Blog

  • சொற்களின் வரலாறு

      சந்திரா  மனோகரன் 

     

     

    மெல்ல  சுரக்கும்  சொற்கள்

    ஊமையாகிப்  போயிருந்தன …

    அவள்  மென்விரல்களைப் போலவே  !

    அதன்  பின்னணியில்  ஒரு

    மௌன யுத்தம் முடிந்திருந்தது

    மொழி  பாவம்  என்ன செய்யும் …

    நொண்டி  நொண்டி சறுக்குகிறது

    வற்றாத  சொற்பெருக்கு !

    புகைந்து  நெளியும்  உக்கிர நெருப்பில்

    நழுவி  விழுந்து சாம்பலாகிப்போகும்  அவலம்

    வழிப்போக்கனைப்போல்  ஏகாந்தமாகிப்போன

    எனக்கு  ஆறுதலே  அந்த

    வசீகரிக்கும்  சொல்லலங்காரம்தான்  !

    என் சொற்களின்  பிறப்பிடம்

    எனக்கு அந்தரங்கமானது.

    எனக்குள் ஊற்றெடுக்கும்

    எல்லா சொற்பட்சிகளுக்கும்

    இப்பொழுது  சிறகுகள் !

    என்னைவிட்டு  விடுதலையாகி

    அவள்  விதியை  சீண்டிப்பார்க்கும்  ஆசான் அவை  !

    அவளை உடைத்தெறிய  அவை போதும்

    வண்ண வண்ண சொல்வலையில் விழுந்து

    காயம் பட்டு … சீர் கெட்டு …

    ஒரே  ஒரு தடவையேனும்

    அவள்  பொழிகிற  சொல்மழையில்

    தொப்பலாய் நனைய  ஆசை

    அலைப்பில்  தவிக்கும்  மனசுள்

    அவை  பீடு நடை  போடட்டும் …

    சிலசமயம்  ஆர்ப்பரிக்கும்  சொற்போரில்

    அவள்  எழில்  கூடுகிறதே  !

    அந்தப்  பரவசத்தில்  பிய்த்துக்கொண்டு வரும்

    ஒளியில் … மௌனமாய் சுருண்டுகொள்ளும்

    என்  முடிவற்ற  சொற்கள்  !

    Share
  • மேகத்தில் கரைந்த நிலா..!

    பெருவை பார்த்தசாரதி 

    moon

     

     

     

     

     

     

     

     

    மேகத்தினுள் கரைகின்ற வெண்ணிலவே உன்னை..

    ……….மென்மையென மேன்மையாகப் பாடாதவர் உளரோ.?

    மோகத்தில் திளைத்திருக்கும் இளைஞரும் உன்னை..

    ……….மனம்நாடும் மங்கையொடு ஒப்பிட்டே அழைப்பர்.!

    போகத்தில் கட்டுண்ட காளையரோ தன்கன்னியரைப்..

    ……….போற்றிக் கொஞ்சும்போது கண்ணே நிலவேயென்பர்.!

    தேகத்தின் அழகைவருணிக்கப் பெண்ணே நிலவுக்கு..

    ……….தகுதியான உவமையென..பாவலரும் பாப்புனைவர்.!

     

    காகமொன்று கரைந்தாலன்று விருந்தாளி வருவாராம்..

    ……….கன்னியொருத்தி நிலவுபோல வருவாளென் கனவில்.!

    மேகமீதமர்ந்து நானவள் மேனியழகை ரசிக்கையில்..

    ……….முகத்தைக் காட்டாமல் மறைத்தே வைத்திருப்பாள்.!

    யாகத்தீயின் வேதவொலியில் எழும் தேவதைபோல்..

    ……….யோகமிருந்தால் மட்டுமே மேகம்கிழித்து வருவாள்.!

    வேகமாய் விரைவாக விண்ணிலே கலந்துவிடுவாள்..

    ……….வெண்மேகத்தில் கரையும் விண்நிலவைப் போல்.!

     

    நிலவு ஒருபெண்ணாகி நீந்துகின்ற அழகோவெனும்..

    ……….நினைவில் நீங்காப்பாட்டெனக்கு பிடித்த பாட்டாகும்.!

    பலவண்ண மேகம்சூழநீ வருவாய் காதல்மயக்கத்தில்..

    ……….புழுதி மறைவதைப்போல் நீயும்சட்டென மறைவாய்.!

    நிலவொளியின் நிழலில்கூட நீயெங்கும் தெரிகிறாய்..

    ……….நீலமலர் இதழ்விரியும் நேரத்திலெனை அழைப்பாய் .!

    அலக்கழித்தது போதும் மீண்டுமெனையாட்டி வைக்காதே..

    ……….அழுக்குநிலா போல்வராமல் பளிச்சென்று நேரில்வா.!

     

    இரக்கமீகை என்பது தாகம்போல தானாகவரவேண்டும்..

    ……….இரண்டுமே கனவுக்கில்லை காண்பவருக்கு தெரியும்.!

    உறக்கத்தைக் கெடுக்குமுன் வேலையால்…காதலில்..

    ……….உன்மத்தம் பிடித்தவர்கள் உலகில் ஏராளமுண்டு.!

    மறக்கும் செயலை மறந்து….வாழுமிளங்காதலை..

    ……….மறப்பதற்கு மனிதனால் முடிவதில்லையாம்!-ஆசை

    துறக்கும் முனிவர்களின் முன்காதல் வந்தால்..கண்..

    ……….திறக்கும் ஞானியரும் காதல்செயும் கதையுமுண்டு.!

     

    ==========================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::04-11-17

     

    நன்றி:: கூகிள் இமேஜ்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 133-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    goal and boy

    ”நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்” என்றார் அறிவிற்சிறந்த அவ்வை மூதாட்டி. அவர் வாக்கிற்கு வாழும் சான்றாய்த் திகழும் சுட்டிப் பையனையும், அவன் கையில் ஆட்டுக்குக் கொடுப்பதற்காக நீண்டிருக்கும் தழைகளையும் பார்க்கையில் மனம் பரவசத்தின் வசப்படுகின்றது. திரு. ஆய்மன் பின் முபாரக் எடுத்துத் தந்திருக்கும் இந்த அற்புதமான புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் பாராட்டும் நன்றியும்! 

    ஆட்டையும் அதனருகில் புன்னகை பொங்கநின்றிருக்கும் பூங்கண் மழலையையும் பாட்டிலேற்றக் காத்திருக்கின்றனர் ஆற்றல்மிகு கவிஞர் பெருமக்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

    *****

    ”சிறுவன் தரும் தழையை உண்ணவிரும்பாது திரும்பிநிற்கும் இதே ஆடு, தன்னை வெட்டவருபவனை நம்பிக்கையோடு நாடிச்செல்லும்” என்று ஆட்டின் உளவியலை நாடிபிடித்துப் பாட்டில் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கள்ளமில்லாச் சிரிப்புடன் ஆட்டுக் கிடாவிற்கு தீனி காண்பிக்கின்றாய்
    அதுவோ உன்னைக் கண்டும் காணாமல் உன்னருகில் நிற்கின்றதே
    உன் கையில் உள்ள இலைத்தழையை சாப்பிடத் தயங்குதே
    தன்னை வெட்டுபவனை மட்டும் முழுமையாய் நம்புதே!
    ஆட்டு மந்தை போல் செல்லாதே சின்னங்சிறு சிறுவனே
    உனக்கெனப் பாதையை நீயே வகுத்து முன்னேறு சிறுவனே
    ஆடு உன் அருகில் வாராமல் எங்கோ நோக்குதே
    நீ அருகில் வந்து கொடுப்பாய் என்று எதிர்பார்க்குதே!
    உயிர்வதை கூடாது என்று சொல்கிறது ஒரு கூட்டம்
    கொன்ற பாவம் தின்னப் போகும் என அலையுது மற்றொரு கூட்டம்
    என்னதான் உரைத்தாலும், மாறாத சில மனிதர்களின் எண்ணம்
    பழி, பாவங்களுக்கு என்றுமே அஞ்சாத மனித ஜென்மம்!
    சிறுவனே, அழகிய சிரிப்புடன் நீ அதன் உணவைக் காட்டி நிற்கின்றாய்
    நாளை, இறப்பது தெரிந்தும், அந்த ஆடு பார்க்கவில்லை என்கிறாய்
    ”துன்பம் வரும்போது சிரிக்கவும்” எனச் சொன்னவனை நினைக்கின்றாயா?
    மனதுள் அழுதுகொண்டே சிரிக்கும் ஆட்டினைப் பார்த்து நீ சிரிக்கின்றாயா! 

    *****

    ”காட்டில் மேயும் ஆடும், கள்ளமில்லாப் பிள்ளை ஆசையோடு தரும் உணவுதனை விருப்பத்தோடு நாடும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை மனது…

    கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
    காட்டில் மேயும் ஆட்டுக்கும்
    வெள்ளை மனது என்பதாலே
    வேறே யெதுவும் தெரிவதில்லை,
    கொள்ளை யடிக்கும் மனிதனவன்
    கொடுக்க மறந்த உணவுதனைப்
    பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
    பெரிதும் மகிழ்வர் இருவருமே…! 

    *****

    ”அன்பின் மொழியாம் புன்னகையோடு உயிரின நேயம் காட்டும் உயர்ந்த பிள்ளைக்குப் போதித்துவிடாதீர்கள் இரைதந்து இரையாக்கும் உங்கள் மானுட இயல்பை” என்று மன்றாடுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    அறியாப் பிள்ளை மனம்

    உயர்திணையா அஃறிணையா அறியாப் பிள்ளை மனம்
    உணவிடும் அன்னையாக
    கண்ணில் வழியும் கருணை
    கடவுளின் காட்சியாக
    மழலையின் கரங்கள் நீளுவது
    மழலையிடம் அல்ல
    பேதமறந்த உயிரின நேயம்
    பிள்ளைமனத்திடம் மட்டுமே
    தேசம் எதுவென்றாலும்
    பாசம் என்பது உலகப்பொதுமறையாக
    அன்பிற்குத் தெரியாது உயர்வு தாழ்வு
    அன்பிற்குப் புரிதல் மொழி புன்னகை மட்டுமே
    குழந்தை உலகுக்கு
    கற்றுக்கொடுக்க காத்திருக்கும் உள்ளங்களே!
    இரை தந்து இரையாக்கும் மானுட இயல்பை
    தயவு செய்து கற்றுத் தராதீர்
    அறியா பிள்ளை மனம்
    அவர்இயல்பில் முளைக்கட்டுமே. 

    *****

    ”குணமிருப்பவரை மதிக்கும் இக்குவலயத்தில் தணலில் வெந்தால் மட்டுமே மதிப்புப் பெறுவாய் நீ! முக்திக்கு வழிகிடைக்கும் என்று மூடர்கள் மொழிந்ததால் கத்திக்குப் பலியாகும் கதியுனக்கு வாய்த்ததே!” என்று ஆட்டின் நிலைக்கு வருந்தி இரங்கற்பா படைத்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    அம்பியும், ஆட்டுக்குட்டியும்!

    அழகான ஆட்டுக்குட்டி அமைதியுடன் இருக்கும்..
    ……….அதனருகினிலே நீபயமின்றி விளையாடலாம் அம்பி.!
    விழலுக்குப் பாடுபட்டு விளைநிலமாக்கி உழைக்கும்..
    ……….உழவனுக்கு…அதன்சாணம்கூட நல்லுரமாகும் அம்பி.!
    பழம்கனி கொடுக்கும் மரம்செடியதன் இலைதின்னும்..
    ……….பாருக்குப் பயனுண்டாமதைப் பற்றுடன்வளர் அம்பி.!
    எழும் குளிருக்கிதமான கம்பளியென உடலங்கம்..
    ……….எல்லாமே பயனுறும் விலங்குயிராகும் அதுதம்பி.!

    வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களோடு நல்லுறவாடி..
    ……….விரும்பும் விலங்கினமாக வீட்டினருகே வளருமாம்.!
    கூட்டணியாய் சேர்ந்துதன் குடும்பம் பெருக்குமொரு..
    ……….கால்நடையாவாய் வாஞ்சையோடு வளர்ப்பதற்கே.!
    நாட்டம் கொண்டு நாளுமாசையுடன் வளருமுன்னை..
    ……….வெட்டும் அரிவாளுக்கே உன்கொம்புதான் பிடியாகும்.!
    ஆட்டுக்கு உணவாவதெலாம் சைவம்தான் எனினும்..
    ……….அம்மனிதனுக்கே ஆடு உணவாகியது அசைவமாகும்.!
    உணவுக்காக ஓடுமுயிர்களில் மனிதனும் உண்டாம்..

    ……….உணவுக்காக மட்டுமே உனையன்போடு வளர்ப்பார்.!
    பணம் சம்பாதிக்க இவ்வுலகில் பலவழியுண்டாமதிலே..
    ……….பாங்காகயுனை விற்றதில் பெரும்லாபம் கண்டிடுவார்.!
    மணமுடித்த கையுடனே மாந்தருக்கு விருந்துண்டாம்..
    ……….மணக்கு மசாலாக்கறியாக இலையில்நீ வீற்றிருப்பாய்.!
    குணமிருப்பவரைத்தான் இவ்வுலகம் மதிக்கும் நீயோ..
    ……….தணலில் வெந்தால்தானுன் விலைமதிப்பு உயருமன்றோ.!
    சக்தியின்மகனே உன்னிடத்தில் சாதுரியம் கண்டதாலே..
    ……….சக தோழனாக்கி தனக்கேயுன்னை வாகனமாக்கினான்.!
    சக்திவேண்டும் தம்முடலில் எனுமெண்ணம் கொண்டே..
    ……….சாமானியர் உனையுண்டு பலசாலியாகவே நினைப்பார்.!
    முக்திக்கு வழிகிடைக்குமென்று மூடர்கள் சொன்னதால்..
    ……….கத்திக்கு இரையாகி மடிவதேயுந்தன் தலையெழுத்தோ.!
    பக்திக்கு பலியாவதையும்….பசிக்கு உணவாவதையும்..
    ……….பெருமான் முருகனே வந்தாலும் தடுக்கவும் முடியுமோ.! 

    ***** 

    சுகப் பிரசவத்தைக்கூட கத்திவைத்துச் சோகப்பிரசவமாக மாற்றும் மருத்துவ வணிகத்தையும், ஏட்டுக்கல்விக் கூடங்களெல்லாம் ரூபாய் நோட்டுக்கு விலைபோய்விட்ட கேடுகெட்ட நிலையையும், ஊழல் பெருச்சாளிகளெல்லாம் உத்தமராய் வலம் வரும் அவலத்தையும், இன்னபிற சமூகச் சீர்கேடுகளையும் ஆத்திரத்தோடு அடுக்கிச்சொல்லும் ஆட்டைக் காண்கிறோம் திருமிகு. சொல்லின் செல்வியின் கவிதையில்.

    புன்னகையைப் பத்திரப்படுத்து கண்ணா..!

    கொம்புமில்லை வாலுமில்லை
    பயந்து ஒதுங்கத் தேவை இல்லை
    குட்டி குட்டி ஆட்டுக்குட்டிகளை
    பெற்றெடுத்த பொட்டச்சி நானடா!
    என்னை மீறிய தாய்ப் பாசத்தில்
    உன்னை அள்ளி அணைக்கத் தோணுதடா…
    மனிதப் பிறவி எடுத்துப் பாவம் செய்தாயே!
    உன் நிலை கண்டு வருந்தச் செய்தாயே….

    நான் கண்ட உன் பிறவியின்
    இழிநிலையை
    இன்றைய நிலையில்
    சொல்கிறேன் கேளடா கண்ணா..!

    பிடித்த வலியை பொறுத்துக்கொண்டு
    உந்தி பெற்றெடுக்கும் சுகப்பிரசவத்தினை
    வயித்தைக் கிழித்து உடலைத் தேய்த்து
    காசு பண்ணத் திட்டமிடும் கூட்டம் இது
    பணத்திற்காக நோயை வளர்க்கும்
    படித்த மேதைகள்
    வரிசையில் நின்று அழையுதடா…..!

    ஏட்டுக்கல்வியும் பாட்டுக்கல்வியும் போய்
    ஏசி அறைதன்னில் ஒளிப்பாடம் ஒலிக்குதிங்கே
    பள்ளிக்கூடங்களெல்லாம் பணத்திற்கு விலைபோக
    அடித்தட்டு மக்களுக்கு
    அடிவயிறு கலங்குதடா…
    பட்டப் படிப்பு படிக்க வைப்பதற்குள்
    பாதி உசுரு போகுதடா!

    வேலைக்குப் போகுமிடத்தில்
    கட்டுப்பாடும் கலாசாரமும்
    சீர்கெட்டுப்போய்
    புதிய இலக்கணம்
    புகுத்திக்கொண்டு…
    கார்ப்ரேட் நிறுவனங்கள்
    நம்மீது மோகங்கொண்டு
    பணத்தாசை காட்டியதால்
    மகுடிக்கு ஆடும்
    பாம்புகளாய்
    மயக்கநிலையில் அலைகின்றனர்
    இன்றைய இளைஞர் கூட்டம்தானே டா..!

    பொறுப்பற்ற மனிதர்களெல்லாம்
    தலைவர்களென்று உரைத்துக்கொண்டு
    பொதுக்கூட்டம் நடத்தி
    பைத்தியாகாரத்தனம் செய்கிறதடா..!

    ஊழல் செய்யும் அதிகாரிகள்
    உத்தமர் வேஷம் போட்டுக்கொண்டு
    ஊரை ஏமாற்றுவதால்
    உண்மையான அதிகாரிகளின்
    நேர்மை கேள்விக்குறி ஆகுதடா..!

    எதிர்த்து நின்று போராட
    துணிவின்றி
    கருத்தை மட்டும் சொல்லிக்கொண்டு
    ஒதுங்கி நின்று
    வேடிக்கை பார்க்கும்
    இழிநிலை மாந்தர்களடா..!

    இந்த ஒழுக்கமற்ற சமுதாயம்
    ஒன்றுக்கும் உதவாமல் போகுதடா..!

    ஜாதி வெறிப்பிடித்து
    தரங்கெட்ட கூட்டங்கள்
    கெளரவக் கொலைகள்
    செய்வதை
    பெருமை என அலையுதுடா.!

    பொருத்தம் பார்த்து
    திருமணம் செய்தாலும்
    திருத்தங் கொண்டு
    வாழ தெரியாமல்
    விவாகரத்து கோரி
    நீதிமன்ற வாசலில்
    நீளுகிறதடா பெருங்கூட்டம்.

    இப்படியாக இப்படியாக
    எண்ணிக்கை இல்லாமல்
    சொல்லிக்கொண்டே போகலாம்.
    மனிதர்களை குறித்து
    சொல்ல சொல்ல
    தீராது என் கோபமடா..!

    ஐந்தறிவு பதர்கள் நாங்கள்
    கூட்டமாய் இருக்கின்றோம்.
    ஓட்டமாய் ஓடுகிறோம்
    ஒற்றுமையாய் வாழ்கிறோம்.
    கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம்.
    வளர்த்த மனிதனுக்கு
    விசுவாசமாய்
    அன்பு அடிமையாய் இருந்தும்
    கடைசியில் கசாப்புக் கடைகளில்
    மனிதர் உண்ணும் உணவுக்காக
    விற்கப்பட்டு இறந்தும் போகிறோம்.

    களிற்றைப் போல
    இருந்தாலும்
    இறந்தாலும்
    ஆயிரம் பொன் சேவகர்களடா நாங்கள்..!

    உன் ஒட்டு மொத்த சமூகமும்
    பணத்திற்கு அடிமைகளாய்
    பண்பின்றி திரிகிறதடா
    பாசத்தை கூறுப்போட்டு
    பட்டியிலிட்டு பிரிக்கிறதடா..!

    கண்ணா.. என் அழகு மன்னா..!
    உன் அழகுச் சிரிப்பை
    உன் மழலைப் பூரிப்பை
    படம் போட்டுப்
    பத்திரமாய் வைத்துக்கொள்ளடா..!

    பெரியவனாய் நீ வளரும் போது
    இக்கேடு கெட்ட
    மனிதக் கூட்டத்தில்
    கள்ளம் கபடமற்ற
    உன் சிரிப்பு
    உன்னிடத்தில் நிலைக்காதடா…!

    *****

    ஆட்டினை வைத்து அரும்பொருள் பலவற்றைப் பாட்டில் உரைத்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது. 

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது… 

    மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நான்
    இன்றைய பொழுது எனக்கிப்
    பிஞ்சுக் குழந்தையுடன்,
    இனிமையாய்க் கழிகிறது
    குழந்தைக்குத் தெரியாது என்னைக்
    கொல்லப் போகிறார்களென்று!
    கள்ளமில்லா அவன்
    பிஞ்சு மனம் அதை அறிந்தால்….!?
    நெஞ்சுடைந்து போவான்.
    கையில் கிடைத்ததை மகிழ்வோடு
    கொண்டு வந்து நீட்டுகிறான்.
    வாங்கிக் கொள்வதுதான்
    அவனை மகிழ்விக்கும்.

    நாளை நடக்கப்போவதையெண்ணி
    இன்றைய வாழ்வின் மகிழ்ச்சிகளைத்
    தூக்கியெறிய முடியுமா?
    குழந்தையோடு குதூகலமாய்க்
    கழிகின்றன என் கணப் பொழுதுகள்.
    வாழும்போது மகிழ்வாக
    வாழ்ந்து விடவேண்டும்!
    அப்போதுதான், போகும்போது,
    மகிழ்வாக வாழ்ந்துவிட்ட
    திருப்தியாவது இருக்கும்!

    கொலைக்களத்திற்குக் கூட்டிப் போகும்போது – என்
    குழந்தை நண்பனுக்குத் தெரியக் கூடாது
    ஏனழைத்துச் செல்கிறார்களென்று!
    அவன் முகத்தில் மலரும் புன்சிரிப்பு
    என்றும் மாறாதிருக்கட்டும்!

    ”நாளை நடப்பதையெண்ணி இன்றைய மகிழ்ச்சியைத் தொலைப்பது அறிவுடைமையன்று; ஆதலால் என் மழலைத் தோழனோடு இன்றைய பொழுதை இனிமையாய்க் கழிப்பேன்” என்று அறிவின் முதிர்ச்சியோடு ஓர் ஆடு மொழிவது,

    ”…இன்னாதம்ம இவ்வுலகம்
    இனிய காண்கஇதன் இயல்புணர்ந்தோரே” (உலகம் துன்பம் நிறைந்ததுதான்; அத்துன்பத்துக்கிடையே இன்பத்தைக் காண்பதுதான் உலகின் இயல்புணர்ந்தோர் செயல்) என்ற புறநானூற்றுப் புலவர் பக்குடுக்கை நன்கணியாரின் பொன்மொழிகளை எனக்கு நினைவூட்டுகின்றது. அரிய செய்தியை எளிய பாட்டில் பதிவுசெய்திருக்கும் திரு எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (134)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22883441_1465870270133834_601823443_n

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • பிளாஸ்டிக்கும் ரவாண்டாவும்!

    -நாகேஸ்வரி அண்ணாமலை 

    பிளாஸ்டிக்கின் தீமைகளைப் பற்றி அறியாதார் யாரும் இல்லை.  ஆனால் அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றித்தான் யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அமெரிக்காவில் உள்ள பல பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்று.  இங்கு என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் பூமி மாசுபடுவது பற்றிய் ஆராய்ச்சியும் அடங்கும்.  ஆனால் வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் என்று வரும்போது பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகளைப் பற்றி யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பது இல்லை. பல பார்ட்டிகளில் விருந்திற்குப் பிறகு அத்தனை பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், முள் கரண்டிகள் குப்பைத் தொட்டியை நிறைத்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் குப்பைக்குப் போகின்றனவே, அவை எங்கு போய்ச் சேரும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  அமெரிக்காவில் மனித உழைப்பிற்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும்.  அதனால் மறுபடியும் உபயோகிக்கக் கூடிய பீங்கான் போன்ற மூலப்பொருளில் செய்த தட்டுகள், கப்புகள் பற்றி யாரும் நினைப்பதில்லை. இவற்றைக் கழுவச் செலவாகும், பாத்திரம் கழுவும் இயந்திரம் இருந்தாலும்.  சிகாகோவில் பலசரக்குச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நம் சொந்தத் துணிப்பைகளைக் கொண்டுசென்றால் ஏழு சென்ட் ஊக்கத் தொகையாகக் கொடுப்பார்கள்.  கடைப் பைகளிலேயே சாமான்களைப் பெற்றுக்கொண்டால் ஏழு சென்ட் நாம் அபராதமாகக் கொடுக்க வேண்டும்.  ஆனால் இப்படிப்பட்ட சிறு காரியங்களைத் தவிர அமெரிக்கா வேறு எதுவும் செய்வது மாதிரித் தெரியவில்லை.  இது பெருங்கடலில் ஒரு துளி தண்ணீரைச் சேர்த்தது மாதிரிதான்.  மறுசுழற்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள் சிலர்.   மறுசுழற்சி செய்யும் முறையிலிருந்தும் நச்சுப் புகை வெளியேறிக் காற்றில் கலக்கிறது.  பிளாஸ்டிக்கையே உபயோகிக்காமல் இருப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சுற்றுச்சூழல் பற்றிக் கவலையேபடாமல்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஒபாமா செய்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வருகிறார்.  இவருடைய காலத்தில் இன்னும் சுற்றுச்சூழல் கெட்டு மக்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும்.  அதைப் பற்றியெல்லாம் ட்ரம்ப் கவலைப்படப் போவதில்லை.  ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்றுவதுதான் ட் ரம்ப்பின் ஒரே இலக்குபோல் தெரிகிறது.  இவர் எப்படி பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பது பற்றி யோசிக்கப் போகிறார்?

    இப்போது உலகில் பிளாஸ்டிக் சாமான்களின் உபயோகத்தைப் பெருமளவில் நிராகரித்திருக்கும் நாற்பது நாடுகளில்  சீனா, பிரான்சு, இத்தாலி ஆகிய பெரிய நாடுகளோடு ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான ரவாண்டாவும் இருக்கிறது.  பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றிக் கொஞ்சம்கூட சிந்திக்காமல் இருக்கும்போது  சிறிய நாடான ரவாண்டா பிளாஸ்டிக்கை முழுமையாக நிராகரித்திருப்பது சந்தோஷமான விஷயம். 

    ரவாண்டாவில் பிளாஸ்டிக்கை வெளியிலிருந்து இறக்குமதி செய்வதோ, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம்.  அப்படிப்பட்ட குற்றம் புரிபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?  சிறைவாசம், அபராதம் மற்றும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.  பிளாஸ்டிக்கினால் செய்த பைகள் தண்ணீர்க் குழாய்களை அடைத்துக்கொள்வது, கடலில் சேர்க்கப்படுவதால் கடல் நீர் மாசுபட்டு அங்குள்ள ஜீவராசிகளுக்குத் தீங்கு விளைவிப்பது, ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தின்று ஆரோக்கியம் கெட்டு உயிரிழப்பது, பிளாஸ்டிக் சாமான்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காமல் இருப்பது, பிளாஸ்டிக் பைகள் தெருவெல்லாம் சிதறுண்டு கிடந்து ஊரின் அழகையே கெடுப்பது ஆகிய பிளாஸ்டிக்கின் அபாயத்தை ரவாண்டா நன்றாக உணர்ந்திருக்கிறது.  அதனால் மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆகியவை தவிர மற்ற யாரும் பிளாஸ்டிக் சாமான்கள் உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. 

    பக்கத்து நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக கடத்திக்கொண்டு ரவாண்டாவுக்கு வருபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைவாசம் உண்டு.  பக்கத்து நாடுகளிலிருந்து பெண்கள் தங்கள் உள்ளாடைகளில், புஜங்களில் பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக மறைத்துக் கடத்திக்கொண்டு வருவார்களாம்.  (எத்தனை சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்களும் எல்லாச் சமூகங்களிலும் இருப்பார்கள் போலும்.)  இவர்களைச் சோதனையிடுவது கொஞ்சம் கஷ்டம் என்கிறார் இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலர்.  குறிப்பாக ரவாண்டாவிற்குப் பக்கத்து நாடான காங்கோவிற்கும் ரவாண்டாவிற்கும் இடையில் எப்போதும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டேயிருக்கும்.  இரு பக்கத்திலுமிருந்தும் மனிதர்கள், கால்நடைகள், சாமான்கள் போய்க்கொண்டிருக்கும்.  இந்தக் களேபரங்களில் பெண்கள் எளிதாக பிளாஸ்டிக் பைகளைக் கடத்திக்கொண்டு வருவார்கள் போலும்.  மேலும் தலையில் கூடைகளில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு விற்பனை செய்வோர் அந்தக் காய்கறிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துவைத்துக்கொண்டு போவார்களாம்.  ஒரு முறை இப்படிச் சென்ற ஒரு பெண் பிடிபட்டு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தபோது போதை மருந்து கடத்தலில் பிடிபட்டவர்போல் முகத்தை மறைத்துவைத்துக்கொண்டாராம்.  சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் அதன் அடிப்பாகத்தில் நிறைய பிளாஸ்டிக் பைகளை அடுக்கிவைத்துக்கொண்டு வந்தாராம்.

    அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை உற்பத்திசெய்யும் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு வருடம் வரை ஜெயில் தண்டனை உண்டு.  பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக உபயோகிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு கடைகளையும் ஒரு வருடத்திற்கு இழுத்து மூடும்படி அரசு அதிகாரிகள் கூறிவிடுவார்களாம்.  பொது இடத்தில் மன்னிப்பும் கேட்க வேண்டுமாம்.

    ஓட்டல்களில் ரொட்டி, உறைந்த மாமிசம், மீன் ஆகிய சாமான்களுக்கு மட்டும் செல்லபேன் (cellophane) என்னும் ஓரிரு ஆண்டுகளில் மக்கக்கூடிய பேப்பர்களை அவற்றைச் சுற்றுவதற்கு உபயோகிக்கலாமாம்.  அவையும் ஓட்டலை விட்டு வெளியே போகாமல் ஓட்டல் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.  உருளைக் கிழங்கு வறுவல் போன்ற சாமான்களைத் தயாரிப்பவர்கள் செல்லபேனை உபயோகித்தாலும் அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவற்றை அந்தக் கம்பெனிகள் எப்படித் திரும்ப வாங்கும், எப்படி மறுசுழற்சி செய்யும் என்று முதலிலேயே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாம். 

    சமீபத்தில் செல்லபேன் பேப்பரில் சுற்றி விற்கப்பட்ட ரொட்டியை விற்ற சூப்பர் மார்க்கெட்டுகளை (செல்லபேன் ஓட்டல்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது) திடீரென்று வந்து சோதனையிட்ட இன்ஸ்பெக்டர்கள் கடைகளை மூடியதோடு அபராதமும் விதித்தார்கள்.  பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ரொட்டிகள் விற்ற ஒரு கடையில் இருந்த அத்தனை ரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் அனாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்தார்களாம்.  இதோடு அந்தக் கடை மூடப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  ரொட்டி போன்ற சாமான்களை  உள்ளே இருப்பது தெரியாத பேப்பரில் சுற்றி விற்றால் ரொட்டியைக் கண்ணால் பார்த்து வாங்குபவர்கள் வாங்குவதில்லையாம்.  ஆதனால் விற்பனை குறைகிறதாம்.  மேலும் இவற்றை பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைக்காவிட்டால் வேகமாகக் கெடக் கூடியவை.  அதனால் ரொட்டி விற்கும் ஒரு வியாபாரி ‘எங்கள் விற்பனையைக் குறைக்காமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தால் நலமாக இருக்குமே’ என்று புலம்புகிறார்.

    வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவரும் சாமான்கள் எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் பிரிக்கப்பட்டு அவை உடையக் கூடியவை என்றால் மட்டுமே அப்படியே அவற்றைப் பெற்றுக்கொள்வோருக்கு அனுப்பப்படுமாம்.  இல்லையென்றால் அங்கேயே பார்சல் பிரிக்கப்பட்டு அதிலுள்ள பிளாஸ்டிக் பைகள் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பப்படுமாம்.

    ரவாண்டாவின் பக்கத்து நாடான காங்கோவில் இந்தியாவில்போல் தெருக்களில் பிளாஸ்டிக் பைகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் போலும்.  அங்கு தண்ணீர் குழாய்களை, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு விலங்கினங்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு சுகாதாரக்கேட்டை விளைவித்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன.  ரவாண்டாவாசிகள் தங்கள் நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் காங்கோ மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் பெருமையாகக் கூறிக்கொள்வார்களாம்.

    ரவாண்டாவில் வரைமுறை இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.  மாதம் ஒரு முறை எல்லோரும் தங்கள் தெருக்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கட்டளை இட்டிருப்பதோடு அவரும் சேர்ந்து சுத்தப்படுத்துவாராம்.  ரவாண்டா இப்படி மிகவும் சுத்தமாக இருப்பதற்கு இவரைப் போன்றவர்களின் ஆட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள்.  இது ஒரு எல்லை என்றால் அமெரிக்கா இன்னொரு எல்லை.  அங்கு பிளாஸ்டிக் உபயோகம்  பற்றி எந்தக் கட்டுப்பாடும் இதுவரை இல்லை.  குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.   இந்தக் குப்பையெல்லாம் கடலுக்கோ புதைகுழிகளுக்குள்ளோ போய்ச் சேருகிறது.  இப்போது உலகில் உள்ள கடல்களில் மீன்களின் எடையைவிட குப்பையின் எடை அதிகமாக இருக்கிறதாம்.  இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கடல் ஜீவராசிகள் எல்லாம் மாண்டுபோகும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

    இந்தியாவின் பிரதமர் ‘தூய்மை இந்தியா’ என்ற ஒரு திட்டத்தைத் துவக்கினாரே.   அது என்ன செய்கிறது?  இந்தியாவில் ஒரு இடம்கூட பிளாஸ்டிக் பைகள் இல்லாமலோ அல்லது மற்றக் குப்பைகள் இல்லாமலோ இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியாவிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கும் எங்கள் ஊரான மைசூரில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்.  நம் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்கே நேரம் போதவில்லை.  இதில் தூய்மை இந்தியாவைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

    ஒரு சிறிய நாடான ரவாண்டா செய்திருக்கும் சாதனையை இந்தியா செய்யக் கூடாதா?  ஸ்மார்ட் நகரங்கள் கட்டுவதற்கு முன் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தலாமே.  அதுதான் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகச் சுற்றுச்சூழலுக்கு இந்தியா செய்யும் நன்மை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (80)

    நிர்மலா ராகவன்

    சிறார்களும் கேள்விகளும்

    நலம்-1-1

    எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

    தர்மசங்கடமான கேள்விகள்

    `நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே போனேன்? என்னை ஏன் முழுங்கினே?’
    `முழுங்கலே..,’ என்று விழிப்பாள் தாய். `அசட்டுப்பிசட்டுன்னுன்னு ஏதாவது கேக்காதே. போய் விளையாடு!’ என்று அதட்ட, சிறுமியின் கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும்.
    `நீ என்னை அசடாக்கப் பாக்கறே!,’ என்று குற்றம் சாட்டிவிட்டு, `நீ சொல்லாட்டா, நான் எப்படி அம்மாவா ஆக முடியும்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்பாள்!

    தடை உத்தரவு

    பல பெற்றோர் இந்தப் போக்கிற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிடுவார்கள்: `எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருந்தால், பொழுது விடிஞ்சுடும்!’
    இப்படிச் செய்வதால், தம்மையும் அறியாமல் குழந்தைகளின் ஆர்வத்திற்கு, அவர்கள் அறிவுத்திறன் வளர்வதற்கு, தடைபோட்டு விடுகிறார்கள்.
    ஒரு குழந்தை கேள்வி கேட்டால், அறிவுபூர்வமாக பதிலை ஏற்க அவன் தயார் என்பதுதான் உண்மை. வயதுக்கேற்றபடி, எளிமையாகக் கூறலாம்.
    `செய்யாதே! என்று தடைவிதிக்கப்பட்டவைகளை, `செய்’ என்று எடுத்துக்கொள்வார்கள் சிறு குழந்தைகள்.
    சகுனத்தடை என்பதால், `அப்பா வெளியே போறபோது, `எங்கே போறே?’ன்னு கேக்காதே!` என்று அம்மா குழந்தையிடம் நினைவுபடுத்துகிறாள். அடுத்தமுறை அப்பா எங்காவது புறப்பட்டால், ஞாபகமாக, `அப்பா! எங்கே போறே?` என்று கேட்கும்! (நான் கேட்டிருக்கிறேன்).
    மாறாக, `இவள் சமர்த்து. யாராவது வெளியே புறப்படறபோது, எதுவும் கேக்கமாட்டா! நானும் வரேன்னு அடம் பிடிக்கமாட்டா,` என்று பாராட்டினால், குழந்தை அடங்கிவிடும்.

    பள்ளியில் கேள்விகள்

    1 ஒரு முறை, விஞ்ஞானப் பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று நான் கேட்க, “ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று ஒரு பதின்ம வயது மாணவி கேட்டாள்.
    “பாட சம்பந்தமாகக் கேட்கத்தான் சொன்னேன்!” என, வகுப்பில் ஒரே சிரிப்பு.
    மாணவர்கள் கேள்வி கேட்கும்போது சில ஆசிரியர்கள் `இவர்கள் நம்மை ஆழம்பார்க்கிறார்கள்!’ என்று ஆத்திரப்படுவார்கள். உண்மை அதில்லை. எதை எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரியாது.

    2 ஸிதி(Siti) என்ற மாணவி எப்போதோ நடத்தப்போகும் நடத்தப்போகும் பாடத்திலிருந்து பல கேள்விகள் கேட்பாள். அவளுக்கு இன்றைய பாடமே புரிந்திருக்காது. சராசரிக்கும் குறைந்த மாணவி. தன்னை, தான் மிக அழகாக இருப்பதை, ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்று கையாண்ட தந்திரம் அது. வகுப்பில் நுழைந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இப்படியே தொணதொணப்பாள்.
    என் சக ஆசிரியை, `ஓயாது கேள்வி கேட்டால், புத்திசாலி என்று நினைப்பார்கள் என்று யாரோ ஸிதிக்குச் சொல்லி இருக்கவேண்டும்!’ என்றாள் கேலியாக.
    சரியான கேள்விதான் அறிவை வளர்க்கும். நான் அலுத்துப்போய், “முதலில் இப்போது நடக்கும் பாடங்களைக் கவனி! இதையே புரிந்துகொள்ளாமல், எதை எதையோ ஏன் இப்போதே கேட்கிறாய்?” என்று ஸிதியைக் கண்டித்தேன். அவள் முகம் வாடினாலும், அதன்பிறகு கேள்விகள் நின்றன.
    கிடைக்கும் பதிலும் கேள்வியைப் பொறுத்தது.

    3 சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பிரசவ காலம் முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தேன்.
    “ஆணா, பெண்ணா?” என்ற கேள்வி பின்னாலிருந்து உரக்கக் கேட்டது.
    நான் அதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய உருவத்துடன் இருந்த ஒருத்தியை பழைய நிலைக்கு மாற்றிவிட்ட குழந்தையைப்பற்றி அறியும் ஆர்வம் எவருக்கும் ஏற்படுவதுதானே!
    புன்சிரிப்புடன், “ஆண் சாயலில் ஒரு பெண்!” என்று சொல்லிவைத்தேன்.

    4 நான் புதிய பாடம் ஒன்றை நடத்த ஆரம்பிக்கும்போது, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுவேன். உடனே, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்ற கேள்வி உரக்க எழும்.
    “தலைப்புடனேயே நிறுத்திவிடப்போகிறேனா? பாடம் நடத்தியபின் தானே புரியப்போகிறது!” என்பேன்.
    பதினேழு வயதான டின் (DIN) வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாது, பன்னிரண்டு வயதானவன்போல் இருப்பான். தனது சிறிய உருவம் அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்க வேண்டும். தன்னை எங்காவது கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று நினைத்தவனாக, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்று கேட்பதை அவன் நிறுத்தவேயில்லை — `சும்மா இருடா!’ என்று பிற மாணவர்கள் அவனைக் கண்டித்தபோதும்!

    5 அமீர் என்ற மாணவன் வகுப்பில் எழுந்து நின்று, என்னை ஒரு கேள்வி கேட்டான். நடந்த பாடத்தில்தான்.
    உடனே, சகமாணவன் ஒருவன், “ஐயே! உனக்கு இதுகூடத்தெரியாதா?” என்று கேலிக்குரல் எழுப்பினான்.
    “தெரியாது. அதான் கேட்கிறேன்!” என்றான் அமீர், சற்றும் அயராது.
    இவனைப் போன்றவர்கள் புத்திசாலிகள். கேள்வி கேட்பதற்குப் பயந்துகொண்டிருந்தால், முட்டாளாகவேதான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்தவர்கள்.
    அதிகப்பிரசங்கித்தனமா?
    பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்தான் ஒலிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகளைக் கேட்டால், `அதிகப்பிரசங்கி’ என்ற பெயர்தான் கிடைக்கும்.
    இவ்வாறு ஒடுக்கப்பட்டபின், படிப்பு முடிந்தபின் மட்டும் கேள்வித்திறனோ, அதற்கான தைரியமோ வந்துவிடுமா?
    வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். ஆனால், நாம் கேட்கும் கேள்விகள் `தொணதொணப்பு’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது. சரிதானா?

    Share
  • குறளின் கதிர்களாய்…(191)

    -செண்பக ஜெகதீசன்

    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படுங் கீழ். (திருக்குறள்-1078: கயமை) 

    புதுக் கவிதையில்… 

    வறியோர் தம்
    குறைபாட்டினைச் சொன்னதுமதை
    நிறைவேற்றிப் பயன்படுவர்,
    நற்குணம் நிறைந்த மேலோர்…
    கயமைநிறை கீழோரைக்
    கரும்புபோலப் பிழிந்தால்தான்
    பயன்படுவர் பிறர்க்கு…! 

    குறும்பாவில்… 

    சொன்னதும் செய்துதவுவர் சான்றோர்,
    கரும்புபோல் பிழிந்து ஒறுத்தால்தான்
    பயன்படுவர் கீழோர்…!      

    மரபுக் கவிதையில்… 

    வறியோர் வந்து சொன்னாலே
    வலிய வந்தே உதவியேதான்,
    அறிவொடு பண்புடை மேலோரெலாம்
    அகில வாழ்வில் பயன்படுவர்,
    அறிவே யில்லாக் கீழோர்தமை
    ஆலைக் கரும்பாய்ப் பிழிந்தால்தான்
    சிறிதே மனது யிரங்கியவர்
    சீக்கிரம் வருவர் உதவிடவே…! 

    லிமரைக்கூ… 

    சான்றோர் உதவிடுவர் சொன்னாலே,
    ஆலையில் கரும்பெனப் பிழிந்தெடுத்தால்தான்
    கீழ்மக்கள் பயன்படுவர் பின்னாலே…! 

    கிராமிய பாணியில்… 

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
    பெரியமனுசன் சின்னமனுசன்
    பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…

    பாவப்பட்டவன் சொன்னாப்போதும்
    பெரியமனுசன் ஒதவிடுவான்,
    கேட்டவுங்க
    கொறதீர ஒதவிடுவான்…

    சின்னபுத்தி உள்ளவங்கிட்ட
    சொன்னா ஒண்ணும் நடக்காது,
    அவனக்
    கரும்பப்போலப் புழிஞ்சாத்தான்
    கொஞ்சமாவது ஒதவிடுவான்…

    தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
    மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
    பெரியமனுசன் சின்னமனுசன்
    பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…!

     

     

     

    Share
  • சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்

    Posted on November 5, 2017
    A team of Saturn moon keeps Saturn’s A ring from spreading. This image from NASA’s Cassini mission clearly show the ring’s density waves created by the small moons. The waves look like the grooves in a vinyl record.
    Credit: NASA
    ++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    சனிக்கோளின் துணைக்கோளில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்பட்டை  வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் !
    முகில் அயான் வாயுக்கள் எழும் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் திறக்கும் !
    நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் !
    ஊற்று நீராகப் பீறிட
    உந்துவிசை அளிப்பது எது ?
    பனிக்கடல்  உருகித்
    தென்துருவ ஆழத்தில் மட்டும்
    திரவ மானது ஓர் புதிர் !
    ஏழு சந்திரன்கள் சனியின் வளையத்தை
    சூழ்ந்த அரணுக்குள் ஒடுக்கும் !  
    காஸ்ஸினி விண்ணுளவி முடிவில்
    வளையங்கள் ஊடே சென்று
    சனி மீது மோதி முறிந்தது !

    ++++++++++++++++++++

    வளையங்களின் ஊடே உளவியது காஸ்ஸினி விண்ணுளவி

    +++++++++++++++++++

    https://www.sciencedaily.com/releases/2017/10/171017124352.htm

    Image result for planet saturn's rings

    http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY

    http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html

    +++++++++++++++++++++++

     

    சனிக்கோளின் துணைக்கோள்களின் நிறையையும், பௌதிகப் பண்பாடுகளையும், நாசா காஸ்ஸினி விண்ணுளவி விளக்கமாக உளவிக் கணித மூலத்தில் அனுப்பியதால், விஞ்ஞானிகள் சனிக் கோளின் ஜானஸ் துணைக்கோள் மட்டும் முதல் வளைய அரண் அமைப்பைக் கட்டுப்படுத்த முடியாது என்று முடிவு செய்தோம்.

    ராட்வான் தஜேட்டைன் [Radwan Tajeddine] [தலைமை ஆய்வாளர்]

    unnamed (1)

     

    2017 செப்டம்பர் 15 இல் காஸ்ஸினி விண்ணுளவிப் பயணம் முடிந்தது

    கடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சனிக்கோளின் முதல் வளையத்தை அரணுள் ஒடுக்கி வைப்பது, துணைக்கோள் ஜானஸ் [Janus] மட்டும்தான் என்று தவறாகக் கருதி வந்தார். சனிக் கோளின் முதல் வளையம் [A – Ring] வெகுதூரத்தில் காணப்படும் மிகப்பெரிய வளையம்.  நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவியின் உளவுத் தகவல் இப்போது சனிக்கோளின் ஏழு துணைக்கோள் ஒருங்கிணைப்பே, முதல் வளையத்தின் அரண் அமைப்புக்குக் காரணம் என்று கார்நல் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்.

    Image result for Number of Rings On Saturn

    சனிக்கோள் வளையத்தின் துண்டு துணுக்குகள், வெளியேற்றப் படாமல் ஓர் சுழற்சி அரணுக்குள் கிடப்பதற்குத் தனித்துவ விசை ஒன்று இருக்க வேண்டும்.  எல்லாவற்றிலும் மிகப்பெரிய எ – வளையத்தை அரணுக்குள் அடைத்த ஏழு துணைக்கோள்கள் எவை ?  பான், அட்லாஸ், புராமிதியஸ், பண்டோரா, எபிமேதியஸ், மிமாஸ், & ஜானஸ் [Pan, Atlas, Prometheus, Pandora, Epimetheus, Mimas, & Janus].   அந்த ஏழு துணைக்கோள்களும் இணைந்து, அவற்றின் கூட்டிணைப்பு விசையே, முதல் வளைய அரணைச் சிதையாது அமைத்து வைத்துள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Image result for Saturn's moons and rings

    2017 செப்டம்பர் 15 ஆம் தேதி குறிப்பணி முடித்த நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி, சனிக்கோளின் வளையங்களின் பண்பாடுகளை விளக்கமாக உளவி அனுப்பியுள்ளது.  குறிப்பாக முதல் எ -வளையம் வரிசையாய்ச் சுற்றியுள்ள  “திணிவலைகள்” [Density Waves] கொண்டுள்ளது என்று காட்டியுள்ளது.  அதாவது வளையத்தின் சுற்றுத் துணுக்களின் பாதை கிராமஃபோன் பாட்டுத் தட்டுபோல் [Gramaphone Record] உள்ளது.  அந்த  சுழற்சி வரி அமைப்பு “சந்திரச் சீரிணைப்பு” [Moon Resonance] என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்.  சனிக்கோள் வளையத் துண்டு, துணுக்குகள் சிதறி வெளியேறாமல் சேர்ந்து கொண்டிருப்ப தற்குச் சந்திர சீரிணைப்பே காரணம்  என்று தெரிகிறது.  துணைக்கோள்களின் ஈர்ப்பியல் விசையே துணுக்குகளை மெதுவாக்கி, வளையத்தின் நெம்பு மோதலை  [Rings Momentum] தளரச் செய்கிறது.

    saturn-details

    காஸ்ஸினி விண்ணுளவிப் பாதையைச் சிறிதளவு கட்டுப்பாடு செய்ததும், எங்களுக்குப் புதிய குறிக்கோள் [Radio Science Experiment] நிறைவேற வழி அமைந்தது. நாசா விண்ணுளவி  சனிக்கோள் வளையத்தின் இடைவழி புகுந்து முதன்முதலாய் வளையங்களை ஆழ்ந்து ஆய்வு செய்தது.

    ஏர்ல் மைஸ் [காஸ்ஸினி திட்ட ஆளுநர், நாசா ஜெட் உந்து ஆய்வகம்] 

    பல்லாண்டுகளாய் நாங்கள் திட்டமிட்டது.  இப்போது அது வெற்றி பெற்று வளைய நோக்குச் சுற்றுப் பாதையில் [Ring-Gazing Orbit] புதிய தகவல் இலக்கம் வருகிறது என்பதை அறியும்போது எங்கள் மனம் துள்ளுகிறது. இந்தப் புல்லரிப்புப் பயணத்தில் இதுவே ஓர் உன்னத தருணம்.

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, ஜெட் உந்து ஆய்வகம்] 

    Image result for Saturn's moons and rings

    சனிக்கோள் வளையத்தை ஊடுருவும் காஸ்ஸினி விண்ணுளவி

    2016 டிசம்பர் 6 இல் முதன்முதலாக, நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி திசை திருப்பப்பட்டு சனிக்கோளின் வளையங்களின் இடைவெளிப் புகுந்து விளக்கமாய்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது.  டிசம்பர் 4 ஆம் தேதியன்று விண்ணுளவி சனிக்கோளின் முகிலுக்கு மேல் 57,000 மைல் [91,000 கி.மீ] உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  அவ்விடத்தில்தான் சனிக்கோளின் சிறு துணைக்கோள்கள் “ஜானஸ்”, எபிமேதிஸ்” [Janus & Epimetheus] உருவாகி மிஞ்சிய  மங்கலான தூசி வளையம் ஒன்று சுற்றி வந்தது.  அது சனிக்கோள் வளையம் F இன் மையத்திலிருந்து [Saturn’s F Ring]  சுமார் 6,800 தூரத்தில் உள்ளது.  காஸ்ஸினி விண்ணுளவியின் காமிராக்கள் வளையத்தைக் கடக்கும் முன்பே படமெடுக்கத் தொடங்கின. அடுத்த வளையத்தின் ஆய்வு டிசம்பர் 11 இல் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 20 வளையங்கள் ஏப்ரல் 22, 2017 வரை நெருங்கி ஆராயப்படும்.

    Image result for Number of Rings On Saturn

    cassini-final-images-1

    இறுதியாக விண்ணுளவி சனிக்கோளின் துணைக்கோள் டைடானை [Titan] நெருங்கிச் சுற்றி [Flyby Swing] விரைவாக்கம் பெறும்.  அதன் பிறகு, 1500 மைல் [2400 கி.மீ.] அகலமுள்ள சனிக்கோளின் உட்புற வளையத்தை ஏப்ரல் 26, 2017 இல் 22 முறைகள் கடந்து தகவல் அனுப்பும்.  முடிவாக செப்டம்பர் 15, 2017 இல் விண்ணுளவி சனிக்கோள் சூழ்வெளியில் விழ விடப்பட்டு, சமிக்கை தீரும்வரைத் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

    காஸ்ஸினி விண்ணுளவி 1997 இல் ஏவப்பட்டு 2004 இல் சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து. 12 ஆண்டுகள், சனிக்கோள், அதன் துணைக்கோள்கள், வளையங்கள் பற்றித் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது.  இப்போது வளையத்தை ஆராயும் இறுதிப் பணியோடு காஸ்ஸினியின் பயணம் முடிவடையப் போகிறது.  காஸ்ஸினி விண்ணுளவியின் சிறப்பான கண்டுபிடிப்புகள் துணைக்கோள் என்சிலாடஸில் [Enceladus] உள்ள கடல் நீரூற்றுகள், டைடான் துணைக்கோளில் உள்ள திரவ மீதேன் [Liquid Methane]

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)

    15. https://www.sciencedaily.com/releases/2017/10/171017124352.htm [October 17, 2017]
    ******************

    S. Jayasbarathan   jayabarathans@tgmail.com.com [November 5, 2017] [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150913 -Soulmates -watercolour -wm

    ’’கால்மாட்டில் மேய்ந்திட கோமாதா ரெண்டுமே
    டோல்கேட்(TOOL GATE) திருமால்தன் காலெட்ட(கால் எட்ட),-மால்காட்டில்
    பால்கொட்டி மாரியாய்(மழையாய்) பந்தயமாய்ச் சுற்றுது
    ஸோல்மேட்டை ,ம்யூஸிகல் சேர்(MUSICAL CHAIR)”….கிரேசி மோகன்….!

     

    Share
  • இன்றைய பொருளாதார நிலையில் மாற்றம் வருமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்திய பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை தற்காலிகமானதுதான் என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் கூறியுள்ளது சமாதானம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சமீப காலாண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளது வருத்தத்திற்குரிய விசயமாகவே உள்ளது. இந்த தேக்க நிலைக்குக் காரணமாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுவதும் தேசிய அளவில் புதிய வரி விதிப்பினால் ஏற்பட்ட குழப்பம்தான்.

    ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கிம் விதைத்துள்ளார். பொதுவாக அனைத்துத் தரப்பினருக்கும் இது சிறந்த திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும், சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத நிலையில் இன்று பிரச்சனைக்குரியதாகவே உள்ளது. வணிக உலகில் ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி பெரும் சவாலாக உள்ளது என்பது ஒரு நேர் மறையான சிந்தனை.

    வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால் வருடம் ஒரு முறை கணக்கு செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது மாதம் ஒரு முறை கணக்கு செலுத்த வேண்டியதாக உள்ளது. இது பழக்கத்திற்கு வருவதற்கு சற்று சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சில தொழில்களுக்கு மிக அதிகப்படியான வரிவிதிப்புகள் உள்ளதை கவனம் கொண்டு சரிசெய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இந்திய ஜிடிபி ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 5.7 சதவீதமாக உள்ளது.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் குறைந்துள்ளதற்கான காரணம் ஜிஎஸ்டி சட்டத்துக்கு தயாராவதற்கு ஏற்பட்ட குழப்பம்தான் என்று கொள்வோமானால் இந்தப் பிரச்சனையை தற்காலிகமானதாகக் கொள்ளலாம்.ஆனால் இந்திய பொருளாதாரத்தில் இந்தச் சட்டம் மிகப் பெரிய அளவில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டம் ஆகிய இரண்டும்தான் மந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், பொருளாதார அறிஞர்களும் குற்றம் சுமத்தி வருவது சிந்திக்கத்தக்கது.

    இந்தியா இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமாகுமா என்ற வினா இன்று பல தரப்பிலும் எழுப்பப்பட்டுள்ள இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதன் மூலமாக இந்தியாவில் வளர்ச்சித் தரத்தை அதிகரிக்க வேண்டுமானால் , முக்கியமான தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று உலக பொருளாதார கருத்துக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

    பொருளாதாரத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கு பெற்றால் அது உண்மை ஆகலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடு என்ற நிலையை பொருளாதார வளர்ச்சியின் மூலம் இந்தியா வென்றது.

    பாலின இடைவெளியைப் பொருத்தவரை உலகிலேயே மிக மோசமான ஒன்றாக நம் இந்தியா இருப்பதும் கண்கூடு. உலகளாவிய பாலியல் இடைவெளி கருத்துக்கணிப்பின் அறிக்கையில் இந்தியா மொத்த 144 நாடுகளில் 108 ஆவது இடத்தில் உள்ளது. உண்மையில் இந்த இடைவெளி மேலும் கூடுதலாக இருப்பதையே வேறு சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    ஒரு ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் 66 சதவீதம் பெண்களுக்கு தங்கள் பணிகளுக்கான ஊதியமே செலுத்தப்படுவதில்லை, இதில் ஆண்கள் 12 சதவீதம் மட்டுமே. மேலும் இந்த அறிக்கையில், தொழிற்சங்கங்களில் பங்கேற்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள், தொழில் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பெண்களின் விகிதம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது பெரும் சவால்களையே சந்தித்துக்கொண்டிருக்கிறது.

    பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் முக்கிய சவால் என்றால் அது குழந்தைப்பேறு காலங்களில்தான். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகப்பேறு விடுப்புச் சட்டத்தில் அரசு சில மாற்றுத் திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உலக வங்கியின் சமீபத்திய வணிக வேலைவாய்ப்பு அறிக்கையும் இந்த புதிய சட்டம் ஒட்டுமொத்த வேலை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் உள்ளனர். நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருப்பதால் நிர்வாகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதும் சமீபத்திய கார்ப்பரேட் ஆளுமை பற்றிய உதய கோடக் அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

    Share
  • ”ஸ்ரீராம தர்ம சரிதம்” (16)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 16

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1
    “மிதிலைக்குப் புறப்படுதல்”

    பொழுது புலர்ந்த வேளையதில்
    புனிதக் கதிரின் மேன்மைகளை
    தொழுது முடித்த இராமபிரான்
    தூய முனியின் முகம்பார்த்து
    விழுது நாங்கள் உங்களது
    விருப்பம் அறிய விரும்புகிறோம்
    எழுத முடியா குருவருளே
    இயம்பும் அடுத்த செயலென்றார்! (1)

    அங்கே இருந்த முனிவர்கள்
    அன்பாய் இராமன் விழிநோக்கி
    சிங்கம் போன்ற சீராளா
    சேர்ந்து வருக எங்களுடன்
    பொங்கும் ஞான மிதிலைக்குப்
    போக வேண்டும் எல்லோரும்
    அங்கு நடக்கும் யாகத்தின்
    அருமை அப்படி என்றார்கள் ! (2)

    ஜனகரிடம் உள்ள “வில்”

    மிதிலை அரசன் ஜனகருக்கு
    மிகுந்த செல்வம் இருந்தாலும்
    எதிலும் அவர்க்குத் துளிகூட
    ஈர்ப்பே இன்றி வாழ்கின்றார் !
    முதியோ ரான முன்னோர்க்கு
    முன்பு கிடைத்த “வில்”லொன்றை
    புதியோ ரான நீர்காணப்
    புறப்ப டுங்கள் என்றார்கள் ! (3)

    “சோணா நதிக்கரை அடைதல்”

    விசுவா மித்ரர் புறப்பட்டார் ;
    விரும்பிப் பறவைக் கூட்டங்கள்
    பசுவும் கன்றும் விலங்கினங்கள்
    பக்தி யுடன்பின் வரக்கண்டு
    “திசையாம் வடக்கில் செல்கின்றோம்
    திரும்பி நீங்கள் செல்கவென்று”
    அசையா மனத்து முனிமன்னன்
    ஆசி தந்து அனுபினரே ! (4)

    சோணா நதியின் கரைவந்து
    சுகமாய் சந்தி செய்தார்கள்
    காணா சாந்தி கிடைத்ததுபோல்
    கவலை மறந்து செபித்தார்கள் !
    வீணாய்க் காலங் கழிக்காத
    விசுவா மித்ரர் குலக்கதையை
    வாணாள் சிறக்க உதவுமென
    மனத்தால் வணங்கிக் கேட்டார்கள் ! (5)

    “விசுவாமித்ரரின் குலக்கதை”

    நான்கு முகனின் மகன்”குசனின்”
    நல்ல தவத்தின் பயனாக
    நான்கு மகன்கள் பிறந்தார்கள்
    ஞான வான்கள் ஆனார்கள் !
    வான மழைக்கு ஈடாக
    வளர்ந்த பிள்ளை “குசநாபன்”
    மான மிகுந்த பெண்பிள்ளை
    வரமாய் நூறு பெற்றிட்டான் ! (6)

    நூறு பெண்கள் அழகினிலே
    நொடியில் வீழ்ந்த வாயுவிடம்
    வேறு பெண்ணைத் தேடுங்கள்
    விட்டு விடுங்கள் ஆசையென
    கூறிய மொழியில் சூடாகிக்
    கோபங் கொண்ட வாயுவுமே
    நேரிய பெண்கள் யாவரையும்
    நெஞ்சம் நடுங்கச் செய்துவிட்டான். (7)

    பெண்கள் பொறுமை நிலைபுரிந்து
    “பிரும்ம தத்தர்” எனும்மன்னன்
    திண்ணம் இவர்க்குத் துணையென்றே
    சேர்த்து வைத்தார் தந்தைதான் !
    பெண்கள் சென்ற பின்தனக்குப்
    பிள்ளை வேண்டிக் குசநாதன்
    எண்ணி யாகம் முடித்திட்டார் !
    இனிய மகனாய்க் “காதி”பெற்றார். (8)

    அறத்தை அகத்தில் காக்கின்ற
    அன்புத் தந்தை “காதிக்கு”
    புறத்தே இரண்டு பிள்ளைகள் !
    போற்றும் படியாய் “சத்யவதி”
    துறவை மனத்தில் வைத்திருக்கும்
    தொண்டன் அடியேன் “கௌசிகனும்”
    இறைவன் கொடுத்த கொடையாக
    என்றும் நிலைத்து வாழ்கின்றோம். (9)

    “கௌசிகீ நதியின் வரலாறு”

    மூத்த பெண்ணை “ரிசீகமுனி”
    முறையாய் மணந்த பின்னாலே
    காத்த தவத்தின் பயனாக
    களிக்கும் தேவ ருலகத்தில்
    பூத்த பொன்னாய் ஆனார்கள் !
    பூமி காக்க சத்யவதி
    ஏத்த நதியாம் “கெளசிகீயாய்”
    இமயம் வழிந்து செழிக்கின்றாள். (10)

    “குலத்தின் பெருமை கேட்டதனால்
    குணத்தைக் கூறித் தெரிவித்தேன்
    நிலத்தின் பெருமை சத்தியத்தை
    நிதமும் காக்கும் மேலோரின்
    பலத்தில் தானே உள்ளதென்று”
    பண்பு விசுவா மித்திரரும்
    நிலத்தில் நிலவின் ஒளிபரவும்
    நேரம் இரவில் துயில்கொண்டார். (11)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 31, 32, 33, 34ம் பகுதி நிறைந்தது)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4319
    ”தாயை மயக்குகிறார், தாமோ தரர்தன்மண்
    வாயைத் திறக்க வினோதங்கள்: -ஆயர்
    குலக்கொழுந்தா!அன்றி கடவுளா! என்று,
    அலமலங்கி னாள்அன்னை அன்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெருகிவரும் மன நோயாளிகள்…

    பவள சங்கரி

    மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது.

    இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் கோளாறுகள் உள்ளிட்ட பொது மனநல குறைபாடுகள் நம் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10% பேரை பாதிக்கின்றன அதாவது இந்தியாவில் 20 பேரில் 1 நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் கிராமப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது.
    தேசிய மனநல சுகாதார திட்டத்தின் படி, ஒவ்வொரு முக்கியமான சுகாதார மையத்திலும் அடிப்படை மனநல பராமரிப்பை வழங்க வேண்டும் .
    பல கிராமப்புற பகுதிகளில், மனநோய்க்கு எதிரான மூட நம்பிக்கைகள் ஒரு கடுமையான சமூகக் களங்கமாகி உள்ளது என்பதை NIMHANS ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் மன நோய் என்பது “தீய ஆத்மாவின் உடைமை” என்று கருதப்படுகிறது. இந்த தீய ஆவியை அகற்றுவதற்காக, மன நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய வைத்தியர்களையோ அல்லது மத குருமார்களையோ நம்பியிருக்கிறார்கள். மனக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பிரச்சனை மேலும் கடுமையாகிறது. மன நோயாளிகளிடம் சமூகத்தில் பாகுபாடு சிந்தைகள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்கள் மன நோயாளிகளை மற்றவர் முன்னிலையில் சொல்லவே தயங்கி, மறைக்கவும் முயல்கிறார்கள்.

    இந்தியாவில் பயிற்சி பெற்ற மன நோய் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. 1,00,000 மக்கள் தொகையில் 0.2 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. மனநல குறைபாடுகளுடன் வாழும் பல தனிநபர்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அதற்குரிய மனநல சுகாதார உள்கட்டமைப்புகளும் சரிவர இல்லாததால் பொது சுகாதார பிரச்சனைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மன நோயாளிகள் பொருளாதார சிக்கலாலும் சரியான சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெகு தொலைவில் இருக்கும் அரசு மருத்துவ மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழலில் போக்குவரத்துச் செலவைக்கூட அவர்கள் சமாளிக்க முடியாமல் போவதும் முக்கிய காரணமாகிவிடுகிறது. அரசும், தொண்டு நிறுவனங்களும் இந்தப்பிரச்சனையில் கவனம் செலுத்தி தீர்வு காண முயலவேண்டும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171103 i - Gosakha -wm

     

    ”நாஸகர் கம்ஸனுக்கு, நாயகர், வாகீஸ
    போஷகர் வெண்பா விளையாட்டில், -கோஸகர்,
    கொட்டும் மழையில் குளிர்காத்த ரக்‌ஷகர்,
    விட்டலவர் கண்ணன் வியப்பு’’….கிரேசி மோகன்….!

    Share