-நாகேஸ்வரி அண்ணாமலை 

பிளாஸ்டிக்கின் தீமைகளைப் பற்றி அறியாதார் யாரும் இல்லை.  ஆனால் அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றித்தான் யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அமெரிக்காவில் உள்ள பல பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்று.  இங்கு என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் பூமி மாசுபடுவது பற்றிய் ஆராய்ச்சியும் அடங்கும்.  ஆனால் வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் என்று வரும்போது பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகளைப் பற்றி யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பது இல்லை. பல பார்ட்டிகளில் விருந்திற்குப் பிறகு அத்தனை பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், முள் கரண்டிகள் குப்பைத் தொட்டியை நிறைத்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் குப்பைக்குப் போகின்றனவே, அவை எங்கு போய்ச் சேரும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  அமெரிக்காவில் மனித உழைப்பிற்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும்.  அதனால் மறுபடியும் உபயோகிக்கக் கூடிய பீங்கான் போன்ற மூலப்பொருளில் செய்த தட்டுகள், கப்புகள் பற்றி யாரும் நினைப்பதில்லை. இவற்றைக் கழுவச் செலவாகும், பாத்திரம் கழுவும் இயந்திரம் இருந்தாலும்.  சிகாகோவில் பலசரக்குச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நம் சொந்தத் துணிப்பைகளைக் கொண்டுசென்றால் ஏழு சென்ட் ஊக்கத் தொகையாகக் கொடுப்பார்கள்.  கடைப் பைகளிலேயே சாமான்களைப் பெற்றுக்கொண்டால் ஏழு சென்ட் நாம் அபராதமாகக் கொடுக்க வேண்டும்.  ஆனால் இப்படிப்பட்ட சிறு காரியங்களைத் தவிர அமெரிக்கா வேறு எதுவும் செய்வது மாதிரித் தெரியவில்லை.  இது பெருங்கடலில் ஒரு துளி தண்ணீரைச் சேர்த்தது மாதிரிதான்.  மறுசுழற்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள் சிலர்.   மறுசுழற்சி செய்யும் முறையிலிருந்தும் நச்சுப் புகை வெளியேறிக் காற்றில் கலக்கிறது.  பிளாஸ்டிக்கையே உபயோகிக்காமல் இருப்பதுதான் மிகச் சிறந்த வழி.

அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சுற்றுச்சூழல் பற்றிக் கவலையேபடாமல்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஒபாமா செய்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வருகிறார்.  இவருடைய காலத்தில் இன்னும் சுற்றுச்சூழல் கெட்டு மக்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும்.  அதைப் பற்றியெல்லாம் ட்ரம்ப் கவலைப்படப் போவதில்லை.  ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்றுவதுதான் ட் ரம்ப்பின் ஒரே இலக்குபோல் தெரிகிறது.  இவர் எப்படி பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பது பற்றி யோசிக்கப் போகிறார்?

இப்போது உலகில் பிளாஸ்டிக் சாமான்களின் உபயோகத்தைப் பெருமளவில் நிராகரித்திருக்கும் நாற்பது நாடுகளில்  சீனா, பிரான்சு, இத்தாலி ஆகிய பெரிய நாடுகளோடு ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான ரவாண்டாவும் இருக்கிறது.  பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றிக் கொஞ்சம்கூட சிந்திக்காமல் இருக்கும்போது  சிறிய நாடான ரவாண்டா பிளாஸ்டிக்கை முழுமையாக நிராகரித்திருப்பது சந்தோஷமான விஷயம். 

ரவாண்டாவில் பிளாஸ்டிக்கை வெளியிலிருந்து இறக்குமதி செய்வதோ, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம்.  அப்படிப்பட்ட குற்றம் புரிபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?  சிறைவாசம், அபராதம் மற்றும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.  பிளாஸ்டிக்கினால் செய்த பைகள் தண்ணீர்க் குழாய்களை அடைத்துக்கொள்வது, கடலில் சேர்க்கப்படுவதால் கடல் நீர் மாசுபட்டு அங்குள்ள ஜீவராசிகளுக்குத் தீங்கு விளைவிப்பது, ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தின்று ஆரோக்கியம் கெட்டு உயிரிழப்பது, பிளாஸ்டிக் சாமான்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காமல் இருப்பது, பிளாஸ்டிக் பைகள் தெருவெல்லாம் சிதறுண்டு கிடந்து ஊரின் அழகையே கெடுப்பது ஆகிய பிளாஸ்டிக்கின் அபாயத்தை ரவாண்டா நன்றாக உணர்ந்திருக்கிறது.  அதனால் மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆகியவை தவிர மற்ற யாரும் பிளாஸ்டிக் சாமான்கள் உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. 

பக்கத்து நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக கடத்திக்கொண்டு ரவாண்டாவுக்கு வருபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைவாசம் உண்டு.  பக்கத்து நாடுகளிலிருந்து பெண்கள் தங்கள் உள்ளாடைகளில், புஜங்களில் பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக மறைத்துக் கடத்திக்கொண்டு வருவார்களாம்.  (எத்தனை சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்களும் எல்லாச் சமூகங்களிலும் இருப்பார்கள் போலும்.)  இவர்களைச் சோதனையிடுவது கொஞ்சம் கஷ்டம் என்கிறார் இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலர்.  குறிப்பாக ரவாண்டாவிற்குப் பக்கத்து நாடான காங்கோவிற்கும் ரவாண்டாவிற்கும் இடையில் எப்போதும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டேயிருக்கும்.  இரு பக்கத்திலுமிருந்தும் மனிதர்கள், கால்நடைகள், சாமான்கள் போய்க்கொண்டிருக்கும்.  இந்தக் களேபரங்களில் பெண்கள் எளிதாக பிளாஸ்டிக் பைகளைக் கடத்திக்கொண்டு வருவார்கள் போலும்.  மேலும் தலையில் கூடைகளில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு விற்பனை செய்வோர் அந்தக் காய்கறிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துவைத்துக்கொண்டு போவார்களாம்.  ஒரு முறை இப்படிச் சென்ற ஒரு பெண் பிடிபட்டு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தபோது போதை மருந்து கடத்தலில் பிடிபட்டவர்போல் முகத்தை மறைத்துவைத்துக்கொண்டாராம்.  சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் அதன் அடிப்பாகத்தில் நிறைய பிளாஸ்டிக் பைகளை அடுக்கிவைத்துக்கொண்டு வந்தாராம்.

அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை உற்பத்திசெய்யும் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு வருடம் வரை ஜெயில் தண்டனை உண்டு.  பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக உபயோகிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு கடைகளையும் ஒரு வருடத்திற்கு இழுத்து மூடும்படி அரசு அதிகாரிகள் கூறிவிடுவார்களாம்.  பொது இடத்தில் மன்னிப்பும் கேட்க வேண்டுமாம்.

ஓட்டல்களில் ரொட்டி, உறைந்த மாமிசம், மீன் ஆகிய சாமான்களுக்கு மட்டும் செல்லபேன் (cellophane) என்னும் ஓரிரு ஆண்டுகளில் மக்கக்கூடிய பேப்பர்களை அவற்றைச் சுற்றுவதற்கு உபயோகிக்கலாமாம்.  அவையும் ஓட்டலை விட்டு வெளியே போகாமல் ஓட்டல் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.  உருளைக் கிழங்கு வறுவல் போன்ற சாமான்களைத் தயாரிப்பவர்கள் செல்லபேனை உபயோகித்தாலும் அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவற்றை அந்தக் கம்பெனிகள் எப்படித் திரும்ப வாங்கும், எப்படி மறுசுழற்சி செய்யும் என்று முதலிலேயே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாம். 

சமீபத்தில் செல்லபேன் பேப்பரில் சுற்றி விற்கப்பட்ட ரொட்டியை விற்ற சூப்பர் மார்க்கெட்டுகளை (செல்லபேன் ஓட்டல்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது) திடீரென்று வந்து சோதனையிட்ட இன்ஸ்பெக்டர்கள் கடைகளை மூடியதோடு அபராதமும் விதித்தார்கள்.  பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ரொட்டிகள் விற்ற ஒரு கடையில் இருந்த அத்தனை ரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் அனாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்தார்களாம்.  இதோடு அந்தக் கடை மூடப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  ரொட்டி போன்ற சாமான்களை  உள்ளே இருப்பது தெரியாத பேப்பரில் சுற்றி விற்றால் ரொட்டியைக் கண்ணால் பார்த்து வாங்குபவர்கள் வாங்குவதில்லையாம்.  ஆதனால் விற்பனை குறைகிறதாம்.  மேலும் இவற்றை பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைக்காவிட்டால் வேகமாகக் கெடக் கூடியவை.  அதனால் ரொட்டி விற்கும் ஒரு வியாபாரி ‘எங்கள் விற்பனையைக் குறைக்காமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தால் நலமாக இருக்குமே’ என்று புலம்புகிறார்.

வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவரும் சாமான்கள் எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் பிரிக்கப்பட்டு அவை உடையக் கூடியவை என்றால் மட்டுமே அப்படியே அவற்றைப் பெற்றுக்கொள்வோருக்கு அனுப்பப்படுமாம்.  இல்லையென்றால் அங்கேயே பார்சல் பிரிக்கப்பட்டு அதிலுள்ள பிளாஸ்டிக் பைகள் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பப்படுமாம்.

ரவாண்டாவின் பக்கத்து நாடான காங்கோவில் இந்தியாவில்போல் தெருக்களில் பிளாஸ்டிக் பைகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் போலும்.  அங்கு தண்ணீர் குழாய்களை, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு விலங்கினங்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு சுகாதாரக்கேட்டை விளைவித்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன.  ரவாண்டாவாசிகள் தங்கள் நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் காங்கோ மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் பெருமையாகக் கூறிக்கொள்வார்களாம்.

ரவாண்டாவில் வரைமுறை இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.  மாதம் ஒரு முறை எல்லோரும் தங்கள் தெருக்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கட்டளை இட்டிருப்பதோடு அவரும் சேர்ந்து சுத்தப்படுத்துவாராம்.  ரவாண்டா இப்படி மிகவும் சுத்தமாக இருப்பதற்கு இவரைப் போன்றவர்களின் ஆட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள்.  இது ஒரு எல்லை என்றால் அமெரிக்கா இன்னொரு எல்லை.  அங்கு பிளாஸ்டிக் உபயோகம்  பற்றி எந்தக் கட்டுப்பாடும் இதுவரை இல்லை.  குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.   இந்தக் குப்பையெல்லாம் கடலுக்கோ புதைகுழிகளுக்குள்ளோ போய்ச் சேருகிறது.  இப்போது உலகில் உள்ள கடல்களில் மீன்களின் எடையைவிட குப்பையின் எடை அதிகமாக இருக்கிறதாம்.  இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கடல் ஜீவராசிகள் எல்லாம் மாண்டுபோகும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

இந்தியாவின் பிரதமர் ‘தூய்மை இந்தியா’ என்ற ஒரு திட்டத்தைத் துவக்கினாரே.   அது என்ன செய்கிறது?  இந்தியாவில் ஒரு இடம்கூட பிளாஸ்டிக் பைகள் இல்லாமலோ அல்லது மற்றக் குப்பைகள் இல்லாமலோ இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியாவிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கும் எங்கள் ஊரான மைசூரில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்.  நம் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்கே நேரம் போதவில்லை.  இதில் தூய்மை இந்தியாவைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

ஒரு சிறிய நாடான ரவாண்டா செய்திருக்கும் சாதனையை இந்தியா செய்யக் கூடாதா?  ஸ்மார்ட் நகரங்கள் கட்டுவதற்கு முன் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தலாமே.  அதுதான் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகச் சுற்றுச்சூழலுக்கு இந்தியா செய்யும் நன்மை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.