்டம் கொடுத்துள்ளதை முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. கல்வெட்டு பொறிக்கப்படாத நவகண்டக் கற்கள் கரூர், பேரூர், அவினாசி, ஆறூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாட்டு மரபில் நவகண்டம் என்னும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    இந்த சிற்பங்கள் ஒன்றிலும் எழுத்துக்கள் இல்லை என்பதால் அவர்கள் யார் என்றும் அவர்களின் வரலாறு என்ன என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    கி.பி. 1600 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய பேரரசு பாண்டிய மன்னர்களின் மெய்காவலர்களாக இருந்தவர்கள் பண்டாரம் இனத்தைச் சார்ந்த வைராவி மட்டுமே. மன்னருக்காகத் தங்கள் இன்னுயிர் கொடுப்பவர்கள் வைராவிகள் மட்டுமே. யுத்தத்திற்கு முன்னால் ஒரு இராச இரத்தத்தை பலியாக கொடுத்தால் காளி தேவி வெற்றிக்கு உதவுவாள் என்பது ஐதீகம்.
    கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

    இந்த நிகழ்ச்சி  ஒரு பெரிய விழா போன்று நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பர்.

    நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள் :

    வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருளை நாட வேண்டியுள்ளது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது. உடல் ஆரோக்கியம் கெட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

    கடுமையான நோய் தாக்குதலால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவர் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

    குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.

    மற்றுமொரு சுவையான செய்தி – ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் பாக்கி இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவர். அந்த கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வர். பெரும் அவமானத்தைப் பெற்றபின் அதற்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புபவன் கோழையாக இல்லாமல் வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வர்.

    சோழர்களுக்கு “வேளக்கார படைகள்” மற்றும் பாண்டியர்களுக்கு “தென்னவன் ஆபத்துதவிகள்” போன்ற தற்காப்புப் படைகள் இருந்தன. அரசர் உயிருக்கு ஆபத்து நேர்கையில் கொற்றவையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாகிவிடுவர்.

    உலகின் உயிரினங்கள் அடைந்த வளர்ச்சியினை உணர்த்தும் காலக் கண்ணாடி வரலாறு என்பது. வீரதீர செயல் புரிந்தவர்களின் வரலாற்று அடையாளமாகவே இந்த நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இவை பல இடங்களில் கால வரலாற்றைக்காட்டும் முக்கிய ஆவணங்களாகவே விளங்குகின்றன.

    துணை நூல்கள்:

    கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976
    சிலப்பதிகாரம் மூலமும் உரையும் – பொ.வே.சோமசுந்தரனார், கழகப்பதிப்பு, சென்னை-1, 1973.
    சிலப்பதிகாரம் (கட்டுரைத் திரட்டு) – கா.அய்யப்பன் (பதி.ஆ.) மாற்று, சென்னை-106, 2009.
    https://tamilandvedas.com/tag/navakandam/
    David Roy, ‘The Megalithic Culture of the Khasis ANTHRORPOS.L.VIII.Pt 3 – 4. p.p522 ff’)

    .

    Share
  • பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !

    Image result for new threat to ozone layer

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    unnamed

     
    ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம்  !
    பேரளவு பேய்மழை
    ஓரிடத்தில் !
    வீரிய வேனிற் காலப்புயல்
    வேறிடத்தில் !
    மீறிய வெப்பக் கனலால்
    தானாகக்
    கானகத் தீக்கள் பற்றின !
    வன விலங்குகள்,
    மனிதர் புலப்பெயர்ச்சி !
    விரைவாகக் கடல் மட்டம்
    ஏறும் போக்கைக்
    கூறும் துணைக்கோள் !
    சூட்டு யுகப் புரட்சியில் உலகு
    மாட்டிக் கொண்டுள்ளது !
    நாட்டு மாந்தர் வயிற்றைக் கலக்கி
    வீட்டை விட்டு விரட்டுது !
    நீரின்றி, நிலமின்றி
    நித்திரை யின்றி மின்விளக் கின்றி
    மீண்டும் வரும் இழப்பு !
    நீண்ட காலத் தவிப்பு !

    ++++++++++++++++

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    பூமியின் வான்குடை ஓசோனுக்குப் புதிய ஆபத்து வருகிறது. ஓசோன் இழப்புப் பிரச்சனை தீர்ந்து விட்டதென்று எண்ணுவோர் பரவிக் கிடக்கிறார்.  இது கனடா தேசக் குபெக்கில் உள்ள மாண்டிரியால் நகரச்  சூழ்வெளிக் கோட்பாட்டின் [Montreal Protocol] ஓசோன் இழப்புக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தவறி விட்ட ரசயானத்தால் எதிர்பாராது எழுந்த ஆபத்தாகத் தெரிகிறது. இந்த ஆபத்தை ஈரோப் பூதளவியல் விஞ்ஞானக் கூட்டியக்கம்  [European Geoscience Union] சூழ்வெளி ரசாயனப் பௌதிக இதழில் 2017 அக்டோபர் 8 ஆம் தேதி [Atmospheric Chemistry & Physics Magazine] வெளி யிட்டுள்ளது.

    ஓராம் ஆய்வுக் குழுவினர் [Oram Researchers’ University]

    சைனா போன்ற கிழக்காசிய தொழிற்துறை நாடுகளில், குளிர்ச்சி வாயு எழுச்சியால்  ஓசோன் சிதைக்கும் ரசாயனங்கள் வெளிவீச்சாகித் தொழிற்துறை மாசுக்கள் வேனிற் காலத் தளங்களுக்குத் தள்ளப்படுகின்றன.  அதாவது  ஓசோன் அழிப்பு ரசாயனங்கள்,  சீர்கேடு அடைவதற்கு முன்பே  ஓசோன் அடுக்கு அரங்கத்தை நெருங்கிவிடும்.

    மாத்யூ ஆஸ்போல்டு [ஆய்வாளர், நட்டிங்ஹாம் பல்கலைக் கழகம், மலேசிய முகாம். 

    Image result for new threat to ozone layer

    பெயிண்ட் சுரண்டுவது முதல் வேளாண்மைத் தகர்ப்பு வரைப் பயன்படும் டைகுளோரோமீதேன் இப்போது ஓசோன் அழிப்பைத் துவக்கும் என்னும் ஓர் ஆபத்து ரசாயனம் என்று அறியப் பட்டுள்ளது.  1990 – 2000 ஆண்டுகளில் சூழ்வெளியில் குறைவாய்க் காணப் பட்ட இந்த ரசாயனம் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 6% அதிகமாய்ப் பெருகி வியப்பூட்டி யுள்ளது.  மேலும் இந்த எதிர் பாராத ரசாயனம் தொழிற் புரட்சி ஏற்பட்ட சைனா, இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளிலிருந்து வெளி வரலாம்.  எங்கள் மதிப்பீடு : கிழக்காசியாவில்  சைனா மட்டும் சூழ்வெளியில் சுமார் 50% -60% கொள்ளளவு டைகுளோரோமீதேன் எழுச்சிக்குப் பொறுப்பாகலாம்.

    ஓராம் சொற்பொழிவு

    Image result for new threat to ozone layer

    2012 & 2014 ஆண்டுகளில் சூழ்வெளி விஞ்ஞானிகள் தென்சைனா கடற்பகுதிகளில் மலேசியா, தைவான் தளங்களில் வாயு மாதிரிகளைச் சேமித்து, சோதிக்க இங்கிலாந்துக்கு அனுப்பினர். மேலும் ஓசோன் அழிக்கும் 50 ரசாயனங்களைச் சூழ்வெளியில் தொடர்ந்து கண்காணித்தார்.  ஆனால் அவை யாவும் கனடாவின் மாண்டிரியால் நகரத்தில் நடந்த  ஓசோன் இழப்புக் கட்டுப்பாடு கருத்தரங்கத்து நிரல்படிக் குறைந்து வருகின்றன.

    சைனாவில் கடந்த இருபது ஆண்டுகளாக ஏராளமாய்த் தயாரிக்கப்படும் பிவிசி [PVC] பிளாஸ்டி உற்பத்தியால் டைகுளோரோ மீதேன், டைகுளோரோ ஈதேன் வாயுக்கள் சூழ்வெளியில் சேர்ந்து, அவை ஓசோன் குடையை அரித்து ஓட்டையைப் பெரிதாக்குகின்றன.  இந்த புதிய ஆபத்தைத் தடுக்கவோ, குறைக்கவோ டைகுளோரோ மீதேன் வாயு சூழ்வெளியில் சேமிக்கப்படாமல் சைனா விதிமுறைகள் வகுத்துக் கையாள வேண்டும்.

    Image result for new threat to ozone layer

    Ozone Depletion??????? • What is the threat from ozone depletion? Good versus bad ozone. • What causes ozone depletion? • ...

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    உலகெங்கும் சூட்டுப் பிரளயத் துயர்கள் (ஜூலை 2007)

    இங்கிலாந்தில் 60 ஆண்டுகளாகக் காணாத பேய்மழை 2007 ஜூலையில் பொழிந்தது ! ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது ! இரண்டு மணிநேரத்தில் கொட்டியது ! பெரு வெள்ளத்தால் மக்கள் புலம்பெயர நேரிட்டது. 350,000 வீடுகளின் குடிநீர் பரிமாற்றம் தடைப்பட்டது ! இருபதாம் நூற்றாண்டில் மனிதர் தூண்டிய சூடேற்றத்தால் உலகில் பூகோளப் மழைப் பொழிவின் போக்கு மாறிவிட்டது என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் இங்கிலாந்தில் பெய்த பேய்மழைக்கு மனிதர் விளைவித்த பூகோளச் சூடேற்றமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்னும் கருத்தும் நிலவி வருகிறது.கடந்த வாரம் தாக்கிய அசுர வேனற்புயல் அடிப்பில் [Heat Wave] ஹங்கேரியில் சுமார் 500 பேர் மாண்டதாக ஹங்கேரிய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளார்கள் ! ருமேனியாவில் 35 பேர் மரணம்.

    கிரீஸில் ஒருவர் மரிப்பு. இத்தாலியின் தென்பகுதியில் வெக்கை மிகுந்து கானகத் தீக்கள் தானாகப் பற்றி இருவர் மரணம். ருமேனியாவில் உஷ்ணம் 46 C (115 F) ஏறியது. கிரீஸில் உஷ்ணம் 45 C (113 F). செர்பியாவில் [Serbia, Near Bosnia] உஷ்ணம் 43 C (109 F) ஏறி 50 காட்டுப் பகுதிகளில் தீப்பற்றி 30 பேர் மாண்டனர் ! வெப்பக் கொதிப்புத் தாங்காது செர்பியாவில் 19,000 பேர் மருத்துவ மனைகளுக்குக் கொண்டுவரப் பட்டனர். அதுபோல் 2003 ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் அடித்த வேனிற் கனல்வீச்சில் சுமார் 15,000 முதியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

    பூகோளச் சூடேற்றத்தால் உலகில் நேர்ந்த விளைவுகள்

    1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினா ஹாட்டெரஸ் முனையில் [Cape Hatteras, North Carolina] கட்டிய கலங்கரை விளக்கு [Light House] கடலிலிருந்து 1500 அடி கரை தூரத்தில் இருந்தது. நூறாண்டுக்குப் பிறகு (1980) கடல் வெள்ளம் பெருகிக் கலங்கரை விளக்கின் அருகே 160 அடிக்குள் வந்து விட்டது. தற்போது அது விழக்கூடா தென்று புதிய இடத்துக்கு மாற்றலாகிக் கட்டப் பட்டிருக்கிறது.

    1000 அடிக்கு உட்பட்டிருந்த பிளாரிடா மாநிலத்தின் வேளாண்மைப் பகுதிகளைக் கடல்நீர் தாக்கி நிலவளம் உப்புக் கலவையால் நஞ்சாகி நாசமாக்கப் பட்டிருக்கிறது.

    1915-1950 ஆண்டுகளில் ஏறிய கடல் மட்ட உயரத்தால் தென் அமெரிக்காவில் பிரேஸின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் [Region of Recife] ஆண்டுக்கு 6 அடி வீதம் குறைந்து கொண்டு வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1985-1995) கடல் மட்ட உயர்ச்சி விரைவாகி ஆண்டுக்கு 8 அடி வீதம் கடற்கரைப் பகுதிகள் சிறுத்து வருகின்றன.

    1997 இல் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் ஓஹையோ நதியில் வெள்ளம் பெருகி 30 பேர் இறந்து, 500 மில்லியன் டாலர் மதிப்பளவுக் கட்டடச் சொத்துக்கள் சேதாரம் அடைந்தன.

    1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் 50 ஆண்டுக் கோரமான நிகழ்ச்சியாக வேனிற்கால வெப்பக்கனல் அடிப்பில் 2500 பேருக்கு மேலாக மாண்டு போயினர் !

    1998 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் தொடர்ந்து 29 நாட்கள் அடித்த 38.5 C (100 F) உஷ்ணக் கனலில் பயிர் வளர்ச்சி அனைத்தும் வரட்சியால் நாசமாயின.

    1999 செப்டம்பர் மாதத்தில் ஹர்ரிக்கேன் ·பிளாய்டு [Hurricane Floyd] தாக்கி பேய்மழையும், மணிக்கு 130 மைல் வேகத்தில் பெரும் புயலும் அடித்து அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப் பட்டு 77 பேர் மடிந்தார். ஆயிரக் கணக்கான நபர் வீடிழந்தனர்.

    அண்டார்க்டிகா பனித்தளப் பகுதிகள் சூடாகிக் கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வேனிற்காலப் பனியுருக்க நாட்கள் ஓர் ஆண்டில் மூன்று வாரங்கள் கூடி யிருக்கின்றன.

    American CNN.Com News Message (July 24, 2007)

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

     

    தகவல்:

    (Picture Credits: Time Magazine April 9, 2007)1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference](April 9, 2007)

    2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3. The Assault on Reason By Al Gore (2007)

    4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

    8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

    11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

    12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

    13. The End of Nature By: Bill McKibben [2006]

    14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

    15. BBC News – Climate Change Around the World.

    16. BBC News – Billions Face Climate Change Risk

    17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

    18. Deadly Heat Wave Grips in Europe [CNN.Com#cnnSTCPhoto]

    19. Europeans Struggle to Keep Cool in Heat Wave By Cesar G. Soriano (USATODAY.com)

    20. Humans “Affect Global Rainfall ” BBC News

    21. Britains Battle Worst Floods in 60 Years By Tewkesbury, England (July 23, 2007)

    22. BBC News – Prince Sees Boscastle, (England) Devastation (July 24, 2007)

    23. https://www.sciencedaily.com/releases/2017/10/171012091009.htm  [October 12, 2017]

    24. https://phys.org/news/2017-10-reveals-threat-ozone-layer.html  [October 12, 2017]

    25. https://www.livescience.com/60860-humans-causing-climate-change-government-report.html?utm_source=notification  [November 3, 2017]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  Noverber 10, 2017] [R-1]

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (254)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலுடன் உங்கள் மத்தியில் மீண்டும் மனம் திறக்கிறேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதற்காக நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாந்தானே இந்நாட்டு மன்னன் என்று கூறி தன் மனம் போன போக்கிலே தனக்குப் பிடித்தமான விதிகளை இயற்றி வாழ்ந்து விட்டுப் போக முடிகிறதா ? ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இருக்கும் வாக்குச்சீட்டு ஒன்றே அவனுக்கு அந்நாட்டு மன்னன் எனும் அந்தஸ்தை வழங்குகிறது என்பதே பொருளாகிறது. ஒரு நாட்டின் அனைத்துப் ப்ரஜைகளினதும் மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் விளைவதில்லை. நாட்டின் முன்னேற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் எவை என்பன ஒவ்வோர் மனிதனின் மனதிலும் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கின்றன.

    ஒரு நாட்டின் மக்களின் பலதரப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே வெவ்வேறு அரசியல் கட்சிகள் தோற்றமெடுக்கின்றன. அவைகளின் தோற்றத்தின் காரணம் நியாயமிக்கதாக இருப்பினும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலட்சியம் வெறியாக உருவெடுக்கிறது. இதன் விளைவாக எந்தவழி சென்றாயினும், அன்றி எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டாயினும் தாம் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் எனும் அவா, மக்களின் நன்மையையோ அன்றி நாட்டின் நன்மையையோ இரண்டாம் பட்சத்துக்குப் பின் தள்ளிவிடுகிறது. இதுவே இன்று பல நாடுகளின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக “உண்மைக்குப் புறம்பான செய்திகள் அல்லது Fake news “ எனும் வழிமுறை மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுக்கிறது. சமூகவலைத்தளங்களின் மூலம் பல மக்களை சென்றடையக்கூடிய அனுகூலத்தினால் இவ்வகையான மாயச்செய்திகள் பிரபல்யம் பெற்று விடுகின்றன.

    இங்கிலாந்தின் பிரபல்யமான அகராதியான Collins Dictionary எனும் அமைப்பின் தகவலின்படி நடந்து கொண்டிருக்கும் இவ்வாண்டில் இந்த Fake News எனும் பதமே அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் எனும் பதம் எனப்படுகிறது. இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரதிகூலம் ஒன்றுண்டு. அதாவது ஒரு நாட்டின் தலைவரையோ அன்றி அந்நாட்டின் நிர்வாக இயந்திரங்களின் முக்கிய உறுப்புகள் அன்று உறுப்பினர்கள் மீதோ சுமத்தப்படும் பல உண்மையான குற்றச்சாட்டுகளைக் கூட அவர்கள் ” மாயச்செய்திகள் அன்றி Fake News “என்று மிக இலகுவாக உதறித் தள்ளி விட்டுச் செல்லும் ஒரு நிலையைப் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் பல நேர்மையான , உண்மையான மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் அரசியலை விட்டு ஒதுங்கிச் செல்லும் நிலையைக் காண்கிறோம். இது எம்மை உலக வரலாற்றின் மிக இருளடைந்த ஒரு காலகட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமோ எனும் அச்சம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் தோன்றியுள்ளது. உலக அரசியல் மாற்றங்கள் ஒரு வலுவான சினேகபூர்வமான நிலையை விட்டு விலகிச் செல்லும் நிலை போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது.

    கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பனோராமா எனும் நிகழ்ச்சியில் திடுக்கிடும் பல உண்மைகள் நிறைந்த செய்திகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. “அப்பில்பீ” எனப்படும் ஒரு நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அந்தரங்க கோப்புகள் கணிணியின் இரகசிய பாதுகாப்பை உடைக்கும் குழுவினரால் ஹக் செய்யப்பட்டு ஜெர்மனிய செய்திநிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஜெர்மனியில் இத்தகைய அந்தரங்க கோப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனங்களைக் கூட்டி அவர்களுக்கு இக்கோப்புகளின் பிரதிகளைக் கொடுத்தார்கள். அவ்வரிசையில் இங்கிலாந்த்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.ஸிக்கும், கார்டியன் பத்திரிகைக்கும் இக்கோப்புகளின் பிரதிகள் கொடுக்கப்பட்டன. அக்கோப்புகளின் அடிப்படையில் இங்கிலாந்து பி.பி.ஸி நிறுவனம் மேர்சொன்ன நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்பியிருந்தது.

    இங்கிலாந்தின் பல கோடீஸ்வரர்கள் இங்கிலாந்தின் வரியிலிருந்து தப்பிப்பதற்காக தமது பணத்தை வரிவிலக்களிக்கும் பெர்மியூடா போன்ற நாடுகளில் முடக்கியிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களின் அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பான செய்கைகள் அல்ல சட்டத்தின் பல ஓட்டைகளை உபயோகித்து அரசர்கள் இத்தகைய வழியில் இங்கிலாந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்கள். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, மற்றும் போலிஸ் இலாகா ஆகியவை நிதிப் பற்றாக்குறையினால் அல்லாடிக் கொண்டு இருக்கும் நிலையில் கோடி,கோடியாக சம்பாதிக்கும் பலர் இத்தகைய வழியில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணத்தைக் கட்டாமல் இருப்பது தேசத்துரோகத்துக்கு நிகரானது எனும் வாதம் பல மூலைகளில் இருந்து ஒலிக்கிறது. இத்தகிய சிக்கல் இங்கிலாந்தின் மகாராணியைக் கூட விட்டு வைக்கவில்லை. அவரின் பணத்தைக் கையாளும் நிறுவனம் இத்தகைய வரிவிலக்களிக்கும் நாட்டில் முதலீடு செய்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது. அது மட்டுமின்றி தற்போது பதவியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய நிதி உதவியாளர் இத்தகைய வழியில் தானும் வரி கட்டாமல் தப்பியிருப்பதும் தெரிய வந்துள்ளது, இது இங்கிலாந்தின் அரசுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய உறவு கொண்டவரும்,வியாபார அமைச்சருமான ஒருவருக்கும், இரஸ்ய அதிபருக்கு நெருக்கமான ஒருவருக்கும் இடையிலான வியாபார உறவுகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நாட்டின் சாதாரணப் பிரஜை எனும் பகடைக்காயை உருட்டி அந்நாட்டின் பிரபலங்கள் தமக்குள் விளையாடிக் கொண்டிருப்பது போன்றே எண்ணத் தோன்றுகிறது. இது வந்த வழியில் இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம் ! (1-7)

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி-1

    து.சுந்தரம், கோவை

    அலைபேசி:     9444939156.

     

             கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.

             கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.

             இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.

             கல்வெட்டு எழுத்துகள் ”தமிழி” என்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.

             முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய்  (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர்

    கல்வெட்டு எழுத்துகள் - மெய் 2

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2

                                

             முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 3

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 3

             உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 4

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 5

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4

             “ல” முதல் “ற”  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 6

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 7

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி 5


    இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.

    Kalvettu27 9

    எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

    கல்வெட்டின்  பாடம்

    —————————-

    த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம

    த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)

    பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப

    ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி

    சேய் முக்கால் திருப்பள்ளித்தொ

    (தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்

    பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)

    ண்டு மஞ்சாடியுங் குன்றி – திருப்ப(ள்)

    எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை

    ——————————————————

    1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
    2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
    3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
    4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்

       “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.

    1. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு.

    இன்னுமொரு கல்வெட்டு.

    கல்வெட்டின் பாடம்

    —————————–

    VadaSuvar60 10

    முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

    இருபத்தாறாவது நாள் நூற்று

    மேற்படி கல்லால் நிறை

    ழஞ்சு –  நாளதினாலேய் கு

    டுத்த பொன்னின் கலச

    பொன்னின் தட்டம் ஒன்

    ல்  நிறை ஐய்ம்பதின் க

    கவனிக்கவேண்டியன

    ——————————

    1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
    2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து

        மாறுபட்டுள்ளது.

    1. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு

       முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.

    ——————————————————————————————-

     

     

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-6

             சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

    வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

    வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

    வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

    வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

    வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

    வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

    வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் …. லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

    வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல …… நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ

    சில விளக்கக் குறிப்புகள் :

    • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
    • அருஞ்சொற்பொருள் :

    உடையார் = அரசர்

    எறிந்து = வென்று

    பண்டாரங்கள் = கருவூலங்கள்

    ஈஸ்வரம் = சிவன்கோயில்

    பரமஸ்வாமி = இறைவன்

    சின்னங்கள் = பொருள்கள்

    ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்

    காளாஞ்சி = தாம்பூலக்கலம்

    கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று

    கரண்டிகை = பானை போன்ற கலம்

    இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்

    மூழல் = மூடி

    தளிகை = தட்டு அல்லது உண்கலம்

    • கல்வெட்டின் செய்தி :

    முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

    • சில நுட்பங்கள் :

    நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

    வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

    அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

    • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

    கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.

    ——————————————————

    kirantham 11

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி : 9444939156.

    Share
  • ’’ரமண வசனாம்ருதம்’’….!

     

    ‘’தள்ளலும், கொள்ளலும், தானாம் யதார்த்தத்திற்(கு)
    எள்ளளவும் இல்லைகாண் எய்ததை: -துல்லிய
    வெண்தா மரைஇதயம் வேதம் இருக்கும்(ம)அக
    கண்தாவென்(று) ஈசரிடம் கேள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • உயர் நோட்டு மதிப்பிழப்பின் ஓராண்டில் மக்களின் நிலை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்தலும், விற்பனை மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றை மக்கள் பெருவாரியாக எதிர்ப்பதாக எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 38% பேர் முழு ஆதரவும், 30% பேர் நன்மைகளும் தீமைகளும் இருப்பதாகவும், 32% பேர் மட்டுமே எதிர்ப்பதாகவும் இதனால் வேலையிழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தற்காலிகமானதே என்றும் பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த சதவிகிதத்தினரே இந்த வேலையின்மை பிரச்சனை நிரந்தரமானது என்றும் தெரிவித்துள்ளனர். 2000 ரூபாய் நோட்டை முடக்குவதற்கும் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலில் இதனால் மக்களின் அதிருப்தி என்பது மாயத்தோற்றமாகத் தெரிவதாகப் புலப்படுகிறது.

    Share
  • நீலிக்கண்ணீர் என்றால் என்ன?

    பவள சங்கரி

    வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால் கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள் பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள். அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல் அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அது தன் மனைவி அல்ல, பேய் என்று அவன் அச்சத்தோடு வாதிடுகிறான். ஆனால் மக்கள் அதை நம்பாமல் ஒருவேளை அவன் பேய் என்று சந்தேகிக்கும் அந்தப் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்களும் தீக்குளிப்போம் என்று சமாதானம் செய்கிறார்கள். ஆனால் பேயான நீலி அவனைக் கொன்றுவிட அந்த மக்கள் சொன்னதுபோல் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் என்ற பதம் வருகிறது. நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும், எந்த பாவமும் செய்யாத சிலரும் உயிர் துறந்தது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும், வாணிகர்கள் துன்பம் அடைந்ததற்கும் குறியீடாகச் சொல்லப்பட்ட கதையாகக் காணமுடிகிறது.

    படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
    பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
    கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
    ………………
    (விவேக சிந்தாமணி—பாடல் 30)

    Share
  • இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

     -முனைவர்.வே.மணிகண்டன்

    தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

    திண்ணை இதழ் அறிமுகம்

    ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

    திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

    அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள், அறிவிப்புகள் ஆகிய பகுதிகளில் ஆக்கங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    இணையப் புத்தக அங்காடியின் இணைப்பும், ஜெயபாரதன் இணையப்பக்கம் எனும் வலைப்பதிவின் இணைப்பும், தோழி.காம், வார்ப்பு, தமிழோவியம், மரத்தடி, பதிவுகள் ஆகிய இணையத்தமிழ் இதழ்களின் இணைப்புகளும், அகத்தியர் யாஹு குழுமம், ராயர் காப்பி கிளப்,  யாஹு குழுமம், தமிழ் உலகம் யாஹு குழுமம் ஆகிய தமிழ் இணையக் குழுமங்களின் இணைப்புகளும் திண்ணை இதழில் தரப்பட்டுள்ளன. திண்ணைத் தளத்திலேயே படைப்புகளையும், தகவல்களையும் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் , பிரதி எடுக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளன.

    திண்ணை இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    திண்ணையில் பல வகையான இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வழங்குகின்றனர். கதை, கவிதை, நாடகம், நாவல் போன்ற தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய இதழ்களைக் காணும் பகுதிக்கு சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்துத் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

    ’திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், கட்டுரைகள் மூன்று வகையானவை. முதலாவது படைப்பாளிகளே திண்ணைக்கு அனுப்பிப் பிரசுரிக்கக் கோருபவை. இப்படிப்பட்ட படைப்புகள் வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அந்தப் படைப்பாளிகளையே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன. இரண்டாவது, திண்ணைக் குழு மொழிபெயர்க்கும் படைப்பாளிகள். இந்தக் கட்டுரைகளை திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்யத் தேவையான அனுமதி பெரும்பாலும் திண்ணை பெற்றிருக்கிறது. கேட்ட அனுமதி திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்ய மட்டுமே. இவைகளை மறு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமெனில் அந்தந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் எழுத வேண்டும். இந்த மொழிபெயர்ப்பையே நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில் ‘மொழிபெயர்ப்பு திண்ணை’ எனக் குறிப்பிடுதல் நலம்.  மூன்றாவது படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை எனக் குறிப்பிடுதல் நலம். படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை ஒரு சில கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரித்திருக்கிறது. அந்தப் படைப்பாளிகளின் முகவரி தெரியாதது ஒரு காரணம். சிலவற்றிற்கு நேர்ப்பேச்சில் அனுமதி பெற்றதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட முக்கியமான படைப்புத் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது இன்னொரு  காரணம் ‘1  எனத் திண்ணையில் வெளிவரும் படைப்புகளின் தரவேற்ற நிலைபற்றித் திண்ணை ஆசிரியர் விவரிக்கின்றார்.

    திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்குக் காணமுடிகிறது. திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்குக் காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் என்று சொல்லலாம் ‘2 என மதியழகன் சுப்பையா திண்ணைப் படைப்பாளிகளைப் பற்றித் தமது திண்ணை. காம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ‘திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளுக்கான பிரசுர உரிமை அவற்றை ஆக்கியவர்களுக்கே. அவர்கள் வேறு எந்தப் பத்திரிகையில் அவற்றை மறுபிரசுரம் செய்தாலும், அந்த விசயத்தைத் திண்ணைக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.  திண்ணையில் இந்தத் தேதியில் ஏற்கெனவே பிரசுரமானது என்ற விசயத்தை குறிப்பிடவும் தேவையில்லை (அப்படி குறிப்பிட்டால் திண்ணை ஆசிரியர் குழு நன்றி பாராட்டும்). திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, வெறும் தனிப்பட்ட கோபதாபங்களுக்கான வடிகாலாய் எதையும் எழுதாதீர்கள்’3.  திண்ணை ஆசிரியர் குழு எழுதியுள்ள இக்கடிதத்தில் தரவேற்றம் செய்யப்படும் படைப்புகளின் படைப்புரிமை, படைப்புகளையும் கருத்துக்களையும் எழுதும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.

    திண்ணை மூலமாகப் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். பல புதிய வாசகர்கள் தமிழுக்குப் கிடைத்துள்ளனர். முன்பே எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு வாசகத் தளம் விரிவு பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் கட்டுரைகள் மட்டுமின்றிச் சமகால அரசியல், சமூகம், தமிழ்நாட்டின் வாழ்நிலை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

    கவிதைகள்

    திண்ணையில் கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் படைப்பாளர்களால் அனுப்பப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவால் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கவிதைகளின் பாடுபொருள்கள் தனிமனிதச் செயல்பாடுகள், காதல், மொழிபெயர்ப்பு, புலம்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றைச் சார்ந்தே அமைகின்றன. தஸ்லீமா, அல் ஹண்டர் (யுட ர்ரவெநச), இ ரவீந்திரநாத் தாகூர், அல் பேர்டி, கைஃபி ஆஸ்மி, சுவாமி விவேகானந்தர், கவிஞர் அருண் கொலட்கர், பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகிய கவிஞர்களின் படைப்புகள் மொழிபெயர்த்துப் படைப்பாளர்களால் திண்ணையில் இடப்பட்டுள்ளன.

    ருத்ராவின் வைரமுத்துவின் வானம், கனடாவைச் சேர்ந்த சி.ஜெயபாரதனின் தமிழாக்கத்தில் காதல் நாற்பது, காற்றினிலே வரும் கீதங்கள் , தாகூரின் கீதங்கள்  பா.சத்தியமோகனின் பெரியபுராணம், கோபாலின் மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும் போது ஆகிய தலைப்புக்களில் திண்ணை இதழில் தொடர் கவிதைகள் வெளிவந்தன.

    திண்ணை ஆசிரியர் குழுவின் முயற்சியினால் சிறப்பான கவிதைகள் புத்தகங்களில் கண்டறிந்து மொழிபெயர்த்தும் வெளியிடப்பட்டுள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஜல், ஹைபுன், சென்ரியு ஆகிய வகைமைகளில் திண்ணையில் கவிதைகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவினரால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    கதைகள்

    திண்ணை இதழில் பிரபல படைப்பாளர்கள், அயல் நாட்டுப் படைப்பாளர்கள், புதுமுகப் படைப்பாளர்கள் என அனைத்துப் படைப்பாளர்களின் சிறுகதைகளும் ஐந்நூற்றுக்கும் மேல் இடப்பட்டுள்ளன. பிரபல படைப்பாளர்களின் சிறுகதைகள் பெரும்பாலும் படைப்பாளர்களின் அனுமதி பெற்றுத் திண்ணை ஆசிரியர் குழுவால் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தமிழில் சிறுகதை வடிவத்தையும், அறிவியல் புனைகதை வடிவத்தையும் வளர்த்தெடுக்கும் பொருட்டுத் திண்ணை மற்றும் மரத்தடி இணைந்து சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தி பரிசுகளை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது.

    திண்ணையில் மதுமிதா எனும் படைப்பாளரால் மொழிபெயர்க்கப் பட்ட ’தைவான் நாடோடிக் கதைகள்’ சிறுகதைத் தொடராக வெளிவந்தது. மேலும் , காப்ரியல் கார்ஸியா, மார்க்வெஸ், லாரி ஃப்ரெஞ்ச், டேவிட் பெஸ்மொஸ்கிஸ், பெர்னாட்சா  ஆகியோரின் சிறுகதைப்  படைப்புகள் திண்ணையில் பல படைப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுக் கதைகள் பகுதியில் இடப்பட்டுள்ளது. தமிழில் பிரபல எழுத்தாளர்களான  நீல பத்மநாபன், வல்லிக்கண்ணன், அசோகமித்ரன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், அம்பை, வண்ணதாசன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, அஸ்வகோஸ், அழகியசிங்கர், அ.முத்துலிங்கம், விந்தன், பூமணி, புதுமைப்பித்தன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளும் திண்ணையில் தரவேற்றப்பட்டுள்ளன. திண்ணை சிறுகதைகள் பெண்ணியம், புலம்பெயர்வு இலக்கியம், சமுதாயம், காதல், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

    நாவல்கள்

    நாவல் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் தளமாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. திண்ணை இதழில் வெளிவரும் நாவல்கள் பெரும்பாலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் நாவல்களாகவே அமைகின்றன. திண்ணையில் கு.அழகிரிசாமியின் முகக்களை, எம்.வி.வெங்கட்ராமின் மாளிகை வாசம், ஆதவனின் சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல், வ.ஐ.ச.ஜெயபாலனின் செக்குமாடு, சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்), ஜெயமோகனின் நான்காவது கொலை, இரா.முருகனின் வாயு (குறுநாவல்) , அரசூர் வம்சம், ஷங்கரநாராயணனின் பறவைப்பாதம், திசை ஒன்பது திசை பத்து, ராகு கேது ரங்கசாமி, க.அருள் சுப்பிரமணியத்தின் விடியும்,  கோச்சாவின் கனவின் கால்கள் (நாவல் தொடர்) , ரெ.கார்த்திகேசுவின் புழுத் துளைகள் (குறுநாவல்), முகம்மது இஸ்மாயிலின் பிறந்த மண்ணுக்கு, அ.ம.ந.ராமசாமியின் துணை, ஜாவா குமாரின் திருவண்டம், சி.ஜெயபாரதனின் கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல்), ஜோதிர்லதா கிரிஜாவின் மறுபடியும் , அதிர்ச்சி (குறுநாவல்) , ஒரு மகா பாரதம், நாகரத்தினம் கிருஸ்ணாவின் மாத்தா – ஹரி, நீலக்கடல்; கௌரிகிருபானந்தனின் மொழிபெயர்ப்பில் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் ஆகிய நாவல்கள் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    நாடகங்கள்

    இணையத்தமிழ் இதழ்களிலேயே அதிகமான நாடகங்கள் தரவேற்றப்பட்ட இதழாகத் திண்ணை திகழ்கின்றது. திண்ணை இதழில் மொழிப்பெயர்ப்பு நாடகங்கள் அதிக அளவில் இடப்பட்டுள்ளன. திண்ணையில் அகஸ்ட் ஸ்ட்ரிண்ட் பெர்கினுடைய ஒரு நாடகம், இன்குலாப்பினுடைய அத்தனை ஒளவையும் பாட்டிதான் (ஒளவையிலிருந்து), சின்னக் கண்ணனுடைய நிழல், ஜெயமோகனுடைய வடக்குமுகம், புதுமைப் பெண்மணி வேலுப்பிள்ளையினுடைய கனடாவின் நாகம்மா, கணேசனுடைய இருள், ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள், சி.ஜெயபாரதனுடைய மொழிப்பெயர்ப்பில்  நரபலி நர்த்தகி ஸலாமி (ஓரங்க நாடகம்), உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்), புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்சா நாடகத்தின் தழுவல்), ஆப்ரஹாம்லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்), கரு.திவரசினுடைய ஐயம், சந்தேகம், அயிர்ப்பு, வெறிச்சென்று ஒரு வீதி, தௌஃபீக் அல்-ஹகீம்னுடைய ஓர் அரேபிய நாடகம் ஆகிய நாடகங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இந்த நாடகங்களில் பல நாடகங்கள் தொடர் நாடகங்களாக வார வாரம் வெளிவந்துள்ளன.

    திண்ணை இதழில் கவிதைகள், கதைகள் ஆகியவை தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாவல்கள், நாடகங்கள் ஆகிய படைப்பிலக்கியப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படவில்லை. எளிதில் இணையப் பயனர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் இப்பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும். நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    பதிவுகள் இதழ் அறிமுகம்

    பதிவுகள் இணைய இதழானது மாசி 2000-இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. இணையத்தமிழைப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல் , அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு பதிவுகள் இதழ் செயல்படுகிறது.

    பதிவுகளின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்  ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது (தொராண்டோ) கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபின் இவரது ஆக்கங்கள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன ‘தாயகம்’, ‘தேடல்’, ‘கணையாழி’, ‘துளிர்’, ‘சுவடுகள்’, ‘உயர் நிழல்’, ‘ஆனந்த விகடன்’, ‘சுபமங்களா’ மற்றும் இணைய இதழ்களான ‘திண்ணை’, ‘அம்பலம்’, ‘ஆறாந்திணை’, ‘மானசரோவர்.காம்’ ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. 2000-ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

    பதிவுகள் இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    ’தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் இணையத்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால் அவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதன் மூலம் அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாகப் பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படிக் கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்ட போது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளைக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும், பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் , பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது என ஆசிரியர் வ.ந.கிரிதரன் பதிவுகள் இதழின் ஆரம்பகால படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகளைக் குறிப்பிடுகின்றார்‘4.

    பதிவுகள் முதல் இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகள் சிலவும் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகளும் வெளியிடப்பட்டன. மேலும் , இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா., கா.சிவத்தம்பி மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் முதல் இதழில் இடப்பட்டுள்ளன.

    தொடக்க காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துரு பாவிக்கப்பட்டு பின்னர் அது முரசு அஞ்சலில் மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யுனிகோர்டில் (லதா எழுத்துருவில்) பாவிக்கப்பட்டு வெளிவருகின்றன.

    ‘அரசியல் கவிதை, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம் ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தகக் கையேடு, இலவச வரி விளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி எனப் பல அடுக்குகளைக் கொண்டு கனத்துக் கிடக்கிறது. இந்தத் தளம், உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி. சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்கிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளைத் தக்க ஓவியங்கள், புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்குப் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளைப் பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கியம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத்தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்தத் தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்தத் தளத்தை திறக்கலாம். தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவார்கள். உடனடியாக இந்த இணைய இதழைக் காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது’5 எனப் பதிவுகள் இதழின் படைப்பிலக்கியம் பற்றி மதியழகன் சுப்பையா தமது வலைப்பதிவில் பதிவுகளில் விவரிக்கின்றார்.

    மாத இதழாக வெளிவரும் பதிவுகள் இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை அறிவியல், சினிமா, நூல்விமர்சனம், நாவல், உங்கள் நலம், விவாதம், உளவியல், சமூகம், உலக இலக்கியம் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்கள் இடப்படுகின்றன. மேலும் , நிகழ்வுகள், வாசகர் எதிரொலி, இலவச வரி விளம்பரம், தமிழ் வர்த்தகக் கையேடு போன்ற பிரிவுகளும் பதிவுகள் இதழில் இணைய உலாவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியா, இலங்கை, கலிபோர்னியா, மலேசியா, கனடா, சுவிஸ், பிரித்தானியா, சிங்கப்பூர், பாரீஸ், நியூயார்க், பிரான்ஸ், செர்மனி, டென்மார்க் உட்பட உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பதிவுகள் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இவ்விதழ் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் படைப்புக்களையும் ஏற்கிறது. பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாக இணையப் பயனர்கள் அறியம்படி வெளியிடுகிறது.

    பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வம், ரஞ்சி(சுவிஸ்), பாராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா, செல்வகுமாரன், இராஜேஸ்வரி, பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், டி.செ.தமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந்த்;, சூரியா, இரா.முருகன், சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஸ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன்;, என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி;, வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன் எனப் பல பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள் வரை எழுதியுள்ளார்கள்.

    ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் படைப்புகளும் பெரும்பகுதி முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனேடிய, சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் இதழாகவும் பதிவுகள் திகழ்கின்றது. குழந்தைகள் இலக்கியத்திற்கான சிறப்புப் பக்கங்களையும் இவ்விதழ் தன்னகத்தே பெற்றுள்ளது. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் உலகத்தமிழ் மக்களின் கலை, அரசியல், இலக்கிய முயற்சிகள் மற்றும் புகலிடவாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், தகவல்கள் ஆகியவை அக்கறையில் எனும் பகுதியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    கவிதை

    பதிவுகள் இணைய இதழில் கவிதை பிரிவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் இடப்பட்டுள்ளன. இப்பிரிவு அதிகமான படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ள பிரிவாகவும் இணைய உலாவிகள் அதிகம் உலாவும் பிரிவாகவும் திகழ்கிறது. புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய வடிவங்களில் கவிதைகள் இடப்பட்டுள்ளன. காதல் கவிதைகள் குறிப்பிட்ட அளவு இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன.

    பெண்ணியம், மார்க்சியம், புலப்பெயர்வு இலக்கியம், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புலப்பெயர்வு சார்ந்த கவிதைகளாகவும், காதல், தனிமனித நடத்தை ஆகியவை சார்ந்த கவிதைகளாகவும் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு கவிதைகளும் இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எவ்விதத் திருத்தமும் இன்றி படைப்பாளிகளின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அறிமுக, பிரபல எழுத்தாளர்களின் கவிதைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி வெளியிடப்படுகின்றன.

    சிறுகதை

    பதிவுகள் இதழில் கதைகள் பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கதைகள் தனி மனித நடத்தைகள், புலம் பெயர்வு, சமூகம், அறிவியல் சார்ந்த கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகின் பலப் பகுதிகளில் வாழும் படைப்பாளர்களின் சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் இடப்பட்டுள்ளன.

    மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்த்த ழான்-ரொபெர் எல்ஸாவின் தோட்டம், தொனினோ பெனகிஸ்ட்டாவின் கறுப்புப் பேழை, டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் மொழிபெயர்த்த ஜோ பாசின் அன்னைக்கு, மார்கரெட் லாரன்சுவின் உண்மையான ஆரியன் ஆகிய உலகச் சிறுகதைகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    சிறுகதை இலக்கியத்தை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லவும், புதியப் படைப்பாளர்களை உருவாக்கவும் பதிவுகளும் நந்தா பதிப்பகமும் இணைந்து 2004-ஆம் ஆண்டு தமிழர் மத்தியில் எனும் சிறுகதைப் போட்டியை நடத்தியது. உலகின் பலப்பகுதிகளில் இருந்தும் அறிமுக மற்றும் பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை அளித்தார்கள். படைப்புகள் நடுவர்களால் நடுநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான படைப்புகள் பதிவுகள் இதழில் தரவேற்றம் செய்யப்பட்டன.

    நாவல்

    நாவல் பகுதியில் அ.ந.கந்தசாமியின் மனக்கண், மைக்கலின் ஏழாவது சொர்க்கம் ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளன. மற்ற பிற நாவல்கள்  கதைகள் மற்றும் சிறப்புப் பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதிக்குப் பெரும் பங்களிப்பை இவ்விதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அளித்துள்ளார். பதிவுகளில்  புலம்பெயர்வு, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கிய வகைமைகளைச் சார்ந்த நாவல்கள் பெருமளவில் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன.

    நாகரத்தினம் கிருஷ்ணாவின் குறுநாவலான திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம், ஆபிதீனின் ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா, அமெரிக்கா  மண்ணின் குரல் (வன்னி மண், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும் மற்றும் மண்ணின் குரல் ஆகிய நாவல்களின் தொகுப்பு), கனிஸ்காவின் சிறுவர் நாவலான ரினோ, மொழிபெயர்ப்பு நாவல்களான அ.ந.கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட எமிலி ஸோலாவின் நானா, நாகரத்தினம் கிருஷ்ணாவினால் மொழிபெயர்க்கப்பட்ட மார்கெரித் த்யூராவின் காதலன் ஆகிய நாவல்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாடகம்

    பதிவுகள் இதழ் நாடக இலக்கியத்திற்குக் குறிப்பிட்ட அளவே பங்களித்தள்ளது. பதிவுகள் இதழில் கவிதை, கதை, நாவல் ஆகிய படைப்பிலக்கியங்கள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாடக இலக்கியம் தனிப்பிரிவாகப் பிரித்து வைக்கப்படவில்லை. அ.ந.கந்தசாமியால் எழுதப்பட்ட தாஜ்மகால் உதயம் பற்றிய நாடகமான கடைசி ஆசை, வ.ந.கிரிதரனால் எழுதப்பட்ட ஓரங்க நாடகமான யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க ஆகிய நாடகங்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பதிவுகளில் பெரும்பாலும் நாடகங்கள் கதைப் பிரிவுகளிலும் தனி நபர் சார்ந்த சிறப்புப் பிரிவுகளிலும் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாவல் இலக்கியத்திற்குத் தனிப்பிரிவு இருந்தும் கூட அதில் சில நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டள்ளன. நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.இணையப் பயனாளர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் படைக்கிலக்கியப் பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும்.

    [தொடரும்]

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • சித்தக் கனவு

    -விவேக்பாரதி

     

     

    கண்மூடிக் கட்டிலிலே கனவோடு சாய்ந்திருக்கப்

    பண்பாடும் நெஞ்சகத்தில் பாழாக ஒருகேள்வி

    கேட்டது ! நெஞ்சம் கிளர்ந்தது ! கேள்விதனைக்

    கேட்டவரார் அஃதறியேன்! கேள்விமட்டும் எதிரொலியாய்!!

    உண்மைக்குப் பொருளென்ன? ஊர்வாழ வழியென்ன?

    பெண்மைக்கு விடையென்ன? பேரழகுந் தான்என்ன?

    என்றெல்லாம் கேட்டிருந்தால் ஏதேனும் கவிசொல்லி

    மன்றத்து முன்னவரின் மரியாதை உரைசொல்லி

    தூங்கி இருப்பேன்! தோன்றிவந்த கேள்வியதோ

    ஏங்கிட வைக்கும் எக்காளக் கேள்வியம்மா!

    என்தேவை யாதென் றென்னை யாரோ

    தன்தேவை தீரத் தடுத்தங்கு கேட்டுவிடத்

    தேவையென்று நானெதனைத் தெளிந்துரைப்பேன் தெய்வதமே!!

    தேவையென்றால் யாதென்றே தெரியாத பிள்ளையன்றோ!!

    விட்டில் பூச்சிக்கு விளக்கொளிதா னேதெரியும்!

    சிட்டுக் குருவிக்கு சிறுநெல் தானேதெரியும்!

    பாடசாலை பயில்கின்ற பச்சிளம் பாலகனைத்

    தேடலரும் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம்

    பெருங்கேள்வி கேட்டுவிட்டால் பேதை என்செய்வேன்!

    குரங்குக்குக் கீதைக் குணமூட்டல் சாத்தியமா?

    கண்கட்டிக் காதலனைக் காட்டுக்குள் விட்டதுபோல்,

    பண்கூட்ட மறந்ததொரு பாடகனின் மேடைபோல்,

    அச்சம் எதிலும் அச்சமயம்! அச்சமயம்,

    உச்சிக் குடுமியை உயரே பிடித்திழுத்துக்

    காதைத் திருகிக் கனிவான கொட்டுவைத்து

    எழுப்பி விட்டதொரு ஏகாந்த அருட்சோதி!

    ஆகாச மார்க்கத்தில் ஆழ்ந்துவந்த நற்ஜோதி!

    ஏகாரம் சேர்கவிபோல் எழும்பிவந்த பொற்சோதி!

    “ஏடா பிள்ளாய்! எழுத்தறிவும் பெற்றிலையோ

    மூடா! முன்னவர்கள் மொழிந்தனவும் கற்றிலையோ?

    நின்தேவை விளம்ப நிமிடங்கள் பலநூறோ?

    என்கேள்விக் கதுசொல்” என்றென்னை அதட்டிடவே

    ஒன்றும் புரியாமல் ஓரசைவும் காட்டாமல்

    வன்புலியைக் கண்டவொரு வளையெலிபோல் காட்டுக்குள்

    சிங்கத்தைக் கண்டவொரு சிறுநரிபோல் நின்றிருந்தேன்!

    அங்கதற்குள் ஒருமாற்றம் அண்டிப் பயங்கொடுக்கச்

    சட்டென்று விழித்தேன் சகலமும் பின்னறிந்து

    பட்டென்று பேனாவைப் பாசத்தோ டெடுத்ததற்குச்

    செல்ல முத்தங்கள் சிலவிட்டு வாழ்த்திட்டு

    வெல்லத் தமிழணங்கை வென்று தொழுதிட்டு

    தேவை யாதென்று தெளிவாய் எழுதவந்தேன்!

    “தேவை தெரிந்துவிட்டால் தேவனாகிப் போவேனே!”

    அதற்குள் இன்னுமொரு அழகான இளம்பெண்ணாள்

    பதுமை, சிரிக்கின்ற பால்குடம்! இதழ்ச்சிவப்பால்

    என்னை அழைக்க எழுதவந்த கதைமறந்து

    மின்னேர் உடல்புல்லி மீண்டுமீண்டும் முத்தமிட்டு

    மோகப் பெருமயக்கில் மொத்தமும் மறந்ததுபோல்!

    ஏகக் காதலே இதயமெலாம் நின்றதுபோல்!

    உச்சக் கலைதொட் டுடல்விட்டு வானுலக

    எச்சம் அடைந்தேன்! ஏராளப் பறவைகள்

    கூடி முயங்கிக் குதிக்கும் விசும்பிடையே

    பாடி மகிழ்ந்தேனப் பாவை கைவிலகப்

    பதறி விழித்தேன் பார்வை திருத்திச்

    சிதறிய விழிக்கோணம் சிந்தாமல் சேர்த்து

    மணிபார்த்தேன்! மணியெட்டு மயக்கம் தீர்ப்பதற்காய்க்

    கனிந்த காலை,”சித்தக் கனவென்று சொல்லியதே!!

     

     

    Share
  • “அவன், அது , ஆத்மா”

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்
    10.11.2017

    அத்யாயம்: 55

    கீழாம்பூர் S. சங்கர சுப்பிரமணியன்

    அவன் 1990ஆம் வருடம் மகரசங்கராந்தி (பொங்கல்) அன்று குருநாதரைத் தரிசிக்கச் சிருங்கேரிக்குச் சென்றிருந்தான். குருவைத் தரிசித்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு முன்பே பழக்கமான, “Call of Sankara”  என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எம்.சுப்பிரமணியன் என்பவர், “ஆசார்யாள் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் என்றும், அது முன்பு வெளிவந்து கொண்டிருந்த “சங்கர கிருபா”வைப் போன்று சிறந்த ஆன்மிகப் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாகச் சொல்லி, தமிழிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்ட உனக்குத் தெரிந்த இளைஞரை என்னோடு தொடர்பு கொள்ளச் சொல்லு” என்று அவனிடம் கேட்டுக் கொண்டார். அவனும் முயற்சி செய்வதாக அவரிடம் உறுதி கூறினான்.

    கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்சென்னைக்குத் திரும்பிய இரண்டு தினங்களில் “நெல்லை கலாசார சங்கம்” என்ற அமைப்பு நடத்திய ஒரு கூட்டம் அண்ணா சாலையில் இருக்கும் மத்திய நூலகத்தின் மாடியில் உள்ள ஒரு அறையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் அருமையாக உரையாற்றியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரின் பெயர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் என்று அறிந்து கொண்டான். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இளைஞரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,” உங்களுக்குச் சொந்த ஊர் கீழாம்பூரா?” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்லி தன்னையும் அவனிடம் அறிமுகப் படுத்திக் கொன்டார். அந்த நேரத்தில், தான் சமீபத்தில் சிருங்கேரி சென்று வந்த விபரத்தையும், எம்.எம்.சுப்பிரமணியம் என்ற அன்பரின் கருத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான். உடனேயே,” சார்..எங்களுக்கும் சிருங்கேரி ஆசார்யாள்தான் குரு”.  தானே ஒரு பத்திரிகையைத்  துவக்க வேண்டும் என்ற விருப்பத்தில் “அம்மன் தரிசனம்” என்ற பெயரையும் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், விரும்பினால் இந்தப் பெயரையே அவர்கள் பயன் படுத்திக் கொள்ளக் கொடுத்து விடுகிறேன்” என்றும் சொன்னார். மேலும் தமிழறிஞர் பி.சி.கணேசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “இந்து மதம் அழைக்கிறது” என்ற பத்திரிகைக்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாசுவாமிகளைச் சந்தித்துத் தான் கண்ட நேர்காணலையும் அவனுக்குப்  படிக்கக் கொடுத்தார்.   அவன் அவரிடம் விடை பெரும் பொழுது,” நீங்கள் எம்.எம்.எஸ். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைச் சொல்லுங்கள் என்றார்”. அவன் அன்று இரவே சிருங்கேரியில் இருக்கும் எம்.எம்.சுப்பிரமணியம் அவர்களுடன் தொலைபேசியில் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனை சந்தித்த விபரங்களைச் சொல்லி, விபரமாகக் கடிதமும் எழுதி மறுநாள் அனுப்பி வைத்தான். அதன் பிறகு எம்.எம்.எஸ். அவர்களிடம் இருந்து பத்திரிகை தொடங்குவது பற்றி, கீழாம்பூருக்கும், அவனுக்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து  இருந்து வந்தது.

    “அம்மன் தரிசனம்” மாத இதழ் பிறந்த கதை

    ஒரு நல்ல நாளில் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனை சிருங்கேரிக்கு அழைத்து, “அம்மன் தரிசனம்”  என்ற பெயரிலேயே மாதப் பத்திரிகையைத் தொடங்குங்கள். ஸ்ரீ சாரதாம்பாள்நீங்களே ஆசிரியராக இருங்கள். உங்களுக்குப் பரிபூர்ண ஆசீர்வாதம்” என்று ஆசார்யாள் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ சாரதாம்பாள் பதித்த ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், மந்திராக்ஷதையையும் கொடுத்து, சென்னைக்குச் சென்றதும் திரு. எஸ். விஸ்வநாதன் (என்பீல்ட் சேர்மன்) அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று அனுப்பி வைத்ததாக அவனிடம் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சொன்னார்.

    ஒரு வாரம் சென்றதும் “கீழாம்பூர்” அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார்… என்பீல்ட் விஸ்வநாத மாமாவைப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்” என்று அழைத்தார். இருவரும் திருவான்மியூர், சிவசுந்தர் அவின்யூவில் இருக்கும்  திரு. என்பீல்ட் விஸ்வநாதன் அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் வரும் விபரமறிந்து வைத்திருந்த திரு. என்பீல்ட் விஸ்வநாதன், இருவரையும் அன்போடு வரவேற்று, கீழாம்பூரிடம் புதிய பத்திரிகை தொடர்பான விபரங்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு பத்திரிகையைத் துவங்க என்னென்ன தேவையோ அவைகளை மிகவும் தெளிவாக எழுதி ” என்பீல்ட் விஸ்வநாதன்” மாமா அவர்களிடம் கீழாம்பூர் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துப் படித்து மிகுந்த மகிழ்ச்சியோடு, “எல்லாம் நல்ல படியாக நடக்கும். கவலைப் படவேண்டாம். “அம்மன் தரிசனம்” என்ற இந்த ஆன்மிகப் பத்திரிகையில் வரும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் சிறப்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பத்திரிகையின் தர்மம். அலுவலகத்திற்கான இடத்தையும் உடனேயே பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றார்.

    அம்மன் தரிசனம் இதழில் திரு. ஏ.என்.சிவராமன் அவர்களைக் கொண்டு “வேத மந்திரங்கள்” என்ற பெயரில் ஒரு தொடரை எழுதவும், பெரிய புராணத்தின் நாயன்மார்களின் கதையை, சிறுகதையாக எழுத எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்கவும் எண்ணம் இருக்கிறது என்று கீழாம்பூர் சொன்னவுடன், ” ரொம்ப சந்தோஷம். ஏ.என்.சிவராமனை உங்களுக்குப் பழக்கம் உண்டா என்றதும், “அவர் எனக்குத் தாத்தா முறை. அவர்தான் எனக்கு குரு” என்று கீழாம்பூர் சொன்னார். இந்த உரையாடலின் பொழுது என்பீல்ட் திரு. விஸ்வநாதன் அவர்களின் மனைவி திருமதி. கோமதி விஸ்வநாதனும் உடனிருந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். “விஸ்வப்ரியா” என்ற பெயரில் கதைகளும், சிறுகதைகளும் எழுதியவர். விகடனில் முத்திரைக் கதைகளும் எழுதி இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் நல்ல பாண்டித்தியம் கொண்ட மிகவும் பண்பான பெண்மணி.

    மயிலாப்பூரில் எல்டாம்ஸ் சாலையில் ஒரு அறையை வாடகைக்குப் பார்த்தோம். மாத வாடகை ரூபாய் ஐயாயிரம். முன்தொகை ரூபாய் பத்தாயிரம் என்று பேசி இந்தத் தகவலை திரு. விஸ்வநாத மாமாவிடம் கீழாம்பூர் சொன்னார். இடம் போதுமானதாக இருந்தது. முதல் இதழுக்கான கதை, கட்டுரை, கவிதைகளைக் கீழாம்பூர் தேர்வு செய்து, மயிலாப்பூரில் இருந்த “முருகன் பிரிண்டிங் பிரஸ்” மூலம்    மிக அருமையாக அச்சாகி “அம்மன் தரிசனம்” பத்திரிக்கையின் முதல் இதழ் 1990ம் வருடம்   செப்டம்பர் மாதம் வெளியானது. அப்பொழுது அந்த மாத இதழின் விலை ரூபாய் ஐந்து.

    இதழைச் செம்மையாகக் கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் கவிஞர் முருகதாசன், பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, கங்கா ராமமூர்த்தி, பி.ஆர்.விஸ்வநாதன், ஓவியர் ஜகன், அலுவலக உதவியாளர் குணசேகரன் ஆகியோர். அவனும் அம்மன் தரிசனம் இதழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தான்.

    கலைமகள் மாதப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக கீழாம்பூர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அம்மன் தரிசனம் இதழுக்கு கவிஞர் முருகதாசன் ஆசிரியரானார். அவர் சிறந்த மரபுக் கவிஞர். நேர்மையாளர். அவர் ஆசிரியராக இருக்கும் பொழுதுதான், 2006ம் வருடம் ஸ்ரீ சங்கர ஜயந்தி மாத இதழில் “ஸ்ரீ ஆதி சங்கர அத்வைத காவியம்” என்ற பெயரில் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை, மாதவீய சங்கர விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடராக எழுதி வந்தான். கவிஞர் முருகதாசனுக்குப் பிறகு ஜெ.எஸ்.பத்மநாபன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அம்மன் தரிசனம் வெள்ளிவிழா கண்டு மிகச் சிறப்பாக நடந்து வருவது குறித்தும், அது நூற்றாண்டைக் கடந்து பல்லாண்டுகள் ஆன்மிகப் பணியில் தொடர்ந்து வர அவனும், கீழாம்பூரும் குருவிடம் வேண்டிக் கொள்வதுண்டு. “அம்மன் தரிசனம்” அவர்களின் குழந்தை அல்லவா!கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் கலைமகள் பத்திரிக்கையில் நல்ல அறிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கும் அவருக்கு மணிவிழா சென்ற வருட இறுதியில் நடைபெற்றது.

    மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் இலட்சுமணன் (லெமன்) அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் “லெமன்” அவர்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்து கொண்டு வந்தது. அவன் எழுதிய “மிருதங்கம்” என்ற சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தார். கலைஞன் பதிப்பகம் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் “மிருதங்கம்” சிறுகதையும் தேர்வாகி இடம்பெற்றது அவனுக்கு மகிழ்ச்சி.  இலட்சுமணன் (லெமன்) மஞ்சரியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதன் ஆசிரியராக செங்கோட்டை ஸ்ரீராம் பொறுப்பேற்றார். அவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தது கீழாம்பூர்தான். இன்றும் அவனுக்கு ஸ்ரீராம் நல்ல நண்பர்.

    கீழாம்பூரின் குடும்பமே அவன் மீதும், குடும்பத்தார்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பதும், அவனுக்கு நல்ல நண்பனாகக் கீழாம்பூர் கிடைத்ததும் குருவின் அருள்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்…

    Share
  • அறிஞர் நன்னன் அவர்களுக்கு அஞ்சலி

     

    Nannan_1_10024

     
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.
    நானிலத்தோர் நாளும் வாழ
    நல்ல தமிழ் நவின்ற நன்னா!
    நற்றமிழர் வாழ்வுயர நற்றமிழைக்
    காத்த தமிழ்க் காரி!
    இன்தமிழ் இலக்கணத்தை
    இன்சுவையாய் எடுத்துரைத்து
    இளையோரின் இதயத்தில்
    இடம்பிடித்த இலக்கண மன்னா!
    கொடிகாத்த குமரனைப் போல்
    தமிழ் மொழி காத்த தூயவனே!
    பகுத்தறிவுப் பகலவனாய்
    பார்போற்ற தமிழ் வளர்த்தாய்
    நன்னன் முறை என்றுலகோர்
    நற்றமிழ் வளர வழிவகுத்தோய்!
    சாத்துக்குடலில் பிறந்திட்ட தமிழ்க்கடலே!
    பதினேழு ஆண்டுகளாய் பாமரரும்
    பைந்தமிழைக் கற்றுக் கொள்ள
    பைந்தமிழைக் கற்பித்த பாவலனே!
    என்றமிழைக் கற்பதற்கோ
    எமனுன்னை வானுலகம் அழைத்திட்டான்
    எழுபது நூல்களையே எளிதாய் எழுதி எங்கள்
    ஏற்றத்திற்கு வித்திட்ட
    ஏற்றமிகு தமிழ்ப் புலவ!
    தொடக்க கல்வி முதல் உயர்கல்வி நிலையம் வரை
    தொடங்கியதே உம் பணியே!
    நற்றமிழ் வளர்க்கும் அறப்பணியே!
    தன்னை வளர்க்காது
    தமிழ்தனையே வளர்த்திட்ட
    தரணி புகழ் தமிழ் நன்னா! உலகில்
    வந்த பணி முடிந்ததென்று
    வானுலகப் பணியேற்று
    வானுலகம் சென்றனையோ?
    மொழிகாத்து இனம் காத்து
    தமிழர் நலம் காத்த தமிழ் நன்னா!
    தமிழும் தமிழுலகும்
    உலகும் உள்ளவரை
    உம்புகழ் நிலைத்திருக்கும்
    தமிழர் நாவில் நன்னா உம் பெயரொலிக்கும் அதில்
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.

     

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 10

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை முதலில் அறிந்தவள் தோழியே. அதனைச் சொல்லித் தலைவியை மகிழ்விக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு தலைவியின் இல்லம்நோக்கி விரைந்துவந்தாள்.

    அயலார் தலைவியை மணம்பேசிவிட்டுச் சென்றபின் தலைவி முன்புபோல் அதிகமாய் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; இற்செறிக்கப்பட்டாள். (இல்லத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுதல்). அவளின் மலரன்ன முகத்தில் நொதுமலர் மணம்பேசிச் சென்றதிலிருந்தே மலர்ச்சியில்லை; உடல் மெலிந்தும் உளம் நலிந்தும் ஓர் நடைப்பிணமாகவே அவள் நடமாடி வந்தாள் எனலாம்.

    தலைவியைக் கண்ட தோழி, அவள் உளமறியாது, ”இவளைச் சிறிதுநேரம் வம்புக்கிழுத்துவிட்டுத் தலைவனின் வரவைப் பின்னர் அறிவிப்போம்” என்று குறும்பாக எண்ணியபடி தலைவியைப் பார்த்தாள். ”என்ன இது? தலைவனையன்றி எனை மணக்க ஒருவராலும் ஏலாது; அவனைக் கண்டதும் கானவனின் அம்புக்கு அஞ்சியோடும் குரங்குகள்போல் மணம்பேசவந்த அயலார் சிதறுவர் என்று என்னிடம் சவால்விட்ட பெண்ணா இப்படிச் சுணங்கியிருப்பது?” என்றாள் கேலியாக.

    SONY DSCதலைவனின் வருகை தாமதமாகிக்கொண்டே இருப்பதால் மனம்நொந்திருந்த தலைவி, ” நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாது, கறக்கும் பாத்திரத்திலும் வீழாது, தரையில் சிந்தி வீணானது போல், என் மாமைப் பேரழகு எனக்கும் கவின் சேர்க்காது, என் தலைவனுக்கும் இன்பம் பயவாது, பசலையால் உண்ணப்பட்டு அழிகின்றது” என்று வேதனையோடு விளம்பவும், தோழி தன் குறும்புப் பேச்சைச் சட்டென நிறுத்தினாள்.

    கன்றும்  உண்ணாது  கலத்தினும்  படாது
    நல்லான்
     தீம்பால்  நிலத்துக்  காஅங்கு
    எனக்கும்
     ஆகாது  என்னைக்கும்  உதவாது

    பசலை  உணீஇயர்  வேண்டும்
    திதலை
     அல்குல்என்  மாமைக்  கவினே. (குறுந்: 27 – வெள்ளிவீதியார்)

    மாமைக் கவின் என்பது மாந்தளிர் வண்ணத்தைக் குறிக்கும். பெண்களுக்கு இவ்வண்ணம் பேரழகு பயக்கும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    பசலை என்பது என்ன? இது பெண்களின் உடலில் ஏற்படும் ஒருவகை நிறமாற்றம்; காதலரைப் பிரிந்த ஆற்றாமையால் சரியாக உண்ணாமலும் உறங்காமலுமிருக்கும் மடந்தையரின் மேனி மெலியும்; சற்றே வெளிறும். அதனால் மாறுபட்ட ஒருவகையான (பசும்)பொன்னிறம் அவர்கள் உடலில் படரும். இதனையே பசலை என்கின்றனர் பைந்தமிழ்ச் சான்றோர். (In English this condition is called Green Sickness; also known as ‘The Disease of Virgins’). பசலை படர்ந்தால் மாமைக் கவின் அழியும்.

    இப்பசலை நோய், காதலரைப் பிரிந்த பெண்டிரை மட்டுந்தான் தாக்குமா? காதலியரைப் பிரிந்த ஆடவரைத் தாக்காதா? என்றொரு கேள்வி நம்முன் எழலாம்.

    ஆடவரைப் பசலை நோயொடு தொடர்புபடுத்திய பாடல்கள் ஏதும் நம் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை.

    காரணம் என்னவாயிருக்கும்?

    ”பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல். பொ. 98) என்று பழந்தமிழிலக்கணம் ஆடவருக்கு (வீர)இலக்கணம் வகுத்துவிட்டபடியால், ”காதலர் பிரிவால் பசலை பாய்வதும், அழகு தேய்வதும் நங்கையர்க்கே உரித்தானவை; நம்பியர்க்கு இழுக்கானவை” என்று புலவர்கள் முடிவுகட்டிவிட்டனர் போலும். இன்றுங்கூட ”ஆண்பிள்ளைஅழுவது கூடாது” எனும் சொலவடை நம்மிடம் புழக்கத்தில் இருப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாவம் ஆண்கள்! துன்பம் நேர்கையில் அழக்கூட அவர்களுக்கு உரிமையில்லை!

    சரி…வருந்திப் புலம்பிக்கொண்டிருக்கும் தலைவியின் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்!

    தான் கவினழிந்து பொலிவிழந்து நிற்கத் தலைவனின் பிரிவாற்றாமையே காரணம் என்ற தலைவி தோழியிடம் தொடர்ந்து கூறலுற்றாள்…

    cockfight”தலைவரைக் கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளிய தீயானது, என் என்பை (எலும்பை) நலிவுறச்செய்யினும், அவரை விரும்பிச்சென்று அளவளாவுதற்கு அரிய காட்சியள் ஆகிவிட்டேன் (இற்செறிக்கப்பட்டதால்). அவரும் தாமாகவந்து என் துன்பத்தை நீங்கச் செய்தாரல்லர். இந்நிலையில் என் காமநோயானது, அதனைக் களைவோர் இன்மையால், குப்பைக்கோழிகளின் தனித்த சண்டைபோல் தானே அழியவேண்டியதுதான்!” என்றாள் குரல் தழுதழுக்க.

    ”என் நோய் களைவோர் இல்லை” என்று தலைவி பொடிவைத்துப் பேசியதன் உட்பொருள், அவள் துயர்தீரத் தோழி உதவவேண்டும் என்பதே. அவளன்றித் தலைவியின் ஆரஞர் களைவார் ஆருளர்?

    கண்தர   வந்த   காம   ஒள்ளெரி
    என்புற   நலியினும்  அவரொடு  பேணிச்
    சென்றுநாம்  முயங்கற்கு  அருங்காட்  சியமே
    வந்தஞர்  களைதலை  அவராற்  றலரே
    உய்த்தனர்  விடாஅர்  பிரித்திடை  களையார்
    குப்பைக்  கோழித்  தனிப்போர்  போல
    விளிவாங்கு  விளியின்  அல்லது
    களைவோர்  இலையான்  உற்ற  நோயே.  (குறுந்: 305 – குப்பைக்கோழியார்)

    தலைவனைக் கண்டபோதே  தலைவியின் நெஞ்சம், ஊழின் வலியால், அவன்பாற் காமங் கொண்டதாகலின், ’கண்தர வந்த காம ஒள்ளெரி’ யென்றாள்.

    கண்தாம்  கலுழ்வ  தெவன்கொலோ  தண்டாநோய்
    தாம்காட்ட
     யாம்கண்  டது. (1171)

    படலாற்றா பைதல்  உழக்கும்  கடலாற்றாக்
    காமநோய்  செய்தஎன்  கண். (1175) எனும் குறட்பாக்கள் இக்குறுந்தொகை அடியோடு ஒப்புநோக்கத்தக்கவை.

    குப்பைக்கோழியின் போரைத் தலைவி ஈண்டுக் குறிப்பிடக் காரணம், போரின்பொருட்டு வளர்க்கப்படும் சேரிக்கோழிகளின் போர், பெருந்திரளான மக்கட்கிடையே நிகழும்; ஆனால் குப்பைக்கோழிகளின் போரைக் காண்பாருமிலர்; அப்போரால் அவையுறும் துயர் களைவாருமிலர். ஆதலால் துயர்மிகுந்த தன்னிலையைக் குப்பைக்கோழியின் நிலையோடு பொருத்திப்பார்த்து வருந்துகிறாள் தலைவி. இயற்பெயர் அறியவியலா இப்பாடலின் ஆசிரியர் ’குப்பைக்கோழியார்’ என்றே குறிக்கப்படுகின்றார்.

    தலைவியின் சொற்கள் கண்ணீரில் நனைந்து வெளிப்பட்டதைக் கண்ட தோழி, இனியும் காலந்தாழ்த்தலாகாது என்று தீர்மானித்து, தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை அவளிடம் தெரியப்படுத்தினாள். அச்செய்தி தலைவியின் அகவாட்டத்தைச் சற்றேபோக்கி அவள் முகத்தில் மலர்ச்சியை வருவித்ததெனினும், வேற்று வரைவை மாற்றும் ஆற்றல் தலைவனுக்கு இப்போதிருக்குமா எனும் ஐயம் அவளுள் கிளர்ந்தெழவே, மீண்டும் அவள் முகம் கூம்பியது. தோழியிடம் தன் ஐயத்தைப் புலப்படுத்தினாள். அது நியாயமானதே என்றுணர்ந்த தோழி, இச்சிக்கலைத் தீர்க்க என்ன வழி என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.

    இருவழிகள் அவளுக்குப் புலப்பட்டன!

    ஒன்று…தலைவியின் தமரிடம் அவள் காதலைத் தெரிவித்துக் காதல் மணத்துக்குச் சம்மதம் பெறுவது; ஆனால், வேற்று மணத்தை நிகழ்த்திவிடுவதற்கான மணநாளைக் குறிப்பதில் இருவீட்டாரும் முனைந்திருக்கும் இத்தறுவாயில், தலைவியின் காதலை வீட்டுக்குச் சொல்வதால் தலைவிக்குச் சாதகமாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை; மாறாகத் தலைவியின்மீது அவள் பெற்றோர் சினமும் சீற்றமும் கொள்ளவே அது வழிவகுக்கும். எனவே அந்தவழி பயன்படாது!

    மீதமிருக்கும் ஒரேவழி ’உடன்போக்கு’ என்று எண்ணமிட்டவள், தலைவன் தலைவியைத் தன்னூருக்கு உடனழைத்துச் சென்று மணப்பது ஒன்றே இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒரேவழி எனும் முடிவுக்குவந்தாள். தலைவியிடம் அதைக்கூறவும் அவள் மருண்டு நோக்கினாள் தோழியை!

    அவளைத் தெளிவிக்க எண்ணிய தோழி, ”அருமைத்elephant_tiger தோழி! நீ வாழி! என்று தலைவியை வாழ்த்திவிட்டு, மிக்க வலியினையும் பிளந்த வாயினையுமுடைய பெரிய ஆண்புலியானது, மதத்தால் நனைந்த கவுளையுடைய, அண்ணல் யானையின் அழகிய முகத்தின்கண்ணே பாய, அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது குருதியால் செவ்விய கறைகொள்ளச் செய்து, மலைப் பள்ளத்திலுள்ள, மேலைக் காற்றால் வீழ்த்தப்பட்ட, கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்துகிடக்கும். அத்தகு  உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன் உடன்போவதை நீ எண்ணுவாயாக” என்றாள் உறுதிபட.

    நினையாய்  வாழி  தோழி  நனைகவுள்
    அண்ணல்  யானை  அணிமுகம்  பாய்ந்தென
    மிகுவலி  இரும்புலிப்  பகுவாய் ஏற்றை
    வெண்கொடு   செம்மறுக்  கொளீஇ  விடர்முகைக்
    கோடை  யொற்றிய  கருங்கால்  வேங்கை
    வாடுபூஞ்  சினையிற்  கிடக்கும்
    உயர்வரை  நாடனொடு  பெயரும்  ஆறே.  (குறுந்: 343 – ஈழத்துப் பூதந்தேவனார்)

    இப்பாடலில் வலிமிகு புலியொன்று தலைவன் நாட்டு யானையின்மீது தானாகப் பாய்ந்து காயப்பட்டு இறந்துபோகும் நிகழ்வு பேசப்படுகின்றது. தலைவன் நாட்டு யானை, சிரமமின்றிப் பகையை எளிதில் வீழ்த்துவதுபோல், தலைவனும் இடையூறுகளை எளிதில்வெல்லும் பேராற்றல் படைத்தவன் எனும் செய்தி இதனுள் பொதிந்துகிடக்கின்றது.

    தோழி நயந்த உடன்போக்குக்குத் தலைவி உடன்பட்டாளா?

    [தொடரும்]

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 34

    க. பாலசுப்பிரமணியன்

    எப்போது வருவான்? எப்படி வருவான்?

    திருமூலர்-1-3

    அடியார்களைப் படைத்தது மட்டுமின்றி அவர்கள் உள்ளத்தில் தானே ஒளிவடிவாக அமர்ந்து அவர்களுக்கு அன்பு நெறிகாட்டி அருளால் ஆட்கொள்ளும் ஆனந்தியாக இருக்கின்றான் இறைவன்! பாசத்தால் கவரப்பட்டு ஐம்பொறிகளின் தூண்டுதலுக்கு அடிமையாகி சத்தான வாழ்க்கையின் உண்மைப்பொருளை மறந்த உயிர்களுக்குத்  தானே கைகொடுத்து அவர்களுக்கு ‘பிறவாப் பெருமையை’ தன் அருளால் அளிக்கின்ற பெருந்தகை அவன். அவன் அகத்திலே எப்படி நுழைந்தான்? நம் பிறப்போடு வந்தானா? பின் வந்தானா? நமது ஊழ்வினையின் சத்தாக வந்தானா? வந்தவன் ஏன் அமைதியாக உள்ளே உறங்கிவிட்டான் ? அவன் நினைத்திருந்தால் நம்மை இந்தத் துயரக்கடலிலிருந்து எப்பொழுதோ காப்பாற்றி ஆட்கொண்டிருக்கலாமே ? அவன் இவ்வளவு என நேரம் தாமதமாய் வரக் காரணம் என்ன?

    அவனைக் காண்பதற்கு திருமூலர் என்னவெல்லாம் செய்தார்?

    ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

    தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்

    கூடியவாறே குறியாக குறிதந்து என்

    ஊட நின்றான் அவன் தன் அருள் உற்றே

    அவன் ஒருவனையே மனதில் நிறுத்தி வேறு ஏதும் வேண்டாத நிலையில் இருக்கும் பொழுது இந்த உலகில் உள்ள எந்தப் பொருளும் நமக்கு வேண்டாததாகவும் விருப்பமற்றதாகவும் மாறிவிடும். இந்த நிலையில் சுற்றமும் சூழலும் கூட நமக்கு பாரமாகத் தோன்றும்.  இந்த நிலைதான் மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது.

     உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

    கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனிமையும்

    குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே !

    இத்தனையையும் செய்து அவன் அருளை பெற அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் ?

    அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே

    அகம் புகுந்தும் தெரியான் அருளில்லார்க்கு

    அகம் புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய்

    அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியே !

    அகம் புகுந்தும் தெரியாதவனாய் மறைந்து நின்று எந்த நேரத்தில் நம்மை ஆட்கொள்ளவேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக வந்து காப்பவனாகத் திகழ்கின்றான் அந்தப் பேரருளாளன்!  அவன் அகத்தில் அமைதியாக இருந்த பொழுது என்ன செய்து கொண்டிருந்தான்? நம்முடைய மதியையும் செயலையும் கண்டு ஆராய்ந்து கொண்டிருந்தானா? அல்லது விதிவழி நடக்கும் செயல்களை ஒரு மௌனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தானா? கேள்விகள் எழுகின்றன. சரியான பதில்கள் கிடைப்பதில்லை. திருமூலரின் கீழ்கண்ட பாடல் அதற்கு ஒரு விளக்கம் அளிப்பது போல் இருக்கின்றது

     பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை

    மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு

    செய் இருள் நீக்கும் திருவுடை நந்தி என்

    கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.

     மை இருள், செய் இருள் மற்றும் கை இருள் என்ற ஸ்தூல இருளையும், அஞ்ஞானத்தால் பிறக்கும் செய் இருளையும் மற்றும் ஆசைகளால் எழும் மலத்தினையும் நீக்கி நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றான்.

    பட்டினத்தாரோ அவன் செய்யும் செயல்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி அவனுடைய அளவில்லாத அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்

    ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானு மிங்கு ஒன்றொடொன்றை

    மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்ற வினை

    காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

    ஆட்டு விப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே !

     இப்படியெல்லாம் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் இறைவன் தன்மையென்ன? அவனை எப்படித்தான் வர்ணிப்பது? “தனக்குவமை இல்லாதான் ” என்று வள்ளுவர் கூறும்பொழுது அந்த உவமையில்லாதவனை கற்பனையில் கூட நம்மால் காண முடியாதோ? அவனுக்கு என்ன வண்ணம்? அவன் குணங்கள் எப்படிப்பட்டவை?

    ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

    ஒரூர னல்லன் ஒருவ னில்லி

    அப்படியும் அந்நிறமும்அவ் வண்ணமும்

    அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

    இப்படியும் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொண் ணாதே.

    எனது திருநாவுக்கரசர் கூறும்பொழுது  அவனை உள்ளத்தில் உணர்வால்தான் அறியமுடியும் என்ற உண்மை தெளிவாக நமக்கு விளங்குகின்றது.

    இறைவனுடைய இந்த அளவற்ற பரந்த கற்பனைக்கடங்கா நிலையை வலியுறுத்தும் வண்ணம் வள்ளலார் கூறுகின்றார் :

    பொங்கும் சமயமெனும் நதிகளெலாம்

    புகுந்து கலங்கிட நிறைவாய்ப்

    பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே “ 

    வடமொழியில் காலையில் கதிரவனை வணங்கும் பொழுது வந்தனையிலே இவ்வாறு சொல்லும் வழக்கமுண்டு ” எவ்வாறு ஆகாயத்திலிருந்து வருகின்ற நீரானது பெருகிக் கடலையே சென்று அடைகின்றதோ அதுபோல எந்தக் கடவுளை வாங்கினாலும் அது ஒரே இறைவனைச் சென்று அடைகின்றது“

    தொடருவோம்

    Share
  • பகவான்(ரமணர்) உவாச….!

     

    ’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல
    பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம்
    மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார்
    நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (247)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்தார்.  இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்லக்கூடாது என தலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது. தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும்  தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

    மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் குடியேறினார் மலாலா. இவரது 17ம் வயதில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

    இவ்வருடம் இவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. தன் மேல்படிப்புக்காக உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்பர்டு பல்கலைகழகத்தில் சேர இவருக்கு சீட்டு கிடைத்தது. அத்துடன் இவ்வாரம் “மலாலாவின் மேஜிக் பென்சில்” எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான இந்த நூலை இவர் வெளியிட்டது பெண்கல்விக்கு உதவும் வண்ணம் இருப்பதால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    பெண்கல்வி, பெண்முன்னேற்றம், பழமைவாத மூடநம்பிக்கைகளை சாடல் என பெண்களின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழும் செல்வை மலாலாவை பாராட்டி இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா போல பெண்கல்விக்கு பாடுபட அனைவருக்கும் இது ஊக்கம் அளிக்கும் என வல்லமை நம்புகிறது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    நன்றி

    https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி

    Share