பெருகிவரும் மன நோயாளிகள்…
பவள சங்கரி
மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது.
இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் கோளாறுகள் உள்ளிட்ட பொது மனநல குறைபாடுகள் நம் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10% பேரை பாதிக்கின்றன அதாவது இந்தியாவில் 20 பேரில் 1 நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் கிராமப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது.
தேசிய மனநல சுகாதார திட்டத்தின் படி, ஒவ்வொரு முக்கியமான சுகாதார மையத்திலும் அடிப்படை மனநல பராமரிப்பை வழங்க வேண்டும் .
பல கிராமப்புற பகுதிகளில், மனநோய்க்கு எதிரான மூட நம்பிக்கைகள் ஒரு கடுமையான சமூகக் களங்கமாகி உள்ளது என்பதை NIMHANS ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் மன நோய் என்பது “தீய ஆத்மாவின் உடைமை” என்று கருதப்படுகிறது. இந்த தீய ஆவியை அகற்றுவதற்காக, மன நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய வைத்தியர்களையோ அல்லது மத குருமார்களையோ நம்பியிருக்கிறார்கள். மனக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பிரச்சனை மேலும் கடுமையாகிறது. மன நோயாளிகளிடம் சமூகத்தில் பாகுபாடு சிந்தைகள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்கள் மன நோயாளிகளை மற்றவர் முன்னிலையில் சொல்லவே தயங்கி, மறைக்கவும் முயல்கிறார்கள்.
இந்தியாவில் பயிற்சி பெற்ற மன நோய் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. 1,00,000 மக்கள் தொகையில் 0.2 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. மனநல குறைபாடுகளுடன் வாழும் பல தனிநபர்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அதற்குரிய மனநல சுகாதார உள்கட்டமைப்புகளும் சரிவர இல்லாததால் பொது சுகாதார பிரச்சனைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மன நோயாளிகள் பொருளாதார சிக்கலாலும் சரியான சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெகு தொலைவில் இருக்கும் அரசு மருத்துவ மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழலில் போக்குவரத்துச் செலவைக்கூட அவர்கள் சமாளிக்க முடியாமல் போவதும் முக்கிய காரணமாகிவிடுகிறது. அரசும், தொண்டு நிறுவனங்களும் இந்தப்பிரச்சனையில் கவனம் செலுத்தி தீர்வு காண முயலவேண்டும்.