Blog

  • குறளின் கதிர்களாய்…(441)

    குறளின் கதிர்களாய்…(441)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(441)

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
    தொழுதுண்டு பின்செல் பவர்.

    -திருக்குறள் -1033(உழவு)

    புதுக் கவிதையில்…

    உயர்தொழிலாம்
    உழவினை நடத்தி
    உணவுப் பொருட்கள்
    உற்பத்தி செய்தே
    உறவுடன்
    உண்டு மகிழ்ந்து வாழும்
    உழவரே
    உண்மையில் நல்வாழ்வு
    வாழ்பவர்கள்,
    பிறதொழில்கள் செய்வோரெல்லாம்
    பிறரைச் சார்ந்திருந்து
    அவரை வணங்கி
    உணவுக்காக
    அவர்பின்னே செல்பவர்களே…!

    குறும்பாவில்…

    உயர்ந்த உழவுத் தொழிலால்
    வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள், மற்றவர்கள்
    பிறரைத் தொழுது பின்செல்பவரே…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணினி லுயர்ந்ததாம் உழவினையே
    மதிப்புடன் நடத்தியே பயிர்வளர்த்தே
    உண்டிட உணவதும் தந்தேதான்
    உறவுடன் தாமுமே உண்டுவாழும்
    கண்ணிய வாழ்வுதான் உழவர்க்கே
    காசினி யறிந்திடும் உண்மையிதே,
    திண்ணமாய்ப் பிறரெலாம் உணவதனைத்
    தின்றிடப் பிறரையே சார்வாரே…!

    லிமரைக்கூ…

    உழவர் வாழ்வது முன்னே
    உணவைத் தந்தே உண்டு வாழ்வதால்,
    பிறரெலாம் மற்றவர்கள் பின்னே…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தது சந்தது
    ஒலகத்திலயே ஒசந்தது,
    ஒழவுத்தொழிலே ஒசந்தது..

    ஒழவுத் தொழிலச் செய்து
    ஒலகத்துக்கே ஒணவு குடுத்துத்
    தானும் உண்டு
    ஒறவோட வாழுற
    ஒழவரோட வாழ்வுதான் உண்மயில
    ஒலகத்தில
    ஒசத்தியான வாழ்க்க..

    மத்தவுங்களெல்லாம்
    அடுத்தவங்களத் தொழுது
    அவுங்க பின்னால போறவுங்கதான்..

    அதால
    ஒசந்தது சந்தது
    ஒலகத்திலயே ஒசந்தது,
    ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 7

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 7

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மதுரை வீரன் கத்தி பூஜை

    மதுரை வீரன் கத்தி பூஜை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை வீரன் கத்தி பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தவிட்டுக் குருவிகளின் ஆனந்தக் குளியல்

    தவிட்டுக் குருவிகளின் ஆனந்தக் குளியல்

    வெயிலை வெல்ல வேறு வழி தெரியவில்லை. குடிக்க வைத்த நீரில் குளிக்கின்றன தவிட்டுக் குருவிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரலகு தேன்சிட்டுக்கு விடுதலை

    பேரலகு தேன்சிட்டுக்கு விடுதலை

    உலகக் கானுயிர் தினமான இன்று, நம் வீட்டுக்கு ஓர் எதிர்பாராத விருந்தாளி. நம் மகிழுந்துக்குள் நுழைந்து வெளியே செல்லத் தெரியாமல் திண்டாடிய பேரலகு தேன்சிட்டினை நம் ஓட்டுநர் கதிர்வேல் பிடித்துப் பறக்கவிட்டார். இதோ அந்தத் தருணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா?

    வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா?

    வருமான வரி: புதிய திட்டமா? பழைய திட்டமா? எதைத் தேர்வுசெய்வது? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நியூட்டன் யந்திரப் பிரபஞ்சம்

    நியூட்டன் யந்திரப் பிரபஞ்சம்

    சி. ஜெயபாரதன், கனடா

    சூரிய மண்டலத்தில்
    பூமி, நிலா
    கடல், காற்று, கதிர்க்கனல்,
    புல்லினம், உயிரினம், புள்ளினம்,
    மானிடம் அனைத்தும்
    காரண நிகழ்ச்சி.
    ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.
    இறுதி முறிவு
    எந்திராப்பி முடிவு.
    அதுவின்றி
    எதுவும் இயங்கா !
    அண்ட சராசரத்தைத்
    தொட்டிலில்
    ஆட்டுவது அன்னை.
    முற்பிறப்பு
    இருந்தால்தான்
    இப்பிறப்பு
    நிகழும்.
    இறப்பில் முடியும்
    இப்பிறப்பு.
    ஆன்மாவுக்குப்
    பிற்பிறப்பு உள்ளதென
    ஞானிகள் கூறுவர்.
    முற்பிறப்பு, இப்பிறப்பு
    பிற்பிறப்பு
    சூரிய குடும்ப மானிட
    சுழற்சி !
    அணுவோ,  அண்டமோ,
    அகிலமோ
    குயவன் கை தூண்டாது
    எதுவும்
    இயங்காது,
    சுயமாய்ச் சுழலாது
    சூரியக் குடும்பத்தில் !
    பிரபஞ்ச இடுப்பு வளைவில்
    நியூட்டன்
    எட்டு வைத்து நடந்தால்
    புறப்பட்ட
    இடத்துக்குக் கால்
    தடம் பதிக்க மீளும் !

    Share
  • உ. அக்சயா கவிதைகள்

    உ. அக்சயா கவிதைகள்

    உ. அக்சயா
    இளங்கலை, தமிழ்ப் படைப்பாக்கத் துறை 
    குமரகுரு பன்முக கலை மற்றும்  அறிவியல் கல்லூரி, கோவை

    ————————————————

    தொட்டு விடத் தொலைவில் இருந்து
    வருகிறாய்………….
    தொட்டு விட்டுத் தொலை தூரம்
    போகிறாய்‌………….
    பிரியவும் இல்லை சேரவும் இல்லை
    இனம் புரியா சந்திப்பில் நம் எல்லை.

    இப்படிக்கு
    அலையும் மணலும்

    ————————————————

    நன்றி———

    வெகுமதி இல்லா வேலைக்காரன்
    கள்வன் வரும் நேரம் கத்துபவன்
    கவளத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பவன்
    மீந்தவை உண்டு உயிரை மீட்டெடுப்பவன்
    கல் எடுத்தால் காணாமல் போனவன்
    எல்லைக் கோட்டைத் தாண்டாதவன்
    மனிதன் செய்யும் தவறுக்குத் தாராளமாய்த் தன் பெயர் தந்தவன்
    மனிதனைத் திருத்த முடியாத வார்த்தைக்கு வாலைப் பரிசளித்தவன்.
    உண்டு வீதியில் திரிந்துகொண்டிருக்கும் நன்றியுள்ளவன்

    Share
  • சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

    சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

    அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார்.

    இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது.  இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல்  சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது.  இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன.  இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் சேவகி” பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பராவை வெளியிடுகிறது.  அதே சமயத்தில்  திண்ணை.காம்  ஷேக்ஸ்பியரின் “ஓத்தல்லோ” நாடகத்தைத் தமிழ்த் தழுவலாய் வாரம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது.

    2023 பிப்ரவரி 26 அன்று  சி. ஜெயபாரதன், 89 முடிந்து 90 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, அன்றைய தினம் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு அவர் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன், ஜெயபாரதனுக்கு வாழ்த்துகள் இசைத்துக் கொண்டாடினர்.

    அறிஞர் ஜெயபாரதன் நீடூழி வாழ, வல்லமை சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.

    Share
  • பண்டு பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய கல்வெட்டுகள்

    பண்டு பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் அரசகுடிப் பெண்களும் தேவரடியாரும் கோவில்களுக்கு பல நிவந்தங்கள் செய்த குறிப்புகள் உள்ளன. இவை அக்காலத்தே உயர் குடிப்பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததை உறுதி செய்கின்றன. அதே நேரம் எளிய குடிப் பெண்கள் கோவிலில் நுந்தா விளக்கு எரித்தது, கொடைகள் வழங்கியது பற்றிய கல்வெட்டுகளும் சில உள. ஆக எளிய வீட்டார் பெண்களும் அக்காலத்தே சொத்து உரிமை பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. கீழே உள்ள கல்வெட்டுகள் “பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாததுவே முக்கியமான காரணம்” என்ற ஈ.வே.ரா. கருத்தை உடைத்தெறிகின்றன. தமிழ் வேந்தர் காலத்தில் பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் தமிழர் ஆட்சி ஒழிந்து தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் பெண்கள் சொத்துரிமை இழந்திருப்பாரோ? என்ற ஐயத்தையும் எழுப்புகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள யோக நரசிம்மர் கோயில் தெற்கு குமுதம் இரு வரியில் பொறிக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வெளிச்சேரி பத்தங்கி தேவநாத பட்டன் பாரியை நங்கைச் சாணி இச்சிங்கப் பெருமாள் கோயில் செயைத்த தச்சுக் கூலிக்கு உடலாக குடுத்த தோட்டம் ஆவூரான் நூ
    2. ற்று முப்பதுக்குழி _ _ _ ஏழும், இவந் பத்தங்கி ஆராவமுது (து) பட்டனுக்கு இருபது பழங் காசுக்கு  விற்று. இப்பழங்காசு இருபதும் இக்கோயில் செய்த தச்ச(ர்)க்கு பணிக்கு உடலாக குடுத்தது.

    உடலாக – முன்பணமாக, அச்சாரம்; சாணி – இந்நாளில் திருமதி என்பது போல அந்நாளில் மணமான பிராமணப் பெண்ணை குறிக்க அடையாக பயன்பட்ட சொல்; இவன் – இவற்றை

    விளக்கம்:  வெளிச்சேரி வாழ் பத்தங்கி தேவநாத பட்டருடைய மனைவியான நங்கை சாணி என்ற பிராமணப் பெண் இந்த யோக நரசிம்ம பெருமாள் கோயிலை கட்டுவதற்காக சிற்பிகளுக்கு கூலி அச்சாரமாக தனது ஆவூரான் தோட்டம் என்னும் நூற்று முப்பது குழி நிலத்தையும் _ _ ஏழும் சேர்ந்த இவற்றை பத்தங்கி ஆராவமுது பட்டனுக்கு இருபது பழங்காசுக்கு விற்று அந்த இருபது பழங் காசை சிற்ப பணிக்கு முன்பணமாக கொடுத்தாள்.

    இக்கல்வெட்டு மூலம் நங்கை சாணிக்கு நூற்று முப்பது குழி நிலம் சொத்தாக இருந்ததை அறிய முடிகிறது. ஆராவமுது பட்டன் பத்தங்கி என்ற முன்னொட்டால் குறிக்கப்படுவதை பார்த்தால் தேவநாத பட்டனுக்கு உறவினனாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இச்சிறு கோவில் கட்டப்  பாறை வாங்கி அதை கொணர்தல் செலவு, செதுக்கும் செலவு ஆகியவற்றை ஆசாரிக்கு தர வேண்டும்.  இன்று இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதால்  பழைய கட்டட அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 210

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் கோவில் தெற்கு சுவரில் உள்ள 17 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவளர இருநிலை மடந்தையும் / போர்ச்செயற் பாவையுந் சீர்தனி செவ்வியுந் தன் / பெருந் தேவியேற்கி இன்புற நெடிதியல்யுழியில் இடை /  துறைநாடுந் துடர்வன வேலிபடர் வநவாசியுஞ்  சுள்ளிசூழ் / மதில் கொள்ளப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் / பொருகடல் லீழத்தரைய தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில்  / முடியும் முன்நவர்  பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந் / திர  நாரமும் தெண்டிறை ஈழமண்டலம் முழுவதும் எறிபடை கேரளர் / முறைமையிற் சூடும் குலதனம் பலர்புகழ் முடியும் / _ _ _ சங்கதிர் வேலையுழ் தொல்பெருங் காவல் பல்பழந் / தீவும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி பந்மராந ஸ்ரீ ராஜேந்த்ர / சோழ தேவற்கு யாண்டு 6 வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலி / யூர் கோட்டத்து   ப்ரஹ்மதேயம் வெளிச்சேரி யாளுங்கணத்தாருட் கோமப / க் கண்ணபிரான் ஸர்வாதித்தர் ப்ராஹ்மநி நங்கை சாணி இவ்வூ / ர்  திருதண்டீஸ்வரமுடைய மஹாதேவற்க்கு சந்த்ராதித்யவர்  ஒரு நந்தா வி / ளக்கு  எரிப்பதற்கு வைத்த சாவாமூவா பேராடு 90. இத்தர்ம்மம் / பந்மாஹேஸ்வர  ரக்க்ஷை.

    ஆளும் கணத்தாருள் – நிர்வாக சபையாருள், administrative body; சாவாமூவா பேராடு – தொடர்ந்து குட்டி போட்டு இனம் பெருக்குவதால் இறப்பாலும் முதுமையாலும் எண்ணிக்கை சிறிதும் குறையாத ஆட்டு மந்தை.

    விளக்கம்:  முதலாம் இராசேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் கிபி 1018 இல் வெட்டப்பட்ட 17 வரிக் கல்வெட்டு. செயம்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய புலியூர் கோட்டத்தின் வெளிச்சேரி பிரம்மதேய ஊரை நிர்வகிக்கும் சபை உறுப்பினரான கோமபக் கண்ணபிரான் சர்வாதித்தர்  என்பவரது பிராமண மனைவி நங்கை சாணி இவ்வூரின் திருத் தண்டீசுவரமுடைய சிவனுக்கு சந்திரன் சூரியன் நிலைக்கும் முடிவில்லா காலம் வரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு 90 ஆடு அடங்கிய மந்தையை கொடையாக வழங்கினாள். 90 ஆடு என்பது பெருஞ் செலவு கொண்டது. அப்படியெனில் 90 ஆட்டை விலைக்கு வாங்கும் அளவிற்கு அவளிடம் சொத்தோ பணமோ இருந்துள்ளது தெரிகிறது.

    இதே போல இதே ஊரில் உள்ள வேத நாராயணப் பெருமாள் கோவிலில் முதலாம் இராசேந்திர சோழன் காலத்து சிதிலமடைந்த 29 வரிக் கல்வெட்டு ஒன்று ஆவூர் திருமேற்றளி கோவிலில் நந்தா விளக்கு எரிக்க சாணி நங்கை என்ற பார்ப்பனள் சாவாமூவா பேராடு தானம் கொடுத்துள்ளாள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 208

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஓமாப் புலியூர்  வியாக்ரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்கு சுவறில் பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ சகல (புவனச் சக்)கரவர்த்திக(ள் ஸ்ரீ) கோப்பெருஞ் சிங்க தேவர்க்கு  யாண்டு 14 ஆவது மீனநாயற்று பூர்வபக்ஷத்து  ப்ரதமையும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அஸ்வ
    2. தி நாள் வடகரை விருத(ராஜ பயங்)கர வளநாட்டு மேற்கானாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து பெருமருதூர் கருணாகர நம்பியை முதுகண்ணாக உடைய இவர்
    3. மகள் பாலாஸ்ரீயன் திருமாலிருஞ் சோலை  நம்பி ப்ராஹ்மணி ஆளப்பிறந்தாள் சானி பக்கல் உடையார் உடையவன் வடதளிஉடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணி (யாக)  அழிசு
    4. பாக்கமுடையார் திருவலஞ்சுழியுடை(யார்) இச்சி(ப்)பெற்றாயர் உடையார் திருநாமத்து விலை கொண்டு குடுத்த திருச்சிற்றம்பலவதிக்கு மேற்கு ராஜேந்தர சோழ வாய்க்கா
    5. லுக்கு தெற்க்கு இரண்டாங் கண்ணாற்(று) மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒரு மாமுக்காணியும், இத(ந்) தென்மே(ர்க்கு)ச்சார் பட்டம்பாழ் நிலம்  காணி முந்திரிகையும்
    6. ஆக நிலம் இ(ரண்டுமா) முந்திரிகையும், இந் நிலத்துக்குடலாய் கீழ்கரையில் தெற்கடைய மனையில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர் ஆதிசண்டேசுவர தேவர்
    7. கன்மிகள் பேரால்  கொண்டு குடுத்தார். ப்ரமாணம் எழுதினான் இவ்வூர் ஊர்கணக்கு மூவலூருடையான் முன்னூற்றுப்பிரியன் எழுத்தென்றும் இவருக்கு மு
    8. துகண்பட்டு விற்ற பெருமருதூர் கருணாகர நம்பி எழுத்து என்றும். அறிவுக்கு எழுத்திட்ட இப்படி அறிவேன் கோவிந்தன் சீவில்லிபுத்தூர் கவுணியன், ஸ்ரீ க்ருஷ்ண  பட்டன், பாலாஸ்ரீயன்
    9. திருவெண்காடுபட்டர் , பாலாஸ்ரீயன் தில்லை வாழந்தண நம்பி,  சிறுகோட்டையூர் ஸுப்ரஹ்மண்யபட்ட ஸோமையாஜியார்.

    முதுகண்  – கண்காணி, காவலர், caretaker, supervisor, power of attorney;  பக்கல் – இடம் இருந்து; வதி – சிறு கால்வாய்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட வயல்;  கன்மிகள் – கோவில் செயலர்; பட்டன் – வேத, சமசுகிருத வல்லுநர்.

    விளக்கம்:  பல்லவன் இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் 1257 இல் மீன ராசி ஞாயிறு, வெண்பிறை முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை அசுவினி நட்சத்திரம் கூடிய நன்னாளில் விருதராஜ பயங்கர வளநாட்டில் அடங்கிய மேற்காநாட்டு பிரம்மதேயமான உலகளந்த சோழ சதுர்வேதில் வாழும் பெருமருதூர் கருணாகர நம்பியான தன் தந்தையை காவலராக பெற்றவள் ஆளப்பிறந்தாள் சாணி என்ற பிராமணப் பெண். இவள் கணவன் பாலாசிரியன் திருமாலிருஞ்சோலை நம்பி என்பவன். இவளிடம் இருந்து இறைவன் வடதளி நாயனார் பெயரில் நிலக்கொடை வழங்க விலை கொடுத்து வாங்கினார் அழிசுபாக்கமுடையார் திருவலஞ்சுழியுடையார் இச்சிச்பெற்றாயர். இந்நிலம் சிற்றம்பல சிறுகால்வாய்க்கால் மேற்கிலும் ராஜேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் இரண்டாம் சிறுகால்வாய்க்கு பக்கத்தே மூன்றாம் சதுர நிலத்துக்கு வடக்கே சென்றால் ஒரு மாமுக்காணி நிலமும் இதன் தென்மேற்கை ஒட்டி பயிரில்லாத நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டு மா அளவும் இதற்கு மூலமாக கிழக்குக்கரையில் தெற்கே சென்றால் வீடுகட்டும் இடத்தில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர்  ஆதிசண்டேசுவர தேவரின்  செயலர் பெயரைச்   சொல்லி  வாங்கிக் கொடுத்தார். இதற்கு ஆவணம் எழுதினான் இவ்வூர் ஊர்க்கணக்கன் மூவலூருடையான் முன்னூறுவப் பிரியன். பாதுகாவல் தந்தை பெருமருதூர் கருணாகர நம்பி கையெழுத்திட்டார். இதற்கு சாட்சியாக கோவிந்தன் சீவில்லிபுத்தூர் நம்பி, கவுணியன் ஸ்ரீ கிருஷ்ண பட்டன், பாலாசிரியன் திருவெண்காடு பட்டன், பாலாசிரியன் தில்லை வாழ்அந்தணன், சிறுகோட்டையூர் சுப்பிரமணிய சோமயாஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    ஆளப்பிறந்தாள் மணமான பின்னும் பருவமெய்தாப் பிள்ளையாய் தந்தையின் மேற்பார்வையில் இருந்ததால் அவளது நில விற்பில் அவள் சார்பில் கருணாகர நம்பி கையெழுத்திட்டுள்ளார்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டு தொகுதி V, கடலூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 109 – 110.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம்படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

    பெருங்குறி பெருமக்கள் –   பிராமண ஊர்சபை உறுப்பினர்; ஸ்ரீ முகம் – வாழ்த்து செய்தி, அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்த மனை; நிசதம் – ஏற்பாடு

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார் குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 இல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டு வேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தறு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு ஏற்பாடுப்படி நாழி நெல்லும் ஆண்டு முடிவில் ஒரு காகம். அதே நேரம் ஏற்படுப்படி 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்த கரிகாலரை கி.பி. 965 இல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் ஆவர். இவருள் ஒருவர் இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொலை செய்த இராசதுரோகி ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி தான் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராச துரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண் கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார் ஆவர். இவர் தம் பிள்ளைகளும் வேற்று சாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜ துரோகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது. ரேவதாசன் கிரமவித்தன் தாய் பெரிய நங்கை சாணிக்கு  சொத்து இருந்தது இதன் மூலம் உறுதியாகிறது.

    Share
  • ஹிண்டன்பர்க் Vs அதானி: அடுத்தது என்ன?

    ஹிண்டன்பர்க் Vs அதானி: அடுத்தது என்ன?

    ஹிண்டன்பர்க் அறிக்கை, ஒரு புயலைப் போல் வந்தது. அதானி நிறுவனப் பங்குகள் இறங்குமுகம் கண்டன. குற்றச்சாட்டுகள் குறித்து, செபி விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் அடுத்து எப்படிச் செல்லும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் கருத்துகளைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • லாரிக்கு அடியில் சேவல் சண்டை

    லாரிக்கு அடியில் சேவல் சண்டை

    சென்னை, பொழிச்சலூரில் லாரிக்கு அடியில் உக்கிரமாக நடக்கும் சேவல் சண்டை

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொழிச்சலூர் அங்காளம்மன் மயானக் கொள்ளை

    பொழிச்சலூர் அங்காளம்மன் மயானக் கொள்ளை

    சென்னை, பொழிச்சலூர் அங்காள பரமேஸ்வரி ஆலய மயானக் கொள்ளைத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 62

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 62

    -மேகலா இராமமூர்த்தி

    தவக்கோலத்தோடு இராமன் மேற்கொண்டிருந்த பதினான்கு ஆண்டுக்கால வனவாசம், இராவணன் வீழ்ச்சிக்குப்பின் முடிவுக்கு வந்தது. தான் விரைவில் அயோத்திக்கு அணித்தேயுள்ள நந்தியம்பதிக்குச் சென்று பரதனைச் சந்திக்காவிடில் அவன் எரியில் வீழ்ந்து மாள்வான் எனும் உண்மையை நினைந்த இராமன், ”விரைந்துசென்று பரதனைக் காண வழியுண்டா?” என வீடணனிடம் வினவ, அவன் இராவணனின் புட்பக விமானத்தை வரவழைத்துத் தர, அதில் சீதையொடும் இலக்குவனொடும் ஏறினான் இராமன்.

    வீடணனை இலங்கை நகருக்கும், சுக்கிரீவனையும் வாலிசேயான அங்கதனையும் ஏனைய வானரரையும் கிட்கிந்தைக்கும் செல்லப் பணித்தான். அதனைக் கேட்டுத் துணுக்கமடைந்த அவர்கள், ”ஐயனே! நின் பட்டாபிடேகத்தைக் கண்டு மகிழும்வரை நின்னைப் பின்தொடர எங்களை அனுமதிப்பாயாக!” என்று வேண்டவே அதற்கு இசைந்தான் இராமன்.

    அனைவரும் விமானத்தில் ஏறினர் மகிழ்வோடு. விமானம் இலங்கையை வலமாய்ச் சுற்றிப் பறக்கவே வழியிலுள்ள காட்சிகளையும், கடலில் அமைக்கப்பெற்றிருந்த சேதுவையும் அதன் சிறப்பையும் சீதைக்கு விளக்கியுரைத்தான் இராமன்.

    விரைந்து சென்றுகொண்டிருந்த விமானத்தில் கோதாவரி ஆற்றையும் முன்பு தங்கியிருந்த இடங்களையும் பார்த்துக்கொண்டே இராமனும் இலக்குவனும் சீதையும் சென்றுகொண்டிருந்த வேளையில் பரத்துவாச முனிவர் கீழே நிற்கக் கண்ட இராமன், அவரின் குடில்வாயிலில் விமானத்தை இறக்கினான்.

    இராமனை உவகைக் கலுழ்ச்சியோடு எதிர்கொண்ட அந்தத் தவசீலர், ”ஐயனே! விராதன், கரன், மானாய் வந்த மாரீசன், கவந்தன், ஏழு மராமரங்கள், வாலியின் வீரமார்பு, வருணன் வாராதபோது சீறியதால் கடல்நீர், இராவணன் உரம், கும்பகருணனின் உயர்வு ஆகிய அனைத்தையும் அராவிச் செய்யப்பட்ட உன் பகழியால் அழித்து உலகினைக் காத்தாய்!” என்று புகழ்மொழிகள் உரைத்தார்.

    விராதனும் கரனும் மானும் விறல்கெழு கவந்தன்தானும்
    மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும்
    இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்தானும்
    அராவ அரும் பகழிஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய.
    (கம்ப: மீட்சிப் படலம் – 10140)

    தம் மனையில் அன்று விருந்துண்டுதான் இராமனும் அவன் தோழர்களும் செல்லவேண்டும் என அன்புக்கட்டளை இட்டார் பரத்துவாசர். அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டான் இராமன். எனினும், தான் நந்தியம்பதி போய்ச் சேர்வதற்குள், ”14 ஆண்டுகள் முடிந்துவிட்டன; அண்ணன் இன்னும் சொன்னபடி வரவில்லையே” எனச் சிந்தைநொந்து அருமைத் தம்பி பரதன் தீப்பாய்ந்து தன் ஆருயிரை இழக்காமலிருக்க வேண்டுமே என்றெண்ணி அனுமனை அருகழைத்து,

    ”மாருதி! நான் இன்றைக்கு அயோத்தி வருமுன் நீ விரைந்து சென்று எனக்கொரு தீமையும் இல்லை என்று பரதனிடம் செப்பி அவனைத் தீப்புக விடாமல் தடுத்து அங்கிருக்கும் வேளையில் நான் அங்கு வந்துவிடுவேன்” என்றுரைத்துத் தன் கணையாழியை அனுமனிடம் அடையாளமாய்க் கொடுத்தான்; அனுமனும் கணையாழியை வணக்கத்தோடு பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.

    தன் தந்தையான வாயுவின் வேகமும் தலைவனான இராமனின் கோதண்டத்திலிருந்து புறப்படும் அம்பின் வேகமும் பின்னிட முந்திச்சென்ற அனுமன், ”இராமன் வனவாசம் முடிந்து திரும்பிவிட்டான்” எனும் செய்தியைத் தான் போகும் வழியில் குகனுக்கும் தெரிவித்து வான்வழியே தொடர்ந்து சென்றான்.

    நந்தியம்பதியில் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த பரதனின் நிலையை இப்போது கண்ணுறுவோம் வாருங்கள்.

    இராமன் சென்ற தென்திசையையே நோக்கியவண்ணம் ”அண்ணனார் எப்போது வருவார்; அரச பாரத்தை எப்போது அவர் வசம் ஒப்படைக்கலாம்?” என்று ஏக்கத்தோடு காத்திருந்தான் பரதன். அவனிடம், ”இராமன் ஈண்டு வந்துசேரவேண்டிய காலம் வந்துவிட்டது” என்றனர் சோதிடர்கள்.

    அதுகேட்ட பரதன், ”பின் ஏன் இராமன் இன்னும் வரவில்லை? பரதன் இன்னும் அரசாளும் ஆசை உடையவனாக உளன்; அப்படியிருந்தால் அவன் அரசாண்டு கொண்டிருக்கட்டும் என்று நினைத்திருப்பானோ? இனிச் செய்யவேண்டியதைச் சிந்தித்தவன் நாம் காட்டில் இருப்பதே நல்லது என்று இருந்துவிட்டானாகும்!” என்று இராமன் வாராமைக்குத் தானே கற்பனையாய்க் காரணம் கற்பித்துக்கொண்டான்.

    என்னை இன்னும் அரசியல் இச்சையன்
    அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
    உன்னினான் கொல் உறுவது நோக்கினான்
    இன்னதே நலன் என்று இருந்தான்அரோ.
    (கம்ப: மீட்சிப் படலம் – 10165)

    ”அண்ணன் இராமனின் விருப்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; நான் இனியும் உயிர்வாழ மாட்டேன்” எனும் முடிவுக்கு வந்து தற்கொலைக்குத் துணிந்த பரதன், இளவல் சத்துருக்கனைத் தூதுவரை அனுப்பி அழைத்துவரச் செய்தான்.

    விரைந்துவந்து தன்னைக் கண்ட சத்துருக்கனை இறுகத் தழுவிக்கொண்ட பரதன், ”தம்பி! இராகவன் குறித்த நாளில் இங்கு வந்துசேரவில்லை; எனவே, நான் தீயில் வீழ்ந்து இறக்கத் தீர்மானித்துவிட்டேன்; நீ அயோத்தியின் அரசனாய் இருந்து ஆள்வாயாக!” என்றான்.

    அதுகேட்ட சத்துருக்கன், நடுக்கத்தோடு தன் காதுகளைக் கைகளால் பொத்திக்கொண்டு, ”நான் உனக்கு என்ன தவறு செய்தேன்?” என்று கண்ணீர் சிந்தினான். கிளர்ந்தெழும் மானவுணர்வோடு நிமிர்ந்தவன்,

    ”காட்டில் வாழ்வதற்காக நிலமகளைக் கைவிட்டுப் போன இராமனைக் காப்பாற்றி அவன் பின்னே போனவனும் ஒரு தம்பியாகிய இலக்குவன்; காடுபோன இராமன் தான் திரும்பிவிடக் குறித்த காலம் கடந்தது எனச் சொல்லி ஆற்றாமை உடைய உயிரைவிட முயல்கின்றவனும் ஒரு தம்பியாகிய பரதன்; இவர்களுடன் பிறந்த மற்றொருவனாகிய நான் மட்டும் நாணமில்லாமல் இந்த அரசை ஆளுவேனாம்! இந்த அரசாட்சிதான் எத்தனை இனிது!” என்றான் உள்ளம் துடிக்க.

    கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
    போனானைக் காத்துப் பின்பு
    போனானும் ஒரு தம்பி போனவன்
    தான்வரும் அவதி போயிற்று என்னா
    ஆனாத உயிர்விட என்று அமைவானும்
    ஒரு தம்பி அயலே நாணாது
    யானாம் இவ் அரசு ஆள்வென் என்னே
     
    இவ் அரசாட்சி இனிதே அம்மா.
     (கம்ப: மீட்சிப் படலம் – 10172)

    இராமாயணத்தில் சத்துருக்கனின் வாய்மொழியை நாம் கேட்பது இந்த ஓரிடத்தில் மட்டுமே. மற்ற இடங்களிலெல்லாம் பரதனின் நிழலாக அவனோடு சென்றுவரும் இணைபிரியா இளவலாகவே அவன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான்.

    தான் அரசாள வேண்டும் என்பதற்காக உடன்பிறந்தோரையெல்லாம் இரக்கமின்றி எமபுரிக்கு அனுப்பும் இளவரசர்களை வரலாற்றில் நாம் காணலாம். ஆனால், அரசாட்சி வேண்டாம் என்று விட்டுக்கொடுப்பதில் போட்டிபோடும் தியாக உள்ளங்களான இராமனையும் அவனின் உத்தம இளவல்களையும் இராமகாதையில்தான் காண்கின்றோம்; அவர்களின் உயர்ந்த பண்பு நம்மை விம்மிதம் கொள்ள வைக்கின்றது.

    தான் எரியில் வீழ்ந்து இறப்பது எனும் முடிவில் பரதன் உறுதியாய் இருக்கும் செய்தி கோசலையின் காதுகளுக்கு எட்டியது. அதனை விலக்கும்பொருட்டு விரைந்து பரதனின் இருப்பிடம் வந்துசேர்ந்தாள் அந்த மாதரசி. பரதனின் கரங்களைப் பற்றிக்கொண்டு, ”இராமன் இன்று வரைவில்லையேல் நாளை வந்துசேர்வான் மகனே! தீப்புகல் தவிர்க!” என்றாள் நீரொழுகும் கண்களோடு.

    அதனை மறுத்த பரதன், ”வாய்மையைக் காத்தலும் வாக்குத் தவறாதிருத்தலும் தயரதன் பிள்ளையாகிய என்னுடைய கடன்; அதனை எரியிடை வீழ்ந்து நிரூபிப்பேன்” என்றுரைத்து நெருப்பருகே சென்று அதனைப் பூசித்து நின்றபோது, சுற்றியிருந்தோர் அனைவரும் அதுகண்டு கூக்குரலிட்டு அழுதனர்; அவ்வேளையில் மாருதி ஆங்கு வந்தான்.

    வந்தவன், “தலைவனாகிய இராமன் வந்தான்; மேலோன் வந்தான்; மெய்யுக்கு (சத்தியம்) மெய் (உடல்) போன்றவனாகிய உனது உயிர் அழிந்துபட்டால் அந்த இராமன் உயிர் வாழ்வானா?” என்றுகேட்டு மக்களை விலக்கி உள்நுழைந்து தன் கரங்களால் நெருப்பை அணைத்துக் கரியாக்கினான்.

    அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன்
    மெய்யின் மெய்யன்ன நின்னுயிர் வீடினால்
    உய்யுமே அவன் என்றுரைத்து உள்புகா
    கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.
    (கம்ப: மீட்சிப் படலம் – 10189)

    எரியை அணைத்துக் கரியாக்கினான் எனும் நேரடிப் பொருளோடு எரியையே சான்றாக (கரி) வைத்து இராமனின் வருகையை உறுதிப்படுத்தினான் என்றோர் உட்பொருளும் கொள்ளத்தக்க வகையில் இப்பாடலை வடித்திருக்கும் கம்பரின் சொல்லாற்றல் நயக்கத்தக்கது.

    பரதனை நோக்கிய அனுமன், ”ஐய! இராமன் உன்னைச் சந்திப்பதாகச் சொன்ன நேரம் முடிவுற இன்னும் நாற்பது நாழிகை மீதமுள்ளது; அதன்பின்னரும் இராமன் வாரானாயின் உனக்கு முன்னர் நான் எரியில் வீழ்ந்து மாள்வேன்!” என்று உறுதியளித்துவிட்டு இராமன் அடையாளமாய்க் கொடுத்தனுப்பிய கணையாழியைப் பரதனிடம் காட்டினான்.

    அதுகண்டு மகிழ்ச்சி மீதூரப்பெற்ற பரதன், அனுமனை யார் என்று வினவி அறிந்தான். அதனைத் தொடர்ந்து இராமனை எதிர்கொண்டு அழைக்க அங்கிருந்தோர் அனைவரும் புறப்பட்டனர்; அனுமனோடு இணைந்துசென்றான் பரதன். போகின்ற வழியில் இராமன் வனவாசத்தின்போது புரிந்த செயல்களையெல்லாம் அனுமனிடம் கேட்டறிந்தான்.

    இதற்கிடையில் இராமனைச் சந்திக்கத் தன்னுடைய இருப்பிடமான சிருங்கிபேரத்திலிருந்து, கடல்போன்ற சேனையோடு, குகன் புறப்பட்டுப் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். நலவிசாரிப்புகள் முடிந்த பின்னர் சீதை, இளவல் இலக்குவன், வந்திருக்கும் நண்பர்களோடு விமானம் ஏறினான் இராமன். அயோத்தி நோக்கி வந்துகொண்டிருந்த அவ்விமானத்தையும் அதிலிருந்த இராமனையும் பரதனுக்குச் சுட்டிக் காட்டினான் அனுமன்.

    விமானத்திலிருந்து இறங்கிய இராமன் தன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய தம்பி பரதனைத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்தான். அடுத்து, தாயர் மூவரையும் வணங்கினான். அவர்களிலும் கேகய அரசன் மகளாகிய கைகேயித் தாயின் திருவடிகளில் முதலில் வீழ்ந்து வணங்கிவிட்டுப் பின்னர் கோசலை, சுமித்திரை ஆகியோரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் இராமன் என்கிறார் கம்பர்.

    காட்டுக்கு அனுப்பிய கைகேயியின் மாட்டுத் தனக்குக் கோபமோ வருத்தமோ ஏதுமில்லை என்பதனைச் சுட்டவே முதல் வணக்கத்தை அவளுக்களித்தான் இராமன் என்று நாம் கருதுவதில் பிழையில்லை.

    தன்னோடு வந்த சுக்கிரீவன் வீடணன் முதலாய நண்பர்களைப் பரதனுக்கும் சத்துருக்கனுக்கும் அறிமுகப்படுத்தினான் இராமன். அனைவரையும் ஏற்றிக்கொண்டு அயோத்தி நோக்கிப் பறந்தது புட்பக விமானம்.

    அயோத்தி அரண்மனையை இராமனின் விருப்பப்படி வானரர்க்கும் வீடணனுக்கும் சுற்றிக்காட்டினான் பரதன். அதன் அழகையும் விலைமதிப்பில்லா செல்வ வளத்தையும் கண்டு வியப்பில் வாய்பிளந்தனர் பார்த்தவர்கள்.

    அடுத்து, இராமனின் பட்டாபிடேகத்திற்கு வேண்டிய மங்கல நீரை ஏழு கடல்களிலிருந்தும் புனித நதிகளிலிருந்தும் கொணர்ந்தான் அனுமன். மறுநாளே இராமன் முடிசூடுதற்கு உகந்த நாள் என்று வசிட்டர் இராமனிடம் தெரிவிக்க, அதற்குரிய ஏற்பாடுகள் விரைந்து நிகழ்ந்தன.    

    பிற வேந்தர்களும், மாதவத்தோரும், சான்றோரும், சுக்கிரீவன், அனுமன், வீடணன் போன்றோரும் இராமனை மங்கல நீரால் அபிடேகம் செய்தனர். அதனையடுத்து, சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடைவாளை ஏந்தி நிற்க, பரதன் வெண்கொற்றக் குடையைக் கவிக்க, இலக்குவ சத்துருக்கர் இருவரும் கவரி ஏந்த, மணங்கமழ் கூந்தலாளான சீதை பெருமிதத்தோடு விளங்க, திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல் மரபுளோர் எடுத்துக்கொடுக்க மகுடத்தை வசிட்ட முனிவன் இராமனுக்குச் சூட்டினான் என்று இராமனின் பட்டாபிடேக நிகழ்வை நேரடி வர்ணனை செய்வதுபோல் நமக்குக் காட்சிப்படுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

    அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
    பரதன்வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
    விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.
    (கம்ப: திருமுடிசூட்டுப் படலம் – 10327)

    இப்பாடலில் கம்பர் தம்மை வாழ்வித்த சடையப்ப வள்ளலுக்கு என்றும் அழியாத நன்றி மகுடத்தைச் சூட்டியுள்ளமையைக் காண்கின்றோம். மன்னர்க்கு முடிகவிக்கும் உரிமை அந்நாளில் வேளாளருக்கு இருந்ததைச் சோழநாட்டு வரலாறு கூறும்; அத்தமிழ் மரபை ஈண்டு இணைத்து மகிழ்கின்றார் கம்பநாடர்.

    ”பதினான்கு ஆண்டுக்கால வனவாசத்தில் இராமனுக்குக் கிடைத்த உற்ற தோழர்கள் அனுமனும் அங்கதனும். ஆதலின் அவர்களை இராமனின் இளவல்களுக்கு முன்னதாகவே இப்பாடலில் கூறினார் கம்பர்; இராம இலக்குவரையும் சீதையையும் பரதனையும் மீட்டுத்தந்த பெருமைக்குரியவன் அனுமன்; ஆதலால், அரியணை அனுமன் தாங்க என்றார்; வாலிவதைக்குப் பின் அங்கதனுக்கு அடைக்கலம் அளித்தபோது ”பொன்னுடை வாளை நீட்டி நீ இது பொறுத்தி” என்றான் இராமன். அதனை நினைவிற்கொண்டு அங்கதன் உடைவாள் ஏந்த எனப் பொருத்தமாய் இங்குக் கூறினார்” எனக் கம்பரின் இப்பாடலுக்கு உரிய விளக்கமளிக்கின்றார் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள்.

    இராமன் முடிசூட்டிக்கொண்ட உடனேயே தம்பியர் மூவர்க்கும் மணிமகுடம் சூட்டச்செய்தான்; பரதனைச் செங்கோலாட்சி நடத்துமாறு கட்டளையிட்டு மகிழ்ச்சியில் திளைத்தான் என்கின்றார் கம்பர்.

    தான் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கவேண்டும் எனக் கருதாது, பொறுப்புக்களைத் தம்பியர்க்குப் பகிர்ந்தளித்து, ஆட்சியில் பரதனுக்கும் பங்களித்த இராமனின் செயல், அவனுடைய ஆட்சிமுறையானது பகிர்ந்தாளும் பண்பாடுடையது என்பதை மன்பதைக்குக் காட்டுகின்றது. ’Delegation of duties’ என்று நாம் இக்காலத்தில் இதைத்தான் குறிப்பிடுகின்றோம்; இன்றியமையாத் தலைமைப் பண்புகளுள் ஈதொன்று!

    இவ்வாறு தம் காப்பியமெங்கும் ஆட்சியாளர், குடிமக்கள் என அனைவர்க்குமேற்ற அறக்கருத்துக்களைக் குறைவின்றி வழங்கியிருக்கின்றார் கம்பர். அவர் காப்பியக் கவிஞராக மட்டுமல்லாது நாடகக் கவிஞராகவும், பாத்திரங்களின் உணர்ச்சிகளை அற்புதமாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கவிஞராகவும் திகழ்கின்ற பாங்கை இக்கட்டுரைத் தொடர் நெடுகிலும் நாம் கண்டோம். மாக்கவி கம்பரின் சொல்லாற்றல் அண்ணல் இராமனின் வில்லாற்றலுக்குச் சற்றும் குறைந்ததன்று!

    ’பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப’ எனும் காப்பியப் பாவிகத்தை வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும், சங்கரன் கொடுத்த வாளும், முக்கோடி வாணாளும் உடைய மாவீரன் இராவணனின் வீழ்ச்சியின் வாயிலாய் வெளிப்படுத்தியிருக்கும் கம்பர், ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதனை இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    உயிர்கள் அனைத்தையும் இனபேதமின்றி இடபேதமின்றி நேசிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் இக்காப்பியம் நமக்குக் கற்பிக்கின்றது.

    ”கற்றனைத்தூறும் அறிவு” எனும் வள்ளுவர் வாக்கு, காப்பியத்திற்குச் சிறப்பாய்ப் பொருந்தும். ஏனெனில் பிற இலக்கியங்கட்கு ஒரு துறையே பொருளாய் அமையும்; ஆனால், காப்பிய இலக்கியத்துக்கு உலகமே பொருளாய் அமைகின்றது. காப்பியக் கல்வி தரும் அறிவு பரந்தது; விரிந்தது; சிந்தனையை வளர்ப்பது. அதுவும் கம்பனின் காப்பியத்தில் கிடைப்பதுபோன்ற சிந்தனைச்செல்வம் வேறொரு காப்பியத்தில் கிடைக்காது” என்பார் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

    மூதறிஞர் மாணிக்கனார் உரைத்தபடி பெருங்கவியான கம்பனின் சிந்தனை வளத்துக்கும் கவிப் புலமைக்கும் கட்டியங்கூறுகின்ற வகையில் கம்ப வாரிதியில் கருத்து முத்துக்கள் வித்தாரமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை நான் அள்ளியெடுத்து இக்கட்டுரைத் தொடரில் ஆரமாய்க் கோத்தளித்தேன். மீதமுள்ளவற்றையும் தமிழ்மக்கள் கற்றுப் பயன்கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோளும் வேணவாவும்!

    என்றுமுள தென்றமிழ்க்கு ஏற்றந் தந்த
    கம்பன் புகழ் வாழ்க!
    கன்னித் தமிழ் வாழ்க!

    [முற்றும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • குறளின் கதிர்களாய்…(440)

    குறளின் கதிர்களாய்…(440)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(440)

    நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.

    – திருக்குறள் – 953 (குடிமை)

    புதுக் கவிதையில்…

    இன்முகம் காட்டிப்
    பழகுதல்,
    இல்லையெனச் சொல்லாமல்
    இயன்றவரை ஈதல்,
    இனிய சொற்களையே
    பேசுதல்,
    இகழ்ந்து பிறரைப் பேசாமை,
    இந்நான்கு நற்குணங்களும்
    உண்மையான
    உயர்குடிப் பிறந்தோர் பண்பாகும்…!

    குறும்பாவில்…

    இன்முகம் ஈகை இனியசொல்
    இகழாமை என்ற நான்கு நற்குணங்களும்
    இயல்பாம் உண்மையான உயர்குடியோர்க்கே…!

    மரபுக் கவிதையில்…

    புன்னகை மாறிடா இன்முகமும்,
    பொருளது கையினில் உள்ளவரைத்
    தன்னிடம் வருபவர்க் கீந்திடலும்,
    தரத்துடன் மற்றவர் தம்மிடத்தில்
    வன்சொலைத் தவிர்த்துநல் இன்சொல்லே
    வழக்கமாய்ப் பேசுதலும், பிறர்மனமெய்
    துன்புற இகழ்ந்திட லிலாதிருத்தல்
    தூயதாம் உயர்குடிப் பண்பாமே…!

    லிமரைக்கூ…

    ஆன்றோரெலாம் சொல்லிய படியே
    இன்முகம் ஈகை இன்சொல் இகழாமையென
    நற்குணம் கொண்டதுயர் குடியே…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தகுடி ஒசந்தகுடி
    உண்மயிலயே ஒசந்தகுடி,
    ஒசந்தகொணமிருக்கும் ஒசந்தகுடி..

    பொழுதுக்கும் புன்னக மாறாத
    சிரிச்ச மொகம்,
    இல்லண்ணு சொல்லாம
    எல்லாருக்கும் குடுக்கும்
    ஈக கொணம்,
    கெடுதலான பேச்சி
    பேசாம நல்ல வார்த்தயே
    பேசுற நல்லகொணம்,
    அடுத்தவங்கள தரக்கொறவா
    பேசாத நல்ல மனசு
    எங்கிற நாலும்
    நெறஞ்சிருக்கதுதான்
    உண்மயில ஒசந்த குடியே..

    ஒசந்தகுடி ஒசந்தகுடி
    உண்மயிலயே ஒசந்தகுடி,
    ஒசந்தகொணமிருக்கும் ஒசந்தகுடி…!

    Share