Blog

  • மழலை மொழி !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    குழலினிது யாழினிது என்பர்  ஆனால்

    குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது

    மழலைகள் நிறைந்திடும் போது அங்கு

    மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

     

    கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்

    குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை

    கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்

    குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !

     

    ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு

    ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து

    நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது

    நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !

     

    கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்

    குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்

    கோபங்கள் ஓடியே போகும் அவர்

    குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !

     

    வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்

    தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்

    புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு

    அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !

    Share
  • பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?

    பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ?

    தாறுமாறான சுயத்தோற்றமா  ?

     unnamed

    unnamed (1)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும்.

    அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.

    பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  அந்த நூலகத்தின் கோடான கோடி நூல்களை எழுதியது யார் ?  எப்படி அது எழுதி வைத்துள்ளது ? ஏன் எழுதி இருக்கிறது ?  எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார் ஐன்ஸ்டைன் !  இருபதாம் நூற்றாண்டின் சவால் அப்பிரபஞ்ச மர்மத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்ற மன உறுதியே.

    பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது  எத்தனை பெரியது ?  பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ?  பூமியின் வயதென்ன ?  நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?

    சூரியனைச் சுற்றும் அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி & நிலவு, செவ்வாய், புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ எப்படி உருவாயின ? அக்கோள்கள் ஒவ்வொன்றும் ஏன், எப்படி, எப்போது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தன ? ஈர்ப்பியல் கவர்ச்சி என்பது என்ன ? ஈர்ப்பியல் கவர்ச்சிக்கு எதிரான விலக்கு விசை என்னும் கருஞ்சக்தி எப்படித் தோன்றியது ? நமது சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது ? பேரொளி வீசி வால் நீண்ட வால்மீன்கள் எங்கிருந்து சூரிய மண்டலத்துக்கு வருகின்றன ? அண்டவெளிப் பிண்டம் எப்படி உண்டானது ?  முரண்கோள்கள் என்பது என்ன ? ஒளிமந்தை நடுவே உள்ள பூத விழுங்கியான கருந்துளை என்பது என்ன ? காலக்ஸிகள் என்னும் ஒளிமந்தைகள் எவ்வாறு உருவாகி வளர்ந்தன ?  பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? பிரபஞ்சம் ஒன்றா, பலவா ?  இணைப்பிரபஞ்சங்கள் உள்ளனவா ?  சோப்புக் குமிழிபோல் பிரபஞ்சம் தொடர்ந்து விரிகிறதா ? மெதுவாக விரிகிறதா ? அல்லது விரைவாக விரிகிறதா ?  அவ்விதம் விரிந்து கொண்டே போய் இறுதியில் முறிந்துவிடுமா ?  ஒளிமந்தைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் என்ன நேர்ந்திடும் ?

    சூரிய குடும்பத்திலே மிகவும் புதிரான அமைப்பு கொண்ட பூமியில் மட்டும் ஏன் பயிரினங்கள், உயிரினங்கள் தோன்றின; எப்படித் தோன்றின; எப்போது தோன்றின; உலகிலே உன்னத படைப்பான, உயர்ந்த மூளையுடைய மானிடர் பூமியில் மட்டும் தான் தோன்றினாரா ? வேறு அண்டவெளிக் கோள்களிலும் உயிரினங்கள் வசிக்கின்றனவா ? பூமியில் மூன்றில் இருமடங்கு பரப்பை நிரப்பிய பேரளவுக் கடல் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? உப்புக்கடலாய் எப்படி மாறியது ? மர்மமான பூகாந்தம், பரிதிக் கதிர்களைக் குடைபோல் தடுத்து உயிரினம், பயிரினம் பாதுகாக்கும் வாயுச் சூழ்வெளி எவ்விதம் தோன்றி இன்னும் நீடிக்கிறது ?

     unnamed (2)

    சனிக்கோளின் அழகிய நீண்ட வளையங்கள் எப்படித் தோன்றின ? பரிதிபோல் வாயுக்கோளான பூதக்கோள் வியாழன் ஏன் சுய ஒளிவீசும் சூரியனாய் மிளிரவில்லை ?  கோடான கோடி விண் பாறைகள், முரண்கோள்கள் ஏன் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன ? வால்மீன்கள் சூரிய மண்டலத் தோற்றத்தின் எச்சங்களா ? பூமியைப் பன்முறைத் தாக்கிய வால்மீன்கள் வழியாக    உயிரின மூலவிகள் பூமியில் சேர்ந்தனவா ?

    பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து.  படைப்பா அல்லது பரிணாமமா ?  திட்டமிட்ட படைப்பா ?  அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ?  டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை.  டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும்  அவரது பரிணாமம்  சிறப்பாக விளக்குகிறது.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியிருப்பதும் ஓர் ஊகிப்பே ! முதலில் அக்கூற்று ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கம் இல்லை; முடிவு மில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. 500 பேரைச் சுமந்து கொண்டு வானில் பறக்கும் நவீன 707 ஜம்போ ஜெட் விமானம் தானாய் உருவானது என்று கூறினால் யார் இப்போது நம்புவார் ?  வெவ்வேறான  தோற்றம், பண்புடைய ஆறு பில்லியன் மக்களும், கோடான கோடிப் புள்ளினம், பூவினம், பயிரினம், ஊர்வன, நீர்வள மீனினம் வாழும், சிக்கலான இந்த பூமி, 4.5 பில்லியன் ஆண்டுகளாய்த் தவறாது, மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், ஒரே சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவது தானாகத் தோன்றியது என்று ஒருவர் கூறினால் இப்போது யார் நம்புவார் ?  பிரபஞ்சம் ஏன் தோன்றியது, ஆறறிவு படைத்த மனிதர் ஏன் பிறந்தார் என்னும் வினாக்களுக்கு விஞ்ஞானம் பதில் கூறு முடிய வில்லை.

    பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது.

    இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றி யிருக்க வேண்டும் என்று பல்வேறு உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.  அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தோற்றப் பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது என் னுடைய கருத்து.  இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான்.  மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்க ரீதியாக விளக்க முடிய வில்லை. எல்லாம் கால வெள்ளத்தில் கருத்து மாறி, திசை மாறி, உருமாறிப் போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான்.  விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாமல் இறுதியாக அந்த முயற்சியைக் கைவிட்டு விடுகிறது.  அத்துடன் பிரபஞ்சத் தோற்ற கால இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்க முற்படுகிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாக அழிவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை “உயிர்” என்றால் என்னவென்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ சேர்ந்து, உயிரென்னும் புதிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் “உயிர்” என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர் இணைப்பைக் காட்டுபவை என்பது என் கருத்து.

    நமது பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் இயக்கங்கள் யாவும் “தாறுமாறான சீரமைப்பு”  [Irregular Order] என்பது என் கருத்து.  நமது பால்வெளி ஒளிமந்தை, அதன் கோடான கோடிப் பரிதிக் குழுமங்கள்,  சூரிய மண்டலக் கோள்களின் அமைப்பு, பண்பாடு, நகர்ச்சி முறை, சுற்றும் பாதை, தட்ப / வெப்ப நிலை, சூழ்வெளித் தோற்றம், காலவெளி மாற்றம் போன்றவை எல்லாம் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை, தாறுமாறானவை, ஆனால் ஓர் சீரமைப்புக்கு உட்பட்டவை.  காரண-விளைவு நியதிப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானதாய், முதல் வடிவைச் சார்ந்ததாய், அதிலிருந்து படிப்படியாய் மேம்பட்டதாய் விருத்தி யாகி வந்துள்ளதாய்த் தெரிகிறது.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், கண்ணுக்குத் தெரியாமல், கருவிகளுக்குத் தென்படும் கருந்துளைகள், கருஞ்சக்தி, கருமைப் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறி, அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அழிபவை.  அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை.

    தற்போதைய நவீனக் கணினி மேற்பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன.  எலும்புக் கூடு போன்று ஹென்றி  ஃபோர்டு செய்த முதல் கார் வாகனம் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி நவீனக் காராய் மாறி யுள்ளது ?  ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் விருத்தி யாகிச் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலம் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது.  கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ?  சார்லஸ் டார்வின் அறிவித்த  உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகி, மானிடம் தற்போதைய ஆறறிவு படைத்த உன்னத மனிதராய் உலவி வருகிறது ?

    விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து  அணுவுக்குள் இருக்கும் நுண்ணிய புரோட்டான், எலெக்டிரான், நியூட்ரான் [நேரான், எதிரான், நடுவான்] என்னும் பரமாணுக்களை வெளியேற்றி  அவற்றின் அளவைக் கணித்து விட்டார்.  பரமாணுக்களையும் பிரித்து அவற்றின் அடிப்படைத் துகள்களைக் [ஃபெர்மியான், போசான், (குவார்க்ஸ், லெப்டான்ஸ்)] கண்டுபிடித்து விட்டார்.  எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றைப் பல்வேறு எண்ணிக்கையில் சேர்த்து, நூற்றுக்கு மேற்பட்ட மூலகங்கள் [Elements], ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள்  [Molecules] இயற்கை / செயற்கை மூலம் தயாரிக்கப் பட்டு இப்போது மனிதர் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.  ஒரு புரோட்டான் எப்படி ஹைடிரஜன் வாயு ஆனது ?  எட்டுப் புரோட்டானும் எட்டு நியூட்ரானும் சேர்ந்து எப்படி ஆக்ஸிஜன் வாயுவானது ? அவைபோல் எப்படி நைட்ரஜன், வெள்ளி, தங்கம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு, ஈயம், கால்சியம், கார்பன், ஸல்ஃபர், ரேடியம், தோரியம், யுரேனியம் உருவாயின ?  வெவ்வேறான வடிவம், பண்பாடுள்ள மூலகம் எல்லாம் தானாய்த் தோன்றினவா ? சீரமைப்பில், அணி வரிசையில் இருக்கும் இவைத் தாறுமாறாய்த் தோற்றம் எடுத்தவையா ? அல்லது திட்டமிட்டுப் படைக்கப் பட்டனவா ?

    சமீபத்தில் [2017 நவம்பர்] ஈரான், ஈராக் பகுதியில் நேர்ந்த பூகம்பத்தில் 500 மேற்பட்ட மாந்தர் மரித்தார்.  இவ்வாறு ஆண்டு தோறும் பற்பல இயற்கை இடர்பாடுகள், சுனாமிகள், பேய்மழைச் சேதாரங்கள், சூறாவளி, ஹர்ரிக்கேன்கள் தாக்குதல் நமது பூமியில் ஏன் ஏற்பட வேண்டும்.  படைக்கப் பட்ட பூமியோ, தானாகத் தோன்றிய பூமியோ, அது பூரணச் சீரமைப்புக் கோளாகத் தோன்ற வில்லை. பூமிக்குள்ளும் புற்று நோய் பரவியுள்ளது   தூரத்தில் பூரண வட்டக் கோளமாகத் தென்படும் பூமி, தோற்ற காலம் முதலே சற்று தாறுமாறாகத்தான் உருவாகியுள்ளது.  மனிதர் போன்ற உயிரின வளர்ச்சிக்குப் படைக்கப்பட்ட நமது பூமி ஒரு தாறுமாறன சீரமைப்புக் கோளே.

    தேனீக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் ஒன்றாய் உழைத்துக் கூட்டில் தேனைச் சேர்க்கின்றன.  தூக்கணாங்குருவி தானாய் கூடு நெய்து முட்டை யிட்டுக் குஞ்சுகள் பொரிக்கின்றது.  இலைப் புழுவாய் கிளையில் நெளிந்த புழு முடத்துவ நிலை அடைந்து சில நாட்களில் பறக்கும் பட்டாம் பூச்சியாகக் கண்ணைக் கவர்கிறது.  ஜிம்பான்சி மனிதக் குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக மாறினானா ? அல்லது ஒரே பாய்ச்சலில் மாறினானா ? படிப்படி யாக மாறினான் என்றால் கால் மனிதன், அரை மனிதன் இருக்க வேண்டுமே !  குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்று கூறினால், இப்போது ஏன் அந்நிகழ்ச்சி கண்முன் நேருவதில்லை ?  ஜிம்பான்சியும், மனிதமும் தனித்தனியாய் ஒரே சமயத்தில் பிறந்து, தமது இனத்தைப் பெருக்கி, விருத்தி செய்து வருகின்றனவே !

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு விதமான முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி: இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கை நிகழ்ச்சிகள் !  அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை.  அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது.  மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது, ஆனால் எச்சரிக்கை செய்யும்  !  ஒரு சில பௌதிக, இரசாயன வினைகளை மனிதன் செய்து காட்டியுள்ளான்.  அணுவைப் பிளந்து பேரளவு சக்தியை வெளியாக்கியது, சூரியனின் அணுப்பிணைவு சக்தியை உண்டாக்கி ஹைடிரஜன் குண்டை வெடித்தது,  அணுக்கருச் செயற்கை முறையில் மூலங்கள் [புதியவை, பழையவை] உண்டாக்கியது, இவற்றுக்குச் சான்றுகள்.

    விண்வெளி விஞ்ஞானம் அனுதினம் விருத்தியாகும் மகத்தான 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும்இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம்பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே நாம் புதிய அற்புத விளைவு களைக் காண்கிறோம். வெண்ணிலவில் தடம் வைத்து மீண்டமனிதரின் மாபெரும் விந்தைகளைக் கண்டோம் !  அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த்தளத்திலேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?

    பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்தமானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது !  5000 ஆண்டுகளுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைனகலாச்சாரங்களை அறிய முடிந்தது.  பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள்முயன்று எழுதி வந்திருக்கிறார்கள்.  சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரை குறையாகவிடுவிக்கப் பட்டும், படாமல்தான் நம்கண் முன் தொங்கிக் கொண்டிருக் கின்றன !

    பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள்(Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ?  காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts), ஈர்ப்பியல் அலைகள்(Gravitational Waves) என்றால் என்ன? செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது ?  அகிலக் கதிர்கள் (Cosmic Rays)எங்கிருந்து வருகின்றன ?  பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா? ஈர்ப்பாற்றல் அலைகளை(Gravitational Waves) உருவாக்குவது எது? இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போதுஏற்பட்டுள்ளது.

    இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.  வானியல்விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.  புதியகருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.

    unnamed (3)

    +++++++++++

    Share
  • வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்

    க. பாலசுப்பிரமணியன்

    4677627d8477923052e60ee2dfdeb4dd

    குழந்தையே மனிதனின் தந்தை

    (வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

    தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

    வானவில்லைப் பார்க்கும்பொழுதெல்லாம்

    என் மனம் ஏனோ துள்ளி எழுகின்றது !

    என் வாழ்க்கை ஆரம்பித்த பொழுதும் அப்படித்தான்;

    இன்று நான் ஒரு முழு மனிதனாக வளர்ந்தபின்பும்

    நாளை என் முதுமையிலும் கூட,

    இல்லையென்றால், மரணம் என்னைத் தழுவட்டும் !

    குழந்தையே மனிதனின் தந்தை !

    நான் விரும்புவதெல்லாம் என் வாழ்க்கை

    நாளொருவண்ணமும் இயற்கையோடு கைகோர்த்து

    ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு …( TO A BUTTERFLY)

    (வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

    தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

    என்னோடு தங்கிவிடு – பறந்து செல்லாதே !

    இன்னும் சற்று  நேரம் என் பார்வையில் !

    என் குழந்தைப் பருவத்தின் சரித்திர ஆசிரியனே

    உன்னோடு நான் நிறையப்  பேச வேண்டும் !

    என் அருகில் மிதந்து கொண்டிரு; பறந்து விடாதே !

    எனது கடந்த காலம் உன்னிடம் மீண்டும் பிறக்கின்றது;

    உன்னைப்  போன்ற மகிழ்வான சீவன்களின் நினைவு வருகின்றது !

    எனது குடும்பத்தின் நினைவும்

    உயிர்ப்புள்ள நினைவுகளும் மீண்டும் என் மனதில் !

    ஓ ! எத்தனை மகிழ்வான நினைவுகள்,

    குழந்தைப் பருவத்தில் விளையாடிய அந்த நாட்கள் !

    எனது சகோதரி எம்மாலினும் நானும்

    எத்தனை வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தினோம் !

    ஒரு வேடனைப் போல நான் வேகமாக

    இரையைத் தேடி – குதித்துக் குதித்து

    ஆனால் அவளோ – இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் !

    சிறகுகளில் படிந்த தூசிகளை தட்டிவிடப் பயந்தாளே !

    Share
  • “அவன், அது , ஆத்மா” 56

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 56

    சுவாமி பரமார்த்தானந்தா

    சுவாமி பரமார்த்தானந்தா

    அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தனது கல்லூரி நாட்களில் கொல்கத்தாவில் சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி அவரது சீடர் தர்ஷ சைதன்யா போன்றவர்களின் பகவத்கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று பயனுள்ள நல்ல குறிப்புகளைத் தனது புத்தகங்களில் பதிவு செய்து கொள்ளும் பழக்கம் உடையவர். 1985ம் வருடம் திருமணத்திற்குப் பிறகு சென்னையில் அதுபோன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டும் என்று விரும்பி அவனிடம் கேட்ட பொழுது அவன் அதிலெல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி விட்டான். அப்படிச் சொன்னதில் அவனுக்கு மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். பிறகு சென்னையில் கீதை வகுப்பு யார் எடுக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டு, தனது குரு ஸ்ரீ தர்ஷ சைதன்யா சுவாமிக்குக் கடிதம் எழுத, அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சீடர்தான் சுவாமி பரமார்த்தானந்தா. அவர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் எடுப்பதாகவும், அது நடைபெறும் இடத்தையும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

    அந்த வகுப்புகள் சென்னை பெசன்ட் நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை நடைபெற்று வந்தது. அதன் பிறகு அடையாறில் இருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் மாலை ஆறு மணிமுதல் ஏழு மணிவரை நடைபெற்றத் துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

    அவனது வீடு அப்பொழுது இந்திராநகர்ப் பகுதியில் இருந்தது. அவனுக்கு மனைவிக்கு சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம். அவனுக்கோ அதில் நாட்டம் இல்லை. அவனுக்கு மனைவி அவனிடம், “ஒரு நாள் வந்து கீதை வகுப்பைக் கேளுங்கள். பிடித்திருந்தால் வாருங்கள். இல்லையென்றால் உங்களைக் கட்டாயப் படுத்த வில்லை, நான் மாத்திரம் சென்று வருகிறேன். என்னை அந்த வகுப்பு நடக்கும் இடத்திற்குக் கொண்டு விட்டு, அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள். வேண்டா வெறுப்பாகத்தான் அவன் அன்று கீதை வகுப்புக்குச் சென்றான். சுவாமி பரமார்த்தானந்தாவின் எளிய ஆங்கிலமும், ஒவ்வொரு சுலோகத்தையும் அவர் விளக்கிச் சொல்கிற முறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது . அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் மனைவியுடன் கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி, இருபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து சுவாமிஜியின் உரைகளைக் கேட்டு அவன் பயனடைந்தான். அவனும் குறிப்புகள் எடுத்துக் கொள்வான். அதை உள்வாங்கிக் கொண்டு கவிதைகளும் எழுதி வருவான். இப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் சென்று வருகிறான்.

    அவனுக்கு ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கையைக் கவிதையாக எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவன் 10.06.2006 அன்று சுவாமி பரமார்த்தானந்தரிடம் தெரிவித்த பொழுது, சமீபத்தில் (06.05.2006) புதிய பதிப்பாக வெளிவந்திருந்த ஸ்ரீ வித்யாரண்யர் எழுதிய “மாதவீய சங்கர விஜயம்” என்ற புத்தகத்தை அவனிடம் கொடுத்து,” இதை அடிப்படையாக வைத்து எழுதுங்கள்.” என்று ஆசிதந்தார். அவனும் அதை “அம்மன் தரிசனம்” பத்திரிகையில் “ஆதி சங்கர அத்வைத காவியம்” என்று தலைப்பிட்டு ஒரு நெடும் தொடராக எழுதினான். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் வெளியீடாக “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் முன்னிலையில் தமிழகத்தின் கவர்னரால் 26.10.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது .

    1999ம் வருடம் செப்டெம்பர் மாதம் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் தனது வகுப்புக்குத் தொடர்ந்து வருகின்ற சுமார் இருநூறு சீடர்களை “ரிஷிகேசத்திற்கு” அழைத்துச் சென்றார்கள். பத்து தினங்கள் அந்த கங்கைக் கரையிலே தங்கி வேதாந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அவனுக்கும் அதில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு அமைந்தது.

    சுவாமி ஓங்காரானந்தா

    சுவாமி ஓங்காரானந்தர்

    ஒவ்வொரு நாளும் காலையில் ஆறரை மணிமுதல் எட்டு மணிவரை உபநிஷத் வகுப்பும், மாலை நான்கு மணிமுதல் ஐந்து மணிவரை பத்ரஹரியின் “நீதி சதகம்” வகுப்பும் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். காலை எட்டு மணி முதல் ஒன்பது வரைச் சிற்றுண்டி நேரம். காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை “சிவமானச பூஜை” விளக்கத்தை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு சீடர் செய்வார் . காலை பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிவரை சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் திருக்குறளில் வேதாந்தம் என்ற தலைப்பில் உரை நிகழத்துவார். மாலை ஆறு மணிக்கு ரிஷிகேசம் ஆஸ்ரமத்தின் அருகிலேயே அழகாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு ஆரத்தி நடைபெறும். சுவாமி பரமார்த்தானந்தரின் முன்னிலையில் சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் ஆராத்தி பூஜையைச் செய்வார்கள். சீடர்கள் அனைவரும் ஒரு விளக்கை ஏற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுவார்கள். சுவாமிகளுடன் சீடர்களும் கங்கா மாதாவின் சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டு அவன் மெய்சிலிர்த்துப் போவான்.

    கங்கைக்கு ஆரத்தி முடிந்தவுடன் ஆஸ்ரம வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஆலயத்தில் பூஜை நடைபெறும். அங்கு தரிசனம் செய்தவுடன் இரவு ஏழு மணி முதல் எட்டு மணிவரை ஸ்ரீமத் பகவத் கீதை பாடத்தை சுவாமி பாமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். இரவு எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் இரவு உணவு. அவன் ஒவ்வொரு நாளும் கங்கையில் உற்சாகமாகக் குளிப்பான். முதல் நாள் அவன் அங்கே நீந்தினான். அவன் நீந்துவதை வெகு தொலைவில் இருந்து பார்த்த சுவாமி பரமார்த்தானந்தா அவனை அழைத்து,” இங்கெல்லாம் நீந்தாதீர்கள். எப்பொழுது தண்ணீர் அதிகம் வரும் என்று சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக இருங்கள் ” என்றார். அதன் பிறகு அவன் அந்தப் படித்துறைப் பகுதியில் குளித்து சந்தியாவந்தனம் செய்து வந்தான். இரவில் சில நண்பர்களுடன் ஆஸ்ரமத்தின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பாய்ந்து செல்லும் கங்கையின் அழகிலும், ஒலியிலும் மெய்மறந்திருப்பான்.

    சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் வேதாந்தக் கருத்துகளை திருக்குறள், தாயுமானவர், வள்ளலார், பாரதியார், பட்டினத்தார் பாடல்களுடன் ஒப்பிட்டு நல்ல இலக்கியச் செறிவோடு சொல்வதைக் கேட்டு அவன் மிகவும் ரசிப்பான். அவரது உரையில் நகைச்சுவையும் இருக்கும். அவர் சுவாமி சித்பவானந்தரின் சீடர். சுவாமி பரமார்த்தானந்தரிடம் வேதாந்தப் பாடம் கற்றவர். புதுக்கோட்டையில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி. தேனியில் ஒரு ஆஸ்ரமம் அமைத்துச் சீடர்களுக்கு வேத்தாந்தப் பாடங்கள் நடத்தி வருகிறார். “வேத நெறி” என்ற புத்தகம் அந்த ஆஸ்ரமத்தின் வெளியீடாக வந்துகொண்டிருக்கிறது. அவர் சென்னைக்கு அடிக்கடி வந்து ஆன்மிக உரைகள் நிகழ்த்தும் பொழுது அவன் தவறாமல் சென்று கேட்பான். 29.10.2017 ஞாயிறு அன்று அச்சிரப்பாக்கம் கிராமத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் “ஸ்ரீ பால வேத பாட சாலையின்” பத்தாவது ஆண்டு விழாவிற்கு சுவாமி ஓங்காரானந்தா அவர்கள்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தின் சிறப்பைப் பற்றி அருமையான சொற்பொழிவு செய்தார்.

    “வேதம் கற்கும் மாணவர்களைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உதவ வேண்டும். வேதம்தான் நம் தேசத்தின் ஆணிவேர். வேதம் கற்றவர்களின் குணமே, இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அனைவரும் மனச்சாந்தியுடன் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பது மட்டும்தான். பசிக்கு உணவும், படுக்க ஒரு இடமுமே அவனது தேவைகள். அவர்களுக்கு என்றுமே மனத்தில் வறுமை தோன்றாது” என்ற அவரது உரை இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சென்று வந்தார்கள்.

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள்

    சுவாமி நாராயணானந்த பாரதீ

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளைமடங்களில் ஒன்றான “நிலமாவு” மடத்தின் பீடாதிபதியாக இருந்தார்கள். அவரது பஜனைப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே அவன் அவருக்கு அடிமையானான். மதுரமான குரல்வளம் அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது . இன்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது பாடல்களைக் கேட்டு இன்புருவதுண்டு.

    1986ம் வருடம் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆயிரத்தி இருநூறாம் ஆண்டு. அது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தைந்தாவது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் “ஸ்ரீ ஆதிசங்கரர் ரதத்தை” பாரத தேசம் முழுவதும் சுற்றிவர ஆசிதந்தார்கள் . காலடி துவங்கி கேதார்நாத் வரை செல்லும் அந்த “ஸ்ரீ சங்கரர் ரதத்திற்கு”ச் சேவை செய்வதற்காகத் தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் வழக்கறிஞர் தியாகராஜன், அவன் உட்படப் பலர் இருந்தார்கள். அவன் 25.12.1986 முதல் 01.01.1987 வரை அந்த ரதத்துடன் தஞ்சாவூர், திருவையாறு, திருச்சி, சிதம்பரம், சுவாமிமலை, கும்பகோணம், பாண்டிச்சேரி, காஞ்சீபுரம், சென்னை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான். தஞ்சாவூரில் இருந்து சென்னை வரை அந்த ரதத்தின் கூடவே ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளும் வந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் சுவாமிகள் ஸ்ரீ சங்கரரின் மேன்மைகளைக் கூறுவார்கள். அந்தப் பயணத்தின் பொழுது அவன் ஒலிபெருக்கியில் ஸ்ரீ சங்கரர் செய்த பணிகளையும், அவரது சிறப்பையும் உரக்கக் கூறி வந்தான். அவனது அந்தத் துடிப்பு சுவாமிகளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஓய்வு நேரத்தில் அவன் எழுதிய கவிதைகளைப் பற்றிக் கேட்டு உற்சாகப் படுத்துவார். சென்னைக்கு வந்ததும் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளைத் தங்கள் இல்லத்திற்கு “பிக்ஷைக்கு” வர வேண்டினான். அவரும் மிகுந்த அன்போடு,”வருகிறேன் விஸ்வநாதா” என்று, அவனது எளிய இல்லத்திற்கு வந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.

    அவர் சென்னைக்கு வரும் சமயங்களில் அவன் அவரை சந்தித்து ஆசிபெருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை சந்தித்த பொழுது,” நீ கவிஞன் ..எங்க ஊர்க் கவிஞர் வாலியை உனக்குத் தெரியுமா?” என்றார். அவன் “தெரியும்….பழக்கம் உண்டு” என்றான். “என்னுடைய பூர்வாச்ரம அண்ணாவும், வாலியும் ஸ்ரீரங்கத்து நண்பர்கள். அவரது “சமய புரத்தாளே சமயம் தாளே” என்ற பாட்டை நாங்கள் பாடுவோம்” என்று சொல்லி ,” அவரைப் பார்த்தால் இதைச் சொல்லுங்கள்” என்றார். அவன் அன்று மாலையே கவிஞர் வாலி அவர்களை இல்லத்தில் சந்தித்து விபரங்களைச் சொன்னான். “ஓ…அப்படியா..அவரது பூர்வாச்ரமப் பெயர் பத்ரி. ரொம்ப நல்லாப் பாடுவார். அவரது சகோதரரும் நானும் நண்பர்கள்… ” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். “”விஸ்வநாதா….அவர நான் பாக்கணும்..எங்க இருக்கார்” என்ற கவிஞர் வாலியிடம்,” தி.நகர் ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்லதான் இப்ப இருக்கார்” என்றான். மறுநாள் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ அவர்களை கவிஞர் வாலி சந்தித்து விட்டு வந்தார். இரவில் தொலைபேசியில் என்னை அழைத்து, “விஸ்வநாதா…சுவாமிகளை தரிசனம் செஞ்சுட்டு வந்தேன்…மனம் விட்டு ஊர் நினைவெல்லாம் பேசினோம்” என்றார். அவனுக்கு இதுபோன்ற நல்லோர்களின் தொடர்பு அமைந்ததால் தடம்புரளாமல் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது .

    அவன் ஒரு “காபி”ப் பித்தனாக இருந்தான். ஒரு நாளில் ஏழு, எட்டு காபிகள் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் காபி வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். அப்படிப் பட்ட அவனுக்கு ஒரு சோதனை வந்தது. இரவில் தஞ்சாவூர் வந்த ஸ்ரீ சங்கரர் ரதம், மறுநாள் காலையில் புறப்பட வேண்டும். அதிகாலையில் ஸ்ரீ கணபதி ஹோமம் துவங்கப் போகிறது. காலை ஐந்து மணி இருக்கும், வக்கீல் தியாகராஜன் அவனிடம் ,”ஏய்…விச்சு …சீக்கிரம் குளிச்சுட்டுவா…ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணனும்” என்றார். “காபி” குடிச்சுட்டு குளிக்கறேன் மாமா” என்றான். காபி வர நேரம் ஆகி விட்டது. தியாகராஜன் மாமாவும், இன்னொரு அன்பரும் குளித்துவிட்டு வேலைகளைச் செய்தது கொண்டிருந்தார்கள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. ” விச்சு …ஏண்டா இப்படி காப்பிக்கு அடிமையா இருக்கே…” என்று தியாகராஜன் மாமா கேட்க,” ஓய் ….இனிமே காபி குடிக்க மாட்டேன்.” என்று குளிக்கச் சென்று விட்டான். குளித்துவிட்டு வரும் பொழுது, மணக்க மணக்க காப்பியை ஒரு வாளி நிறைய ஒருவர் கொண்டு வந்தார். வாசனை இழுக்கத்தான் செய்தது. தியாகராஜ மாமா சிரித்துக் கொண்டே, “இந்தா உன்னோடு காபி..” என்றார். அவன் திடமாக மறுத்து விட்டான். அன்றிலிருந்து அவன் காபி, டீ குடிப்பதில்லை. 01.01.1987 முதல் வண்ண உடை அணிவதையும், தங்க நகைகள் அணிவதையும் விட்டுவிட்டான். வெள்ளை ஆடையைத்தான் விரும்பி அணிவான்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அவனது நண்பனின் பெண் குழந்தை நிர்பந்தம் செய்ததால் கொஞ்சம் காப்பி குடித்தான். அதோடு சரி. அவனது மகனும், மகளும் ,”அப்பா எங்களுக்காக இந்த “கலர்” பனியனையாவது போட்டுக்கணும்” என்று அவர்கள் வாங்கித் தந்த கலர் பனியனைப் போட்டுக்கொண்டான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .

    “வைராக்கியம்” அவனுக்கு எந்த ஜென்மாவிலோ? கிருஷ்ணார்ப்பண மஸ்து.

    17.11.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம் அதிவிரைவாக முன்னே வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. மனத்தில் ஓடும் எண்ணங்கள் மடல் வாயிலாக உங்கள் முன்னே விரல் வழி வடிந்து உதிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது ஏதோ இலகுவான காரியமன்று. இத்தகைய புலம்பெயர்வுகளின் காரணங்கள் பலவகைப்படுவதுண்டு. நாட்டின் போர்ச்சூழல்களில் இருந்து உயிர் தப்பிச் செல்வோர்கள் ஒரு வகையினர். கல்விக்காகப் புலம் பெயர்வோர்கள் ஒரு வகையினர். வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்வோர்கள் மற்றொரு ரகம் என ப்லவகையான் காரணங்களைக் காணலாம்.ஆனால் புலம் பெயர்ந்தபின் தாம் புகுந்த நாட்டில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்களின் உண்மையான் தாக்கம் அத்தகைய ஒரு நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களே சரியான் வகையில் உள்வாங்கியிருப்பார்கள்.

    ஒருவகையான கலாசார சூழலில், வித்தியாசமான காலநிலைகளின் மத்தியில் வாழ்ந்துவிட்டு முற்றிலும் புதிதான ஒரு கலாசார சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ப்வனவற்றிற்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது என்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல; அதுவும் குறிப்பாக நிறவேறுபாடு கொண்ட ஒருநாட்டில் எம்மை இணைத்துக் கொள்ளும்போது அந்நாட்டில் வாழும் சிறுபகுதியான நிறவெறி, இனவெறி கொண்ட மக்களின் காழ்ப்புணர்ச்சிகளின் மத்தியில் எமக்காக ஓர் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஏற்படும் இடர்களைச் சமாளிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். சில சமயங்களில் அவசரம், அவசரமாக அகதிகளாகத் தாம் பிறந்த நாட்டை விட்டுவிட்டு ஓர் அந்நிய நாட்டினுள் புலம்பெயரும்போது அந்நாட்டின் மொழி எமக்கு அந்நியமானதாக இருப்பின் அம்மொழியைக் கற்றுக் கொள்ளும்வரை வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் போராட்டமே!

    நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் புலம்பெயர் மக்களாகிய எமது வாழ்வில் எத்தகைய தாக்கங்களைத் தோற்றுவிக்கப் போகிறது என்பதனை உன்னிப்பாகக் கவனித்து வாழவேண்டிய தேவையிருக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தை விட்டு எம்மை அந்நியப்படுத்தி வாழ்வது என்பது முடியாத காரியம். ஓரளவிற்கு எமது வாழ்க்கைச் சூழலை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாமும் நாம் வாழும் நாடுகளின் அடிப்படைச் செயற்பாடுகளில் எம்மை இணைத்துச் செயல்படுத்தி வாழ்வேண்டியது காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகிறது. எமக்கென ஒரு தனியான வட்டத்தை ஏற்படுத்தி எம்மவர் மத்தியில் மட்டுமே நாம் எமது உறவுகளைப் பலப்படுத்தி வாழ்ந்துவிட்டு நாம் இப்புலம்பெயர் நாடுகளில் இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்தப்படுகிறோம் என்று கூச்சலிடுவதால் பலனேதும் ஏற்படப்போவதில்லை. எம்மை அந்நியப்படுத்தி வாழும்போது நாம் வாழும் நாட்டு மக்க்களின் பார்வை உன்னிப்பாக எம்மீது விழுவதும், அவ்வித்தியாசங்களை அரசியல் லாபங்களுக்காக வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்தும் சிலரின் கைகளில் நாம் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.

    இப்படியான சூழலில் இன்று நாம் பல புலம்பெயர் மக்கள் வெற்றியான வாழ்க்கையைத் தமதாக்கிக் கொள்ளும் ஒரு நிலையைப் பார்க்கிறோம். இத்தகைய சாதனையாளர்களின் மனவைராக்கியத்தையும், இலட்சிய வேட்கையையும் வியந்து பாராட்டாமலிருக்க முடியாது. வாழ்க்கை தம்மீது தூக்கிப் போடும் அத்தனை தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக்கித் தமது முன்னேற்றம் தமக்கு மட்டுமல்ல தாம் வாழும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் ஒன்றாக ஆக்கி உதாரண புருஷர்களாக வாழ்வைதைக் காணும்போது அவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு புலம்பெயர் மனிதருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவது இயற்கையே. இம்மடல்மூலம் அத்தகைய ஒரு சாதனையாளரின் வாழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனமது மனத்தில் இவ்வாரம் இழையோடும் எண்ணமாகிறது.

    யார் அவர் ?

    1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி தற்போதைய “ஸொமாலிலாண்ட் (Somaliland)”எனப்படும் நாட்டிலே “கபீலி” எனும் இடத்தில் “கவீர் அவால் LONDON, ENGLAND - AUGUST 04: Mo Farah of Great Britain celebrates winning gold in the Men's 10000 metres final during day one of the 16th IAAF World Athletics Championships London 2017 at The London Stadium on August 4, 2017 in London, United Kingdom. (Photo by Shaun Botterill/Getty Images)இசாக்” குடும்பத்தில் பிறந்தவர் “மோ ஃபரா (Mo Farah)” ஆனில ஜந்து என்றழைக்கப்படும் “மொகமட் முக்தார் ஜெமா ஃபரா (Mohamed Muktar Jama Farah ) “ இவரது பாட்டனார்.  “ஜெமா” அந்நாளில் இங்கிலாந்தின் கீழிருந்த ஸொமாலியாவிலிருந்த ஒரு பிரித்தானியப் பிரஜையாவர். இவரின் தந்தை “முக்தார் ஃபரா”லண்டனில் பிறந்த ஒரு ஸொமாலிய இனத்தவர். விடுமுறையில் அவர் மோ ஃப்ராவின் தாயரைச் சந்தித்து திருமணம் புரிந்தார். எட்டு வயதுவரை ஸொமாலிய நாட்டிலேயே வாழ்ந்து வந்த மோ ஃப்ரா , எட்டு வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தார். தான் இங்கிலாந்துக்குள் நுழைந்தபோது தனக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது என்று கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் Feltham எனும் இடத்திலுள்ள Isleworth and Syon school எனும் பள்ளியிலும், பின்பு Feltham Community College எனும் கல்லூரியிலும் கல்வி பயின்றார். படிக்கும்போது ஒரு கார் மெக்கானிக்காகவோ அன்றித் தனது விருப்பத்துக்குரிய உதைபந்தாட்டக் குழுவான Arsenal உதைபாந்தாட்டக் குழுவில் உதைபந்தாட்டம் விளையாட வேண்டும் என்றே கனவு கண்டதாகக் கூறுகிறார்.

    ஆனால் காலதேவனின் கணக்கோ வேறு. இவர் பயின்ற கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளர் இவரின் ஓட்டப்பந்தயத் திறமையை இணங்கண்டார். இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கவுன்சிலோ நகரைப் பிரதிநிதிப்படுத்தி லண்டன் இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று மரதன் ஓட்டப் போட்டியில் ஒன்பதாவதாக வந்தார். அதற்கடுத்த வருடம் அவர் ஐந்து ஆங்கிலப் பள்ளிக்கூடங்களுக்கான ஓட்டப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெற்றார். இவரது திறமையை அறிந்த ஒரு செல்வந்தரான Eddie Klukundis என்பவர் இவர் இங்கிலாந்துப் பிரஜையாவதற்குரிய தொகையினை நன்கொடையாகக் கொடுத்து இவரைச் சட்டபூர்வமாக

    Four-time Olympic champion Sir Mo Farah with wife Tania after he was awarded a Knighthood by Queen Elizabeth II at an Investiture ceremony at Buckingham Palace, London. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday November 14, 2017. See PA story ROYAL Investiture. Photo credit should read: Jonathan Brady/PA Wire

    இங்கிலாந்துப் பிரஜையாக்கினார். அதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய மற்றும் உலக ஓட்டப் பந்தயங்களின் நீண்டதூர ஓட்டப் பந்தயங்கள் பலவற்றில் பங்குபற்றி இங்கிலாந்து நாட்டுக்கும், தனக்கும் பல வெற்றிகளையும் , பதக்கங்களையும் வாங்கிக் குவித்தார்.  எமது நாட்டு ஓட்டப் பந்தயவீரர் என்று அனைத்து இங்கிலாந்து நாட்டு மக்களாலும் உரிமை கொண்டாடப்பட்ட ஒரு கறுப்பு இனத்தவர் எனும் பெருமையைத் தேடிக் கொண்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்ட இவர் கடைசியாக நடந்து முடிந்த ஓலிப்பிக் பந்தயத்துடன் தனது ஓய்வினை அறிவித்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் இங்கிலாந்துக்கும், தான் பிறந்த ஸொமாலிய நாட்டிற்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

    எனது எண்ண முற்றத்தின் முன்றிலில் இவர் நினைவுகள் தவழ்வதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்னால் இவருக்கு இங்கிலாந்து மகாரணியாரால் “சார்” பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையேயாகும்.

    எட்டுவயதுச் சிறுவனாக , ஆங்கில வார்த்தை ஒன்றுகூடத் தெரியாமல் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து இன்று மகாராணியாரால் “சார்” பட்டம் பெற்ற “மோ ஃப்ரா” அனைத்துப் புலம்பெயர் மக்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக, முன்னுதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது அல்லவா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 11

    -மேகலா இராமமூர்த்தி

    தோழியின் யோசனைக்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் தலைவி. அவளை அவசரப்படுத்த வேண்டாம் எனக் காத்திருந்தாள் தோழியும். காலம் கடுகிச் சென்றுகொண்டிருந்ததேயொழியத் தலைவியோ வாய்திறப்பவளாகத் தெரியவில்லை. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்ததை உணர்ந்த தோழி மீண்டும் பேசலுற்றாள்…

    ”அருமைத் தோழி! உடன்போக்கைத் தவிர வேறெந்த வழியிலும் இப்போது நீ தலைவனை அடைய இயலாது!

    ”நான் சொல்வதைக் கேள்! நம் ஊருக்கும் தலைவர் indian gooseberryஊருக்கும் இடையே உள்ள வழி இனிமையானது; நெல்லிக்காய்கள் நிறைந்தது. அவ்வழியில் வானைத் தொடும் உயர்ந்த மலையின் அடிவாரத்தில், கரும்புப் பாத்தியில் தேங்கியிருக்கும் நீர்போல, காட்டு யானைகளின் அடிகள் புதைதலால் உண்டாகும் பள்ளங்களில் நீர் நிறைந்திருக்கும். நீ அவ்வழியே நெல்லிக்காய்களைத் தின்று, உன் கூரிய பற்கள் ஒளிபெறுமாறு நீரை அருந்தித் தலைவனோடு உடன்போக்கை மேற்கொள்ளுதலை நான் விரும்புகின்றேன்!

    நீ போனபின் நம்மூரில் என்ன நடக்கும் என்றுதானே யோசிக்கிறாய்? நீ தலைவனோடு போனதுகுறித்து ஊரில் அலர் தூற்றுவர்; நம் சேரியிலுள்ளோர் (கல்லெனும் ஒலியெழ) வசைமாரிப் பொழிவர். அவர்களால் வேறென்ன செய்யமுடியும்? அற நினைவில்லாத நம் அன்னை தன் மனையில் தனியே கிடந்து புலம்பட்டும்!

    இதுகுறித்தெல்லாம் நீ கவன்றால் தலைவனோடு இணையும் இல்லற வாழ்வை இழப்பாய்! எனவே இதுபோன்ற வசைமொழிகளுக்கெல்லாம் அசையாதே! இறுதியில் நீ இன்ப வாழ்வைக் காண்பது உறுதி!” என்று பலபடக் கூறித் தலைவியை ஒருவாறு உடன்போக்குக்கு உடன்பட வைத்தாள்.

    ஊர்உ   அலரெழச்  சேரி  கல்லென
    ஆனாது  அலைக்கும்  அறனில்  அன்னை

    தானே  இருக்க  தன்மனை  யானே
    நெல்லி  தின்ற  முள்ளெயிறு  தயங்க
    உணலாய்ந்  திசினால்  அவரொடு  சேய்நாட்டு
    விண்தொட  நிவந்த  விலங்குமலைக்  கவாஅற்
    கரும்புநடு  பாத்தி  யன்ன
    பெருங்களிற்  றடிவழி  நிலைஇய  நீரே. (குறுந்: 262 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)

    இக்குறுந்தொகைப் பாடலை அடியொற்றிய பழஞ்செய்யுளொன்று ’தமிழ்நெறி’ எனும் நூலிலிருந்து மேற்கோளாகக் கிடைத்திருக்கின்றது. (இந்நூலின் காலம், ஆசிரியர் பெயர் போன்ற பிற தகவல்கள் கிட்டவில்லை.)

    “ஊருஞ் சேரியும் அலரெழ யாயும்
     தானே  யிருக்க  தன்மனை  யானே
    திருந்துவேல்
     விடலையொடு  கெழீஇ
     அருஞ்சுரஞ்  சேறல்  புரிந்தனன்  இனியே”      (தமிழ்நெறி. மேற். 92)

    ’நெல்லியைத் தின்று நீர்குடித்தால் நாவினிக்கும்’ என்பதைக் கூறும் பாடல்கள் வேறுசிலவும் நம் அகவிலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

    ”…புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
    நீர்குடி
    சுவையில்…”  (அகம்: 54)

    ”…..சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
    வீழ்கடைத்
     திரள்காய்  ஒருங்குடன்  தின்று
    வீசுனைச்
     சிறுநீர்  குடியினள்…..”  (நற்: 271)

    தலைவனொடு செல்லத் தலைவியின் ஒப்புதல்பெற்ற தோழி அடுத்து தலைவனைச் சந்திக்கப் புறப்பட்டாள். முதன்முதலில் அவனைச் சந்தித்த மலையருவி ஓரமே மீண்டும் அவனைக் காணும் வாய்ப்பினைப் பெற்றாள்.

    தலைவியும் தோழியும் இருதலைப் புள்ளாய் இணைந்திருத்தலையே இதுவரை கண்டிருந்த தலைவன், தோழிமட்டும் தனியே வருவதைக் கண்டு வியந்தான்.

    தலைவனுக்கு அணித்தே வந்த தோழி, ”ஐய! நலந்தானே?” என்று உசாவினாள்.

    ”நலமே நங்காய்! தலைவி எப்படி இருக்கிறாள்? அவளின்றி உனைநான் தனியே காண்டல் இதுவே முதன்முறை” என்றான் வியப்பு மாறாமல்.

    ”அன்ப! தலைவி நலமாயிருக்கிறாள் என்று நான் பொய்யுரைக்க ஏலாது! உம்மைக் காணாது அவள் தொல்கவின் தொலைந்து, தோள்மெலிந்து வாழ்வதிலே நாட்டமின்றி வாட்டமுற்றிருக்கிறாள். அவள் துயரை மேலும்கூட்டும் வகையில் அவளுக்கு அயல்மணங்கூட்ட முடிவுசெய்துவிட்டனர் அவள் தமர்” என்று கூறிவிட்டுத் தலைவனின் முகத்தை ஏறிட்டாள்.

    திடுக்கிட்ட தலைவன், ”என்ன? அயலானோடு என் தலைவிக்கு மணமா? அவள் அதற்கு இசைந்துவிட்டாளா?” என்றான் ஐயத்தோடு.

    ”தலைவ! கற்புக்கடம்பூண்ட எம் பொற்புடைத் தலைவி உம்மையே தன் மணாளனாய் மனத்தில் வரித்துவிட்டவள்; வேறொரு மானிடவனுக்கென்று பேச்சுப்படில் அவள் வாழகில்லாள்!” என்று சீறினாள் தோழி.

    ”சினவாதே பெண்ணே! தலைவியை அயலானுக்கு மணமுடிக்க இசைந்துவிட்ட அவள் பெற்றோர், இப்போது நான் அவளை மணம்பேசச் சென்றால் அதனை ஏற்றுக்கொள்வார்களா?” என்றான் குழப்பத்தோடு!

    ”இல்லை! இனி உம்மோடு தலைவிக்கு மணம்நிகழ்த்த அவள் பெற்றோர் ஒருப்படப் போவதில்லை; ஆனால் அவளை நீர் மணக்க வேறோர் உபாயம் உண்டு!” என்ற தோழியைப் பார்த்து, ”என்ன அது?” என்றான் தலைவன் பரபரப்போடு.

    அதுதான் ’உடன்போக்கு’ என்று தலைவிக்குச் சொன்னதையே திரும்பத் தலைவனுக்கும் சொன்னாள் தோழி.

    துணுக்குற்ற தலைவன்… ”முறையாகத் தலைவியை மணக்க எண்ணியிருந்தவனைக் கள்வனைப்போல் அவளைக் கடத்திக்கொண்டு போ என்கிறாயே… இது முறையா?” என்றான் வருத்தம் மேலிட.

    ”வேறு வழியில்லை! என் ஆருயிர்த்தோழியின் மனம்விரும்பும் மணவாழ்வே எனக்கு முக்கியம். அதற்கான ஒரேவழி தலைவியை நீர் உம்மோடு கொண்டுதலைக் கழிதலே (உடன்போக்கு) என்றாள் தீர்மானமாக!

    ”அழைத்துச் செல் என்று நீ எளிதாய்ச் சொல்லிவிட்டாய். கல்லும் முள்ளும் கடும் வெப்பமும் பாதங்களைப் பதம்பார்க்கும் பாலைவழியில், மலரினும் மெல்லியளான தலைமகள் எங்ஙனம் நடப்பாள்; அவ்வழியை எப்படிக் கடப்பாள்?” என்றான் தலைவன் தயக்கத்தோடு.

    ”அன்ப! நீரில் வளர்வது குவளை (blue waterlilies); தன் தாளில் நீர் நிறைந்திருக்க மலர்ந்திருக்கும் அப்பூவானது, Blue Water Lilyமேல்காற்று தன்மேல் மோதுவதனால் வாடிப்போவதில்லை. கவண்போன்ற நுகத்தின் பிணிப்பால் வருந்துதலையுடைய உப்பு வாணிகரின் எருதுகள் பூட்டிய வண்டிகளின்  தொகுதியை வரிசையாய் வைத்தாற்போன்ற உலர்ந்த மரக்கிளைகளை  பிளத்தற்கு வலியின்மையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற  பாலைநிலங்களும் நும்மோடு வந்தால் தலைவிக்கு இனிமையுடையனவே” என்றாள் தோழி முறுவலோடு.

    நீர்கால்  யாத்த  நிரையிதழ்க்  குவளை
    கோடை  ஒற்றினும்  வாடா  தாகும்
    கவணை  அன்ன  பூட்டுப்பொரு  தசாஅ
    உமணெருத்  தொழுகைத்  தோடுநிரைத்  தன்ன
    முளிசினை  பிளக்கு  முன்பின்  மையின்
    யானை  கைமடித்  துயவும்
    கானமும்  இனியவாம்  நும்மொடு  வரினே. (குறுந்: 388 – ஔவையார்)

    குவளை மலரில் மேல்காற்றுப்பட்டு அதனை வாடவைக்க முயன்றாலும், அதன் தாளடியில் இருக்கின்ற தண்ணீரால் அது வாடாமலிருப்பதுபோல், பாலை வழிகள் தலைவியின் மென்பாதங்களுக்குத் துன்பம் தந்தாலும், தலைவனொடு செல்வதால் அவையும் அவளுக்கு இனியனவே என்ற தோழியின் சாமர்த்தியமான பதில் தலைவனை மேலும் மறுத்துப் பேசவொட்டாமல் தடுத்துவிட்டது.

    இங்கே வேறோர் நிகழ்வை நாம் பொருத்திப் பார்க்கலாம்…

    கைகேயின் விருப்பப்படி இராமன் காடேக ஆயத்தமாகின்றான். சீதையும் உடன் வருவேன் என்று அடம்பிடிக்கின்றாள். ”நெருப்புப் போன்ற வெம்மையோடு கல்லும் முள்ளும் பொருந்திய காட்டில் உன் மலரடியால் நடத்தல் இயலாது” என்று இராமன் அவளைத் தடுக்கப்பார்க்க, அவளோ, ”உன்னால்வரும் பிரிவுத் துயரெனும் வெம்மைக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் ஈடாகாது; அப்படியிருக்க உன் பிரிவினும் என்னைச் சுடுமோ அந்தப் பெருங்காடு?” என்று அவனை மடக்கிவிடுகின்றாள்.

    ‘பரிவு இகந்த மனத்தொடு பற்றுஇலாது
    ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
    எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின்
    பிரிவினும் சுடுமோ பெருங்காடு?
     (அயோத்தியா காண்டம்,  நகர்நீங்கு படலம் 221.) 

    ஔவையாரின் மேற்கண்ட குறுந்தொகைப்பாடலில், ”உன்னோடு வந்தால் கானமும் இனியவே எம் தலைவிக்கு” என்கிறாள் தோழி. கம்பனின் சீதையோ “உன் பிரிவைவிடவா கானம் என்னைப் பெரிதாகச் சுட்டுவிடும்?” என்று கேட்கிறாள். ஔவையின் நோக்கும், கம்பரின் சிந்தனைப் போக்கும் ஒன்றுபோலவே இருப்பது வியப்பளிக்கின்றது.

    ஒருவழியாகத் தலைவனையும் உடன்போக்குக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்ட தோழி, தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவனிடம் விவரிக்கலானாள்!

    [தொடரும்]

     

     

    Share
  • எழுத்து – 6

    வேதா. இலங்காதிலகம்

    thamizh

     

     

     

     

     

     

     

     

    எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள்
    எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி
    எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம்,
    திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்!
    கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள்
    கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல.
    திசையறியாது வீழும் இறகல்ல பெரும்
    நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து.

    நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து.
    பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது.
    தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது.
    ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு
    ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை.
    மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும்
    ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய்
    வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து.

    எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே
    எழுச்சியுடன் மனிதன் பாரில் பண்டிதனாகிறான்.
    எழுவாய் சொற்பிழம்பே! தயக்கங்களின் தடியடியில்
    எழுத்துக்களின் உராய்வு ஒரு நிசப்தக் குழியில்
    விழுந்தால் இலட்சிய நுரைகள் என்னாவது!
    ஏகலைவன் கணையால் சொற்கோடுகளின் ஆலிங்கனத்தில்
    வாக்கியங்கள் இரசவாதமாய் வீறுநடை போடும்.
    பாக்கியமாகி ஏற்றும் ஊதுபத்தி வாசனையேயெழுத்து.

     

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    கிரேசி மோகன்
    ——————————–

    “முட்டைக்குள் குஞ்சாக ,கொட்டைக்குள்(மாங் கொட்டை) பிஞ்சாக ,
    சட்டைக்குள் (மேனிக்குள் )வாழ்கின்ற ஜீவனே , -பட்டைகள் –
    தீட்டியநீ வைரம் ,திருடன் வரும்வரையில்,
    காட்டி யயிடத்தில் குந்து “….(1)

     
    மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
    தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
    யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
    சாகிறதை வென்ற சவம்….(2)

    கண்டேன் திருடனைக் கையும் களவுமாய்
    கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
    இனியவன் பக்கம் தனிமையே சொர்கம்
    கனிநான் அவன்கள்ளக் காய்….(3)

    ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
    சொப்புக்(கு) ஆடும் சிறுவனெனும் -இப்பக்
    குவம்வந்தால் ஈரேழு கண்டங்கள் ஆண்டும்
    தவம்செய்து வாழ்வோம் தனித்து….(4)

    சமத்துவ வேந்தன் சமர்த்தனுன் ஆன்மா
    அமர்த்தவனை சிந்தையில் ஆள -விமர்சனம்
    செய்யும் மனசாட்சி பொய்யின் அரசாட்சி
    நெய்யெதற்கு வெண்ணை நமக்கு…(5)…. கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ஆய்ச்சியர் மத்தொலி

    -மீனாட்சி பாலகணேஷ்

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    ‘மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்,
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’  (தொல்காப்பியம்- அகத்திணையியல் –  பொருளதிகாரம்)

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம், ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன எனக் கண்டோம். முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் முல்லைநிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது வியப்பையளிக்கின்றது. இக்கட்டுரையில் முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூலொன்றிலிருந்து முல்லைநிலத்தின் வளத்தினைப் பற்றிய ஒரு பாடலைக் காண்போம். சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலிது.

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்தவூர். meenatchi1இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழங்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்களின் கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும்  கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வரிவண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் ‘குளமலி கண்ணனா’கிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் புகழ்வாய்ந்த தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார் புலவர். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார்.  வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளுபவன் அல்லவா?

    “அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
    தாய்ச்சியர் மத்தொலியும்
    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
    ஆன்நிரை கத்தொலியும்
    ……………………………………
    …………………………முல்லைக்
    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
    கொட்டுக சிறுபறையே” (திருப்போரூர் முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- சிதம்பர அடிகள்)

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஓர் இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி.’

    இப்பாடலில் புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களை ஆங்காங்கே தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் பொருத்திப் பாடியுள்ளமையும் வியக்கத்தக்கது. ஆராய்ந்து கண்டெடுத்து படித்து நுகரவேண்டும்.

    ****

    அடுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களையும் ஒரு தொடராக நயந்து பாடிய பாடலொன்றினை குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவத்துப் பாடல்வாயிலாகக் காணலாம்.

    meenatchiகுமரன் குடிகொண்டுள்ள குறுக்குத்துறையெனும் ஊரானது பொருநை எனப்படும் தாமிரபரணி நதியினருகே அமைந்துள்ள அழகியதோர் ஊராகும். குமரனெனும் குழந்தையைச் செங்கீரையாட வேண்டிடும் புலவர், அப்பொருநை நதியின் அலைமுழக்கிற்கியையச் செங்கீரையாட வேண்டுகிறார். அந்நதியின் பெருமையை விளக்க அது ஓடிச்செல்லும் பாதையை நயமுற விரித்துரைப்பதே இப்பாடல். வேதங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் உயர்வாகப்பேசப்படும் நதி தாமிரபரணியாகும்.

    ‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
    முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
    என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
    அம்மலையை இறைஞ்சி ஏகி,
    பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
    திரு நதி………’ எனக் கம்பராமாயணமும் போற்றுகிறது.

    ‘தெற்கேயுள்ள தமிழ்நாடான பாண்டியநாட்டுப் பகுதியில் அகன்ற பொதியமலையில் நிலைபெற்ற சிறந்த அகத்தியமுனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தால், அது எப்போதும் அம்முனிவன் வாழும் உறைவிடமாகும். அம்மலையை வணங்கிச் சென்றால் அப்பால், பொன்துகள்கள் நிரம்பிய நீர் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள்,’ என சுக்கிரீவன் கூறுவதாக அமைந்த பாடல்.

    பொதிகை மலையின் உச்சியினின்றும் குதித்து இறங்கி ஓடிவரும் நதி, முதலில் தினைப்புனங்கள் நிரம்பிய மலைகள் சார்ந்த குறிஞ்சிநிலத்திற்கு வளங்களைச் சேர்க்கின்றது. பிரம்மாவின் மகனான புலத்திய முனிவரின் மகனாகிய அகத்தியரின் பெருமையை உலகிற்கு அறிவிக்கின்றது இப்பொருநை நதி.

    எவ்வாறு?

    பெருமை வாய்ந்த உயர்ந்த முனிவர்களுள் அகத்திய முனிவர் முதன்மையானவராவார். அகத்தியர்meenatchi2 கைக்கமண்டலத்தைக் காக வடிவில் வந்த விநாயகன் தட்டி விட்டதனால் சிந்திய நீரினின்றும் உற்பத்தியானவள் காவிரி நதியாள்*. தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த நீரை, பூமி செழித்து வளம் பெறவேண்டும் என்பதற்காக, அகத்தியர் தாமே உவந்து திருவுள்ளங்கொண்டு கவிழ்த்ததனால் தாமிரபரணி என அறியப்படும் தண்பொருநை* நதியாள் பெருகியோடினாள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றித் தன்னில் வந்து நீராடுவோருக்கு, அவர்களுடைய பாவங்களைக் களைந்துவிடும் தன்மையும் கொண்டவள் அவள். பின்பு பெருமை சேர்ந்த காடுசார்ந்த இடமாகிய முல்லைநிலங்களின் வழியாக, அவற்றின் வளங்களைக் கண்ணுற்றபடி செல்கின்றாள்.

    அடுத்து, பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ள வயற்பிரதேசமாகிய மருதநிலத்தில் புகுந்து உலவிச் செல்கிறாள் தாமிரபரணியாள். அவ்வாறு உலவுங்கால், அகன்று விரிந்து வயல்களில் நீரெனத் தேங்கி, நெல்லினை விளைவித்தும் மகிழ்கிறாள்; குமரியெனக் குதிநடை போடாமல் அடங்கி மென்னடை நடந்து ஸ்ரீவைகுண்டம் எனும் புண்ணியத் தலத்தைச் சேர்ந்து வழிபடுகிறாள்; பின்பு அங்கிருந்தும் நீங்கி கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் புகுகிறாள் அவள். அங்குகுழை எனப்படும் ஒருவகை நெய்தல்நில மலரில் புகுந்து தங்கியிருந்து இளைப்பாறுகிறாள். பின் எழுந்து உருண்டுபுரண்டு ஓடுபவள் அழகிய கடலின் கரங்களால் அரவணைத்துக் கொள்ளப்படுகிறாள். இவ்வாறு பெருமை கொண்ட நதியான தண்பொருநையின் முழக்கத்திற்கு இசைவாக நீயும் நயமாக செங்கீரை ஆடிடுவாயாக! குறுக்குத்துறை நாதனான குமரனே! செங்கீரையாடுக! என வேண்டுகிறார் புலவர்.

    தண்பொருநையான தாமிரபரணியின் பாதையை இயற்கையின் இனிய காட்சிநயத்துடன் விளக்கும் பாடல்.

    பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
    புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
    புலத்தி யன்றன் சுதன்பெருமை
    புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
    ………………………………………………
    நதியாம் பொருநை யலைமுழக்கில்
    நயந்தா டிடுக செங்கீரை
    நலமார் குறுக்குத் துறைநாதா
    நன்கா டிடுக செங்கீரை.

    (புலத்தியன் தன் சுதன்- புலத்திய முனிவரின் மகனான அகத்தியர்)

    (குறுக்குத்துறை குமரன் பி. த.- செங்கீரைப்பருவம்- வித்துவான் தி. சு. ஆறுமுகம் எனும் சிவதாசன்)

    *நதிகளைப் பெண்ணெனக் குறிப்பிடுவது நம் நாட்டு வழக்கு.

    ***************

    ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

    1. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    2. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- சிவதாசன்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்

     

    Share
  • இரவின் தனிமை

     

       சந்திரா  மனோகரன்

     

     

    எனக்கும்  அவனுக்குமிடையே

    முறுவலின்  அலைகள் !

    படகின்  மிதப்பில் —

    குளிர்மாலை  ஒளியில் —

    ஏரியின்  சிலிர்ப்பில்–

    அடைபட்ட  எண்ணங்கள்

    அவன் எதிர்பார்ப்பின்றி

    *பட பட * வென்று …

    அவன்  மௌனம்  இனியது

    சிற்றலைகளின்  அமைதியில்

    சிதறி  உடையும்  சொற்கள்

    மழைச் சாரல்  ஏரியை

    துளைத்தெடுக்கின்றன

    நீண்ட  நதிபோல்

    நெளிந்து கிடக்கும்  நீர்க்குளம்

    அவன்  மோனமும்  துணிவும்

    முடிவற்ற  பரிச்சயம்  எனக்கு

    இடையிலென்ன  இரும்புத்திரை ….

    தடுப்புச்சுவர்  அழியட்டும்

    நீரலைக்குள்  நீர்த்துப்போகட்டும்

    கரிய இரவுப்பயணம்  முடிந்துவிடும்

    கரைந்த  மோனத்தின் சில்லுகள்

    நிழல்களாய்ப்  படிகிறது , நீரில்

    மங்கலாய்த்  தெரியும்  கரையில்

    பளீரிடும்  நம்பிக்கை !

    சிற்றொளியில்  உதிரும்  சோகம்

    அவன்  மட்டும் கால்பதிக்க …

    பாவம்  பேதை

    வாழ்வின்  இரகசியம் புரியாதவள் !

    ஏரியும்  தோணியும் துணையற்ற  இருளும்

    என்னை ஏந்திய வண்ணம்  !

     

     

     

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 35

    க. பாலசுப்பிரமணியன்

     மனம் படுத்தும் பாடு

    திருமூலர்-1-3

    இறைவனை நாடும் முயற்சியில் நாம் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்தாலும் நமது மனம் அடிக்கடி நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி எங்கெங்கோ அலைபாய்கின்றது. இதைத்தான் நினைக்கவேண்டும், இதற்குள்தான் சிந்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் அதற்கில்லை. தேவையற்ற சிந்தனைகளுக்கு அடிமையாகி நாம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நம்முடைய முக்கிய நோக்கங்களும்  குறிக்கோள்களும் பாதை தவறிப் போகின்றன. இந்த அவலநிலைக்குத் தன்னைக் கொண்டுவிட்ட நெஞ்சை மாணிக்கவாசகர் எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா?

    வாழ்கின்றாய் வாழாத  நெஞ்சமே வல்வினைப்பட்டு

    ஆழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே

    சூழ்கின்றாய் கேடு(உ )னக்குச் சொல்கின்றேன் பல்காலும்

    வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே

    இது போன்ற துயரத்தை அனுபவித்த பத்திரகிரியாரோ தன்னுடைய மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார் :

    ஊரிறந்து பேரிறந்து வொளியிறந்து வெளியிறந்து

    சீரிறந்து நின்றதிலே சேர்ந்தாயே நெஞ்சமே

     ஏன் நம் மனம் இவ்வாறெல்லாம் அலைகின்றது? இதைப் பற்றி திருமூலர் என்ன நினைக்கின்றார்?

    எவ்வாறு ஒரு குயில் தன் முட்டையை காகத்தின் கூட்டினிலே விட்டுவிடவே காகம் அதைத்தன் முட்டையென நினைத்து அதையும் பேணுகின்றதோ அதுபோல் நாம் மாயையில் சிக்கி தேவையற்ற ஆசைகளையும் சேர்த்து காத்துக்கொண்டு வருகின்றோம்; பேணிக்கொண்டு வருகின்றோம். இதுதான் நம்முடைய சிற்றறிவின் வினைப்பாடு.

    குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்

    அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

    இயக்கில்லைப் போக்கில்லை யேனென்ப தில்லை

    மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே 

     சிற்றறிவின் தூண்டுதலால் தன்னுடைய துயரத்தின் எல்லைக்கே போய்விட்ட பட்டினதோரோ தன்னுடைய குறையை இறைவனிடம் எப்படி எடுத்துச் சொல்லுகின்றார் தெரியுமா?

    காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே

    மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிட்ட

    தூதென்றெண் ணாமற் சுகமென்று நாடுமித் துர்புத்தியை

    ஏதேன் றெடுத்துரைப் பேனிறை வாகச்சி யேகம்பனே

     இதற்கெல்லாம் ஒரே வழி – தம்மைத் தாமே அறிந்து கொள்ளுதல்தானே ? தன்னை அறிந்துகொண்டு தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொண்டு அறவாழ்வு வாழ்பவர்க்கு எப்படி இந்தத் துயரங்கள் வரும்? ‘நான் யார்?” என்ற  கேள்விதான் காலந்தொட்டு நம்முடைய தவத்தோர்களால் கேட்கப்பட்டு வந்த கேள்வி. திருமூலர் கூறுகின்றார்

    தாம் அறிவார் அண்ணல்தான் பணிவார் அவர்

    தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

    தாம் அறிவார் சில தத்துவராவர்கள்

    தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே .

    தன்னைப் பற்றி அறிந்துகொள்பவர்க்கு தன்னுள் மற்ற உயிரினங்களின் தரிசனம் கிடைக்கின்றது. அந்த எல்லா உயிரினங்களிலும் அந்த ஒரே இறைவன் ஆட்சி கொண்டிருப்பதும் புலனாகின்றது இந்த நல்ல உணர்வே அறம் சார்ந்த வாழ்விற்கு அடிப்படையாகவும் அமைகின்றது.

    தன்னைப் பற்றிய அறிவு ஒரு மனிதனுக்கு கிடைக்கப்பெற்றால் அது ஒரு பெரிய விழிப்புணர்வு. அது சோதி வடிவில் நிற்கும் பரம்பொருளின் ஆனந்த தரிசனம். அந்த நிலையில் தன்னுள் இறைவனையும் இறைவனில் தன்னையும் காண்கின்ற ஒரு ஒன்றுபட்ட உன்னத நிலை   வெளிப்படுகின்றது.

    மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

    தன்னுற்ற சோதி தலைவன் இலையிலி

    பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

    என்னுற் றறிவனான் என்விழித்  தானே

    என்று அந்த பேரின்பநிலையை விளக்குகின்றார் திருமூலர்.

    இந்தப் பேரானந்த நிலைக்கு நம்மை எவ்வாறு ஆண்டவன் அழைத்துச் செல்லுகின்றான்? அவனுடைய பெருங்கருணைக்கு காரணம் என்ன? இந்த அருள் கிடைப்பதற்கு நாம் எவ்வாறு தகுதி உள்ளவராகின்றோம்? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் கிடைப்பதில்லை. நம்மால்  இந்தக் கருணையைக் கண்டு வியக்கத்தான் முடியும். திருவாசகத்தில் மாணிக்க வாசகருக்கும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை

    மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா

    ஒத்தானே பொருளானே உண்மையாய் இன்மையுமாய்ப்

    பூத்தானே பூத்திங்குப் புரள்வேனைக் கருணையினால்

    பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே

    சிற்றறிவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இப்பேரானந்த நிலைக்குச் செல்ல நாம்கூட முதல் படி எடுத்து வைக்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • உன் குரல் கேட்டால்..!

    பெருவை பார்த்தசாரதி 

    images (10)

     

     

     

     

     

     

     

     

     

    அத்தானென அழகாயுன்குரல் கேட்டால் போதும்..

    ……….அன்பின் உச்சத்துக்கு அச்சொல்லே பிரதானமாகும்.!

    முத்தான கனிச்சொல் பலவுண்டாம் தாய்மொழியில்..

    ……….முத்தமிழில் “என்அத்தான்” எனும்சொல் இனிக்கும்.!

    இத்துணையினால் பெறும் பேரின்பக் கிளர்ச்சியே..

    ……….இயக்கும்நம் பெரும்சக்திக்கு ஈடாகும் பாலமாகும்.!

    எத்தனை போராட்டங்கள் புவியில்பல நடந்தாலும்..

    ……….இத்“தஞ்சம்” எனும்முடிவு காதலிலே மட்டுமெழும்.!

     

    காதல் இயல்பாக எழவேண்டுமதில் எப்போதுமே..

    ……….கனலிருக்கும்!உரசிக்கொண்டால் பற்றிக் கொள்ளும்.!

    மோதலென்பது காதலில் வந்தாலது முற்றியவுடன்..

    ……….முடிவில் சரணாகதி என்பதேயதன் தத்துவமாகும்.!

    காதலியே!“காதலிக்கிறேன்”எனஉன்குரல் கேட்டால்..

    ……….காலத்திற்கும் அடிமையாவது காதலின் பண்பாகும்.!

    காதல் கைகூடாமல் மாந்தரழிந்தாலும் இவ்வுலகில்..

    ……….காலத்தால் அழியாதென்பது உண்மைக் காதலாகும்.!

     

    கவர்ச்சியென்பது காதலுக்கு முக்கிய இலக்கணமாம்..

    ……….காணும் பார்வையாலே யாவரையும் கவர்ந்திழுக்கும்.!

    கவண்கல்போல் வைத்தகுறி நோக்கி விரைந்துசெலும்..

    ……….கருவிழிகள் காதல்வயப்பட்டவரை சுண்டி இழுக்கும்.!

    அவசரத்தில் அரும்புகின்ற காதல்முதலில் இனிக்கும்..

    ……….அவகாசத்தில்……அடிநாக்கிலதுவே பின்பு கசக்கும்.!

    விவரமாகக் காதல்செய்யத் தெரியவேண்டும் அதில்..

    ……….விழிப்புடன் இருந்தால் மட்டுமேயது கைகூடிவரும்.!

     

    இருந்துபோதல் என்பதே இம்மனித வாழ்க்கையாம்..

    ……….இன்பக்காதல் இல்லையேல் வாழ்வென்பது சுமையாம்.!

    ஒருமித்த காதலுக்கு உண்மையன்பு பாசம்வேண்டும்..

    ……….உறவைச் செழிப்பாக்கும் உரமாவது காதலுணர்வாகும்.!

    ஒருஉயிர்பிறக்க ஈருயிர் வேண்டுமென்பது விதியாகும்..

    ……….ஈருறவில் காதல்விதி மாற்றமிருந்தால் பிறவியேது.!

    உருவாகும் உன்னதக் காதலிலெழும் எண்ணங்களை..

    ……….உரையாக்க….உன்குரல் கேட்டால்தான் அதுமுடியும்.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-11-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • தமிழ் – மலையாள மொழிகளில் செயல் வினைமுற்றுக்கள் (Indicative Verbs in Tamil and Malayalam)

    -முனை. விஜயராஜேஸ்வரி 

    தமிழ் மொழியின் சொல் வகைகளை இலக்கணவியலாளர்கள் பலவாகப் பிரிப்பர். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் மொழியின் சொல் வகைகளைப் பெயர் வினை இடை உரி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது. அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியம் இதனை,

    ”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
    நினையுங் காலை காலமொடு தோன்றும்”   (தொல்.சொல். 683) என்பார்.

    தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்று வரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் என்று கொள்ளப்படும் என்பார் பேரா. பொன். கோதண்டராமன். ( இக்காலத் தமிழ் இலக்கணம், 2002, பக் – 44).

    வினைச்சொல் வகைப்பாடுகள்

    தமிழ் வினைசொற்களைப் பல்வேறு அடிப்படைகளில் பல வகைப்பாடுகளுக்கு  இலக்கணவியலார் உட்படுத்தியுள்ளனர். இதன் பயனாக பல்வேறுபட்ட வினைவகைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மெல்வினை, வல்வினை என்பது ஒரு வகை. வினைச்சொற்கள் ஏற்கும் காலம்காட்டும் உருபுகளை அடிப்படையாக வைத்து; கிரால் என்பவர் பன்னிரண்டு வகைகளாகப் பிரிப்பார். ஆர்டன் என்பவர் ஏழு வகைகளாகப் பிரிப்பார். பேரா.பொன் கோதண்டராமன் அவர்கள் வினைச்சொற்கள் ஏற்கும் காலங்காட்டும் உருபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைகளாகவும்; ஒழுங்கில்லா வினைகளையும் சேர்த்து மொத்தம் ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளார். வினையடிகளை அடிப்படையாக வைத்து தனிவினை, கூட்டுவினை எனப்பிரிப்பர். வினைச்சொற்களின் பொருட்பண்புகளை அடிப்படையாக வைத்து; செயல்வினை, நிலைவினை, இயங்குவினை என்றும் பிரிப்பர். தன்வினை பிறவினை என்பது மற்றுமொரு வகைப்பாடு. தெரிநிலைவினை குறிப்புவினை என்பது மரபிலக்கணங்கள் கூறும் வகைப்பாட்டு முறை. செய்வினை, செயப்பாட்டு வினை என்பதொருமுறை. முற்று, எச்சம் என்பது மற்றுமொரு வகை. வினைச்சொல்லுடன் பிற வினைகள் இணைவதனை வைத்து முதல்வினை, துணைவினை என்ற பகுப்பையும் காணலாம். இவ்வாறு தமிழ்வினைச்சொற்கள் பலவகைகளான பகுப்புகளைக் கொண்டுள்ளன.

    மலையாளத்தில்  வினைச்சொல் பாகுபாடு

    கேரளபாணினியம் என்ற மலையாள இலக்கண நூலின் ஆசிரியரான ஏ.ஆர். இராஜ இராஜ வர்மா அவர்கள் மலையாள மொழியின் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.

    தற்கால மலையாள மொழிக்கு இலக்கணம் வகுத்த ஆர்.இ.ஆசர் அவர்கள் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பிரிவுகளாகவே பிரித்துள்ளார்.

    தற்கால மலையாள வினைச்சொற்களைக் குறித்து ஆய்ந்த ஏலியாஸ் என்பவர் வினைகளை வினைமுற்று, வினையெச்சம் என்றே பிரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    மலையாள மொழியின் வினைச்சொற்களை பேரா. சூரநாடுகுஞ்ஞன் பிள்ளை அவர்கள் பதினாறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இறந்தகால இடைநிலைகளின் அடிப்படையில் இந்த வினைப்பகுப்பு அமைந்துள்ளது. மலையாளப் பேரகராதியிலும் இராமசரிதம் , கன்னச இராமாயணம், இராம கதாப்பாட்டு, பாரதமாலை போன்ற மலையாள நூல்களின் விளக்கவியல் இலக்கணங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுள்ளது.

    திராவிட மொழிகளைக்குறித்து ஆராய்ந்த பேரா. ஜான் சாமுவேல் அவர்கள் அவற்றின் வகைப்பாடுகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

    ”திராவிட மொழிகளின் வினைச்சொற்களில் தன்வினை, பிறவினை, இயக்குவினை என்ற மூவகையான வினை வகைகளையும், ஏவல் வினை, நிபந்தனை வினை, வியங்கோள் வினை என்னும் பல்வேறு வினைப்பொருள்களையும் (Moods) காணலாம். வினைச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்க ஐரோப்பிய மொழிகளில் முன்னொட்டுக்கள் (Prepositions) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் திராவிட மொழிகளில் துணை வினைகளும் எச்சமாக அடுக்கும் வினைகளும் (Particles and Infinitives) பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் வினைச்சொற்களைக் காலங்காட்டும் முறை, வினையின் தன்மை, பால்காட்டும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபடுத்தலாம்.

    (பேரா.ஜான் சாமுவேல், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம், 2008, பக், 176).

    எனவே தமிழிலும் மலையாளத்திலும் பல அடிப்படையிலான வினைச்சொற்களின் வகைப்பாடுகள் காணப்படினும் இவற்றுள் எந்த அடிப்படையிலான பகுப்பு தமிழ் மலையாள வினைச்சொற்களை  தெளிவாக விளக்க பயன்படுமோ அப்பகுப்பே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தமிழ் – மலையாள கணினி வழி மொழிபெயர்ப்பிற்கு வினைச்சொற்கள் குறித்த தெளிவினை அளிக்க இப்பகுப்பு முறைகள் இன்றியமையாததாகும். இங்ஙனம் அமைந்துள்ள பல பகுப்பு முறைகளில்     வினைமுற்று, வினையெச்சம் என்ற பகுப்புமுறை தமிழ் – மலையாள மொழிகளில் நவீன இலக்கண ஆசிரியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழில் வினைமுற்று

    தமிழ் மொழியில் பொருள் நிறைவுற்று / முற்று பெற்று வரும் வினைகள் வினைமுற்று என்ற வகையில் அடங்கும். இவ்வினைகள் வினையடி, கால இடைநிலை, பால், இட விகுதி என்ற அமைப்பில் அமையும்.

    மலையாள மொழியில் வினைமுற்று பிற திராவிட மொழிகளிலிருந்தும் வேறுபட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வினைமுற்றுக்களில் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் எவ்வித இயைபும் கிடையாது. அதாவது பால், எண், இடவிகுதிகள் மலையாள வினைமுற்றுக்களில் காணப்படுவது இல்லை.

    வினைமுற்று வகைகள் 

    வினைப்பொருண்மையின் அடிப்படையில் மூன்று வகையான வினைமுற்று வகைகள் தமிழிலும் மலையாளத்திலும் அமைந்துள்ளன. அவையாவன,

    • ஏவல் வினைமுற்று ( Imperative Mood)
    • கூற்று அல்லது செயல் வினைமுற்று (Indicative Mood)
    • வியங்கோள் வினை முற்று ( Optative Mood)

    இவ்வகைகளுள் தமிழ் – மலையாள மொழிகளில் வழங்கப்படும் செயல் வினைமுற்றுக்கள் மூன்று காலங்களுக்கும் ஏற்ப அமையும் முறைகள் இங்கே ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

    செயல்வினை முற்றுக்கள் (Indicative Verb Forms)

    செயல்வினை முற்றுகள் ஒரு செயல் நிகழ்ச்சியை நடுவு நிலையில் வெளிப்படுத்த உதவுகிறது. ( இசுராயேல் பக்-16). இவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்று வரும். செயல் வினைகளில் உடன்பாடும் எதிர்மறையும் உண்டு.

    மலையாளத்தில் செயல்வினை வடிவங்கள் காலங்காட்டும் உருபுகளை மட்டும் எடுத்து வரும். அவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்பதில்லை. மலையாளத்திலும் உடன்பாட்டு செயல்வினை முற்றுக்களும் எதிர்மறை செயல்வினை முற்றுக்களும் உண்டு.

    உடன்பாட்டு செயல்வினை முற்று

    தமிழில் உடன்பாட்டு செயல்வினை வடிவங்கள் பால், எண், இட உருபுகளை ஏற்றே வருகின்றன. அப்போது அதன் அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.

    [ வினையடி + காலங்காட்டும் உருபு + எண் உருபு + இடவிகுதி ]

    தமிழில் பால், எண், இட உருபுகள் மூன்றும் ஒன்றாக இணைந்து ஒரே உருபனாக, இம்மூன்று செய்திகளையும் உள்ளடக்கிய பாலறிகிளவியாக அமைகின்றது.

    எ.கா:

    வந்தான், வருவான், வருகிறான்

    மலையாளத்தில் உடன்பாட்டு வினை வடிவம் வினையடியையும், காலங்காட்டும் இட உருபனை மட்டுமே கொண்டு அமைகின்றது. அது, பாலறிகிளவிகளைக் கொண்டிருப்பதில்லை.

    இதன் அமைப்பு:

    [ வினையடி + காலங்காட்டும் உருபு]

    எ.கா: (அவன்) வன்னு, (அவன்) வருன்னு, (அவன்) வரும்

    தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் மலையாளத்தில் இவ்வாறு அறிய முடிவதில்லை. இதற்குப்பதிலாக, எழுவாயின் பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு இணைக்கப்படுகின்றது. அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இம்மாறுபாடு அமைப்பு அளவிலும் வெளிப்பட்டு, இரு மொழிகளுக்கும் இடையே சிறப்பான வேறுபாடாக அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    தமிழிலும் மலையாளத்திலும் மூன்று காலங்களுக்கும் உடன்பாட்டு வினைமுற்றுக்கள் அமைவதைக் கீழே காணலாம். 

    இறந்தகால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்–மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் செயல் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். 

    எண் த–ப.பெயர் /

    த–மூ.பெ.

    த–வி.மு. ம.ப.பெயர்/

    ம–மூ.பெ.

    ம–வி.மு.
    1 நான் வந்தேன் ஞான் வன்னு
    2 நாம்- உ.த.பன் வந்தோம் நாம் வன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வந்தோம் ஞங்ஙள் வன்னு
    4 நீ வந்தாய் நீ வன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    6 நீங்கள்-பன் வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    7 அவன் வந்தான் அவன் வன்னு
    8 அவள் வந்தாள் அவள் வன்னு
    9 அவர் வந்தார் அத்தேகம் வன்னு
    10 அவர்கள் வந்தார்கள் அவர் வன்னு
    11 அது வந்தது அது வன்னு
    12 அவை வந்தன அவ வன்னு

    தமிழில் இறந்தகால உடன்பாட்டு செயல் வினைமுற்றுக்கள் பெயர் மற்றும் மூவிடப்பெயர்களுக்கு பத்து வெவ்வேறு விதமான பாலறிகிளவிகளை ஏற்று அமைகின்றன. அவையாவன,

    1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன.

    ஆனால் மலையாள இறந்தகால வினைமுற்றுக்கள் இவற்றை ஏற்று வருவதில்லை. எனவே அமைப்படிப்படையில் தமிழிலும்  மலையாளத்திலும் இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாக இது கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களை மேலே கண்டோம். மலையாள வினைகள் இறந்த காலத்தில் எவ்வித பாலறிகிளவியையும் எந்த ஒரு பதிலிடு பெயருக்கும் ஏற்பதில்லை என்பது அதன் மூலம் தெளிவாகின்றது. இனி நிகழ்காலத்திற்கு ”வருதல்” எனும் வினைக்கு இருமொழிகளிலும் அமையும் வினைமுற்று வடிவங்களையும் அவற்றின் பாலறிகிளவிகளையும் காண்போம். 

    நிகழ்கால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்–மலையாளம்

    எண் த–ப.பெயர்

    த–மூ.பெ.

    த–வி.மு. ம.ப.பெயர்

    ம.மூ.பெ.

    ம–வி.மு.
    1 நான் வருகிறேன்/

    வருகின்றேன்

    ஞான் வருன்னு
    2 நாம்- உ.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    நாம் வருன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    ஞங்ஙள் வருன்னு
    4 நீ வருகிறாய்/

    வருகின்றாய்

    நீ வருன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    6 நீங்கள்-பன் வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    7 அவன் வருகிறான்/

    வருகின்றான்

    அவன் வருன்னு
    8 அவள் வருகிறாள்/

    வருகின்றாள்

    அவள் வருன்னு
    9 அவர் வருகிறார்/

    வருகின்றார்

    அத்தேகம் வருன்னு
    10 அவர்கள் வருகிறார்கள்/

    வருகின்றார்கள்

    அவர் வருன்னு
    11 அது வருகிறது/

    வருகின்றது

    அது வருன்னு
    12 அவை வருகின்றன அவ வருன்னு

    தமிழில் நிகழ்காலத்திற்கும் 1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன. என்ற பத்து வித பாலறிகிளவிகளும் வினைமுற்றில் வருகின்றன. ஆனால் மலையாள வினைமுற்றுக்கள் அதன் ஈற்றில் எவ்வித பாலறிகிளவியையும் ஏற்பதில்லை. நிகழ்காலங்காட்டும் “உன்னு” எனும் உருபு மட்டுமே ஈற்றில் வந்து வினை முடிகின்றது. இவ்வேறுபாடு இங்கே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

    [வருகிறான் = வருன்னு] 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்–மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு எதிர் காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். தமிழில் எட்டு வகையான பாலறிகிளவிகள் முக்காலத்திற்கும் ஒரே போன்று அமைகின்றன. தமிழில் அஃறிணைப்பதிலிடு பெயரான ”அது” மற்றும் ”அவைக்கு” எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றுக்கள் ”உம்” என்று மட்டுமே அமைகின்றன. இவ்வாறு நோக்குகையில் தமிழின் அஃறிணைப்பதிலிடுபெயர்களின் பாலறிகிளவிகளான ”உம்” மட்டுமே மலையாளத்தின் மூன்று காலங்களுக்கும் பாலறிகிளவிகளாக அமைந்து வருகின்றது என்று  கருத ஏதுவாகின்றது. 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்–மலையாளம்

    எண் த–ப.பெயர்/

    த–மூ.பெ.

    த–வி.மு. ம.ப.பெயர்/

    ம.மூ.பெ.

    ம–வி.மு.
    1 நான் வருவேன் ஞான் வரும்
    2 நாம்- உ.த.பன் வருவோம் நாம் வரும்
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருவோம் ஞங்ஙள் வரும்
    4 நீ வருவாய் நீ வரும்
    5 நீங்கள்-மரி.ஒ வருவீர்கள் நிங்ஙள் வரும்
    6 நீங்கள்-பன் வருவீர்கள் நிங்ஙள் வரும்
    7 அவன் வருவான் அவன் வரும்
    8 அவள் வருவாள் அவள் வரும்
    9 அவர் வருவார் அத்தேகம் வரும்
    10 அவர்கள் வருவார்கள் அவர் வரும்
    11 அது வரும் அது வரும்
    12 அவை வரும் அவ வரும்

    [ வருவேன், வரும் = வரும்    ]

    வேறுபாடுகள்

    1. தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. மலையாளத்தில் அவ்விடம் இடம்பெறுகின்ற எழுவாயின்   பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு சேர்க்கப்படுகின்றது.      எனவே மலையாளத்தைப் பொறுத்தவரையிலும் அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண்    மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இரு    மொழிகளுக்கும் இடையே அமையும் சிறப்பான வேறுபாடாக    இது அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    1. தமிழில் இறந்தகால வினைமுற்றுகள் பத்து வெவ்வேறு வித பாலறிகிளவிகளைப் பெற்றே அமைகின்றன. ஆனால் மலையாளத்தில் இறந்தகால    வினைமுற்றுக்களுடன் எவ்வித      பாலறிகிளவிகளும் வருவதில்லை. இது தமிழ்-மலையாள   இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாகக்   கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    1. தமிழில் 8 வித பாலறிகிளவிகள் எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றினைக் குறிக்க பயன்படுகின்றன. மேலும் இரண்டு அஃறிணைப் பெயர்களுக்கும் ”வரும்” என்ற ஒரேயொரு   முறையே உள்ளது. (எ.கா: அது வரும்). மலையாளத்தில்    உயர்திணைக்கும் அஃறிணைக்கும் “வரும்” என்ற ஒரேயொரு    முறையே அமைகின்றது. இருமொழிகளுக்கும் இடையே    அமையும் குறிப்பிடத்தக்க வேறுபாடாக இது அமைகின்றது.

    [ வருவேன், வரும் = வரும்]

    ***** 

    துணைநூற்பட்டியல்

    1. Thomas Lehmann – A Grammar of Modern Tamil
    2. E.Asher –           Malayalam
    3. Eugene A. Nida – Morphology
    4. S.Subramoniam – Dravidian Comparative Grammar
    5. Ravishankar . S. Nair – A Grammar of Malayalam
    6. R. Gopalapillai – Linguistic Interpretation of Lilathilakom
    7. Collected Papers on Malayalam Language and Linguistics – ISDL Publication
    8. M.Israel – The Treatment of Morphology in Tolkappiam
    9. Naduvattom Gopalakrishnan -Early Middle Malayalam
    10. N.Rajasekharan Nair – Auxiliary Verbs in Malayalam
    11. N.Ezhuthaccan -The History of the Grammatical Theories in Malayalam
    12. Arden – Grammar of Modern Tamil
    13. K.M.George – Malayalam Grammar and Reader
    14. பேரா.பொன் கோதண்டராமன் – இக்காலத்தமிழ் இலக்கணம்
    15. ஏ.ஆர்.இராஜ இராஜ வர்மா – கேரள பாணிணியம்
    16. தேவநேயப்பாவாணர் – மொழி மரபு
    17. பரமசிவம்.கு. – இக்காலத்தமிழ் மரபு
    18. அகத்தியலிங்கம்.ச – தமிழ் மொழி அமைப்பியல்
    19. பேரா.ஜான் சாமுவேல் – திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம்.
    20. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    21. நன்றி: பேரா. நடுவட்டம் கோபாலகிருட்டினன் – திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.
    22. நன்றி: பேரா. இரவிசங்கர் எஸ்.நாயர் – மொழியியல் துறை, காசர்கோடு மத்தியப்பல்கலைக்கழகம்.
    23. முனை.செ.வை சண்முகம் – கேரளபாணினியம் – முகவுரை – மொழியியல் ஆய்வு.
    24. முனை.செ.வை சண்முகம் – தொல்காப்பியரின் சொல்லியல் கோட்பாடு
    25. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சிவலிங்கனார்
    26. பேரா.சிவா.எம்.ஏ. – தமிழ்மொழி

    *****

    கட்டுரையாசிரியர்
    விரிவுரையாளர், தமிழ்த்துறை,
    கேரளப்பல்கலைக்கழகம்,
    காரியவட்டம், திருவனந்தபுரம்.

     

     

     

     

    Share
  • சர்வதேச நீரிழிவு நோய் தினம்

    பவள சங்கரி

    நீரிழிவு (சக்கரை வியாதி) நோயாளிகளின் எண்ணிக்கையில் முதன்மையான பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை . இந்தியாவில் 70 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று, 199.5 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் .  2040 இல் 313 மில்லியன் பெண்கள் சக்கரை நோயினால் பாதிக்கப்படக்கூடுமாம்.. ஆண்கள்தான் சக்கரை வியாதியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற பழைய கதையெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் இந்த இடைவெளி மிக விரைவாக மறைந்து வருகிறது. அதிகரித்து வரும் உடல் பருமன், அமைதியற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் நகர்ப்புற பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர், கிராமப்புற பெண்களும் விதிவிலக்கல்ல!

    இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதால் உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (248)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக முனாப் கபாடியாவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு. ஆனால் உலகின் மிகப்பெரிய கம்பனியான கூகிளில் பணிபுரியும் ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது நமக்கு வியப்பாக தானே இருக்கும்? அதை செய்தவர் தான் முனாப் கபாடியா.

    இது குறித்து தட்ஸ்தமிழ் இணையதளம் கூறுவது என்னவெனில்

    “2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார். கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர். அம்மா கையால் செய்த உணவு.. தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப். சோதனை முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.

    இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார். அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் word of mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய். இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார். உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார். தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.

    இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ். பிரபலங்கள் தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார். மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

    தற்போது இவரது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார். மேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். வெற்றி இதுகுறித்து முனாப் கூறுகையில், “போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது”. என்று கூறினார்.

    மேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப். பிராண்ட் அம்பாசிட்டர்.. எங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார். சாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி. பேஸ்புக் இவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன்னாட்டு கம்பனி வேலையை விட்டுவிட்டு சுயதொழில் துவக்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்த சாதனையாளரான முனாப் கபாடியாவை பாராட்டும் விதத்தில் அவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share