இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!
ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென!
விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!
ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!
பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புகளை
பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
பல்கலைக்கழகம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
பாடமாய்ப் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர்!
பேராசிரிராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
ஆறாத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார்!
பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!
துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!
ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகி
தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, ‘வாராயோ வேங்கடேசா’ என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சக்தி சக்திதாசன்
லண்டன்
ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.
என்ன! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது.
நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம். உலக அளவிலே உக்கிரைன் நாட்டில் ஈடம் பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பதிப்படைந்திருக்கிறார்கள்.
அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.
எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளமாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள்.
மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு.
எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.
சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.
இதுதவிர அவருக்கு அவரது கட்சிக்குள்ளிருந்த செல்வாக்குக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். மிகவும் நெருக்கடியாக சொற்பமான பெரும்பான்மையுடன் வட அயர்லாந்துக் கட்சியின் கூட்டணியின் தயவில் ஊசலாடிக் கொண்டிருந்த அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை “ப்ரெக்ஸிட்டை நடைமுறைப் படுத்துவேன்” எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு 80 உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது முதற்காரணம், அவரை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மற்றொருவர் அக்கட்சியில் இருக்கவில்லை என்பது அடுத்த காரணம்.
சரி இப்போ கேள்வி எழுகிறது. இத்தனை அனுகூலங்களைக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சன் இன்று பெரும்பான்மை வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர் எனும் நிலையிலிருந்து பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையை வந்தடைந்தது எப்படி?
பொரிஸ் ஜான்சனின் வெற்றிக்கும், தோல்விக்கும் கோவிட் 19 ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை எனலாம். எப்படி அது அவருக்கு வெற்றி என்று சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கோவிட் 19 எனும் உலகம் எதிர்நோக்கிய முன்னேற்போதும் உலகு கண்டிராத நோயினூடாக நாட்டை வழிநடத்த வேண்டிய முதல் பிரதமராக நாட்டினை இழப்புகள் அதிகமின்றி அவ்விருளினைக் கடந்து கூட்டிச் சென்றிருக்கிறார். மேற்குலக நாடுகளிலேயே இந்நோய்க்குத் தேவையான தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்வனவு செய்து முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய நாடு எனும் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.
இனி இந்தக் கோவிட் 19 அவருக்கு எந்த வகையில் தோல்வியைப் பரிசாக்கியது என்று பார்க்கலாமா?
கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்கும் தீவிர சட்டங்களை அமுலாக்கிய பொரிஸ் ஜான்சன் அவர்களது முக்கிய ஆலோசகராக இருந்தவர் டொமினிக் கமிங்ஸ் என்பவர் ஆவார். இந்தக் கோவிட் சட்டங்கள அமுலாக்க ஆலோசனை வழங்கிய அவரே அச்சட்டங்களை மீறியது வெளிப்பட்டதே பொரிஸ் ஜான்சன் அவர்களின் சறுக்கலுக்கு ஆரம்பச்சுழி இட்டது என்று சொல்லலாம்.
சட்டங்களை மீறிய அவரது ஆலோசகரை தண்டிக்காமல் மன்னித்தார் பொரிஸ். அதுவே அவரது தொடர்ந்த தவறான நடத்தைகளின் ஆரம்பம். கருத்து வேற்றுமைகளினால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வெளியேறிய டொமினிக் கமிங்ஸ் தன்னுடன் பொரிஸ் ஜான்சனை விழுத்தக்கூடிய பல ஆவண இரகசியங்களோடு வெளியேறி இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
கொஞ்சம் கொஞ்சமாக பொரிஸ் ஜான்சனின் முகச்சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிரித்து மழுப்பி முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொரிஸ் ஜான்சன் அவர்களது அரசியல் அனுபவ வெற்றிடம் மக்களுக்குப் புலப்படத் தொடங்கியது.
தொடர்ந்து கசியத் தொடங்கிய அரசாங்க உள்நடவடிக்கைகள் அவருக்கு வெடி வைத்தன. தம்முடைய இரத்த உறவுகளின் மரணத்தின் போது உடனிருக்க முடியா நிலையிலிருந்த மக்கள் அப்போதைய கால கட்டத்தில் பிரதமரின் அலுவலகத்தில் மது உள்ளடங்கிய ஒன்றுகூடல்கள் நடந்ததை அறிந்தால் சும்மா விடுவார்களா என்ன?
வெறும் வாய்க்கு எப்போ அவல் கிடைக்கும் என்று காத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பத்துநாள் பட்டினி கிடந்த நாயின் முன்னால் வீசப்பட்ட மாமிசத் துண்டினைப் போல இந்தக் கசிவுகள் அமையவும். பாராளுமன்றத்தில் உண்டு இல்லை என்று விவாதம் செய்தார்கள். விழித்துக் கொண்ட ஊடகங்களுக்கு மென்று சப்பித் துப்புவதற்கு பிரதமரும், அவரைச் சார்ந்த பலரும் அகப்பட்டுக் கொண்டார்கள்.
தனக்கு கீழியங்கும் தனது அலுவலகத்தில் கோவிட் 19 சட்டங்களை மீறும் வகையில் எதுவிதமான ஒன்றுகூடல்களும் நடைபெறவேயில்லை என்று ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் உறுதியளித்த பிரதமரின் முகத்தில் கரி பூசப்பட்டது. துடைத்துக் கொண்டே சிரித்தார் பொரிஸ் ஜான்சன்.
விளைவாக நீண்டதோர் விசாரணையின் பின்பு பொலீசாரினால் கிரிமினல் குற்றத்துக்கான அபராதத்தைச் செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பொரிஸ் ஜான்சன்.
இதைவிடச் சிறிய குற்றச்சாட்டுகளுக்காகவே பதவி விலகிய பலர் உதாரணமாக இருக்க பதவியை இறுகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பொரிஸ் ஜான்சன் வெறும் மன்னிப்புடன் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விடயமும், இவர் மீது மக்கள் கொண்ட அவநம்பிக்கையும் நிறுபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டுதான் இருந்தது.
எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா என்ன? ஒரு நாயின் கால்களில் கிடைத்த எழும்புத் துண்ட அது சும்மா விட்டு விடுமா என்ன? மக்கள் மனங்களில் பொரிஸ் ஜான்சன் பற்றிய அவநம்பிக்கை, மற்றும் தயங்காமல் உண்மைகளை மறுக்கும் வல்லமை பெற்றவர் எனும் எரிந்து கொண்டிருந்த அபிப்பிராய நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தவறவில்லை.
இதன்போது பொரிஸ் ஜான்சனைக் காப்பாற்ற வந்தது போலவே ரஸ்ய அதிபர் பூட்டின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சனுக்கு முன்னால் ஒரு மிதக்கும் கட்டையை வீசினார் பூட்டின். விடுவாரா பொரிஸ் ஜான்சன்? எட்டிப் பிடித்துக் கொண்டார். ஒருவாறு கரையேறி விடுவார் என்றுதான் அரசியல் அவதானிகள் கருதினார்கள். அத்துடன் உக்கிரன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு, ப்ரெக்ஸிட் மற்றும் உக்கிரைன் போர் முதலியனவற்றின் தாக்கத்தில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்வு அவைகளும் பொரிஸ் ஜான்சன் மீது விழுந்த கற்களைத் தடுக்கும் கேடயங்களாகின.
சரி இவையெல்லாவற்றையும் ஒருவாறு பூசி மெழுகி சமாளித்து விட்டேன் என்று பெருமூச்செறிந்து நடந்த பொரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது.
சரி அந்தப் பேரிடி எந்த வடிவில் அவருக்குக் காத்திருந்தது என்று அறிய ஆவலாக இருப்பீர்களே!
பொரிஸ் ஜான்சன் அவர்களால் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களை வழிநடத்தவும், அவர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதற்கும் அமர்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உப தலைவர் பதவிக்கு சிலகாலங்களின் முன்னால் அமர்த்தப்பட்டவர் கிறிஸ் பின்ச் என்பவர். பிரதமராவதற்கு முன்னால் பிரதமர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பொரிஸ் ஜான்சன் அவர்கள் வெளிநாட்டு அமைச்சராகவிருக்கும் போது இதே கிறிஸ் பின்ச் அவரின் கீழ் பணிபுரிந்தார். அப்போது அவர் மற்றொரு அலுவலகப் பணியாளருடன் முறைதவறி நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்பு மன்னிப்புக் கேட்டதன் பிரகாரம் பொரிஸ் ஜான்சனினால் மன்னிக்கப்பட்டவர்.
சரி இப்போது இதே கிறிஸ் பின்ச் என்ன செய்து விட்ட்டார் தெரியுமோ? கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் ஒன்றுகூடும் கிளப் ஒன்றிலே இக் கிறிஸ் பின்ச் என்பவர் அதிகமாக மது அருந்தி விட்டு அங்கு இருந்த இரண்டு இளம் கன்சர்வேடிவ் ஆண் உறுப்பினர்களோடு முறை தவறி நடந்திருக்கிறார்.
இந்தப் பிரச்சனை வெளியே ஊடகங்களில் வருவதறிந்து இக் கிறிஸ் பின்ச் தானே தனது பதவியை இராஜினாமச் செய்தார். ஆனால் இதன் பின்னும் அவரை கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலக்க பொரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர இவரை இப்பதவிக்கு அமர்த்தும் போது இவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று தனக்குத் தெரியாது என்று வேறு ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்திலும் சொல்லி விட்டார்.
அது தவிர ஊடகங்களில் அதை வலியுறுத்தும்படி தனது அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களைப் பணித்துள்ளார்.
அது பொரிஸ் ஜான்சன் நினைத்த பாதையில் செல்லவில்லை. கிறிஸ் பின்ச் அவர்களின் மீதான முந்தைய குற்றச்சாட்டு ஏற்கனவே பொரிஸ் ஜான்சனுக்குத் தெரியும் எனும் உண்மை வெளிவந்தது. “என்னை மன்னித்து விடுங்கள் நான் மறந்து விட்டேன்” என்றார் பொரிஸ் ஜான்சன். மன்னிப்புக்கும் ஒரு எல்லையுண்டு தானே! இனித்தன் சாயம் மக்களிடம் வெளுக்காது என்றுணர்ந்தும் பதவிக் கட்டிலை விட்டிறங்க மறுத்து விட்டார் என்றால் பாருங்களேன் !
“இதற்கு மேலும் தாங்காதடா சாமி!” என்று நிதியமைச்சர் ரிஷி சுனாக், மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் இருவரும் தமது அமைச்சர் பதவியை இராஜினாமச் செய்தார்கள். பொரிஸ் ஜான்சன் காகித அட்டையில் கட்டிய மாளிகை சரியத் தொடங்கியது. ஒவ்வொன்றாக அரசாங்கத்தில் இருந்த துணை அமைச்சர்கள், காரியதரிசிகள் எனச் சுமார் 54 பேர் ஒன்றன் பின் ஒன்றாக இராஜினாமாச் செய்தார்கள்.
அவர்கள் அனைவரதும் காரணம் பிரதமர் மீதான அவநம்பிக்கை.
வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக பொரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது,
“கெட்டிக்காரனின் பொய்யும், புளுகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்”
இது எட்டு நாளில் இல்லை சுமார் இரண்டு வருடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சரி இதிலே எங்கே சர்வாதிகாரம்? எனும் கேள்வி எழுந்திருக்குமே!
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இராஜினாமாச் செய்து விட்டார். அடுத்த பிரதமரை வெறும் 200000க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரிவு செய்யப் போகிறார்கள்.
8 பேர் பிரதமராவதற்காக கட்சித் தலைவர் பதவிக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த போதிலும் அவர்களுள் இருவரை மட்டுமே பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் வாக்களித்துத் தெரிவு செய்து தமது அடிப்படை உறுப்பினர் முன் நிறுத்துவார்கள்.
சரி வானோலி நிகழ்ச்சி ஒன்றில் நானறிந்து கொண்டது காதைக் கொடுங்கள் சொல்கிறேன்.
கடைசியாகத் தெரிவு செய்யப்படப் போகும் இருவரில் யார் பிரதமராக வேண்டும் என்று பெரும்பான்மை கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களோ அவர்களோடு தெரிவு செய்யப்படும் மற்றைய வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்?
கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாதவராக இருக்க வேண்டும் என்பதால் அத்தகைய வழியில் தமது சக உறுப்பினர்களையும் வாக்களிக்கும் வகையில் வழி நடத்தி விடுவார்களாம். எப்படி இருக்கிறது ஐனநாயகம்?
ஓ! இதுதான் ஐனநாயகச் சர்வாதிகரமோ ?
சத்தியமணி
உறங்கச் சயனமோடு
உறங்கா நயனமோடு
முழங்கச் சங்கினோடு
முழங்காச் சங்கமோடு
வணங்க அடிகளோடு
வணங்கா முடிகளோடு
இரக்கத்தில் வந்தனனே
அரங்கனைக் கும்மியடி 1
குன்றாடும் இடமாகி
கோவிந்தன் இருந்தாலும்
நின்றாடும் யமுனையதில்
கோபாலன் இருந்தாலும்
மன்றாடும் நிலைக்கெமை
மாற்றாது இருப்பாயே
அன்றாடம் அரியென்றே
அரங்கத்தில் கும்மியடி 2
அளந்தானாம் சிற்றடியில்
உயர்ந்தானாம் பேருருவில்
கலந்தானாம் அலைமகளைப்
பிரிந்தானாம் மானதனால்
சேர்ந்தானாம் தென்னிலங்கை
சிறந்தானாம் ரகுராமன்
அவன்தான் இவனென்றே
அரங்கத்தில் கும்மியடி 3
விட்டலன் பேர்சொல்லி
வீதியில் களிப்பாட்டம்
வித்தகன் அரியென்று
பக்தரிசை குளிப்பாட்டும்
பண்டரி நாமந்தனில்
புண்டரியின் அபங்கத்தில்
வரியாகி பண்ணாகி
அரங்கத்தில் கும்மியடி 4
மானால் கெட்டதும் (சீதை)
மதியால் கெட்டதும் (வாலி)
கூனால் கெட்டதும் (கைகேயி)
சூதால் கெட்டதும் (தர்மர்)
காதால் கெட்டதும் (தசமுகன்)
கண்ணால் கெட்டதும் (கௌரவர்)
கூறுமரி கதைக்கேட்டு
அரங்கத்தில் கும்மியடி 5
தீராத பிறவிச்சுழல்
தீர்ப்பான் அடிபற்றி
ஆறாத பழியெலாம்
அழிப்பான் கழல்பற்றி
கூறாத உரையெலாம்
கீதையாய் பொருள்பற்றி
மாறாத அருளுண்டான்
அரங்கத்தில் கும்மியடி 6
ஏழேழு பிறவியெலாம்
எம்மோடு வந்தானோ
ஏழுமலை தன்னைவிட
எம்முளமாய் நின்றானோ
வாழுமற வாழ்வெனவே
வந்தினிதே வைத்தானோ
தூயுமனத் தாயானான்
அரங்கத்தில் கும்மியடி 7
இருப்பதில் இருப்பதும்
இல்லாது இருப்பதும்
மறைப்பதும் தெரிவதும்
தெரிந்தும் மறைப்பதும்
கிடைப்பதும் இழப்பதும்
கிட்டாதும் நிலைப்பதும்
நாரணன் செயலென்றே
அரங்கத்தில் கும்மியடி 8
தேனாய்த் தமிழூட்டி திகட்டாப் பொருளாற்றி
பூணாய்ப் பூட்டியே புகட்டி அருளாற்றி
நாணாய் நாவேற்றி நல்லிசைப் பண்ணாகி
அரங்கன் அரங்கத்தில் அடிமனமே கும்மியடி 9
பற்றியது செவ்வடிகள்
எட்டியது வைகுந்தம்
சுற்றியது சுதர்சனம்
சுரமுடனே சங்கநாதம்
வெற்றியினி வெற்றியென
வேங்கடன் மணியொலியே
நற்றவினை யாவும்பெற
அரங்கத்தில் கும்மியடி 10
மேகத்தில் தேவரவர்
நீர்வாரி தெளிக்கஅரி
போகத்தில் ரதமேறி
பூரியில் பவனிவரும்
கோலத்தில் ஊர்வலமே
அடியவர் குறையழியும்
சோகமெலாம் மறக்கும்
அரங்கத்தில் கும்மியடி 11
துயிலைக் கலைத்து துயிலோனை எழுப்ப
கயிலை மலையோடு
கங்கை கரைதற்போல்
மங்கையர் அலைபுவி தாயாரும் எமதென்றே
சங்கைத் தரித்தோனாம்
அரங்கனைக் கும்மியடி 12
கற்றதும் உற்றதும் கழனியில் பிறந்து
பெற்றதும் அற்றதும்
பேருடன் பதவிகளைக்
குற்றமற அறமுடன்
வற்றாது வரமளித்த
அரங்கனைச் சரணடைய
அரங்கத்தில் கும்மியடி 13
அளந்தானாம் சிற்றடியில்
உயர்ந்தானாம் பேருருவில்
கலந்தானாம் அலைமகளைப்
பிரிந்தானாம் மானதனால்
சேர்ந்தானாம் தென்னிலங்கை
சிறந்தானாம் ரகுராமன்
அவன்தான் இவனென்றே
அரங்கத்தில் கும்மியடி 14
விட்டலன் பேர்சொல்லி
வீதியில் களிப்பாட்டம்
வித்தகன் அரியென்று
பக்தரிசை குளிப்பாட்டும்
பண்டரி நாமந்தனில்
புண்டரியின் அபங்கத்தில்
வரியாகி பண்ணாகி
அரங்கத்தில் கும்மியடி 15
நேற்றாகி மறைந்தான் இன்றாக இருந்தான்
கூற்றாகி நாளையெனக்
கூப்பிடவே வருவான்
காற்றாகி மூச்சாகி
மாற்றவரும் வேளையிலே
வாரணம் சூழவரான்
அரங்கத்தில் வாசலிலே அடிமனதே கும்மியடி 16
கருடன் பேருருவாய்
கொடியென மேலமர
அனுமன் கையுயர
வெற்றி மேலுயர
ஆழ்வார் பாசுரமோ
ஆனந்த சுரமுடனே
ரங்க ரங்காவென
அரங்கத்தில் கும்மியடி 17
தாயார் தரிசனமும்
தன்வந் தரிதுணையும்
ஆயர்ப் பாற்குவளை
அணைத்த கரங்களும்
பாறாழி படுக்கையும்
பாதத்தின் தரிசனமும்
போதாதா கலியழிய
அரங்கத்தில் கும்மியடி 18
கவியின மென்றெனை
நாவினில் அமுதிட்டு
புவியர சாயிரமும்
போற்றிட அருளிட்டு
கவியர சாகசடாரி
சிரசிலே வைத்தானே
அழியா நிலைதந்த
அரங்கத்தில் கும்மியடி 19
சீயரும் தீர்த்தமிட
பட்டரும் துளசிதர
தீயரும் விலகிடவே
துட்டரும் தூயமென்ன
ஆயரின் நாவினிக்க
அழைக்கும் அரியெனும்
நாமமதைக் கூவியே
அரங்கத்தில் கும்மியடி 20
கரிசனம் மிகபெற்று
கதவுகள் திறந்துவிட்டு
துரிதமாய் அழைத்து
துழாய்தமை அணிவிக்க
அரிசனம் அந்தணம்
வேதியர் கூடிபெறும்
தரிசனம் தாவென்று
அரங்கத்தில் கும்மியடி 21
மலையாடும் இடம்தனில் கோவிந்தன் இருந்தானோ
அலையாடும் யமுனையிலே கோபாலன் இருந்தானோ
மன்றாடும் நிலைக்குஎமை வீழாதிருக்கவென
அன்றாடம் அரியெனவே அரங்கத்தில் கும்மியடி 22
காரணம் முன்னாகி
காரியம் பின்னாகி
சீரணம் ஆகுமுன்
சிந்தையில் சிதையாகி
பூரணம் முடிவாகி
பொலிவினில் சமமாகி
அரங்கத்து வாசலிலே
ஆனந்தக் கும்மியடி 23
உயிரெனப் பேரிட்டு
உடலென்று உணவிட்டு
உறவென்று உணர்வோடு
துறவென்று வழியிட்டு
மடிதன்னில் பாலிட்டு
மடியென்றும் பாலிட்ட
உறக்கத்தில் வைகுந்தன்
அரங்கத்தில் கும்மியடி 24
வரமென்று பெறுவதும் வாழ்வுக்கு போறாது
தரமென்று தந்தாலும் தரணிக்குத் தேறாது
அறமென்று அறிந்தே
மரணத்தின் முன்னேவா
இரங்கடா அரங்காவென
அரங்கத்தில் கும்மியடி 25
இரண்டிலே ஒன்றாக
ஒன்றிலும் இரண்டாக
சேர்ந்தும் பிரிவாக
பிரிவிலும் சேர்வாக
ஒலியாக ஒளியாக
வழியாக வெளியாக
அங்கத்தில் புலனான
அரங்கத்தில் கும்மியடி 26
வந்தனன் எதிரிலே
தந்தனன் அமுதினை
அந்தணன் வாமனன்
முந்தினன் மாதவன்
நந்தகோ பாலனின்
அரங்கத்தில் கும்மியடி 27
அங்கமெ லாநிறைந்து
அணியாய் அணிகின்ற
தங்கமென மிளிர்ந்து
கவசமாய்க் காக்கின்ற
இங்குமென எங்குமென
எளிதாய் உடனுறைய
மங்கையலை நாயகியின்
அரங்கத்தில் கும்மியடி 28
மங்களம் பெருக்கிட
மனதெலாம் நிறைவுற
திங்களின் முகமலர
திக்கெலாம் வாழ்த்துரைக்க
எங்கெலாம் எப்போதும்
என்னுடனே இருப்பானோ
அரங்கா இரங்காயென
அரங்கத்தில் கும்மியடி 29
தங்கமய விமானத்தைத்
தேவரவர் பூசிப்பதும்
காயத்ரி மண்டபமும்
காரிருள் சயனமும்
வேண்டும் நொடியினில்
என்முன் தெரியவை
நித்தமும் அரங்கனென
நிறைவோடு கும்மியடி
…………. அரங்க கும்மி ( சத்தியமணி)
பத்து நாளில் தில்லியிலிருந்து திருச்சிக்கு அழைத்து திருவரங்கன் தரிசனம் கொடுத்தது அற்புதம்

சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
தமிழ்நாடு எனப் பெயர் வைத்ததன் மூலம் சோறு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அண்ணா பதில் அளித்துள்ளார். ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பலகாரங்கள் வட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அவை இனிக்காதா என்ற கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. சுவையான உரை.
(ஜூலை 18 (1967) – தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
இராவணன் போர்க்களம் புகுந்த செய்தியை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராமனின் தோள்கள் பூரித்தன. போர்க்கோலம் பூண்டான் அவன். போர்க்களம் புகுந்த இராவணனோடு முதலில் போரில் இறங்கியவன் சுக்கிரீவன். கடும்போரினால் அவன் சற்றுக் களைத்த வேளையில் அவனுக்குத் தோள்கொடுக்க இடைபுகுந்தான் அனுமன். மரங்களையும் மலைகளையும் பெயர்த்து இராவணனையும் அவன் சேனையையும் தாக்கினான். பதிலுக்கு இராவணனும் மாரியென அம்புகளைப் பொழியவே அவற்றால் அலக்கண் (துன்பம்) உற்றான் அஞ்சனை மைந்தன்.
வானர சேனையை இராவணன் துன்புறுத்துவது கண்டு அவனை எதிர்க்கவந்தான், வில்லேந்திய மேருவென விளங்கிய, இராமனின் இளவலான இலக்குவன்; வந்தவன் தன் வில்லின் நாணினைத் தெறித்து ஒலியெழுப்பவே இடிமுழக்கமொத்த அவ்வொலிகேட்டுக் கிலிகொண்டது அரக்கர்குழாம்.
வல்லமைமிகு இராவணனும் தன்னருகில் நின்ற வீரர்களின் உள்ளம் இலக்குவனின் நாணொலியால் வேறுவேறாகி உடைந்து நிற்கின்ற தன்மையை நோக்கி, வீரனாகிய இராமனின் தம்பி இலக்குவனுடைய கூற்றுவனின் கொடும் புருவம் போன்ற வில் எழுப்பிய பேரோசையையும் கேட்டு, ”என்னே இவன் ஒரு மனிதனா!” என வியந்து, சரிந்த தன் மகுடத்தை உயரே ஏற்றிக்கொண்டான்.
ஆற்றல்சால் அரக்கன்தானும் அயல்நின்ற வயவர் நெஞ்சம்
வீற்றுவீற்று ஆகிஉற்ற தன்மையும் வீரன் தம்பி
கூற்றின்வெம் புருவம்அன்ன சிலைநெடுங் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா. (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7159).
இலக்குவனின் வில் வளைவை கூற்றுவனின் புருவ வளைவோடு கம்பநாடர் ஒப்பிட்டிருப்பது அரியதொரு கற்பனையாய்ப் பொலிகின்றது.
இலக்குவனின் அம்புகளை இராவணன் இலாவகமாய்த் தடுத்து, அவன் அம்பறாத் தூணியையும் அறுத்தவேளையில், இளைப்பாறி அங்குவந்த அனுமன் பேருருவம் எடுத்து இராவணன் முன்பு நின்றான்; இராவணனைப் பார்த்து,
”இராவணா! உன் மார்பில் நான் குத்துகின்றேன்; அக்குத்துக்கு நீ பிழைத்திருந்தால் உன் முழுபலத்தோடு என்னை மார்பில் குத்துவாய்; உன் குத்துக்கு நான் பிழைத்திருந்தேனாகில் உன்னோடு இனிப் போர் புரியேன்” என்று சூளுரைத்தான். அதுகேட்டு வியந்த இராவணன்,
”பேருருவெடுத்து நெடிது நின்றோனே! தனியாய் உள்ள நீ, போராயுதம் எதுவும் உடையாய் அல்லை; அப்படியிருந்தும் வெறுங்கையால் என் சுற்றத்தார் பலரைக் கொன்றாய்; வலிமைமிகு சேனையோடு உயர்ந்த தேரின்மேல் வந்த என்னெதிரில் வந்து, உன்னுடைய ஆற்றல் ஒன்றையே கொண்டு எதிர்நிற்கின்ற உனக்கு இவ்வுலகில் உள்ளவர் யார் நிகராவார்? சொல்!” என்று அனுமனின் வீரத்தையும் பேராண்மையையும் போற்றினான்.
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒருநீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர்மேல் நிமிர்கொடு வெஞ்சிலை கோலி
வன்தானையினுடன் வந்தஎன் எதிர்வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)
’வீரனை வீரன் அறிவான்’ எனும் மொழிப்படி அனுமனின் வீரத்தை உணர்ந்து போற்றிய இராவணன், அனுமனைப் பார்த்து ”என்னைக் குத்து” என்று அவனுக்கு அனுமதியளித்தான்.
உடனே, தன் வயிரக் கையால் அனுமன் இராவணனின் மார்பில் குத்தினான்; அக்குத்தினால் இராவணன் மார்பில் தங்கியிருந்த திசையானைகளின் தந்தங்கள் அவன் முதுகுவழியாய்ப் பொலபொலவெனக் கீழே வீழ்ந்தன. கதிகலங்கிப் போன இராவணன், தன்னுயிர் உடலைவிட்டு வெளியேசென்று மீண்டதுபோன்ற உணர்வினைப் பெற்றான்.
மீண்டும் அனுமனின் வீரத்தைப் புகழ்ந்த அவன், ”இப்போது என் முறை; நான் விடுகின்ற குத்தைத் தாங்கிக்கொண்டும் நீ உயிர்பிழைத்து இருப்பாயாகில் நீ இன்றும் இருப்பாய்; என்றும் இருப்பாய்; உனக்கு அழிவில்லை” என்றான். இது தன்னை அறியாமலேயே இராவணன் அனுமனுக்குத் தந்த வாழ்த்தாய் அமைகின்றது. அதனைத் தொடர்ந்து அனுமனை இராவணன் தன் முழுபலத்தோடு குத்த அவனும் கலங்கிப்போனான்.
அதன்பின்னர் இலக்குவனும் இராவணனும் மீண்டும் ஒருமுறை நேரடிப் போரில் ஈடுபடலாயினர். இராவணனின் ஆற்றல்மிகு அயன் வேலினால் தாக்குண்ட இலக்குவன் சோர்ந்தான். அவனை இலங்கைக்குத் தூக்கிச் செல்ல முயன்ற இராவணன், தூக்க இயலாமல் வெய்துயிர்க்க, அப்போது அங்குவந்த அனுமனோ தாய்க்குரங்கு தன் மகவினை எடுத்துச் செல்வதுபோல் இலக்குவனை மிக எளிதாக அவ்விடத்தினின்று தூக்கிச் சென்றான்.
பக்தியும் அன்பும் உடையார்க்கு, இறைவன் எளியவன் என்னும்
கருத்தை இப்பாடல் உணர்த்துகின்றது. “பத்துடை அடியவர்க்கு
எளியவன்; பிறர்களுக்குரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்” (திருவாய்: 1:3:1) என்னும் நம்மாழ்வாரின்
திருவாய்மொழிப் பாசுரத்திற்கு அரியதோர் விளக்க நிகழ்ச்சியாய்
இஃது அமைந்துள்ளது.
போர்க்கோலம் பூண்ட இராமன் இராவணனோடு பொருதற்கு அப்போது வந்துகொண்டிருந்தான். இராமனைக் கண்ட இராவணனும் அவனை எதிர்ப்பதற்குத் தோதாய்த் தன் தேரை அவன் பக்கம் திருப்பினான். தேரின்றித் தமியனாய் வந்த இராமனைக் கண்ட அஞ்சனை மைந்தன், ”ஐய! நின்னொடு போரிடுதற்கு இராவணன் குதிரைகள் ஆயிரம் பூட்டிய தேரில் வந்துகொண்டிருக்க, நீ தரையில் நின்று அவனொடு மலைதல் ஒரு வெறுமைத் தன்மையை அல்லவோ காட்டி நிற்கும்! ஆதலால், என் தோளில் ஏறுக!” என்று வேண்டிக்கொண்டான்.
”நன்று…நன்று” என்று அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட கொண்டல்வண்ணனான காகுத்தன் அனுமனின் சுந்தரத் தோள்களில் அழகாய் ஏறியமர, கன்றைச் சுமக்கும் தாயென மாருதி களித்தான்; இன்பக் கடலில் குளித்தான்.
இராமனும் இராவணனும் முதன்முறையாக ஒருவரோடொருவர் நேரடியான போரில் இறங்கினர்; இராமனின் சரமெனும் கூற்றம் இராவண சேனையில் அவனொருவனைத் தவிர மீதமுள்ளோரைக் கொன்றொழித்தது. தன் சேனையின் பிணக்குவியல் கண்ட இராவணன் அராவென வெகுண்டான். திரண்ட இரு கணைகளை இராமனின் இரு தோள்களிலும் அழுந்திப் புதையுமாறு எய்தான்.
அப்போதும் இராமன் முகத்தில் சினக்குறி தோன்றவில்லை. முறுவல்பூத்த முகத்தினனாய், அம்புகளை எய்து அவன் இராவணன் வில்லை அறுத்தான். மற்றோர் அம்பால் மணிகள் பதிக்கப்பெற்ற இராவணனின் மகுடத்தை வீழ்த்திக் கடலில் இறுத்தான்.
மகுடமிழந்த இராவணன் செருக்கழிந்து நாணமுற்றவனாய்க் கீழ்நோக்கிய பார்வையும் தலையும் உடையவனாய், ஒளியிழந்த முகத்தோடு போர்க்கருவிகள் இழந்த கைகளைத் தொங்கவிட்டவனாய், அதனால் விழுதுடைய ஆலமரம் போன்ற மெய்யினைக் கொண்டவனாய், அறத்தினை மீறிய தீயோர் செயல்கள் இப்படித்தான் முடியும் என உலகோர் எல்லாம் ஆரவாரமிட்டுக் கூற, தன் நிறம் பொலிவிழந்து கரிந்துபோக, கால் விரல்களால் நிலத்தைக் கிளறியவண்ணம் நின்றான்.
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகுஎலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்அழி முகத்தினன் தலையன்
வெறுங் கை நாற்றினன் விழுதுடை ஆல்அன்ன மெய்யன். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)
போரில் தோற்று நாணி நிற்கும் பெருவீரனொருவனின் தோற்றத்தை அவ்வந்நிலைகட்கேற்ற மெய்ப்பாடுகளுடன் இப்பாடல் தெளிவாய்க் காட்டுகின்றது.
ஆயுதமின்றிக் கைகள் இருபதும் தொங்கிக் கிடக்கும் தோற்றம் ’விழுதுடை ஆல்அன்ன மெய்யன்’ ஆயிற்று.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (குறள்: 142) என்பது அறநூல் கருத்தாகலின் முன்னர் இதனைக் கூற அஞ்சிய உலகம் இப்போது இராவணனின் தளர்ச்சிகண்டு துணிந்து கூறியதால், ”அறங்கடந்தவன் செயல் இது என்று உலகெலாம் ஆர்ப்ப’ என்றார் கல்வியில் பெரிய கம்பர்.
இராவணனின் இரங்கத்தக்க இழிநிலை கண்ட, மிக இளைய கமுக மரத்தின்மீது வாளை மீன்கள் தாவிப் பாயும் கோசல நாட்டு வள்ளலாகிய, இராமன், “சிறையிலிருக்கும் சீதையை விடுத்து, நின் தம்பியான வீடணனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனுக்கு ஏவல்செய்து இருப்பாயெனில் உன்னை என் அம்பினால் கொல்லேன். அதனை நீ விரும்பாது என்னோடு போர் புரிய விரும்புகின்றாயா? அவ்வாறெனில், அரக்கரை ஆள்கின்ற ஐயா! உனக்குத் துணையாய் அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப்போல் இப்போது சிதைந்து போயினமையைக் கண்டாய்; (ஆதலால்) இன்று உன் இலங்கை அரண்மனைக்குச் சென்று, போர்க்கு நாளை வருவாயாக!’ என இராவணனுக்கு அருள்புரிந்து விடுத்தான்.
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7271)
இராவணனின் நால்வகைப் படைகளின் அழிவிற்குப் பூளைப் பூவை ஈண்டு உவமையாக்கியுள்ளார் கம்பர். “காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்” (பெரிய திரு. 4:10:6) எனத் திருமங்கையாழ்வார் மொழிந்துள்ள உவமை தம் சிந்தை கவர்ந்தமையால், அவர் மொழியைப் பொன்னேபோல் போற்றி, “மாருதம் அறைந்த பூளையாயின” என்று அவ் உவமையைத் தம் பாடலிலும் பயன்படுத்தியுள்ளார் கம்பர்.
தன் மனையாட்டியை வஞ்சித்துச் சிறைவைத்துள்ள பாதகன்
நிராயுதனாய்க் கண்முன் நிற்பது கண்டும், அவனைக் கொல்லாது, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என நவில்தல் ஒப்பற்ற உயர்பண்பாகும். இதனையே ’தழிஞ்சி’ என்கின்றது புறத்துறை.
“அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறுகண்மை காதலித்து உரைத்தன்று” (புறப், வெண்.72) என ஐயனாரிதனார் இதனைப் போற்றுவார்.
இராமன் அறக்கருணையோடு ”இன்றுபோய் நாளை வா” என்று இலங்கையர்கோனிடம் கூறவும், ”திசையானைகளின் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையினை அள்ளியெடுத்த வலிமிகு தோளும், நாரத முனிவனும் நன்று என்று ஏற்குமாறு சாம வேதத்தை இசைநயத்தோடு பாடிய நாவும், மாலையணிந்த மணிமுடி பத்தும், தவஆற்றல் கண்டு சிவபிரான் கொடுத்த (சந்திரஹாசம் என்ற) வாளும், தன்னைவிட்டு நீங்காதிருந்த வீரப்பண்பும் போர்க்களத்தே போட்டுவிட்டு வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டு போனான் இராவணன்” என்று அவனிழந்த தற்கிழமை, பிறிதிற்கிழமைப் பொருள்களை அற்புதமாய்ப் பட்டியலிட்டு உரைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7272)
[பா-பே: …வெறுங்கையோடு இலங்கை புக்கான்.]
இலங்கை நோக்கி நடந்த இராவணன், எதிரில்நின்ற எவரையும் நோக்காது நிலமகளையே நோக்கியவண்ணம் தன் அரண்மனை முற்றத்துள் நாணத்தோடு புகுந்தான்.
தன் தோல்விகண்டு வானோர் நகுவர்; மண்ணோர் நகுவர்; தான் வென்று சிரித்தற்குரிய பகைஞர் நகுவர் என்பது குறித்தெல்லாம் இராவணன் நாணவில்லையாம். வேல்போன்ற நெடுங்கண்களையும் சிவந்த வாயினையும் மெல்லிய சாயலையும் கொண்டவளும், மிதிலையில் தோன்றியவளுமான சனகன் மகள் சானகி, தன் தோல்வியறிந்தால், எள்ளி நகுவாளே என்றெண்ணியே நாணத்தால் வாடினான் அவன் என்கின்றார் மானுட உளவியலில் துளையமாடிய கம்பர்.
வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடுவயிரத் தோளான்
நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்றுஅதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7282)
அப்போது இராவணனைக் காணவந்தான் அவன் தாய்வழிப் பாட்டனான மாலியவான். இராவணன் அவனிடம், ”வெள்ளம்போன்ற அரக்கர் சேனையை அழித்தபோதும், என்மீது அம்புகளைப் பொழிந்தபோதும் அந்த இராமன் முகத்தில் சினத்தின்குறி சிறிதேனும் காணப்படவில்லை; கூனியின் முதுகில் உண்டையை அடித்த செயல்போல் விளையாட்டு மனநிலையோடே அவற்றை அவன் நிகழ்த்தினான்” என்று தொடங்கி இராமனின் வில்லாற்றலை விவரமாய் வருணித்துவிட்டு, ”நாசம் வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று தன் பகைவனைப் புகழ்ந்தான்.
அதுகேட்ட மாலியவான், ”அறிவிற் சிறந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாது நீ போரில் இறங்கி உனக்கும் உன் சுற்றத்துக்கும் செல்வத்துக்கும் அழிவைத் தேடிக்கொண்டாய்” என்று இராவணனைக் கடிந்துரைக்க, அப்போது அங்குவந்த இராவணனின் அமைச்சனான மகோதரன், ’இராவணனுக்குப் பயனில்லாத பேச்சுக்களை நீ பேசுகின்றாய்” என்று மாலியவானை அதட்டிவிட்டு, இராவணனைப் பார்த்து, ”வென்றவர் தோற்பதும் தோற்றவர் வெல்வதும், உயர்ந்தவர் தாழ்வதும் தாழ்ந்தவர் உயர்வதும் உலகத்தியற்கை என்பது அறிஞர்கள் கண்ட முடிபு; அவ்வாறிருக்கத் தேவரையும் மூவரையும் (மும்மூர்த்திகள்) வென்ற நீ புல்லிய மானுடரைப் புகழ்வது எதற்கு? இதன்வாயிலாய்க் கும்பகருணனின் ஆற்றலையும் அல்லவா நீ இகழ்கின்றாய்?” என்றுரைத்து மாவீரன் கும்பகருணனைப் போருக்கு அனுப்புமாறு இராவணனைத் தூண்டுகின்றான்.
மகோதரனின் மொழிகளால் ஊக்கமும் உற்சாகமும்பெற்ற இராவணன், இராமனிடம் பெற்ற தோல்வியை மறந்து மீண்டும் போரைத் தொடரும் எண்ணங்கொண்டவனாய்க் கும்பகருணனை அழைத்துவருமாறு பணியாளரை ஏவினான்.
அதனையேற்று பணியாளர் நால்வர் கூற்றுவனின் தூதரெனக் கும்பனின் அரண்மனையை அடைந்தனர். அவனோ அப்போது இலங்கையில் நிகழ்ந்தவை எவற்றையும் அறியாதவனாய் நீடுதுயிலில் ஆழ்ந்திருந்தான்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
பன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும், சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை, சித்திரையை, தையை, ஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில்; மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமா? முடியவே முடியாது! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள்!
ஆடி என்றவுடன் – ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி, என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?
மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும், மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும், சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும் கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது. ஆடி, புரட்டாசி, மார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடுபுகுதல், திருமணம், திருமண நிச்சயார்த்தம், காது குத்தல், எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.
சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார். தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தை பித்ருக்குகளுக்கு வழி பாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறுமாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடிவரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கி சூரியன் பயணிக்கும் பொழுது வெம்பம் தணிந்து – காற்று, மழை, பனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக்காலம் தேவர்களுக்கு இராக்கால மாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்கால தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி இரவின் தொடக்கம். மார்கழி விடியலின் தொடக்கம்.
ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம். கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது. இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால்த்தானோ என்று எண்ணிட வைக்கிறது.
அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால், வேப்பிலை, மஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சு வதும், அம்மனுக்கு வைத்து வழிபடுவது கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா!
ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே. அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய் கருதி போற்றி வழிபாடுகளில் ஈடுபடு வதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.
ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக்கயிற்றை மாற்றுவதும், அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.
பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்குரியதாய் இருந்தாலும், பெரும்பாலன சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா, தீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரி யாய் கருமாரி விளங்கிறாள் அல்லவா? சின்னக் கோவில்கள், பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடை பெறுவதும் நோக்கத்தக்கது.
ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும், தையில் வருகின்ற அமாவாசையும், கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம், உத்தராயன புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.
இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்த்தான். சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்த்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்த்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
தையினை பொங்கல் திருநாளாய், அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்த்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்த்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா?
ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி” என்னும் முதுமொழியும் பழக்கத்தில் இருக்கிறது.
ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம், என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்த்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்தியிரையில் பிரசவம் நடக்கும். சித்தியிரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதரணமாக சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம். வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் காலநிலை காரணமாக பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?
ஆடி என்றவுடன் ஆடிவேல் விழா அகத்தினில் அமர்ந்து விடும்! எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் கட்டாயம் வந்து நிற்பார்.தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டுவருவதும் நாடிவரும் ஆடி அல்லவா !
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
நாடிவரும் ஆடி அமங்கல மான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம்! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனை போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழுவோம் வாருங்கள்.

Baskar Seshadri
Young Munuswamy is basically a photographer covering various functions in Chennai and with no business activity since the days of Covid. He was looking for an employment and had found one in Kapaleeswarar Temple, Mylapore.
Yes, he is the battery car operator that brings and drops the aged and physically challenged devotees to the temple. He makes it a point to be at the entrance of the temple at sharp nine in the morning and goes around to fetch the pilgrims.
He goes via north mada street and move upto Ramakrishna mutt road and turn back at sangeetha to reach the temple again.
Literally he makes around fifteen trips every day in the morning and evening. The number of trips may go up on festival and auspicious days.
He works upto one in the noon and drops the vehicle in Karpagambal kapaleeswarar kalyana mandapam near Sai Baba temple where the vehicle is left for charging.
Few Years ago well before Covid, two such vehicles were donated by Sundaram Finance and one is now being used now here in the temple and the other had been sent to servicing.
Former MLA Dr. Nataraj Inaugurated the event at that time but as temples were closed the vehicles were not used for long time. In the evening, Munuswamy Resumes work at four pm and closes the schedule at nine pm.
The devotees are happy about this service and thank the sponsor Sundaram Finance.
Please tell your aged friends and contacts of this service who are regulars to the temple.
This vehicle can carry seven persons including the operator – In the meanwhile am planning to write to HRCE and the temple authorities to get the second vehicle readied so that it can be used on South Mada and East mada streets in the days to come.

செண்பக ஜெகதீசன்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
– திருக்குறள் -122 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
அவனி வாழ்வில்
அடக்கத்தை
அரும்பொருளாய் எண்ணிப்
பாதுகாக்க வேண்டும்,
அதனைவிட மதிப்பில்
உயர்ந்த செல்வம்
உலகத்தில் வேறில்லை…!
குறும்பாவில்…
அடக்கத்தை வாழ்வில் நாம்
அரும்பொருளாய்ப் பேணிப் பாதுகாக்கவேண்டும்,
அதைவிட நற்செல்வம் எதுவுமில்லை…!
மரபுக் கவிதையில்…
அடக்கம் என்னும் நல்லறத்தை
அவனி வாழ்வில் அரும்பொருளாய்க்
கடமை என்றே காத்திடுவாய்
கண்ணாய் அதையே போற்றிடுவாய்,
கிடைக்கும் செல்வம் பலதிலுமே
கீர்த்தி மிக்க வேறெதுவும்
கிடைப்ப தில்லை இதுபோலே,
கிட்டாச் செல்வம் அடக்கமாமே…!
லிமரைக்கூ…
என்றும் காத்திட வாராய்
அடக்கத்தை வாழ்வில் அரும்பொருளாய், அதனிலும்
உயர்செல்வம் வேறிலை பாராய்…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில
ஒசந்த செல்வம்,
அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்..
ஒலக வாழ்க்கயில அடக்கமுங்கிற
ஒழுக்கத்த பெரிய செல்வமா
நல்ல மொறயில
காப்பாத்தி வெச்சுக்கோ,
அதவிட மதிப்புல
ஒசந்த செல்வம்
ஒலகத்தில
வேற எதுவுமேயில்ல..
தெரிஞ்சிக்கோ
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில
ஒசந்த செல்வம்,
அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்…!

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தூத்துக்குடியில் உள்ள ஃபார்மர்ஸ் ஃபுட் (Farmer’s Food) என்ற நிறுவனம், இயற்கை உணவுகள் பலவற்றைப் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நடத்தி வரும் பூர்ணிமா விக்னேஷ், முருங்கை நூடுல்ஸ், கேரட் நூடுல்ஸ், பீட்ரூட் நூடுல்ஸ், செவ்வாழை மால்ட், வெந்தயக் களி, பிரண்டை இட்லி பொடி…. எனப் பலவற்றைத் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். இவரிடமிருந்து அண்மையில் சில பொருள்களை நாங்கள் வாங்கினோம். அவை எப்படி இருக்கின்றன எனப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)