(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
(மீ.விசுவநாதன்)

அத்யாயம்: 56

சுவாமி பரமார்த்தானந்தா

சுவாமி பரமார்த்தானந்தா

அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தனது கல்லூரி நாட்களில் கொல்கத்தாவில் சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி அவரது சீடர் தர்ஷ சைதன்யா போன்றவர்களின் பகவத்கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று பயனுள்ள நல்ல குறிப்புகளைத் தனது புத்தகங்களில் பதிவு செய்து கொள்ளும் பழக்கம் உடையவர். 1985ம் வருடம் திருமணத்திற்குப் பிறகு சென்னையில் அதுபோன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டும் என்று விரும்பி அவனிடம் கேட்ட பொழுது அவன் அதிலெல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி விட்டான். அப்படிச் சொன்னதில் அவனுக்கு மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். பிறகு சென்னையில் கீதை வகுப்பு யார் எடுக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டு, தனது குரு ஸ்ரீ தர்ஷ சைதன்யா சுவாமிக்குக் கடிதம் எழுத, அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சீடர்தான் சுவாமி பரமார்த்தானந்தா. அவர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் எடுப்பதாகவும், அது நடைபெறும் இடத்தையும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்த வகுப்புகள் சென்னை பெசன்ட் நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை நடைபெற்று வந்தது. அதன் பிறகு அடையாறில் இருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் மாலை ஆறு மணிமுதல் ஏழு மணிவரை நடைபெற்றத் துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

அவனது வீடு அப்பொழுது இந்திராநகர்ப் பகுதியில் இருந்தது. அவனுக்கு மனைவிக்கு சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம். அவனுக்கோ அதில் நாட்டம் இல்லை. அவனுக்கு மனைவி அவனிடம், “ஒரு நாள் வந்து கீதை வகுப்பைக் கேளுங்கள். பிடித்திருந்தால் வாருங்கள். இல்லையென்றால் உங்களைக் கட்டாயப் படுத்த வில்லை, நான் மாத்திரம் சென்று வருகிறேன். என்னை அந்த வகுப்பு நடக்கும் இடத்திற்குக் கொண்டு விட்டு, அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள். வேண்டா வெறுப்பாகத்தான் அவன் அன்று கீதை வகுப்புக்குச் சென்றான். சுவாமி பரமார்த்தானந்தாவின் எளிய ஆங்கிலமும், ஒவ்வொரு சுலோகத்தையும் அவர் விளக்கிச் சொல்கிற முறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது . அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் மனைவியுடன் கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி, இருபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து சுவாமிஜியின் உரைகளைக் கேட்டு அவன் பயனடைந்தான். அவனும் குறிப்புகள் எடுத்துக் கொள்வான். அதை உள்வாங்கிக் கொண்டு கவிதைகளும் எழுதி வருவான். இப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் சென்று வருகிறான்.

அவனுக்கு ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கையைக் கவிதையாக எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவன் 10.06.2006 அன்று சுவாமி பரமார்த்தானந்தரிடம் தெரிவித்த பொழுது, சமீபத்தில் (06.05.2006) புதிய பதிப்பாக வெளிவந்திருந்த ஸ்ரீ வித்யாரண்யர் எழுதிய “மாதவீய சங்கர விஜயம்” என்ற புத்தகத்தை அவனிடம் கொடுத்து,” இதை அடிப்படையாக வைத்து எழுதுங்கள்.” என்று ஆசிதந்தார். அவனும் அதை “அம்மன் தரிசனம்” பத்திரிகையில் “ஆதி சங்கர அத்வைத காவியம்” என்று தலைப்பிட்டு ஒரு நெடும் தொடராக எழுதினான். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் வெளியீடாக “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் முன்னிலையில் தமிழகத்தின் கவர்னரால் 26.10.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது .

1999ம் வருடம் செப்டெம்பர் மாதம் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் தனது வகுப்புக்குத் தொடர்ந்து வருகின்ற சுமார் இருநூறு சீடர்களை “ரிஷிகேசத்திற்கு” அழைத்துச் சென்றார்கள். பத்து தினங்கள் அந்த கங்கைக் கரையிலே தங்கி வேதாந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அவனுக்கும் அதில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு அமைந்தது.

சுவாமி ஓங்காரானந்தா

சுவாமி ஓங்காரானந்தர்

ஒவ்வொரு நாளும் காலையில் ஆறரை மணிமுதல் எட்டு மணிவரை உபநிஷத் வகுப்பும், மாலை நான்கு மணிமுதல் ஐந்து மணிவரை பத்ரஹரியின் “நீதி சதகம்” வகுப்பும் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். காலை எட்டு மணி முதல் ஒன்பது வரைச் சிற்றுண்டி நேரம். காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை “சிவமானச பூஜை” விளக்கத்தை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு சீடர் செய்வார் . காலை பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிவரை சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் திருக்குறளில் வேதாந்தம் என்ற தலைப்பில் உரை நிகழத்துவார். மாலை ஆறு மணிக்கு ரிஷிகேசம் ஆஸ்ரமத்தின் அருகிலேயே அழகாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு ஆரத்தி நடைபெறும். சுவாமி பரமார்த்தானந்தரின் முன்னிலையில் சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் ஆராத்தி பூஜையைச் செய்வார்கள். சீடர்கள் அனைவரும் ஒரு விளக்கை ஏற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுவார்கள். சுவாமிகளுடன் சீடர்களும் கங்கா மாதாவின் சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டு அவன் மெய்சிலிர்த்துப் போவான்.

கங்கைக்கு ஆரத்தி முடிந்தவுடன் ஆஸ்ரம வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஆலயத்தில் பூஜை நடைபெறும். அங்கு தரிசனம் செய்தவுடன் இரவு ஏழு மணி முதல் எட்டு மணிவரை ஸ்ரீமத் பகவத் கீதை பாடத்தை சுவாமி பாமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். இரவு எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் இரவு உணவு. அவன் ஒவ்வொரு நாளும் கங்கையில் உற்சாகமாகக் குளிப்பான். முதல் நாள் அவன் அங்கே நீந்தினான். அவன் நீந்துவதை வெகு தொலைவில் இருந்து பார்த்த சுவாமி பரமார்த்தானந்தா அவனை அழைத்து,” இங்கெல்லாம் நீந்தாதீர்கள். எப்பொழுது தண்ணீர் அதிகம் வரும் என்று சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக இருங்கள் ” என்றார். அதன் பிறகு அவன் அந்தப் படித்துறைப் பகுதியில் குளித்து சந்தியாவந்தனம் செய்து வந்தான். இரவில் சில நண்பர்களுடன் ஆஸ்ரமத்தின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பாய்ந்து செல்லும் கங்கையின் அழகிலும், ஒலியிலும் மெய்மறந்திருப்பான்.

சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் வேதாந்தக் கருத்துகளை திருக்குறள், தாயுமானவர், வள்ளலார், பாரதியார், பட்டினத்தார் பாடல்களுடன் ஒப்பிட்டு நல்ல இலக்கியச் செறிவோடு சொல்வதைக் கேட்டு அவன் மிகவும் ரசிப்பான். அவரது உரையில் நகைச்சுவையும் இருக்கும். அவர் சுவாமி சித்பவானந்தரின் சீடர். சுவாமி பரமார்த்தானந்தரிடம் வேதாந்தப் பாடம் கற்றவர். புதுக்கோட்டையில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி. தேனியில் ஒரு ஆஸ்ரமம் அமைத்துச் சீடர்களுக்கு வேத்தாந்தப் பாடங்கள் நடத்தி வருகிறார். “வேத நெறி” என்ற புத்தகம் அந்த ஆஸ்ரமத்தின் வெளியீடாக வந்துகொண்டிருக்கிறது. அவர் சென்னைக்கு அடிக்கடி வந்து ஆன்மிக உரைகள் நிகழ்த்தும் பொழுது அவன் தவறாமல் சென்று கேட்பான். 29.10.2017 ஞாயிறு அன்று அச்சிரப்பாக்கம் கிராமத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் “ஸ்ரீ பால வேத பாட சாலையின்” பத்தாவது ஆண்டு விழாவிற்கு சுவாமி ஓங்காரானந்தா அவர்கள்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தின் சிறப்பைப் பற்றி அருமையான சொற்பொழிவு செய்தார்.

“வேதம் கற்கும் மாணவர்களைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உதவ வேண்டும். வேதம்தான் நம் தேசத்தின் ஆணிவேர். வேதம் கற்றவர்களின் குணமே, இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அனைவரும் மனச்சாந்தியுடன் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பது மட்டும்தான். பசிக்கு உணவும், படுக்க ஒரு இடமுமே அவனது தேவைகள். அவர்களுக்கு என்றுமே மனத்தில் வறுமை தோன்றாது” என்ற அவரது உரை இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சென்று வந்தார்கள்.

ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள்

சுவாமி நாராயணானந்த பாரதீ

ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளைமடங்களில் ஒன்றான “நிலமாவு” மடத்தின் பீடாதிபதியாக இருந்தார்கள். அவரது பஜனைப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே அவன் அவருக்கு அடிமையானான். மதுரமான குரல்வளம் அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது . இன்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது பாடல்களைக் கேட்டு இன்புருவதுண்டு.

1986ம் வருடம் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆயிரத்தி இருநூறாம் ஆண்டு. அது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தைந்தாவது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் “ஸ்ரீ ஆதிசங்கரர் ரதத்தை” பாரத தேசம் முழுவதும் சுற்றிவர ஆசிதந்தார்கள் . காலடி துவங்கி கேதார்நாத் வரை செல்லும் அந்த “ஸ்ரீ சங்கரர் ரதத்திற்கு”ச் சேவை செய்வதற்காகத் தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் வழக்கறிஞர் தியாகராஜன், அவன் உட்படப் பலர் இருந்தார்கள். அவன் 25.12.1986 முதல் 01.01.1987 வரை அந்த ரதத்துடன் தஞ்சாவூர், திருவையாறு, திருச்சி, சிதம்பரம், சுவாமிமலை, கும்பகோணம், பாண்டிச்சேரி, காஞ்சீபுரம், சென்னை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான். தஞ்சாவூரில் இருந்து சென்னை வரை அந்த ரதத்தின் கூடவே ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளும் வந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் சுவாமிகள் ஸ்ரீ சங்கரரின் மேன்மைகளைக் கூறுவார்கள். அந்தப் பயணத்தின் பொழுது அவன் ஒலிபெருக்கியில் ஸ்ரீ சங்கரர் செய்த பணிகளையும், அவரது சிறப்பையும் உரக்கக் கூறி வந்தான். அவனது அந்தத் துடிப்பு சுவாமிகளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஓய்வு நேரத்தில் அவன் எழுதிய கவிதைகளைப் பற்றிக் கேட்டு உற்சாகப் படுத்துவார். சென்னைக்கு வந்ததும் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளைத் தங்கள் இல்லத்திற்கு “பிக்ஷைக்கு” வர வேண்டினான். அவரும் மிகுந்த அன்போடு,”வருகிறேன் விஸ்வநாதா” என்று, அவனது எளிய இல்லத்திற்கு வந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.

அவர் சென்னைக்கு வரும் சமயங்களில் அவன் அவரை சந்தித்து ஆசிபெருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை சந்தித்த பொழுது,” நீ கவிஞன் ..எங்க ஊர்க் கவிஞர் வாலியை உனக்குத் தெரியுமா?” என்றார். அவன் “தெரியும்….பழக்கம் உண்டு” என்றான். “என்னுடைய பூர்வாச்ரம அண்ணாவும், வாலியும் ஸ்ரீரங்கத்து நண்பர்கள். அவரது “சமய புரத்தாளே சமயம் தாளே” என்ற பாட்டை நாங்கள் பாடுவோம்” என்று சொல்லி ,” அவரைப் பார்த்தால் இதைச் சொல்லுங்கள்” என்றார். அவன் அன்று மாலையே கவிஞர் வாலி அவர்களை இல்லத்தில் சந்தித்து விபரங்களைச் சொன்னான். “ஓ…அப்படியா..அவரது பூர்வாச்ரமப் பெயர் பத்ரி. ரொம்ப நல்லாப் பாடுவார். அவரது சகோதரரும் நானும் நண்பர்கள்… ” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். “”விஸ்வநாதா….அவர நான் பாக்கணும்..எங்க இருக்கார்” என்ற கவிஞர் வாலியிடம்,” தி.நகர் ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்லதான் இப்ப இருக்கார்” என்றான். மறுநாள் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ அவர்களை கவிஞர் வாலி சந்தித்து விட்டு வந்தார். இரவில் தொலைபேசியில் என்னை அழைத்து, “விஸ்வநாதா…சுவாமிகளை தரிசனம் செஞ்சுட்டு வந்தேன்…மனம் விட்டு ஊர் நினைவெல்லாம் பேசினோம்” என்றார். அவனுக்கு இதுபோன்ற நல்லோர்களின் தொடர்பு அமைந்ததால் தடம்புரளாமல் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது .

அவன் ஒரு “காபி”ப் பித்தனாக இருந்தான். ஒரு நாளில் ஏழு, எட்டு காபிகள் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் காபி வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். அப்படிப் பட்ட அவனுக்கு ஒரு சோதனை வந்தது. இரவில் தஞ்சாவூர் வந்த ஸ்ரீ சங்கரர் ரதம், மறுநாள் காலையில் புறப்பட வேண்டும். அதிகாலையில் ஸ்ரீ கணபதி ஹோமம் துவங்கப் போகிறது. காலை ஐந்து மணி இருக்கும், வக்கீல் தியாகராஜன் அவனிடம் ,”ஏய்…விச்சு …சீக்கிரம் குளிச்சுட்டுவா…ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணனும்” என்றார். “காபி” குடிச்சுட்டு குளிக்கறேன் மாமா” என்றான். காபி வர நேரம் ஆகி விட்டது. தியாகராஜன் மாமாவும், இன்னொரு அன்பரும் குளித்துவிட்டு வேலைகளைச் செய்தது கொண்டிருந்தார்கள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. ” விச்சு …ஏண்டா இப்படி காப்பிக்கு அடிமையா இருக்கே…” என்று தியாகராஜன் மாமா கேட்க,” ஓய் ….இனிமே காபி குடிக்க மாட்டேன்.” என்று குளிக்கச் சென்று விட்டான். குளித்துவிட்டு வரும் பொழுது, மணக்க மணக்க காப்பியை ஒரு வாளி நிறைய ஒருவர் கொண்டு வந்தார். வாசனை இழுக்கத்தான் செய்தது. தியாகராஜ மாமா சிரித்துக் கொண்டே, “இந்தா உன்னோடு காபி..” என்றார். அவன் திடமாக மறுத்து விட்டான். அன்றிலிருந்து அவன் காபி, டீ குடிப்பதில்லை. 01.01.1987 முதல் வண்ண உடை அணிவதையும், தங்க நகைகள் அணிவதையும் விட்டுவிட்டான். வெள்ளை ஆடையைத்தான் விரும்பி அணிவான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவனது நண்பனின் பெண் குழந்தை நிர்பந்தம் செய்ததால் கொஞ்சம் காப்பி குடித்தான். அதோடு சரி. அவனது மகனும், மகளும் ,”அப்பா எங்களுக்காக இந்த “கலர்” பனியனையாவது போட்டுக்கணும்” என்று அவர்கள் வாங்கித் தந்த கலர் பனியனைப் போட்டுக்கொண்டான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .

“வைராக்கியம்” அவனுக்கு எந்த ஜென்மாவிலோ? கிருஷ்ணார்ப்பண மஸ்து.

17.11.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *