இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம் அதிவிரைவாக முன்னே வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. மனத்தில் ஓடும் எண்ணங்கள் மடல் வாயிலாக உங்கள் முன்னே விரல் வழி வடிந்து உதிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது ஏதோ இலகுவான காரியமன்று. இத்தகைய புலம்பெயர்வுகளின் காரணங்கள் பலவகைப்படுவதுண்டு. நாட்டின் போர்ச்சூழல்களில் இருந்து உயிர் தப்பிச் செல்வோர்கள் ஒரு வகையினர். கல்விக்காகப் புலம் பெயர்வோர்கள் ஒரு வகையினர். வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்வோர்கள் மற்றொரு ரகம் என ப்லவகையான் காரணங்களைக் காணலாம்.ஆனால் புலம் பெயர்ந்தபின் தாம் புகுந்த நாட்டில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்களின் உண்மையான் தாக்கம் அத்தகைய ஒரு நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களே சரியான் வகையில் உள்வாங்கியிருப்பார்கள்.
ஒருவகையான கலாசார சூழலில், வித்தியாசமான காலநிலைகளின் மத்தியில் வாழ்ந்துவிட்டு முற்றிலும் புதிதான ஒரு கலாசார சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ப்வனவற்றிற்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது என்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல; அதுவும் குறிப்பாக நிறவேறுபாடு கொண்ட ஒருநாட்டில் எம்மை இணைத்துக் கொள்ளும்போது அந்நாட்டில் வாழும் சிறுபகுதியான நிறவெறி, இனவெறி கொண்ட மக்களின் காழ்ப்புணர்ச்சிகளின் மத்தியில் எமக்காக ஓர் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஏற்படும் இடர்களைச் சமாளிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். சில சமயங்களில் அவசரம், அவசரமாக அகதிகளாகத் தாம் பிறந்த நாட்டை விட்டுவிட்டு ஓர் அந்நிய நாட்டினுள் புலம்பெயரும்போது அந்நாட்டின் மொழி எமக்கு அந்நியமானதாக இருப்பின் அம்மொழியைக் கற்றுக் கொள்ளும்வரை வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் போராட்டமே!
நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் புலம்பெயர் மக்களாகிய எமது வாழ்வில் எத்தகைய தாக்கங்களைத் தோற்றுவிக்கப் போகிறது என்பதனை உன்னிப்பாகக் கவனித்து வாழவேண்டிய தேவையிருக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தை விட்டு எம்மை அந்நியப்படுத்தி வாழ்வது என்பது முடியாத காரியம். ஓரளவிற்கு எமது வாழ்க்கைச் சூழலை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாமும் நாம் வாழும் நாடுகளின் அடிப்படைச் செயற்பாடுகளில் எம்மை இணைத்துச் செயல்படுத்தி வாழ்வேண்டியது காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகிறது. எமக்கென ஒரு தனியான வட்டத்தை ஏற்படுத்தி எம்மவர் மத்தியில் மட்டுமே நாம் எமது உறவுகளைப் பலப்படுத்தி வாழ்ந்துவிட்டு நாம் இப்புலம்பெயர் நாடுகளில் இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்தப்படுகிறோம் என்று கூச்சலிடுவதால் பலனேதும் ஏற்படப்போவதில்லை. எம்மை அந்நியப்படுத்தி வாழும்போது நாம் வாழும் நாட்டு மக்க்களின் பார்வை உன்னிப்பாக எம்மீது விழுவதும், அவ்வித்தியாசங்களை அரசியல் லாபங்களுக்காக வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்தும் சிலரின் கைகளில் நாம் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.
இப்படியான சூழலில் இன்று நாம் பல புலம்பெயர் மக்கள் வெற்றியான வாழ்க்கையைத் தமதாக்கிக் கொள்ளும் ஒரு நிலையைப் பார்க்கிறோம். இத்தகைய சாதனையாளர்களின் மனவைராக்கியத்தையும், இலட்சிய வேட்கையையும் வியந்து பாராட்டாமலிருக்க முடியாது. வாழ்க்கை தம்மீது தூக்கிப் போடும் அத்தனை தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக்கித் தமது முன்னேற்றம் தமக்கு மட்டுமல்ல தாம் வாழும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் ஒன்றாக ஆக்கி உதாரண புருஷர்களாக வாழ்வைதைக் காணும்போது அவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு புலம்பெயர் மனிதருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவது இயற்கையே. இம்மடல்மூலம் அத்தகைய ஒரு சாதனையாளரின் வாழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனமது மனத்தில் இவ்வாரம் இழையோடும் எண்ணமாகிறது.
யார் அவர் ?
1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி தற்போதைய “ஸொமாலிலாண்ட் (Somaliland)”எனப்படும் நாட்டிலே “கபீலி” எனும் இடத்தில் “கவீர் அவால் இசாக்” குடும்பத்தில் பிறந்தவர் “மோ ஃபரா (Mo Farah)” ஆனில ஜந்து என்றழைக்கப்படும் “மொகமட் முக்தார் ஜெமா ஃபரா (Mohamed Muktar Jama Farah ) “ இவரது பாட்டனார். “ஜெமா” அந்நாளில் இங்கிலாந்தின் கீழிருந்த ஸொமாலியாவிலிருந்த ஒரு பிரித்தானியப் பிரஜையாவர். இவரின் தந்தை “முக்தார் ஃபரா”லண்டனில் பிறந்த ஒரு ஸொமாலிய இனத்தவர். விடுமுறையில் அவர் மோ ஃப்ராவின் தாயரைச் சந்தித்து திருமணம் புரிந்தார். எட்டு வயதுவரை ஸொமாலிய நாட்டிலேயே வாழ்ந்து வந்த மோ ஃப்ரா , எட்டு வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தார். தான் இங்கிலாந்துக்குள் நுழைந்தபோது தனக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது என்று கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் Feltham எனும் இடத்திலுள்ள Isleworth and Syon school எனும் பள்ளியிலும், பின்பு Feltham Community College எனும் கல்லூரியிலும் கல்வி பயின்றார். படிக்கும்போது ஒரு கார் மெக்கானிக்காகவோ அன்றித் தனது விருப்பத்துக்குரிய உதைபந்தாட்டக் குழுவான Arsenal உதைபாந்தாட்டக் குழுவில் உதைபந்தாட்டம் விளையாட வேண்டும் என்றே கனவு கண்டதாகக் கூறுகிறார்.
ஆனால் காலதேவனின் கணக்கோ வேறு. இவர் பயின்ற கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளர் இவரின் ஓட்டப்பந்தயத் திறமையை இணங்கண்டார். இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கவுன்சிலோ நகரைப் பிரதிநிதிப்படுத்தி லண்டன் இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று மரதன் ஓட்டப் போட்டியில் ஒன்பதாவதாக வந்தார். அதற்கடுத்த வருடம் அவர் ஐந்து ஆங்கிலப் பள்ளிக்கூடங்களுக்கான ஓட்டப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெற்றார். இவரது திறமையை அறிந்த ஒரு செல்வந்தரான Eddie Klukundis என்பவர் இவர் இங்கிலாந்துப் பிரஜையாவதற்குரிய தொகையினை நன்கொடையாகக் கொடுத்து இவரைச் சட்டபூர்வமாக
இங்கிலாந்துப் பிரஜையாக்கினார். அதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய மற்றும் உலக ஓட்டப் பந்தயங்களின் நீண்டதூர ஓட்டப் பந்தயங்கள் பலவற்றில் பங்குபற்றி இங்கிலாந்து நாட்டுக்கும், தனக்கும் பல வெற்றிகளையும் , பதக்கங்களையும் வாங்கிக் குவித்தார். எமது நாட்டு ஓட்டப் பந்தயவீரர் என்று அனைத்து இங்கிலாந்து நாட்டு மக்களாலும் உரிமை கொண்டாடப்பட்ட ஒரு கறுப்பு இனத்தவர் எனும் பெருமையைத் தேடிக் கொண்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்ட இவர் கடைசியாக நடந்து முடிந்த ஓலிப்பிக் பந்தயத்துடன் தனது ஓய்வினை அறிவித்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் இங்கிலாந்துக்கும், தான் பிறந்த ஸொமாலிய நாட்டிற்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
எனது எண்ண முற்றத்தின் முன்றிலில் இவர் நினைவுகள் தவழ்வதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்னால் இவருக்கு இங்கிலாந்து மகாரணியாரால் “சார்” பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையேயாகும்.
எட்டுவயதுச் சிறுவனாக , ஆங்கில வார்த்தை ஒன்றுகூடத் தெரியாமல் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து இன்று மகாராணியாரால் “சார்” பட்டம் பெற்ற “மோ ஃப்ரா” அனைத்துப் புலம்பெயர் மக்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக, முன்னுதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது அல்லவா?
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்