குறளின் கதிர்களாய்…(440)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(440)
நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
– திருக்குறள் – 953 (குடிமை)
புதுக் கவிதையில்…
இன்முகம் காட்டிப்
பழகுதல்,
இல்லையெனச் சொல்லாமல்
இயன்றவரை ஈதல்,
இனிய சொற்களையே
பேசுதல்,
இகழ்ந்து பிறரைப் பேசாமை,
இந்நான்கு நற்குணங்களும்
உண்மையான
உயர்குடிப் பிறந்தோர் பண்பாகும்…!
குறும்பாவில்…
இன்முகம் ஈகை இனியசொல்
இகழாமை என்ற நான்கு நற்குணங்களும்
இயல்பாம் உண்மையான உயர்குடியோர்க்கே…!
மரபுக் கவிதையில்…
புன்னகை மாறிடா இன்முகமும்,
பொருளது கையினில் உள்ளவரைத்
தன்னிடம் வருபவர்க் கீந்திடலும்,
தரத்துடன் மற்றவர் தம்மிடத்தில்
வன்சொலைத் தவிர்த்துநல் இன்சொல்லே
வழக்கமாய்ப் பேசுதலும், பிறர்மனமெய்
துன்புற இகழ்ந்திட லிலாதிருத்தல்
தூயதாம் உயர்குடிப் பண்பாமே…!
லிமரைக்கூ…
ஆன்றோரெலாம் சொல்லிய படியே
இன்முகம் ஈகை இன்சொல் இகழாமையென
நற்குணம் கொண்டதுயர் குடியே…!
கிராமிய பாணியில்…
ஒசந்தகுடி ஒசந்தகுடி
உண்மயிலயே ஒசந்தகுடி,
ஒசந்தகொணமிருக்கும் ஒசந்தகுடி..
பொழுதுக்கும் புன்னக மாறாத
சிரிச்ச மொகம்,
இல்லண்ணு சொல்லாம
எல்லாருக்கும் குடுக்கும்
ஈக கொணம்,
கெடுதலான பேச்சி
பேசாம நல்ல வார்த்தயே
பேசுற நல்லகொணம்,
அடுத்தவங்கள தரக்கொறவா
பேசாத நல்ல மனசு
எங்கிற நாலும்
நெறஞ்சிருக்கதுதான்
உண்மயில ஒசந்த குடியே..
ஒசந்தகுடி ஒசந்தகுடி
உண்மயிலயே ஒசந்தகுடி,
ஒசந்தகொணமிருக்கும் ஒசந்தகுடி…!