Blog

  • உன்னை அறிந்தால்!

    —சுரேஜமீ.

     

    உன்னை அறிந்தால்!

    சில வேளைகளில், நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்கள் எத்தகைய பண்புடையவர்கள்? என்று சிந்திப்பதற்காகத்தான், ஒவ்வொரு மொழியிலும் இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன!

    இது வரலாறு; வரும் தலை முறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

    கம்பனைப் பற்றித் தெரியாத தமிழன் இருக்க முடியாது! அத்துனை புகழ் வாய்ந்த கம்பன், தன் இராமாயணத்தின் கடைசிச் செய்யுளில், தன் இனத்தின் பெருமையைத் தூக்கி நிறுத்துகிறான் என்று சொன்னால் மிகையாகாது!
    இதோ உங்களுக்காக……

    அரியணை அனுமன் தாங்க,
             அங்கதன் உடைவாள் ஏந்த,
    பரதன் வெண்குடை கவிக்க,
             இருவரும் கவரி வீச
    விரைசெறி குழலி ஓங்க
             வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுேளார் கொடுக்க வாங்கி
             வசிட்டனே புனைந்தான் மௌலி

    விளக்கம்:
    அரச பீடத்தை அனுமன் தாங்கிப் பிடிக்கின்றான். அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கின்றான். பரதன் அரச குடையைப் பிடித்து நிற்கின்றான். இலக்குவனும், சத்ருக்ணனும் கவரி வீச, அழகிய மணம் வீசும் கூந்தலை உடைய அன்னை சீதாப் பிராட்டி பெருமிதமாய் நிற்க,

    யார் அரச மகுடத்தை வசிட்ட முனியிடம் கொடுக்கிறார்கள்?

    அங்குதான் தமிழன் பண்பாடு தலை நிமிர்த்துகிறது; இராமன் ஒரு தெய்வப் பிறவி. அருளாளர் சடையப்பர் ஒரு மனிதப் பிறவி.

    ஆனால், இந்தக் கம்பன், அந்த இராமனைப் பற்றி எழுத அருள் செய்த, பொருள் தந்த வள்ளல் சடையப்பர். ஆகக் கம்பன் முடிவு செய்கிறான்;

    இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றால், அதற்கு அவனை விடத் தகுதி வாய்ந்த ஒருவன், அந்த மகுடத்தை இராமனுக்கு அளிக்க வேண்டுமென்று!

    அந்தத் தகுதி பெற்ற சடையப்ப வள்ளலின் மரபு வந்தோர் எடுத்துக் கொடுக்க, வசிட்ட மாமுனி கிரீடத்தை இராமனுக்குச் சூட்டுகிறார் என்று புனைந்தான்.

    ஒரு அவதார புருஷனை விட உயர்ந்தது, ஒரு மானுட உள்ளம் என்பதை, ஆண்டவனுக்கே எடுத்துரைத்தான் என்று சொன்னால் …

    நண்பர்களே, உணருங்கள் உங்கள் பண்பு நெறிகளை! போற்றுங்கள் உங்கள் முன்னோர்கள் கட்டிக் காத்த உயரிய குணங்களை!!

    அன்புடன்
    சுரேஜமீ

     

     

     

     

    http://kksr-aurosun.blogspot.com/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 52

    –சு. கோதண்டராமன்.

    வேதப் பொன் மொழிகள் சில

     

    இயற்கை நியதி
    இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது எளிதல்ல. 6.9 இல் வரும் பின் வரும் மந்திரங்களைக் கவனியுங்கள்.
    நாளின் ஒரு பகுதி கறுப்பாகவும் மற்றொரு பகுதி வெள்ளையாகவும் உள்ளது. ஆடை போல் நெய்யப்பட்ட இந்தச் சிக்கலான அமைப்பில் எனக்கு நெடுக்கு நூலும் புரியவில்லை, குறுக்கு நூலும் தெரியவில்லை. தந்தை உதவி இல்லாமல் எந்த மகனாவது இதைப் புரிந்து கொள்ள முடியுமா? அழிவில்லாத இவ்வுலகத்தின் காப்பாளன் கீழிறங்கி வந்து தானே பார்ப்பதை எவன் அறிகிறானோ அவனுக்கே இந்த ரகசியம் தெரியும்.

    விதி
    நதிகள் தலைகீழாகப் பாய்கின்றன. புல் தின்னும் மிருகம் சிங்கத்தை எதிர்க்கிறது. நரி காட்டுப் பன்றியைக் குகையிலிருந்து துரத்துகிறது. இதன் மர்மம் என்ன? 10.28.4
    பிறந்திருக்கும் அனைவரும் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட வழிகளிலே சென்று முன்னோர்கள் சென்ற இடத்தை அடைகிறார்கள். 10.14.2
    குதிரை நுகத்தடியில் கட்டுப்பட்டிருப்பதைப் போல நான் கட்டுப்பட்டிருப்பதை நன்கு அறிகிறேன். எங்களுக்கு எது நன்மை செய்யுமோ அதைச் சுமக்கிறேன். நான் இதிலிருந்து விடுபட விரும்பவில்லை. திரும்பிப் போகவும் விரும்பவில்லை. எல்லாம் அறிந்த தலைவன் எனக்கு வழி காட்டுவானாக 5.46.1

    வாழ்க்கை நிலையாமை
    மனிதரில் எவனும் தன் ஆயுளை அறியான். 7.23.2
    நேற்று இருந்தவன் இன்று இல்லை. தேவனின் அறிவைப் பாருங்கள்.10.55.5

    ஒன்று பரம்பொருள்
    அக்னி ஒன்றுதான். பல வகையாக மூட்டப்படுகிறது. சூரியன் ஒன்றுதான். பலவற்றின் மீதும் ஆட்சி செலுத்துகிறது. உஷை ஒன்றுதான். அனைத்தையும் ஒளியூட்டுகிறது. இருப்பது ஒன்றுதான் அனைத்துமாகப் பரவி நிற்கிறது. 8.58.2

    பக்தி
    அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனே, தெய்வீக ஒளியே, கன்றுக்குப் பால் சுரந்து நிற்கும் பசுப்போல உன்னை நினைந்து கதறுகிறேன். 7.22.32

    தேவர்களின் சிறப்பு
    ஆதித்யர்கள் பல கண் உள்ளவர்கள். மனதுக்குள் இருப்பதையும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும், அறிவார்கள். 2.27.3
    தேவர்கள் எதைக் காக்கிறார்களோ அவை எல்லாம் நன்மையாகவே இருக்கும். 2.23.19
    தேவர்கள் விரும்பியது தான் நடக்கும். வேறு யாரும் அதை மாற்ற முடியாது. 8.28.4
    இந்திரன் கொடுக்க நினைப்பதை எவரும், தேவனோ, மனிதரோ, தடுக்க முடியாது. 8.14.4
    இந்திரனை முழுமையாகப் புகழ வல்லார் யார்? கால்களை மாற்றி மாற்றி வைத்து நடப்பது போல அவன் முன்னால் இருப்பவரைப் பின்னாலும் பின்னால் இருப்பவரை முன்னாலும் கொண்டு வைக்கிறான். 6.47.15
    அக்னியே, யார் உன்னிடம் பிரார்த்தனையுடன் வருகிறார்களோ, யக்ஞத்தின் தீவிரத்தையோ அல்லது துவக்கத்தையோ காட்டுகிறார்களோ அவருக்கு நீ வலிமையும் செல்வமும் தந்து காப்பாற்றுகிறாய். 6.15.11
    மாயையில் வல்லவர்களோ வலிமையில் மிக்கவர்களோ எல்லோரும் தேவர்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகவேண்டும். 3.56.1
    சூரிய கிரணங்கள் தலையிலிருந்து பாலைப் பொழிகின்றன. கால்களால் நீரைப் பருகுகின்றன. 1.164.7
    தேவர்கள் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. நாம் ஒன்றும் கொடுக்காமலே கொடுக்கிறார்கள். நமது நாட்களை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறார்கள். 5.49.3

    தெய்வ வணக்கத்தின் அவசியம்
    தேவர்களின் மனத்தை மகிழ்விப்பவன் அவ்வாறு மகிழ்விக்காதவனைத் தோற்கடிக்கிறான். 8.31.15
    பலஹீனமானவனாயினும் மனதைத் தூய்மையுடன் (சூரியனுடன்) இணைத்துக் கொண்டுவிட்டால் அது பயத்தால் நடுங்காது. 5.44.9
    நேர்மையைப் போற்றுபவன் பகைவரை வெல்வான். தேவரை வழிபடுபவன், வழிபடாதவரை வெல்வான். ஊக்கமுள்ளவன் வெல்லமுடியாத பகையையும் வெல்வான். யக்ஞம் செய்பவன் யக்ஞம் செய்யாதவனின் உணவை வெல்வான். 2.26.1

    நமஸ்காரத்தின் சிறப்பு
    நமஸ்காரம் வலிமையானது. நான் அதை மேற்கொண்டுள்ளேன். மண்ணையும் விண்ணையும் தாங்குவது நமஸ்காரம். தேவர்களுக்கு நமஸ்காரம். அது அவர்களை ஆள்கிறது. செய்த பாவங்களை நமஸ்காரம் போக்குகிறது. 6.51.8

    யக்ஞத்தின் சிறப்பு
    புத்தி உள்ளவன் யக்ஞம் செய்ய விரும்புகிறான், இல்லாதவன் மூழ்குகிறான். 9.64.21
    யக்ஞம் செய்பவனும், சோமம் பிழிந்து தருபவனும், தேவர்களை வணங்குபவனும் அழிவதில்லை. 8.31.16
    யக்ஞம் இந்திரனை வலுப்படுத்துகிறது. யக்ஞம் செய்பவன், வீட்டிலுள்ள நீர் தாகத்தைத் தணிப்பது போல, விருப்பம் நிறைவேறப் பெறுகிறான். பொய்யான மனதுடன் வஞ்சகமாக வழிபடுபவன், வழி தவறியவன் போல, நோக்கம் நிறைவேறாமல் போகிறான். 1.173.11

    பிரார்த்தனை
    ப்ரஹ்ம வர்ம மமாந்தரம். – பிரார்த்தனையே எனது கவசம். 6.75.19
    அக்னியே, நாங்கள் குதிரைகளாலோ அல்லது பிரார்த்தனைகளாலோ மற்ற ஜனங்களின் மீது எங்கள் வலிமையைப் புலப்படுத்துவோமாக.2.2.10

    சில பிரார்த்தனைகள்
    அச்வின்களே, எங்கள் வழிபாடு இனிமையும் உண்மையும் கலந்ததாக இருக்கட்டும். 1.22.3
    எங்கள் அறிவால் செல்வத்தை அடைய எங்களுக்கு உதவுக, இந்திரனே.8.4.15
    வருணா, நாங்கள் ஒளியை விட்டு விலகாதிருப்போமாக. 2.28.7
    ஸவிதாவின் சிறந்த ஒளியைப் போற்றுகிறோம். அவர் எங்களது அறிவினைத் தூண்டுவாராக. 3.62.10
    தேவர்களுக்கு நலம் செய்யும் தூய கண்ணாகிய சூரியன் உதிக்கிறான். நாங்கள் அவனை நூறாண்டு காலம் பார்த்திருப்போமாக. நூறாண்டு வாழ்வோமாக. 7.66.16
    சவிதாவே, கெட்டதெல்லாம் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடத்தில் தூண்டுக. 5.82.5
    துன்பங்களைப் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடம் தோற்றுவிப்பாயாக. 5.82.5

    குடும்ப ஒற்றுமை
    கணவனும் மனைவியும் சேர்ந்து ஒற்றுமையாகத் தேவர்களைப் பூஜிப்பதால் வரும் பலன்கள்- துன்பங்களிலிருந்து விடுதலை, எதிரிகளின் அழிவு, குழந்தைச் செல்வம், உணவு, வலிமை, புகழ், முழு ஆயுள், ஆனந்தம், தர்ம வழியில் நடத்தல், தெய்வ வழிபாடில்லாதவர் மீது வெற்றி. 8.31

    தவறுக்கு வருந்தல்
    பாவத்தின் காரணங்கள்- மது, கோபம், சூது, அறியாமை, கனவு, விதி 7.86.6
    மனித பலஹீனத்தால் நாங்கள் தவறு செய்கிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்காதே. 7.57.4

    அமரத்வம்
    நாம் அமரத்துவம் அடையவேண்டும் என்பதற்காகத் தேவர்கள் நமக்குப் பிரார்த்தனைகளை அமைத்திருக்கிறார்கள். 7.97.5

    பேச்சு
    கேள்வி கேட்பதிலோ, மீண்டும் மீண்டும் தெய்வத்தின் பெயரைக் கூறுவதிலோ, உரையாடலிலோ எவன் மகிழ்வதில்லையோ அவன் ஆபத்தானவன். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று. 8.101.4
    பயனற்ற, அற்பத்தனமான, முடிவற்ற, குறைவான பேச்சினால் மக்கள் திருப்தி அடைவது இல்லை. 4.5.14

    உழைப்பின் சிறப்பு
    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான். 8.47.6
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். 4.33.11
    விழிப்புடன் இருப்பவனை ரிக், சாமம் புகழ்கின்றன. நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு சோமம் உடன் வசிக்கிறது. 5.44.14
    சுறுசுறுப்புள்ளவனே வெல்கிறான், வளம் பெறுகிறான். கருமிகளுக்கு தேவர்கள் உதவுவதில்லை. 7.32.9

    பரோபகாரத்தின் சிறப்பு
    ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், மக்களுக்கு நன்மை செய்பவன் தன் வலிமையினாலேயே வளர்கிறான். நல்ல பாதுகாப்பான வீட்டில் இருக்கிறான். 7.74.6

    தான மகிமை
    கடவுளை வணங்காத, தானம் செய்யாத ஆணை விட பெண் உறுதியானவள், மேலானவள். 5.61.6
    பெண் துன்பப்படுபவனையும், வறுமையாளனையும் எதையாவது விரும்புபவனையும் அறிந்து கொள்கிறாள். 5.61.7
    அக்னியே, பிறருக்குத் தானம் செய்பவர்கள் சௌகரியமாக வாழட்டும். 7.16.10
    அக்னியே, மற்றவர்களுக்கு மிகுதியாகத் தானம் செய்பவருக்கு மிகுதியாகச் செல்வத்தை அளிக்கவும். 6.10.5
    கொடையாளியான இந்திரன் பிறருக்குத் தானம் செய்பவரையே ஆசீர்வதிக்கிறார். 7.32.8
    பசியை மரணத்தின் காரணமாகத் தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாகச் சாப்பிட வசதி உள்ளவனுக்கும் மரணம் ஏற்படுகிறது. வள்ளல் மனம் கொண்டவனின் செல்வம் குறைவதில்லை. பிறருக்குக் கொடுக்காதவன் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.1
    செல்வமுள்ளவன் பசியுடன் யாசகர் வரும்போது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டால் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.2
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். 10.117.3
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. அவன் இருப்பிடம் வீடு அல்ல. அவனை விட்டு நீங்கி, கொடுக்கக் கூடிய அன்னியன் ஒருவனை நாடுக. 10.117.4
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். அவன் நீண்ட கால வாழ்வைச் சிந்திக்க வேண்டும். செல்வம் இன்று ஒருவனிடம் இருக்கும், நாளை இன்னொருவனிடம் இருக்கும். தேர்ச் சக்கரம் போல சுழலக் கூடியது இது. 10.117.5
    அளிக்கத் தெரியாத அறிவிலி அடைந்த உணவு அவனுக்கு அழிவு தரும். நண்பனுக்கு உணவளிக்காமல் தனித்து உண்பவன் தனித்துத் துன்பப் படுகிறான். 10.117.6
    கலப்பை தன் பாதையைக் கால்களால் கீறி உணவைத் தருகிறது. கொடையாளியான உறவினன் கொடுக்காதவனை விட மேலானவன். இந்த வேதக் கருத்தை சொல்பவன் சொல்லாதவனை விட மேலானவன். 10.117.7

    சூது
    சூதை நாடுபவனுடைய மனைவியைப் பிறர் அபகரிப்பர். அவனது பெற்றோரும், சகோதரர்களும், ‘இவனை எனக்குத் தெரியாது. கட்டி இழுத்துச் செல்லுங்கள்’ என்பர். 10.34.4
    சூதாட்டக் காய்கள் கொக்கி போல் இழுப்பவை, துன்புறுத்துபவை. ஆரம்பத்தில் சிறு லாபங்களைத் தரும். முடிவில் அழித்து விடும். அவை தேன் தடவிய கொலையாளிகள். 10.34.7
    சூதாட்டக் காய்கள் கீழே உள்ளன, ஆனால் அவை நமக்கு மேலே ஏறி விடுகின்றன. கையில்லாத அவை கையுள்ளவர்களை வெல்கின்றன. குளிர்ச்சியாக இருந்து நம்மைத் தகிக்கின்றன.10.34.9
    சூதாடுபவனுடைய மனைவி துன்புறுகிறாள். கண்டபடி அலையும் அவனுக்காகத் தாய் வருந்துகிறாள். கடனாளியாகிறான். பயப்படுகிறான். பணத்தைத் தேடி இரவில் மற்றவர் வீட்டுக்குத் திருடப் போகிறான். 10.34.10
    சூதாடுபவன் மற்றவர்களின் சீரான குடும்பத்தையும் அவர்களின் அன்பான மனைவியையும் பார்த்துப் பொருமுகிறான். காலையில் குதிரை ஏறிப் போனவன் மதியத்தில் வெய்யிலில் அலைகிறான். 10.34.11
    சூதாடாதீர்கள். வேளாண்மையில் ஈடுபடுங்கள். அதில் வரும் செல்வத்தில் மகிழ்ச்சி அடையுங்கள். மனைவி, மாடுகள் போன்ற எல்லாச் செல்வங்களும் அதில் உண்டு. சவிதா இதை எனக்குச் சொன்னார். 10.34.13

    மனம்
    மக்கள் பார்ப்பதற்காக ஒரு நிலையான ஜோதி அமைந்துள்ளது. எல்லாத் தேவர்களும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்கின்றனர். என் காதுகள் அதை நோக்கித் திரும்பி உள்ளன. என் கண்கள் அதையே பார்க்கின்றன. பறக்கும் பொருள்களிலே மனம் தான் மிக வேகமானது. என் மனம் அதை நோக்கிச் செல்கிறது. நான் அதை எப்படி அறிவேன், எப்படிச் சொல்வேன்? 6.9.5
    குதிரையை வழிநடத்துவது கடிவாளக் கயிறு. அதை வழி நடத்துவது மனது. 6.75.6

    உலகியல்
    சொந்தப் பிள்ளையே சிறந்தவன். மற்றவர் பிள்ளை பிள்ளை ஆகமாட்டான். 7.4.7
    வீடு தான் சஞ்சரிக்கும் எல்லாப் பிராணிகளின் விருப்பமாகும். 2.38.6
    ஒன்று போல இருக்கும் இரு கைகளும் செயல் திறனில் வேறுபடுகின்றன. ஒரே நேரத்தில் ஈன்ற இரு பசுக்கள் ஒரே அளவு பால் தருவதில்லை. இரட்டையர்கள் கூட திறமையில் வேறுபடுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் வள்ளல் தன்மையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 10.117.9
    ஊருக்குப் புதியவன் தெரிந்தவனிடம் வழி கேட்கிறான். சரியான நபரால் வழி காட்டப்பட்டு அவன் தொடர்ந்து பயணிக்கிறான். உண்மையில் இது தான் கல்வியின் சிறப்பு. கற்றவன் நேராகச் செல்லும் வழியை அறிந்து கொள்கிறான். 10.32.7, 9.70.9
    ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக. 2,33.2

    பக்தர்கள் பல வகை
    வலிமையுள்ளவன் பகனிடம் பாதுகாப்பை நாடுகிறான். வலிமையற்றவன் ரத்னத்தை நாடுகிறான். 7.38.6
    ரிஷிகள் உதவிக்காக வேண்டுகின்றனர். புரோகிதர்கள் உணவுக்காக வேண்டுகின்றனர். 7.94.5
    பக்தர்கள் சோமனைப் போற்றுகிறார்கள், பேரறிஞர்கள் யக்ஞம் செய்ய விரும்புகிறார்கள், விபரீத புத்தி உள்ளவர்கள் அமிழ்ந்து போகிறார்கள். 9.64.21
    நரர்கள் போரில் வெல்லவும் புத்திர பாக்கியம் பெறவும் விரும்புகிறார்கள். விப்ரர்கள் அறிவைப் பெற விரும்புகிறார்கள். 1.8.6

     

    Share
  • தமிழாய்த் தமிழுக்காய்…

    -கலாம் சேக் அப்துல்காதர்

    தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
    அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
    விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
    மொழியாம் தமிழை மொழிந்து.

    சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
    வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
    வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
    இழியும் பழியும் இழுக்கு.

    ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
    விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
    வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
    சூழும் புகழ்ச்சிச் சுழல்.

    மொழியை அழித்தல் முழியை மழித்தல்
    விழியை இழந்து விழுவாய்க் குழியில்
    மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
    பிழையில் உழலும் பிழைப்பு.

     

    Share
  • ஆற்றுப்படுகையும் ஆற்றுப்படுத்தலும்!

    கட்டாரி

    அம்மாவின் முந்தானையோர
    ஐம்பது காசுகள்
    போதுமானதாக இருந்தது…கல்கோனாக்கள்
    தவறியிருந்த
    நேற்றைகளின் பொருமல்கள் கரைத்துவிட…

    பொரி உருண்டைகளுக்கான
    தங்கையின் ஏக்கமும்
    அப்படித்தான்…!

    அப்பாவின்
    முழங்கைச்சட்டை மடிப்பிலும், தொடர்ந்தே வரும்
    முள்மீசை முத்தத்திலும்…

    இம்முறை தனியே வந்த
    அக்காவின் கோபம் இறங்க…
    இரண்டு நாள் தள்ளிவந்திருந்த
    மாமாவையும் சேர்த்துவைக்கச்
    செத்துப் போயிருந்தது… நாட்டுக்கோழியொன்று…!!

    வேலைக்குக் காத்திருந்த
    சித்தப்பாவின் வெறுமைகளைச்
    சாயங்காலக் கிரிக்கெட்டின்
    நான்கு சிக்சர்கள் நிரப்பிவிடும்…தவறினால்
    அப்பத்தாவின் அம்மாசீர்வாதம்…!!

    பிசாசு விழுங்கியிருந்த
    பக்கத்துக்கு வீட்டு அக்காவும்…
    ஒற்றை எலுமிச்சை, கொத்து வேப்பிலைக்
    குளியலோடு
    சுகப்பட்டிருந்தாள்…

    செதுக்கிய பாதையில்
    சிதறா நினைவுகளோடு திரும்புகையில்
    தொகுப்பு வீட்டின்
    எதிர்க்கதவுக்காரன் செய்தி பகிர்ந்தான்…

    சாக்லேட் கடிச்சி வீசறான் சார்
    பையன்… இப்பத்தான்
    கவுன்சலிங் போயிட்டு வரோம்!!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (9)

    வையவன்

    தாமு அது வரை சிவாவை ஒர்க்ஷாப்பிற்கு வரும்படி சொன்னதில்லை.

    அன்று காலை “சிவா, ஒர்க்ஷாப்புக்குப் போவோமா?” என்று கேட்டான்.
    அவன் ‘சரி’ என்று குளித்துத் தயாரானான்.

    “எந்த வகையிலும் இது கம்பெல்ஷன் இல்லே. ஜஸ்ட் வந்து பாரு. அண்டர்ஸ்டாண்ட் தி நேச்சர் ஆம்ப் பை ஜாப். எழுத்தாளனுக்கு இதெல்லாம் ஒபயோகப்படும்ணு நெனச்சுட்டு வா!”

    மீண்டும் இரவு வீடு திரும்பும் வரை சிவா அவனோடு இருந்தான். தாமு சிவாவை சமைக்க விடவில்லை. இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டனர். அல்லது பிரீதா வீட்டிற்குச் சென்றனர்.
    ஒருநாள் சிவா தான் சமைப்பதாக வற்புறுத்தினான்.

    “எ ரைட்டர் ஷûட் நாட் குக் ஃபார் மீ” என்று அடித்துச் சொல்லி விட்டான் தாமு.
    சுத்தியல் ஓசை. வெல்டிங்கின் மக்னீஷிய வெளிச்சம், பெய்ண்டின் மணம்… கிரீஸும் பெட்ரோலும் இரும்பும் குலவும் வாசனை.

    கார்கள், வாகனங்கள், டிராக்டர்கள், ஸ்கூட்டர்கள், தொழிலாளிகள், வேலை தெரிந்தவனின் செருக்கு, அப்பிரண்டிஸ்ஸின் அடக்கம், வாடிக்கையாளர்களின் பிக்கல் பிடுங்கல்கள்.

    சிவாவின் உலகம் ஒரு வெறுமையிலிருந்து எந்திரங்களும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் சவால் விடும் புதிய சந்தடிக்கு விஸ்தரித்தது.

    ஒவ்வொரு உலகமும் சுவையானவை தான். அவற்றின் பிரச்னைகளும் ரசமானவை தான்.
    எனினும் தனது உலையில் தான் தகித்துக் கனன்று குழம்பாகி, அக்னி தனது வார்ப்பில் பரவிக் குளிர்ந்து தன்மயமாய் நிற்கும் அந்த எழுத்தின் அனுபவத்திற்கு நேரம் எங்கே?

    ‘எப்ப சார் ரெடியாகும்… என் காருக்கு எப்ப டெலிவரி கொடுப்பீங்க? ஸ்பேர் பார்ட்ஸ் சிந்தாதிரிப்பேட்டை பூரா சுத்தினேன், கெடைக்கலே.ஆக்ஸிலேடர், க்ராங்க் ஷாஃப்ட், கியர் பாக்ஸ்’ அலைமோதலும் அவசரமும் யந்திர உறுப்புக்களும் அவனது நேரத்தை, பசித்த மலைப்பாம்புகள் போன்று கவ்வி விழுங்கக் காத்திருந்ததை சிவா கவனித்தான்.

    அன்றைய மாலை அவ்வளவு பரபரப்பில்லாத வேளை. கடைசியாக எக்ஸிபிஷன் காண்ட்ராக்டர் ஒருவர் வான் ஒன்றை ரெடி செய்து முடித்து விட்டுத் தொழிலாளிகள் சோப்புப் போட்டு கை கழுவி விட்டுக் கிளம்பினர்.

    ஒர்க்ஷாப்பில் உள்ள பாத்ரூமில் தாமு குளிக்கப் போனான்.
    அதற்குள் காண்ட்ராக்டர் அனுப்பியதாக வான் டிரைவர் வந்து டெலிவரி கேட்டான்.

    “குளிக்கப் போயிருக்காரு… ஒக்காருங்க” என்று மேஜை மீதிருந்த போர்ட்டபிள் டைப்ரைட்டரில் ஒரு கடிதத்தை டைப் செய்யத் தொடங்கினான் சிவா.

    உள்ளேயிருந்து தாமு கேட்டான்.
    “யார் சிவா!”
    “எக்ஸிபிஷன் காண்ட்ராக்டரோட வான் டிரைவர்”
    “மடாடரா”
    அவ்வளவு நீளமான அடையாளம் வேண்டியதில்லை என்று மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கிறான்.
    “ஆமா”
    “மேலே பில் இருக்கு! கேஷ் கொண்டு வந்திருக்காராமா?”
    “கேஷ் கொண்டாந்தீங்களாய்யா?” சிவா அஞ்சல் செய்தான்.
    “வண்டி ரெடியாண்ணு பாக்க வந்தேன்”
    “வண்டி ரெடி பில் இதோ.”

    “சார், எனக்கு ரொம்ப அர்ஜண்டா வேணும். நீங்க வண்டியோட வாங்க ட்ரைலர் பாத்த மாதிரியும் இருக்கும். காண்ட்ராக்டர் கிட்டேயிருந்து பில் கிளியர் பண்ணி அனுப்பிடறேன்” என்ற டிரைவர் சிவாவைப் பார்த்து கெஞ்சினான்.
    உள்ளே குளிக்கும் ஓசை நின்றது.

    “யாரூஉஉ.. சதா?”
    டிரைவர் சதா சுவாதீனமாக பாத்ரூமுக்குள் நுழைந்து ப்ளஷ்டோருக்கு மேலே தெரிந்த தாமுவின் தலையைப் பார்த்து, “குட்மார்னிங் ஸார்!” என்றான்.

    “குளிக்கக் கூட விடமாட்டியா சதா?”
    “இன்னா பண்ட்டம்? எனக்கு அர்ஜெண்ட். கம்பெனி கம்பெனியா ஃபோன் போட்டுட்டு எங்கியும் வண்டி ஆப்டலே. நம்ப வண்டிய வுட்டுட்டு கை ஒடஞ்சி நிக்கறமாதிரி சிச்சுவேஷன்”
    “இன்னாப்பா அவ்ளோ அவுசரம்?”

    தாமுவினால் டிரைவர் பாஷையில் கூட பேச முடியும்.

    “நாளைக்கி மினிஸ்டர் வர்றாரு. கட்டவுட் ஆர்டர் கொடுத்ததெல்லாம் அட்விடேஸ்மெண்ட் கம்பெனியிலே தயாராயி ரெண்டு நா ஆவப்போவுது. எடுத்தாரத்துக்கு தோதா வண்டி கெடைக்கில.”

    “சரி, பில்லை வாங்கிட்டுப் போய் கேஷ் எடுத்தா! அப்பால வண்டிய டெலிவரி எடுத்துட்டுப் போ.”
    “தொரை…தொரை, நாளக்கி பத்து மணிக்கி மினிஸ்டர் வர்றாரு… பேனரு கட்டவுட் எல்லாம் கட்டி ஸீரியல் பல்ப் எல்லாம் ஜோடிக்கணும். இப்பவே மணி ஏழாவப் போவுது. நான் இனிமே போயி எலக்டிரீஷனைத் தடவணும்!”

    “சிவா… ஒரு போன் போட்டு காண்ட்ராக்டர்கிட்டே வண்டி வந்ததுமே பணம் கெடைக்குமாண்ணு கன்ஃபர்மேஷன் கேளு!”
    “ஓ… அத்தைச் செய்யுங்க!”
    “நம்பர் என்னாப்பா?”

    “டி என் எய்ட் ஒன்டூ டூ ட்ரிபிள் த்ரீ…” என்று அவன் சொல்லத் தொடங்கினான்.
    அடுத்த நிமிஷத்தில் காண்ட்ராக்டர் உத்திரவாதம் கொடுத்தார்.

    “என்ன சிவா?” என்று சோப் போட்டுக் கொண்டே தகவல் கேட்டான் தாமு.
    “வரச் சொல்றாரு. கேஷ் ரெடியாம்.”

    “பில் அமவுண்ட் சொன்னியா?”
    “சொல்லிட்டேன்.”

    “சரி, நீ கூட போயி கேஷ் வாங்கிட்டு வா, ஐ’ல் வெய்ட் ஹியர். வர்றப்போ ஆட்டோவிலே வந்துடு. வி ஹாவ் அன் எங்கேஜ்மெண்ட்.”
    மெடாடரில் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான் சிவா.

    என் தேவை.. என் தேவை என்று குளிக்க விடாமல், தூங்க விடாமல், சாப்பிட விடாமல், உதிரத்தை உறிஞ்சத் துடிக்கும் உலகம் அது. கவிதையை ஸ்கூட்டரின் கியர் பாக்ஸிலும் சிறுகதையை அம்பாஸிடரின் ஸ்பார்க் ப்ளக்கிலும் எதிர்பார்க்கும் உலகம்.

    அவனுக்கு வேறோர் உலகம் ஞாபகம் வந்தது.
    அங்கே ரைஸ்மில் ஓடியது. நெல்லின் உமியையும் தவிட்டையும் அசுர நாவால் அரைத்து அரைத்து தள்ளியவாறே கரண்ட் கோட்டா தீரும் வரை இரவும் பகலும் பாராது அது ஓடியது.

    அங்கே அம்மா அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அதன் இயக்கத்திற்குள் இணைந்து இரவையும் பகலையும் அழித்து..
    கிறீச்சென்று பிரைக்கைப் பிடித்து ஓரமாக நிறுத்தினான் டிரைவர்.

    “இங்கே சுக்குத் தண்ணி நல்லாருக்கும். ஒரு க்ளாஸ் போட்டுக்கலாம். வர்றீங்களா சார்!”
    அத்தனை அவசரத்திலும் டிரைவருக்கு சுக்கு நீர் மீது ஒரு கண்.

    “வாண்டாம், நீ போய்ட்டு சீக்கிரமா வா”
    “தோ”
    அவன் திரும்பி வந்து, காண்ட்ராக்டரிடம் போய் பில் பணத்தை வாங்கிக் கொண்டு ரசீதில் கையெழுத்திட்டான் சிவா.
    வெளியே வரும்போது “போக ஒரு ஆட்டோ” என்ற சிந்தனைதான் இருந்தது.

    வருகிற அவசரத்தில் யாரையோ இடித்து விட்டான், பாம்பே ஷோ சூதாட்ட ஸ்டால் அருகில்.
    “ஏம்பா… கண்ணு கிண்ணு?” என்று சீற்றம் கிளம்பவும் திரும்பினான். கம்பவுண்டர் புண்ணியகோடி. திஷ்யாவின் அப்பா.

    அவர் பார்வை மீண்டும் ஸ்டால் மீது தாவியது. குறிபார்த்து எறிந்தால் பணத்தை ஐந்து மடங்காகத் தரும் இடம்.
    சென்ட்ரல் ஸ்டேஷனில் திஷ்யா சொன்னவை அவிழ்ந்து கொட்டிய ஆடியோ டேப் மாதிரி சுருள் சுருளாய் அவனைச் சுற்றிக் கொண்டது.

    தாமு கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்.
    “எங்க சார்… இப்படி?”
    “அட… சிவா எங்கே இப்படி?”

    கூட ஏதோ ஒரு சில்க் ஜிப்பா. தங்க பிரேம் மூக்குக் கண்ணாடி. பன்னீர்ப் புகையிலை. நாற்பது வயசில் ஏதோ எழுபது வயது மேடு பள்ளங்களை முகத்தில் சுமந்த கிழட்டுத் தோற்றம்!

    “இவரைத் தெரியுமா?”
    அவன் விழித்தான்.

    “இவர் பத்மனாபா பிலிம்ஸ் ஸ்டோரி டிபார்ட்மெண்ட்லே சீனியர் ரைட்டர். அந்தக் காலத்திலே பத்திரிகைகள்ளே ஓஹோன்னு வெளுத்து வாங்கியிருக்கார். பெர்ய ரைட்டர். காளிசரணன்னு கேள்விப்பட்டிருப்பே.. சார். இவரு எங்க வீட்டிலே பக்கத்துப் போஷன்லே குடியிருக்கார். போன வாரம் நந்தவனம் பார்த்தீங்களா… அட்டைப் படச் சிறப்புக் கதை. எதிரொலியே நீ எங்கே இவர் எழுதியது தான்!”

    “அப்படியா.. ஒண்டர்ஃபுல்.. ஒண்டர்ஃபுல்..”
    “அதென்ன கதையா சார் அது? மார்வெல். கொண்ணுட்டீங்க!” மாமூல் சினிமாக்காரர்கள் மாதிரி அவர் பாலிஷாகப் புகழ்ந்தார். ஹாவென்று உச்சிக்கு தூக்கிப் போய் உருட்டித் தள்ளுகிற மாதிரி.

    சிவா இறுகிய உருக்கு மாதிரி நின்றான்.
    காளிசரண். பத்து வருஷத்துக்கு முன் தமிழில் அது என்ன பேர்! தமிழ்ச் சிந்தனையிலும் உணர்விலும் சிம்ம கர்ஜனை போன்று எத்தனை கம்பீரத்தை அது தோற்றுவித்தது!

    பன்னீர்ப் புகையிலையும் வெள்ளி வெற்றிலைச் சம்புடமுமாய் நிற்கும் இந்த மனிதனா அந்த காளிசரண்!
    அன்று விடிந்த பொழுதையும், அந்த பயணத்தையும் சிவா கசப்பாகச் சபித்தான்.

    “பத்மநாபா ஃபிலிம்ஸ்லே இவர்தான் ஆல் இன் ஆல். டிஸைடிங் ஃபேக்டர்னு வச்சுக்கயேன் சிவா!”
    சிவா பத்து வருஷத்துக்கு முந்திய காளிசரணுக்கு வணக்கம் செய்தான்.

    “நம்ம டாட்டரை எப்படியாவது சினிஃபீல்டிலே நொழைச்சுடணும். தினேஷ்குமார் அபிப்பிராயப்படறார். சார் தான் ‘கைட்’ பண்றார்” – புண்ணியகோடி.
    “காளிசரண, நீர் பத்து வருஷத்துக்கு முந்தி செத்திருக்கலாம்.”

    அவன் முகமாற்றத்தில் காளிசரணனுக்கு சரேலென்று எல்லாம் உறைத்து விட்டது.
    “தம்பி.. ஒங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குமானா ஒங்க ஷார்ட் ஸ்டோரியை ஃபில்முக்கு ட்ரை பண்றேன். அது அற்புதமான சப்ஜெக்ட்.”

    “ஸாரி.”
    காளிசரணை பத்து வருஷத்துக்கு முன் கொண்டு போய் வைக்க ஒரு நிமிஷம் முயன்றான்.
    “ஏன்…ஒய்?”
    “எனக்கு சினி ஃபீல்ட் வேணாம். தாங்க்யூ ஃபார் யுவர் இண்ட்ரஸ்ட்”

    காளிசரணன் வெற்றிலைச் சம்புடத்தைத் திறந்து வழக்கத்தை விட கொஞ்சம் அதிகப் புகையிலையாக அள்ளினார்.
    “எங்க திஷ்யா பேசற மாதிரியே பேசறியேப்பா! வாட் ஹாப்பண்ட் டு தீஸ் யங் பீப்பிள்…?”
    சார் ஒங்ககிட்ட ஒரு நிமிஷம்!

    புண்ணியகோடி திடுக்கிட்டார்.

    “எங்கிட்டேயா?”
    “நீங்க வேணும்னா பேசிட்டு வாங்களேன். நான் வெய்ட் பண்றேன்” காளிசரண் அனுமதி வழங்கினார்.
    “இப்பவே பேசணுமா சிவா?”

    “சரி. வீட்டிலேதான் பேசுவோம். வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க?”
    “அ…அங்.. ஒரு நைன் தர்ட்டி ஆவுமில்லே சார்…”
    என்று காளிசரணனைக் கலந்தாலோசித்தார் புண்ணியகோடி.

    “ஓ…ஆய்டும்…டெஃபனிட்டா ஒன்பதரைக்கு வீட்டுக்கு வந்துடுவார். கொழந்தை கிட்டே சொல்லுங்கோ”
    பல்லைக் கடித்துக் கொண்டு சிவா வெளியே வந்தான். எதிரே தெரிந்த ஆட்டோவை நிறுத்தினான்.

    காளிசரண்… எது உங்களை சர்க்கஸ் சிங்கமாக்கியது? வாழ்க்கையா… வயிற்றுப் பிழைப்பா… வயிறு… வயிறு… அது மனிதனை… அவன் இதயத்தை… மூளையை… ஆத்மாவை இப்படி ஜீரணித்து விட முடியுமா?

    ஆட்டோ ஒர்க்ஷாப்பை அடையும்போது சிவா ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

    புண்ணியகோடி ஒன்பதரைக்கு வரவில்லை. அவுட்டோர் ஷýட்டிங் பார்க்க நாலு நாள் பெங்களூர், ஊட்டி என்று போய்விட்டார்.

    தொடரும்

    Share
  • உனதாகும்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    நதிபோல் ஓடும்வாழ்வில்
    விதியே என்று ஓடாமல்
    மதியதைத் துணைக்கொண்டு
    கதியே தன்னம்பிக்கையாய்
    ஆதிமுதல் முயற்சியுடன் முன்னேறு வெற்றியது உனதாகும்!

    என்றும் தயக்கம்
    எதிலும் தயக்கம்
    என்றில்லாமல்
    எல்லாவற்றிலும் ஆர்வமாய்
    எப்பொழுதும்
    எழுச்சியுடன்
    ஏற்றமிகு சிந்தனையுனை
    ஏற்றம்பெற வைக்கும்
    என்றென்றும் வாழ்வில்!

     

    Share
  • அவன், அது , ஆத்மா (8)

    மீ.விசுவநாதன்

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    அத்தியாயம் : எட்டு

    இவர்களிடம் அவன் என்ன கற்றான்?

    அவனுக்கு அந்த கிராமத்தில் மிகவும் பிடித்த இடங்களாக, விளையாட்டுத் தலங்களாக இருந்தது முக்கியமாக சிவன் கோவிலும், லெஷ்மீபதி கோவிலும், அதன் பிராகாரங்களும்தான். பள்ளி விடுமுறை நாட்களில் அவனையும் அவனது நண்பர்களையும் அங்கேதான் பார்க்கமுடியும்.

    aaa

    விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணிக்கு அவனும் அவனது நண்பர்களும், முக்கியமாக குட்டிசங்கர், நீலகண்டன், யக்ஞமணி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி சகிதமாக சிவன் கோவில் தோட்டத்தில் உள்ள அரிநெல்லி மரத்திற்குச் செல்வார்கள். எப்படித்தெரியுமா? ராமச்சந்திரபுரம் தெருவில் உள்ள “சச்திரத்தின்” பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறினால் சிவன் கோவில் அரிநெல்லி மரம் பக்கமாக இருக்கும்.

    “முத்தையாப்பிள்ளை”

    கோவிலில் முத்தையாப்பிள்ளை இருந்தால் பார்த்து விடுவாரே. அதனால் இந்த ஏற்பாடு. அப்படியே அந்த மரத்தில் அவர்களுக்குத் தேவையான அரிநெல்லிக் காய்களைப் பறித்து டிராயர்ப் பைகளிலே அடைத்துக் கொண்டு அந்த மரம் வழியாக மெதுவாகக் கீழே இறங்கி நெல்லிக் காய்களைக் கடித்துச் சுவைத்துக் கொண்டே கோவிலின் வடக்குப் பிராகரத்தில், கன்னடியன் கால்வாய்க்கரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மாமரத்தை நோக்கி அவர்களின் கவனம் திரும்பும். நெல்லிக் காய் சுவை என்றால், அந்தச் சிவன் கோவில் மாங்காய்கள் அமிர்தமாக இருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும் அந்த மரம். கல்லெடுத்து அந்த மரத்தில் எறிந்தால் நிச்சயம் ஓரிரு மாங்காய்கள் கீழே விழத்தான் செய்யும். அதுவும் சில சமயம் வாய்க்காலிலும் விழுந்து விடும்.

    அவனும், நண்பர்களும் விரைந்து பெண்கள் படித்துறை வழியாகச் சென்று வாய்க்கால் பாலத்தில் இறங்கி சரியாக அந்தக் காய்களை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொள்வதைப் படித்துறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் வேலைக்காரிகள்,” இருங்க இருங்க முத்தையாப்பிள்ளை வரட்டும் சொல்லிக் கொடுக்கறோம்” என்று கத்துவார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள். காரணம் முத்தையாப்பிள்ளை அநேக மாக அந்த நேரத்தில் கிராமத்தில் வீடுகளுக்கு விறகு வெட்டச் சென்றிருப்பார். அதனால்தானே அவர்களுக்கு இந்தக் கொண்டாட்டம். ஆனால் மரத்தில் எத்தனை காய்கள் இருக்கிறது, கோவில் கதவுகளும், பெண்கள் படித்துறைக் கதவும் தான் பூட்டியபடி இருக்கிறதா என்றும் முத்தையாப்பிள்ளை திரும்பி வந்ததும் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டு விடுவார்.

    அவனுடைய வீட்டிற்கும் முத்தையாப்பிள்ளைதான் விறகு வெட்டிக் கொடுப்பார். அப்படி ஒருநாள் அவர் விறகு வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு அம்மா ஒரு சொம்பில் நீர்மோரும், வெல்லமும் அவனிடம் தந்து முத்தையாப்பிள்ளையிடம் தரச் சொன்னாள். அவரும் தன் உடம்பு வியர்வையைத் துடைத்துக்கொண்டே அதைக் குடிக்கத் துவங்கினார். “முத்தையாப் பிள்ளை …மோருக்கு உப்பு வேணுமா…” என்று அம்மா கேட்டாள். ” வேண்டாம் தாயி…உப்புப் போட்டுக் குடிச்ச வீட்டுக்குத் துரோகம் செய்யக் கூடாதுல்ல …நம்ம வீட்டுப் புள்ளைங்க ஏதாவது தப்புத் தண்டாப் பண்ணினா என்னால சத்தம் போட முடியாது.. அதனால நான் கிராமத்துல வேலைக்குப் போற வீட்ல உப்பு சேக்கரதில்லை…” என்று சொல்லிக் கொண்டே அந்த மோரைக் குடித்து, அந்த வெல்லத்தையும் ஒரு வாய் போட்டுக் கொண்டார். பக்கத்தில் நின்றிருந்த அவன், “முத்தையாப்பிள்ளை எனக்குக் கொஞ்சம் வெல்லம் தாங்கோளேன் ” என்றான். அதைக் கேட்ட அவனுக்கு அம்மா,”அவர்ட்டப் போய்த்தான் வாங்கித்தின்னணுமா….” என்றுஅதட்டினாள். அதுகேட்ட முத்தையாப்பிள்ளை,”அம்மா…சாமி நல்லவருதான்…ஆனா அவரு கிரகமுல்லா இப்படிப் படுத்துது…கோவில்ல வந்து மாங்காய், நெல்லிக்காய் எல்லாம் பறிக்கறது எனக்குத் தெரியாதுன்னா நெனைக்கீறு..ஒரு நா ஒங்க எல்லாத்தையும் அந்த மரத்தோட வெச்சுக் கட்டிபுடறேன் பாத்துக்கிட்டேரும்….” என்று கர்ஜனை செய்தார். “சொல்லாதேயும் கட்டிவெச்சு உரியும்” என்றாள் அவனுக்கு அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவன் போல அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    முத்தையாப்பிள்ளைதான் இரவில் கோவிலுக்குக் காவல். கிராமத்தை விட்டு வெளியில் வாய்க்கால்கரை ஓரமாகக் கோவில் இருப்பதால் இரவில் ஒன்பதுமணிக்குமேல் யாரும் தனியாக அந்தப் பக்கம் செல்ல மாட்டார்கள். இப்பொழுதைப் போல முன்பெல்லாம் அந்த வழிக்கு விளக்குகள் கிடையாது. ஏதோ ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். முத்தையாப்பிள்ளைக்கு நல்ல தைரியம் உண்டு. ஒருநாள் யாரோ ஒருவன் இரவில் மாங்காய்ளைத் திருட வந்த பொழுது தனி ஆளாக அவனைப் பிடித்து அடித்த அடியில் அவன் தன் வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூடத் தெரியாமல் ஓடிவிட்டான். அந்த வேஷ்டியை அவர் அதே மாமரத்தில் தொங்க விட்டு, கோவில் வாசலில் அவரிடம் கேட்போருக்கு,”இனிமேல் எவனாவது சிவன்கோவில் சொத்தைத் திருடினால் அவனுக்கும் இதே கதிதான்…” என்று உரக்கச் சொல்லும் போது, அவனும் அவனது நண்பர்களும் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தனர். உள்ளுக்குள் அவனுக்கு அது மந்திரம் போலத்தான் பதிந்தது.

    வேதம் ஓதுவதிலும், ஒழுக்க நெறியிலும் எப்படி ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள் வாழ்ந்தாரோ அதேபோலத்தான் “முத்தையாப்பிள்ளையும்” நாணயமாக சிவன்கோவிலுக்குத் தொண்டு செய்தார். அவர்கள் இல்லாத சிவன் கோவிலை அவனால் இன்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் எப்பொழுதெல்லாம் அந்தக் கோவிலுக்குச் செல்கிறானோ அப்பொழுதெல்லாம் அந்த சிவ ரூபமாகவே அவர்களை அவன் மனதாலே வணங்கி வருகிறான்.

    “ஈஸ்வர கிருஷ்ண ஐயர்”

    ஆதிவராகப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் மிக விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளில் முதல் சனிக்கிழமை R. s. A. சங்கர ஐயர் (ஒருவருடம்), காசி ஐயர் (மறுவருடம்), சஹஸ்ரநாம ஐயர் (மறுவருடம்) என்றும், இரண்டாவது சனிக்கிழமை Royal Enfield K. R. சுந்தரம் ஐயர் (முதல் வருடம்), Easun Eng. ஈஸ்வர கிருஷ்ண ஐயர் (இரண்டாவது வருடம்), மூன்றாவது சனிக்கிழமை இந்தியா சிமிண்ட்ஸ் S .S .N. சங்கரலிங்கம் ஐயர் குடும்பத்தினர், நான்காவது சனிக்கிழமை நடேச ஐயர் குடும்பத்தினரும் கட்டளைக் காரர்களாக இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஐந்தாவது சனிக்கிழமை வந்தால் முன்பு பட்டாம்பிச் சங்கர ஐயர் சில வருடங்களும், அதன் பிறகு ஜவுளிக்கடை இசக்கியாபிள்ளையும், அவருக்குப் பின்னல் காயங்குளம் அத்தை (சங்கரநாராயண ஐயர்) குடும்பத்தினரும் கட்டளைக்காரர்களாக இருந்தனர். சமீபகாலத்தில் காருகுறிச்சி ஆடிட்டர் ரெங்கசாமி ஐயங்கார் குடும்பத்தினர் கட்டளைக் காரராக இருந்துவருகின்றனர்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளின் வண்டிச் சப்பரம் தள்ளிக்கொண்டு செல்வதில் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவனுடைய அந்த ஆசைக்குப் பெற்றோர் தடை சொன்னதே கிடையாது. முந்தியதினம் வெள்ளிகிழமை மூலஸ்தான ஆதிவராகப் பெருமாளுக்கு மாக்காப்பு அணிவிப்பார்கள். சனிக்கிழமை அன்று காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிய மதியம் ஒரு மணி ஆகிவிடும். அதன் பின்பு பஞ்சாமிர்தமும், சக்கரைப்பொங்கலும் பிரசாதமாகத் தருவார்கள். அவனுக்கு ஈஸ்வர ஐயர் வீட்டுக் கட்டளை என்றால் தனி குஷிதான். காரணம் அவரது கம்பீரமான குரலும், தோற்றமும், கனிவான குணமும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவரைப் பக்கத்தில் நின்று பல முறை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறான்.

    “ஈஸ்வர ஐயர்”தான் தன் கைகளாலேயே பக்தர்களுக்குப் பிரசாதம் தருவார். அதுவும் சென்னையில் இருந்து வரவழைக்கப் பட்ட அழகிய ஆழமான தொன்னைகளில் நிறையத் தருவார். வரிசையில் ஒழுங்காக வரவேண்டும் என்று விரும்புவார். ஒரு முறை அவனுக்கு நண்பன் கபாலி ஒரு கையில் வாங்கியதை மறைத்துக் கொண்டு, மறுகையை நீட்டினான். உடனே அவனை அப்படியே தூக்கி பக்கத்தில் நிறுத்திவிட்டார். எல்லோருக்கும் கொடுத்தபிறகு மீண்டும் அவனுக்குக் கொடுத்து விட்டு, “ஒரு முறை வாங்கிவிட்டால் மறுமுறை கேட்காதே..எல்லோருக்கும் கொடுத்துவிட்டு இருந்தால் உனக்கு இரண்டாவது முறையும் தருவார்கள்…சரியா..” என்று கபாலிக்கு மீண்டும் தந்தார்.

    aaa1

    இரவில் கருடசேவை. சுவாமி புறப்பாடு ஒன்பது மணிக்குத் துவங்கும். தெற்கு மாடத் தெரு, மேலமாடத் தெரு, வடக்கு மாடத் தெரு, சன்னதித் தெரு வழியாக மகாமேரு வந்து பெரிய அழகான வண்டிச் சப்பரத்தில் சுவாமியை எழச் செய்து ரதவீதி சுற்றி வந்து மீண்டும் கோவிலுக்குள் சுவாமி வரும் பொழுது மறுநாள் காலை நான்கு மணி ஆகிவிடும். கூடவே சென்று வர ஆனந்தமாக இருக்கும்.

    aaa2அப்படி ஒருமுறை ஈஸ்வர ஐயர் சுவாமிகூடவே மிகவும் ரசித்துக் கொண்டும், மாட வீதிகளில் சுவாமி வரும் பொழுது ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பெரியவர்களை கனிவோடு விசாரித்துக் கொண்டு அவர்களுக்குத் தன் கைகளாலேயே நல்ல வாசனையுள்ள சந்தனத்தை அவர்களின் கைகளிலும், மார்பினிலும் தடவி விடுவார். கம்பீரமாக வாய்விட்டுச் சிரித்து மகிழ்வார். அது அப்போது சுவாமிக்குக் காட்டப்படும் மத்தாப்பூ போல அழகாக இருக்கும். அவரது கட்டளை என்றால் பன்னிரெண்டு பெரிய தீவட்டிகளை, சுவாமிக்கு முன்னால் வரிசைக்கு ஆறுபேர்களாக சுமந்து கொண்டு வருவார்கள். பல நேரங்களில் ஈஸ்வர ஐயேரே தன் கைகளால் அந்தத் தீவட்டிக்கு எண்ணை விடுவார்.

    அப்போது சுவாமி சன்னதித் தெருவில் வந்து கொண்டிருந்தார். திடீரென ஈஸ்வர ஐயர், தீவட்டி பிடித்துக் கொண்டிருந்த ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு,” ஏய்…நீ மாடசாமி தானே…நான் ஒங்கூடப் படிச்சேண்டா…ஞாபகம் இருக்கா…நீ என்ன இப்ப “டேய்..ஈஸ்வரா”ன்னு கூப்புடு..” என்று அவரின் கைகளிலும் மார்பிலும் சந்தனத்தைத் தடவினார். தீவைட்டி பிடித்துக் கொண்டிருந்தவர் கூச்சத்தில் நெளிந்தார். ஈஸ்வர ஐயர் அவரை விடுவதாக இல்லை. அவரை அப்படியே கட்டிக் கொண்டார். அந்த மாடசாமி நண்பருக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. இதை எல்லாம் பக்கத்தில் இருந்து அவன் கவனித்து வந்ததால் இன்றும் ஈஸ்வர ஐயரின் எளிமையையும், தான் பிறந்த கல்லிடைக்குறிச்சி ஊரின் மீதும், வாழும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பை எண்ணியும் பெருமிதம் கொள்வான்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஏழில், தேசியத் தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் சென்னைக்கு வந்திருந்த பொழுதில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தேசிகாச்சாரி சாலையில் உள்ள ஈஸ்வர ஐயர் வீட்டில்தான் தங்கி இருந்தார்.

    தூர்தர்சன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ,”நீங்கள் பெரிய தொழில் அதிபர். உலகமெல்லாம் சுற்றி இருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த ஊர் எது” என்ற கேள்விக்கு,” பிறந்த கல்லிடைக்குறிச்சிதான் எனக்குப் பிடித்த ஊர். ஆத்தங்கரைக்குக் குளிக்கப் போகும் பொழுது வயல் காட்டின் வரப்புகளில், என் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து செல்வேன். அந்த சுகம் எனக்கு எந்த ஊரில் கிடைக்கும்…” என்று பளிச்செனச் சொன்னார் ஈஸ்வர ஐயர். அவர் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர். அவரது ஆளுமையை அவன் மிகவும் நேசித்தான். இன்றும் நேசித்துக் கொண்டிருக்கிறான்.

    (16.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • ஏன் இந்தக் கவலை?

    -துஷ்யந்தி, இலங்கை

    மருத்துவத்தில் உள்வாங்கப்படாத
    மனிதனால் அடையாளம்
    காணமுடியாத அனைவரிலும்
    இருக்கக்கூடிய மிகப்பெரிய
    ஆட்கொல்லி நோய்…!

    இல்லாதது ஒன்றையே
    தினமும் சிந்திக்கவைத்து,
    இருக்குமனைத்தையும் மறைத்து,
    ஏதோ ஒன்றைத் தினம் தேடும்
    நாடகமேடையின் திரை…!

    ரசனைமிக்க வாழ்வின்
    ரகசியங்கள் பலதையும்
    ரசிக்கமுடியாதாக்கி,
    நம்மைச் சூழ்ந்த நல்லோரை
    நாடவிடாமலாக்கும் – ஒரு
    வாழ்வின் தடைக்கல்…!

    முயற்சிகளுக்கு எதிரியாய்
    முற்றுப்புள்ளி வைத்து,
    முன்னேற்றத்தைத் தடையாக்கி
    மனதிலே சுமையாகும்
    முகத்திலே மூடிக்கொள்ளும்
    புன்னகையை மலரவிடாதாக்கும்
    மாயையான முகமூடி…!

    ஆன்மீக வழிகாட்டலும்
    அன்பான நட்புக்களும்
    அழகான சூழலும் நாம்
    என்றும் அமைத்துக்கொண்டால்,
    கவலையெனும் நோய்
    வாழ்வில் ஓர் பனிக்கட்டியே!!

     

     

    Share
  • சார்லி சாப்ளின்

    -சுரேஜமீ

    சார்ந்தோரின் மகிழ்வுக்கு
    சாப்ளின் என்று,
    சொன்னால் போதும்
    சலிப்பே பறந்துவிடும்!                                  chaplin

    நவரசமும் இருந்தாலும்
    நகைச்சுவைதான் பிரதானம்
    நானிலத்தில் எவரும்
    நாளெல்லாம் மகிழ!

    வாழ்க்கை வாட்டத்தில்
    வீழ்வோர் பலரிருக்க
    வாழ்வே சாதனையாய்
    வாழ்ந்தவர்தான் சாப்ளின்!

    எத்தனையோ
    சொல்வதற்கு
    ஏறிவரும்
    சிந்தையிலே….

    ஐந்தில் ஆரம்பம்
    அகிலம் ஓரங்கம்
    காண்போர் களிப்பதற்கு
    குரலெனும் மொழியெதற்கு?

    மூன்றே வருடத்தில்
    மூவிரண்டு நூறிலிருந்து
    மில்லியனும் கைக்குவர
    மிடுக்கான உழைப்புமது!

    பாட்டாளி வியர்வையையும்
    பாதகர்கள் போக்கினையும்
    பாங்குடனே சித்தரித்துப்
    பார்ப்பதற்குத் தந்தானே!

    அமெரிக்கா துரத்தியது
    ஆஸ்காரும் அணைத்ததுவே!
    ஆங்கிவன் இல்லையெனில்
    ஆறுதலும் யாருளரோ?

    நகைச்சுவையும்
    நாயகனும்
    நாடு தாண்டி
    நமை நாட

    கமலின் வடிவத்தில்
    கண்டோமே
    சாப்ளினை
    சிகரம் தந்த புன்னகையில்!

    இந்நாளில் அவன்
    பிறந்தான்!
    வரும் நாளும்
    அவன் நினைவு!
    ஆண்டொன்று போனாலும்
    ஆசையுடன் காத்திருப்போம்!!

     

    Share
  • பஜ கோவிந்தம்….

    இத்துடன் கிரி டிரேடிங் ரங்கனாதன் பாடிய , அடியேன் எழுதிய லிங்காஷ்டகத்தையும், பஜகோவிந்தத்தையும், குரு பஞ்சகத்தையும் இணைத்துள்ளேன்….லிங்காஷ்டகம் சுப்பு சாமிக்காக எழுதிக் கொண்டே வரைந்த பெரியவா ஓவியமும் இணைத்துள்ளேன்…கிரேசி மோகன்….

    பஜ கோவிந்தம்….
    —————————–

    keshav1
    வேறு
    ——-

    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….?….(1)

    வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
    வேட்கை அதற்கு மாறாக
    ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
    காசுபணம் கொள் சீராக….(2)

    காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
    மாமிசம் ரத்தம் இளக்காரம்
    நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
    தூமணி மாட விளக்காக….(3)

    தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
    நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
    பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
    சாமரம் வீசும் சண்ட மாருதம்….(4)

    கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
    வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
    மாட்டிய மேனி மண்விழத் தாலி
    பூட்டிய மனையாள் பயமுறுவள்….(5)

    பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
    கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
    வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
    உள்ளிறை தொட்டதில்
    எவர்கிங்கு தேட்டம்….(6)

    சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
    மாதரசி மகன் யாரென்று
    பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
    ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(7)

    கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
    பற்றது போக பரம வைராக்யம்
    உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
    பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(8)

    தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
    காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
    பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
    ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(9)

    ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
    தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
    நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
    தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(10)

    திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
    கடல்போல் கூட்டம் அலைமோதும்
    முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
    அடடா கூறிட ஆளேது….(11)

    ——————————————————————————————————————————————————————————————-

    keshav

    சங்கர லிங்காஷ்டகம்
    —————————-

    ”பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்”…. மெட்டில்….
    —————————————————————-

    சத்சிவ சித் தானந்தன லிங்கம்
    சகுண உபாசக நிர்குண லிங்கம்
    புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
    சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

    தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
    தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
    சின்மயமான சிதம்பர லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

    ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
    அண்ட சராசர மாயா லிங்கம்
    ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

    முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
    மன்மத தகன மகாதவ லிங்கம்
    அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

    அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
    அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
    நயன நுதலிடை நீறணி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

    ”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
    குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
    அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

    ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
    சத்திய சிவமய சுந்தர லிங்கம்
    உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

    இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
    இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
    பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

    பலஸ்ருதி
    ————-
    ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
    ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
    தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
    தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….
    ——————————————————————————————————————————————————————————————-

    குரு பஞ்சகம்
    ————————–

    ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
    ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

    திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
    தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

    மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
    உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

    அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
    மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

    ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
    போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)
    ————————————————————————————————————————————————————-

    Share
  • சிவபிரதோஷம்

     

    மீ.விசுவநாதன்

    148514_454117937957279_1723256555_n
    ஆயிரம்மாய் நாமங்கள் சொல்லி
    வாய்மணக்கும் ஆன்மீக மல்லி !
    தூய்மையிலா உள்ளுக்குள்
    நாய்குரைக்கும் “லொள்ளுக்குள்”
    சாய்ந்துவிடா தீயகுணம் வில்லி ! (1)

    உருண்டுவரும் நாள்போயே போகும்
    இருண்டமனம் உந்தாளை ஏகும்
    இனியவனே என்விழியே
    இனியிவனுள் நீநுழையே
    மருண்டமனம் ஆதிசிவ மாகும் ! (2)

    சுமையெனவே அகங்காரம் ஏற்றி
    சுவையெனவே எண்ணவைத்தாய் மாற்றி !
    நவநவமாம் சிவஒளியே !
    திவலையிவன் ஒர்துளியே !
    இவையெல்லாம் உன்னருளே போற்றி ! (3)

    (குறும்பா:( காய், காய், மா,
    காய், காய், மா,
    காய், காய்,
    காய், காய்
    காய், காய், மா )

    (16.04.2015)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    keshav

    ”தேவாதி  தேவனின் மோவாயைப் பால்பசு

     ஆவாய்  வருட, அடைக்கல -நாவாய்(கப்பல்)

     முராரிஅதை  தூக்கி முகத்தை  அளிப்பு:

     கராரவிந் தம்கேசவ் கை’’….கிரேசி மோகன்….
    Share
  • சநாதனத்தில் ஒரு நன்மை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.  நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஒரு பெண், விமானத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நடைபாதைக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார்.  அவர் சீட்டில் நன்றாக செட்டில் ஆகி இருந்த வேளையில் இன்னொரு பயணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னலுக்கு அருகே இருந்த சீட்டிற்கு வந்தார்.  தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கப் போவது ஒரு பெண் என்று தெரிந்ததும் அந்தப் பெண் பக்கத்தில் தன்னால் உட்கார முடியாது என்றும் தன்னுடைய மதம் மனைவியல்லாத வெறொரு பெண்ணின் அருகில் உட்காருவதைத் தடை செய்கிறது என்றும் அதனால் தனக்கு இன்னொரு இடம் ஒதுக்கித் தருமாறும் விமானப் பணிப்பெண்ணைக் கேட்டாராம்.  அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் முதலில் எரிச்சல் அடைந்தாலும் எதற்கு வம்பு என்று எண்ணி வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு போகச் சம்மதித்திருக்கிறார்.

    இதே மாதிரி இன்னொரு தடவை நியூயார்க் வழியாக லாஸ் வேகஸிலிருந்து இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது ஒரு கணவனும் மனைவியும் பயணித்தார்கள்.  கணவனுக்கு நடைபாதைக்கு அருகில் இருந்த இருக்கையும் மனைவிக்கு நடு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தன.  அதே வரிசையில் ஜன்னலுக்குப் பக்கத்து இருக்கை ஒரு யூதருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அவர் அவருக்கு அருகில் உட்காரப் போகும் தம்பதியை கணவனை நடு இருக்கைக்கும் மனைவியை நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கைக்கும் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டாராம்.  ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாராம்.

    Reb_Moshe_Feinsteinஅமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் விமானப் பயணங்களின்போது இம்மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கின்றனவாம்.  பெண்களின் அருகில் உட்கார மறுப்பவர்கள் சநாதன யூதர்கள்.  இவர்கள் தங்கள் மதம் சொல்லும் எந்த போதனையையும் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பவர்கள்.  இவர்களால் அடிக்கடி இந்தப் பயணங்களின்போது சில சச்சரவுகள், காலதாமதம் ஏற்படுகிறதாம்.  சநாதன யூதர்களின் மதத்தலைவர் ஒருவர் மீடியாக்களில் பெரிதுபடுத்தப்படும் அளவிற்கு இது இல்லையென்று கூறியிருக்கிறார்.  பல சநாதன யூதர்கள் மதத்தலைவர் மோஷே ஃபெயின்ஸ்டைன் கூறியிருப்பதைப் பின்பற்றுகிறார்களாம்.  சிறிது நேர பயணத்தின்போது யூத ஆண்கள் பெண்களின் அருகில் அமர்ந்து பயணிப்பது தவறு இல்லையென்றும் ஆனால் தவறுதலாகப் பெண்ணைத் தொடும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால் அதில் இன்பம் காண்பது தவறு என்று சொல்லியிருக்கிறார்.  யாரோ ஒரு பெண் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்கிறார் ஒரு பயணி.

    சநாதன யூதர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறதாம்.  அவர்களில் நிறையப் பேர் விமானத்தில் பயணம் செய்வதால் விமான கம்பெனிகளுக்கு அவர்களால் நிறைய வருமானம் வருவதால் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தங்கள் கடமையாகிறது என்கின்றன விமானக் கம்பெனிகள்.

    இப்படி சநாதன யூதர்கள் மனைவியரல்லாத பெண்களின் அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை என்று அறிந்தபோது நான் பல தசாப்தங்களுக்கு முன் மைசூரிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பேருந்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஞாபகத்திர்கு வருகின்றன.  அப்போது தமிழ்நாட்டு ஆண்கள் எல்லாம் சநாதன யூதர்களைப் போல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் மைசூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் கிடையாது.  கோயம்புத்தூர் போய்தான் மதுரைக்குப் போக வேண்டும்.  அப்போது மைசூர்-கோயம்புத்துர் பஸ்கள் சொகுசு பஸ்கள் இல்லை.  அதனால் ஒரு பக்கம் இரண்டு இருக்கைகளும் இன்னொரு பக்கம் மூன்று இருக்கைகளும் அவற்றில் உண்டு.  நான் என் மகள்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது அதில் பயணம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.  என் மகள்கள் அரை டிக்கெட் எடுக்கும் வயதாக இருக்கும்போதே அவர்கள் இருவருக்கும் முழு டிக்கெட் வாங்குவேன்.  இதற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று வேறு ஆண் பயணிகள் எங்கள் சீட்டில் உட்கார்ந்து இடைஞ்சல் கொடுக்கக் கூடாது என்பது.  இரண்டாவது மூன்று பேர் சீட்டில் இடம் கொஞ்சம் தாராளமாக இருக்கும்.  குழந்தைகளுக்கும் முழு டிக்கெட் வாங்கினால் அந்த சீட் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம்.  அப்படிப் பயணம் செய்யும்போது சில கிராமத்துப் பெண்கள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பிரயாணம் செய்யக் கூடாதா என்று சண்டைக்கு வருவார்கள்.  நீண்ட தூரப் பயணம் எவ்வளவு களைப்படையச் செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியாது.  அவர்கள் இடையில் ஏறி இடையில் இறங்கிவிடுவார்கள்.  மேலும் குழந்தைகளுக்கு முழு டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று அவர்களிடம் விளக்க முடியாது.  ஏதோ நான் எல்லா சீட்டுகளையும் அடைத்துக்கொண்டு அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதுபோல் குறை சொல்லிக்கொண்டே வருவார்கள்.

    பின்னால் மதுரைக்கு மைசூரிலிருந்து நேரடி பஸ் விட ஆரம்பித்த பிறகு இன்னொரு விதமான கஷ்டம்.  பிள்ளைகள் இருவரும் பெரியவர்களான பிறகு தனியாகப் பயணம் செய்யும் தேவை ஏற்பட்டது.  இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சீட்டுகள் இருக்கும்.  ஆனால் பெண்களுக்கென்று தனி சீட்டுகள் ஒதுக்கி இருக்க மாட்டார்கள்.  எங்கு உட்கார்ந்தாலும் இன்னொருவர் அருகில்தான் உட்கார வேண்டும்.  அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை.  ஆனால் ஆண் என்றால் பிரச்சினைதான்.  பத்து மணி நேர இரவுப் பயணத்தை எப்படித் தூங்கிவழிந்துகொண்டு ஒரு ஆணின் பக்கத்தில் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே தூக்கத்தைக் கெடுத்துவிடும்.  நடத்துனரிடம் சொல்லி ஒரு பெண்ணை அருகில் உட்கார வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு எளிதல்ல.  எல்லா நடத்துனர்களும் உதவி செய்யும் மனப்பாங்கில் இருக்க மாட்டார்கள்.  அப்படியே உதவுபவர்களாக இருந்தாலும் பயணிகள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.  அதிலும் குறிப்பாகக் கணவனோடு பயணம் செய்பவர்கள் கணவனை விட்டு வேறு இடத்திற்குப் போக விரும்ப மாட்டர்கள்.  இதற்கு மேல் முன் சீட்டிலும் பின் சீட்டிலும் இருக்கும் ஆண் பயணிகள் செய்யும் சில்மிஷங்கள் வேறு.

    ஒரு முறை ஒரு பயணத்தின்போது ஒரு ஆணின் பக்கத்தில்தான் எனக்கு இடம் கிடைத்தது.  அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் தன் ஏழெட்டு வயது மகளோடு எனக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தார்.  நான் நடத்துனரிடம் ஒரு பெண் பயணியை அருகில் உட்காரவைக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டதையும் அவர் எனக்கு உதவுவதற்கு சிரத்தை காட்டாததையும் பார்த்துவிட்டுத் தன் மகளை என் அருகில் உட்காரும்படி கூறினார்.  அந்தக் குழந்தைக்குத் தந்தையை விட்டுத் தனியாக உட்கார மனமில்லை.  அப்படியும் அவர் வலுக்கட்டாயமாகக் குழந்தையை என் அருகில் உட்காரவைத்தார்.  அப்படி அவர் செய்தபோது அழ ஆரம்பித்த அந்தக் குழந்தை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அழுது, அழுது அசந்துபோய் தூங்கிவிட்டது.  நான்      அந்தக் குழந்தைக்கு என்னென்னவோ விளையாட்டுக் காட்டிப் பார்த்தேன்.  ஒன்றுக்கும் அந்தக் குழந்தை மசியவில்லை.  எனக்கே அந்தக் குழந்தையை அதன் தந்தையிடம் அனுப்பிவிடுவோமா என்றிருந்தது.  குழந்தை தூங்க ஆரம்பித்ததும் இனித் தேவையில்லை என்று எண்ணி நானும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தேன்.  அந்தத் தந்தையை இன்றளவும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

    இது பற்றிப் போக்குவரத்து அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன்.  ‘பக்கத்தில் பயணிக்கப் பெண் பயணி இல்லையென்றால் நான் இரண்டு டிக்கெட்கள் வேண்டுமானாலும் வாங்குகிறேன்’ என்று அவர்களிடம் சொல்லிப் பார்த்தேன்.  அதற்கும் அவர்கள் இணங்கவில்லை.  நான் கூறியவற்றிற்குப் பரிகாரமும் தேடவில்லை.  இந்தியாவில் தனியாக, அதுவும் இரவு நேரப் பேருந்துகளில், பயணம் செய்யும் பெண்கள் அரிது என்பதால் போலும்.

    இந்தச் சமயத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.  எங்கள் பாட்டி இறந்ததற்கு துக்கம் கேட்கவந்த உறவினர்களில் எங்கள் பாட்டியின் சகோதரரும், அவருடைய மனைவியும் இன்னும் இரு சகோதரர்களின் மனைவிமார்கள் இருவரும் அடங்குவர்.  இவர்கள் நால்வரும் காரில் வந்திருந்தனர்.  போகும்போது அதே ஊரைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் இன்னொருவரையும் (அந்தப் பெண் வயதான விதவை; வரும்போது பஸ்ஸில் வந்திருந்தார்.)  தங்களோடு அழைத்துச் சென்றனர்.  பெண்ணென்றாலும் அவரை என் பாட்டியின் தம்பியின் பக்கத்தில் முன் சீட்டில் உட்காரவைத்தனர்.  இவர் மேலே சொன்ன சநாதன யூதர் போல் நடந்திருந்தால் மனைவியைத் தன் பக்கத்தில் உட்காரும்படி வற்புறுத்தியிருப்பார்.  இந்தியாவிலும் பிற பெண்களை ஆண்கள் பக்கத்தில் உட்காரவைப்பதில்லை.  ஆயினும் அன்று ஏனோ அவருடைய மனைவியும் மற்றப் பெண்களும் அப்படி நடந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.  மனைவி வசதியாகப் பின் சீட்டில் வரட்டும் என்று நினைத்தும் இருக்கலாம். . முன் இருக்கைகளைவிட பின் இருக்கைகள் விபத்து நடந்தால் கொஞ்சம் பாதுகாப்பானவை என்றும் நினைத்திருக்கலாமோ என்னவோ.  முன்னால் உட்கார்ந்திருந்த என் பாட்டியின் தம்பி அந்தப் பெண்ணிடமிருந்து கூடியவரை தள்ளி உட்கார வேண்டும் என்று நினைத்து ஓட்டுனருக்கு மிக அருகில் உட்கார்ந்துகொண்டதாகக் கூறினார்கள்.  இதனால் ஓட்டுனருக்கு இடம் போதாமல் போய் அவர் ஸ்டியரிங்கைச் சரியாகக் கையாளாமல் எங்கள் வீட்டை விட்டுச் சென்ற பத்து மைல்களுக்குள்ளேயே ஒரு சிறு பாலத்தில் காரை மோதி அந்தக் காரில் பயணித்த மூன்று பேர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு வெகு நாள் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.  அப்படி அடி வாங்கியவர்களுள் அந்த வயதான விதவைப் பெண்ணும் சேர்த்தி.

    இந்தியாவில் எல்லா ஆண்களும் சநாதன யூதர்கள் போல் பெண்கள் பக்கத்தில் பயணம் செய்வதில்லை என்று அடம் பிடித்திருந்தால் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எந்தப் பெண்ணிற்கும் ஏற்பட்டிருக்காது.

    அது போகட்டும்.  இன்னொரு சந்தேகம்.  பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய விரும்பாத சநாதன யூதர்கள் எல்லோரும் ஏகபத்தினி விரதர்களா?  யூதர்களில் இத்தனை ராமர்கள் இருக்கிறார்களா?   சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு யூதமதத் தலைவர் தான் காதலித்த இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டி தன் மனைவியையே அடியாட்கள் வைத்துக் கொலைசெய்தது ஞாபகத்திற்கு வருகிறது.  மனைவி இருக்கும்போதுதான் மற்றப் பெண் பக்கத்தில் உட்காரக் கூடாது.  மனைவியைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது தவறில்லையோ என்னவோ!

    Share
  • தமிழ்நாடு : தமிழ் வளர்ச்சித் துறை கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழா !

    சங்கர இராமசாமி

    சென்னைப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடக் கூட்டஅரங்கம் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு மட்டுமல்ல; நிற்பதற்குக்கூட இடமில்லை. 1330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணாக்கர், பேச்சுப்போட்டி – கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி – கல்லூரி மாணாக்கர் ( மாணக்கர் என்பது இரு பாலரையும் குறிக்கும் பொதுச்சொல் ) , சிறந்த நூல்களை எழுதியமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள், அந்தப் படைப்பாளிகளின் எழுத்துக்களைப் பிரசுரித்த பதிப்பகங்கள், அவர்களது பெற்றோர் சுற்றமும் நட்புமென என தமிழகம் முழுவதிலிருந்தும் தமிழினப்பற்றாளர்கள் வருகைதந்திருந்தனர். விடுமுறைநாளில் வருகைதந்த பெருந்திரள் கூட்டம் கண்டு எனதுளம் களிபேருவகை எய்தியது. ]

    “இதுபோன்றதொரு கூட்டம் நடக்கிறது; நமக்குத் தெரிந்தோர் பலர் பரிசுகளைப் பெறுகின்றனர்; அவசியம் பங்கேற்கவேண்டும்;” எனவுரைத்த பன்முகத் திறனாளி வையவன் அவர்களுக்கு அகத்துள் பன்முறையும், கைப்பேசி வாயிலாக ஒரே ஒரு முறையும் நன்றி கூறினேன்.

    தமிழக அரசின் மேனாள் கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கவிதாசன், சினேகன், ரேகா, பா.கிருஷ்ணன், தங்க.காமராசு, மணிகண்டன், ஆகிய கவிஞர்கள் பங்கேற்றனர். ”தாயே ! தமிழே!” என்பது கவிஞர்களுக்குத் தரப்பட்ட தலைப்பு. கவிபாடியோர், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் அவரவர் திறமை பளிச்சிட்டது.

    ஆனால், பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலி போதுமானதாக இல்லை. இது வருத்தம் தரும் தகவல். அந்நிய நாடுகளிலெல்லாம் ஒவ்வொருவரது நிகழ்ச்சிக்குப் பின்னும் அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்புவர். கரவொலி தொடரும் நேரம் நிகழ்ச்சியின் சிறப்பிற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்லும். அப்படியொரு பழக்கம் நம்மிடையே இல்லை. நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப கைதட்டிப் பாராட்டக் கூட முடியாதோரின் தமிழினச் சமூகப் பற்றினை எப்படி நொந்து கொள்வது ?

    பரிசளிப்பு விழாவிற்கு வரவேற்புரை வழங்கியவர் , அரசுச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூ.இராசாராம், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். அமைச்சர் ஆற்றியவுரை தெளிந்த நீரோடைபோன்று ஆரவாரமற்ற தன்மையும், இனிமையும் கொண்டிருந்தது. அவர் மைக் கிடைத்ததென்று தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசவில்லை. இம்மேடைக்கு எது பொருத்தமோ அவற்றை மட்டுமே பேசினார். என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்து எழுதி எடுத்துவந்து பார்த்து வாசித்தமை மிகச் சிறப்பாக அமைந்தது.

    சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் அமைந்துள்ளது, சோவியத் தூதரகம். அங்கேயும் ஓர் சிறப்பான அரங்கம் உண்டு. கூட்டங்களும் அடிக்கடி நடக்கும். முன்னறிவிப்புடன் முயன்றால் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகவே ஆங்கே நடத்திக்கொள்ளலாம். சோவியத் நண்பர்கள் பங்கேற்கும் விழாக்களில் எல்லாம் இருவராகவே மேடைக்கு வருவர். பேச்சுக்கள் முன்னதாகவே செவ்வனே தயாரிக்கப் பட்டிருக்கும். ஒருவர் தங்கள் தாய்மொழியான ருஷ்யனில் எழுதி எடுத்து வந்ததைப் பார்த்துப் படிப்பார். உரிய இடைவெளியுடன் பிறிதொருவர் அதன் ஆங்கில மொழியாக்கத்தைப் படிப்பார். அவர்களது தாய்நாட்டுப் பற்று போற்றத்தக்கது. அதே போன்று பொருளார்ந்த கருத்துச் செறிவுமிகு உரையினைத் தயாரித்து வந்து நல்கிய அமைச்சரை எத்தனைமுறை பாராட்டினாலும் அது தகுதியுடைத்ததே ஆகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் / இலக்கியவாதிகள் அனைவரும் இம்முறையைப் பின்பற்றினால் எல்லோருக்கும் காலமும் நேரமும் மிச்சமாகும். மேடையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இடையிடையே கொச்சையான / அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் கலகலப்பூட்டுவதே நடைமுறையாகிக் கேலிக்கூத்தாகி வருகின்றது மேடைப் பிரசங்கம் !

    இந்நிலையில் அமைச்சரின் பேச்சு பெரிதும் கவர்ந்தது. பாராட்டுவதுதானே சரியான வழி. சொல்வதைச் செயலிலும் காட்டும் வாய்ப்பும் எதிர்பாராமல் கிடைத்தது. “பேச்சின் சிறப்பை எடுத்துரைத்தபின், ஒரு கோரிக்கையையும் முன்வைக்கும் வாய்ப்புக் கிட்டியது..

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மட்டுமன்றி, பிறமொழியினருக்கும் 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு 30 நாட்களில் தமிழைப் பேச வைப்பதோடு மட்டுமன்றி, செய்தித் தாள்கள் படிக்குமளவிற்குக் கற்றுத்தர இயலும் என்ற பொள்ளாச்சி நசனின் ( thamizam.net – காண்க ) கருத்தையும் எடுத்துரைத்தேன். விரைந்து மண்டபத்தை விட்டுச் சென்று கொண்டிருந்த அமைச்சர், நின்று நிதானமாகக் கேட்டுக் கொண்டு, உதவியாளரிடம் எனது தொடர்பு எண்ணையும், முகவரியையும் குறித்துக்கொள்ளச் செய்தார். அவரின் வழிகாட்டுதலால் விருதுநகர் / மதுரை தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், வெ.குமாரிடம் தகவல்களைத் தர முடிந்தது.. அமைதியாகவும், பொறுமையுடனும் விபரங்களைக் கேட்டறிந்து உதவி இயக்குநர் குறித்துக்கொண்டார். tamilspeak.com , thamizham.net – குறித்தும் கூற முடிந்தது..

    திருக்குறள் 1330-யும் ஒப்புவித்தோருக்கு தலா ரூ.10,000/- பரிசாகக் கிடைத்தது. பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு முதல் பரிசு 15,000/-, இரண்டாம் பரிசு 12,000/- மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000/- வீதம் கிடைத்தது. சிறந்த பதிப்பகங்களுக்கு ரூ.10,000/- வீதம் பரிசுத் தொகை கிடைத்தது. அனைத்துமே ரொக்கமாக காசோலைமூலம் வழங்கியது சிறப்பானதாக இருந்தது. இவ்வகையில் 171 பேருக்குப் வழங்கப்பட்டன.

    அனைத்து வகைப் பரிசுகளையும் இரு மடங்காக்கினால் சாலவும் நன்று. உரியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்; அடுத்த ஆண்டு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று உறுதியாக எதிர்பார்ப்போம்.

    ”நாடு போற்றும் நான்காண்டு ஆண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா ? தமிழக வளர்ச்சியா ? என்பது அன்று நிகழ்ந்த பட்டிமன்றத் தலைப்பாகும். நடுவராகத் திகழ்ந்தவர் கு.ஞானசம்பந்தன்.

    நல்லதோர் நாளில் நல்லதோர் விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்குக் காரணமானோர் எல்லோருக்கும் நன்றி .

    சங்கர இராமசாமி , அவர்தம் தந்தையார் கோ.சங்கரநாராயணன்

    சங்கரன்கோவில் நூல் ஆசிரியர் ப.அருணகிரி

    Share
  • மனிதவள மேம்பாட்டுத் துறை மக்கள் நலனை கருத்தில் கொள்ளுமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) என்பது நம் இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சகம் . இந்த அமைச்சகம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்காக செயல்படுவது ‘பள்ளிக் கல்வித் துறை ’. மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்காக செயல்படுவது, ‘உயர்கல்வி அமைச்சகம்’. இந்தியக் கல்விக் கழகங்கள் அனைத்தும் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்குள்தான் செயல்படுகின்றன.

    “பாரதமும், சீனாவும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியது 130 ஆண்டுகளுக்கு முன்னர்.

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது நம் இந்தியாதான். 2028 இல் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது. அதாவது நம் இந்திய மக்கள் தொகை 2030 இல் 160 கோடியாக அதிகரிக்குமாம். இந்தியா மற்றும் சீனாவில் இளம் வயதினர் மற்றும் அதிக அளவிலான மக்கள் தொகை இருக்குமாதலால் மூலதனத்துக்கு இது மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

    இதுமட்டுமல்லாமல், வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவைவிட மேன்மையடைந்து உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் கோல்டுமேன் சாக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு தமது அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வல்லரசான அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது சீனா உள்பட பல உலக நாடுகள் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நம் இந்தியாவும் சற்றே பாதிக்கப்பட்டாலும், உடனடியாக நாம் சுதாரித்துக் கொண்டோம். இதனால் உலக அரங்கில் அனைத்து நாடுகளும் நம்மை வியந்து நோக்கின.

    உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தற்போது இருக்கும் நம் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் சீனாவின் நிலை , 2030ம் ஆண்டிற்கு பிறகு மாற்றம் பெறும். அதாவது நம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கும் அதே வேளையில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் வரை உள்ள சீனாவின் வளர்ச்சி குறையத் துவங்கும். ஆக 2030ம் ஆண்டில் நம் இந்தியா பொருளாதாரத்தின் வல்லரசாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2.6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக இருக்கும். வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 4.8 முதல் 5.6 சதவீதம் வரை இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவு நாடுகளின் தாக்கம் குறைந்து, சீனாவின் நிதி கொள்கைகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 2030 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையை விட சேவைத் துறைக்கு அதிக தேவை இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    கி.பி. 1750 வரை இந்தியாவே உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை வகித்தது. அதாவது உலக உற்பத்தியில் 33 சதவீதம் பங்களித்துவந்தது. அதையடுத்து சீனா 28 சதவீதம் பங்களித்துள்ளது என்ற தகவல் ஏங்கர் மேடிசன் என்ற பொருளாதார அறிஞர் எழுதிய, ‘இரண்டாயிரம் ஆண்டுகால உலகப் பொருளாதாரத்தின் போக்கு’ என்ற ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2030 ம் ஆண்டுகளில், சீன சமுதாயத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவில் இளைஞர்களின் சமுதாயம் அதிக அளவில் உருவெடுக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலைப்பாடு இந்தியா வல்லரசு ஆவதற்கு பெருமளவில் உறுதுணை புரியும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு புள்ளி விவரம், இந்திய பொருளாதாரம் உலகளவில் மூன்றாவது இடத்தில் வரும் என்றும் கூறுகிறது.

    மேலும், 2030ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைவிட அதிகமாக இந்தியாவில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் நுகர்வோராக இருப்பார்கள். ஆனால் இந்தியா மற்றும் சீன நாடுகள் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒட்டு மொத்த வருமானத்தில், நடுத்தர வருமானம் உடையவர்கள் சிரம்ப்பட நேரிடலாம். பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறிவியல் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ் & பி யின் மதிப்பீடுகளுக்காக உள் கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்காமல் ஆய்வுத் துறைகளில் அதிக முதலீடுகள் செய்தும் உற்பத்தித் துறையை ஆதரித்தால் பொருளாதாரத்தில் மிகுந்த மேம்பாடு அடையலாம். அதே நேரத்தில் விவசாயத் துறையில் மத்திய அரசின் நிலைப்பாடு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. உணவில் தன்னிறைவு அடைந்ததை தக்க வைத்துக்கொண்டாலே பொருளாதார வளர்ச்சியைப் பற்றி செயல்பட முடியும்.

    தற்போது கிடைத்துள்ள மற்றும் சில புள்ளி விவரங்களின்படி புதிய தலைமுறையினருக்கு சரியான ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் வளர்ச்சி விகிதம் குறைகிறது. இந்தியர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என்பது பாரம்பரியத்தின் வழியில் அமைவது. ஆனால் இன்றைய நிலையில் அதிலிருந்து உயரம் குறைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் 3 அல்லது 4 அங்குலம் உயரம் அதிகமாகிறார்கள். நம் நாட்டில் ஊட்டச் சத்து குறைபாடு இருந்தாலும் அறிவு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படவில்லை என்பது ஆறுதலான விசயம். வல்லரசு ஆகும் முனைப்பில் இருக்கும் இத்தருணத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டு அவர்களுக்கு ஊட்டச் சத்து கிடைப்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். மனிதவள மேம்பாட்டுத் துறை இவைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அப்பொழுதுதான் நம் நாடு வல்லரசு ஆவதற்குரிய அனைத்துத் தகுதியும் பெற்று நிலைத்து நிற்க முடியும். பொருளாதாரத் துறை மட்டுமன்றி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    உடல் ஆரோக்கியம், அறிவு வளர்ச்சி இவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இளைய சமுதாயத்தினரை நீதி போதனைகள் மூலமாக நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதும் சமீப காலங்களில் அரங்கேறியுள்ள சில மோசமான நிகழ்ச்சிகள் எச்சரிக்கை விடுக்கின்றன. திரைப்படத் துறைக்கு தணிக்கை செய்யப்படுவது போல அனைத்து மற்ற ஊடகங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் நிலையும் காண முடிகிறது.

    பெரும்பாலான கல்வி நிலையங்களோ மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர, மதிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்க முனைவதில்லை. 100 சதவிகித மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொள்கிறார்களே தவிர 100 சதவிகித மனித சமுதாயத்தை உருவாக்கத் தவறிவிடுகின்றனர். மனித வள மேம்பாட்டுத் துறை இந்தக் குறைகளையெல்லாம் களைந்து ஒரு நிறைவான வல்லரசை உருவாக்க உறுதியளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    Share