-மேகலா இராமமூர்த்தி

வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.

அக்குழந்தையின் தெய்வீக அழகு ’திருமகளே புவிக்கு வந்து பிறந்துவிட்டாளோ!’ எனப் பிரமிக்கும்வண்ணம் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு உளம்பூரித்த தாய்தந்தையர் பின்னாளில் அது மங்கையர்குலத் திலகமாய் ஒளிவீச வேண்டும் என்று திருவுளம் கொண்டனரோ என்னவோ…அதற்குத் ’திலகவதி’ எனும் பொருத்தமான பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

இதனைச் சேக்கிழார் பெருமான்,

”புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும்மலர்ச் செங்கமல நிரைஇதழின் அகவயினில்
திகழவரும் திருஅனைய திலகவதியார் பிறந்தார்” என்று குறிப்பிடுகின்றார்.

womanjpgகுலம் விளங்கத் தோன்றிய திலகவதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ச் சிவபக்தியிலும் அழகிலும் ஈடு, இணையற்றவளாய் வளர்ந்துவந்தாள். இவ்வாறு ஆண்டுகள் சில கழிந்தன. ஆயினும், தம் குடிக்கு ஆதாரமாய் ஓர் ஆண்மகவு இல்லையே எனும் ஏக்கம் திலகவதியின் பெற்றோர்க்கு இருந்துவந்தது. ஆமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதிநாதரிடம் தங்கள் விருப்பத்தைச் சொல்லி வழிபட்டு வந்ததன் பயனாய்க் கிடைத்தற்கரிய ஆண்மகவு ஒன்று மாதினியாரின் மணிவற்றில் உதித்தது. அக்குழந்தையைக் கண்டதும் புதையல் கண்டதுபோல் மகிழ்ந்த அக்குடும்பம், உலகத்து மருளையும், அறியாமை இருளையும் அக்குழந்தை நீக்கவேண்டும் எனும் பெருவிருப்பு கொண்டு அதற்கு ‘மருள்நீக்கி’ எனும் அற்புதத் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர்.

”உலகில்வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல
மலரும் மருள்நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.” என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு.

அன்பும் அருளும் மிகுந்த புகழனாரின் குடும்பம் ஊரில் பெருமதிப்போடு வாழ்ந்துவந்த வேளையில், திலகவதி தன் பன்னிரெண்டாம் அகவையில் அடியெடுத்து வைத்தாள். மகளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்ந்த புகழனார் விரைவில் அவளுக்கு மணம் செய்துவிடவேண்டும் என விரும்பினார். (இக்கதை நடந்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு; அப்போது பெண்களின் திருமண வயது 12; ஆண்களின் திருமண வயது 16 ஆகும்.)

ஒரு நன்னாளில் திருவாமூரில் கோயில் கொண்டிருந்த பசுபதீஸ்வரரைத் தரிசித்துத் தம்மகளுக்கு நன்மணத்தை அவ்வீசன் கூட்டுவிக்கவேண்டும் என்று சிறப்புவழிபாடு செய்யக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார் புகழனார். அழகரசியாய்த் திலகவதியும் உடன்சென்று கொண்டிருந்தாள்.

அப்போது புழுதியை வாரியிறைத்தபடி நாலுகால் பாய்ச்சலில் வீதியில் வந்துகொண்டிருந்த குதிரையொன்று இவர்களுக்கு அருகில் வந்ததும் சிறிது வேகம் குறைந்து நின்றது. அதில் அமர்ந்திருந்தான் கட்டிளங்காளை ஒருவன்; அவன் பார்வை ஒரு கணம் திலகவதியை ஏறிட்டுப்பார்த்தது. உடனே மகிழ்ச்சிக்கு அடையாளமாய் முறுவலொன்று விளைந்தது அவன் முகத்தில்! திலகவதியும் அவனைச் சிறக்கணித்துப் (ஓரப்பார்வை) பார்த்தாள்; சட்டென்று நாணத்துடன் தலைகுனிந்தாள். அடுத்த கணம் புழுதிப்படலத்தைக் காற்றில் கிளப்பியபடி அக்குதிரை அவர்கள் காட்சியினின்று மறைந்தது.

“யார் அந்த இளைஞன்?” என்று தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற குறுகுறுப்பு திலகவதிக்கு இருந்தபோதிலும் தானாக அதனைக் கேட்க அவள் நாணம் தடுத்தது. அவள் மனத்தில் ஓடியதைப் படித்துவிட்டவர்போன்று அவள் தந்தையே அதுபற்றிப் பேசினார். “அம்மா திலகம்! அதோ குதிரையில் சென்றுகொண்டிருக்கும் இளைஞனைக் கவனித்தாயா?” என்றார்.

திலகவதி கூச்சத்தோடு “இல்லையப்பா!” என்றாள்.

”நம்மைப் போலவே வேளாளர் குடியைச் சேர்ந்தவன்தானம்மா அவனும்; அவன் தந்தைகூட எனக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவன் பெயர் கலிப்பகை” என்றவர் தொடர்ந்து…”நல்ல சூட்டிகையான பிள்ளையம்மா! பல்லவர் சேனையில் பணிபுரிகின்றான்!” என்று முடித்தார். திலகவதி ஆர்வத்தோடு அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டாள்.

கலிப்பகை வீட்டிலும் அவனுக்குத் திருமணம் முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருந்த சமயம் அது… குதிரையை வாசலில் கட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்த கலிப்பகையின் காதில் தன் பெற்றோர் பேசிக்கொண்டிருந்த திருமணப் பேச்சுக்கள் விழுந்தன. இதுவரையில் அவன் அதைப் பொருட்படுத்தியதில்லை. ஆனால், இன்றோ வீதியில் சென்ற அப்பெண்ணைப் பார்த்தபின்பு அவன் இதயம் அவனிடமிருந்து நழுவி அம்மங்கையிடமல்லவா வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டது!

எனவே தன் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வந்த கலிப்பகை தன் தாய் தந்தையர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று சற்றே தொண்டையைச் செருமினான். ஏறிட்டுப்பார்த்த அவன் தாய் “என்ன தம்பி! என்ன விஷயம்?” என்றாள் அன்போடு. ”ஒன்றுமில்லையம்மா! என் திருமணத்தைப் பற்றி நீங்களும் தந்தையும் வாய்ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்…” என்று இழுத்தான். அவன் தாய் பெருமூச்சுவிட்டு, “ம்..ம்…நாங்கள் வாய்வலிக்கப் பேசி என்ன பயன்? நீதான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறாயே?” என்றார் சலிப்புடன்.

”அதுபற்றிப் பேசுவதற்குத்தான் இப்போது வந்தேன்!” என்றவனை வியப்புடன் நோக்கிய அவன் தாய் தந்தையர், ”எதுவாயினும் தயங்காமல் சொல் தம்பி!” என்று தூண்டவும், ஒரு நிமிடம் யோசித்த கலிப்பகை துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “அம்மா! இன்று நான் வீட்டிற்குவரும் வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; தன் குடும்பத்தாருடன் எங்கோ சென்றுகொண்டிருந்தாள்; அவளை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது; அவளையே மணக்க விரும்புகிறேன்” என்றான்.

அப்பெண்ணின் தோற்றத்தையும், அவள் குடும்பத்தார் பற்றிய விவரங்களையும் கலிப்பகையிடம் விசாரித்துத் தெரிந்துகொண்ட அவன் பெற்றோர், அவற்றைவைத்து அவன் குறிப்பிடும் அந்த மங்கைநல்லாள் புகழானாரின் திருமகளான ‘திலகவதியே’ என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். மிகவும் பொருத்தமான ஒரு பெண்ணையே தம் மகன் தெரிவுசெய்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அவர்கள் விரைவில் ஒரு நன்னாளைத் தேர்ந்தெடுத்துக் குடும்பத்துப் பெரியோருடனும், ஊர்ப்பெரியோர் சிலருடனும் புகழனார் இல்லத்திற்குச் சென்று திலகவதியைப் பெண் கேட்டனர்.

ஏற்கனவே கலிப்பகையை நன்கு அறிந்திருந்த புகழனார் தம் மகளை அவனுக்கு மணமுடிக்க மகிழ்வோடு சம்மதித்தார்; பசுபதிநாதன் திலகவதிக்கு நல்லதோர் வழியைக் காட்டிவிட்டான் என்று எண்ணியெண்ணி உளம் பூரித்தார். பெண்கேட்டு வந்தவர்களும் மணமுடிக்க நல்லநாளைக் குறித்துக்கொண்டுவந்து புகழனாரைச் சந்திப்பதாகக் கூறி மகிழ்வோடு விடைபெற்றனர். அவர்கள் சென்றதும் புகழனார் திலகவதியிடம், “அம்மா! உனக்குச் சம்மதம்தானே?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ வெட்கத்தோடு அவ்விடம் விட்டு ஓடிப்போனாள்.

திருமணத்திற்கு வேண்டிய புத்தாடைகள், அணிமணிகள் ஆகியவற்றை ஆசையோடு வாங்கிச் சேர்க்கத் தொடங்கியிருந்தனர் திலகவதியின் குடும்பத்தினர். அத்தருணத்தில் யாரும் எதிர்பாராவண்ணம் பல்லவ அரசனுக்கும் வடநாட்டரசன் ஒருவனுக்கும் திடீரென்று போர்மூண்டது. பல்லவ மன்னனின் படையில் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டிய சூழல் கலிப்பகைக்கு ஏற்பட்டது. இரு குடும்பத்தாரும் செய்வதறியாது திகைத்தனர். ஊர்ப் பெரியோர்களோடு கலந்து ஆலோசித்ததன் பேரில் போர்முடிந்து கலிப்பகை திரும்பியவுடன் திருமணத்தை நிகழ்த்திவிடலாம் எனும் முடிவு எட்டப்பட்டது.

போருக்குப் புறப்படுவதற்குமுன் திலவதியைச் சந்தித்துவிட்டுச் செல்லவேண்டும் என்று விரும்பிய கலிப்பகை அவள் வீட்டுக்கு வந்தான். புகழனாரும் மாதினியாரும் அவனை அன்போடு வரவேற்றனர். தன்தாயின் பின்னால் தயங்கியபடியே வந்த திலகவதியைக் கண்டான் கலிப்பகை. முகத்தில் குறும்புப் புன்னகை தவழ, “நான் நாளை போருக்குப் புறப்படுகிறேன்; விரைவில் வெற்றியோடு திரும்பிவருவேன்; விடைகொடுங்கள்!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு அவள் முகத்தையே ’குறுகுறு’வென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

”நீங்கள் வெற்றிவீரராய்த் திரும்பிவர அந்தப் பசுபதிநாதரை வேண்டிக்கொள்கிறோம்!” என்று பதில்கூறினாள் திலகவதி; அவள் விழிகள் ஏனோ நீரை உகுத்தன!

நாட்கள் நகர்ந்தன. போர் உடனடியாக முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை. ஒரு நாள் கடப்பது ஒரு யுகம் கடப்பதாகவே தோன்றியது திலகவதிக்கு. களிப்புடன் இருந்த திலகவதியின் குடும்பத்தில் கவலைசூழும் வண்ணம் புகழனார் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். சில நாட்களிலேயே படுத்த படுக்கையாகிவிட்டார்; செய்த மருத்துவம் எதுவுமே பலிக்கவில்லை. அனைவரும் ஒன்றும்புரியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் துயரத்தை மேலும் கூட்டும் வகையில் புகழனார் இறைவனடி சேர்ந்தார்.

தன்மகளின் திருமணத்தைச் சிறப்பாய் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த அவர் அந்த ஆசை நிறைவேறுமுன்னரே எதிர்பாராவகையில் இயற்கை எய்திவிடவே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று வாழ்ந்துவந்த மாதினியார் நிலைகுலைந்துபோனார். கணவன் போனபின்பு இவ்வுலக வாழ்வே சுமையாகிப்போனது அவ்வம்மையாருக்கு. கணவனைப் பிரிந்து உயிர்வாழ்வதையே அவர்மனம் ஏற்கவில்லை; தம் குழந்தைகளையோ, சுற்றத்தாரையோ ஒரு பொருட்டாகவே எண்ணாமல் கணவனை நினைந்தே வருந்தியிருந்த மாதினியார் சின்னாட்களிலேயே தாமும் உயிர்நீத்தார்.

சுற்றமுடன் மக்களையுந் துகளாக வேநீத்துப்
பெற்றிமையால்
உடனென்றும் பிரியாத வுலகெய்துங்
கற்புநெறி
வழுவாமற் கணவனா ருடன்சென்றார்.” என்ற வரிகளில் மாதினியாரின் கற்புநெறியைப் பாங்காய்ப் படம்பிடித்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

சில மாதங்களுக்குள்ளாகவே தந்தை தாய் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்துவிட்டு அநாதைகளாக நின்றனர் திலகவதியும், ஏழுவயதேஆன அவளுடைய அருமைத்தம்பி மருள்நீக்கியும். ’நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்தை நித்தம் ஓதியபடித் திருநீறு துலங்கும் நெற்றியோடும் அன்பொழுகும் வார்த்தைகளோடும் தம்மீது பேரன்பு பாராட்டிய தந்தையின் மறைவும், அறுசுவை உணவோடு, ஒழுக்கம், அடக்கம், நற்குணங்கள் அனைத்தையும் சேர்த்தே ஊட்டிய அருமைத்தாயின் பிரிவும் தாங்கொணாத் துயரைத் திலகவதிக்கு அளித்தன. மருள்நீக்கியோ இத்துயரத்தின் வீச்சை முழுதும் உணரமுடியாத சிறுவனாயிருந்தான்; தமக்கை அழுதால் தானும் அழுதான். அவள் பட்டினி கிடந்தால் தானும் பட்டினி கிடந்தான்…பாவம்!

நல்லவேளையாகப் புகழனார் மாதினியாரின் உறவினரில் சிலர் திருவாமூரிலேயே வசித்துவந்தனர். அவர்கள் இக்குழந்தைகளின் நிராதரவான நிலையைக்கண்டு இரங்கித் தம்மில்லத்திற்கு இவர்களை அழைத்துச்சென்று பாதுகாத்து வந்தனர்.

மேலும் சில மாதங்கள் உருண்டோடின. உறவினர்களின் அன்பான கவனிப்பில் தந்தை தாயை இழந்த துயரத்தைச் சற்றே மறந்த திலகவதி, தன் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கலானாள். போர்முடிந்து கலிப்பகை விரைவில் திரும்பிவிட்டால் தன் வாழ்க்கையில் ஒளி பிறக்கும்; தம்பியை நன்கு கவனிக்கவும், அவனுக்குத் தேவையான கல்வியை அளிக்கவும் தன்னால் இயலும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டிருந்தாள் அவள்!

ஆனால்…விதி மீண்டும் தன் கோர விளையாட்டைத் தொடங்கியது. ’போருக்குச் சென்ற கலிப்பகை வெற்றிவீரனாய்த் திரும்பிவருவான்; தன் கழுத்தில் மணமாலை சூட்டுவான்!’ என்ற திலகவதியின் எதிர்பார்ப்பு என்றுமே ஈடேறமுடியாதவண்ணம் ஓர் இடிச்செய்தி அவளைத் தாக்கியது.

தொடரும்…

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மங்கையர் திலகம் – பகுதி 1

  1. அன்பினிய மேகலா,

    மகாசிவராத்திரியில் அற்புதமான ஆரம்பம்! திலகவதியார் சரிதை உள்ளம் உருகச் செய்கிறது. தொடருங்கள். காத்திருக்கிறோம். வாழ்த்துகள். 

  2. பாராட்டுக்கு மிக்க நன்றி பவளா. உண்மையிலேயே திலகவதியார் வாழ்க்கை வரலாறு உள்ளத்தை உருகச் செய்வதே. இதன் தொடர்ச்சியை நாளை வெளியிடுகிறேன்.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *