இலக்கியம்கவிதைகள்

தமிழாய்த் தமிழுக்காய்…

-கலாம் சேக் அப்துல்காதர்

தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
மொழியாம் தமிழை மொழிந்து.

சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
இழியும் பழியும் இழுக்கு.

ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
சூழும் புகழ்ச்சிச் சுழல்.

மொழியை அழித்தல் முழியை மழித்தல்
விழியை இழந்து விழுவாய்க் குழியில்
மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
பிழையில் உழலும் பிழைப்பு.

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  தமிழாய் தமிழுக்காய்
  பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கத்தில் இல்லாத சாதி சேர்த்து
  சாதனையாய்க் கட்சிகளின் கொடிகள் தூக்கி
  எங்கிருந்தோ வந்தவர்கள் ஆட்சி ஏற
  எடுபிடியாய் அவர்களுக்கே அடிமை செய்து
  மங்காத வீரமெனும் பெருமை பேசி
  மயக்கத்தில் இருக்கின்ற தமிழா! உன்றன்
  செங்குருதி தனில்மான உணர்வை ஊட்டிச்
  சேரன்போல் வென்றிடுவாய் பகைமை தன்னை!

  தாய்மொழியில் கற்றவர்தாம் அறிஞ ராகித்
  தரணியிலே சாதனைகள் படைக்கக் கண்டும்
  ஆய்வறிஞர் அனைவருமே உலகின் மூத்த
  அருமைமொழி கணினிமொழி என்று ரைத்தும்
  சேய்களுக்குப் பயிற்றாமல் ஆங்கி லந்தான்
  செம்மையென மயங்கிநிற்கும் தமிழா! யார்க்கும்
  வாய்க்காத தமிழ்மொழியைக் காக்க நீயும்
  வராவிட்டால் இனத்தோடே அழிந்து போவாய்!

  (தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி கவிதைச்சங்கமம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை )

  தொடர்புக்கு
  மின்னஞ்சல் – karumalaithamizh@gmail.com
  வலைதளம் – http://www.karumalaithamizhazhan.com

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க