Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

வைரமுத்து உணர்த்தும் சுற்றுச்சூழல் சிந்தனைகள்

— து.மணிதேவன்.

 11_mp_Vairamuthu_J_1390230g               பல மனிதர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு சமுதாயம் எனப்படும். மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், காற்று ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியம். மனித வாழ்விற்கு ஐம்பூதங்களின் செயல்பாடுகள் சீராக அமைந்திருத்தல் அவசியம். செயற்கைப் பொருட்களினால் நாளுக்கு நாள் இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன. நிலத்தின் இயல்பிலும் மனித வாழ்வின் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதினத்தில் காணப்படும் சமுதாய மேம்பாட்டுக் கருத்துக்கள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

இயற்கையைக் காத்தல்:

                 உலகம் தோற்றிய காலம் தொட்டு இயற்கை தன் இயல்பில் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைச் சிக்கல் ஏற்படுவது மனித சமூகத்திற்கு தீங்கானது. லூசியானா கடற்கரையில் இருந்து 46வது மையிலில் மெக்சிக்கோ வளைகுடாவில் மீத்தேனும் பெட்ரோலும் கலந்து தீப்பிடித்ததில் கடலில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டது. இயற்கைக்கு மாறான இந்த விபத்துக் குறித்து வைரமுத்து …

                 “என்ன கொடுமை இது! யுகயுகமாய் உயிர்கள் படைத்த இயற்கை ஒரேநாளில் அழிக்கப்பார்க்கிறதா? மிச்சமிருக்கப் போகும் ஒரே பிராணி மனிதன் தானா? மனிதர்கள் இல்லாத உலகத்தில் விலங்குகளும், பறவைகளும் வாழமுடியும். ஆனால் மனிதனால் வாழ முடியுமா? விலங்குகளும், பறவைகளும் அற்ற உலகில்?

என்று இயற்கையின் அழிவு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகள், பறவைகள் நிறைந்த உலகம் மனிதர்களுக்கு ஏற்றது என்பதை உணர்த்தியுள்ளார்.

இயற்கையின் தேவை:

                 காந்தி கிராமம் பல்கலைக்கழகம் எமிலியின் கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டது. அதில் பூமியின் கடைசி உயிராக வந்த பின்னர் பூமியின் போக்கில் மாற்றம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டள்ளது. கட்டுரையின் பகுதியில் …

                “பூமிக்கு வந்து போன உயிர்களிலும், வந்து வாழும் உயிர்களிலும் வல்லமையும், வஞ்சமும், உள்ள உயிர் மனிதன் தான். பூமியை மனிதன் தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பது. மனிதன் மாறுதலை உண்டாக்கினான்

என்று பூமியில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை மாறுபாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

61lPNVMaLmLமரம் நடுதல்:

                 உலகத்தில் மழை  பொழிவதற்கும், உயிரினத்தின் சுவாசம் நடைபெறுவதற்கும் தாவரங்கள் இன்றியமையாதவை. மூன்றாம் உலகப்போரில் கருத்தமாயி சிட்டம்மாவிடம் மரங்களை நடுவதோடு மட்டுமின்றி அவற்றைக் கும்பிட்டு வளர்க்க வேண்டும் என்பதை …

                “வீட்டுக்கு வெளக்கேத்தி வச்சும் புறச்சேலையும் பூமணமும் மாறாம சிட்டம்மாவை தோட்டத்துக்கு கூட்டிக்கிட்டு போயி நட்டுவச்ச மூணு மரக்கன்னுகளையும் கும்பிடச் சொன்னாரு கருத்தமாயி

என்று மரம் நடுவதையும் மரத்தை வழிபாட்டுப் பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

மரத்தை வெட்டுவதை தடுத்தல்:

                மனிதனின் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வீடு கட்டுவதற்கும், வாகனங்களை உருவாக்குவதற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மரங்கள் பயன்படுகின்றன. மரங்களை வெட்டி மனிதர்கள் வாழ்க்கை வசதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அவற்றை சுட்டிக் காட்டுகின்ற விதத்தில் வைரமுத்து மரம் வெட்டுவதை தடுக்கும் நிலையை விளக்கியுள்ளார் …

                “ஏலே முத்துமணி வெறிப்புடிச்சி அலையாதேடா! நம்ம வம்சத்தை வெட்டாதேடா! குல சாமியை கொன்னுடாதேடா

என்று கருத்தமாயி புலம்புவதாக காட்டுவதில் இருந்து மரங்களுக்கு தெய்வத்தன்மை அளித்து அவற்றை வெட்டுவதில் இருந்து தடுப்பதை உணர்த்தியுள்ளார். சமூகத்தில் உள்ள தெய்வ நம்பிக்கையை மரங்களைக் காப்பாற்றுவதற்க பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

உழவரின் அவசியம்:

                 உழவுத்தொழில் முதன்மையான தொழில் என கருதப்பட்ட காலம் மறைந்து வேறு வேலை தெரியாதவர்கள் மட்டும் செய்கின்ற தொழிலாக மாறியிருக்கும் நிலையை  வைரமுத்து சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது விவசாயக் கூலியாக இருக்கின்றவர்கள் கடைசித் தலைமுறையாக கலப்பை பிடிப்பவன் என்ற கருத்தினை …

                “ஊரு கூடி பாடுகிற கூட்டுப் பாட்டல்லவோ விவசாயம். ஊருக்குத்தான் சாதி பேதம் உண்டு நிலத்துக்கில்லே, சகல சாதிக்காரர்களும் ஒரே நேரத்திலே உழுது நட்டு கும்மி அடிப்பார்கள். ஊர் நிலத்தில் வெளியூர் ஆட்கள் வேலை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத விதி. வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை. இன்று உள்ளுர் ஆட்களே

என்று மனக்குறையை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

பாலித்தீன் கேடு:

                 சமூகத்தின் தேவைக்காகப் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகளில் பல மனித சமுதாயத்திற்குத் தீங்கானவையாக உள்ளன. அவற்றுள் ‘நெகிழி’ என்று அழைக்கப்பெறும் பிளாஸ்டிக் தவிர்க்க இயலாப்  பொருளாக மாறி வருகிறது. எளிதில் மக்காமல் நெடுநாள் நிலத்தில் புதைந்து கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் என்னும் பாலித்தின் தீமை குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது …

                “பாலிஸ்டைரினில் உள்ள ஸ்டைரின் என்னும் திரவப் பொருளும் ஏஊயில் உள்ள பிளாஸ்டிக்குகளின் வளையக்கூடிய தன்மையை மேம்படுத்தும் பிளாஸ்டிசைசர் என்னும் பொருளும் பாலிஎத்தினில் உள்ள ஆண்ட்டியாக்சிடண்ட்டுகளும் நுவு-இல் உள்ள அசிட்டால் டிசைடு என்னும் வேதிப் பொருளும் உணவுப் பொருட்களை மாசுப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளன

என்று பாலித்தின் கேடு குறித்து வைரமுத்து எடுத்துரைத்துள்ளார்.

                மண்ணுல பொதச்சா மக்காத பொருளு பாலித்தினும் பிளாஸ்டிக்கும் என்று வைரமுத்து பிளாஸ்டிக்கின் நச்சு தன்மை குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

மண்ணின் பெருமை:

                 இந்தியா பல்வேறு வகையான மண் வளங்களைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது. வைரமுத்து மூன்றாம் உலகப்போர் நாவலில் மண்ணின் பெருமையை உணர்த்தியுள்ளார் …

                “மண்ணைக் கும்பிடும் கலாச்சாரம் கண்ட உங்கள் சமுதாயத்தைத் தான் நான் கும்பிட வேண்டும். இந்த மண்ணை கொன்று போடக்கூடாது பெரியவரே. பனியும், காற்றும், வெயிலும், மழையும் பாறைகளை அறுத்ததில் மண் உண்டானது. இரண்டரை சென்டிமீட்டர் மண் உண்டாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறதாம் ஐயா, அந்த மண்ணை விஞ்ஞானம் கொன்று விடக்கூடாது. அதோ தெரிகிறதே அந்த கொடைக்கானல் குன்று அதன்மேல் ஏறி நின்று கூவுங்கள், கூவச்செய்யுங்கள். மனிதா இயற்கைக்கு திரும்பு” 

என்று குறிப்பிடுவதில் இருந்து மண்ணை வணங்கும் பண்பாட்டை சமூகம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மனிதன் வாழ ஏற்றது பூமி:

                 மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இந்த பூமி உள்ளது. வேற்றுக்கிரங்களில் குடியேறுவதற்கு மனிதன் தயாராவதாகத் தகவல் வருகின்றன. சந்திர மண்டலத்தை சுற்றுலா செல்லவும் செவ்வாய் கிரகத்தில் குடிபுகப்போவதாகவும், அறிவியல் வல்லுநர்கள் அறிக்கை விடுகின்றனர். மனித இனம் வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி என்பதை வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார் …

                செவ்வாய் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முயற்சி நடப்பதாய் செய்தி வருகிறது. அதை நினைத்தால் நான் ஒரு கருப்பு புன்னகை சிந்த வேண்டியவனாய் இருக்கின்றேன். செவ்வாய் கிரகம் என்பது 97 விழுக்காடு கரியமில வாயு கொண்ட வளி மண்டலத்தால் சூழப் பட்டிருப்பது. பூமி என்பது 0.03 விழுக்காடு கொண்ட கரியமில வாயுவும் 79 விழுக்காடு நைட்ரஜனும் 21 விழுக்காடு பிராண வாயுவும் கொண்ட வளி மண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

இந்திய மேம்பாடு:

                 இந்திய நாட்டின் சிறப்பு எமிலி வாயிலாக மூன்றாம் உலகப்போர் புதினத்தில்  உணர்த்தப்பட்டுள்ளது. இந்து, பௌத்தம், சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்த இந்தியா ஒரு மதச் சார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதிலிருந்தும் …

                ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்தியதும் இந்தியா, எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா, காமத்தின் வழி கடவுளைக்கண்டதும் இந்தியா, கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா

என்று குறிப்பிடுவதிலிருந்து வைரமுத்து அயல் நாட்டு பெண்மணியின் வாயிலாக இந்தியாவின் பெருமையை உயர்த்திக்காட்டுகிறார். எமிலி இந்தியாவிற்கு வந்ததன் நோக்கத்தைக் குறிப்பிடும் போது …

                “இந்தியாவிற்கு வந்தது கற்பிப்பதற்கு அல்ல, கற்றுக் கொள்வதற்கு. இந்தியாவின் அறிவுச் செல்வங்களை இன்னும் அழிந்து போகாத கலை மரபுகளை அறுத்து போகாத கலாசாரத் தொடர்ச்சிகளை நிமிர்ந்து  கொண்டிருக்கும் நகரங்களை புதைத்துக் கொண்டிருக்கும் கிராமங்களை விவசாயிகளை சாகவிடும் அலட்சியத்தை விவசாயம் இன்னும் பிழைத்திருக்கும் ஆச்சரியத்தை கற்றுச் செல்லவே வந்தேன்”

என்று குறிப்பிட்டு இந்தியாவின் பெருமையை உணர்த்திக் காட்டுகிறார்.

சமூக மாற்றங்கள்:

                 மாசற்ற உலகம் படைப்பதன் மூலம் ஆரோக்கியமான மனித சமூகம் அமையும் என்பதை வைரமுத்து இப்புதினத்தில் எடுத்துரைக்கிறார்.

                 அட்டணப்பட்டியில் பல் துலக்குவதற்கு, முன்னர் பயன்படுத்திய நைலான் பிரஷ் தவிர்க்கப்பட்டது. வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, வேலங்குச்சி ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். பாலித்தீன் பைகள் தவிர்க்கப்பட்டு காகிதப்பை பயன்பாட்டுக்கு வந்திருந்தது. பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுகின்றனர். மின்சாரமும் மிச்சப்படுத்துகிறார்கள். இத்தகைய சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மனித உறவு:

                 சின்னப்பாண்டி, எமிலியையும் இஷிமுராவையும்  அழைத்து வந்து  அட்டணப்பட்டிக்குள் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தினை காண்பித்தான். அப்பொழுது அவர்களை கடந்து செல்லும் ஒரு இஸ்லாமிய பெண்ணை அழைத்து விசாரிக்கிறார்கள். அவள் இரவில் தங்குவதற்கு ஒரு இந்து சமயத்தவரின் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்கிறாள். அதைக் கேட்டு வியந்து அவர்கள் விசாரிக்கிறார்கள். அதற்கு அவள், எங்கள் ஊரில் புதிய ஏற்பாடு இது, வாரம் ஒருநாள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று ஒரு குழந்தை தங்க வேண்டும். பனிரெண்டு வயதுக்குள் இந்த ஊரே எங்களுக்கு உறவாகிவிடும். வருகிறேன் பங்கஜம் அத்தை காத்திருப்பாள் என்று கூறுகிறாள்.

                 இளம் வயதில் சமயப் பொறை ஏற்ப்பட்டால் பிற்காலத்தில் சமயத்தை அடிப்படையாக கொண்டு பகை வளர்வது தடுக்கப்படும் என்ற கருத்தை வைரமுத்து எடுத்துக் காட்டியுள்ளார்.

முடிவுரை:

                 சமூக மேம்பாட்டிற்கு இயற்கையை காப்பதன் அவசியம் உணர்த்தப் பட்டள்ளது. இயற்கை வளங்களை வேட்டிடையாடி உணவின் தேவையை நிறைவேற்றிய மனித இனத்தின் செயல் விளக்கம் பெறுகிறது. மரம் நடுதலின் அவசியம் சுட்டிக் காட்டப்படுகிறது. மரங்களைக் காப்பதற்கு வழிபாட்டு முறை உகந்தது என்றக் கருத்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சமூகம் மேம்பாடு அடைய உழவுத் தொழில் இன்றியமையாதது என்றக் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. மனிதர்கள் வேறுபாடு கடந்த உறவினர்களாக வாழவேண்டும் என்றக் கருத்து இக் கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

 
 
 

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

 • வளரும் சிகரம் வைரமுத்துஇ அருணன்இ காவியா பதிப்பகம். மு.ப.2012
 • வைரமுத்துவின் கவிதைகளில் சமூதாயச் சிந்தனைகள்இ முனைவர் நங்கைகுருநாதன்இ சந்திரா பதிப்பகம். மு. ப 2008.
 • தமிழ்க் கவிதை வரலாற்றில் வைரமுத்துஇ முனைவர் வே.அ.பழநியப்பன்இ காவியா பதிப்பகம். மு.ப.2014.
 • வைரமுத்து கவிதைகளில் மார்கிசம் தாக்கம்இ முனைவர் இதயகீதன்இ மு.ப. 2012.
 • என் பழைய பனை ஓலைகள்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ மார்ச் 2011.
 • வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்இ முனைவர் பே.ஞானசேகரன்இ தொ.பதிப்பு 2014.
 • கவிராஜன் கதைஇ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2010.
 • இதனால் சகலமானவர்களுக்கும்இ வைரமுத்துஇ சூர்யா வெளியீடுஇ பதிப்பு 2005.
 •  
   
   

  து.மணிதேவன்
  முனைவர் பட்ட ஆய்வாளர்.
  மீனாட்சி இராமசாமி கலை&அறிவியல் கல்லூரி,
  தத்தனூர். அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.

   
   
   

  படம் உதவி: http://www.thehindu.com/books/books-authors/words-of-angst/article4491595.ece

  Print Friendly, PDF & Email
  Share

  Comments (1)

  1. தேமொழி

   நூலின் கருத்தை மிக அருமையாகத் தொகுத்தளிப்பது இப்பதிவின் சிறப்பு, நன்று.  நன்றி.  

  உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க