மேகத்தில் கரைந்த நிலா..!
பெருவை பார்த்தசாரதி
மேகத்தினுள் கரைகின்ற வெண்ணிலவே உன்னை..
……….மென்மையென மேன்மையாகப் பாடாதவர் உளரோ.?
மோகத்தில் திளைத்திருக்கும் இளைஞரும் உன்னை..
……….மனம்நாடும் மங்கையொடு ஒப்பிட்டே அழைப்பர்.!
போகத்தில் கட்டுண்ட காளையரோ தன்கன்னியரைப்..
……….போற்றிக் கொஞ்சும்போது கண்ணே நிலவேயென்பர்.!
தேகத்தின் அழகைவருணிக்கப் பெண்ணே நிலவுக்கு..
……….தகுதியான உவமையென..பாவலரும் பாப்புனைவர்.!
காகமொன்று கரைந்தாலன்று விருந்தாளி வருவாராம்..
……….கன்னியொருத்தி நிலவுபோல வருவாளென் கனவில்.!
மேகமீதமர்ந்து நானவள் மேனியழகை ரசிக்கையில்..
……….முகத்தைக் காட்டாமல் மறைத்தே வைத்திருப்பாள்.!
யாகத்தீயின் வேதவொலியில் எழும் தேவதைபோல்..
……….யோகமிருந்தால் மட்டுமே மேகம்கிழித்து வருவாள்.!
வேகமாய் விரைவாக விண்ணிலே கலந்துவிடுவாள்..
……….வெண்மேகத்தில் கரையும் விண்நிலவைப் போல்.!
நிலவு ஒருபெண்ணாகி நீந்துகின்ற அழகோவெனும்..
……….நினைவில் நீங்காப்பாட்டெனக்கு பிடித்த பாட்டாகும்.!
பலவண்ண மேகம்சூழநீ வருவாய் காதல்மயக்கத்தில்..
……….புழுதி மறைவதைப்போல் நீயும்சட்டென மறைவாய்.!
நிலவொளியின் நிழலில்கூட நீயெங்கும் தெரிகிறாய்..
……….நீலமலர் இதழ்விரியும் நேரத்திலெனை அழைப்பாய் .!
அலக்கழித்தது போதும் மீண்டுமெனையாட்டி வைக்காதே..
……….அழுக்குநிலா போல்வராமல் பளிச்சென்று நேரில்வா.!
இரக்கமீகை என்பது தாகம்போல தானாகவரவேண்டும்..
……….இரண்டுமே கனவுக்கில்லை காண்பவருக்கு தெரியும்.!
உறக்கத்தைக் கெடுக்குமுன் வேலையால்…காதலில்..
……….உன்மத்தம் பிடித்தவர்கள் உலகில் ஏராளமுண்டு.!
மறக்கும் செயலை மறந்து….வாழுமிளங்காதலை..
……….மறப்பதற்கு மனிதனால் முடிவதில்லையாம்!-ஆசை
துறக்கும் முனிவர்களின் முன்காதல் வந்தால்..கண்..
……….திறக்கும் ஞானியரும் காதல்செயும் கதையுமுண்டு.!
==========================================
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::04-11-17
நன்றி:: கூகிள் இமேஜ்.