கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 62
-மேகலா இராமமூர்த்தி
தவக்கோலத்தோடு இராமன் மேற்கொண்டிருந்த பதினான்கு ஆண்டுக்கால வனவாசம், இராவணன் வீழ்ச்சிக்குப்பின் முடிவுக்கு வந்தது. தான் விரைவில் அயோத்திக்கு அணித்தேயுள்ள நந்தியம்பதிக்குச் சென்று பரதனைச் சந்திக்காவிடில் அவன் எரியில் வீழ்ந்து மாள்வான் எனும் உண்மையை நினைந்த இராமன், ”விரைந்துசென்று பரதனைக் காண வழியுண்டா?” என வீடணனிடம் வினவ, அவன் இராவணனின் புட்பக விமானத்தை வரவழைத்துத் தர, அதில் சீதையொடும் இலக்குவனொடும் ஏறினான் இராமன்.
வீடணனை இலங்கை நகருக்கும், சுக்கிரீவனையும் வாலிசேயான அங்கதனையும் ஏனைய வானரரையும் கிட்கிந்தைக்கும் செல்லப் பணித்தான். அதனைக் கேட்டுத் துணுக்கமடைந்த அவர்கள், ”ஐயனே! நின் பட்டாபிடேகத்தைக் கண்டு மகிழும்வரை நின்னைப் பின்தொடர எங்களை அனுமதிப்பாயாக!” என்று வேண்டவே அதற்கு இசைந்தான் இராமன்.
அனைவரும் விமானத்தில் ஏறினர் மகிழ்வோடு. விமானம் இலங்கையை வலமாய்ச் சுற்றிப் பறக்கவே வழியிலுள்ள காட்சிகளையும், கடலில் அமைக்கப்பெற்றிருந்த சேதுவையும் அதன் சிறப்பையும் சீதைக்கு விளக்கியுரைத்தான் இராமன்.
விரைந்து சென்றுகொண்டிருந்த விமானத்தில் கோதாவரி ஆற்றையும் முன்பு தங்கியிருந்த இடங்களையும் பார்த்துக்கொண்டே இராமனும் இலக்குவனும் சீதையும் சென்றுகொண்டிருந்த வேளையில் பரத்துவாச முனிவர் கீழே நிற்கக் கண்ட இராமன், அவரின் குடில்வாயிலில் விமானத்தை இறக்கினான்.
இராமனை உவகைக் கலுழ்ச்சியோடு எதிர்கொண்ட அந்தத் தவசீலர், ”ஐயனே! விராதன், கரன், மானாய் வந்த மாரீசன், கவந்தன், ஏழு மராமரங்கள், வாலியின் வீரமார்பு, வருணன் வாராதபோது சீறியதால் கடல்நீர், இராவணன் உரம், கும்பகருணனின் உயர்வு ஆகிய அனைத்தையும் அராவிச் செய்யப்பட்ட உன் பகழியால் அழித்து உலகினைக் காத்தாய்!” என்று புகழ்மொழிகள் உரைத்தார்.
விராதனும் கரனும் மானும் விறல்கெழு கவந்தன்தானும்
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும்
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்தானும்
அராவ அரும் பகழிஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய. (கம்ப: மீட்சிப் படலம் – 10140)
தம் மனையில் அன்று விருந்துண்டுதான் இராமனும் அவன் தோழர்களும் செல்லவேண்டும் என அன்புக்கட்டளை இட்டார் பரத்துவாசர். அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டான் இராமன். எனினும், தான் நந்தியம்பதி போய்ச் சேர்வதற்குள், ”14 ஆண்டுகள் முடிந்துவிட்டன; அண்ணன் இன்னும் சொன்னபடி வரவில்லையே” எனச் சிந்தைநொந்து அருமைத் தம்பி பரதன் தீப்பாய்ந்து தன் ஆருயிரை இழக்காமலிருக்க வேண்டுமே என்றெண்ணி அனுமனை அருகழைத்து,
”மாருதி! நான் இன்றைக்கு அயோத்தி வருமுன் நீ விரைந்து சென்று எனக்கொரு தீமையும் இல்லை என்று பரதனிடம் செப்பி அவனைத் தீப்புக விடாமல் தடுத்து அங்கிருக்கும் வேளையில் நான் அங்கு வந்துவிடுவேன்” என்றுரைத்துத் தன் கணையாழியை அனுமனிடம் அடையாளமாய்க் கொடுத்தான்; அனுமனும் கணையாழியை வணக்கத்தோடு பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.
தன் தந்தையான வாயுவின் வேகமும் தலைவனான இராமனின் கோதண்டத்திலிருந்து புறப்படும் அம்பின் வேகமும் பின்னிட முந்திச்சென்ற அனுமன், ”இராமன் வனவாசம் முடிந்து திரும்பிவிட்டான்” எனும் செய்தியைத் தான் போகும் வழியில் குகனுக்கும் தெரிவித்து வான்வழியே தொடர்ந்து சென்றான்.
நந்தியம்பதியில் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த பரதனின் நிலையை இப்போது கண்ணுறுவோம் வாருங்கள்.
இராமன் சென்ற தென்திசையையே நோக்கியவண்ணம் ”அண்ணனார் எப்போது வருவார்; அரச பாரத்தை எப்போது அவர் வசம் ஒப்படைக்கலாம்?” என்று ஏக்கத்தோடு காத்திருந்தான் பரதன். அவனிடம், ”இராமன் ஈண்டு வந்துசேரவேண்டிய காலம் வந்துவிட்டது” என்றனர் சோதிடர்கள்.
அதுகேட்ட பரதன், ”பின் ஏன் இராமன் இன்னும் வரவில்லை? பரதன் இன்னும் அரசாளும் ஆசை உடையவனாக உளன்; அப்படியிருந்தால் அவன் அரசாண்டு கொண்டிருக்கட்டும் என்று நினைத்திருப்பானோ? இனிச் செய்யவேண்டியதைச் சிந்தித்தவன் நாம் காட்டில் இருப்பதே நல்லது என்று இருந்துவிட்டானாகும்!” என்று இராமன் வாராமைக்குத் தானே கற்பனையாய்க் காரணம் கற்பித்துக்கொண்டான்.
என்னை இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
உன்னினான் கொல் உறுவது நோக்கினான்
இன்னதே நலன் என்று இருந்தான்அரோ. (கம்ப: மீட்சிப் படலம் – 10165)
”அண்ணன் இராமனின் விருப்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; நான் இனியும் உயிர்வாழ மாட்டேன்” எனும் முடிவுக்கு வந்து தற்கொலைக்குத் துணிந்த பரதன், இளவல் சத்துருக்கனைத் தூதுவரை அனுப்பி அழைத்துவரச் செய்தான்.
விரைந்துவந்து தன்னைக் கண்ட சத்துருக்கனை இறுகத் தழுவிக்கொண்ட பரதன், ”தம்பி! இராகவன் குறித்த நாளில் இங்கு வந்துசேரவில்லை; எனவே, நான் தீயில் வீழ்ந்து இறக்கத் தீர்மானித்துவிட்டேன்; நீ அயோத்தியின் அரசனாய் இருந்து ஆள்வாயாக!” என்றான்.
அதுகேட்ட சத்துருக்கன், நடுக்கத்தோடு தன் காதுகளைக் கைகளால் பொத்திக்கொண்டு, ”நான் உனக்கு என்ன தவறு செய்தேன்?” என்று கண்ணீர் சிந்தினான். கிளர்ந்தெழும் மானவுணர்வோடு நிமிர்ந்தவன்,
”காட்டில் வாழ்வதற்காக நிலமகளைக் கைவிட்டுப் போன இராமனைக் காப்பாற்றி அவன் பின்னே போனவனும் ஒரு தம்பியாகிய இலக்குவன்; காடுபோன இராமன் தான் திரும்பிவிடக் குறித்த காலம் கடந்தது எனச் சொல்லி ஆற்றாமை உடைய உயிரைவிட முயல்கின்றவனும் ஒரு தம்பியாகிய பரதன்; இவர்களுடன் பிறந்த மற்றொருவனாகிய நான் மட்டும் நாணமில்லாமல் இந்த அரசை ஆளுவேனாம்! இந்த அரசாட்சிதான் எத்தனை இனிது!” என்றான் உள்ளம் துடிக்க.
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவன்
தான்வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர்விட என்று அமைவானும்
ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இவ் அரசு ஆள்வென் என்னே
இவ் அரசாட்சி இனிதே அம்மா. (கம்ப: மீட்சிப் படலம் – 10172)
இராமாயணத்தில் சத்துருக்கனின் வாய்மொழியை நாம் கேட்பது இந்த ஓரிடத்தில் மட்டுமே. மற்ற இடங்களிலெல்லாம் பரதனின் நிழலாக அவனோடு சென்றுவரும் இணைபிரியா இளவலாகவே அவன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான்.
தான் அரசாள வேண்டும் என்பதற்காக உடன்பிறந்தோரையெல்லாம் இரக்கமின்றி எமபுரிக்கு அனுப்பும் இளவரசர்களை வரலாற்றில் நாம் காணலாம். ஆனால், அரசாட்சி வேண்டாம் என்று விட்டுக்கொடுப்பதில் போட்டிபோடும் தியாக உள்ளங்களான இராமனையும் அவனின் உத்தம இளவல்களையும் இராமகாதையில்தான் காண்கின்றோம்; அவர்களின் உயர்ந்த பண்பு நம்மை விம்மிதம் கொள்ள வைக்கின்றது.
தான் எரியில் வீழ்ந்து இறப்பது எனும் முடிவில் பரதன் உறுதியாய் இருக்கும் செய்தி கோசலையின் காதுகளுக்கு எட்டியது. அதனை விலக்கும்பொருட்டு விரைந்து பரதனின் இருப்பிடம் வந்துசேர்ந்தாள் அந்த மாதரசி. பரதனின் கரங்களைப் பற்றிக்கொண்டு, ”இராமன் இன்று வரைவில்லையேல் நாளை வந்துசேர்வான் மகனே! தீப்புகல் தவிர்க!” என்றாள் நீரொழுகும் கண்களோடு.
அதனை மறுத்த பரதன், ”வாய்மையைக் காத்தலும் வாக்குத் தவறாதிருத்தலும் தயரதன் பிள்ளையாகிய என்னுடைய கடன்; அதனை எரியிடை வீழ்ந்து நிரூபிப்பேன்” என்றுரைத்து நெருப்பருகே சென்று அதனைப் பூசித்து நின்றபோது, சுற்றியிருந்தோர் அனைவரும் அதுகண்டு கூக்குரலிட்டு அழுதனர்; அவ்வேளையில் மாருதி ஆங்கு வந்தான்.
வந்தவன், “தலைவனாகிய இராமன் வந்தான்; மேலோன் வந்தான்; மெய்யுக்கு (சத்தியம்) மெய் (உடல்) போன்றவனாகிய உனது உயிர் அழிந்துபட்டால் அந்த இராமன் உயிர் வாழ்வானா?” என்றுகேட்டு மக்களை விலக்கி உள்நுழைந்து தன் கரங்களால் நெருப்பை அணைத்துக் கரியாக்கினான்.
அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய்யன்ன நின்னுயிர் வீடினால்
உய்யுமே அவன் என்றுரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான். (கம்ப: மீட்சிப் படலம் – 10189)
எரியை அணைத்துக் கரியாக்கினான் எனும் நேரடிப் பொருளோடு எரியையே சான்றாக (கரி) வைத்து இராமனின் வருகையை உறுதிப்படுத்தினான் என்றோர் உட்பொருளும் கொள்ளத்தக்க வகையில் இப்பாடலை வடித்திருக்கும் கம்பரின் சொல்லாற்றல் நயக்கத்தக்கது.
பரதனை நோக்கிய அனுமன், ”ஐய! இராமன் உன்னைச் சந்திப்பதாகச் சொன்ன நேரம் முடிவுற இன்னும் நாற்பது நாழிகை மீதமுள்ளது; அதன்பின்னரும் இராமன் வாரானாயின் உனக்கு முன்னர் நான் எரியில் வீழ்ந்து மாள்வேன்!” என்று உறுதியளித்துவிட்டு இராமன் அடையாளமாய்க் கொடுத்தனுப்பிய கணையாழியைப் பரதனிடம் காட்டினான்.
அதுகண்டு மகிழ்ச்சி மீதூரப்பெற்ற பரதன், அனுமனை யார் என்று வினவி அறிந்தான். அதனைத் தொடர்ந்து இராமனை எதிர்கொண்டு அழைக்க அங்கிருந்தோர் அனைவரும் புறப்பட்டனர்; அனுமனோடு இணைந்துசென்றான் பரதன். போகின்ற வழியில் இராமன் வனவாசத்தின்போது புரிந்த செயல்களையெல்லாம் அனுமனிடம் கேட்டறிந்தான்.
இதற்கிடையில் இராமனைச் சந்திக்கத் தன்னுடைய இருப்பிடமான சிருங்கிபேரத்திலிருந்து, கடல்போன்ற சேனையோடு, குகன் புறப்பட்டுப் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். நலவிசாரிப்புகள் முடிந்த பின்னர் சீதை, இளவல் இலக்குவன், வந்திருக்கும் நண்பர்களோடு விமானம் ஏறினான் இராமன். அயோத்தி நோக்கி வந்துகொண்டிருந்த அவ்விமானத்தையும் அதிலிருந்த இராமனையும் பரதனுக்குச் சுட்டிக் காட்டினான் அனுமன்.
விமானத்திலிருந்து இறங்கிய இராமன் தன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய தம்பி பரதனைத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்தான். அடுத்து, தாயர் மூவரையும் வணங்கினான். அவர்களிலும் கேகய அரசன் மகளாகிய கைகேயித் தாயின் திருவடிகளில் முதலில் வீழ்ந்து வணங்கிவிட்டுப் பின்னர் கோசலை, சுமித்திரை ஆகியோரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் இராமன் என்கிறார் கம்பர்.
காட்டுக்கு அனுப்பிய கைகேயியின் மாட்டுத் தனக்குக் கோபமோ வருத்தமோ ஏதுமில்லை என்பதனைச் சுட்டவே முதல் வணக்கத்தை அவளுக்களித்தான் இராமன் என்று நாம் கருதுவதில் பிழையில்லை.
தன்னோடு வந்த சுக்கிரீவன் வீடணன் முதலாய நண்பர்களைப் பரதனுக்கும் சத்துருக்கனுக்கும் அறிமுகப்படுத்தினான் இராமன். அனைவரையும் ஏற்றிக்கொண்டு அயோத்தி நோக்கிப் பறந்தது புட்பக விமானம்.
அயோத்தி அரண்மனையை இராமனின் விருப்பப்படி வானரர்க்கும் வீடணனுக்கும் சுற்றிக்காட்டினான் பரதன். அதன் அழகையும் விலைமதிப்பில்லா செல்வ வளத்தையும் கண்டு வியப்பில் வாய்பிளந்தனர் பார்த்தவர்கள்.
அடுத்து, இராமனின் பட்டாபிடேகத்திற்கு வேண்டிய மங்கல நீரை ஏழு கடல்களிலிருந்தும் புனித நதிகளிலிருந்தும் கொணர்ந்தான் அனுமன். மறுநாளே இராமன் முடிசூடுதற்கு உகந்த நாள் என்று வசிட்டர் இராமனிடம் தெரிவிக்க, அதற்குரிய ஏற்பாடுகள் விரைந்து நிகழ்ந்தன.
பிற வேந்தர்களும், மாதவத்தோரும், சான்றோரும், சுக்கிரீவன், அனுமன், வீடணன் போன்றோரும் இராமனை மங்கல நீரால் அபிடேகம் செய்தனர். அதனையடுத்து, சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடைவாளை ஏந்தி நிற்க, பரதன் வெண்கொற்றக் குடையைக் கவிக்க, இலக்குவ சத்துருக்கர் இருவரும் கவரி ஏந்த, மணங்கமழ் கூந்தலாளான சீதை பெருமிதத்தோடு விளங்க, திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல் மரபுளோர் எடுத்துக்கொடுக்க மகுடத்தை வசிட்ட முனிவன் இராமனுக்குச் சூட்டினான் என்று இராமனின் பட்டாபிடேக நிகழ்வை நேரடி வர்ணனை செய்வதுபோல் நமக்குக் காட்சிப்படுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. (கம்ப: திருமுடிசூட்டுப் படலம் – 10327)
இப்பாடலில் கம்பர் தம்மை வாழ்வித்த சடையப்ப வள்ளலுக்கு என்றும் அழியாத நன்றி மகுடத்தைச் சூட்டியுள்ளமையைக் காண்கின்றோம். மன்னர்க்கு முடிகவிக்கும் உரிமை அந்நாளில் வேளாளருக்கு இருந்ததைச் சோழநாட்டு வரலாறு கூறும்; அத்தமிழ் மரபை ஈண்டு இணைத்து மகிழ்கின்றார் கம்பநாடர்.
”பதினான்கு ஆண்டுக்கால வனவாசத்தில் இராமனுக்குக் கிடைத்த உற்ற தோழர்கள் அனுமனும் அங்கதனும். ஆதலின் அவர்களை இராமனின் இளவல்களுக்கு முன்னதாகவே இப்பாடலில் கூறினார் கம்பர்; இராம இலக்குவரையும் சீதையையும் பரதனையும் மீட்டுத்தந்த பெருமைக்குரியவன் அனுமன்; ஆதலால், அரியணை அனுமன் தாங்க என்றார்; வாலிவதைக்குப் பின் அங்கதனுக்கு அடைக்கலம் அளித்தபோது ”பொன்னுடை வாளை நீட்டி நீ இது பொறுத்தி” என்றான் இராமன். அதனை நினைவிற்கொண்டு அங்கதன் உடைவாள் ஏந்த எனப் பொருத்தமாய் இங்குக் கூறினார்” எனக் கம்பரின் இப்பாடலுக்கு உரிய விளக்கமளிக்கின்றார் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள்.
இராமன் முடிசூட்டிக்கொண்ட உடனேயே தம்பியர் மூவர்க்கும் மணிமகுடம் சூட்டச்செய்தான்; பரதனைச் செங்கோலாட்சி நடத்துமாறு கட்டளையிட்டு மகிழ்ச்சியில் திளைத்தான் என்கின்றார் கம்பர்.
தான் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கவேண்டும் எனக் கருதாது, பொறுப்புக்களைத் தம்பியர்க்குப் பகிர்ந்தளித்து, ஆட்சியில் பரதனுக்கும் பங்களித்த இராமனின் செயல், அவனுடைய ஆட்சிமுறையானது பகிர்ந்தாளும் பண்பாடுடையது என்பதை மன்பதைக்குக் காட்டுகின்றது. ’Delegation of duties’ என்று நாம் இக்காலத்தில் இதைத்தான் குறிப்பிடுகின்றோம்; இன்றியமையாத் தலைமைப் பண்புகளுள் ஈதொன்று!
இவ்வாறு தம் காப்பியமெங்கும் ஆட்சியாளர், குடிமக்கள் என அனைவர்க்குமேற்ற அறக்கருத்துக்களைக் குறைவின்றி வழங்கியிருக்கின்றார் கம்பர். அவர் காப்பியக் கவிஞராக மட்டுமல்லாது நாடகக் கவிஞராகவும், பாத்திரங்களின் உணர்ச்சிகளை அற்புதமாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கவிஞராகவும் திகழ்கின்ற பாங்கை இக்கட்டுரைத் தொடர் நெடுகிலும் நாம் கண்டோம். மாக்கவி கம்பரின் சொல்லாற்றல் அண்ணல் இராமனின் வில்லாற்றலுக்குச் சற்றும் குறைந்ததன்று!
’பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப’ எனும் காப்பியப் பாவிகத்தை வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும், சங்கரன் கொடுத்த வாளும், முக்கோடி வாணாளும் உடைய மாவீரன் இராவணனின் வீழ்ச்சியின் வாயிலாய் வெளிப்படுத்தியிருக்கும் கம்பர், ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதனை இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிர்கள் அனைத்தையும் இனபேதமின்றி இடபேதமின்றி நேசிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் இக்காப்பியம் நமக்குக் கற்பிக்கின்றது.
”கற்றனைத்தூறும் அறிவு” எனும் வள்ளுவர் வாக்கு, காப்பியத்திற்குச் சிறப்பாய்ப் பொருந்தும். ஏனெனில் பிற இலக்கியங்கட்கு ஒரு துறையே பொருளாய் அமையும்; ஆனால், காப்பிய இலக்கியத்துக்கு உலகமே பொருளாய் அமைகின்றது. காப்பியக் கல்வி தரும் அறிவு பரந்தது; விரிந்தது; சிந்தனையை வளர்ப்பது. அதுவும் கம்பனின் காப்பியத்தில் கிடைப்பதுபோன்ற சிந்தனைச்செல்வம் வேறொரு காப்பியத்தில் கிடைக்காது” என்பார் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.
மூதறிஞர் மாணிக்கனார் உரைத்தபடி பெருங்கவியான கம்பனின் சிந்தனை வளத்துக்கும் கவிப் புலமைக்கும் கட்டியங்கூறுகின்ற வகையில் கம்ப வாரிதியில் கருத்து முத்துக்கள் வித்தாரமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை நான் அள்ளியெடுத்து இக்கட்டுரைத் தொடரில் ஆரமாய்க் கோத்தளித்தேன். மீதமுள்ளவற்றையும் தமிழ்மக்கள் கற்றுப் பயன்கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோளும் வேணவாவும்!
என்றுமுள தென்றமிழ்க்கு ஏற்றந் தந்த
கம்பன் புகழ் வாழ்க!
கன்னித் தமிழ் வாழ்க!
[முற்றும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.