இந்த வார வல்லமையாளர் (247)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்தார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்லக்கூடாது என தலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது. தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் குடியேறினார் மலாலா. இவரது 17ம் வயதில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
இவ்வருடம் இவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. தன் மேல்படிப்புக்காக உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்பர்டு பல்கலைகழகத்தில் சேர இவருக்கு சீட்டு கிடைத்தது. அத்துடன் இவ்வாரம் “மலாலாவின் மேஜிக் பென்சில்” எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான இந்த நூலை இவர் வெளியிட்டது பெண்கல்விக்கு உதவும் வண்ணம் இருப்பதால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெண்கல்வி, பெண்முன்னேற்றம், பழமைவாத மூடநம்பிக்கைகளை சாடல் என பெண்களின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழும் செல்வை மலாலாவை பாராட்டி இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா போல பெண்கல்விக்கு பாடுபட அனைவருக்கும் இது ஊக்கம் அளிக்கும் என வல்லமை நம்புகிறது.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
நன்றி
https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி