Blog

  • காணா இன்பம் கனிந்ததேனோ…

    — கவிஞர் காவிரிமைந்தன். 

    kaana inbam

    எழுதப்பட்ட பாடலை எந்த ராகத்தில் பொருத்துவது என்று யோசித்து… அதை அடிப்படையாகக் கொண்டு வார்த்திடும் இசையமைப்பு பெரும்பாலான பழைய பாடல்களில் காணலாம். சபாஷ் மீனா திரைப்படத்திற்காக தொடுக்கப்பட்ட இப்பாடல்… காணா இன்பம் கனிந்ததேனோ… பாடியிருப்பவர்கள் திரு.மோதி மற்றும் பி.சுசீலா… பாடலை இயற்றியவர் கு.மா. பாலசுப்பிரமணியம். இசையமைத்திருக்கிறார் டி.ஜி.லிங்கப்பா.

    SABASH MEENAஎண்ணிலடங்காத இன்பத்தை அள்ளித்தரும் பாடலிது! பாடல் வரிகள் தம் பங்கிற்கு பாதை வகுத்துக் கொடுக்க… பயணம்போவது இசை ஆலாபனைகள்! அதுவே இப்பாடலின் உச்சம் என்றும் சொல்லலாம்! இருவர் குரலும் அதற்கேற்றவாறு தாள லய ஜதியுடன் இணைந்து மேல்ஸ்தாயி வரை படரும் அழகு… கேட்கத்திகட்டாத பாடலாய் இதனை மாற்றியிருக்கிறது!

    1958ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மாலினி மற்றும் பலர் நடித்திருக்க… இனிய கானம்… காணா இன்பம் கனிந்ததேனோ… திரைப்பாடலைக் கேட்க விருப்பமில்லாதோர்கூட இப்பாடலில் மயங்கியதும் கேட்டுக் கிறங்கியதும் உண்மைதானே!!

    காணா இன்பம் கனிந்ததேனோ …
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ …

    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    வானோர் தூவும் தேன்மலரோ?
    வானோர் தூவும் தேன்மலரோ?

    மேகம் யாவும் பேரொலியோடு
    மேகம் யாவும் பேரொலியோடு
    மேளம் போலே முழங்குவதாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலந்தானோ …

    கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
    விண்ணில் வாண வேடிக்கையோ?
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
    மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஆஆஆஆஆஆ
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ …
    ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ …
    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ …

    பாடல்: காணா இன்பம் கனிந்ததேனோ
    திரைப்படம்: சபாஷ் மீனா (1958)
    இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    பாடியவர்: மோதி, பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

    Share
  • கலைமகள் அழைக்கிறாள்!

    -றியாஸ் முஹமட்

    கலைமகள்
    அழைக்கிறாள்…                                          riyaz

    தரணியில்
    கவி பாட
    என்னை
    அழைக்கின்றாள்!

    முத்து முத்தாகக்
    கவி பாட
    நான் கவியரசு
    வைரமுத்துவுமில்லை!

    கட்டுக் கட்டாக
    அவிழ்த்த விட
    நான் கவிஞர்
    கண்ணதாசனுமில்லை!

    சுரந்து வரும்
    என் எண்ணங்களையும்
    வண்ணக் கனவுகளையும்
    வாளி கொண்டு
    அள்ளி இறைக்க
    நான் கவிஞர்
    வாலியுமில்லை!

    அதை நின்று கேட்டு
    ரசிக்க ருசிக்க
    இங்கே ஒரு
    பாரதியுமில்லை
    ஒரு
    நாதியுமில்லை!

    அமரர்
    கல்கியைப்
    போலக்
    காலங்கள்
    கடந்தாலும்…

    பாவலர்
    பா விஜயைப்
    போல
    என் பருவங்கள்
    தொடர்ந்தாலும்…

    விட மாட்டேன்
    என்  பேனாவை!

    இனி எனது
    எழுது கோலில்
    தீ மூட்டித்
    தீக்குச்சியாய்
    எரியப்
    போகிறேன்…

    நசிங்கிப் போன
    என் சமூகத்தின்
    நாளைய
    விடியலுக்காக..!


    Share
  • கிராமிய கவிகளும் இலக்கியமும்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்மத்தியில் இந்தப் பாடல்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்

    ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம்

    ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில்,நாட்டார் பாடல்கள் அன்றைய தலைமுறையு டன்  அழிந்து விடுகின்றது .

     நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.

    தற்போது அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்

    ,இயந்திர மயப்படுத்தல்,

    கட்டாயக் கல்வி முறை,

     இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

    தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.இதோ

    கச்சான் அடித்த பின்பு -நடுக்
    காட்டில் மரம் நின்றதுபோல்
    உச்சியில் நாலு மயிர்-தலை
    ஓரம் எல்லாம் வழுக்கை

    கண்ணுமொரு பொட்டை-இரு
    காதுகளும் செவிடாம்
    குருத்தெடுத்த வாழை போல-அவர்
    கூன் வளைந்திருப்பார்

    முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
    மூணு பல்லுத்தான் மீதி
    காகக் கறுப்பு நிறம்-ஒரு
    காலுமெல்லோ முடமவர்க்கு

    நாணற்பூப்போல -தலை
    நரைத்த கிழவனுக்கு
    கும்மாளம் பூப்போல -இந்தக்
    குமர்தானோ வாழுறது

    தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
    தக தகவென்ற பட்டுடையும்
    பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
    பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

    அத்தர் புனுகாம்
    அழகான பவுடர் மணம்
    இஞ்சி தின்ற குரங்குபோல –
    இவருக்கேனோ இச்சொகுசு.

    பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
    பவுசாக நடந்திட்டாலும்
    அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
    ஆறுநாட் பட்டினியாம்.

    சங்கிலியும் தங்கமில்லை –
    சரியான பித்தளையாம்
    இடுப்பிலேயும் வாயிலேயும்-
    இருக்கிறது இரவல் தானாம்…!

    இந்த அருமையான அன்றைய பாடல் இன்றைய சினிப்  பாடலை முந்திவிட முடியாது

    கிராமியக் கவிதைக்கு  புகழ் பெற்ற இடம்  மட்டக்களப்பு.( கிழக்கு மாகாணம் )

     தேனுக்கும் ,பாலுக்கும்,மீனுக்கும்   ,அன்புக்கும் ,விருந்துக்கும்  அறிவுக்கும் புகழ் பெற்றவர்கள்  மட்டக்களப்பு மக்கள்

    கலைகளைபேணி வளர்பதிலும்,  தலைசிறந்து விளங்குகின்றவர்கள்மட்டக்களப்பு மக்கள் .உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன.

    கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் ,வயல்வெளிகளிலும் ,வீடுகளிலும் ,வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம்இதுவரை  செலுத்தவில்லையென்பது கவலையாகும்

    .இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது.

     நாட்டுப்புற பாமரமக்களுக்கும், நகரமக்களுக்கும் ,வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

    பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம்.

     நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.என்ற அச்சம் என்னைப் போன்ற பலருக்கும்  உண்டு

    கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை ,நாட்டுப்பாடல்களைக்குறிக்கும்
    சிறப்புசொல்லாக வழங்குகின்றது.

     இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.

     சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இன்றும் பலர் உளர்.
    இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை,

    காதலி கூற்றாய் உள்ளவை,

    தோழி கூற்றாய் உள்ளவை,

    தாயார் கூற்றாய் உள்ளவை,

     நான்கு பிரிவுகளாகஇவை  வகுக்கப்பட்டுள்ளன.

    இக் காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும்

    உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழி துணை கொண்டே நடக்கும்.

    தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

    சந்தன மரத்தை மச்சான்
    சந்திக்க வேன்டுமென்றால்
    பூவலடிக்கு மச்சான்
    பொழுதுபட வந்திடுங்கோ.

    கடப்படியில் வந்து நின்று
    காளை கனைக்கும் மென்றால்
    எங்கிருந்த போதும் நாகு
    எழுந்துவர மாட்டாதோ
    போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக் குறிக்கின்றன.

    மட்டகளப்பில் – மழைவளம் குறைந்து, பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.

    கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும்.

    ஒன்று கோவலன் கட்சி,

    மற்றது கண்ணகி கட்சி.

    இக்கட்சிகள் வடசேரி, தென்சேரி என்ற பெயர் பெறும்.

    இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
    பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
    நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
    என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.

     இப்பாடல் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மண்டூர் ,தமபிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை, போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது.

     துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்டியவை.
    ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன.

     நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும்

    தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.

    தமிழில் எத்தனையோ இலக்கிய நு}ல்களும், இலக்கண நு}ல்களும், இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது.

     யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது சாம்பலாக்கப் பட்டுவிட்டது மனித ஆத்மாக்கள் கவலைப் படுகின்றது

    மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்ததுள்ளது

    ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

    நாட்டுப்பாடல், நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும்.

    இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன.

     அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

    நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.

    நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம், பொதுஜனகானம், கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர்.

     பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம்.

     மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும்.

    ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

    சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

    தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

     சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

     சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

     இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

    பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டுதமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

    நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்

    பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார்,இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர்.

    பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும்.

     மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும்.

     எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

    நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்5]

    நாலு மூலை வயலுக்குள்ளே

    நாத்து நடும் பொம்பிளே

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நண்டு சாறு காய்ச்சி விட்டு

    நடு வரப்பில் போற பெண்ணே – உன்

    தண்டைக் காலு அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    பெண்டுகளே! பெண்டுகளே!

    தண்டு போட்ட பெண்டுகளே! – உன்

    கொண்டை அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார்

    நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது

    கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது.

    வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

    காலயும் புலந்திருக்கு
    கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
    மாலையும் கையுமா
    மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

    வேலயும் இல்ல மச்சி
    வருமானம் கொறஞ்சிரிச்சி
    தோளிலே ஒன்ன வைக்க
    தோது இல்ல என் கிளியே!

    அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை சுட்டி நிற்கிறன.கீழ் உள்ள வரிகள்  அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

    சுற்றி வர நெருஞ்சி முள்ளு
    சுருண்டிருந்து பாத்திருக்கேன்
    தடை தாண்டிப் பாய்ந்து வர
    நல்ல சப்பாத்துக்காய் 
    காத்திருக்கேன்!

    இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

    அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

    ஓடுகின்ற
    தண்ணியிலே
    ஆடுகின்ற
    அலையெல்லாம்
    தேடுகின்ற
    என் மனதின் 
    ஏக்கங்களைக்
    கூறாதோ!

    தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல்  இப்படி வருகிறது.

    கழுத்திலே மின்னுகிற
    கரிச மணிக் கோர்வையிலே
    கைய வைத்து உருட்டி விடும்
    என் ஆசைக் கண்ணாலா

    தொழிலுக்கு தொலை தூரம்
    போனவரே
    நெடுநாளா சேதியில்ல
    என் நெஞ்சம் வெடிக்குதுகா!

    பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் இப்படி வருகிறது.

    மாடுகள் வலய வலய
    நெல் மணிகள் குலய குலய
    பாடுகிறோம் பாட்டு
    சூடடித்து முடியும் வர
    சுகமாகக் கேட்டு!

    நாடுகிறோம் அல்லாஹ்வை
    நல் விளைச்சல் கெடச்சிடவே
    தேடுகிறோம்
    கடனெல்லாம் தீர
    ஒரு நல் வாழ்வை!

    சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது.

     எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

    சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    சாயக் கிளியே சாய்ந்தாடு

    அன்னக் கிளியே சாய்ந்தாடு

    ஆவாரம் பூவே சாய்ந்தாடு

    குத்து விளக்கே சாய்ந்தாடு

    கோயில் புறாவே சாய்ந்தாடு

    மயிலே குயிலே சாய்ந்தாடு

    மாடப் புறாவே சாய்ந்தாடு

    குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

    குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

    கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

    காது காது பூச்சாரே

    எத்தனை முட்டை இட்டாய்?

    மூணு மூட்டை!

    மூணு முட்டையும் தின்னுப்புட்டு

    ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

    என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது.இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும்,சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

    மாப்பிள்ளை மாப்பிள்ளே

    மண்ணாங்கட்டி தோப்புளே

    அரைக் காசு வெற்றிலைக்கு

    கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

    என்ற பாடலைக் கூறலாம்.

    மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

    சக்கு சக்குடி சருவொலக்கையடி

    குத்தொலைக்கையடி–குமரன் பொண்டாட்டி

    பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

    பழனி பொண்டாட்டி. . .

    வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

    பனை மரமாம் பனை மரமாம்

    பச்சைக் கண்ணாடி

    பல் இல்லாத கிழவனுக்கு

    டபுள் பொண்டாட்டி. . .

    என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை டபுள் பொண்டாட்டி என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

    பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

    பல்லு ரெண்டும் போவானேன்?

    உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

    ரெண்டு பணம் தெண்டம், தெண்டம்!

    என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

    கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

    காசுக்கு ரெண்டு கெட்டு

    கருணைக் கிழங்கடா

    வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

    இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர்,கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

    சடுகுடு விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

    சடுகுடு மலையிலே

    ரெண்டானை

    தவறி விழுந்தது, தவறி விழுந்தது

    கிழட்டானை. . . கிழட்டானை.

    வெள்ளிப் பிரம்பெடுத்து

    விளையாட வாராண்டா. . .

    தங்கப் பிரம்பெடுத்து

    தாலி கட்ட வாராண்டா. . .

    தாலி கட்ட வாராண்டா. . .

    தூத்தூ நாய்க்குட்டி

    தொட்டியக்குடி நாய்க்குட்டி

    வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

    இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!

    அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

    கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

    சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!

    ‘கழிச்சிக் கல்’ விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

    சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

    இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை,சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம்.விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

    விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!

    ‘கழிச்சிக் கல்’ விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல் இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

    கொக்குக்கிக் கொக்கு

    ரெட்டை சிலாக்கு

    மூக்குச் சிலந்தி

    நாக்குலா வரணம்

    ஐயப்பன் சோலை

    ஆறுமுக தாளம்

    ஏழுக்குக் கூழு

    எட்டுக்கு முட்டு

    ஒன்பது கம்பளம்

    பத்துப் பழம் சொட்டு

    இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

    அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டு

    ஆண்டி. . . ஆண்டி.. .

    என்ன ஆண்டி?

    பான்னாண்டி. .

    என்ன பொன்?

    காக்காப் பொன்.

    என்ன காக்காய். . .?

    அண்டங்காக்காய். . .

    என்ன அண்டம்?

    பூ அண்டம்.

    என்ன பூ?

    பனம் பூ.

    என்ன பனை?

    தாளிப் பனை.

    என்ன தாளி?

    நாக தாளி.

    என்ன நாகம்?

    சுத்த நாகம்

    என்ன சுத்தம்?

    வீட்டுச் சுத்தம்

    என்ன வீடு?

    ஓட்டு வீடு

    என்ன ஓடு?

    பாலோடு

    என்ன பால்?

    நாய்ப் பால்

    என்ன நாய்?

    வேட்டை நாய்

    என்ன வேட்டை?

    பன்றி வேட்டை

    என்ன பன்றி?

    ஊர்ப் பன்றி

    என்ன ஊர்?

    கீரையூர்

    என்ன கீரை?

    அறைக்கீரை

    என்ன அறை?

    பள்ளி அறை

    என்ன பள்ளி?

    மடப் பள்ளி

    என்ன மடம்?

    ஆண்டி மடம்

    என்ன ஆண்டி

    பொன்னாண்டி . . .

    இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் ‘என்ன பொன்?’ என்று கேள்வியை எழுப்பி அதற்கு ‘ஆணிப் பொன்’ என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

    மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

    குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற முறைகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

    மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கலாம்

    அத்தான் தங்கையே ராமக்கா

    அரிசிக் காரன் வந்திட்டான்

    சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

    சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

    புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

    புருசன் கூடப் பேசிக்கோ. .!

    ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

    இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்லை.

    நாடோடிப்பாடல்களில்
    கதை

    இசைப் பாடல்கள்

     கவிதைகள்

    பழ மொழிகள்

    விடுகதைகள்

    ஒப்பாரி

    கவிகள்

    தாலாட்டுக்கள்

    ஊஞ்சல் பாடல்கள்

    கப்பற் பாடல்கள்

    பாலர் விளையாட்டுப் பாடல்கள்

    இவையெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும்.

    Share
  • “ஈஸி… வசந்த்”

    — தேமொழி.

    நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்… என்று திட்டியபடி செல்போனை சோபாவில் வீசியெறிந்தான் வசந்த். அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

    “ஈஸி… வசந்த்” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

    அந்த பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள். தலையில் கிரீடமாகக் கறுப்புக் கண்ணாடி…காற்சட்டையில் துழாவி தனது செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள்.

    கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான். ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது.

    முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை.

    “ஹலோ” என்றான் அவளை நோக்கி, இவள் யார் எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்தின் குரலில்.

    “ஹலோ” என்றால் அவளும், தனது போனில்.

    “நான் உன்னிடம்தான் பேசுகிறேன்”

    “நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை”

    எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

    “பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்கரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்”

    “டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?”

    “ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல”

    “நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை”

    விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது”

    “நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்” என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

    “உன்னை உதைப்பேன் என்கிறாள்”

    ganesh-vasanth“நீங்க வேற அதை எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?” வசந்த் அவளை முறைதான்.

    “ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட், வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக் டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன். வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ் பண்றேன்னு சொன்னார்”.

    கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான்.

    “நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?”

    “நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்”

    “அட சட்… பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்க சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்”.

    “தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி …தேவுடா…” என்று பாடி உதட்டை சுழித்து அழகு காட்டிய தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.

    “அது சரி, நாங்க வந்த போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?”

    “ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ….”

    “ஓ ….அந்த அளவுக்கு முத்திப் போச்சா”

    “பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க”

    “நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?”

    “எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்… தேனு, தேனுண்ணு ஒரு பொண்ணு”

    “அதும் பேரும் தேனு தனா?”

    “ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க , வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம். அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு. இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர் டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் .”

    “பிறகு சென்னையில் அந்த செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன் விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும் சுருட்டிக் கொண்டோடிவிட்டான். போதாக்குறைக்கு ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான். ஜானுவுக்கும் தேனுவுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை. பொறுக்க முடியாமல், இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான். அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான். உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம் புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க. அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை. தெருவில் உரண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க. தெருவே வேடிக்கப் பாத்துது. அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். “

    “இதுக்கும் நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது”.

    “இருங்க பாஸ். பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட். அந்த மூணாவது பொண்ணு நேத்து ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான் வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான். போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன். அவனிடம் என்னை அறிமுகப் படுத்தி வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன் ரொம்பவே உற்சாகமானான்.”

    “அந்த மாதிரி உற்சாகமானவனை நீங்க திட்ட காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ் ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்”

    “தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க”

    “கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?”

    “அப்படி ஒரு ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், “யோவ், நான் உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே. மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன். சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன். பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க. ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா? மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன். தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன், தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில் இருக்கிற தண்ணியெல்லாம் முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன். நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே” அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

    “நீ நெனச்சது சரிதான்”

    “தேங்க் யூ ப்ரபொசர்”

    பாஸ்…என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து “இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்…” என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

    “வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான் ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற லாயரா வருவேனா?” என்றாள் தேனு.

    அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா என வசந்திற்குப் புரியவில்லை.

    “நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன். உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது”.

    “ஃபை..ஃபை..சொதப்பி ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை” என்ற தேனு எழுந்து ஆடினாள்.

    “என்ன இங்க கொண்டாட்டம்? ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது”

    “வாங்க ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்”

    “நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு”

    “பை, பை சீரியோ…”

    தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

    வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும். ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன். “பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும் கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?”

    “ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு”

    “என்ன பாஸ் திடீர்னு தத்துவம்”?

    “தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?”

    “இருக்கும்”…. தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது “ஆனால் இருக்காது பாஸ்.”

    “ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?” பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

    “வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்”

    “வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு” என்றாள் தேனு.

    [தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் “கணேஷ்-வசந்த்” கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

    https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

     

     

    படம் உதவி: https://siliconshelf.wordpress.com/

    Share
  • பெரிய வாத்தியார்

    நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம்.

    இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்.
    இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல்.

    முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா!

    தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப பென்ஷன் பணத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை.

    ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன்ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச்செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம்.

    சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

    இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று.

    இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான்.

    ‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது.

    அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.
    அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா?

    அப்படித்தான் அன்று நாதனும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார்.

    “யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன்.

    “அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!”

    “ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல.

    “அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்று பெருமனது பண்ணி, வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார்.

    “ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!”

    சாம்பசிவத்துக்குத் திடீர்திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும்.

    ‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார்.

    ‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான்.
    சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும்.

    “காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது.

    சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று.

    அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

    அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒரு படி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக.

    தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.

    நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா?”

    பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்!

    “கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார்.

    (இதயம், 1996, வலைத்தமிழ்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “தன்னிலே தன்னாலே தன்னிலமர் தன்னைப்போல் –
    கண்ணனும் மாடும் கலந்திருத்தல், -எண்ணிட,
    ஆகுலும் தீர்ந்திடும், ஆரா அமுதனால்
    கோகுல கோலா கலம்’’….கிரேசி மோகன்….

    Share
  • ஆனந்த குமாரசுவாமி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பில் கிறீன் பாதை என ஆங்கிலேயர் தெருவொன்றுக்குப் பெயரிட்டனர். 1960க்குப்பின்னர் அந்தத் தெருவின் பெயர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை. உலகம் போற்றும் தமிழ்ப் பெருமகனாரின் பெயர்.

    anan
    Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man.

    ஈராண்டுகளுக்கு முன்னர், இராசபட்ச குடியரசுத் தலைவர் காலத்தில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை நெலும் பொக்குண மாவத்தை என்றாக்கினர்.About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha.

    கடந்த 10.02.2015 அன்று இன்றைய அரசின் குடியரசுத் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர மேயர் முன்னிலையில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயரை மீட்டனர். On 10th Feb 2015 the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.

      Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man. About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha. Today (10th Feb 2015) the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha. To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam's article about Ananda Coomaraswamy in today's edition. See link below: http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man. About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha. Today (10th Feb 2015) the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.
    To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam’s article about Ananda Coomaraswamy in today’s edition. See link below:
    http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    இந்த நிகழ்வை நினைவாக்க வந்த கட்டுரை இணைப்பில் பார்க்க.
    To commemorate the event the Island Newspaper of Colombo has published Thiru Arumugam’s article about Ananda Coomaraswamy in today’s edition. See link below:
    http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=119260

    Share
  • வைரமுத்து உணர்த்தும் சுற்றுச்சூழல் சிந்தனைகள்

    — து.மணிதேவன்.

     11_mp_Vairamuthu_J_1390230g               பல மனிதர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு சமுதாயம் எனப்படும். மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், காற்று ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியம். மனித வாழ்விற்கு ஐம்பூதங்களின் செயல்பாடுகள் சீராக அமைந்திருத்தல் அவசியம். செயற்கைப் பொருட்களினால் நாளுக்கு நாள் இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன. நிலத்தின் இயல்பிலும் மனித வாழ்வின் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதினத்தில் காணப்படும் சமுதாய மேம்பாட்டுக் கருத்துக்கள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    இயற்கையைக் காத்தல்:

                     உலகம் தோற்றிய காலம் தொட்டு இயற்கை தன் இயல்பில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைச் சிக்கல் ஏற்படுவது மனித சமூகத்திற்கு தீங்கானது. லூசியானா கடற்கரையில் இருந்து 46வது மையிலில் மெக்சிக்கோ வளைகுடாவில் மீத்தேனும் பெட்ரோலும் கலந்து தீப்பிடித்ததில் கடலில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டது. இயற்கைக்கு மாறான இந்த விபத்துக் குறித்து வைரமுத்து …

                     “என்ன கொடுமை இது! யுகயுகமாய் உயிர்கள் படைத்த இயற்கை ஒரேநாளில் அழிக்கப்பார்க்கிறதா? மிச்சமிருக்கப் போகும் ஒரே பிராணி மனிதன் தானா? மனிதர்கள் இல்லாத உலகத்தில் விலங்குகளும், பறவைகளும் வாழமுடியும். ஆனால் மனிதனால் வாழ முடியுமா? விலங்குகளும், பறவைகளும் அற்ற உலகில்?”

    என்று இயற்கையின் அழிவு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகள், பறவைகள் நிறைந்த உலகம் மனிதர்களுக்கு ஏற்றது என்பதை உணர்த்தியுள்ளார்.

    இயற்கையின் தேவை:

                     காந்தி கிராமம் பல்கலைக்கழகம் எமிலியின் கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டது. அதில் பூமியின் கடைசி உயிராக வந்த பின்னர் பூமியின் போக்கில் மாற்றம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டள்ளது. கட்டுரையின் பகுதியில் …

                    “பூமிக்கு வந்து போன உயிர்களிலும், வந்து வாழும் உயிர்களிலும் வல்லமையும், வஞ்சமும், உள்ள உயிர் மனிதன் தான். பூமியை மனிதன் தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பது. மனிதன் மாறுதலை உண்டாக்கினான்”

    என்று பூமியில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை மாறுபாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    61lPNVMaLmLமரம் நடுதல்:

                     உலகத்தில் மழை  பொழிவதற்கும், உயிரினத்தின் சுவாசம் நடைபெறுவதற்கும் தாவரங்கள் இன்றியமையாதவை. மூன்றாம் உலகப்போரில் கருத்தமாயி சிட்டம்மாவிடம் மரங்களை நடுவதோடு மட்டுமின்றி அவற்றைக் கும்பிட்டு வளர்க்க வேண்டும் என்பதை …

                    “வீட்டுக்கு வெளக்கேத்தி வச்சும் புறச்சேலையும் பூமணமும் மாறாம சிட்டம்மாவை தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போயி நட்டுவச்ச மூணு மரக்கன்னுகளையும் கும்பிடச் சொன்னாரு கருத்தமாயி”

    என்று மரம் நடுவதையும் மரத்தை வழிபாட்டுப் பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

    மரத்தை வெட்டுவதை தடுத்தல்:

                    மனிதனின் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வீடு கட்டுவதற்கும், வாகனங்களை உருவாக்குவதற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மரங்கள் பயன்படுகின்றன. மரங்களை வெட்டி மனிதர்கள் வாழ்க்கை வசதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அவற்றை சுட்டிக் காட்டுகின்ற விதத்தில் வைரமுத்து மரம் வெட்டுவதை தடுக்கும் நிலையை விளக்கியுள்ளார் …

                    “ஏலே முத்துமணி வெறிப்புடிச்சி அலையாதேடா! நம்ம வம்சத்தை வெட்டாதேடா! குல சாமியை கொன்னுடாதேடா”

    என்று கருத்தமாயி புலம்புவதாக காட்டுவதில் இருந்து மரங்களுக்கு தெய்வத்தன்மை அளித்து அவற்றை வெட்டுவதில் இருந்து தடுப்பதை உணர்த்தியுள்ளார். சமூகத்தில் உள்ள தெய்வ நம்பிக்கையை மரங்களைக் காப்பாற்றுவதற்க பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

    உழவரின் அவசியம்:

                     உழவுத்தொழில் முதன்மையான தொழில் என கருதப்பட்ட காலம் மறைந்து வேறு வேலை தெரியாதவர்கள் மட்டும் செய்கின்ற தொழிலாக மாறியிருக்கும் நிலையை  வைரமுத்து சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது விவசாயக் கூலியாக இருக்கின்றவர்கள் கடைசித் தலைமுறையாக கலப்பை பிடிப்பவன் என்ற கருத்தினை …

                    “ஊரு கூடி பாடுகிற கூட்டுப் பாட்டல்லவோ விவசாயம். ஊருக்குத்தான் சாதி பேதம் உண்டு நிலத்துக்கில்லே, சகல சாதிக்காரர்களும் ஒரே நேரத்திலே உழுது நட்டு கும்மி அடிப்பார்கள். ஊர் நிலத்தில் வெளியூர் ஆட்கள் வேலை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத விதி. வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை. இன்று உள்ளுர் ஆட்களே”

    என்று மனக்குறையை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

    பாலித்தீன் கேடு:

                     சமூகத்தின் தேவைக்காகப் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகளில் பல மனித சமுதாயத்திற்குத் தீங்கானவையாக உள்ளன. அவற்றுள் ‘நெகிழி’ என்று அழைக்கப்பெறும் பிளாஸ்டிக் தவிர்க்க இயலாப்  பொருளாக மாறி வருகிறது. எளிதில் மக்காமல் நெடுநாள் நிலத்தில் புதைந்து கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் என்னும் பாலித்தின் தீமை குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது …

                    “பாலிஸ்டைரினில் உள்ள ஸ்டைரின் என்னும் திரவப் பொருளும் ஏஊயில் உள்ள பிளாஸ்டிக்குகளின் வளையக்கூடிய தன்மையை மேம்படுத்தும் பிளாஸ்டிசைசர் என்னும் பொருளும் பாலிஎத்தினில் உள்ள ஆண்ட்டியாக்சிடண்ட்டுகளும் நுவு-இல் உள்ள அசிட்டால் டிசைடு என்னும் வேதிப் பொருளும் உணவுப் பொருட்களை மாசுப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளன”

    என்று பாலித்தின் கேடு குறித்து வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

                    மண்ணுல பொதச்சா மக்காத பொருளு பாலித்தினும் பிளாஸ்டிக்கும் என்று வைரமுத்து பிளாஸ்டிக்கின் நச்சு தன்மை குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

    மண்ணின் பெருமை:

                     இந்தியா பல்வேறு வகையான மண் வளங்களைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. வைரமுத்து மூன்றாம் உலகப்போர் நாவலில் மண்ணின் பெருமையை உணர்த்தியுள்ளார் …

                    “மண்ணைக் கும்பிடும் கலாச்சாரம் கண்ட உங்கள் சமுதாயத்தைத் தான் நான் கும்பிட வேண்டும். இந்த மண்ணை கொன்று போடக்கூடாது பெரியவரே. பனியும், காற்றும், வெயிலும், மழையும் பாறைகளை அறுத்ததில் மண் உண்டானது. இரண்டரை சென்டிமீட்டர் மண் உண்டாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறதாம் ஐயா, அந்த மண்ணை விஞ்ஞானம் கொன்று விடக்கூடாது. அதோ தெரிகிறதே அந்த கொடைக்கானல் குன்று அதன்மேல் ஏறி நின்று கூவுங்கள், கூவச்செய்யுங்கள். மனிதா இயற்கைக்கு திரும்பு” 

    என்று குறிப்பிடுவதில் இருந்து மண்ணை வணங்கும் பண்பாட்டை சமூகம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

    மனிதன் வாழ ஏற்றது பூமி:

                     மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இந்த பூமி உள்ளது. வேற்றுக்கிரங்களில் குடியேறுவதற்கு மனிதன் தயாராவதாகத் தகவல் வருகின்றன. சந்திர மண்டலத்தை சுற்றுலா செல்லவும் செவ்வாய் கிரகத்தில் குடிபுகப்போவதாகவும், அறிவியல் வல்லுநர்கள் அறிக்கை விடுகின்றனர். மனித இனம் வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி என்பதை வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார் …

                    “செவ்வாய் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முயற்சி நடப்பதாய் செய்தி வருகிறது. அதை நினைத்தால் நான் ஒரு கருப்பு புன்னகை சிந்த வேண்டியவனாய் இருக்கின்றேன். செவ்வாய் கிரகம் என்பது 97 விழுக்காடு கரியமில வாயு கொண்ட வளி மண்டலத்தால் சூழப் பட்டிருப்பது. பூமி என்பது 0.03 விழுக்காடு கொண்ட கரியமில வாயுவும் 79 விழுக்காடு நைட்ரஜனும் 21 விழுக்காடு பிராண வாயுவும் கொண்ட வளி மண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது.”

    இந்திய மேம்பாடு:

                     இந்திய நாட்டின் சிறப்பு எமிலி வாயிலாக மூன்றாம் உலகப்போர் புதினத்தில்  உணர்த்தப்பட்டுள்ளது. இந்து, பௌத்தம், சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்த இந்தியா ஒரு மதச் சார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதிலிருந்தும் …

                    “ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்தியதும் இந்தியா, எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா, காமத்தின் வழி கடவுளைக்கண்டதும் இந்தியா, கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா”

    என்று குறிப்பிடுவதிலிருந்து வைரமுத்து அயல் நாட்டு பெண்மணியின் வாயிலாக இந்தியாவின் பெருமையை உயர்த்திக்காட்டுகிறார். எமிலி இந்தியாவிற்கு வந்ததன் நோக்கத்தைக் குறிப்பிடும் போது …

                    “இந்தியாவிற்கு வந்தது கற்பிப்பதற்கு அல்ல, கற்றுக் கொள்வதற்கு. இந்தியாவின் அறிவுச் செல்வங்களை இன்னும் அழிந்து போகாத கலை மரபுகளை அறுத்து போகாத கலாசாரத் தொடர்ச்சிகளை நிமிர்ந்து  கொண்டிருக்கும் நகரங்களை புதைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களை விவசாயிகளை சாகவிடும் அலட்சியத்தை விவசாயம் இன்னும் பிழைத்திருக்கும் ஆச்சரியத்தை கற்றுச் செல்லவே வந்தேன்”

    என்று குறிப்பிட்டு இந்தியாவின் பெருமையை உணர்த்திக் காட்டுகிறார்.

    சமூக மாற்றங்கள்:

                     மாசற்ற உலகம் படைப்பதன் மூலம் ஆரோக்கியமான மனித சமூகம் அமையும் என்பதை வைரமுத்து இப்புதினத்தில் எடுத்துரைக்கிறார்.

                     அட்டணப்பட்டியில் பல் துலக்குவதற்கு, முன்னர் பயன்படுத்திய நைலான் பிரஷ் தவிர்க்கப்பட்டது. வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். பாலித்தீன் பைகள் தவிர்க்கப்பட்டு காகிதப்பை பயன்பாட்டுக்கு வந்திருந்தது. பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுகின்றனர். மின்சாரமும் மிச்சப்படுத்துகிறார்கள். இத்தகைய சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    மனித உறவு:

                     சின்னப்பாண்டி, எமிலியையும் இஷிமுராவையும்  அழைத்து வந்து  அட்டணப்பட்டிக்குள் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தினை காண்பித்தான். அப்பொழுது அவர்களை கடந்து செல்லும் ஒரு இஸ்லாமிய பெண்ணை அழைத்து விசாரிக்கிறார்கள். அவள் இரவில் தங்குவதற்கு ஒரு இந்து சமயத்தவரின் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்கிறாள். அதைக் கேட்டு வியந்து அவர்கள் விசாரிக்கிறார்கள். அதற்கு அவள், எங்கள் ஊரில் புதிய ஏற்பாடு இது, வாரம் ஒருநாள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று ஒரு குழந்தை தங்க வேண்டும். பனிரெண்டு வயதுக்குள் இந்த ஊரே எங்களுக்கு உறவாகிவிடும். வருகிறேன் பங்கஜம் அத்தை காத்திருப்பாள் என்று கூறுகிறாள்.

                     இளம் வயதில் சமயப் பொறை ஏற்ப்பட்டால் பிற்காலத்தில் சமயத்தை அடிப்படையாக கொண்டு பகை வளர்வது தடுக்கப்படும் என்ற கருத்தை வைரமுத்து எடுத்துக் காட்டியுள்ளார்.

    முடிவுரை:

                     சமூக மேம்பாட்டிற்கு இயற்கையை காப்பதன் அவசியம் உணர்த்தப் பட்டள்ளது. இயற்கை வளங்களை வேட்டிடையாடி உணவின் தேவையை நிறைவேற்றிய மனித இனத்தின் செயல் விளக்கம் பெறுகிறது. மரம் நடுதலின் அவசியம் சுட்டிக் காட்டப்படுகிறது. மரங்களைக் காப்பதற்கு வழிபாட்டு முறை உகந்தது என்றக் கருத்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சமூகம் மேம்பாடு அடைய உழவுத் தொழில் இன்றியமையாதது என்றக் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. மனிதர்கள் வேறுபாடு கடந்த உறவினர்களாக வாழவேண்டும் என்றக் கருத்து இக் கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

     
     
     

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

  • வளரும் சிகரம் வைரமுத்துஇ அருணன்இ காவியா பதிப்பகம். மு.ப.2012
  • வைரமுத்துவின் கவிதைகளில் சமூதாயச் சிந்தனைகள்இ முனைவர் நங்கைகுருநாதன்இ சந்திரா பதிப்பகம். மு. ப 2008.
  • தமிழ்க் கவிதை வரலாற்றில் வைரமுத்துஇ முனைவர் வே.அ.பழநியப்பன்இ காவியா பதிப்பகம். மு.ப.2014.
  • வைரமுத்து கவிதைகளில் மார்கிசம் தாக்கம்இ முனைவர் இதயகீதன்இ மு.ப. 2012.
  • என் பழைய பனை ஓலைகள்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ மார்ச் 2011.
  • வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்இ முனைவர் பே.ஞானசேகரன்இ தொ.பதிப்பு 2014.
  • கவிராஜன் கதைஇ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2010.
  • இதனால் சகலமானவர்களுக்கும்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2005.
  •  
     
     

    து.மணிதேவன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்.
    மீனாட்சி இராமசாமி கலை&அறிவியல் கல்லூரி,
    தத்தனூர். அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.

     
     
     

    படம் உதவி: http://www.thehindu.com/books/books-authors/words-of-angst/article4491595.ece

    Share
  • மங்கையர் திலகம் – பகுதி 2

    -மேகலா இராமமூர்த்தி

    முந்தைய பகுதியின் தொடர்ச்சி…

    போரிலே பகைவர்களையெல்லாம் பந்தாடிக்கொண்டிருந்த கலிப்பகையைப் பகைவர்கள் சிலர் சூழ்ச்சியான முறையில் கொன்றுவிட்டனர் என்ற செய்தி திலகவதியின் காதில் இடியாய் இறங்கியது; உடனே, அடியற்ற மரம்போல் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தாள். அவள் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் சரிந்து அவள்மீதே விழுந்திருந்தன. ’பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ எனும் பழமொழிக்குத் திலகவதியின் வாழ்க்கையினும் விஞ்சிய சான்றில்லை என்று அனைவரும் வேதனையோடு பேசிக்கொண்டனர்.

    இரண்டு நாட்களாக, மூர்ச்சை தெளிந்து கண்விழிப்பதும், மீண்டும் இத்துயரச் செய்தியின் அதிர்ச்சியால் மூர்ச்சிப்பதுமாகவே இருந்த திலகவதி மூன்றாம் நாள் காலையில் “உங்களைப் பிரிந்து இனிநான் உயிர்வாழப் போவதில்லை; நீங்கள் சென்ற இடத்திற்கே நானும் வருகின்றேன்!” என்று எங்கோ வெறித்தபடி அலறிக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தாள்; உறவினர் அனைவரும் திகைத்துப்போய் அவளைப் பார்த்தனர். தமக்கையின் கூக்குரலில் நடுநடுங்கிப்போன மருள்நீக்கி பாய்ந்துவந்து அவளைக் கட்டிக்கொண்டு, “அக்கா! என்னைவிட்டுப் போய்விடாதே அக்கா! உன்னைவிட்டால் எனக்கு வேறுயார் இருக்கிறார்கள்? நானும் உன்னுடன் வருகிறேன் அக்கா!” என்று கதறியழுதான்.

    தன் வருங்காலக் கணவனின் மரணச்செய்தி கேட்டதிலிருந்து முற்றும் தன்னிலை மறந்திருந்த திலகவதி தன் தம்பியையும் சேர்த்தே மறந்திருந்தாள். இப்போது தம்பியின் அழுகை அவளை இவ்வுலகிற்கு மீட்டுவந்தது. ”அடடா! என்னருமைத் தம்பியை எவ்வாறு மறந்துபோனேன்? என் வாழ்க்கையைப் பற்றியே அல்லவா யோசித்துக் கொண்டிருந்துவிட்டேன்!” என்று தன்னையே நொந்துகொண்டாள். “உன்னைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் மருள்நீக்கி!” என்று அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இக்காட்சியைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ந்துபோய்த் தாமும் அழுதனர்.

    அப்போது படுக்கையைவிட்டு எழுந்தாள் திலகவதி; யாரிடமும் எதுவும் பேசாமல் நேரே உடைமாற்றும் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது அனைவருக்குமே புரியாத புதிராயிருந்தது. ஆயினும் அப்புதிருக்குச் சிறிது நேரத்திலேயே விடை கிடைத்தது!

    கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்த திலகவதியின் கோலமே மாறியிருந்தது. வெள்ளைச் சேலையை உடுத்திக்கொண்டு, உடலிலுள்ள அணிகலன்கள் அனைத்தையும் களைந்துவிட்டு, நெற்றியில் திருநீறு துலங்க அவள் நின்றிருந்த நிலையைக் கண்ட சுற்றத்தினர் அனைவரும் தீயை மிதித்ததுபோல் திடுக்கிட்டுப் போயினர். “திலகவதி! என்ன கோலம் அம்மா இது?!” என்று ஒரு முதியபெண்மணி வேதனைமேலிட வீறிட்டார்.

    thilakavathiஏனையோரும் அருகில்வந்து, “குழந்தாய்! ஏனம்மா இப்படியோர் முடிவுக்கு வந்தாய்? உனக்கும் கலிப்பகைக்கும் நாங்கள் மணம் பேசியிருந்தோமே தவிர திருமணம் இன்னும் நடந்தேறவில்லையே! அப்படியிருக்க நீ எதற்கம்மா கணவனை இழந்தபெண்போல் வெள்ளுடை உடுத்தவேண்டும்?” என்று ஆதுரத்தோடு வினவ, அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப்பார்த்த திலகவதி கணீர்க் குரலில், “உண்மைதான்! எனக்கும் அவருக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லைதான்; ஆயினும் என் தந்தை அவரை என் மணாளனாகத் தேர்ந்தெடுத்தார்; அதனால் நானும் அவரையே என் கணவராக வரித்துவிட்டேன். அக்கணமே எனக்கும் அவருக்கும் திருமணம் (மனத்தளவில்) நடந்துமுடிந்துவிட்டது.

    விடுபட்டுப்போனவை…வெளியுலகிற்கு எங்கள் திருமணத்தை அறியச்செய்வதற்கான ‘வதுவைச் சடங்குகள்’ மட்டுமே! திருமணம் நடக்காவிட்டாலும் இப்பிறவியில் அவரே என் கணவர்! அவரை இழந்த நான் இவ்வாறு தவ வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்!” எனத் தன் விருப்பத்தைக் கூறி முடித்தாள். அவ்விளம்பெண்ணின் தீர்மானத்தையும், உறுதியையும் கண்ட சுற்றத்தார் பேச்சிழந்து நின்றனர்.

    தன் தீர்மானத்தைத் தெரிவித்துவிட்ட திலகவதி அதன்பின்னர் சுற்றத்தாரின் பாதுகாப்பில் தங்கியிருக்க விரும்பவில்லை. தன் தாய்தந்தையர் வாழ்ந்திருந்த இல்லத்திலேயே வசிக்க விரும்புவதாக அனைவரிடமும் கூறிவிட்டுத் தன் ஒரே துணையான தம்பியையும் அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

    தன் முயற்சியாலும், உழைப்பாலும் தம்பியை நன்கு கல்விகற்க வைத்தாள். சிறுவனாக இருந்த மருள்நீக்கி இப்போது வாலிபராக வளர்ந்துவிட்டார். தம் தமக்கையின் அவல வாழ்க்கையைச் சிறுவயது முதலே காணநேர்ந்ததனால் நிலையில்லா இவ்வுலக வாழ்வில் அவருக்குப் பற்றேதும் ஏற்படவில்லை; சிவநெறியிலும் ஏனோ மனம் செல்லவில்லை; எனவே வாழ்வின் நல்லறங்களை உணர்த்தும் சமண சமயத்தில் சேர்ந்துவிட்டார். மருள்நீக்கியின் மனநிலையைப் பின்வரும் பாடலில் அழகாய் விளக்குகின்றார் பெரியபுராண ஆசிரியர்.

    நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
    அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
    நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
    கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகுவார்.

    தம் தமக்கையை விட்டு நீங்கி வேற்றூருக்குச் சென்று அங்குள்ள சமணப் பள்ளியில் சேர்ந்தார் அவர். சிறிது காலத்திலேயே அம்மதத்தின் அறநூல்கள், நீதிநெறிகள், கலைகள் என அனைத்தையும் கசடறக் கற்றுத் தேர்ந்து சமணமதத் தலைவராகவே ‘தருமசேனர்’ என்ற பெயரில் பல்லவ அரசாட்சியில் புகழோடு விளங்குவாராயினார்.

    தம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் துறந்து தம்பிக்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த திலகவதியார்க்கு மருள்நீக்கி ‘தருமசேனராக’ மாறியதில் சிறிதும் உடன்பாடில்லை; ஆயினும் அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. மனவேதனை மிகுந்தவராய்த் திருவாமூரை விட்டு வெளியேறிச் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான ’திருவதிகை வீரட்டானம்’ எனும் பதியை அடைந்து அங்குள்ள திருமடத்தில் தங்கினார்; செம்பவளக் குன்றுபோன்ற திருமேனியுடன் விளங்கிய வீரட்டானேசுவரரைத் தினமும் தொழுதும், அச்சிவாலயத்தில் திருத்தொண்டுகள் புரிந்தும் காலங்கழித்து வந்தார்.

    ஆயினும், தம் தம்பியை அவர் நினைக்காத நாளில்லை; ”தம்பி மீண்டும் சைவநெறிக்குத் திரும்ப வேண்டும்; சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யவேண்டும்; அதற்கு வீரட்டானேசுவரர் திருவருள் புரியவேண்டும்” என்று ஒவ்வொரு நாளும் சிவபரம்பொருளிடம் கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டிருந்தார் திலகவதியார்.

    திலகவதியாரின் விருப்பத்தை நிறைவேற்றச் சிவனார் திருவுளம் கொண்டார். கடுமையான சூலைநோயைத் (வயிற்றுவலி) தருமசேனருக்குத் தந்தார். வலியால் துடிதுடித்தார் தருமசேனர்; அவ்வலியைப் போக்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது. அவ்வேளையில் தருமசேனருக்குத் தம் தமக்கையின் நினைவு வந்தது. இந்நோயைக் குணப்படுத்த அவர் உதவக்கூடும் என்று எண்ணியவராய்த் தாம் தங்கியிருந்த காஞ்சிக்குத் திலகவதியாரை அழைத்துவர ஆளனுப்பினார்.

    சமணர்கள் மத்தியில் வாழ்ந்துவந்த தம்பியைக் காணவிரும்பாத திலகவதியாரோ “தருமசேனரைத் திருவதிகைக்கு அழைத்துவருக!” என்று தம்பி அனுப்பியிருந்த ஆளிடம் சொல்லி அனுப்பினார். தமக்கையின் விருப்பப்படியே அவரைக்காணக் கடுமையான வயிற்றுவலியோடு திருவதிகை வந்தார் தருமசேனர்.

    தம்பியின் நிலைகண்டு கண்ணீர்வடித்த திலகவதியார் உடனேயே அவருடைய நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசினார். திருவைந்தெழுத்தை ஓதுமாறு பணித்தார். பின்பு, ”வீரட்டானேசுவரர் திருச்சன்னிதிக்குச் சென்று உன் நோயைக் கூறு!” என்று கூறி அனுப்பினார். தம்பியும் தமக்கையின் சொல்லைத் தட்டாது சிவனாரின் சன்னிதிக்குச் சென்றார். பெம்மானைக் கண்டதுமே அவர் உடலில் ஓர் சிலிர்ப்பு உண்டானது. ”இறைவா! கூற்றுவனைப் போல் என்னை முறுக்கி முடக்கும் இந்நோயின் கொடுமையை என்னால் தாங்கவே இயலவில்லை; இதனை விலக்குவீராக!” என்று மனமுருக வேண்டிப் பின்வருமாறு தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

    கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
         கொடுமை பல செய்தன நானறியேன்,
    ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
         பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
         குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
         வீரட்டானத்து உறை அம்மானே!

    என்ன அதிசயம்!! அவரைப் பீடித்திருந்த சூலைநோய் சொல்லாமல் கொள்ளாமல் உடனே அவரைவிட்டு அகன்றது. சிவபெருமானின் சிறப்பைக் கண்ணாரக் கண்டுணர்ந்த தருமசேனர் புளகாங்கிதம் அடைந்தார்; அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பின்பு, தமக்கையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்; இறைவன்மீது அற்புதமான பாக்களைப் பாடியருளினார்; அவருடைய நாவன்மையைக் கண்ட உலகத்தார் அவருக்குத் ’திருநாவுக்கரசர்’’ என்ற திருநாமத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

    மருள்நீக்கியாகப் பிறந்து தருமசேனராகத் திகழ்ந்து திருநாவுக்கரசராய் – சைவசமயக் குரவருள் ஒருவராய் இன்றளவும் புகழோடு விளங்கிவரும் அப்பெரியாரின் மனமாற்றத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அவருடைய தமக்கை திலகவதியார். தம் சொந்த வாழ்வில் பல்வேறு துயரங்களையும், இழப்புக்களையும் சந்தித்தும் தம்பிக்காகவே வாழ்ந்த உத்தமப் பெண்மணி அவர்!

    ’இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்ற உயர்ந்த நெறியோடு வாழ்ந்தவன் இராமன். ஆனால் திலகவதியாரோ மனத்தால் வரித்த ஒருவனுக்காகக் கடைசிவரைத் திருமணமே புரிந்துகொள்ளாமல்
    தவ வாழ்க்கை வாழ்ந்து கற்புநெறியில் இராமனையும் விஞ்சிவிட்ட காரிகை! தமிழகம் கண்ட ஒப்புயர்வற்ற ’மங்கையர் திலகம்!’

    சைவமும் தமிழும் உள்ளவரை இம்மாதர்குல மாணிக்கத்தின் புகழும் மங்காமல் ஒளிவீசும்!

    (முற்றும்)

    படத்துக்கு நன்றி: தினமலர்

     

    Share
  • இனியவளே என்று பாடி வந்தேன்…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சிவகாமியின் செல்வன்2

     

     

    கடற்கரை… காற்று… காதலி… இவ்வரிசையில் வேறென்ன வேண்டும்? கவிதை!

     

    சிவகாமியின் செல்வன்சொல்லில் ஆயிரம் பொருள்வைத்து சொக்க வைக்க முடியுமென்றால் துள்ளும் வார்த்தைச் சரமெடுத்து தொடுக்கும் கவிஞரின் கைவண்ணம் பாருங்கள்! சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்

    ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்? மெல்லிசைமன்னரின் இசையில் விளைந்த கீதம்! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் பொழியும் நாதம்! அன்பு மன மாளிகையில் இருவர் நடத்தும் ஆனந்தவிழா இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்க வைக்கிற வரிகள் செவிகளில் வந்து விழுகின்றன!!

    பெண்மையின் நான்கு குணங்களும் ஒன்றெனக் கண்டிடும்போது காதலன் உள்ளத்தில் தோன்றும் இன்ப வெள்ளம் இப்படித்தான் இருக்குமோ? ஆயிரமாயிரம் காலம் இந்த இன்பம் நிலைத்திருக்க இளமை விரும்புவது இயற்கைதானே! மொட்டுவிரிந்திடும் இதழ்களைப்போல் இன்பம் கட்டுக்கடங்காமல் பாய்ந்திடும் வேளை காதலின் லீலை இப்படித்தானிருக்குமோ?

    மோகத்தில் சாய்கின்ற வேளை பெண்மை இன்பத்தில் தாளாமல் இதழ்கள் இங்கே என்ன அளவீட்டுக் கருவி செய்யும் வேலையைச் செய்கின்றனவாம்.. கவிஞரின் கற்பனையில் ஒரு காதல் கீதம் இன்பத்தேன் சொட்டுகிறது!!

    ஓ… ஓ… ஏ… ஆ…
    ஆஹா ஆ… ஹா…
    எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
    ஓஹோ… ஓஹொஹோ ஹோ
    ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
    இனியவளே என்று பாடி வந்தேன்
    ம்… ம்… ஆஹா ஹா ஹா ஹா…

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆஹா ஹா ஹா ஹா…
    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ…
    ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்

    ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக …
    ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
    துணை தேடி வரும் போது
    கண்ணில் என்ன நாணமோ
    குணம் நான்கில் உருவான
    பெண்மை இன்று போதுமோ
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    திரு நாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    பொன் மாலையில்
    பூ மாலையாய்
    நெஞ்சில் சூடவோ
    சூடவோ …
    சூடவோ …

    இனியவனே என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

    தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாரோ..
    பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
    நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
    கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    ஏன் என்பதை
    நான் சொல்வது
    எங்கும் மௌனமே
    மௌனமே …
    மௌனமே …

    இனியவளே என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

    ஆ… லாலலலா ஓஹொஹொஹோ
    ஒஹொஹோ ஓஹொஹோ…
    ஒஹொஹோ ஓஹொஹோ…

    _______________________________________________________

    படம்: சிவகாமியின் செல்வன்
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
    காணொளி: https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    https://www.youtube.com/watch?v=pmlPL7SMpVM

     

    Share
  • தங்கை நுப்ரா…

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .

     

    அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் “தங்கைகளை” புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும். பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான். அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  “நானாவை” மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. “அன்புள்ள நானா…! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!” “இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நன்றிகள் நிழல்களாக! ” “நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள். அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன். எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன்.

    இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா”.

    கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன். அவன் எழுதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன. இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர். இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா. அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது. நானா…நானா… என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.

    தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான். தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக “ட்ரெஸ்” பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான். அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது “வாருங்கள்” என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது. இரண்டு, மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான். நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள். அதைப் போல் வீடும் கவர்ச்சியாக, அழகாக காட்சியளித்தது. நுப்ரா, வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். இடையில், தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள். ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.

    கடிதத்தில் “நானா…நானா…” என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட “நானா” எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது. பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். “ஏன் பேசாமலே இருக்கீங்க… என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா…? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. “நீங்க நுப்ராதானே…?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். “ஆமாம்” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா…?” என்று படபடப்போடு அவன் கேட்ட போது. “ம்… யாருமே  இல்லை…. உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க… ஆனா… நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை… நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே… இனி  எதற்கு….”  “உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா…..? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

    “பெண்களே இப்படித்தானோ”என  எண்ணியவன்  “நீ…..நானா…நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன்… என்னை மன்னித்துக்கொள்”  “எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை” என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை “நானா ” என அழைத்து, வெறுப்போடு போக இருந்தவனை திரும்பவும்  உட்காரவைத்தார்கள். கூடவே அவள் பெற்றோரும் சிரித்தபடி இன்ஷாத்தை அன்போடு பார்த்தபடி நின்றிருந்தார்கள். இன்ஷாத்துக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

    நானா தங்கை என்று பழகுவார்கள் சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள். ஆண்கள் தனியாக பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம் தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு வழங்கப்பட்டது. நுப்ரா “நானா…….நானா…..” என  வாய்நிறைய அழைத்து உபசரித்ததனால் இன்ஷாத் மகிழ்ந்து போனான். பின்னர் அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

    Share
  • மகா சிவராத்திரி!

    கிரேசி மோகன்

    10991393_409962862505369_7617996230109000024_n

    “இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை
    மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் –
    நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி –
    உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “.

    Share
  • உள்ளம் பெருங்கோயில்!

    பவள சங்கரி

    ஓவியம் : ஜீவா
    ஓவியம் : ஜீவா

    பெருங்கோயிலில் மூலவரைத் தியானித்தேன்
    கோபுரவாயில் செப்பியதனைத்தும் வேதங்கள்
    சீவனெல்லாம் சிந்தைநிறை சிற்றம்பலம்
    கள்ளப்புலனைந்தும் கனிவாய் கட்டுக்குள்
    வள்ளற்பிரான் பாதம்பணிந்து நல்லாற்றலும்
    நயந்துபெற்ற தோற்றமும் சொல்லாற்றலும்
    வியந்துபோற்றும் புவியனைத்தும் பெறவே
    தில்லையுட்கூத்தனை தினம் பணிந்தேத்துவனே!!

    Share
  • பழந்தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    வட்டெழுத்து
    2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
    இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற

    http://www.thevaaram.org/sirppi_transliteration.php

    இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

    தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

    பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

    Wonderful news for the lovers of all Tamil scripts.
    A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
    See: http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html
    Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
    Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

    என்னே… என்னே…. என்னே….
    செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
    அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
    தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

    Share
  • மங்கையர் திலகம் – பகுதி 1

    -மேகலா இராமமூர்த்தி

    வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.

    அக்குழந்தையின் தெய்வீக அழகு ’திருமகளே புவிக்கு வந்து பிறந்துவிட்டாளோ!’ எனப் பிரமிக்கும்வண்ணம் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு உளம்பூரித்த தாய்தந்தையர் பின்னாளில் அது மங்கையர்குலத் திலகமாய் ஒளிவீச வேண்டும் என்று திருவுளம் கொண்டனரோ என்னவோ…அதற்குத் ’திலகவதி’ எனும் பொருத்தமான பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    இதனைச் சேக்கிழார் பெருமான்,

    ”புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின்கண்
    மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
    நிகழும்மலர்ச் செங்கமல நிரைஇதழின் அகவயினில்
    திகழவரும் திருஅனைய திலகவதியார் பிறந்தார்” என்று குறிப்பிடுகின்றார்.

    womanjpgகுலம் விளங்கத் தோன்றிய திலகவதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ச் சிவபக்தியிலும் அழகிலும் ஈடு, இணையற்றவளாய் வளர்ந்துவந்தாள். இவ்வாறு ஆண்டுகள் சில கழிந்தன. ஆயினும், தம் குடிக்கு ஆதாரமாய் ஓர் ஆண்மகவு இல்லையே எனும் ஏக்கம் திலகவதியின் பெற்றோர்க்கு இருந்துவந்தது. ஆமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதிநாதரிடம் தங்கள் விருப்பத்தைச் சொல்லி வழிபட்டு வந்ததன் பயனாய்க் கிடைத்தற்கரிய ஆண்மகவு ஒன்று மாதினியாரின் மணிவற்றில் உதித்தது. அக்குழந்தையைக் கண்டதும் புதையல் கண்டதுபோல் மகிழ்ந்த அக்குடும்பம், உலகத்து மருளையும், அறியாமை இருளையும் அக்குழந்தை நீக்கவேண்டும் எனும் பெருவிருப்பு கொண்டு அதற்கு ‘மருள்நீக்கி’ எனும் அற்புதத் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    ”உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
    மலரும் மருள்நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.” என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு.

    அன்பும் அருளும் மிகுந்த புகழனாரின் குடும்பம் ஊரில் பெருமதிப்போடு வாழ்ந்துவந்த வேளையில், திலகவதி தன் பன்னிரெண்டாம் அகவையில் அடியெடுத்து வைத்தாள். மகளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்ந்த புகழனார் விரைவில் அவளுக்கு மணம் செய்துவிடவேண்டும் என விரும்பினார். (இக்கதை நடந்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு; அப்போது பெண்களின் திருமண வயது 12; ஆண்களின் திருமண வயது 16 ஆகும்.)

    ஒரு நன்னாளில் திருவாமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதீஸ்வரரைத் தரிசித்துத் தம்மகளுக்கு நன்மணத்தை அவ்வீசன் கூட்டுவிக்கவேண்டும் என்று சிறப்புவழிபாடு செய்யக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார் புகழனார். அழகரசியாய்த் திலகவதியும் உடன்சென்று கொண்டிருந்தாள்.

    அப்போது புழுதியை வாரியிறைத்தபடி நாலுகால் பாய்ச்சலில் வீதியில் வந்துகொண்டிருந்த குதிரையொன்று இவர்களுக்கு அருகில் வந்ததும் சிறிது வேகம் குறைந்து நின்றது. அதில் அமர்ந்திருந்தான் கட்டிளங்காளை ஒருவன்; அவன் பார்வை ஒரு கணம் திலகவதியை ஏறிட்டுப்பார்த்தது. உடனே மகிழ்ச்சிக்கு அடையாளமாய் முறுவலொன்று விளைந்தது அவன் முகத்தில்! திலகவதியும் அவனைச் சிறக்கணித்துப் (ஓரப்பார்வை) பார்த்தாள்; சட்டென்று நாணத்துடன் தலைகுனிந்தாள். அடுத்த கணம் புழுதிப்படலத்தைக் காற்றில் கிளப்பியபடி அக்குதிரை அவர்கள் காட்சியினின்று மறைந்தது.

    “யார் அந்த இளைஞன்?” என்று தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற குறுகுறுப்பு திலகவதிக்கு இருந்தபோதிலும் தானாக அதனைக் கேட்க அவள் நாணம் தடுத்தது. அவள் மனத்தில் ஓடியதைப் படித்துவிட்டவர்போன்று அவள் தந்தையே அதுபற்றிப் பேசினார். “அம்மா திலகம்! அதோ குதிரையில் சென்றுகொண்டிருக்கும் இளைஞனைக் கவனித்தாயா?” என்றார்.

    திலகவதி கூச்சத்தோடு “இல்லையப்பா!” என்றாள்.

    ”நம்மைப் போலவே வேளாளர் குடியைச் சேர்ந்தவன்தானம்மா அவனும்; அவன் தந்தைகூட எனக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவன் பெயர் கலிப்பகை” என்றவர் தொடர்ந்து…”நல்ல சூட்டிகையான பிள்ளையம்மா! பல்லவர் சேனையில் பணிபுரிகின்றான்!” என்று முடித்தார். திலகவதி ஆர்வத்தோடு அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டாள்.

    கலிப்பகை வீட்டிலும் அவனுக்குத் திருமணம் முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருந்த சமயம் அது… குதிரையை வாசலில் கட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்த கலிப்பகையின் காதில் தன் பெற்றோர் பேசிக்கொண்டிருந்த திருமணப் பேச்சுக்கள் விழுந்தன. இதுவரையில் அவன் அதைப் பொருட்படுத்தியதில்லை. ஆனால், இன்றோ வீதியில் சென்ற அப்பெண்ணைப் பார்த்தபின்பு அவன் இதயம் அவனிடமிருந்து நழுவி அம்மங்கையிடமல்லவா வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டது!

    எனவே தன் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வந்த கலிப்பகை தன் தாய் தந்தையர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று சற்றே தொண்டையைச் செருமினான். ஏறிட்டுப்பார்த்த அவன் தாய் “என்ன தம்பி! என்ன விஷயம்?” என்றாள் அன்போடு. ”ஒன்றுமில்லையம்மா! என் திருமணத்தைப் பற்றி நீங்களும் தந்தையும் வாய்ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்…” என்று இழுத்தான். அவன் தாய் பெருமூச்சுவிட்டு, “ம்..ம்…நாங்கள் வாய்வலிக்கப் பேசி என்ன பயன்? நீதான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறாயே?” என்றார் சலிப்புடன்.

    ”அதுபற்றிப் பேசுவதற்குத்தான் இப்போது வந்தேன்!” என்றவனை வியப்புடன் நோக்கிய அவன் தாய் தந்தையர், ”எதுவாயினும் தயங்காமல் சொல் தம்பி!” என்று தூண்டவும், ஒரு நிமிடம் யோசித்த கலிப்பகை துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “அம்மா! இன்று நான் வீட்டிற்குவரும் வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; தன் குடும்பத்தாருடன் எங்கோ சென்றுகொண்டிருந்தாள்; அவளை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது; அவளையே மணக்க விரும்புகிறேன்” என்றான்.

    அப்பெண்ணின் தோற்றத்தையும், அவள் குடும்பத்தார் பற்றிய விவரங்களையும் கலிப்பகையிடம் விசாரித்துத் தெரிந்துகொண்ட அவன் பெற்றோர், அவற்றைவைத்து அவன் குறிப்பிடும் அந்த மங்கைநல்லாள் புகழானாரின் திருமகளான ‘திலகவதியே’ என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். மிகவும் பொருத்தமான ஒரு பெண்ணையே தம் மகன் தெரிவுசெய்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அவர்கள் விரைவில் ஒரு நன்னாளைத் தேர்ந்தெடுத்துக் குடும்பத்துப் பெரியோருடனும், ஊர்ப்பெரியோர் சிலருடனும் புகழனார் இல்லத்திற்குச் சென்று திலகவதியைப் பெண் கேட்டனர்.

    ஏற்கனவே கலிப்பகையை நன்கு அறிந்திருந்த புகழனார் தம் மகளை அவனுக்கு மணமுடிக்க மகிழ்வோடு சம்மதித்தார்; பசுபதிநாதன் திலகவதிக்கு நல்லதோர் வழியைக் காட்டிவிட்டான் என்று எண்ணியெண்ணி உளம் பூரித்தார். பெண்கேட்டு வந்தவர்களும் மணமுடிக்க நல்லநாளைக் குறித்துக்கொண்டுவந்து புகழனாரைச் சந்திப்பதாகக் கூறி மகிழ்வோடு விடைபெற்றனர். அவர்கள் சென்றதும் புகழனார் திலகவதியிடம், “அம்மா! உனக்குச் சம்மதம்தானே?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ வெட்கத்தோடு அவ்விடம் விட்டு ஓடிப்போனாள்.

    திருமணத்திற்கு வேண்டிய புத்தாடைகள், அணிமணிகள் ஆகியவற்றை ஆசையோடு வாங்கிச் சேர்க்கத் தொடங்கியிருந்தனர் திலகவதியின் குடும்பத்தினர். அத்தருணத்தில் யாரும் எதிர்பாராவண்ணம் பல்லவ அரசனுக்கும் வடநாட்டரசன் ஒருவனுக்கும் திடீரென்று போர்மூண்டது. பல்லவ மன்னனின் படையில் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டிய சூழல் கலிப்பகைக்கு ஏற்பட்டது. இரு குடும்பத்தாரும் செய்வதறியாது திகைத்தனர். ஊர்ப் பெரியோர்களோடு கலந்து ஆலோசித்ததன் பேரில் போர்முடிந்து கலிப்பகை திரும்பியவுடன் திருமணத்தை நிகழ்த்திவிடலாம் எனும் முடிவு எட்டப்பட்டது.

    போருக்குப் புறப்படுவதற்குமுன் திலவதியைச் சந்தித்துவிட்டுச் செல்லவேண்டும் என்று விரும்பிய கலிப்பகை அவள் வீட்டுக்கு வந்தான். புகழனாரும் மாதினியாரும் அவனை அன்போடு வரவேற்றனர். தன்தாயின் பின்னால் தயங்கியபடியே வந்த திலகவதியைக் கண்டான் கலிப்பகை. முகத்தில் குறும்புப் புன்னகை தவழ, “நான் நாளை போருக்குப் புறப்படுகிறேன்; விரைவில் வெற்றியோடு திரும்பிவருவேன்; விடைகொடுங்கள்!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு அவள் முகத்தையே ’குறுகுறு’வென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

    ”நீங்கள் வெற்றிவீரராய்த் திரும்பிவர அந்தப் பசுபதிநாதரை வேண்டிக்கொள்கிறோம்!” என்று பதில்கூறினாள் திலகவதி; அவள் விழிகள் ஏனோ நீரை உகுத்தன!

    நாட்கள் நகர்ந்தன. போர் உடனடியாக முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை. ஒரு நாள் கடப்பது ஒரு யுகம் கடப்பதாகவே தோன்றியது திலகவதிக்கு. களிப்புடன் இருந்த திலகவதியின் குடும்பத்தில் கவலைசூழும் வண்ணம் புகழனார் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். சில நாட்களிலேயே படுத்த படுக்கையாகிவிட்டார்; செய்த மருத்துவம் எதுவுமே பலிக்கவில்லை. அனைவரும் ஒன்றும்புரியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் துயரத்தை மேலும் கூட்டும் வகையில் புகழனார் இறைவனடி சேர்ந்தார்.

    தன்மகளின் திருமணத்தைச் சிறப்பாய் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த அவர் அந்த ஆசை நிறைவேறுமுன்னரே எதிர்பாராவகையில் இயற்கை எய்திவிடவே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று வாழ்ந்துவந்த மாதினியார் நிலைகுலைந்துபோனார். கணவன் போனபின்பு இவ்வுலக வாழ்வே சுமையாகிப்போனது அவ்வம்மையாருக்கு. கணவனைப் பிரிந்து உயிர்வாழ்வதையே அவர்மனம் ஏற்கவில்லை; தம் குழந்தைகளையோ, சுற்றத்தாரையோ ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கணவனை நினைந்தே வருந்தியிருந்த மாதினியார் சின்னாட்களிலேயே தாமும் உயிர்நீத்தார்.

    சுற்றமுடன் மக்களையுந் துகளாக வேநீத்துப்
    பெற்றிமையால்
    உடனென்றும் பிரியாத வுலகெய்துங்
    கற்புநெறி
    வழுவாமற் கணவனா ருடன்சென்றார்.” என்ற வரிகளில் மாதினியாரின் கற்புநெறியைப் பாங்காய்ப் படம்பிடித்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

    சில மாதங்களுக்குள்ளாகவே தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்துவிட்டு அநாதைகளாக நின்றனர் திலகவதியும், ஏழுவயதேஆன அவளுடைய அருமைத்தம்பி மருள்நீக்கியும். ’நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்தை நித்தம் ஓதியபடித் திருநீறு துலங்கும் நெற்றியோடும் அன்பொழுகும் வார்த்தைகளோடும் தம்மீது பேரன்பு பாராட்டிய தந்தையின் மறைவும், அறுசுவை உணவோடு, ஒழுக்கம், அடக்கம், நற்குணங்கள் அனைத்தையும் சேர்த்தே ஊட்டிய அருமைத்தாயின் பிரிவும் தாங்கொணாத் துயரைத் திலகவதிக்கு அளித்தன. மருள்நீக்கியோ இத்துயரத்தின் வீச்சை முழுதும் உணரமுடியாத சிறுவனாயிருந்தான்; தமக்கை அழுதால் தானும் அழுதான். அவள் பட்டினி கிடந்தால் தானும் பட்டினி கிடந்தான்…பாவம்!

    நல்லவேளையாகப் புகழனார் மாதினியாரின் உறவினரில் சிலர் திருவாமூரிலேயே வசித்துவந்தனர். அவர்கள் இக்குழந்தைகளின் நிராதரவான நிலையைக்கண்டு இரங்கித் தம்மில்லத்திற்கு இவர்களை அழைத்துச்சென்று பாதுகாத்து வந்தனர்.

    மேலும் சில மாதங்கள் உருண்டோடின. உறவினர்களின் அன்பான கவனிப்பில் தந்தை தாயை இழந்த துயரத்தைச் சற்றே மறந்த திலகவதி, தன் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கலானாள். போர்முடிந்து கலிப்பகை விரைவில் திரும்பிவிட்டால் தன் வாழ்க்கையில் ஒளி பிறக்கும்; தம்பியை நன்கு கவனிக்கவும், அவனுக்குத் தேவையான கல்வியை அளிக்கவும் தன்னால் இயலும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டிருந்தாள் அவள்!

    ஆனால்…விதி மீண்டும் தன் கோர விளையாட்டைத் தொடங்கியது. ’போருக்குச் சென்ற கலிப்பகை வெற்றிவீரனாய்த் திரும்பிவருவான்; தன் கழுத்தில் மணமாலை சூட்டுவான்!’ என்ற திலகவதியின் எதிர்பார்ப்பு என்றுமே ஈடேறமுடியாதவண்ணம் ஓர் இடிச்செய்தி அவளைத் தாக்கியது.

    தொடரும்…

     

    Share