பண்டு பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய கல்வெட்டுகள்

சேசாத்திரி ஸ்ரீதரன்
கல்வெட்டில் அரசகுடிப் பெண்களும் தேவரடியாரும் கோவில்களுக்கு பல நிவந்தங்கள் செய்த குறிப்புகள் உள்ளன. இவை அக்காலத்தே உயர் குடிப்பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததை உறுதி செய்கின்றன. அதே நேரம் எளிய குடிப் பெண்கள் கோவிலில் நுந்தா விளக்கு எரித்தது, கொடைகள் வழங்கியது பற்றிய கல்வெட்டுகளும் சில உள. ஆக எளிய வீட்டார் பெண்களும் அக்காலத்தே சொத்து உரிமை பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. கீழே உள்ள கல்வெட்டுகள் “பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாததுவே முக்கியமான காரணம்” என்ற ஈ.வே.ரா. கருத்தை உடைத்தெறிகின்றன. தமிழ் வேந்தர் காலத்தில் பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் தமிழர் ஆட்சி ஒழிந்து தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் பெண்கள் சொத்துரிமை இழந்திருப்பாரோ? என்ற ஐயத்தையும் எழுப்புகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள யோக நரசிம்மர் கோயில் தெற்கு குமுதம் இரு வரியில் பொறிக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ வெளிச்சேரி பத்தங்கி தேவநாத பட்டன் பாரியை நங்கைச் சாணி இச்சிங்கப் பெருமாள் கோயில் செயைத்த தச்சுக் கூலிக்கு உடலாக குடுத்த தோட்டம் ஆவூரான் நூ
- ற்று முப்பதுக்குழி _ _ _ ஏழும், இவந் பத்தங்கி ஆராவமுது (து) பட்டனுக்கு இருபது பழங் காசுக்கு விற்று. இப்பழங்காசு இருபதும் இக்கோயில் செய்த தச்ச(ர்)க்கு பணிக்கு உடலாக குடுத்தது.
உடலாக – முன்பணமாக, அச்சாரம்; சாணி – இந்நாளில் திருமதி என்பது போல அந்நாளில் மணமான பிராமணப் பெண்ணை குறிக்க அடையாக பயன்பட்ட சொல்; இவன் – இவற்றை
விளக்கம்: வெளிச்சேரி வாழ் பத்தங்கி தேவநாத பட்டருடைய மனைவியான நங்கை சாணி என்ற பிராமணப் பெண் இந்த யோக நரசிம்ம பெருமாள் கோயிலை கட்டுவதற்காக சிற்பிகளுக்கு கூலி அச்சாரமாக தனது ஆவூரான் தோட்டம் என்னும் நூற்று முப்பது குழி நிலத்தையும் _ _ ஏழும் சேர்ந்த இவற்றை பத்தங்கி ஆராவமுது பட்டனுக்கு இருபது பழங்காசுக்கு விற்று அந்த இருபது பழங் காசை சிற்ப பணிக்கு முன்பணமாக கொடுத்தாள்.
இக்கல்வெட்டு மூலம் நங்கை சாணிக்கு நூற்று முப்பது குழி நிலம் சொத்தாக இருந்ததை அறிய முடிகிறது. ஆராவமுது பட்டன் பத்தங்கி என்ற முன்னொட்டால் குறிக்கப்படுவதை பார்த்தால் தேவநாத பட்டனுக்கு உறவினனாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இச்சிறு கோவில் கட்டப் பாறை வாங்கி அதை கொணர்தல் செலவு, செதுக்கும் செலவு ஆகியவற்றை ஆசாரிக்கு தர வேண்டும். இன்று இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதால் பழைய கட்டட அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது.
பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 210
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் கோவில் தெற்கு சுவரில் உள்ள 17 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவளர இருநிலை மடந்தையும் / போர்ச்செயற் பாவையுந் சீர்தனி செவ்வியுந் தன் / பெருந் தேவியேற்கி இன்புற நெடிதியல்யுழியில் இடை / துறைநாடுந் துடர்வன வேலிபடர் வநவாசியுஞ் சுள்ளிசூழ் / மதில் கொள்ளப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் / பொருகடல் லீழத்தரைய தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் / முடியும் முன்நவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந் / திர நாரமும் தெண்டிறை ஈழமண்டலம் முழுவதும் எறிபடை கேரளர் / முறைமையிற் சூடும் குலதனம் பலர்புகழ் முடியும் / _ _ _ சங்கதிர் வேலையுழ் தொல்பெருங் காவல் பல்பழந் / தீவும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி பந்மராந ஸ்ரீ ராஜேந்த்ர / சோழ தேவற்கு யாண்டு 6 வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலி / யூர் கோட்டத்து ப்ரஹ்மதேயம் வெளிச்சேரி யாளுங்கணத்தாருட் கோமப / க் கண்ணபிரான் ஸர்வாதித்தர் ப்ராஹ்மநி நங்கை சாணி இவ்வூ / ர் திருதண்டீஸ்வரமுடைய மஹாதேவற்க்கு சந்த்ராதித்யவர் ஒரு நந்தா வி / ளக்கு எரிப்பதற்கு வைத்த சாவாமூவா பேராடு 90. இத்தர்ம்மம் / பந்மாஹேஸ்வர ரக்க்ஷை.
ஆளும் கணத்தாருள் – நிர்வாக சபையாருள், administrative body; சாவாமூவா பேராடு – தொடர்ந்து குட்டி போட்டு இனம் பெருக்குவதால் இறப்பாலும் முதுமையாலும் எண்ணிக்கை சிறிதும் குறையாத ஆட்டு மந்தை.
விளக்கம்: முதலாம் இராசேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் கிபி 1018 இல் வெட்டப்பட்ட 17 வரிக் கல்வெட்டு. செயம்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய புலியூர் கோட்டத்தின் வெளிச்சேரி பிரம்மதேய ஊரை நிர்வகிக்கும் சபை உறுப்பினரான கோமபக் கண்ணபிரான் சர்வாதித்தர் என்பவரது பிராமண மனைவி நங்கை சாணி இவ்வூரின் திருத் தண்டீசுவரமுடைய சிவனுக்கு சந்திரன் சூரியன் நிலைக்கும் முடிவில்லா காலம் வரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு 90 ஆடு அடங்கிய மந்தையை கொடையாக வழங்கினாள். 90 ஆடு என்பது பெருஞ் செலவு கொண்டது. அப்படியெனில் 90 ஆட்டை விலைக்கு வாங்கும் அளவிற்கு அவளிடம் சொத்தோ பணமோ இருந்துள்ளது தெரிகிறது.
இதே போல இதே ஊரில் உள்ள வேத நாராயணப் பெருமாள் கோவிலில் முதலாம் இராசேந்திர சோழன் காலத்து சிதிலமடைந்த 29 வரிக் கல்வெட்டு ஒன்று ஆவூர் திருமேற்றளி கோவிலில் நந்தா விளக்கு எரிக்க சாணி நங்கை என்ற பார்ப்பனள் சாவாமூவா பேராடு தானம் கொடுத்துள்ளாள்.
பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 208
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஓமாப் புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்கு சுவறில் பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்திஸ்ரீ சகல (புவனச் சக்)கரவர்த்திக(ள் ஸ்ரீ) கோப்பெருஞ் சிங்க தேவர்க்கு யாண்டு 14 ஆவது மீனநாயற்று பூர்வபக்ஷத்து ப்ரதமையும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அஸ்வ
- தி நாள் வடகரை விருத(ராஜ பயங்)கர வளநாட்டு மேற்கானாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து பெருமருதூர் கருணாகர நம்பியை முதுகண்ணாக உடைய இவர்
- மகள் பாலாஸ்ரீயன் திருமாலிருஞ் சோலை நம்பி ப்ராஹ்மணி ஆளப்பிறந்தாள் சானி பக்கல் உடையார் உடையவன் வடதளிஉடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணி (யாக) அழிசு
- பாக்கமுடையார் திருவலஞ்சுழியுடை(யார்) இச்சி(ப்)பெற்றாயர் உடையார் திருநாமத்து விலை கொண்டு குடுத்த திருச்சிற்றம்பலவதிக்கு மேற்கு ராஜேந்தர சோழ வாய்க்கா
- லுக்கு தெற்க்கு இரண்டாங் கண்ணாற்(று) மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒரு மாமுக்காணியும், இத(ந்) தென்மே(ர்க்கு)ச்சார் பட்டம்பாழ் நிலம் காணி முந்திரிகையும்
- ஆக நிலம் இ(ரண்டுமா) முந்திரிகையும், இந் நிலத்துக்குடலாய் கீழ்கரையில் தெற்கடைய மனையில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர் ஆதிசண்டேசுவர தேவர்
- கன்மிகள் பேரால் கொண்டு குடுத்தார். ப்ரமாணம் எழுதினான் இவ்வூர் ஊர்கணக்கு மூவலூருடையான் முன்னூற்றுப்பிரியன் எழுத்தென்றும் இவருக்கு மு
- துகண்பட்டு விற்ற பெருமருதூர் கருணாகர நம்பி எழுத்து என்றும். அறிவுக்கு எழுத்திட்ட இப்படி அறிவேன் கோவிந்தன் சீவில்லிபுத்தூர் கவுணியன், ஸ்ரீ க்ருஷ்ண பட்டன், பாலாஸ்ரீயன்
- திருவெண்காடுபட்டர் , பாலாஸ்ரீயன் தில்லை வாழந்தண நம்பி, சிறுகோட்டையூர் ஸுப்ரஹ்மண்யபட்ட ஸோமையாஜியார்.
முதுகண் – கண்காணி, காவலர், caretaker, supervisor, power of attorney; பக்கல் – இடம் இருந்து; வதி – சிறு கால்வாய்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட வயல்; கன்மிகள் – கோவில் செயலர்; பட்டன் – வேத, சமசுகிருத வல்லுநர்.
விளக்கம்: பல்லவன் இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் 1257 இல் மீன ராசி ஞாயிறு, வெண்பிறை முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை அசுவினி நட்சத்திரம் கூடிய நன்னாளில் விருதராஜ பயங்கர வளநாட்டில் அடங்கிய மேற்காநாட்டு பிரம்மதேயமான உலகளந்த சோழ சதுர்வேதில் வாழும் பெருமருதூர் கருணாகர நம்பியான தன் தந்தையை காவலராக பெற்றவள் ஆளப்பிறந்தாள் சாணி என்ற பிராமணப் பெண். இவள் கணவன் பாலாசிரியன் திருமாலிருஞ்சோலை நம்பி என்பவன். இவளிடம் இருந்து இறைவன் வடதளி நாயனார் பெயரில் நிலக்கொடை வழங்க விலை கொடுத்து வாங்கினார் அழிசுபாக்கமுடையார் திருவலஞ்சுழியுடையார் இச்சிச்பெற்றாயர். இந்நிலம் சிற்றம்பல சிறுகால்வாய்க்கால் மேற்கிலும் ராஜேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் இரண்டாம் சிறுகால்வாய்க்கு பக்கத்தே மூன்றாம் சதுர நிலத்துக்கு வடக்கே சென்றால் ஒரு மாமுக்காணி நிலமும் இதன் தென்மேற்கை ஒட்டி பயிரில்லாத நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டு மா அளவும் இதற்கு மூலமாக கிழக்குக்கரையில் தெற்கே சென்றால் வீடுகட்டும் இடத்தில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர் ஆதிசண்டேசுவர தேவரின் செயலர் பெயரைச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். இதற்கு ஆவணம் எழுதினான் இவ்வூர் ஊர்க்கணக்கன் மூவலூருடையான் முன்னூறுவப் பிரியன். பாதுகாவல் தந்தை பெருமருதூர் கருணாகர நம்பி கையெழுத்திட்டார். இதற்கு சாட்சியாக கோவிந்தன் சீவில்லிபுத்தூர் நம்பி, கவுணியன் ஸ்ரீ கிருஷ்ண பட்டன், பாலாசிரியன் திருவெண்காடு பட்டன், பாலாசிரியன் தில்லை வாழ்அந்தணன், சிறுகோட்டையூர் சுப்பிரமணிய சோமயாஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஆளப்பிறந்தாள் மணமான பின்னும் பருவமெய்தாப் பிள்ளையாய் தந்தையின் மேற்பார்வையில் இருந்ததால் அவளது நில விற்பில் அவள் சார்பில் கருணாகர நம்பி கையெழுத்திட்டுள்ளார்.
பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டு தொகுதி V, கடலூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 109 – 110.
உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம்படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”
பெருங்குறி பெருமக்கள் – பிராமண ஊர்சபை உறுப்பினர்; ஸ்ரீ முகம் – வாழ்த்து செய்தி, அரசாணை; பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்த மனை; நிசதம் – ஏற்பாடு
விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார் குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 இல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையன் 6 சொந்த வீடுகளையும், இரண்டு வேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தறு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு ஏற்பாடுப்படி நாழி நெல்லும் ஆண்டு முடிவில் ஒரு காகம். அதே நேரம் ஏற்படுப்படி 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.
இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்த கரிகாலரை கி.பி. 965 இல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் ஆவர். இவருள் ஒருவர் இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொலை செய்த இராசதுரோகி ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி தான் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராச துரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண் கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார் ஆவர். இவர் தம் பிள்ளைகளும் வேற்று சாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜ துரோகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது. ரேவதாசன் கிரமவித்தன் தாய் பெரிய நங்கை சாணிக்கு சொத்து இருந்தது இதன் மூலம் உறுதியாகிறது.