இன்றைய பொருளாதார நிலையில் மாற்றம் வருமா?

0

பவள சங்கரி

தலையங்கம்

இந்திய பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை தற்காலிகமானதுதான் என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் கூறியுள்ளது சமாதானம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சமீப காலாண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளது வருத்தத்திற்குரிய விசயமாகவே உள்ளது. இந்த தேக்க நிலைக்குக் காரணமாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுவதும் தேசிய அளவில் புதிய வரி விதிப்பினால் ஏற்பட்ட குழப்பம்தான்.

ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கிம் விதைத்துள்ளார். பொதுவாக அனைத்துத் தரப்பினருக்கும் இது சிறந்த திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும், சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத நிலையில் இன்று பிரச்சனைக்குரியதாகவே உள்ளது. வணிக உலகில் ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி பெரும் சவாலாக உள்ளது என்பது ஒரு நேர் மறையான சிந்தனை.

வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்னால் வருடம் ஒரு முறை கணக்கு செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது மாதம் ஒரு முறை கணக்கு செலுத்த வேண்டியதாக உள்ளது. இது பழக்கத்திற்கு வருவதற்கு சற்று சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சில தொழில்களுக்கு மிக அதிகப்படியான வரிவிதிப்புகள் உள்ளதை கவனம் கொண்டு சரிசெய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இந்திய ஜிடிபி ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏப்ரல் -ஜூன் காலாண்டில் 5.7 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் குறைந்துள்ளதற்கான காரணம் ஜிஎஸ்டி சட்டத்துக்கு தயாராவதற்கு ஏற்பட்ட குழப்பம்தான் என்று கொள்வோமானால் இந்தப் பிரச்சனையை தற்காலிகமானதாகக் கொள்ளலாம்.ஆனால் இந்திய பொருளாதாரத்தில் இந்தச் சட்டம் மிகப் பெரிய அளவில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டம் ஆகிய இரண்டும்தான் மந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும், பொருளாதார அறிஞர்களும் குற்றம் சுமத்தி வருவது சிந்திக்கத்தக்கது.

இந்தியா இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமாகுமா என்ற வினா இன்று பல தரப்பிலும் எழுப்பப்பட்டுள்ள இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பதன் மூலமாக இந்தியாவில் வளர்ச்சித் தரத்தை அதிகரிக்க வேண்டுமானால் , முக்கியமான தளங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று உலக பொருளாதார கருத்துக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கு பெற்றால் அது உண்மை ஆகலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடு என்ற நிலையை பொருளாதார வளர்ச்சியின் மூலம் இந்தியா வென்றது.

பாலின இடைவெளியைப் பொருத்தவரை உலகிலேயே மிக மோசமான ஒன்றாக நம் இந்தியா இருப்பதும் கண்கூடு. உலகளாவிய பாலியல் இடைவெளி கருத்துக்கணிப்பின் அறிக்கையில் இந்தியா மொத்த 144 நாடுகளில் 108 ஆவது இடத்தில் உள்ளது. உண்மையில் இந்த இடைவெளி மேலும் கூடுதலாக இருப்பதையே வேறு சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஒரு ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் 66 சதவீதம் பெண்களுக்கு தங்கள் பணிகளுக்கான ஊதியமே செலுத்தப்படுவதில்லை, இதில் ஆண்கள் 12 சதவீதம் மட்டுமே. மேலும் இந்த அறிக்கையில், தொழிற்சங்கங்களில் பங்கேற்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மேலாளர்கள், தொழில் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பெண்களின் விகிதம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது பெரும் சவால்களையே சந்தித்துக்கொண்டிருக்கிறது.

பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் முக்கிய சவால் என்றால் அது குழந்தைப்பேறு காலங்களில்தான். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகப்பேறு விடுப்புச் சட்டத்தில் அரசு சில மாற்றுத் திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உலக வங்கியின் சமீபத்திய வணிக வேலைவாய்ப்பு அறிக்கையும் இந்த புதிய சட்டம் ஒட்டுமொத்த வேலை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் உள்ளனர். நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருப்பதால் நிர்வாகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதும் சமீபத்திய கார்ப்பரேட் ஆளுமை பற்றிய உதய கோடக் அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *