செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(441)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.

-திருக்குறள் -1033(உழவு)

புதுக் கவிதையில்…

உயர்தொழிலாம்
உழவினை நடத்தி
உணவுப் பொருட்கள்
உற்பத்தி செய்தே
உறவுடன்
உண்டு மகிழ்ந்து வாழும்
உழவரே
உண்மையில் நல்வாழ்வு
வாழ்பவர்கள்,
பிறதொழில்கள் செய்வோரெல்லாம்
பிறரைச் சார்ந்திருந்து
அவரை வணங்கி
உணவுக்காக
அவர்பின்னே செல்பவர்களே…!

குறும்பாவில்…

உயர்ந்த உழவுத் தொழிலால்
வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள், மற்றவர்கள்
பிறரைத் தொழுது பின்செல்பவரே…!

மரபுக் கவிதையில்…

மண்ணினி லுயர்ந்ததாம் உழவினையே
மதிப்புடன் நடத்தியே பயிர்வளர்த்தே
உண்டிட உணவதும் தந்தேதான்
உறவுடன் தாமுமே உண்டுவாழும்
கண்ணிய வாழ்வுதான் உழவர்க்கே
காசினி யறிந்திடும் உண்மையிதே,
திண்ணமாய்ப் பிறரெலாம் உணவதனைத்
தின்றிடப் பிறரையே சார்வாரே…!

லிமரைக்கூ…

உழவர் வாழ்வது முன்னே
உணவைத் தந்தே உண்டு வாழ்வதால்,
பிறரெலாம் மற்றவர்கள் பின்னே…!

கிராமிய பாணியில்…

ஒசந்தது சந்தது
ஒலகத்திலயே ஒசந்தது,
ஒழவுத்தொழிலே ஒசந்தது..

ஒழவுத் தொழிலச் செய்து
ஒலகத்துக்கே ஒணவு குடுத்துத்
தானும் உண்டு
ஒறவோட வாழுற
ஒழவரோட வாழ்வுதான் உண்மயில
ஒலகத்தில
ஒசத்தியான வாழ்க்க..

மத்தவுங்களெல்லாம்
அடுத்தவங்களத் தொழுது
அவுங்க பின்னால போறவுங்கதான்..

அதால
ஒசந்தது சந்தது
ஒலகத்திலயே ஒசந்தது,
ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.