-மேகலா இராமமூர்த்தி

முந்தைய பகுதியின் தொடர்ச்சி…

போரிலே பகைவர்களையெல்லாம் பந்தாடிக்கொண்டிருந்த கலிப்பகையைப் பகைவர்கள் சிலர் சூழ்ச்சியான முறையில் கொன்றுவிட்டனர் என்ற செய்தி திலகவதியின் காதில் இடியாய் இறங்கியது; உடனே, அடியற்ற மரம்போல் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தாள். அவள் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் சரிந்து அவள்மீதே விழுந்திருந்தன. ’பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ எனும் பழமொழிக்குத் திலகவதியின் வாழ்க்கையினும் விஞ்சிய சான்றில்லை என்று அனைவரும் வேதனையோடு பேசிக்கொண்டனர்.

இரண்டு நாட்களாக, மூர்ச்சை தெளிந்து கண்விழிப்பதும், மீண்டும் இத்துயரச் செய்தியின் அதிர்ச்சியால் மூர்ச்சிப்பதுமாகவே இருந்த திலகவதி மூன்றாம் நாள் காலையில் “உங்களைப் பிரிந்து இனிநான் உயிர்வாழப் போவதில்லை; நீங்கள் சென்ற இடத்திற்கே நானும் வருகின்றேன்!” என்று எங்கோ வெறித்தபடி அலறிக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தாள்; உறவினர் அனைவரும் திகைத்துப்போய் அவளைப் பார்த்தனர். தமக்கையின் கூக்குரலில் நடுநடுங்கிப்போன மருள்நீக்கி பாய்ந்துவந்து அவளைக் கட்டிக்கொண்டு, “அக்கா! என்னைவிட்டுப் போய்விடாதே அக்கா! உன்னைவிட்டால் எனக்கு வேறுயார் இருக்கிறார்கள்? நானும் உன்னுடன் வருகிறேன் அக்கா!” என்று கதறியழுதான்.

தன் வருங்காலக் கணவனின் மரணச்செய்தி கேட்டதிலிருந்து முற்றும் தன்னிலை மறந்திருந்த திலகவதி தன் தம்பியையும் சேர்த்தே மறந்திருந்தாள். இப்போது தம்பியின் அழுகை அவளை இவ்வுலகிற்கு மீட்டுவந்தது. ”அடடா! என்னருமைத் தம்பியை எவ்வாறு மறந்துபோனேன்? என் வாழ்க்கையைப் பற்றியே அல்லவா யோசித்துக் கொண்டிருந்துவிட்டேன்!” என்று தன்னையே நொந்துகொண்டாள். “உன்னைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் மருள்நீக்கி!” என்று அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இக்காட்சியைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ந்துபோய்த் தாமும் அழுதனர்.

அப்போது படுக்கையைவிட்டு எழுந்தாள் திலகவதி; யாரிடமும் எதுவும் பேசாமல் நேரே உடைமாற்றும் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது அனைவருக்குமே புரியாத புதிராயிருந்தது. ஆயினும் அப்புதிருக்குச் சிறிது நேரத்திலேயே விடை கிடைத்தது!

கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்த திலகவதியின் கோலமே மாறியிருந்தது. வெள்ளைச் சேலையை உடுத்திக்கொண்டு, உடலிலுள்ள அணிகலன்கள் அனைத்தையும் களைந்துவிட்டு, நெற்றியில் திருநீறு துலங்க அவள் நின்றிருந்த நிலையைக் கண்ட சுற்றத்தினர் அனைவரும் தீயை மிதித்ததுபோல் திடுக்கிட்டுப் போயினர். “திலகவதி! என்ன கோலம் அம்மா இது?!” என்று ஒரு முதியபெண்மணி வேதனைமேலிட வீறிட்டார்.

thilakavathiஏனையோரும் அருகில்வந்து, “குழந்தாய்! ஏனம்மா இப்படியோர் முடிவுக்கு வந்தாய்? உனக்கும் கலிப்பகைக்கும் நாங்கள் மணம் பேசியிருந்தோமே தவிர திருமணம் இன்னும் நடந்தேறவில்லையே! அப்படியிருக்க நீ எதற்கம்மா கணவனை இழந்தபெண்போல் வெள்ளுடை உடுத்தவேண்டும்?” என்று ஆதுரத்தோடு வினவ, அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப்பார்த்த திலகவதி கணீர்க் குரலில், “உண்மைதான்! எனக்கும் அவருக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லைதான்; ஆயினும் என் தந்தை அவரை என் மணாளனாகத் தேர்ந்தெடுத்தார்; அதனால் நானும் அவரையே என் கணவராக வரித்துவிட்டேன். அக்கணமே எனக்கும் அவருக்கும் திருமணம் (மனத்தளவில்) நடந்துமுடிந்துவிட்டது.

விடுபட்டுப்போனவை…வெளியுலகிற்கு எங்கள் திருமணத்தை அறியச்செய்வதற்கான ‘வதுவைச் சடங்குகள்’ மட்டுமே! திருமணம் நடக்காவிட்டாலும் இப்பிறவியில் அவரே என் கணவர்! அவரை இழந்த நான் இவ்வாறு தவ வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்!” எனத் தன் விருப்பத்தைக் கூறி முடித்தாள். அவ்விளம்பெண்ணின் தீர்மானத்தையும், உறுதியையும் கண்ட சுற்றத்தார் பேச்சிழந்து நின்றனர்.

தன் தீர்மானத்தைத் தெரிவித்துவிட்ட திலகவதி அதன்பின்னர் சுற்றத்தாரின் பாதுகாப்பில் தங்கியிருக்க விரும்பவில்லை. தன் தாய்தந்தையர் வாழ்ந்திருந்த இல்லத்திலேயே வசிக்க விரும்புவதாக அனைவரிடமும் கூறிவிட்டுத் தன் ஒரே துணையான தம்பியையும் அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

தன் முயற்சியாலும், உழைப்பாலும் தம்பியை நன்கு கல்விகற்க வைத்தாள். சிறுவனாக இருந்த மருள்நீக்கி இப்போது வாலிபராக வளர்ந்துவிட்டார். தம் தமக்கையின் அவல வாழ்க்கையைச் சிறுவயது முதலே காணநேர்ந்ததனால் நிலையில்லா இவ்வுலக வாழ்வில் அவருக்குப் பற்றேதும் ஏற்படவில்லை; சிவநெறியிலும் ஏனோ மனம் செல்லவில்லை; எனவே வாழ்வின் நல்லறங்களை உணர்த்தும் சமண சமயத்தில் சேர்ந்துவிட்டார். மருள்நீக்கியின் மனநிலையைப் பின்வரும் பாடலில் அழகாய் விளக்குகின்றார் பெரியபுராண ஆசிரியர்.

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகுவார்.

தம் தமக்கையை விட்டு நீங்கி வேற்றூருக்குச் சென்று அங்குள்ள சமணப் பள்ளியில் சேர்ந்தார் அவர். சிறிது காலத்திலேயே அம்மதத்தின் அறநூல்கள், நீதிநெறிகள், கலைகள் என அனைத்தையும் கசடறக் கற்றுத் தேர்ந்து சமணமதத் தலைவராகவே ‘தருமசேனர்’ என்ற பெயரில் பல்லவ அரசாட்சியில் புகழோடு விளங்குவாராயினார்.

தம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் துறந்து தம்பிக்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருந்த திலகவதியார்க்கு மருள்நீக்கி ‘தருமசேனராக’ மாறியதில் சிறிதும் உடன்பாடில்லை; ஆயினும் அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. மனவேதனை மிகுந்தவராய்த் திருவாமூரை விட்டு வெளியேறிச் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான ’திருவதிகை வீரட்டானம்’ எனும் பதியை அடைந்து அங்குள்ள திருமடத்தில் தங்கினார்; செம்பவளக் குன்றுபோன்ற திருமேனியுடன் விளங்கிய வீரட்டானேசுவரரைத் தினமும் தொழுதும், அச்சிவாலயத்தில் திருத்தொண்டுகள் புரிந்தும் காலங்கழித்து வந்தார்.

ஆயினும், தம் தம்பியை அவர் நினைக்காத நாளில்லை; ”தம்பி மீண்டும் சைவநெறிக்குத் திரும்ப வேண்டும்; சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யவேண்டும்; அதற்கு வீரட்டானேசுவரர் திருவருள் புரியவேண்டும்” என்று ஒவ்வொரு நாளும் சிவபரம்பொருளிடம் கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டிருந்தார் திலகவதியார்.

திலகவதியாரின் விருப்பத்தை நிறைவேற்றச் சிவனார் திருவுளம் கொண்டார். கடுமையான சூலைநோயைத் (வயிற்றுவலி) தருமசேனருக்குத் தந்தார். வலியால் துடிதுடித்தார் தருமசேனர்; அவ்வலியைப் போக்க சமணர்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது. அவ்வேளையில் தருமசேனருக்குத் தம் தமக்கையின் நினைவு வந்தது. இந்நோயைக் குணப்படுத்த அவர் உதவக்கூடும் என்று எண்ணியவராய்த் தாம் தங்கியிருந்த காஞ்சிக்குத் திலகவதியாரை அழைத்துவர ஆளனுப்பினார்.

சமணர்கள் மத்தியில் வாழ்ந்துவந்த தம்பியைக் காணவிரும்பாத திலகவதியாரோ “தருமசேனரைத் திருவதிகைக்கு அழைத்துவருக!” என்று தம்பி அனுப்பியிருந்த ஆளிடம் சொல்லி அனுப்பினார். தமக்கையின் விருப்பப்படியே அவரைக்காணக் கடுமையான வயிற்றுவலியோடு திருவதிகை வந்தார் தருமசேனர்.

தம்பியின் நிலைகண்டு கண்ணீர்வடித்த திலகவதியார் உடனேயே அவருடைய நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசினார். திருவைந்தெழுத்தை ஓதுமாறு பணித்தார். பின்பு, ”வீரட்டானேசுவரர் திருச்சன்னிதிக்குச் சென்று உன் நோயைக் கூறு!” என்று கூறி அனுப்பினார். தம்பியும் தமக்கையின் சொல்லைத் தட்டாது சிவனாரின் சன்னிதிக்குச் சென்றார். பெம்மானைக் கண்டதுமே அவர் உடலில் ஓர் சிலிர்ப்பு உண்டானது. ”இறைவா! கூற்றுவனைப் போல் என்னை முறுக்கி முடக்கும் இந்நோயின் கொடுமையை என்னால் தாங்கவே இயலவில்லை; இதனை விலக்குவீராக!” என்று மனமுருக வேண்டிப் பின்வருமாறு தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
     கொடுமை பல செய்தன நானறியேன்,
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
     பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
     குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
     வீரட்டானத்து உறை அம்மானே!

என்ன அதிசயம்!! அவரைப் பீடித்திருந்த சூலைநோய் சொல்லாமல் கொள்ளாமல் உடனே அவரைவிட்டு அகன்றது. சிவபெருமானின் சிறப்பைக் கண்ணாரக் கண்டுணர்ந்த தருமசேனர் புளகாங்கிதம் அடைந்தார்; அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பின்பு, தமக்கையின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்; இறைவன்மீது அற்புதமான பாக்களைப் பாடியருளினார்; அவருடைய நாவன்மையைக் கண்ட உலகத்தார் அவருக்குத் ’திருநாவுக்கரசர்’’ என்ற திருநாமத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

மருள்நீக்கியாகப் பிறந்து தருமசேனராகத் திகழ்ந்து திருநாவுக்கரசராய் – சைவசமயக் குரவருள் ஒருவராய் இன்றளவும் புகழோடு விளங்கிவரும் அப்பெரியாரின் மனமாற்றத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அவருடைய தமக்கை திலகவதியார். தம் சொந்த வாழ்வில் பல்வேறு துயரங்களையும், இழப்புக்களையும் சந்தித்தும் தம்பிக்காகவே வாழ்ந்த உத்தமப் பெண்மணி அவர்!

’இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்ற உயர்ந்த நெறியோடு வாழ்ந்தவன் இராமன். ஆனால் திலகவதியாரோ மனத்தால் வரித்த ஒருவனுக்காகக் கடைசிவரைத் திருமணமே புரிந்துகொள்ளாமல்
தவ வாழ்க்கை வாழ்ந்து கற்புநெறியில் இராமனையும் விஞ்சிவிட்ட காரிகை! தமிழகம் கண்ட ஒப்புயர்வற்ற ’மங்கையர் திலகம்!’

சைவமும் தமிழும் உள்ளவரை இம்மாதர்குல மாணிக்கத்தின் புகழும் மங்காமல் ஒளிவீசும்!

(முற்றும்)

படத்துக்கு நன்றி: தினமலர்

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மங்கையர் திலகம் – பகுதி 2

  1. நல்லதொரு கட்டுரை மேகலா, பாராட்டுகள். அனைவரும் அறிந்த கதையையே சுவையாகத் தந்து, இலக்கிய நயம் பாராட்டுவதன் மூலம்  மீண்டும் படிக்கவைப்பது உங்கள் எழுத்தின் தனிச்சிறப்பு. 

  2. கட்டுரை குறித்த தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தேமொழி.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *