சிலப்பதிகாரப் பாத்திரங்களின் குற்றவுணர்வு

0

முனைவா் பா. பொன்னி
உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா்
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிா் கல்லூாி (தன்னாட்சி)
சிவகாசி.

மனிதன் சகமனிதனது மனதில் தோன்றிய எண்ணங்களை ஆராய முற்பட்ட நிலையில் உளவியல் தோற்றம் பெற்றது எனலாம். உளவியல் மனிதனின் செயலுக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்கின்றது. மனிதனின் ஒவ்வொரு செயலின் பின்னரும் அடி மனதின் உணர்வுகள் அவனை செயல் புரியத் தூண்டுகின்றன என்பது உளவியலாா் கருத்து. அவ்வுணர்வுகள் உளவியலில் உள்ளுணர்ச்சிகள் என்று சுட்டப்படுகின்றன. உள்ளுணர்ச்சிகள் வாழ்வுணர்ச்சிகள் சாவுணர்ச்சிகள் என்று இருவகைகளில் அமைகின்றன. சாவுணர்ச்சிகளைத் தூண்டுவதில் மனிதனின் குற்றவுணர்வு குறிப்பிடத் தகுந்த இடம் பெறுகின்றது. சிலப்பதிகாரத்தில் குற்றவுணர்வுடன் விளங்கும் பாத்திரங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருதுகோள்

மனிதனின் நடத்தைக்கான காரணங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்வது உளவியல். மனிதா்கள் எந்நிலையில் இருந்தாலும் உணா்ச்சிகளின் வழிநடத்தும் போது அவா்கள் அனைவரும் ஒரே நிலையிலேயே செயல்படுவா் என்ற உளவியல் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள பாத்திரங்கள் அமைந்துள்ளன என்பது ஆய்வுக் கருதுகோளாக அமைகிறது.

ஆய்வு அணுகுமுறை

விளக்கமுறை அணுகுமுறை, பகுப்பாய்வு அணுகுமுறை மற்றும் உளவியல் அணுகுமுறை ஆகிய அணுகுமுறைகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சான்றாதாரம்

சிலப்பதிகாரம் முதன்மை நூலாகவும் சிலப்பதிகாரம் தொடா்பான ஆய்வு நூல்கள் மற்றும் உளவியல் தொடா்பான நூல்கள் துணைமை நூல்களாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

உணா்வெழுச்சிகள்

உணா்வெழுச்சிகள் இல்லாத பண்பாடு எதுவும் இல்லை எனலாம். உணா்வெழுச்சி செயற்பாடுகள் சொற்களைப் போன்றவை அல்ல. மனித இயல்பின் ஓா்அங்கமாகத் திகழ்பவை. உணா்வெழுச்சிகளை ,

  • அடிப்படை உணா்வெழுச்சிகள்
  • உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள்

என்ற இருநிலைகளில் பகுப்பா். அடிப்படை உணா்வெழுச்சிகள் என்பவை அன்பு, சினம், மகிழ்ச்சி போன்றவையாகும்.    உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள் பண்பாட்டு வேறுபாட்டை வெளிப்படுத்துவனவாக அமைபவை ஆகும்.

  • காதல்
  • குற்றவுணா்வு
  • அவமானம்
  • திகைப்பு
  • கௌரவம்
  • ஏக்கம்
  • பொறாமை 1

ஆகியவை உயா்நிலை அறிமுறை உணா்வெழுச்சிகள் ஆகும். இவற்றுள் குற்றவுணா்ச்சி என்பது மனிதனின் சாவுணா்ச்சியை தூண்டி விடக்கூடிய திறன் மிக்கதாக அமைவதனை சிலம்பில் காணலாகின்றது.

குற்றவுணர்வு (Guilty Conciousness)

மனிதனின் மேம்பாட்டுள்ளத்தில் தன்மதிப்பிழத்தல், குற்றவுணர்வு, தண்டனை, விழைவு போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனித உள்ளத்தில் பலகாலம் அடக்கி வைக்கப்பட்ட இச்சை உணர்ச்சி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு மனிதனை தவறச் செய்து விடுகிறது. பின்னர் அத்தவறு குற்றவுணர்வாக மாறி மனிதனை ஆட்டிப்படைக்கிறது என்பர். மேலும் ஒருவரிடம் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாவதற்குப் பின்னணியாக குற்றவுணா்வு (sense of guilt) அமைகிறது. அகநிலையின் அக்குற்றவுணர்வே தண்டிப்பதை எதிர்பார்க்கிறது என்று குறிப்பிடுவா்.

சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி, பாண்டியன், கவுந்தியடிகள், மாதரி ஆகியோரிடம் இத்தகைய குற்றவுணர்வினைக் காணலாகிறது. இத்தகைய குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்வதனையும் காண முடிகிறது.

கோவலன்

குற்றவுணா்ச்சி என்பதனை “சூப்பா் ஈகோ என்று சொல்லப்படும் அதி தன்முனைப்பு அல்லது மனசாட்சியின் கட்டளையை நிறைவேற்ற முடியாததாலோ அல்லது அதை மீறி நடப்பதாலோ உண்டாகும். தான் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கும் ஒரு மனோபாவம்”2 என்பா். இந்தக் குற்றவுணா்ச்சி கோவலனிடத்து வெளிப்படுவதனைப் பல இடங்களில் காணமுடிகிறது.

கோவலன் கலையின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன், அவ் ஈடுபாட்டின் காரணமாக மாதவியின் மீது விருப்பம் கொள்கிறான். கண்ணகியை மறக்கிறான். இருப்பினும் கானல்வரிப் பாடல் கோவலனுக்கும் மாதவிக்கும் இடையே மனவேறுபாட்டினை உருவாக்குகிறது. கோவலன் மீண்டும் கண்ணகியை நாடி வருகிறான். கண்ணகியை மறந்திருந்த நிலை, செல்வத்தை இழந்த நிலை ஆகியவை கோவலன் மனதில் குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது.அவன் கண்ணகியைக் கண்டு,

வாடிய மேனி வருத்தங்கண்டு யாவும்
சலம்புணா் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

                                                (கனாத்திறம் உரைத்த காதை 68-71)

என்று குறிப்பிடுவது அவனுடைய குற்றவுணா்ச்சியை வெளிப்படுத்துகிறது எனலாம். அக்குற்றவுணா்ச்சியின் விளைவினாலேயே அவன் பெற்றோாிடமும் நண்பா்களிடமும் யாரிடமும் கூறாமல் நடு இரவில் மனைவியை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு பொருள் தேடும் பொருட்டு மதுரையை நோக்கிச் செல்கின்றான். அதுமட்டுமல்லாது கோவலன் தன்னுடைய குற்றத்தினை முழுமையாக தானே ஏற்றுக்  கொண்டு தன்னுடைய சொற்களாலே வெளிப்படுத்துவதனை  கொலைக்களக் காதை புலப்படுத்துகிறது.

இருமுது குரவா் ஏவலும் பிழைத்தேன்
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுஎனும் பாரேன் மாநகா் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய்தனையென

                                                (கொலைக்களக் காதை 56-70)

இவ்வடிகள் கோவலனின் குற்றவுணா்வினை வெளிக்காட்டுவதாக அமைகின்றன. மேலும், குற்றவுணர்வு காரணமாகத் தான் மேற்கொண்ட செயலால் ஏற்பட்ட பின் விளைவிற்கு தனக்கு தண்டிப்புத் தேவை எனக் கருதும் மனப்பான்மை தோன்றுவது இயல்பு.  இதற்கு சுயதண்டிப்பு வேட்கை என்று பெயர். இச்சுய தண்டிப்பு வேட்கையினை கோவலனின் கனவு புலப்படுத்துகிறது எனலாம்.

கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகா் தன்னில்
நாறுஐந் கூந்தல் நடுங்குதுயா் உய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலா் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்றேங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன்

                                    (அடைக்கலக்காதை 95-106)

என்ற அடிகளில் அமையும் கோவலனின் கனவு அவனது தண்டிப்பு விழைவின் வெளிப்பாடே எனலாம். இத்தண்டிப்பு வேட்கையின் விளைவினாலேயே பொற்கொல்லன் கோவலனை கள்வன் என்று குற்றம் சுமத்தி காவலா்கள் அவனைக் கொலை செய்யத் துணிந்த நிலையிலும் கோவலன் பதில் மொழி மறுத்து எதுவும் கூறாமல் தண்டனையை ஏற்றுக் கொள்கிறான் எனலாம்.

பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாதுகாப்பவன். இருப்பினும் தன் மனைவி கொண்ட ஊடலைத் தவிா்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொற்கொல்லன் சொல் கேட்டு ஆராயாது கோவலனுக்குத் தண்டனை வழங்கி விடுகிறான். கண்ணகி தன் கணவன் குற்றமற்றவன் என்று உணர்த்திய நிலையில் அக்குற்றவுணர்வின் விளைவாக தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். “ஒருவரிடம் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் உருவாவதற்கும் பின்னணியாகக் குற்றவுணா்வு அமைகிறது. அகநிலையில் குற்றவுணா்வே தண்டிப்பதை எதிர்பார்க்கிறது. நனவிலிக்குள் பொதிந்துள்ள உணா்வுகளில் குற்றவுணா்வு ஒன்று என ஃப்ராய்ட் கூறுகிறார்.”3 இக்குற்றவுணர்வின் காரணமாகவே மன்னன்  இறந்து படுகிறான்.

“பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள”

(வழக்குரை காதை 54-70)

என்ற பாடலடிகள் இதனை விளக்குகின்றன.

மாதவி

மாதவி நடன மங்கை. அவள் தன்னை நாடிவந்த கோவலன் மீது மிகுந்த அன்பு கொள்கிறாள். இருப்பினும் கோவலன் ஊடல் கொண்டு அவளைப் பிரிந்த நிலையில் அவனது செயலுக்காக வருந்துகிறாள். அவன் ஊரை விட்டுச் செல்வதற்குத் தானே காரணம் என்று குற்றவுணர்வு கொள்கிறாள். “மனிதனது வருத்ததிற்குப் பின் புலமாகக் குற்றவுணா்வு (guilt) இருக்கிறது. அந்த உணா்வு இருப்பது நோயாளிக்குத் தெரியாது.அதாவது நோயாளியின் நனவு அறியாத நிலையில் அவனுக்குள்ளேயே குற்றவுணா்வு இருக்கிறது.அந்த குற்றவுணா்வு தான் வருத்தமாக வெளிப்படுகிறது”4  என்று உளவியலாா் குறிப்பிடுவா். மாதவியும் கோவலனுடைய இந்நிலைக்குத் தான் காரணமோ என்று வருத்தம் கொள்கிறாள். கோவலனுக்கு அவள் எழுதிய இரண்டாவது கடிதம் அவளுடைய வருத்தத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன எனலாம்.

“அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்ப அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்”
புறஞ்சேரி இறுத்த காதை 87-91)

என்ற பாடலடிகள்  கோவலன் தாய் தந்தையரைப் பிாிந்து, மனைவியோடு இரவு நேரத்தில் பிறந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்வதற்குத் தான் காரணமாக அமைந்தமைக்கு வருத்தத்தைத் தொிவித்து மன்னிப்பு கேட்கும்  தன்மையில் அமைகின்றன.

கவுந்தியடிகள்

கவுந்தியடிகள் தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன், கண்ணகியை வழி நடத்தி மதுரை நகரில் மாதரியிடம் அடைக்கலப்படுத்துகிறார். மதுரை சென்ற கோவலன் பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கள்வன் என்று கூறி கொல்லப்பட்டதை அறிந்த கவுந்தியடிகள் குற்றமனப்பான்மைக்கு ஆளாகிறார்.  மேலும் கோவலன், கண்ணகிக்கு தீவினை பலனளிக்க தானும் ஒருவகையில் காரணமாக அமைந்து விட்டோம் என்ற குற்றஉணர்வால் உண்ணாநோன்பு இருந்து உயிரை நீக்கிக் கொள்கின்றாா்.  கவுந்தியடிகள் குற்றமனப்பான்மை உடையவராகத் திகழ்வதை,

“தவத்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன்
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை யுருத்த தோவென
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்

(சிலம்பு., நீர்ப்படைக்காதை: 79-83)

என்ற அடிகளால் அறியமுடிகிறது. மனிதன்   சூழல் காரணமாக செய்யக்கூடிய செயலானது பிறருக்குத் துன்பம் தருவதாக அமைந்தால் அச்செயலைச் செய்யத் தூண்டியவரின் மனத்தில் வருத்தம் ஏற்பட்டுவிடும். ”கண்ணகி கோவலன் தீவினை பலனளிக்க தான் ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டோமோ என்று கவுந்தியடிகள் கொண்ட அன்பும் உருக்கமும் அவரை உண்ணாநோன்பிருந்து சாகச் செய்த அவலம் நம்மைத் திடுக்கிட வைக்கிறது. ஒன்றும் பற்றாது தான் துளிக் காரணமும் இல்லாத நிலையில் துணைவந்தோம் என்பதற்காகத் தன்னையே பலியிட்டுக் கொண்ட சால்பு சமணத்துறவில் ஏற்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் தாக்கத்திற்குத் தக்க எடுத்துக்காட்டேயாகும்”5 என்பா்.

மாதரி

கவுந்தியடிகள் அடைக்கலத்தின் சிறப்பினைக் கூறிக் கோவலன் கண்ணகி இருவரையும் மாதிரியிடம் அடைக்கலமாக ஒப்படைத்தார். அடைக்கலமாக வந்தவர்களைக் காக்கத் தவறி விட்ட குற்றவுணர்வில் மாதரி உயிர் விடத்துணிகிறாள். தற்கொலை செய்து கொள்பவா்களில் பலர் மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டவா்களாக இருப்பது இயல்பு. மனஅழுத்தமும் தற்கொலை செய்து கொள்வதற்குரிய காரணங்களுள் ஒன்று எனலாம். தற்கொலை சூழல்களை உளவியலாளா்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கின்றனா். அவை,

  1. “சித்தம் சிதைந்து செய்துகொள்பவை (Maniacal Suicide).
  2. சோக மிகுதியால் நிகழ்பவை (Melancholy Suicide).
  3. தற்கொலைச் சிந்தனை ஒன்றிலேயே நிலைத்து விடுதல் (Obsessive Suicide).
  4. திடீர் என ஏற்படும் தற்கொலை (Impulsive or Automatic Suicide).
  5. ஆணவத் தற்கொலை (Egoistic Suicide)”6

என்பவையாகும். மாதரி தன் வீட்டில் அடைக்கலமாகத் தங்கி இருந்த கோவலன், கண்ணகியின் மீது மிகுந்த அன்பு உடையவளாகத் திகழ்கின்றாள். அவ்விருவரும் இன்புற்று வாழத் தன் வீட்டில் வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து உதவும் எண்ணமுடையவளாக இருக்கின்றாள். தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன் பாண்டியனின் தவறான தீர்ப்பால் உயிர் இழந்தான் என்ற செய்தியை அறிந்த மாதரி சோகமிகுதியால் மனஅழுத்தம் கொண்டு தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளக் கூடிய மனநிலையை அடைகிறாள்.

”தன் மகள் ஐயைக்கு – தந்தையை இழந்த அவளுக்குத் தந்தையும் தாயுமாகித் திருமணம் நிகழ்த்தி வைக்க வேண்டிய மாதரி எவ்வகையிலும் தான் நேரடியாகக் காரணமில்லாத நிலையிலும் தன் நாகரிகத்தால் தனக்கும் பொறுப்பு இருப்பதாய்க் கருதி நடு இரவில் தீப்பாய்ந்து சாகிறாள்.அவள் உள்ளத் துணிச்சல் அவள் அன்புக்கும் கடமைக்கும் தக்க சான்றாகும். கோவலன் இறந்த செய்தி கேட்டதும் தன் உயிரையே தியாகம் செய்த மாதரி சமூகவியலிலே ஒப்பற்ற ஒளிர் மணியாய்த்  திகழ்கிறாள்”7 என்று குறிப்பிடுவா்.

“அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென
இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்”

(சிலம்பு., நீா்ப்படைக்காதை: 76-78)

இவ்வடிகள் வாயிலாக மாதரி தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலனைக் காக்க தவறினோம் என்ற குற்றஉணா்வினை அடைந்து கண்ணகிக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணமுடையவளாக மாறியமையை அறியலாகின்றது.

மன்னா்கள் மட்டுமே பாட்டுடைத் தலைவா்களாக இருந்த நிலையை மாற்றி அமைத்து சிலப்பதிகாரத்தினை குடிமக்கள் காப்பியமாகப் படைத்துக் காட்டிய சிறப்பினைப் பெற்றவா் இளங்கோவடிகள். எத்தகைய குலத்தில் பிறந்தவா்களாக இருந்தாலும் உணா்ச்சிகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த அடிப்படையில் மனதில் ஏற்படும் குற்றவுணா்வானது எக்குலத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் அவா்கள் அனைவரையும் ஒரே நோக்கில் உணா்ச்சிகள் வழிப்படுத்துவதனை உளவியல் அடிப்படையில் இளங்கோவடிகள் படைத்துக் காட்டியுள்ளாா் எனலாம். இங்கு மாதவியைத் தவிர கோவலன், பாண்டியன், கவுந்தியடிகள், மாதாி ஆகிய அனைவரையும் குற்றவுணா்வின் காரணமாக தண்டிப்பு வேட்கை உடையவா்களாகவே இளங்கோவடிகள் அமைத்து இருப்பது இளங்கோவடிகளின் உளவியல் திறனுக்கு சான்றாக அமைகிறது எனலாம்.

சான்றெண் விளக்கம்

  1. தி.கு.இரவிச்சந்திரன் உணா்வெழுச்சிகள் ப.32
  2. சந்திரமோகன், சிந்தனையாளா் பிராய்டு ப.151
  3. தி.கு.இரவிச்சந்திரன் சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல்., ப.364
  4. மேலது., ப.122
  5. க. முத்துச்சாமி, ஆ.முத்தையா, சிலம்பில் அவலம், ப.158
  6. ஜான்லூயி, தற்கொலை மரணங்களைத் தவிர்க்க முடியுமா? ஹெல்த் மாத இதழ் – ப.42.
  7. க. முத்துச்சாமி, ஆ. முத்தையா, மு.நூ., பக் 160-161.

துணைநூற்பட்டியல்

முதன்மை ஆதாரங்கள்

  1. வேங்கடசாமி நாட்டார் ந.மு.(உ.ஆ.,) –   சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, 2008.

துணைமை ஆதாரங்கள்

  1. இரவிச்சந்திரன், தி.கு.  – சிக்மண்ட் ஃபிராய்டு உளப்பகுப்பாய்வு  அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை. 2005.
  1. சந்திரமோகன் –  சிந்தனையாளர் ப்ராய்டு, பிரேமா பிரசுரம், சென்னை. 2005.
  1. முத்துச்சாமி.க ., முத்தையா ஆ. – சிலம்பில் அவலம் அன்றில் பதிப்பகம் குருவித்துறை 1978
  1. ஜான் லூயி –  தற்கொலை மரணங்களைத் தவிர்க்க முடியுமா?, ஹெல்த் மாத இதழ், (செம்டம்பா்) குமுதம் பப்ளிகேஷன், சென்னை. 2017.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

‘சிலப்பதிகாரப் பாத்திரங்களின்  குற்றவுணர்வு’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

v  குற்ற உணர்வு பற்றிய உளவியல் கருத்துகளைக் கட்டுரையின் பொருள் விளக்கம் கருதி முன்னுரையிலும் இடையிலும் தந்திருப்பது பொருத்தமானதே.

v  இலக்கியம் பொதுவாயினும் இலக்கியம் பற்றிய கொள்கைகளும் ஆய்வு நெறிமுறைகளும் மொழிக்கு மொழி வேறுபடும் எனபது போலவே கனவு பற்றிய கொள்கைகளும் மாறுபடும்.

v  கனவு பற்றிய கொள்கைகள் பண்பாட்டு வளையத்திற்குள் வரும். பகல் கனவு பலிக்காது என்பதும் விடியற்காலை கனவு பலிக்கும் என்பதும் தமிழ்ப் பண்பாடு சார்ந்த கனவுக் கொள்கைகளிற் சில.

v  “குற்றவுணா்ச்சி என்பது மனிதனின் சாவுணா்ச்சியைத் தூண்டி விடக்கூடிய திறன் மிக்கதாக அமைவதனைச் சிலம்பில் காணலாகின்றது.” என்று கட்டுரையாசிரியர் கூறுவதற்கான வலிமையான சான்று (பாண்டியன், மாதரி ஆகியோரைத் தவிர) எதனையும் அவர் காட்டியிருப்பதாகத் தெரியவில்லை.

v  கவுந்தியடிகளின் திட்டமிட்ட உண்ணா நோன்பினைத் தற்கொலை முயற்சி எனக் கட்டுரையாளர் கருதுவதற்குப் போதிய வலுவான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பழந்தமிழகத்தின் ‘வடக்கிருத்தல்’ என்பதும் கவுந்தியடிகளின் உண்ணா நோன்பும் பெரும்பாலும் ஒத்த இயல்பினை உடையன.

v  பாண்டியனின் குற்றவுணர்வும் மாதவியின் உணர்வும் ஒரே தன்மையானதன்று. முன்னது கடமை பிறழ்ந்த குற்றவுணர்வு. பின்னது அறியாமையால் ஏற்பட்ட பிழையாயிருக்குமோ என்னும் பெண்ணுக்கே இயல்பான பேதைமை.

v  கண்ணகியை எதிரில் வைத்துக்கொண்டு ‘சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்’ என்று கோவலன் குறித்தது மாதவியை. அவளைப் பிரிந்ததற்கு அவன்தான் வருந்தினான்.

v  ‘கெடுக என் ஆயுள்’ என்று வெளிப்படையாகத் தண்டனை வேண்டிய பாத்திரம் பாண்டியன் மட்டுமே.  அவன் இறுதிக்கு ஊழ் காரணமாகிவிடுமானால், மாதரி மற்றும் கவுந்தியடிகள் மரணத்திற்கு மட்டுமே குற்றவுணர்வு மறைமுகக் காரணமாகியிருப்பதாகக் கருத முடியும். அடைக்கலப் பொருளைக் காக்க முடியாமற் போனதைக் குற்றம் எனக் கொள்வது அவ்வளவாகப் பொருந்தாது. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்பது போல மனசாட்சியின் உந்துதலாகக் கொள்ளலாம்.

v  இத்தகைய நிலை பெரியபுராணத்துள் திருநீலகண்ட நாயனார் கதையில் வருகிறபோது அது அவருக்கு வீடு பேற்றினை நல்கியது என்பது சேக்கிழார் கருத்து. திருநீலகண்டரை உறுத்தியது குற்றமெனின் அவருக்கு அது வீடுபேற்றினை நல்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது பொருந்தாது.

v  குற்றவுணர்ச்சி தற்கொலை உட்பட பல முடிவுகளுக்குக் காரணமாகிறது என்பதுதான் உண்மை. சிலம்பு அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலம்பில் தவறு செய்தவர்களெல்லாம் தற்கொலை செய்யவில்லை.

v  மகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் உருபேற்குங்கால் அத்துச் சாரியை பெற வேண்டும் என்பது தொல்காப்பியம். எனவே ‘மனதில்’ என்பதை ஏற்பதற்கில்லை.  இதனை ஏற்றால் ‘பழமை’ பறித்தேன் என்று எழுத வேண்டியதிருக்கும்.

v  திகழ்வதை தவத்திரு,  காரணமாக செய்யக்கூடிய,  கண்ணகிக்கு தீவினை, விளைவாக தன்னை, கோவலனை கள்வன்,  வேட்கையினை கோவலனின்,  விளைவிற்கு தனக்கு தண்டிப்பு, குற்றவுணர்வை  தோற்றுவிக்கிறது., சாவுணா்ச்சியை தூண்டி விடக்கூடிய   திறனுக்கு சான்றாக , அமைத்து சிலம்பினை குடிமக்கள் என்பன போன்ற எண்ணற்ற இடங்களில் வரும் சந்திப்பிழைகள் கட்டுரையின் புறக்கோலத்தைப் புரைபடச் செய்கின்றன. 

v  “மன்னா்கள் மட்டுமே பாட்டுடைத் தலைவா்களாக இருந்த நிலையை மாற்றி அமைத்து சிலப்பதிகாரத்தினை குடிமக்கள் காப்பியமாகப் படைத்துக் காட்டிய சிறப்பினைப் பெற்றவா் இளங்கோவடிகள்.” என்பதற்கும் கட்டுரைப் பொருண்மைக்குமிடையே நிலவு உறவுநிலை புரியவில்லை.

v  ‘தனிமனிதனின் குற்றவுணர்வு சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் பாங்கு’, என்பது கருதுகோளாக்கப்பட்டிருக்குமானால் பாத்திரங்களின் மாறுபட்ட முடிவுகள் கட்டுரையாளரின் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கும். பெறவே ‘குற்றவுணர்ச்சி சாவுணர்ச்சியைத் தூண்டும் என்ற பொதுவான ஒரே முடிவு மறு பரிசீலனைக்கு ஆளாகியிருக்கக்கூடும்.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் குற்றவுணர்வு மற்றும் தன்னிரக்கம் ஆகியவைகளைக் கொண்ட பாத்திரங்களைத் தற்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இதை ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல், இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.