சத்தியமணி

உறங்கச் சயனமோடு
உறங்கா நயனமோடு
முழங்கச் சங்கினோடு
முழங்காச் சங்கமோடு
வணங்க அடிகளோடு
வணங்கா முடிகளோடு
இரக்கத்தில் வந்தனனே
அரங்கனைக்  கும்மியடி    1

குன்றாடும் இடமாகி
கோவிந்தன் இருந்தாலும்
நின்றாடும் யமுனையதில்
கோபாலன் இருந்தாலும்
மன்றாடும் நிலைக்கெமை
மாற்றாது இருப்பாயே
அன்றாடம் அரியென்றே
அரங்கத்தில் கும்மியடி 2

அளந்தானாம் சிற்றடியில்
உயர்ந்தானாம் பேருருவில்
கலந்தானாம் அலைமகளைப்
பிரிந்தானாம் மானதனால்
சேர்ந்தானாம் தென்னிலங்கை
சிறந்தானாம் ரகுராமன்
அவன்தான் இவனென்றே
அரங்கத்தில் கும்மியடி 3

விட்டலன் பேர்சொல்லி
வீதியில் களிப்பாட்டம்
வித்தகன் அரியென்று
பக்தரிசை குளிப்பாட்டும்
பண்டரி நாமந்தனில்
புண்டரியின் அபங்கத்தில்
வரியாகி பண்ணாகி
அரங்கத்தில் கும்மியடி 4

மானால் கெட்டதும் (சீதை)
மதியால் கெட்டதும் (வாலி)
கூனால் கெட்டதும் (கைகேயி)
சூதால் கெட்டதும் (தர்மர்)
காதால் கெட்டதும் (தசமுகன்)
கண்ணால் கெட்டதும் (கௌரவர்)
கூறுமரி கதைக்கேட்டு
அரங்கத்தில் கும்மியடி 5

தீராத பிறவிச்சுழல்
தீர்ப்பான் அடிபற்றி
ஆறாத பழியெலாம்
அழிப்பான் கழல்பற்றி
கூறாத உரையெலாம்
கீதையாய் பொருள்பற்றி
மாறாத அருளுண்டான்
அரங்கத்தில் கும்மியடி 6

ஏழேழு பிறவியெலாம்
எம்மோடு வந்தானோ
ஏழுமலை தன்னைவிட
எம்முளமாய் நின்றானோ
வாழுமற வாழ்வெனவே
வந்தினிதே வைத்தானோ
தூயுமனத் தாயானான்
அரங்கத்தில் கும்மியடி 7

இருப்பதில் இருப்பதும்
இல்லாது இருப்பதும்
மறைப்பதும் தெரிவதும்
தெரிந்தும் மறைப்பதும்
கிடைப்பதும் இழப்பதும்
கிட்டாதும் நிலைப்பதும்
நாரணன் செயலென்றே
அரங்கத்தில் கும்மியடி 8

தேனாய்த் தமிழூட்டி திகட்டாப் பொருளாற்றி
பூணாய்ப்  பூட்டியே புகட்டி அருளாற்றி
நாணாய் நாவேற்றி நல்லிசைப் பண்ணாகி
அரங்கன் அரங்கத்தில் அடிமனமே கும்மியடி 9

பற்றியது செவ்வடிகள்
எட்டியது  வைகுந்தம்
சுற்றியது சுதர்சனம்
சுரமுடனே சங்கநாதம்
வெற்றியினி வெற்றியென
வேங்கடன் மணியொலியே
நற்றவினை யாவும்பெற
அரங்கத்தில் கும்மியடி 10

மேகத்தில் தேவரவர்
நீர்வாரி தெளிக்கஅரி
போகத்தில் ரதமேறி
பூரியில் பவனிவரும்
கோலத்தில் ஊர்வலமே
அடியவர் குறையழியும்
சோகமெலாம் மறக்கும்
அரங்கத்தில் கும்மியடி 11

துயிலைக் கலைத்து துயிலோனை எழுப்ப
கயிலை மலையோடு
கங்கை கரைதற்போல்
மங்கையர் அலைபுவி தாயாரும் எமதென்றே
சங்கைத் தரித்தோனாம்
அரங்கனைக் கும்மியடி 12

கற்றதும் உற்றதும் கழனியில் பிறந்து
பெற்றதும் அற்றதும்
பேருடன் பதவிகளைக்
குற்றமற அறமுடன்
வற்றாது வரமளித்த
அரங்கனைச் சரணடைய
அரங்கத்தில் கும்மியடி 13

அளந்தானாம் சிற்றடியில்
உயர்ந்தானாம் பேருருவில்
கலந்தானாம் அலைமகளைப்
பிரிந்தானாம் மானதனால்
சேர்ந்தானாம் தென்னிலங்கை
சிறந்தானாம் ரகுராமன்
அவன்தான் இவனென்றே
அரங்கத்தில் கும்மியடி 14

விட்டலன் பேர்சொல்லி
வீதியில் களிப்பாட்டம்
வித்தகன் அரியென்று
பக்தரிசை குளிப்பாட்டும்
பண்டரி நாமந்தனில்
புண்டரியின் அபங்கத்தில்
வரியாகி பண்ணாகி
அரங்கத்தில் கும்மியடி 15

நேற்றாகி மறைந்தான் இன்றாக இருந்தான்
கூற்றாகி நாளையெனக்
கூப்பிடவே வருவான்
காற்றாகி மூச்சாகி
மாற்றவரும் வேளையிலே
வாரணம் சூழவரான்
அரங்கத்தில் வாசலிலே  அடிமனதே கும்மியடி 16

கருடன் பேருருவாய்
கொடியென மேலமர
அனுமன் கையுயர
வெற்றி மேலுயர
ஆழ்வார் பாசுரமோ
ஆனந்த சுரமுடனே
ரங்க ரங்காவென
அரங்கத்தில் கும்மியடி 17

தாயார் தரிசனமும்
தன்வந் தரிதுணையும்
ஆயர்ப் பாற்குவளை
அணைத்த கரங்களும்
பாறாழி படுக்கையும்
பாதத்தின் தரிசனமும்
போதாதா கலியழிய
அரங்கத்தில் கும்மியடி 18

கவியின மென்றெனை
நாவினில் அமுதிட்டு
புவியர சாயிரமும்
போற்றிட அருளிட்டு
கவியர சாகசடாரி
சிரசிலே வைத்தானே
அழியா நிலைதந்த
அரங்கத்தில் கும்மியடி 19

சீயரும் தீர்த்தமிட
பட்டரும் துளசிதர
தீயரும் விலகிடவே
துட்டரும் தூயமென்ன
ஆயரின் நாவினிக்க
அழைக்கும் அரியெனும்
நாமமதைக் கூவியே
அரங்கத்தில் கும்மியடி 20

கரிசனம் மிகபெற்று
கதவுகள் திறந்துவிட்டு
துரிதமாய் அழைத்து
துழாய்தமை அணிவிக்க
அரிசனம் அந்தணம்
வேதியர் கூடிபெறும்
தரிசனம் தாவென்று
அரங்கத்தில் கும்மியடி 21

மலையாடும் இடம்தனில் கோவிந்தன் இருந்தானோ
அலையாடும் யமுனையிலே கோபாலன் இருந்தானோ
மன்றாடும் நிலைக்குஎமை வீழாதிருக்கவென
அன்றாடம் அரியெனவே அரங்கத்தில் கும்மியடி 22

காரணம் முன்னாகி
காரியம் பின்னாகி
சீரணம் ஆகுமுன்
சிந்தையில் சிதையாகி
பூரணம் முடிவாகி
பொலிவினில் சமமாகி
அரங்கத்து வாசலிலே
ஆனந்தக் கும்மியடி 23

உயிரெனப் பேரிட்டு
உடலென்று உணவிட்டு
உறவென்று உணர்வோடு
துறவென்று வழியிட்டு
மடிதன்னில் பாலிட்டு
மடியென்றும் பாலிட்ட
உறக்கத்தில் வைகுந்தன்
அரங்கத்தில் கும்மியடி 24

வரமென்று பெறுவதும் வாழ்வுக்கு போறாது
தரமென்று தந்தாலும் தரணிக்குத் தேறாது
அறமென்று அறிந்தே
மரணத்தின் முன்னேவா
இரங்கடா அரங்காவென
அரங்கத்தில் கும்மியடி 25

இரண்டிலே ஒன்றாக
ஒன்றிலும் இரண்டாக
சேர்ந்தும் பிரிவாக
பிரிவிலும் சேர்வாக
ஒலியாக ஒளியாக
வழியாக வெளியாக
அங்கத்தில் புலனான
அரங்கத்தில் கும்மியடி 26

வந்தனன் எதிரிலே
தந்தனன் அமுதினை
அந்தணன் வாமனன்
முந்தினன் மாதவன்
நந்தகோ பாலனின்
அரங்கத்தில் கும்மியடி 27

அங்கமெ லாநிறைந்து
அணியாய் அணிகின்ற
தங்கமென மிளிர்ந்து
கவசமாய்க் காக்கின்ற
இங்குமென எங்குமென
எளிதாய் உடனுறைய
மங்கையலை நாயகியின்
அரங்கத்தில் கும்மியடி 28

மங்களம் பெருக்கிட
மனதெலாம் நிறைவுற
திங்களின் முகமலர
திக்கெலாம் வாழ்த்துரைக்க
எங்கெலாம் எப்போதும்
என்னுடனே இருப்பானோ
அரங்கா இரங்காயென
அரங்கத்தில் கும்மியடி 29

தங்கமய விமானத்தைத்
தேவரவர் பூசிப்பதும்
காயத்ரி மண்டபமும்
காரிருள் சயனமும்
வேண்டும் நொடியினில்
என்முன் தெரியவை
நித்தமும் அரங்கனென
நிறைவோடு கும்மியடி

………….  அரங்க கும்மி ( சத்தியமணி)

பத்து நாளில் தில்லியிலிருந்து திருச்சிக்கு அழைத்து  திருவரங்கன் தரிசனம் கொடுத்தது அற்புதம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *