இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

2

 -முனைவர்.வே.மணிகண்டன்

தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

திண்ணை இதழ் அறிமுகம்

ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள், அறிவிப்புகள் ஆகிய பகுதிகளில் ஆக்கங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

இணையப் புத்தக அங்காடியின் இணைப்பும், ஜெயபாரதன் இணையப்பக்கம் எனும் வலைப்பதிவின் இணைப்பும், தோழி.காம், வார்ப்பு, தமிழோவியம், மரத்தடி, பதிவுகள் ஆகிய இணையத்தமிழ் இதழ்களின் இணைப்புகளும், அகத்தியர் யாஹு குழுமம், ராயர் காப்பி கிளப்,  யாஹு குழுமம், தமிழ் உலகம் யாஹு குழுமம் ஆகிய தமிழ் இணையக் குழுமங்களின் இணைப்புகளும் திண்ணை இதழில் தரப்பட்டுள்ளன. திண்ணைத் தளத்திலேயே படைப்புகளையும், தகவல்களையும் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் , பிரதி எடுக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளன.

திண்ணை இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

திண்ணையில் பல வகையான இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வழங்குகின்றனர். கதை, கவிதை, நாடகம், நாவல் போன்ற தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய இதழ்களைக் காணும் பகுதிக்கு சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்துத் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

’திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், கட்டுரைகள் மூன்று வகையானவை. முதலாவது படைப்பாளிகளே திண்ணைக்கு அனுப்பிப் பிரசுரிக்கக் கோருபவை. இப்படிப்பட்ட படைப்புகள் வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அந்தப் படைப்பாளிகளையே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன. இரண்டாவது, திண்ணைக் குழு மொழிபெயர்க்கும் படைப்பாளிகள். இந்தக் கட்டுரைகளை திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்யத் தேவையான அனுமதி பெரும்பாலும் திண்ணை பெற்றிருக்கிறது. கேட்ட அனுமதி திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்ய மட்டுமே. இவைகளை மறு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமெனில் அந்தந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் எழுத வேண்டும். இந்த மொழிபெயர்ப்பையே நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில் ‘மொழிபெயர்ப்பு திண்ணை’ எனக் குறிப்பிடுதல் நலம்.  மூன்றாவது படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை எனக் குறிப்பிடுதல் நலம். படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை ஒரு சில கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரித்திருக்கிறது. அந்தப் படைப்பாளிகளின் முகவரி தெரியாதது ஒரு காரணம். சிலவற்றிற்கு நேர்ப்பேச்சில் அனுமதி பெற்றதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட முக்கியமான படைப்புத் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது இன்னொரு  காரணம் ‘1  எனத் திண்ணையில் வெளிவரும் படைப்புகளின் தரவேற்ற நிலைபற்றித் திண்ணை ஆசிரியர் விவரிக்கின்றார்.

திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்குக் காணமுடிகிறது. திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்குக் காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் என்று சொல்லலாம் ‘2 என மதியழகன் சுப்பையா திண்ணைப் படைப்பாளிகளைப் பற்றித் தமது திண்ணை. காம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளுக்கான பிரசுர உரிமை அவற்றை ஆக்கியவர்களுக்கே. அவர்கள் வேறு எந்தப் பத்திரிகையில் அவற்றை மறுபிரசுரம் செய்தாலும், அந்த விசயத்தைத் திண்ணைக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.  திண்ணையில் இந்தத் தேதியில் ஏற்கெனவே பிரசுரமானது என்ற விசயத்தை குறிப்பிடவும் தேவையில்லை (அப்படி குறிப்பிட்டால் திண்ணை ஆசிரியர் குழு நன்றி பாராட்டும்). திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, வெறும் தனிப்பட்ட கோபதாபங்களுக்கான வடிகாலாய் எதையும் எழுதாதீர்கள்’3.  திண்ணை ஆசிரியர் குழு எழுதியுள்ள இக்கடிதத்தில் தரவேற்றம் செய்யப்படும் படைப்புகளின் படைப்புரிமை, படைப்புகளையும் கருத்துக்களையும் எழுதும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.

திண்ணை மூலமாகப் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். பல புதிய வாசகர்கள் தமிழுக்குப் கிடைத்துள்ளனர். முன்பே எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு வாசகத் தளம் விரிவு பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் கட்டுரைகள் மட்டுமின்றிச் சமகால அரசியல், சமூகம், தமிழ்நாட்டின் வாழ்நிலை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

கவிதைகள்

திண்ணையில் கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் படைப்பாளர்களால் அனுப்பப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவால் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கவிதைகளின் பாடுபொருள்கள் தனிமனிதச் செயல்பாடுகள், காதல், மொழிபெயர்ப்பு, புலம்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றைச் சார்ந்தே அமைகின்றன. தஸ்லீமா, அல் ஹண்டர் (யுட ர்ரவெநச), இ ரவீந்திரநாத் தாகூர், அல் பேர்டி, கைஃபி ஆஸ்மி, சுவாமி விவேகானந்தர், கவிஞர் அருண் கொலட்கர், பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகிய கவிஞர்களின் படைப்புகள் மொழிபெயர்த்துப் படைப்பாளர்களால் திண்ணையில் இடப்பட்டுள்ளன.

ருத்ராவின் வைரமுத்துவின் வானம், கனடாவைச் சேர்ந்த சி.ஜெயபாரதனின் தமிழாக்கத்தில் காதல் நாற்பது, காற்றினிலே வரும் கீதங்கள் , தாகூரின் கீதங்கள்  பா.சத்தியமோகனின் பெரியபுராணம், கோபாலின் மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும் போது ஆகிய தலைப்புக்களில் திண்ணை இதழில் தொடர் கவிதைகள் வெளிவந்தன.

திண்ணை ஆசிரியர் குழுவின் முயற்சியினால் சிறப்பான கவிதைகள் புத்தகங்களில் கண்டறிந்து மொழிபெயர்த்தும் வெளியிடப்பட்டுள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஜல், ஹைபுன், சென்ரியு ஆகிய வகைமைகளில் திண்ணையில் கவிதைகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவினரால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கதைகள்

திண்ணை இதழில் பிரபல படைப்பாளர்கள், அயல் நாட்டுப் படைப்பாளர்கள், புதுமுகப் படைப்பாளர்கள் என அனைத்துப் படைப்பாளர்களின் சிறுகதைகளும் ஐந்நூற்றுக்கும் மேல் இடப்பட்டுள்ளன. பிரபல படைப்பாளர்களின் சிறுகதைகள் பெரும்பாலும் படைப்பாளர்களின் அனுமதி பெற்றுத் திண்ணை ஆசிரியர் குழுவால் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தமிழில் சிறுகதை வடிவத்தையும், அறிவியல் புனைகதை வடிவத்தையும் வளர்த்தெடுக்கும் பொருட்டுத் திண்ணை மற்றும் மரத்தடி இணைந்து சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தி பரிசுகளை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது.

திண்ணையில் மதுமிதா எனும் படைப்பாளரால் மொழிபெயர்க்கப் பட்ட ’தைவான் நாடோடிக் கதைகள்’ சிறுகதைத் தொடராக வெளிவந்தது. மேலும் , காப்ரியல் கார்ஸியா, மார்க்வெஸ், லாரி ஃப்ரெஞ்ச், டேவிட் பெஸ்மொஸ்கிஸ், பெர்னாட்சா  ஆகியோரின் சிறுகதைப்  படைப்புகள் திண்ணையில் பல படைப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுக் கதைகள் பகுதியில் இடப்பட்டுள்ளது. தமிழில் பிரபல எழுத்தாளர்களான  நீல பத்மநாபன், வல்லிக்கண்ணன், அசோகமித்ரன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், அம்பை, வண்ணதாசன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, அஸ்வகோஸ், அழகியசிங்கர், அ.முத்துலிங்கம், விந்தன், பூமணி, புதுமைப்பித்தன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளும் திண்ணையில் தரவேற்றப்பட்டுள்ளன. திண்ணை சிறுகதைகள் பெண்ணியம், புலம்பெயர்வு இலக்கியம், சமுதாயம், காதல், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

நாவல்கள்

நாவல் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் தளமாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. திண்ணை இதழில் வெளிவரும் நாவல்கள் பெரும்பாலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் நாவல்களாகவே அமைகின்றன. திண்ணையில் கு.அழகிரிசாமியின் முகக்களை, எம்.வி.வெங்கட்ராமின் மாளிகை வாசம், ஆதவனின் சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல், வ.ஐ.ச.ஜெயபாலனின் செக்குமாடு, சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்), ஜெயமோகனின் நான்காவது கொலை, இரா.முருகனின் வாயு (குறுநாவல்) , அரசூர் வம்சம், ஷங்கரநாராயணனின் பறவைப்பாதம், திசை ஒன்பது திசை பத்து, ராகு கேது ரங்கசாமி, க.அருள் சுப்பிரமணியத்தின் விடியும்,  கோச்சாவின் கனவின் கால்கள் (நாவல் தொடர்) , ரெ.கார்த்திகேசுவின் புழுத் துளைகள் (குறுநாவல்), முகம்மது இஸ்மாயிலின் பிறந்த மண்ணுக்கு, அ.ம.ந.ராமசாமியின் துணை, ஜாவா குமாரின் திருவண்டம், சி.ஜெயபாரதனின் கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல்), ஜோதிர்லதா கிரிஜாவின் மறுபடியும் , அதிர்ச்சி (குறுநாவல்) , ஒரு மகா பாரதம், நாகரத்தினம் கிருஸ்ணாவின் மாத்தா – ஹரி, நீலக்கடல்; கௌரிகிருபானந்தனின் மொழிபெயர்ப்பில் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் ஆகிய நாவல்கள் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

நாடகங்கள்

இணையத்தமிழ் இதழ்களிலேயே அதிகமான நாடகங்கள் தரவேற்றப்பட்ட இதழாகத் திண்ணை திகழ்கின்றது. திண்ணை இதழில் மொழிப்பெயர்ப்பு நாடகங்கள் அதிக அளவில் இடப்பட்டுள்ளன. திண்ணையில் அகஸ்ட் ஸ்ட்ரிண்ட் பெர்கினுடைய ஒரு நாடகம், இன்குலாப்பினுடைய அத்தனை ஒளவையும் பாட்டிதான் (ஒளவையிலிருந்து), சின்னக் கண்ணனுடைய நிழல், ஜெயமோகனுடைய வடக்குமுகம், புதுமைப் பெண்மணி வேலுப்பிள்ளையினுடைய கனடாவின் நாகம்மா, கணேசனுடைய இருள், ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள், சி.ஜெயபாரதனுடைய மொழிப்பெயர்ப்பில்  நரபலி நர்த்தகி ஸலாமி (ஓரங்க நாடகம்), உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்), புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்சா நாடகத்தின் தழுவல்), ஆப்ரஹாம்லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்), கரு.திவரசினுடைய ஐயம், சந்தேகம், அயிர்ப்பு, வெறிச்சென்று ஒரு வீதி, தௌஃபீக் அல்-ஹகீம்னுடைய ஓர் அரேபிய நாடகம் ஆகிய நாடகங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இந்த நாடகங்களில் பல நாடகங்கள் தொடர் நாடகங்களாக வார வாரம் வெளிவந்துள்ளன.

திண்ணை இதழில் கவிதைகள், கதைகள் ஆகியவை தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாவல்கள், நாடகங்கள் ஆகிய படைப்பிலக்கியப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படவில்லை. எளிதில் இணையப் பயனர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் இப்பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும். நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.

பதிவுகள் இதழ் அறிமுகம்

பதிவுகள் இணைய இதழானது மாசி 2000-இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. இணையத்தமிழைப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல் , அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு பதிவுகள் இதழ் செயல்படுகிறது.

பதிவுகளின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்  ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது (தொராண்டோ) கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபின் இவரது ஆக்கங்கள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன ‘தாயகம்’, ‘தேடல்’, ‘கணையாழி’, ‘துளிர்’, ‘சுவடுகள்’, ‘உயர் நிழல்’, ‘ஆனந்த விகடன்’, ‘சுபமங்களா’ மற்றும் இணைய இதழ்களான ‘திண்ணை’, ‘அம்பலம்’, ‘ஆறாந்திணை’, ‘மானசரோவர்.காம்’ ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. 2000-ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

பதிவுகள் இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

’தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் இணையத்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால் அவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதன் மூலம் அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாகப் பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படிக் கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்ட போது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளைக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும், பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் , பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது என ஆசிரியர் வ.ந.கிரிதரன் பதிவுகள் இதழின் ஆரம்பகால படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகளைக் குறிப்பிடுகின்றார்‘4.

பதிவுகள் முதல் இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகள் சிலவும் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகளும் வெளியிடப்பட்டன. மேலும் , இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா., கா.சிவத்தம்பி மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் முதல் இதழில் இடப்பட்டுள்ளன.

தொடக்க காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துரு பாவிக்கப்பட்டு பின்னர் அது முரசு அஞ்சலில் மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யுனிகோர்டில் (லதா எழுத்துருவில்) பாவிக்கப்பட்டு வெளிவருகின்றன.

‘அரசியல் கவிதை, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம் ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தகக் கையேடு, இலவச வரி விளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி எனப் பல அடுக்குகளைக் கொண்டு கனத்துக் கிடக்கிறது. இந்தத் தளம், உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி. சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்கிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளைத் தக்க ஓவியங்கள், புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்குப் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளைப் பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கியம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத்தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்தத் தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்தத் தளத்தை திறக்கலாம். தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவார்கள். உடனடியாக இந்த இணைய இதழைக் காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது’5 எனப் பதிவுகள் இதழின் படைப்பிலக்கியம் பற்றி மதியழகன் சுப்பையா தமது வலைப்பதிவில் பதிவுகளில் விவரிக்கின்றார்.

மாத இதழாக வெளிவரும் பதிவுகள் இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை அறிவியல், சினிமா, நூல்விமர்சனம், நாவல், உங்கள் நலம், விவாதம், உளவியல், சமூகம், உலக இலக்கியம் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்கள் இடப்படுகின்றன. மேலும் , நிகழ்வுகள், வாசகர் எதிரொலி, இலவச வரி விளம்பரம், தமிழ் வர்த்தகக் கையேடு போன்ற பிரிவுகளும் பதிவுகள் இதழில் இணைய உலாவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா, இலங்கை, கலிபோர்னியா, மலேசியா, கனடா, சுவிஸ், பிரித்தானியா, சிங்கப்பூர், பாரீஸ், நியூயார்க், பிரான்ஸ், செர்மனி, டென்மார்க் உட்பட உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பதிவுகள் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இவ்விதழ் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் படைப்புக்களையும் ஏற்கிறது. பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாக இணையப் பயனர்கள் அறியம்படி வெளியிடுகிறது.

பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வம், ரஞ்சி(சுவிஸ்), பாராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா, செல்வகுமாரன், இராஜேஸ்வரி, பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், டி.செ.தமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந்த்;, சூரியா, இரா.முருகன், சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஸ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன்;, என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி;, வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன் எனப் பல பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள் வரை எழுதியுள்ளார்கள்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் படைப்புகளும் பெரும்பகுதி முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனேடிய, சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் இதழாகவும் பதிவுகள் திகழ்கின்றது. குழந்தைகள் இலக்கியத்திற்கான சிறப்புப் பக்கங்களையும் இவ்விதழ் தன்னகத்தே பெற்றுள்ளது. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் உலகத்தமிழ் மக்களின் கலை, அரசியல், இலக்கிய முயற்சிகள் மற்றும் புகலிடவாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், தகவல்கள் ஆகியவை அக்கறையில் எனும் பகுதியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

கவிதை

பதிவுகள் இணைய இதழில் கவிதை பிரிவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் இடப்பட்டுள்ளன. இப்பிரிவு அதிகமான படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ள பிரிவாகவும் இணைய உலாவிகள் அதிகம் உலாவும் பிரிவாகவும் திகழ்கிறது. புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய வடிவங்களில் கவிதைகள் இடப்பட்டுள்ளன. காதல் கவிதைகள் குறிப்பிட்ட அளவு இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன.

பெண்ணியம், மார்க்சியம், புலப்பெயர்வு இலக்கியம், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புலப்பெயர்வு சார்ந்த கவிதைகளாகவும், காதல், தனிமனித நடத்தை ஆகியவை சார்ந்த கவிதைகளாகவும் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு கவிதைகளும் இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எவ்விதத் திருத்தமும் இன்றி படைப்பாளிகளின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அறிமுக, பிரபல எழுத்தாளர்களின் கவிதைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி வெளியிடப்படுகின்றன.

சிறுகதை

பதிவுகள் இதழில் கதைகள் பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கதைகள் தனி மனித நடத்தைகள், புலம் பெயர்வு, சமூகம், அறிவியல் சார்ந்த கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகின் பலப் பகுதிகளில் வாழும் படைப்பாளர்களின் சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் இடப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்த்த ழான்-ரொபெர் எல்ஸாவின் தோட்டம், தொனினோ பெனகிஸ்ட்டாவின் கறுப்புப் பேழை, டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் மொழிபெயர்த்த ஜோ பாசின் அன்னைக்கு, மார்கரெட் லாரன்சுவின் உண்மையான ஆரியன் ஆகிய உலகச் சிறுகதைகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

சிறுகதை இலக்கியத்தை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லவும், புதியப் படைப்பாளர்களை உருவாக்கவும் பதிவுகளும் நந்தா பதிப்பகமும் இணைந்து 2004-ஆம் ஆண்டு தமிழர் மத்தியில் எனும் சிறுகதைப் போட்டியை நடத்தியது. உலகின் பலப்பகுதிகளில் இருந்தும் அறிமுக மற்றும் பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை அளித்தார்கள். படைப்புகள் நடுவர்களால் நடுநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான படைப்புகள் பதிவுகள் இதழில் தரவேற்றம் செய்யப்பட்டன.

நாவல்

நாவல் பகுதியில் அ.ந.கந்தசாமியின் மனக்கண், மைக்கலின் ஏழாவது சொர்க்கம் ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளன. மற்ற பிற நாவல்கள்  கதைகள் மற்றும் சிறப்புப் பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதிக்குப் பெரும் பங்களிப்பை இவ்விதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அளித்துள்ளார். பதிவுகளில்  புலம்பெயர்வு, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கிய வகைமைகளைச் சார்ந்த நாவல்கள் பெருமளவில் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் குறுநாவலான திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம், ஆபிதீனின் ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா, அமெரிக்கா  மண்ணின் குரல் (வன்னி மண், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும் மற்றும் மண்ணின் குரல் ஆகிய நாவல்களின் தொகுப்பு), கனிஸ்காவின் சிறுவர் நாவலான ரினோ, மொழிபெயர்ப்பு நாவல்களான அ.ந.கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட எமிலி ஸோலாவின் நானா, நாகரத்தினம் கிருஷ்ணாவினால் மொழிபெயர்க்கப்பட்ட மார்கெரித் த்யூராவின் காதலன் ஆகிய நாவல்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

நாடகம்

பதிவுகள் இதழ் நாடக இலக்கியத்திற்குக் குறிப்பிட்ட அளவே பங்களித்தள்ளது. பதிவுகள் இதழில் கவிதை, கதை, நாவல் ஆகிய படைப்பிலக்கியங்கள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாடக இலக்கியம் தனிப்பிரிவாகப் பிரித்து வைக்கப்படவில்லை. அ.ந.கந்தசாமியால் எழுதப்பட்ட தாஜ்மகால் உதயம் பற்றிய நாடகமான கடைசி ஆசை, வ.ந.கிரிதரனால் எழுதப்பட்ட ஓரங்க நாடகமான யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க ஆகிய நாடகங்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பதிவுகளில் பெரும்பாலும் நாடகங்கள் கதைப் பிரிவுகளிலும் தனி நபர் சார்ந்த சிறப்புப் பிரிவுகளிலும் தரவேற்றப்பட்டுள்ளன.

நாவல் இலக்கியத்திற்குத் தனிப்பிரிவு இருந்தும் கூட அதில் சில நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டள்ளன. நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.இணையப் பயனாளர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் படைக்கிலக்கியப் பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும்.

[தொடரும்]

*****

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
விழுப்புரம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

  1. ஐயா,
    சமீபத்திய பொன்னியின் செல்வன் திரைப் படம் குறித்தும், அதனைத் தொடர்ந்து, ராஜராஜன் குறித்தும், இந்து மதம் குறித்தும் பல்வேறு விமரிசனங்கள் வைக்கப் பட்டன. எனக்கும் சில கருத்துகள் உண்டு. அது தொடர்பான கட்டுரையைத் தங்கள் மின்னிதழில் வெளியிடுவீர்களா? தாங்கள் அனுமதித்தால் அனுப்புகிறேன். நன்றி.
    மு. சுந்தரராஜன், 25, குறிஞ்சி வீதி, மதினா நகர், கோவைபுதூர், கோயம்புத்தூர். 641042. அ.பே. எண் 9842231074.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.