-செண்பக ஜெகதீசன்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படுங் கீழ். (திருக்குறள்-1078: கயமை) 

புதுக் கவிதையில்… 

வறியோர் தம்
குறைபாட்டினைச் சொன்னதுமதை
நிறைவேற்றிப் பயன்படுவர்,
நற்குணம் நிறைந்த மேலோர்…
கயமைநிறை கீழோரைக்
கரும்புபோலப் பிழிந்தால்தான்
பயன்படுவர் பிறர்க்கு…! 

குறும்பாவில்… 

சொன்னதும் செய்துதவுவர் சான்றோர்,
கரும்புபோல் பிழிந்து ஒறுத்தால்தான்
பயன்படுவர் கீழோர்…!      

மரபுக் கவிதையில்… 

வறியோர் வந்து சொன்னாலே
வலிய வந்தே உதவியேதான்,
அறிவொடு பண்புடை மேலோரெலாம்
அகில வாழ்வில் பயன்படுவர்,
அறிவே யில்லாக் கீழோர்தமை
ஆலைக் கரும்பாய்ப் பிழிந்தால்தான்
சிறிதே மனது யிரங்கியவர்
சீக்கிரம் வருவர் உதவிடவே…! 

லிமரைக்கூ… 

சான்றோர் உதவிடுவர் சொன்னாலே,
ஆலையில் கரும்பெனப் பிழிந்தெடுத்தால்தான்
கீழ்மக்கள் பயன்படுவர் பின்னாலே…! 

கிராமிய பாணியில்… 

தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
பெரியமனுசன் சின்னமனுசன்
பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…

பாவப்பட்டவன் சொன்னாப்போதும்
பெரியமனுசன் ஒதவிடுவான்,
கேட்டவுங்க
கொறதீர ஒதவிடுவான்…

சின்னபுத்தி உள்ளவங்கிட்ட
சொன்னா ஒண்ணும் நடக்காது,
அவனக்
கரும்பப்போலப் புழிஞ்சாத்தான்
கொஞ்சமாவது ஒதவிடுவான்…

தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
மனுசன்கொணம் தெரிஞ்சிக்கோ,
பெரியமனுசன் சின்னமனுசன்
பொறப்புக்கொணம் தெரிஞ்சிக்கோ…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *