நிர்மலா ராகவன்

சிறார்களும் கேள்விகளும்

நலம்-1-1

எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

தர்மசங்கடமான கேள்விகள்

`நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே போனேன்? என்னை ஏன் முழுங்கினே?’
`முழுங்கலே..,’ என்று விழிப்பாள் தாய். `அசட்டுப்பிசட்டுன்னுன்னு ஏதாவது கேக்காதே. போய் விளையாடு!’ என்று அதட்ட, சிறுமியின் கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும்.
`நீ என்னை அசடாக்கப் பாக்கறே!,’ என்று குற்றம் சாட்டிவிட்டு, `நீ சொல்லாட்டா, நான் எப்படி அம்மாவா ஆக முடியும்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்பாள்!

தடை உத்தரவு

பல பெற்றோர் இந்தப் போக்கிற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிடுவார்கள்: `எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருந்தால், பொழுது விடிஞ்சுடும்!’
இப்படிச் செய்வதால், தம்மையும் அறியாமல் குழந்தைகளின் ஆர்வத்திற்கு, அவர்கள் அறிவுத்திறன் வளர்வதற்கு, தடைபோட்டு விடுகிறார்கள்.
ஒரு குழந்தை கேள்வி கேட்டால், அறிவுபூர்வமாக பதிலை ஏற்க அவன் தயார் என்பதுதான் உண்மை. வயதுக்கேற்றபடி, எளிமையாகக் கூறலாம்.
`செய்யாதே! என்று தடைவிதிக்கப்பட்டவைகளை, `செய்’ என்று எடுத்துக்கொள்வார்கள் சிறு குழந்தைகள்.
சகுனத்தடை என்பதால், `அப்பா வெளியே போறபோது, `எங்கே போறே?’ன்னு கேக்காதே!` என்று அம்மா குழந்தையிடம் நினைவுபடுத்துகிறாள். அடுத்தமுறை அப்பா எங்காவது புறப்பட்டால், ஞாபகமாக, `அப்பா! எங்கே போறே?` என்று கேட்கும்! (நான் கேட்டிருக்கிறேன்).
மாறாக, `இவள் சமர்த்து. யாராவது வெளியே புறப்படறபோது, எதுவும் கேக்கமாட்டா! நானும் வரேன்னு அடம் பிடிக்கமாட்டா,` என்று பாராட்டினால், குழந்தை அடங்கிவிடும்.

பள்ளியில் கேள்விகள்

1 ஒரு முறை, விஞ்ஞானப் பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று நான் கேட்க, “ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று ஒரு பதின்ம வயது மாணவி கேட்டாள்.
“பாட சம்பந்தமாகக் கேட்கத்தான் சொன்னேன்!” என, வகுப்பில் ஒரே சிரிப்பு.
மாணவர்கள் கேள்வி கேட்கும்போது சில ஆசிரியர்கள் `இவர்கள் நம்மை ஆழம்பார்க்கிறார்கள்!’ என்று ஆத்திரப்படுவார்கள். உண்மை அதில்லை. எதை எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரியாது.

2 ஸிதி(Siti) என்ற மாணவி எப்போதோ நடத்தப்போகும் நடத்தப்போகும் பாடத்திலிருந்து பல கேள்விகள் கேட்பாள். அவளுக்கு இன்றைய பாடமே புரிந்திருக்காது. சராசரிக்கும் குறைந்த மாணவி. தன்னை, தான் மிக அழகாக இருப்பதை, ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்று கையாண்ட தந்திரம் அது. வகுப்பில் நுழைந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இப்படியே தொணதொணப்பாள்.
என் சக ஆசிரியை, `ஓயாது கேள்வி கேட்டால், புத்திசாலி என்று நினைப்பார்கள் என்று யாரோ ஸிதிக்குச் சொல்லி இருக்கவேண்டும்!’ என்றாள் கேலியாக.
சரியான கேள்விதான் அறிவை வளர்க்கும். நான் அலுத்துப்போய், “முதலில் இப்போது நடக்கும் பாடங்களைக் கவனி! இதையே புரிந்துகொள்ளாமல், எதை எதையோ ஏன் இப்போதே கேட்கிறாய்?” என்று ஸிதியைக் கண்டித்தேன். அவள் முகம் வாடினாலும், அதன்பிறகு கேள்விகள் நின்றன.
கிடைக்கும் பதிலும் கேள்வியைப் பொறுத்தது.

3 சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பிரசவ காலம் முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தேன்.
“ஆணா, பெண்ணா?” என்ற கேள்வி பின்னாலிருந்து உரக்கக் கேட்டது.
நான் அதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய உருவத்துடன் இருந்த ஒருத்தியை பழைய நிலைக்கு மாற்றிவிட்ட குழந்தையைப்பற்றி அறியும் ஆர்வம் எவருக்கும் ஏற்படுவதுதானே!
புன்சிரிப்புடன், “ஆண் சாயலில் ஒரு பெண்!” என்று சொல்லிவைத்தேன்.

4 நான் புதிய பாடம் ஒன்றை நடத்த ஆரம்பிக்கும்போது, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுவேன். உடனே, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்ற கேள்வி உரக்க எழும்.
“தலைப்புடனேயே நிறுத்திவிடப்போகிறேனா? பாடம் நடத்தியபின் தானே புரியப்போகிறது!” என்பேன்.
பதினேழு வயதான டின் (DIN) வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாது, பன்னிரண்டு வயதானவன்போல் இருப்பான். தனது சிறிய உருவம் அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்க வேண்டும். தன்னை எங்காவது கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று நினைத்தவனாக, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்று கேட்பதை அவன் நிறுத்தவேயில்லை — `சும்மா இருடா!’ என்று பிற மாணவர்கள் அவனைக் கண்டித்தபோதும்!

5 அமீர் என்ற மாணவன் வகுப்பில் எழுந்து நின்று, என்னை ஒரு கேள்வி கேட்டான். நடந்த பாடத்தில்தான்.
உடனே, சகமாணவன் ஒருவன், “ஐயே! உனக்கு இதுகூடத்தெரியாதா?” என்று கேலிக்குரல் எழுப்பினான்.
“தெரியாது. அதான் கேட்கிறேன்!” என்றான் அமீர், சற்றும் அயராது.
இவனைப் போன்றவர்கள் புத்திசாலிகள். கேள்வி கேட்பதற்குப் பயந்துகொண்டிருந்தால், முட்டாளாகவேதான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்தவர்கள்.
அதிகப்பிரசங்கித்தனமா?
பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்தான் ஒலிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகளைக் கேட்டால், `அதிகப்பிரசங்கி’ என்ற பெயர்தான் கிடைக்கும்.
இவ்வாறு ஒடுக்கப்பட்டபின், படிப்பு முடிந்தபின் மட்டும் கேள்வித்திறனோ, அதற்கான தைரியமோ வந்துவிடுமா?
வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். ஆனால், நாம் கேட்கும் கேள்விகள் `தொணதொணப்பு’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது. சரிதானா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *