கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 51
-மேகலா இராமமூர்த்தி
இராவணன் போர்க்களம் புகுந்த செய்தியை ஒற்றர் வாயிலாய் அறிந்த இராமனின் தோள்கள் பூரித்தன. போர்க்கோலம் பூண்டான் அவன். போர்க்களம் புகுந்த இராவணனோடு முதலில் போரில் இறங்கியவன் சுக்கிரீவன். கடும்போரினால் அவன் சற்றுக் களைத்த வேளையில் அவனுக்குத் தோள்கொடுக்க இடைபுகுந்தான் அனுமன். மரங்களையும் மலைகளையும் பெயர்த்து இராவணனையும் அவன் சேனையையும் தாக்கினான். பதிலுக்கு இராவணனும் மாரியென அம்புகளைப் பொழியவே அவற்றால் அலக்கண் (துன்பம்) உற்றான் அஞ்சனை மைந்தன்.
வானர சேனையை இராவணன் துன்புறுத்துவது கண்டு அவனை எதிர்க்கவந்தான், வில்லேந்திய மேருவென விளங்கிய, இராமனின் இளவலான இலக்குவன்; வந்தவன் தன் வில்லின் நாணினைத் தெறித்து ஒலியெழுப்பவே இடிமுழக்கமொத்த அவ்வொலிகேட்டுக் கிலிகொண்டது அரக்கர்குழாம்.
வல்லமைமிகு இராவணனும் தன்னருகில் நின்ற வீரர்களின் உள்ளம் இலக்குவனின் நாணொலியால் வேறுவேறாகி உடைந்து நிற்கின்ற தன்மையை நோக்கி, வீரனாகிய இராமனின் தம்பி இலக்குவனுடைய கூற்றுவனின் கொடும் புருவம் போன்ற வில் எழுப்பிய பேரோசையையும் கேட்டு, ”என்னே இவன் ஒரு மனிதனா!” என வியந்து, சரிந்த தன் மகுடத்தை உயரே ஏற்றிக்கொண்டான்.
ஆற்றல்சால் அரக்கன்தானும் அயல்நின்ற வயவர் நெஞ்சம்
வீற்றுவீற்று ஆகிஉற்ற தன்மையும் வீரன் தம்பி
கூற்றின்வெம் புருவம்அன்ன சிலைநெடுங் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா. (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7159).
இலக்குவனின் வில் வளைவை கூற்றுவனின் புருவ வளைவோடு கம்பநாடர் ஒப்பிட்டிருப்பது அரியதொரு கற்பனையாய்ப் பொலிகின்றது.
இலக்குவனின் அம்புகளை இராவணன் இலாவகமாய்த் தடுத்து, அவன் அம்பறாத் தூணியையும் அறுத்தவேளையில், இளைப்பாறி அங்குவந்த அனுமன் பேருருவம் எடுத்து இராவணன் முன்பு நின்றான்; இராவணனைப் பார்த்து,
”இராவணா! உன் மார்பில் நான் குத்துகின்றேன்; அக்குத்துக்கு நீ பிழைத்திருந்தால் உன் முழுபலத்தோடு என்னை மார்பில் குத்துவாய்; உன் குத்துக்கு நான் பிழைத்திருந்தேனாகில் உன்னோடு இனிப் போர் புரியேன்” என்று சூளுரைத்தான். அதுகேட்டு வியந்த இராவணன்,
”பேருருவெடுத்து நெடிது நின்றோனே! தனியாய் உள்ள நீ, போராயுதம் எதுவும் உடையாய் அல்லை; அப்படியிருந்தும் வெறுங்கையால் என் சுற்றத்தார் பலரைக் கொன்றாய்; வலிமைமிகு சேனையோடு உயர்ந்த தேரின்மேல் வந்த என்னெதிரில் வந்து, உன்னுடைய ஆற்றல் ஒன்றையே கொண்டு எதிர்நிற்கின்ற உனக்கு இவ்வுலகில் உள்ளவர் யார் நிகராவார்? சொல்!” என்று அனுமனின் வீரத்தையும் பேராண்மையையும் போற்றினான்.
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒருநீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர்மேல் நிமிர்கொடு வெஞ்சிலை கோலி
வன்தானையினுடன் வந்தஎன் எதிர்வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)
’வீரனை வீரன் அறிவான்’ எனும் மொழிப்படி அனுமனின் வீரத்தை உணர்ந்து போற்றிய இராவணன், அனுமனைப் பார்த்து ”என்னைக் குத்து” என்று அவனுக்கு அனுமதியளித்தான்.
உடனே, தன் வயிரக் கையால் அனுமன் இராவணனின் மார்பில் குத்தினான்; அக்குத்தினால் இராவணன் மார்பில் தங்கியிருந்த திசையானைகளின் தந்தங்கள் அவன் முதுகுவழியாய்ப் பொலபொலவெனக் கீழே வீழ்ந்தன. கதிகலங்கிப் போன இராவணன், தன்னுயிர் உடலைவிட்டு வெளியேசென்று மீண்டதுபோன்ற உணர்வினைப் பெற்றான்.
மீண்டும் அனுமனின் வீரத்தைப் புகழ்ந்த அவன், ”இப்போது என் முறை; நான் விடுகின்ற குத்தைத் தாங்கிக்கொண்டும் நீ உயிர்பிழைத்து இருப்பாயாகில் நீ இன்றும் இருப்பாய்; என்றும் இருப்பாய்; உனக்கு அழிவில்லை” என்றான். இது தன்னை அறியாமலேயே இராவணன் அனுமனுக்குத் தந்த வாழ்த்தாய் அமைகின்றது. அதனைத் தொடர்ந்து அனுமனை இராவணன் தன் முழுபலத்தோடு குத்த அவனும் கலங்கிப்போனான்.
அதன்பின்னர் இலக்குவனும் இராவணனும் மீண்டும் ஒருமுறை நேரடிப் போரில் ஈடுபடலாயினர். இராவணனின் ஆற்றல்மிகு அயன் வேலினால் தாக்குண்ட இலக்குவன் சோர்ந்தான். அவனை இலங்கைக்குத் தூக்கிச் செல்ல முயன்ற இராவணன், தூக்க இயலாமல் வெய்துயிர்க்க, அப்போது அங்குவந்த அனுமனோ தாய்க்குரங்கு தன் மகவினை எடுத்துச் செல்வதுபோல் இலக்குவனை மிக எளிதாக அவ்விடத்தினின்று தூக்கிச் சென்றான்.
பக்தியும் அன்பும் உடையார்க்கு, இறைவன் எளியவன் என்னும்
கருத்தை இப்பாடல் உணர்த்துகின்றது. “பத்துடை அடியவர்க்கு
எளியவன்; பிறர்களுக்குரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்” (திருவாய்: 1:3:1) என்னும் நம்மாழ்வாரின்
திருவாய்மொழிப் பாசுரத்திற்கு அரியதோர் விளக்க நிகழ்ச்சியாய்
இஃது அமைந்துள்ளது.
போர்க்கோலம் பூண்ட இராமன் இராவணனோடு பொருதற்கு அப்போது வந்துகொண்டிருந்தான். இராமனைக் கண்ட இராவணனும் அவனை எதிர்ப்பதற்குத் தோதாய்த் தன் தேரை அவன் பக்கம் திருப்பினான். தேரின்றித் தமியனாய் வந்த இராமனைக் கண்ட அஞ்சனை மைந்தன், ”ஐய! நின்னொடு போரிடுதற்கு இராவணன் குதிரைகள் ஆயிரம் பூட்டிய தேரில் வந்துகொண்டிருக்க, நீ தரையில் நின்று அவனொடு மலைதல் ஒரு வெறுமைத் தன்மையை அல்லவோ காட்டி நிற்கும்! ஆதலால், என் தோளில் ஏறுக!” என்று வேண்டிக்கொண்டான்.
”நன்று…நன்று” என்று அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட கொண்டல்வண்ணனான காகுத்தன் அனுமனின் சுந்தரத் தோள்களில் அழகாய் ஏறியமர, கன்றைச் சுமக்கும் தாயென மாருதி களித்தான்; இன்பக் கடலில் குளித்தான்.
இராமனும் இராவணனும் முதன்முறையாக ஒருவரோடொருவர் நேரடியான போரில் இறங்கினர்; இராமனின் சரமெனும் கூற்றம் இராவண சேனையில் அவனொருவனைத் தவிர மீதமுள்ளோரைக் கொன்றொழித்தது. தன் சேனையின் பிணக்குவியல் கண்ட இராவணன் அராவென வெகுண்டான். திரண்ட இரு கணைகளை இராமனின் இரு தோள்களிலும் அழுந்திப் புதையுமாறு எய்தான்.
அப்போதும் இராமன் முகத்தில் சினக்குறி தோன்றவில்லை. முறுவல்பூத்த முகத்தினனாய், அம்புகளை எய்து அவன் இராவணன் வில்லை அறுத்தான். மற்றோர் அம்பால் மணிகள் பதிக்கப்பெற்ற இராவணனின் மகுடத்தை வீழ்த்திக் கடலில் இறுத்தான்.
மகுடமிழந்த இராவணன் செருக்கழிந்து நாணமுற்றவனாய்க் கீழ்நோக்கிய பார்வையும் தலையும் உடையவனாய், ஒளியிழந்த முகத்தோடு போர்க்கருவிகள் இழந்த கைகளைத் தொங்கவிட்டவனாய், அதனால் விழுதுடைய ஆலமரம் போன்ற மெய்யினைக் கொண்டவனாய், அறத்தினை மீறிய தீயோர் செயல்கள் இப்படித்தான் முடியும் என உலகோர் எல்லாம் ஆரவாரமிட்டுக் கூற, தன் நிறம் பொலிவிழந்து கரிந்துபோக, கால் விரல்களால் நிலத்தைக் கிளறியவண்ணம் நின்றான்.
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகுஎலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்அழி முகத்தினன் தலையன்
வெறுங் கை நாற்றினன் விழுதுடை ஆல்அன்ன மெய்யன். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7184)
போரில் தோற்று நாணி நிற்கும் பெருவீரனொருவனின் தோற்றத்தை அவ்வந்நிலைகட்கேற்ற மெய்ப்பாடுகளுடன் இப்பாடல் தெளிவாய்க் காட்டுகின்றது.
ஆயுதமின்றிக் கைகள் இருபதும் தொங்கிக் கிடக்கும் தோற்றம் ’விழுதுடை ஆல்அன்ன மெய்யன்’ ஆயிற்று.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (குறள்: 142) என்பது அறநூல் கருத்தாகலின் முன்னர் இதனைக் கூற அஞ்சிய உலகம் இப்போது இராவணனின் தளர்ச்சிகண்டு துணிந்து கூறியதால், ”அறங்கடந்தவன் செயல் இது என்று உலகெலாம் ஆர்ப்ப’ என்றார் கல்வியில் பெரிய கம்பர்.
இராவணனின் இரங்கத்தக்க இழிநிலை கண்ட, மிக இளைய கமுக மரத்தின்மீது வாளை மீன்கள் தாவிப் பாயும் கோசல நாட்டு வள்ளலாகிய, இராமன், “சிறையிலிருக்கும் சீதையை விடுத்து, நின் தம்பியான வீடணனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனுக்கு ஏவல்செய்து இருப்பாயெனில் உன்னை என் அம்பினால் கொல்லேன். அதனை நீ விரும்பாது என்னோடு போர் புரிய விரும்புகின்றாயா? அவ்வாறெனில், அரக்கரை ஆள்கின்ற ஐயா! உனக்குத் துணையாய் அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப்போல் இப்போது சிதைந்து போயினமையைக் கண்டாய்; (ஆதலால்) இன்று உன் இலங்கை அரண்மனைக்குச் சென்று, போர்க்கு நாளை வருவாயாக!’ என இராவணனுக்கு அருள்புரிந்து விடுத்தான்.
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7271)
இராவணனின் நால்வகைப் படைகளின் அழிவிற்குப் பூளைப் பூவை ஈண்டு உவமையாக்கியுள்ளார் கம்பர். “காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்” (பெரிய திரு. 4:10:6) எனத் திருமங்கையாழ்வார் மொழிந்துள்ள உவமை தம் சிந்தை கவர்ந்தமையால், அவர் மொழியைப் பொன்னேபோல் போற்றி, “மாருதம் அறைந்த பூளையாயின” என்று அவ் உவமையைத் தம் பாடலிலும் பயன்படுத்தியுள்ளார் கம்பர்.
தன் மனையாட்டியை வஞ்சித்துச் சிறைவைத்துள்ள பாதகன்
நிராயுதனாய்க் கண்முன் நிற்பது கண்டும், அவனைக் கொல்லாது, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என நவில்தல் ஒப்பற்ற உயர்பண்பாகும். இதனையே ’தழிஞ்சி’ என்கின்றது புறத்துறை.
“அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறுகண்மை காதலித்து உரைத்தன்று” (புறப், வெண்.72) என ஐயனாரிதனார் இதனைப் போற்றுவார்.
இராமன் அறக்கருணையோடு ”இன்றுபோய் நாளை வா” என்று இலங்கையர்கோனிடம் கூறவும், ”திசையானைகளின் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையினை அள்ளியெடுத்த வலிமிகு தோளும், நாரத முனிவனும் நன்று என்று ஏற்குமாறு சாம வேதத்தை இசைநயத்தோடு பாடிய நாவும், மாலையணிந்த மணிமுடி பத்தும், தவஆற்றல் கண்டு சிவபிரான் கொடுத்த (சந்திரஹாசம் என்ற) வாளும், தன்னைவிட்டு நீங்காதிருந்த வீரப்பண்பும் போர்க்களத்தே போட்டுவிட்டு வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டு போனான் இராவணன்” என்று அவனிழந்த தற்கிழமை, பிறிதிற்கிழமைப் பொருள்களை அற்புதமாய்ப் பட்டியலிட்டு உரைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7272)
[பா-பே: …வெறுங்கையோடு இலங்கை புக்கான்.]
இலங்கை நோக்கி நடந்த இராவணன், எதிரில்நின்ற எவரையும் நோக்காது நிலமகளையே நோக்கியவண்ணம் தன் அரண்மனை முற்றத்துள் நாணத்தோடு புகுந்தான்.
தன் தோல்விகண்டு வானோர் நகுவர்; மண்ணோர் நகுவர்; தான் வென்று சிரித்தற்குரிய பகைஞர் நகுவர் என்பது குறித்தெல்லாம் இராவணன் நாணவில்லையாம். வேல்போன்ற நெடுங்கண்களையும் சிவந்த வாயினையும் மெல்லிய சாயலையும் கொண்டவளும், மிதிலையில் தோன்றியவளுமான சனகன் மகள் சானகி, தன் தோல்வியறிந்தால், எள்ளி நகுவாளே என்றெண்ணியே நாணத்தால் வாடினான் அவன் என்கின்றார் மானுட உளவியலில் துளையமாடிய கம்பர்.
வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடுவயிரத் தோளான்
நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்றுஅதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7282)
அப்போது இராவணனைக் காணவந்தான் அவன் தாய்வழிப் பாட்டனான மாலியவான். இராவணன் அவனிடம், ”வெள்ளம்போன்ற அரக்கர் சேனையை அழித்தபோதும், என்மீது அம்புகளைப் பொழிந்தபோதும் அந்த இராமன் முகத்தில் சினத்தின்குறி சிறிதேனும் காணப்படவில்லை; கூனியின் முதுகில் உண்டையை அடித்த செயல்போல் விளையாட்டு மனநிலையோடே அவற்றை அவன் நிகழ்த்தினான்” என்று தொடங்கி இராமனின் வில்லாற்றலை விவரமாய் வருணித்துவிட்டு, ”நாசம் வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று தன் பகைவனைப் புகழ்ந்தான்.
அதுகேட்ட மாலியவான், ”அறிவிற் சிறந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாது நீ போரில் இறங்கி உனக்கும் உன் சுற்றத்துக்கும் செல்வத்துக்கும் அழிவைத் தேடிக்கொண்டாய்” என்று இராவணனைக் கடிந்துரைக்க, அப்போது அங்குவந்த இராவணனின் அமைச்சனான மகோதரன், ’இராவணனுக்குப் பயனில்லாத பேச்சுக்களை நீ பேசுகின்றாய்” என்று மாலியவானை அதட்டிவிட்டு, இராவணனைப் பார்த்து, ”வென்றவர் தோற்பதும் தோற்றவர் வெல்வதும், உயர்ந்தவர் தாழ்வதும் தாழ்ந்தவர் உயர்வதும் உலகத்தியற்கை என்பது அறிஞர்கள் கண்ட முடிபு; அவ்வாறிருக்கத் தேவரையும் மூவரையும் (மும்மூர்த்திகள்) வென்ற நீ புல்லிய மானுடரைப் புகழ்வது எதற்கு? இதன்வாயிலாய்க் கும்பகருணனின் ஆற்றலையும் அல்லவா நீ இகழ்கின்றாய்?” என்றுரைத்து மாவீரன் கும்பகருணனைப் போருக்கு அனுப்புமாறு இராவணனைத் தூண்டுகின்றான்.
மகோதரனின் மொழிகளால் ஊக்கமும் உற்சாகமும்பெற்ற இராவணன், இராமனிடம் பெற்ற தோல்வியை மறந்து மீண்டும் போரைத் தொடரும் எண்ணங்கொண்டவனாய்க் கும்பகருணனை அழைத்துவருமாறு பணியாளரை ஏவினான்.
அதனையேற்று பணியாளர் நால்வர் கூற்றுவனின் தூதரெனக் கும்பனின் அரண்மனையை அடைந்தனர். அவனோ அப்போது இலங்கையில் நிகழ்ந்தவை எவற்றையும் அறியாதவனாய் நீடுதுயிலில் ஆழ்ந்திருந்தான்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17