சங்க இலக்கியத்தில் தலைவி நெஞ்சொடு கிளத்தல்

திருமதி கு. வளா்மதி, உதவிப் பேராசிாியா்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ்
இராஜரத்தினம் மகளிா் கல்லூாி,
சிவகாசி.
முன்னுரை
மொழி வழிவழியாக, மரபு வழியாகப் பேசப்பட்டு வருகின்றது. பழமையின் படைப்புகள், அறிவியல் வளர்ச்சிகள் என அனைத்துமே மொழியோடு தொடர்புடையனவாகவே உள்ளன. கற்றோர், கல்லாதவர் என அனைவரும் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாற ‘மொழி’ இன்றியமையாததாகும். மனிதன் சமுதாயமாகக் கூடிவாழ்ந்த போது செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் நிலை உருவாகியது. பேச்சுமொழி தோன்றிய பின் நேருக்குநேர் செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். செய்திகளைப் பரிமாறிக் கொள்வதால் மனிதப்பண்பு நலன்களும், பரிமாறப்படும் செய்தியினுடைய புலப்பாட்டுத்திறனும் வெளிப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழரின் அகவாழ்வு நிலையினையும், புறவாழ்வு நிலையினையும் அறிவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதவாழ்வில் செய்திப்பரிமாற்றம் தமக்குள்ளேயும், இருவருக்கிடையேயும், குழுவினருக்கிடையேயும் நடைபெறுகின்றது. செய்திப்பரிமாற்றத்தில் மொழிவழிச் செய்திப்பரிமாற்றமே இன்றியமையாததாக அமைகின்றது. அவ்மொழிவழிச் செய்திப்பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக தலைவி நெஞ்சொடு கிளத்தல் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களில் தலைவியின் நெஞ்சொடு கிளத்தல் இடம்பெற்றுள்ளமை பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
மொழியும் செய்திப்பரிமாற்றமும்
மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதர்களையும் வளர்த்தெடுக்கும் தனித்தன்மையைப் பெற்று விளங்குகின்றது. செய்திப்பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு கருவியாக அமையாமல் சிந்தனையின் வடிவாகவும் அதன் வெளிப்பாடாகவும் மொழி திகழ்கின்றது. நாகரிகத்தின் வித்தாகவும் எண்ணத்தின் உருவமாகவும் மாந்தர்களைப் பிணைப்பதாகவும் இருக்கின்ற மொழி வளர்ச்சியின் சிறப்பான நிலையே இலக்கியம் ஆகும்.
மாந்தரின் மனதில் இன்பத்தை ஏற்படுத்தித் துன்பத்திலிருந்து விடுபடச் செய்வதற்கு இலக்கியம் பெரிதும் உதவுகின்றது. இலக்கியம் மாந்தரைச் சோர்விலிருந்து விலக்குகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியையும் சிறப்பையும் உணர்த்துவதற்கு இலக்கியம் ஊடகமாக உள்ளது. இவை அனைத்திற்கும் மூலதனமாக மொழியும் அதன்வழிச் செய்திப்பரிமாற்றமும் உள்ளன.
மொழிவழிச் செய்திப்பரிமாற்றம் – விளக்கம்
மாந்தர்தம் வாய்மொழியாக செய்திப்பரிமாற்றம் நிகழுமாயின் அது ‘மொழிவழிச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். இம்மொழிவழிச் செய்திப்பரிமாற்றத்தினை ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம், பன்முகச் செய்திப்பரிமாற்றம்’ என்ற இருநிலைகளில் ஆராய இயலுகின்றது. மாந்தர் கேட்போர் யாருமின்றி, ஒருமுகமாகத் தனக்குத் தானே செய்தியைக் கூறுதல், ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ ஆகும். ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் என்பது மாந்தர்கள் நெஞ்சொடு கிளப்பதாகவும், தனிமொழியாகவும் அமையும். பன்முகச் செய்திப்பரிமாற்றம் என்பது ஒரு மாந்தர் மற்றொரு மாந்தருடன் பேசுவதாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாந்தருடன் பேசுவதாகவோ அமையும்.
சங்கப்பாடல்களில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்
மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களி;ல் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக, புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது.
சங்க அகப்பாடல்களில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்
சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் – தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கின்றது எனலாம். பேசும் முறைமை பற்றி,
“நாடக முன்னிலைக்கூற்று மூன்றுவகையாக வளர்ந்தது. ஒன்று மற்றொருவரை
முன்னிலைப்படுத்தி ஒருவரே பேசுவது. இரண்டு தம் நெஞ்சிற்குக் கூறிக் கொள்வது. மூன்று பிற அஃறிணைப்பொருளை முன்னிலைப்படுத்தி விளித்துக் கூறுவது”1
என்று அறிஞர்கள் பகுக்கின்றனர். இம்முறையில் குறிக்கப்படும் செய்திகளைச் சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடிகிறது. மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சொடு கிளத்தல்
அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால்; தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,
“நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”2
என்ற நூற்பா விளக்குகின்றது.
“நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து”3
இக்குறட்பா உள்ளத்தாலும், மொழியாலும் பேசும் நிகழ்வினை உணர்த்துகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.
தலைவி
மாந்தர் மிகுதியாக இன்புற்றிருக்கும் தருணத்தில் அவர்கள் உள்ளத்துள் மகிழ்ச்சி பிறப்பது இயல்பு. சோதனைகள் பலவும் வரும் சூழலில் துயருற்று மனம் ஆற்றாது தனக்குத்தானே புலம்பிக் கொண்டே இருத்தலும் இயல்பே ஆகும். தலைவி எப்போதும் தலைவனுடன் இணைந்திருக்கும் நிலையையே விரும்புகின்றாள். அதனால் பிரிவு நேரிடும் போது பெரிதும் வருந்துகின்றாள். தலைவன் அருகில் இல்லாத காலங்களில், தலைவிக்குத் தோழி உற்றதுணையாக இருக்கின்றாள். தோழி அருகில் இல்லாத தனிமைச் சூழலில், தலைவி நெஞ்சை விளித்துப் பேசுகின்றாள்.
“தலைவிக்குப் பிரிவு ஆற்றாமை மிகுந்து விட்டது. தனக்குத் துணையாக உதவுவாரைக் கண்டிலள். இப்பொழுது அவள் தனக்கு நெஞ்சைத் தவிர துணையாவார் யாரும் இலர் என்று கருதி நெஞ்சை நோக்கிக் கூறுகின்றாள்”4
என்பர்.
இங்ஙனம், தலைவி அதிகமாகத் துன்புறும் போது தனக்குத்தானே நெஞ்சொடு புலம்பிக் கொள்வதும் உண்டு. தலைவி காப்புமிகுதியால் வருந்துகின்ற போதும், தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் போதும், தலைவனிடம் ஊடல்கொள்ளும் போதும் நெஞ்சொடு பேசுகின்றாள். இச்சூழல்கள் அனைத்தும் தலைவியின் ஆழ்மனதில் கவலையை ஏற்படுத்தக்கூடிய காரணத்தாலேயே தலைவி மனதுடன் பேசும் நிலையைக் காணமுடிகிறது.
காப்புமிகுதிக்கண் பேசுதல்
களவுக்காலத்தில் தலைவியைப் புறத்தே செல்லவிடாமல் தாய் முதலானோர் பாதுகாத்தல் ‘காப்பு மிகுதி’ ஆகும். இதனை ‘இற்செறிப்பு’ என்பர். காவல்மிகுதிப்பட்ட போது தலைவனைக் காணாது துயிலை இழந்து வருந்துகின்ற தலைவியின் நெஞ்சம், தலைவனிடம் சென்றது. அந்நெஞ்சத்தை விளித்து,
“எல்லையும் இரவும் துயில்துறந்து, பல்லூழ்
அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல்நசைஇ,
இருங்கழி ஓதம்போல் தடுமாறி,
வருந்தினை – அளியஎன் மடங்கெழு நெஞ்சே!” (கலி.123: 16-19)
என்று வருந்துகின்றாள். இப்பாடலடிகள் காப்புமிகுதிக்கண் ஆற்றாத தலைவி, தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறுவதாக உள்ளன.
தலைவி, தலைவனைக் காணும் போது, அவனால் வரும் அனைத்து துன்பங்களையும் மறந்து விடுகின்றேன் என்று தன் நெஞ்சின் சோர்வை வெளிப்படுத்துகின்றாள்.
“மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவைமொழியாம் எனச் சொல்லினும், அவைநீ,
மறத்தியோ வாழி என்நெஞ்சே! பலஉடன்
காமர் மாஅத்துத் தாதுஅமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்
தெண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே?” (குறுந்.306)
என்ற பாடலில் நெய்தல்நிலத் தலைவனைப் பார்க்கத் துடிக்கும் தலைவியின் அகமனவுணர்வின் வெளிப்பாடு இடம்பெற்றுள்ளது.
களவுக்காலத்தில் தலைவனைச் சந்திப்பது அரிதான செயலாகும். அதிலும் காப்பு மிகுதிக்கண் தலைவனைக் காணாமல் உறக்கமின்றி ஏங்கும் தலைவியின் அகமனவுணர்வு, ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சை நோக்கிப் பேசுவதாக அமைகின்றது. இங்கு, தலைவி அகமனவுணர்வைப் பரிமாறிக் கொள்வதற்கு நெஞ்சை வடிகாலாகக் கொள்கின்றாள் என்பது புலப்படுகின்றது.
தனிமைச் சூழல்
சங்ககாலத்தில் தலைவன் மட்டுமின்றி தலைவியும் பிரிவுத்துயரைத் தனக்குத் தானே நெஞ்சொடு கிளத்தல் உண்டு. தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவி, தனிமைச் சூழலில் ஆற்றாமை மீதூர நெஞ்சை விளித்துப் பேசுவதாகப் பாடல்கள் உள்ளன.
மொழி வேறுபட்ட நாட்டிற்குச் சென்று வாழ்தல் கடினமெனினும், தலைவனைப் பிரிந்து வாழ முடியாத நிலையில் அவன் வாழும் நாட்டிற்குச் செல்வதற்காகத் தலைவி நெஞ்சை விளிக்கின்றாள். இதனை,
“கோடுஈர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்குஇவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனிவாழி, என் நெஞ்சே!” (குறுந்.11: 1-4)
என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன. இதைப் போன்றே தலைவன் சென்ற வழியில் தானும் செல்லத் துணிந்து நெஞ்சை விளித்துப் பேசும் தலைவியின் ‘ஆற்றாமை உணர்வு’ அகநானூறு 303-ஆம் பாடலில் வெளிப்படுகின்றது. இதில், தலைவனின் இருப்பிடத்துக்குத் தன்னையும் கொண்டு செல்லத் தலைவி தன் நெஞ்சத்தை ஏவுகின்றாள்.
இங்கு தலைவன் இல்லாத சூழலில், தனிமையில் வாழமுடியாத தலைவியின் மனவுணர்வு வெளிப்படுகின்றது. தலைவனுடன் சென்று இணைந்திருக்கும் வாழ்வில் துன்பம் ஏற்பட்டாலும் அதை ஏற்கத் தலைவியின் மனம் துணிகின்றது. ஆனால், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமைச்சூழலை ஏற்க மறுக்கும் தலைவியின் மனநிலை தெளிவாகின்றது. தலைவன் மீது தலைவி கொண்ட அன்பும் அவள் நெஞ்சொடு கிளக்கும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தால் வெளிப்படுகின்றது.
ஊடலில் பேசுதல்
பரத்தையரிடம் சென்று மீண்டு வந்த தலைவன், தலைவியின் உடன்பாட்டை வேண்டி நிற்க, அவன்பால் ஊடல் கொண்டவளாயினும் தன்னெஞ்சம் அவனிடத்துச் செல்வதை அறிந்த தலைவி நெஞ்சிடம், தலைவனுக்கு உடன்பட்டு அவனோடு பழகுவாயானால் மீண்டும் அவன் பிரிய, துன்பம் பல உண்டாகும். அதனால் நீ துயிலுகின்ற நாட்களோ மிகச் சிலவாகும் என்றாள். இதனைக் குறுந்தொகை 91-ஆம் பாடல் சுட்டுகின்றது. இங்கு, பரத்தமை மீது கொண்ட அருவருப்பும், தலைவனின் பிரிவைத் தாங்கவியலாத துன்பவுணர்ச்சியும் சேர்ந்து தலைவியிடம் தன்னிரக்கம் தோன்றச் செய்கின்றன. தலைவன் மீண்டும் பரத்தையிடம் சென்றுவிடுவானோ? என்ற தலைவியின் அச்சவுணர்வும் புலப்படுகின்றது.
தலைவனின் எத்தகைய செயலையும் தலைவி பொறுத்துக் கொள்வாள். ஆனால், தன்னை விட்டு மற்றொரு பெண்ணை நாடிச் செல்வதைப் பரத்தமை மேற்கொள்வதை எந்தப் பெண்ணாலும் பொறுத்துக் கொள்ள இயலாது. இச்சூழலில் தலைவியின் மனதில் துன்பம் மிகுதியாகும் காரணத்தாலேயே அவள் தலைவனோடு ஊடல் கொள்கின்றாள். ஊடல் கொண்ட பின்பு, தன்னுடைய நிலையை எண்ணித் தனக்குத்தானே இரங்குகின்றாள். இச்சூழலில் தலைவியின் அகமனப் போராட்டம், ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளத்தலாகவே அமைகின்றது.
இங்ஙனம், காப்பு மிகுதிக்கண் தலைவனை எண்ணி உறக்கமின்மை, தனிமைச்சூழலை விடத் தலைவனுடன் சென்று துன்பவாழ்க்கையை ஏற்கத் துணியும் மனநிலை, ஊடலைக் கூட வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாமை போன்ற தலைவியின் நிலை சங்க இலக்கியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஊடலில், தலைவன் மீண்டும் தன்னை விட்டுப் பரத்தமை மேற்கொள்வானோ? என்ற அச்சவுணர்வில் பெண் வாழவேண்டிய கட்டாய நிலையினைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. இவ்வாறு, தலைவனின் தவறுக்கும் தலைவியே வருந்தி ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளக்கும் அவலத்தைக் காணமுடிகிறது.
புறப்பாடல்களில் நெஞ்சொடு கிளத்தல்
சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் அகப்பாடல்களில் தலைவன், தலைவி போன்றோர் மனதுக்குள் பேசும் நிலையே உள்ளது. இருப்பினும் மனதிற்குள் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைப் புறப்பாடல்கள் சிலவற்றிலும் காணமுடிகிறது. புறநானூற்றில் நெஞ்சொடு கிளத்தும் பாடல்கள் உள்ளன. அவற்றில், புலவர்கள் தங்களின் மனவுணர்வுகளை நெஞ்சை விளித்துப் பேசுவதன் வாயிலாகப் புலப்படுத்துகின்றனர்.
“ஒன்றைப் பற்றி நினைத்தல், மனதிற்குள் சிக்கல்களுக்குத் தீர்வு காணல், மனதிற்குள் படித்தல், கணக்குப் போடுதல், சிந்தித்தல், எண்ணங்கள், மனவுறுத்தல்கள் போன்றவை அகத்தொடர்பேயாகும்”5
என்பர்.
புறப்பாடல்களில் இதுபோன்ற அகத்தொடர்புச் சூழல்களைக் காணமுடிகிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இவ்விரு மன்னரும் போரிட்டு விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் கண்ட கழாத்தலையார், கணவனை இழந்த மனைவியரின் செயல், பேய்மகளிரின் செயல், பதினெட்டுமொழி பேசும் படைத்தொகுதிகளின் செயல் போன்றவற்றைக் குறித்துத் தம் மனதுக்குள் பேசுகின்றார். இனி இந்த நாடு என்ன ஆகும்? என்ற கழிவிரக்கம் அவர் மனதில் தோன்றுகின்றது. இதனைப் புறநானூறு 62-ஆம் பாடல் உணர்த்துகின்றது. இப்பாடலில் கழாத்தலையார், போர்ப்புறத்து வீழ்ந்த வீரரின் சிறப்பினையும், மகளிர் உடன்கட்டை ஏறும் முறையினையும் கண்டு வருந்திப் பாடுகின்றார். இங்கு, புலவரின் தன்னிரக்க உணர்வு வெளிப்படுகின்றது.
இளவெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்ற பெருஞ்சித்திரனார், முகம் மாற்றமடைந்து மன்னன் அளிக்கும் பரிசிலைப் பெற்றுக் கொள்ளாமல் மீண்டுவரும் காட்சியினை,
“எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்” (புறம்.207: 1-4)
என்ற அடிகள் சுட்டுகின்றன. புலவரின் அகமன விருப்பத்திற்கு மாறான பரிசில் ஏற்புடையதாகாது என நெஞ்சை விளித்துப் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது. பரிசில் பெறச் செல்லும் புறப்பாடலிலும் முகம் திரிந்து கொடுத்தால் பெறுபவரின் மனம் துன்பப்படும் என்று மனம் சார்ந்த அகவுணர்வு வெளிப்படுகின்றது.
அதியமான், ஒளவையாருக்குப் பரிசில் கொடுக்கும் காலத்தை நீட்டிக்கும் சூழலில் அவர் தன் நெஞ்சிடம், வருத்தம் வேண்டாம். பரிசில் பெறுவது உறுதியே என்று கூறுகின்றார். இதனைப் புறநானூறு 101-ஆம் பாடல் தெரிவிக்கின்றது. பரிசில் பெறுவதற்கான காலம் தாழ்த்தப்பட்டால், புலவர்களின் மனதில் கோபமே உருவாகும். ஆனால் ஒளவையார், பொறுமையாக இருக்கின்றார். அதோடு, பரிசில் தவறாது; வருந்தாதே என்று தன் நெஞ்சுக்குக் கூறுவதாகத் தனக்குத் தானே ஆறுதல் கூறுகின்றார். காரணம், அதியன் மீது கொண்ட நட்பே ஆகும். புலவர்களின் மதிப்பினை உணராமல் இருந்தால் புலவர்களுக்கு கோபம் ஏற்படுவது இயல்பு. ஆனால், அதியனுடன் கொண்ட மேலான நட்பின் காரணமாக ஒளவையின் மனநிலை மாறுபடுகின்றது.
இங்ஙனம் புலவர்கள் தம் மனஉணர்வுகளை வெளிப்படையாகக் கூறாமல் நெஞ்சொடு பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளனர். புறப்பாடல்களிலும் புலவர்களின் மனநிலை என்ற அடிப்படையில் நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது. மன்னனை இழந்து தவித்தல், முகம் திரிந்து கொடுக்கும் பரிசிலால் பெறுபவரின் மனம் துன்பப்படுதல், காலம் நீட்டித்துப் பரிசில் கொடுக்கும் சூழலிலும் மேலான நட்பின் காரணமாகப் பொறுத்தல் போன்ற நிலைகளில் நெஞ்சொடு பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அதியன் – ஒளவை நட்பு உண்மையானது. தன்மானத்தைக் கூட உண்மை நட்பு விட்டுக் கொடுக்கும் என்பதே இங்கு மீள்தொடர்பாகும்.
தொகுப்புரை
சங்கப்பாடல்களில் பேசுவோரைத் தவிர பிறமாந்தர் எதிர்மொழிதல் இல்லாத ஒருமுகச் செய்திப்பரிமாற்றப் பாடல்கள் உள்ளன. ஒருவன் தனக்குத் தானே மனதுக்குள் பேசிக் கொள்வதும், தனக்குத் தானே வாய்திறந்து பேசிக் கொள்வதும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனப்படும். தனக்குத் தானே பேசுதல் என்பது ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்னும் இருநிலைகளில் நிகழ்கின்றது. சங்கஅக, புறப்பாடல்களில்;, நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல் என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. அகவாழ்வில் இன்ப, துன்ப உணர்வு நிலைகளில் அன்றும் இன்றும் மாற்றம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இன்பத்தில் நெஞ்சொடு கிளத்தல் பெரும்பாலும் இல்லையெனினும் துன்பத்தில் நெஞ்சொடு கிளத்தல் (புலம்பல்) என்பது மாறாமல் அப்படியே காணப்படுகின்றது. காப்பு மிகுதிக்கண் தலைவனை எண்ணி உறக்கமின்மை, தனிமைச்சூழலை விடத் தலைவனுடன் சென்று துன்பவாழ்க்கையை ஏற்கத்துணியும் மனநிலை போன்ற தலைவியின் நிலை சங்கஇலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. தலைவனின் தவறுக்கும் தலைவியே வருந்தி ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளக்கும் அவலத்தைக் காணமுடிகிறது. கேட்போர் இன்றியும், கேட்போர் இருப்பினும் எதிர்மொழி இல்லாமல் ஒருமுகமாகவே செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது இக்கட்டுரையில் தெளிவாகின்றது. பெரும்பாலும் துன்ப மனநிலையில் மட்டுமே ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது சங்கப் பாடல்கள் வழி இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
- இராம.பெரிய கருப்பன், சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கிய வகைகள், ப.122.
- தொல்.பொருள்.பொருளியல், நூ.2
- குறள், 1241
- சி.இலக்குவனார், வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, ப.139.
- வெ.கிருட்டிணசாமி, தகவல் தொடர்பியல், 1992, ப.144
துணைநூற் பட்டியல்
- அறவாணன், க.ப., – அற்றைநாள் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 2002.
- அமிர்த கௌரி, ஆ., – சங்க இலக்கியத்தில் உரையாடல், கவின்கலை அச்சகம், சென்னை – 41. முதல் பதிப்பு – டிசம்பர், 1989.
- இராமகிருட்டிணன், ஆ., – அகத்திணை மாந்தர் – ஓர் ஆய்வு, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை. முதல் பதிப்பு – 1982.
- சிவராஜ், து., – சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம், வேலூர், 1994.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
“சங்க இலக்கியத்தில் தலைவி நெஞ்சொடு கிளத்தல்’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு
Ø எதிர்மறுத்துரைத்தல் உடன்பட்டு இசைதல் என்னும் இவை இயலாத நேர்வுகளிலும் தலைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிற அகத்திணை மாண்பு சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதே கட்டுரையாளர் சொல்லவந்த பொருண்மை என்பதாகக் கொள்ளப்படுகிறது.
Ø அகத்திணைத் தொடர்பான கட்டுரையின் பொருள் விளக்கத்திற்கு மொழியியல் சார்ந்த முன்னுரை எந்த அளவிலும் உதவவில்லை.
Ø “அவ்மொழிவழிச் செய்திப் பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக தலைவி நெஞ்சொடு கிளத்தல் அமைந்துள்ளது” என்னுந் தொடர் ஆய்வுப் பொருண்மையில் கட்டுரையாளருக்குள்ள தடுமாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது.
Ø ‘செய்திப் பரிமாற்றம்’ என்பது பழங்கால மொழி வளர்ச்சி மற்றும் தற்கால ஊடகவியல் தொடர்பான கருத்தியல் சார்ந்ததொரு சொற்றொடர். நெஞ்சொடு கிளத்தல், நெஞ்சொடு புலத்தல் முதலியன பழந்தமிழ் அகப்பொருள் சார்ந்த புலனெறி வழக்கம். இந்த நுண்ணியத்தைக் கட்டுரை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.
Ø ‘ஒருமுகச் செய்திப் பரிமாற்றம்’ என்பது கட்டுரையாளர் தனக்குத்தானே வடிமைத்துக் கொண்ட சொல்லாகவே தெரிகிறது.
Ø கிளத்தல், புலத்தல் என்பனவற்றிற்கும் பரிமாறுதல் என்பதற்கும் உள்ள உறவு நிலை விளக்கப்படவில்லை. கிளத்தல் – சொல்லுதல், புலத்தல் – ஊடுதல்.
Ø கட்டுரையின் தலைப்பும் உள்ளடக்கமும் தலைவியின் தனிமைப் புலம்பலையே முன்னெடுப்பதாக அமைந்துள்ளன.
Ø ‘நெஞ்சொடு கிளத்தல்’ (125), ‘நெஞ்சொடு புலத்தல்’ (130) என்னும் இரண்டு அதிகாரங்கள் திருக்குறளில் உண்டு.
Ø கட்டுரையாசிரியர் காட்டுகின்ற “நோயும் இன்பமும் இருவகை நிலையில்” எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா (1142) வின் உள்ளடக்கத்திற்கும் ஒருமுகச் செய்திப் பரிமாற்றத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பிருப்பதாகக் கருதமுடியவில்லை.
Ø இருதிணை பொருளமைதியை நச்சினார்க்கினியர் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். கட்டுரையாசிரியர் நெஞ்சொடு கிளத்தலை இருதிணைக்குமான பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது பொருத்தமுள்ளதாகத் தெரியவில்லை.
Ø பிரிவில் புலம்பும் தலைவியின் வெளிப்பாடும், வறுமை தீர்க்கப்படவில்லையே என்னும் விரக்தியில் துன்புறும் புலவனின் வெளிப்பாடும் அடிப்படையில் வேறானவை.
Ø ‘புலவர்களுக்கு கோபம்’, ‘மனதில்’, ‘அன்றி தலைவியும்’’ முதலிய தொடர்களில் இழையும் சந்திப்பிழைகளும், ‘இதைப் போன்றே’, ‘ஒரு அங்கம்’ முதலிய தொடர்களில் தோன்றும் பிழைகளும் கட்டுரையாளரின் புலமைக்கு உகந்தவையல்ல.
Ø நெஞ்சொடு கிளத்தல் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தருவதே கட்டுரையாளர் நோக்கமெனின் அதில் ஆய்வுச் சிக்கல் எங்கே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
Ø எந்தச் சிக்கலை விடுவிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாக்கப்படல் வேண்டும்.
Ø ஆய்வுக் கட்டுரையெனின் அதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு உருவாக்கம் செய்யப்படல் வேண்டும்.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் பழந்தமிழ் அகம் சார்ந்த கூற்றுப் பகுதியைத் தற்காலத் தமிழியல் ஆய்வுலகிற்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இந்தக் கட்டுரையை ஆய்வுக் கட்டுரையாக அல்லாது, இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்.