குறளின் கதிர்களாய் – 410
செண்பக ஜெகதீசன்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
– திருக்குறள் -122 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
அவனி வாழ்வில்
அடக்கத்தை
அரும்பொருளாய் எண்ணிப்
பாதுகாக்க வேண்டும்,
அதனைவிட மதிப்பில்
உயர்ந்த செல்வம்
உலகத்தில் வேறில்லை…!
குறும்பாவில்…
அடக்கத்தை வாழ்வில் நாம்
அரும்பொருளாய்ப் பேணிப் பாதுகாக்கவேண்டும்,
அதைவிட நற்செல்வம் எதுவுமில்லை…!
மரபுக் கவிதையில்…
அடக்கம் என்னும் நல்லறத்தை
அவனி வாழ்வில் அரும்பொருளாய்க்
கடமை என்றே காத்திடுவாய்
கண்ணாய் அதையே போற்றிடுவாய்,
கிடைக்கும் செல்வம் பலதிலுமே
கீர்த்தி மிக்க வேறெதுவும்
கிடைப்ப தில்லை இதுபோலே,
கிட்டாச் செல்வம் அடக்கமாமே…!
லிமரைக்கூ…
என்றும் காத்திட வாராய்
அடக்கத்தை வாழ்வில் அரும்பொருளாய், அதனிலும்
உயர்செல்வம் வேறிலை பாராய்…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில
ஒசந்த செல்வம்,
அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்..
ஒலக வாழ்க்கயில அடக்கமுங்கிற
ஒழுக்கத்த பெரிய செல்வமா
நல்ல மொறயில
காப்பாத்தி வெச்சுக்கோ,
அதவிட மதிப்புல
ஒசந்த செல்வம்
ஒலகத்தில
வேற எதுவுமேயில்ல..
தெரிஞ்சிக்கோ
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில
ஒசந்த செல்வம்,
அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்…!