குறுந்தொகை நறுந்தேன் – 11
-மேகலா இராமமூர்த்தி
தோழியின் யோசனைக்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் தலைவி. அவளை அவசரப்படுத்த வேண்டாம் எனக் காத்திருந்தாள் தோழியும். காலம் கடுகிச் சென்றுகொண்டிருந்ததேயொழியத் தலைவியோ வாய்திறப்பவளாகத் தெரியவில்லை. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்ததை உணர்ந்த தோழி மீண்டும் பேசலுற்றாள்…
”அருமைத் தோழி! உடன்போக்கைத் தவிர வேறெந்த வழியிலும் இப்போது நீ தலைவனை அடைய இயலாது!
”நான் சொல்வதைக் கேள்! நம் ஊருக்கும் தலைவர் ஊருக்கும் இடையே உள்ள வழி இனிமையானது; நெல்லிக்காய்கள் நிறைந்தது. அவ்வழியில் வானைத் தொடும் உயர்ந்த மலையின் அடிவாரத்தில், கரும்புப் பாத்தியில் தேங்கியிருக்கும் நீர்போல, காட்டு யானைகளின் அடிகள் புதைதலால் உண்டாகும் பள்ளங்களில் நீர் நிறைந்திருக்கும். நீ அவ்வழியே நெல்லிக்காய்களைத் தின்று, உன் கூரிய பற்கள் ஒளிபெறுமாறு நீரை அருந்தித் தலைவனோடு உடன்போக்கை மேற்கொள்ளுதலை நான் விரும்புகின்றேன்!
நீ போனபின் நம்மூரில் என்ன நடக்கும் என்றுதானே யோசிக்கிறாய்? நீ தலைவனோடு போனதுகுறித்து ஊரில் அலர் தூற்றுவர்; நம் சேரியிலுள்ளோர் (கல்லெனும் ஒலியெழ) வசைமாரிப் பொழிவர். அவர்களால் வேறென்ன செய்யமுடியும்? அற நினைவில்லாத நம் அன்னை தன் மனையில் தனியே கிடந்து புலம்பட்டும்!
இதுகுறித்தெல்லாம் நீ கவன்றால் தலைவனோடு இணையும் இல்லற வாழ்வை இழப்பாய்! எனவே இதுபோன்ற வசைமொழிகளுக்கெல்லாம் அசையாதே! இறுதியில் நீ இன்ப வாழ்வைக் காண்பது உறுதி!” என்று பலபடக் கூறித் தலைவியை ஒருவாறு உடன்போக்குக்கு உடன்பட வைத்தாள்.
ஊர்உ அலரெழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறனில் அன்னை
தானே இருக்க தன்மனை யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினால் அவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. (குறுந்: 262 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)
இக்குறுந்தொகைப் பாடலை அடியொற்றிய பழஞ்செய்யுளொன்று ’தமிழ்நெறி’ எனும் நூலிலிருந்து மேற்கோளாகக் கிடைத்திருக்கின்றது. (இந்நூலின் காலம், ஆசிரியர் பெயர் போன்ற பிற தகவல்கள் கிட்டவில்லை.)
“ஊருஞ் சேரியும் அலரெழ யாயும்
தானே யிருக்க தன்மனை யானே
திருந்துவேல் விடலையொடு கெழீஇ
அருஞ்சுரஞ் சேறல் புரிந்தனன் இனியே” (தமிழ்நெறி. மேற். 92)
’நெல்லியைத் தின்று நீர்குடித்தால் நாவினிக்கும்’ என்பதைக் கூறும் பாடல்கள் வேறுசிலவும் நம் அகவிலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
”…புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையில்…” (அகம்: 54)
”…..சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள்…..” (நற்: 271)
தலைவனொடு செல்லத் தலைவியின் ஒப்புதல்பெற்ற தோழி அடுத்து தலைவனைச் சந்திக்கப் புறப்பட்டாள். முதன்முதலில் அவனைச் சந்தித்த மலையருவி ஓரமே மீண்டும் அவனைக் காணும் வாய்ப்பினைப் பெற்றாள்.
தலைவியும் தோழியும் இருதலைப் புள்ளாய் இணைந்திருத்தலையே இதுவரை கண்டிருந்த தலைவன், தோழிமட்டும் தனியே வருவதைக் கண்டு வியந்தான்.
தலைவனுக்கு அணித்தே வந்த தோழி, ”ஐய! நலந்தானே?” என்று உசாவினாள்.
”நலமே நங்காய்! தலைவி எப்படி இருக்கிறாள்? அவளின்றி உனைநான் தனியே காண்டல் இதுவே முதன்முறை” என்றான் வியப்பு மாறாமல்.
”அன்ப! தலைவி நலமாயிருக்கிறாள் என்று நான் பொய்யுரைக்க ஏலாது! உம்மைக் காணாது அவள் தொல்கவின் தொலைந்து, தோள்மெலிந்து வாழ்வதிலே நாட்டமின்றி வாட்டமுற்றிருக்கிறாள். அவள் துயரை மேலும்கூட்டும் வகையில் அவளுக்கு அயல்மணங்கூட்ட முடிவுசெய்துவிட்டனர் அவள் தமர்” என்று கூறிவிட்டுத் தலைவனின் முகத்தை ஏறிட்டாள்.
திடுக்கிட்ட தலைவன், ”என்ன? அயலானோடு என் தலைவிக்கு மணமா? அவள் அதற்கு இசைந்துவிட்டாளா?” என்றான் ஐயத்தோடு.
”தலைவ! கற்புக்கடம்பூண்ட எம் பொற்புடைத் தலைவி உம்மையே தன் மணாளனாய் மனத்தில் வரித்துவிட்டவள்; வேறொரு மானிடவனுக்கென்று பேச்சுப்படில் அவள் வாழகில்லாள்!” என்று சீறினாள் தோழி.
”சினவாதே பெண்ணே! தலைவியை அயலானுக்கு மணமுடிக்க இசைந்துவிட்ட அவள் பெற்றோர், இப்போது நான் அவளை மணம்பேசச் சென்றால் அதனை ஏற்றுக்கொள்வார்களா?” என்றான் குழப்பத்தோடு!
”இல்லை! இனி உம்மோடு தலைவிக்கு மணம்நிகழ்த்த அவள் பெற்றோர் ஒருப்படப் போவதில்லை; ஆனால் அவளை நீர் மணக்க வேறோர் உபாயம் உண்டு!” என்ற தோழியைப் பார்த்து, ”என்ன அது?” என்றான் தலைவன் பரபரப்போடு.
அதுதான் ’உடன்போக்கு’ என்று தலைவிக்குச் சொன்னதையே திரும்பத் தலைவனுக்கும் சொன்னாள் தோழி.
துணுக்குற்ற தலைவன்… ”முறையாகத் தலைவியை மணக்க எண்ணியிருந்தவனைக் கள்வனைப்போல் அவளைக் கடத்திக்கொண்டு போ என்கிறாயே… இது முறையா?” என்றான் வருத்தம் மேலிட.
”வேறு வழியில்லை! என் ஆருயிர்த்தோழியின் மனம்விரும்பும் மணவாழ்வே எனக்கு முக்கியம். அதற்கான ஒரேவழி தலைவியை நீர் உம்மோடு கொண்டுதலைக் கழிதலே (உடன்போக்கு) என்றாள் தீர்மானமாக!
”அழைத்துச் செல் என்று நீ எளிதாய்ச் சொல்லிவிட்டாய். கல்லும் முள்ளும் கடும் வெப்பமும் பாதங்களைப் பதம்பார்க்கும் பாலைவழியில், மலரினும் மெல்லியளான தலைமகள் எங்ஙனம் நடப்பாள்; அவ்வழியை எப்படிக் கடப்பாள்?” என்றான் தலைவன் தயக்கத்தோடு.
”அன்ப! நீரில் வளர்வது குவளை (blue waterlilies); தன் தாளில் நீர் நிறைந்திருக்க மலர்ந்திருக்கும் அப்பூவானது, மேல்காற்று தன்மேல் மோதுவதனால் வாடிப்போவதில்லை. கவண்போன்ற நுகத்தின் பிணிப்பால் வருந்துதலையுடைய உப்பு வாணிகரின் எருதுகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை வரிசையாய் வைத்தாற்போன்ற உலர்ந்த மரக்கிளைகளை பிளத்தற்கு வலியின்மையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற பாலைநிலங்களும் நும்மோடு வந்தால் தலைவிக்கு இனிமையுடையனவே” என்றாள் தோழி முறுவலோடு.
நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைமடித் துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே. (குறுந்: 388 – ஔவையார்)
குவளை மலரில் மேல்காற்றுப்பட்டு அதனை வாடவைக்க முயன்றாலும், அதன் தாளடியில் இருக்கின்ற தண்ணீரால் அது வாடாமலிருப்பதுபோல், பாலை வழிகள் தலைவியின் மென்பாதங்களுக்குத் துன்பம் தந்தாலும், தலைவனொடு செல்வதால் அவையும் அவளுக்கு இனியனவே என்ற தோழியின் சாமர்த்தியமான பதில் தலைவனை மேலும் மறுத்துப் பேசவொட்டாமல் தடுத்துவிட்டது.
இங்கே வேறோர் நிகழ்வை நாம் பொருத்திப் பார்க்கலாம்…
கைகேயின் விருப்பப்படி இராமன் காடேக ஆயத்தமாகின்றான். சீதையும் உடன் வருவேன் என்று அடம்பிடிக்கின்றாள். ”நெருப்புப் போன்ற வெம்மையோடு கல்லும் முள்ளும் பொருந்திய காட்டில் உன் மலரடியால் நடத்தல் இயலாது” என்று இராமன் அவளைத் தடுக்கப்பார்க்க, அவளோ, ”உன்னால்வரும் பிரிவுத் துயரெனும் வெம்மைக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் ஈடாகாது; அப்படியிருக்க உன் பிரிவினும் என்னைச் சுடுமோ அந்தப் பெருங்காடு?” என்று அவனை மடக்கிவிடுகின்றாள்.
‘பரிவு இகந்த மனத்தொடு பற்றுஇலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? (அயோத்தியா காண்டம், நகர்நீங்கு படலம் 221.)
ஔவையாரின் மேற்கண்ட குறுந்தொகைப்பாடலில், ”உன்னோடு வந்தால் கானமும் இனியவே எம் தலைவிக்கு” என்கிறாள் தோழி. கம்பனின் சீதையோ “உன் பிரிவைவிடவா கானம் என்னைப் பெரிதாகச் சுட்டுவிடும்?” என்று கேட்கிறாள். ஔவையின் நோக்கும், கம்பரின் சிந்தனைப் போக்கும் ஒன்றுபோலவே இருப்பது வியப்பளிக்கின்றது.
ஒருவழியாகத் தலைவனையும் உடன்போக்குக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்ட தோழி, தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவனிடம் விவரிக்கலானாள்!
[தொடரும்]