Blog

  • தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க

    செயலே சிறந்த சொல் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் பெரும் மாற்றங்களைக் காண்கிறோம்.

    வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலஞ்சம், ஊழலுக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

    முந்தயை ஆட்சிக் காலத்தில் சிஎம்டிஏ (CMDA), டிடீசிபி (DTCP) மூலம் கட்டட அனுமதிக்கு சதுர அடிக்கு ரூ.27 வீதம் வசூலிக்கப்பட்டு வந்த ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) முறை, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கட்டாய வசூல் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

    2006 -2011 தி.மு.க., ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் வீராசாமி சூரியமின் உற்பத்தி திட்டத்தில், அரசு அனுமதிக்கு, 1 மெகா வாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் ‘கட்சி நிதி’ வசூலிக்கப்பட்டது. அதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலத்தில், 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பின், தங்கமணி அமைச்சரான பின், 15 லட்சம் ரூபாயாக கூடியது. கடந்த தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி பதவி காலத்தில், 1 மெகா வாட்டிற்கு, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு நிறுவனம், 10 மெகா வாட் மின் திட்டத்துக்கு, அரசு அனுமதி கோரி விண்ணப்பித்தால், 2.5 கோடி ரூபாய் ‘அழ’ வேண்டும். 25 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த ஊழல் நடைமுறை, த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது (தினமலர் செய்தி).

    ‘அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லாச் சான்றுக்கு, தனியார் பள்ளிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளில், 300 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது’ என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், அங்கீகாரத்துக்காக, தனியார் பள்ளிகளிடம் மொத்தம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டு மலர் வெளியிட, ஒவ்வொரு பள்ளியிடமும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அதே போல, தி.மு.க., கட்சி பொதுக் கூட்டத்துக்கு, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்பட்டன. இப்போது எந்தக் கையூட்டும் இல்லாமல் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முறையான பாதுகாப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள பள்ளிகள், எந்தவித லஞ்சமும் செலுத்தாமல் எளிதாகப் புதுப்பித்தல் ஆணைகளைப் பெற முடியும் (தினமலர் செய்தி).

    வாகனங்களுக்கு விருப்பமான (பேன்சி) எண்களைப் பெற முறைகேடுகள் மற்றும் லஞ்சம் நடைபெறுவதைத் தடுக்க, தமிழக அரசு இ-ஏல (e-auction/e-bidding) முறையைக் கொண்டுவந்துள்ளது.இதன் மூலம் முறையான வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதுடன், விருப்பமான எண்களுக்கு அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை மட்டும் செலுத்தி இணையவழியாகப் பெறலாம் (இந்து தமிழ் திசை).

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துறையில் “ஒரு ரூபாய் கூட லஞ்சம் இருக்காது” என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (பாலிமர் நியூஸ்).

    தமிழகம் முழுவதும், முறைகேடுகளில் ஈடுப்பட்ட குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கல் குவாரிகளின் உரிமங்களைப் புதுபிக்கவும், புதிய குவாரிகளைத் தொடங்கி நடத்தவும், விரிவுபடுத்தவும் பெரும் தொகைகளை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை, விஜய் ஆட்சியில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல், தனது கல் குவாரியின் உரிமத்தைப் புதுப்பிக்க முடிந்ததாக கரூரைச் சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார் (யாழ் இணையத்தளம்).

    பள்ளிக்கரணை குடியிருப்புத் திட்டம் ரத்து: சென்னை பெரும்பாக்கம் – மேடவாக்கம் இடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

    பி.ஏ.பி. கால்வாய் சீரமைப்புத் திட்டம் ரத்து: ரூ.4,500 கோடி மதிப்பிலான பி.ஏ.பி. (பரம்பிக்குளம் – ஆழியாறு) கால்வாய் சீரமைப்பு திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

    கோயில் திருமண மண்டபங்கள் ரத்து: திருக்கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ரூ.246 கோடி மதிப்பிலான 46 புதிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    சென்னை – உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டம் ரத்து: சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) ரூ.2,100 கோடி மதிப்பில் 13.3 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் ரத்து. ஒரு கிலோ மீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ரூ. 10.89 கோடி அதிகமாக டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    இவை அனைத்தும் பத்திரிகைகளில் வந்த செய்திகள். இன்னும் இவை போன்ற பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, குவாரி புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனப் பயனாளிகள் நேரடியாகப் பேசியிருக்கிறார்கள்.

    இவை அனைத்தும் விஜய் அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ளன. அப்படியானால், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் விஜய் சொன்னதைச் செய்கின்றது. செயலில் காட்டுகின்றது என்பதே உண்மை. ஆனால், விஜய் வாயைத் திறந்து பேசவில்லை என்பதையே திமுக மீண்டும் மீண்டும் பேசுகின்றது. விஜயோ, செயலே சிறந்த சொல் என்று செய்து காட்டி வருகிறார்.

    ஆக்கப்பூர்வமாக அரசு செயல்படுகிறது. தொலைநோக்குடன் கூடிய திட்டங்கள் உருப்பெறத் தொடங்கியுள்ளன. நம்பிக்கை அளிக்கும் நாயகராகத் திகழ்கிற விஜய் நீடு வாழ்க! நிலைபெற வாழ்க! மக்கள் மனங்களில் நின்று வாழ்க! மனம் நிறைந்து வாழ்க!

    Share
  • அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பத்து அவதாரம் பரந்தாமன் எடுத்தார்
    பழிபாவம் போக்கிடவே அவதாரம் எடுத்தார்
    அத்தனையும் இத்தரையில் அறமோங்கச் செய்ய
    அவரெடுத் தாரென்று  அகமிருத்தி வைப்போம்

    மச்சமாய் வந்தார் கூர்மமாய் வந்தார்
    வராகமாய் வந்தார் நரசிம்மன் ஆனார்
    வாமன வடிவத்தில் வந்தாரே பரந்தாமன்
    பரசுராம ரானார் அரக்கர்மாளச் செய்தார்

    உத்தமனாய் வந்தார் சத்தியத்தைக் காத்தார்
    உயர்வுடைய இராமனாய் அவதாரம் எடுத்தார்
    சத்தியத்தைச் சந்தர்ப்பம் ஆக்கியே நின்று
    கிருஷ்ணாய் மலர்ந்தார் கீதையைத் தந்தார்

    ஒன்பது அவதாரம் எம்பெருமாள் கொண்டார்
    உட்பகையை உடைத்துமே உயர்பொருளாய் உயர்ந்தார்
    பாரினிலே பலதுஷ்டர் பல்கி வருகின்றார்
    பத்தாவ தவதாரம்  பரந்தாமன் எடுப்பார்

    கஷ்டங்கள் ஓங்கும் துட்டர்கள் வருவார்
    கண்ணியத்தில் உள்ளார் கண்ணீரில் மிதப்பார்
    சத்தியமும் தர்மமும் தடுமாறித் தவிக்கும்
    இத்தருணம் எம்பெருமாள் அவதாரம் எடுப்பார்

    அவதாரம் அனைத்துமே அல்லெலாம் போக்கும்
    அவதார தத்துவத்தை அறியாதார் அறியார்
    அறிந்துணர்வார் அனைவருமே அஞ்ஞானம் இல்லார்
    அஞ்ஞானம் அகற்றுவதே ஆண்டவனின் அவதாரம்!

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற நாயனார்

     “அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
    பாடல் பெற்ற திருத்தலமான, மாஞ்சோலை சூழ்ந்த ஊரான ‘அம்பர்’ மாகாளம் (தற்போது “கோவில் திருமாளம்’ என அழைக்கப்படுகின்றது),  சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில் வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

    அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

        அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

    உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

        உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

    நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

        நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

    இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    எந்நாளும் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர் தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக் கடமையாகவும் கொண்டிருந்தார்.

    பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த, சோமாசிமாற நாயனார்  பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர். சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின் பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும் சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.

    பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.

     

    வேள்வி நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி வந்த அவர் மனைவி,  தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.

     

    ஆனால் சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ, அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார். சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர். அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். ‘காட்சி கொடுத்த நாயகர்’ என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.

     

    சோமாசிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    புகழ், பயன் என ஏதும் கருதாது உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை பொழியும், வளம் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

    முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

    என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

    ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!

    என்னும் அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர். எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு

      அன்பர் என்றால்

    அத் தன்மையர் தாம் நமை

      ஆள்பவர் என்று கொள்வார்

    சித்தம் தெளியச் சிவன்

      அஞ்செழுத்து ஓதும் வாய்மை

    நித்தம் நியமம் எனப்

      போற்றும் நெறியில் நின்றார்

    அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல் வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும், இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்), செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்) என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும் ஒருவர்.

    எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் ‘விநாயகனும் முருகனும்’ என்றும் தெளிந்தார்.

     

    திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம் எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

     

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    சக்தி சக்திதாசன்

    பாத்தா பசுமரம்
    படுத்து விட்டா
    நெடுமரம்

    சேத்தா விறகுக்காகுமா
    ஞானத்தங்கமே
    தீயிலிட்டா
    கரியும் மிஞ்சுமா

    கட்டழுகு
    மேனியை பார்
    பொட்டும் பூவுமா
    நீட்டி கட்டையில
    படுத்துவிட்டா
    காசுக்காகுமா

    வட்டமிடும்
    காளையை பார்
    வாட்ட சாட்டமா

    கூனி
    வளைஞ்சு விட்டா
    உடம்பு இந்த
    ஆட்டம் போடுமா

    பொன்னும் பொருளும்
    மூட்டகட்டி
    போட்டு வச்சாரு

    இவரு
    போன வருஷம்
    மழைய நம்பி
    வெதவெதச்சாரு

    ஏட்டு கணக்க
    மாத்தி மாத்தி
    எழுதி வச்சாரு

    ஈசன்
    போட்ட கணக்கு
    மாறவில்லே
    போய் விழுந்தாரு

    அறுவடையே
    முடிக்கும் முன்னே
    விதைக்கலாகுமா

    அட ஆண்டவனே
    உன் படைப்பில்
    இத்தனை வேகமா

    பத்து புள்ள
    பெத்த பின்னும்
    எட்டு மாசமா
    இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும்
    கர்ப்பவேஷமா ?

    திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், வெளிப்படையாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் ஒரு புலம்பல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த தளத்தில் அது ஆழ்ந்த ஆன்மீகப் பார்வையைக் கொண்ட ஒரு தத்துவச் சித்திரமாக விளங்குகிறது.

    கவியரசர் கண்ணதாசன், மிக எளிய கிராமிய உருவகங்களைக் கொண்டு, ஆத்மா–உடல், மாயை–உண்மை, கர்மம்–இறைச்செயல் ஆகிய பரந்த ஆன்மீக கருத்துகளை மக்கள் வாழ்வோடு இணைத்து சொல்லும் திறமை பெற்றவர்.

    அந்த அடையாளங்கள் இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் தெளிவாக வெளிப்படுகின்றன.

    “பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா” என்ற தொடக்கம், உயிருடன் இருக்கும் மனிதனும் உயிர் நீங்கிய உடலும் என்ன வித்தியாசம் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.

    பசுமரமாக இருந்தது நெடுமரமாக மாறுவது என்பது, உயிருள்ள உடல் சடலமாக மாறுவதைக் குறிக்கிறது.

    இங்கு கண்ணதாசன் உடலின் நிலையற்ற தன்மையையும், உயிரின் மதிப்பையும் ஒரே வரியில் சொல்கிறார்.

    “தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா” என்பது, உடலின் இறுதி நிலையை நினைவூட்டும் ஒரு உவமை.

    இந்த உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும், இறுதியில் அது சாம்பலாகி விடும் என்பதை அவர் நினைவூட்டுகிறார்.

    இது பகவத் கீதையின் “அநித்யம் அசுகம் உலகம்” என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது.

    “கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா” என்ற வரிகளில், மனிதன் தனது உடலை அலங்கரிக்கும் பற்று வெளிப்படுகிறது.

    ஆனால் “நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா” எனும் கேள்வி, அந்த அழகின் பயனற்ற தன்மையைச் சுட்டுகிறது.

    இறந்த உடலை வைத்துப் பணம் சம்பாதிக்க முடியாது.

    அதுபோல, வாழ்நாளில் நாம் சேகரிக்கும் வெளிப்புற அலங்காரங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவாது என்பதே கருத்து.

    இது சைவ சித்தாந்தத்தின் “உடம்பு ஒரு கூடு” என்ற பார்வையோடு இணைகிறது.

    “வட்டமிடும் காளையை பார் வாட்ட சாட்டமா” என்ற வரிகள், உலக வாழ்க்கையின் சுழற்சியைப் பிரதிபலிக்கின்றன.

    காளை ஒரு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருப்பது போல, மனிதனும் ஆசை, பேராசை, துன்பம், இன்பம் ஆகியவற்றின் சுழற்சியில் சிக்கிக் கிடக்கிறான்.

    “கூனி வளைஞ்சு விட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா” என்பது, வயதான உடல் இந்த உலக ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.

    இங்கு கண்ணதாசன், காலத்தின் தாக்கத்தையும், உடலின் சிதைவையும், அதனுடன் வரும் விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறார்.

    “பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு” என்ற வரி, மனிதன் சேமிக்கும் செல்வங்களின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது.

    ஆனால் “இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு” என்பது, மனிதன் தனது திட்டங்களைக் கொண்டு வாழ்ந்தாலும், இயற்கையும் இறையும் தான் இறுதி முடிவை நிர்ணயிக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

    இங்கு “ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு” என்பது மனிதன் தனது கணக்குகளை மாற்றிக் கொண்டே இருப்பதை குறிக்க, “ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு” என்பது இறைவனின் திட்டம் மாற்றமில்லாதது என்பதை வலியுறுத்துகிறது.

    இது கர்ம சித்தாந்தத்தின் மையக் கருத்து.

    “அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா” என்ற வரி, வாழ்க்கையின் இயற்கை ஒழுங்கை எடுத்துரைக்கிறது.

    விதைப்பு–வளர்ச்சி–அறுவடை என்ற சுழற்சி, மனித வாழ்க்கையிலும் பொருந்தும்.

    ஆனால் “அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா” என்ற வரி, அந்த இயற்கை ஒழுங்கு சில நேரங்களில் உடைந்து போகும் போது மனிதனின் குழப்பத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.

    இது மனிதன் எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் போது எழும் ஆன்மீகக் கேள்வி.

    “பத்து புள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்பவேஷமா” என்ற இறுதி வரிகள், மிகவும் ஆழ்ந்த துயரத்தையும் அதே சமயம் வாழ்க்கையின் அநியாய உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

    ஆனால் இந்த துயரத்தின் உள்ளே கூட, இறைவனின் லீலைக்கான ஒரு ஒப்புதல் இருக்கிறது.

    இது திருவிளையாடல் என்ற கருத்தோடு நேரடியாக இணைகிறது .

    இறைவன் செய்கின்ற எல்லாமும் ஒரு விளையாட்டு.

    மனிதன் அதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

    இந்தப் பாடல் முழுவதும், கண்ணதாசன் மிக எளிய மொழியில், கிராமிய உருவகங்களைக் கொண்டு, அத்வைதம், கர்மம், மாயை போன்ற சிக்கலான ஆன்மீகக் கருத்துகளை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைக்கிறார்.

    இதுவே அவரது கவிதைத் திறமையின் உச்சம்.

    அவர் தத்துவத்தை பாடலாக்குகிறார்.

    பாடலை வாழ்க்கையாக மாற்றுகிறார்.

    சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இந்தப் பாடல் ஒரு கண்ணாடியாக நிற்கிறது.

    நாம் சேகரிக்கும் செல்வம், நாம் பெருமைபடும் அழகு, நாம் திட்டமிடும் எதிர்காலம் இவை அனைத்தும் ஒரு கணத்தில் மாறக்கூடியவை.

    ஆனால் அந்த மாற்றங்களின் பின்னால் ஒரு பெரிய சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால், வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வை மாறும்.

    அதுவே ஆன்மீகத்தின் தொடக்கம்.

    கவியரசர் கண்ணதாசன், இந்தப் பாடலின் மூலம், “வாழ்க்கை நிலையற்றது” என்ற ஒரு சாதாரண உண்மையை மட்டும் சொல்லவில்லை.

    “நிலையற்றதின் பின்னால் இருக்கும் நிலையானதைத் தேடு” என்ற ஆழ்ந்த ஆன்மீக அழைப்பை வழங்குகிறார்.

    அதனால் தான் அவரது பாடல்கள் காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் மூலம் உங்களிடையே வருவது மகிழ்ச்சில் ஆழ்த்துகிறது.

    இங்கிலாந்தின் அரசியல் களத்தில் பற்பல காட்சிகள் அங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    வெளிப்படையாக அமைதியான ஜனநாயக அமைப்பாகத் தோன்றினாலும், அதன் அடித்தளங்களில் மெல்ல மெல்ல அதிர்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

    அரசியல் போட்டிகள், சமூக மனநிலைகள், மற்றும் பொருளாதார அழுத்தங்கள்  இவை அனைத்தும் ஒன்றோடொன்று கலந்த ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளன.

    தற்போதைய பிரதமரின் நிலைமை, இந்தப் பரபரப்பின் மையத்தில் நிற்கிறது.

    அதிகாரத்தில் இருப்பது மட்டுமே ஆட்சியை உறுதிப்படுத்துவதில்லை என்பதைக் காட்டும் வகையில், அவரின் அரசியல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, தேசிய சுகாதார சேவையின் அழுத்தம், மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையின்மையை விதைத்துள்ளன.

    இதனால் இடைத்தேர்தல்கள் வெறும் தொகுதி முடிவுகளாக இல்லாமல், ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாக மாறுகின்றன.

    இந்த சூழலில் தொழிற்கட்சி தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் வடிவமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்டி பேர்ன்காம் முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

    சில வருடங்களுக்கு முன்னால் தொழிற்கட்சியின் தலைமைத்துவ போட்டியில் வெற்றியடையாததினால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியவர், பின்னர் தனது வாழ்விடமான மான்செஸ்டர் பகுதி உள்ளாட்சி தேர்த்லில் மேயராக தெரிவு செய்யபட்டு இன்றுவரை மான்செஸ்டர் மேயராக பணியாற்றுகிறார்.

    அங்கு பல மக்கள் ஆதரவு பெற்ற மாற்றங்களை உள்ளாட்சி மூலம் நிறைவேற்றியுள்ளார்.

    அவர் இங்கே முக்கியமான பாத்திரமாக உருவெடுக்கின்றார்.

    மான்செஸ்டர் நகரில் அவர் உருவாக்கிய நிர்வாக முறை  மக்களுடன் நேரடி தொடர்பு, சமூகநல முன்னுரிமைகள், மற்றும் மத்திய அரசுக்கு எதிரான தன்னம்பிக்கை இவை அவரை ஒரு மாற்று தேசியத் தலைவராக முன்னிறுத்துகின்றன.

    அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயல்வது, தனிப்பட்ட அரசியல் முன்னேற்றம் மட்டுமல்ல.

    தொழிற்கட்சியின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் கட்டமாகும்.

    இந்தப் பின்னணியில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிப்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது.

    அது ஒரு சமூக உளவியல் வெடிப்பாகக் கருதப்பட வேண்டும்.

    இந்த நகரம் வரலாற்று ரீதியாக ஒரு துறைமுக நகரமாக இருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களின் குடியேற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம், வேலை வாய்ப்பின் குறைவு, மற்றும் சமூக சேவைகளின் மீது ஏற்பட்ட அழுத்தம் ஆகியவை உள்ளூர் மக்களிடையே மறைமுக அதிருப்தியை உருவாக்கின.

    இந்த அதிருப்தி நேரடியாக வெளிப்படாமல், மெதுவாக “மற்றவர்களை” குறிவைக்கும் மனநிலையாக மாறியது.

    குறிப்பாக வெளிநாட்டவர்களை குற்றம்சாட்டும் உரைகள், சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அரசியல் மேடைகளில் ஒலித்த குடியேற்ற எதிர்ப்பு குரல்கள் இவை அனைத்தும் இந்த மனநிலையை ஊட்டி வளர்த்தன.

    இந்நிலையில், சமீபத்தில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு துயரச் சம்பவம், இந்த பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர் மாணவன், சீக்கிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகி பின்னர் உயிரிழந்ததாக செய்திகள் பரவின.

    மேலும், சம்பவத்திற்கு முன்பே ஏற்பட்டிருந்த பதட்ட அறிகுறிகளைப் பொலிசார் போதிய கவனத்துடன் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்தச் சம்பவம் தனிப்பட்ட குற்றச் செயலா, அல்லது விரிவான சமூகத் தோல்வியின் அறிகுறியா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

    இந்தச் சம்பவம் ஒரு குற்றவியல் விசாரணைக்குரிய விஷயம் மட்டுமல்ல.

    அது சமூக நம்பிக்கையின் முறிவை வெளிப்படுத்துகிறது.

    “பாதுகாப்பு” என்ற அடிப்படை உணர்வு சிதைந்துவிட்டால், மக்கள் தங்கள் அச்சத்தை அரசியல் கோஷங்களாக மாற்றத் தொடங்குகிறார்கள்.

    இதுவே இன அடையாள அரசியலுக்கு ஊக்கமாகிறது.

    இங்கே நைஜல் வெராஜ் அவர்களின் அரசியல் பேச்சு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

    அவர் பயன்படுத்தும் மொழி நேரடியாக வன்முறையை அழைப்பதில்லை என்றாலும், அது ஒரு “அச்ச மனநிலையை” உருவாக்குகிறது.

    “நாடு இழக்கப்படுகிறது”, “எல்லைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்”, “உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” போன்ற கருத்துக்கள், அரசியல் வாதங்களாகத் தோன்றினாலும், சமூகத்தில் ஒரு மறைமுகப் பிரிவினையை உருவாக்குகின்றன.

    அரசியல் மொழியின் தாக்கம் உடனடியாக கணக்கிடப்பட முடியாது.

    ஆனால் அது மனிதர்களின் சிந்தனையை வடிவமைக்கிறது.

    அந்த சிந்தனை ஒரு கட்டத்தில் செயலாக மாறும் போது, ஸவுதாம்டன் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

    எனவே, இந்தச் சம்பவம் ஒரு நகரத்தின் பிரச்சனை அல்ல.

    அது ஒரு நாட்டின் சமூக ஆரோக்கியத்தைக் காட்டும் எச்சரிக்கை.

    மேலும் கவனிக்க வேண்டியது, இங்கிலாந்தின் அரசியல் உரையாடல் மெதுவாக மையத்திலிருந்து விலகி இரு முனைகளாகப் பிரிகிறது என்பதே.

    ஒரு பக்கம் சமத்துவம், உடன்பிறப்பு, மற்றும் பல்வகைமையை வலியுறுத்தும் குரல்கள்.

    மறுபக்கம் பாதுகாப்பு, அடையாளம், மற்றும் எல்லை கட்டுப்பாட்டை முன்னிறுத்தும் குரல்கள்.

    இந்த இரு திசைகளின் மோதல் தான் இன்றைய அரசியல் களத்தின் உண்மையான வடிவம்.

    இந்தச் சூழலில் அண்டி பேர்ன்காம் போன்றவர்கள் ஒரு “இணைப்புக் குரல்” ஆக மாற முடியுமா என்பது எதிர்கால அரசியலின் முக்கியக் கேள்வியாகும்.

    அதே சமயம், நைஜல் வெராஜ் போன்றவர்கள் உருவாக்கும் அரசியல் அலை, எவ்வளவு தூரம் சமூக அமைப்பை பாதிக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    மொத்தத்தில், இங்கிலாந்து இன்று ஒரு அரசியல் மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.

    அது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல.

    அரசியல் மொழியின் மாற்றம், சமூக உறவுகளின் மாற்றம், மற்றும் தேசிய அடையாளத்தின் மறுபரிசீலனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த மாற்றமாகும்.

    பொறுத்திருந்து பார்ப்போம்

    (மீண்டும் அடுத்த மடலில்)

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்

    தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.

    தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

        தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

    கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

        கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

    விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

        வெகுண்டிடலான் “மூர்க்கர்” என விளம்பும் நாமம்

    எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்                                                 

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.

    பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்

      பெருமான் அமரும் தானங்கள்

    உற்ற அன்பால் சென்று எய்தி

      உருகும் உள்ளத்தொடும் பணிந்து

    கற்ற சூதால் நியதியாம்

      கடனும் முடித்தே கருதாரூர்

    செற்ற சிலையார் திருக் குடந்தை

      அடைந்தார் வந்து சில நாளில்

    பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.

    சூதினில் வென்று எய்தும் பொருள்

      துரிசு அற்ற நல் உணர்வில்

    தீது அகல அமுது ஆக்குவார்

      கொள்ளத் தாம் தீண்டார்

    காதலுடன் அடியார்கள் அமுது

      செயக் கடைப் பந்தி

    ஏதம் இலா வகை தாமும் அமுது

      செய்து அங்கு இருக்கும் நாள்.

    எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.

    மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே” என்று சிவஞான சித்தியாரிலும்,

    “எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே” – “அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை” – “சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்” என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,

    “என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்” என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.

    ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

    “செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு” என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,

    “நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே” எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.

    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்       

    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்       

    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்       

    நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

    அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்       

    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                   

     

    நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்        

    நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

    கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி        

    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

    குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்        

    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

    பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்        

    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

    சுந்தரர் தேவாரம்

     

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • வரலாறு படைத்த பாரதிராஜா

    வரலாறு படைத்த பாரதிராஜா

    அண்ணாகண்ணன்

    பாடல் பெற்ற தலங்கள் என்று திருக்கோவில்களைச் சொல்வார்கள். ஆனால், பட்டி தொட்டிகளை எல்லாம் பாடல் பெற்ற தலங்களாக மாற்றியவர் பாரதிராஜா. செட்டுக்குள் சிறைப்பட்டிருந்த சினிமாவுக்கு விடுதலை தந்து, எட்டுத் திக்கும் உலாவச் செய்தவர்.

    அவருக்கு முன்பும் கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டினார்கள். ஆனால், அவர்கள் சிறப்பு ஒப்பனைகளால் தங்கள் சிறப்பை இழந்தவர்கள். இவர்தான் மண்வாசனையுடன் அசலான மனிதர்களையும் அவர்களின் உயிர்ப்புள்ள வாழ்வையும் காட்டினார். ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கிராமத்து மாந்தர்களை மையப் பாத்திரங்களாய் மாற்றினார். இதன் மூலம் அவர்களின் வட்டார வழக்கையும் நடை, உடை, பாவனை, சிகையலங்காரம் உள்ளிட்ட வாழ்வியலையும் ஊரையும் உணர்வையும் ஆவணப்படுத்தினார்.

    அவரையே கிராமம் என்ற சிமிழுக்குள் அடைக்க முயன்ற போது, அந்தக் கோட்டையும் அழித்தார். தமிழ் என்ற வட்டத்துக்கு வெளியே தெலுங்கிலும் இந்தியிலும் படம் எடுத்தார். இன்று உடல் என்ற கூட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

    அவரது திரைப்படங்கள் (முதல் மரியாதை), திரைக் காட்சிகள் (நான் கரை ஏறிட்டேன்), வசனங்கள் (பத்த வச்சிட்டியே பரட்டை), பாடல்கள் (சிறுபொன்மணி அசையும்) எனப் பலவும் சாகா வரம் பெற்றவை. தான் வரலாற்றில் இடம் பெற்றதோடு புதிய வரலாறு படைத்தார். தன்னுடன் ஒரு பெரும் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார். மக்கள் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

    Photo Credit: Stills Ravi / The Hindu Archives

    Share
  • ஆண்பார்க்க வந்தவள் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பொது விடுமுறை. நண்பர்கள் இருவரும் வழக்கம்போல், ஒரு சினிமா தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்குப் பிடித்த நடிகர், கவர்ச்சியைக் காட்ட அஞ்சாத நடிகை. வேறென்ன வேண்டும்!

    “எப்போ இந்தப் பொண்ணுங்க பிரதம மந்திரி, ஜனாதிபதின்னு ஆக ஆரம்பிச்சாங்களோ, அப்பவே நமக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சு!”

    கலகலப்பாகவே பார்த்துப் பழகிய நண்பன் இப்படி அலுத்துக்கொள்வதைப் பார்த்த வாசுவுக்கு அதிசயமாக இருந்தது. எதுவும் பேசாது, கோபியையே பார்த்தான்.

    “எங்கம்மா காலத்திலே `கல்யாணம்’னா, பொண்ணுபாக்கறதில ஆரம்பிக்கும். இல்லியா?”

    “இப்போ மட்டும் என்னவாம்? என் தங்கைக்கும் அப்படித்தான் நடந்திச்சு. அவ குட்டைப்பின்னலை மறைக்க நீளமா ஒரு சவுரி வெச்சு.. ஏதேதோ பித்தலாட்டம்! `சாதாரணமா நட. ரொம்ப மெதுவா வேணாம். கால் நொண்டியான்னு பாப்பாங்க’, அப்படி, இப்படின்னு!”

    அவன் அங்கலாய்ப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “எனக்குப் பாத்திருக்கிற பொண்ணு வெளிநாட்டில படிச்சு, அங்கேயே கொஞ்ச காலம் வேலையும் பாத்ததில நம்ப கலாசாரத்துக்கு ஒத்து வரமாட்டேங்குது!” என்று அங்கலாய்த்தான் கோபி.

    “மினிஸ்கர்ட்தான் போடுவாங்களா?”

    “அதில்லே. `இது என்ன கெட்ட வழக்கம், பொண்ணு பாக்கறதுன்னு? நான் என்ன, சந்தையில் விக்கற மாடா? நான் ஒத்துக்க மாட்டேன். நான் ஆண்பாக்கப்போறேன்’, அப்படின்னு வாய்க்கு வந்தபடி..,” என்று பொரிந்தான். “இவ ஆண்பாக்க நான்தான் மாட்டிக்கிட்டேன். அம்மாவோ, `நம்ப தகுதிக்கு இது பெரிய எடம்டா. நாம்பதான் கொஞ்சம் விட்டுக்குடுத்துப்போகணும்,’ அப்படின்னு எனக்கு வேப்பிலை அடிக்கறாங்க”.

    வாசு சிரிப்பை அடக்கிக்கொண்டான். “எப்படியோ, கல்யாணம் ஆனா சரி. நல்லா சம்பாதிக்கிற பொண்ணு. வாழ்க்கை ஈசியா இருக்கும். விட்டுடாதே!”

    “இப்போ நான் என்ன செய்யணும்? ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேட்டா?”

    “ஏதாவது மந்திரத்தைச் சொல்லு. `நான் என்ன, மைக்கல் ஜாக்சனா?’ அப்படின்னு நைசா நழுவிடு. பெண்டாட்டியைப்  பறிகுடுத்தவன்மாதிரி, இப்படி சவரம் பண்ணாம போய் நிக்காதே. பளிச்சுனு டிரெஸ் பண்ணிக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம..”.

    “ஒன்கிட்டப்போய் பேசறேனே!”

    அதற்குள் படம் ஆரம்பிக்கவே, இருவரும் தியேட்டருக்குள் நுழைந்தனர். இருட்டில் எவரெவர் காலையோ மிதிக்க, `குடிகாரனுங்க!’ என்ற வசவு கிடைத்தது.

    கோபியின் தாய் ஜானகி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பட்டு குர்த்தாவில் ஜொலித்த இவனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காமல் போகும் என்று அவளது எண்ணம் போயிற்று.

    வாசலில் கார் நின்ற ஒலி. “வாங்க, வாங்க,” என்று கூவியபடி அவள் ஓட, கோபி எட்டிப்பார்த்தான்.

    ஜீன்ஸ் அணிந்த பெண். வயிறு தெரிய ஒரு குட்டைச்சட்டை.

    “அம்மா வரலியா?”

    “பொண்ணு பாக்கத்தான் அப்படி அக்கா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு பத்துப்பேர் பையன்கூட வருவாங்க. பாவம், அந்தப் பொண்ணு பயந்தேபோயிடும். ஒங்க மகனும் அப்படி பயந்துடக் கூடாது, பாருங்க! அதான் நான் மட்டும் வந்தேன்”.

    தான் ஒதுங்கிக்கொள்வதுதான் மரியாதை என்று முடிவெடுத்த ஜானகி, “கோபி! வடை, கேசரி எல்லாம் எடுத்துட்டு வாப்பா,” என்று அருமையாகக் குரல்கொடுத்தாள்.

    உள்ளேயிருந்து வந்தவன், “மேசைமேலதானே இருக்கு. அவங்களே எடுத்துச் சாப்பிடட்டுமே!  கையிலே கொண்டு குடுக்க நான் என்ன, ஹோட்டல் சர்வரா?” என்று இரைந்தான்.

    அவன் சொற்களைவிட தோற்றம் தாயை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பளபளப்பான குர்த்தா இருந்த இடத்தில் இப்போது கசங்கிய டி-ஷர்ட்!

    “கலிகாலம்! மாடர்ன்ங்கிற பேர்ல எப்படி எப்படியோ நடக்கிறாங்க! நாம்ப ஏதாவது சொல்லப்போனா, `பழங்காலம்’னு கேலி!” என்று முணுமுணுத்தபடி உள்ளே விரைந்தாள்.

    “என் பேர் விஜ்லா (VIZLA),” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள் அப்பெண். “நீங்க எப்போ பட்டம் வாங்கினீங்க?” என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள்.

    “அதுவா? அது வந்து..,  நான் நாலாவது படிக்கிறப்போ வாங்கினேன். நீலக்கலர். ஜோரா பறக்கும்”.

    அவள் சிரித்தாள். “நகைச்சுவையா பேசறீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு”.

    “எதைப் பிடிச்சிருக்கு? என்னையா, என் பேச்சையா?”

    அவள் முகம் சிவந்தது.

    ஹை! இவளுக்கு வெட்கப்படக்கூடத் தெரியுமா? தேவலியே!

    “நான் எதுக்கு ஒங்களை ஆண்பாக்க வந்தேன், தெரியுமா?”

    “சொன்னாத்தானே தெரியும்?”

    “பொண்பாக்க வரப்போ, ஒரு பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறீங்க! `இப்படி நடக்கணும், இப்படி உடுத்தணும்’னு எல்லா சொந்தக்காரப் பொண்ணுங்களும் அவளைப் பாடுபடுத்திடுவாங்க. `ரொம்பப் பேசிடாதே. வாயாடின்னு நினைச்சுக்கப்போறாங்க’ன்னு அவ வாய்க்குவேற பூட்டு. ஆம்பளைங்களுக்கும் எங்க கஷ்டம் புரிய வேணாமா? அதான் இந்த ஐடியா எடுத்தேன்”.

    அவளே தொடர்ந்தாள். “நீங்க பரவாயில்ல. ரொம்ப அலட்டிக்காம, நீங்க நீங்களாவே இருந்துட்டீங்க. இந்த டி_ஷர்ட்!” விழிகள் விரிய, அவள் சிரித்தாள்.

    அவளிடம் அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை. “இது என்ன பேரு, விஜ்லான்னு?”

    “கல்யாணப் பத்திரிகையிலே போடுவாங்க. அப்போ பாத்துக்குங்க,” என்றாள் விசாலாட்சி.

    Share
  • அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலையின் உரையைக் கேட்டேன். அவர் கூறியவை அனைத்தும் முற்றும் முழுதாகக் காந்தியக் கொள்கைகள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்கிறார். மாறுவோம், மாற்றுவோம் என்பது கேட்க, நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமானது. அவரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் மகாத்மாக்களாக இருந்தால் / மாறினால் ஒழிய, இந்த மாற்றம் நிகழாது. எனவே இது அவரது முதல் தடை.

    நாயக வழிபாடு வேண்டாம் என்கிறார். தலைவர், பொறுப்பு, அதிகாரம் என்று வந்துவிட்டால், இத்தகைய நாயக வழிபாடு, இயல்பாகவே வந்துவிடும். அண்ணாமலையே இதற்கு முன்னால் பலரையும் நாயகராகக் கொண்டாடியவர். காலில் விழுந்து வணங்கியவர். பொதுவாக, அவரது உடல்மொழியே அதீதப் பணிவுடன் உள்ளது. இந்தியச் சமுதாயக் கட்டமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் குடும்பக் கட்டமைப்பும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அனைவரையும் சமமாகப் பார்க்கின்ற வாய்ப்பு, இதில் மிகக் குறைவு. இந்த இயக்கத்தில் அண்ணாமலையை நாயகராகத்தான் கருதுவார்கள். We the leader என்ற தளத்தின் பெயரும் உறுப்பினராகச் சேரும் தன்னார்வலர்களை Active Leaders என்று அழைப்பதும் ஒவ்வொருவரையும் நாயகராகப் பார்க்கவே உதவும்.

    அறம் செய்ய விரும்பு என்ற வாசகம், அவரது இணையத்தளத்தில் உள்ளது. அப்துல் கலாம் பெயரில் அறத்தையும் அரசியலையும் கற்றுத் தரப் போவதாகக் கூறியுள்ளார். நம் பாடத் திட்டங்களில் திருக்குறளும் இன்னபிற அற நூல்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இவற்றைக் கற்காமல், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து யாரும் வெளியே செல்வது இல்லை. பிறகு ஏன், சமூகத்தில் அறம் ஓங்கி நிற்கவில்லை? இதற்கான காரணங்களைத் தேடினால், இவரது இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை அவர் அறிவார்.

    பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் கால வரையறை வைப்பது நல்ல திட்டம். செயல்படுத்தக் கூடியதே. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். முக்கியமாக, இது தேசிய அளவிலான கொள்கை. தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, தேர்தல் ஆணையமும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி சுகம் கண்டவர்கள், அவ்வளவு எளிதில் இதை நிகழ்த்த விடுவார்களா? அவரது கட்சித் தலைவர் பதவிக்கு வேண்டுமானால் இத்தகைய விதிகளை வைத்துக்கொள்ளலாம்.

    நாமெல்லாம் மிடில் கிளாஸ் என்று அவர் சொன்னது, பலருக்கும் நெருக்கமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக அவர் ஒலித்தால், உடனடியாக அவருக்கு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவு கிடைக்கலாம்.

    அறத்துக்குப் பயிற்சி அளிப்பது பயன் அளிக்கிறதோ இல்லையோ. அரசியல் நடைமுறைகளுக்குப் பயிற்சி அளித்த பின் போட்டியிட வைப்பது, நல்ல முயற்சி. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதது. அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நன்று. இதை அரசியல் கல்லூரியாக நிறுவினால், இதர கட்சியினரும் அரசியல் ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இதை எழுதும் நேரத்தில் அவரது தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. என்னிடத்தில் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இதோ அண்ணாமலையிடம் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகையே மாற்றிக் காட்டலாம்.

    பெரிதினும் பெரிது கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 35

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 30  தண்டியடிகள் நாயனார்

     

     

    சோழநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்றான திருவாரூர் எனும் திருத்தலம் நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற அருட்தலமாம். நம்பியாரூரர் வலது கண் பெற்ற திருத்தலம் என்பதோடு ஆரூரருக்கு இறைவன் தோழமை கொடுத்த மிகத் தொன்மையான அருட்தலமும் இதுதான். “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்று தண்டியடிகள் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் புகழப்படும், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள் நாயனார், செங்குந்தர் மரபில் அவதரித்தவர். பிறந்தபோதே கண்காணார், புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத இவர் தம்முடைய அகக்கண் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார். கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றவர் இவர்.

    திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

        சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

    குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று” என்று

        குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

    அருளாலே விழித்தெவரும் அந்தராக

        அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

    பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

        பரனருளால் அமருலகம் பற்றி னாரே.

    தண்டியடிகள் நாயனார், அன்றாடம் தண்டியடிகள் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தேவாசிரிய மண்டபத்தை வணங்கி,  ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருவாரூர்க் கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கமலாலயம் எனும் திருக்குளம், பெருமானுக்குத் தீர்த்தக் குளமாகவும், அடியவர்கள் குளிப்பதற்கும் உரியதாகும். அங்கு வாழ்ந்த சமணர்கள், ஒரு நாள் அங்கு பாழிகளும், பள்ளிகளும் அமைத்ததால் குளத்தின் இடமும் குறைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள் அக்குளத்தினை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணினார்.

    பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தும் குளத்தினை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர். அதற்கு வழிகாட்டும் வகையில் குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியையும், குளக்கரையில் ஒரு தறியையும் நட்டார். இரண்டையும் ஒரு கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் எடுத்தவர் அதைக் கரைமேட்டில் கொட்டினார். தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது. தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள் பொறாமை கொண்டு, இத்தொண்டினைக் கண்டு வெதும்பியவர்கள், மண்ணைக் கிளறினால் அதில் உள்ள சிற்றுயிர்கள் அழிந்து போகும் என்று கூறி அதனைத் தடுத்தனர்.

    சிவபெருமானுக்குத் தான் செய்யும் இப்பணியால், சிறு உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் நேராது என்றார். ஆனால் அவர்கள் தாங்கள் கூறிய அறிவுரை காதில் விழவில்லையா, கண்தான் இல்லை காதுமா செவிடு என்று கேட்டவர்களிடம்,

    “சிவபெருமான் திருவடிகளன்றி வேறு ஒன்றையும் நான் காணவில்லை. காண விரும்பவும் இல்லை. சிவபெருமானின் திருவருளால் என் கண் காணப்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

    அதற்கு சமணர்கள் தண்டியடிகளிடம், அவர் தம் கடவுள் அருளால் கண் பெற்றால் தாங்கள் அந்த ஊரை விட்டே சென்றுவிடுவதாகக் கூறியவர்கள், அவர்தம் கரத்திலிருந்த மண் வெட்டியையும், கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.

    மிகவும் வருந்திய தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் திருமுன் நின்று, தனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும், என்று கண்ணீர் மல்க வேண்டியவர், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய எம்பெருமான், “மனக்கவலையை விடு. உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன் தொண்டினைத் தடுத்துப் பழித்துப் பேசியவர்கள் கண்களை இழப்பார்கள்” என்று அருளினார். அன்று இரவே சோழ அரசனின் கனவிலும் தோன்றி, “தண்டியடிகள் நாயனார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று கட்டளையிட்டார். சோழ அரசன் கண்விழித்து எழுந்து திருவாரூரை அடைந்தவர், தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார். பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தார். சமணர்கள் இறையருளால் தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்துவிட்டால் திருவாரூரைவிட்டு வெளியே செல்வதாக ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். மறுநாள் இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ அரசன். அடிகளாரைப் பார்த்து, அவரை கண் பெறும் நிகழ்வினைச் செய்து காட்டும்படி கூறினார். தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கி எழுந்தபோது, கண்கள் செம்மையாகக் காண ஒளிபெற்று எழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர். தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது. தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர். சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர்.

    ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று
    வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்;
    ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ” தென்றே யஞ்செழுத்தை
    வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்.

    தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின் உதவியுடன் பெரிதாகக் கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

    தண்டியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” திருமந்திரம்.

    சிவன் கழல் அல்லது வேறு காணாத அக நோக்கு உடைமையன்றிப் புறத்தில் வேறு எதையும் காணாதவர் என்ற குறிப்பினால் பிறந்தபோதே கண்காணார் கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றார். அகக்கண் காட்சியாகிய ஞானக்கண் காட்சிக்கு சிவம் அல்லாது  வேறு ஒன்றும் தோன்றாது. அகக் காட்சியில் சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய மற்றெந்த உணர்வுகளும் முற்றாக அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்நாயனார் பிறப்பிலேயே புறக்கண் அற்றவராய்ப் பிறந்துள்ளார் என்பதை சேக்கிழார் பெருமான்,

    தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார்

    அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக்

    கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்

     கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்”

    என்பார்.

    எனவே, “நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்” என்னும் இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும்.

    காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்” என அடுத்துவரும் சேக்கிழார் திருவாக்காலும் அறியப்பெறும்.

    “கந்தை மிகையாங் கருத்து” எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் வருவனவற்றாலும் விளங்கப் பெறும்.

    எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலும் சிவன் சார்பிலும் பணி செய்து கிடப்பவர்க்கு சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமும் தகுதியும் உயர்வாகும்.

    நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல்

     தானென ஒன்றின்றியே தானதுவாய் –

    நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத்

    தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை”

    எனச் சிவஞான போதத்திலும்,

    “யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில் பெருமையான்” எனத் தேவாரத்திலும்,

    “சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக் கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்” எனச் சிவஞான சித்தியாரிலும் வருவனவற்றால் அறியப்படும்.

    தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது மீப்பெரும் குறைபாட்டின் இடையிலும், அகக்கண் கூர்மை மிகப் பெற்று, திருவாரூர்த் திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனி ஒருவராய் நின்று திருக்குளத் திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணியைத் தம் இலட்சியமாகக் கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றின் பொன் எழுத்துக்களாற் பொறித்துப் போற்றப்படும் தகைமையுடைவரானார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • தவமுதல்வர் சம்பந்தர்!

    தவமுதல்வர் சம்பந்தர்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சிவபாத விருதயர் செய்ததவப் பயனாலே
    தவமுதல்வர் சம்பந்தர் புவியினுக்கு வந்தார்
    உமையோடு சிவனுமே சேர்ந்துமே வந்து
    ஊட்டிய பாலாலே உயர்ஞானம் பெற்றார்

    உயர்ஞானம் பெற்றதனால் தவமுதல்வர் ஆனார்
    தவமுதல்வர் ஆனதனால் உமைபிள்ளை ஆனார்
    அவர்பெற்ற ஞானத்தை வழியாயாக்கி நின்று
    அதனூடாய் தவமுதல்வர் நடைபயின்று நின்றார்

    வைதீகக் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார்
    மனமுழுக்கச் சைவத்தை தூக்கியே சுமந்தார்
    அந்தணராய் பிறந்தாலும் அனைவரையும் அணைத்தார்
    அரனடியார் அனைவரையும் போற்றியவர் நின்றார்

    உண்ணா முலையாள் உவந்தளித்தாள் ஞானப்பால்
    பண்ணாகக் கொட்டினார் பைந்தமிழில் பதிகத்தை
    வண்ணத் தமிழில் கொட்டினார் வகைவகையாய்
    பண்ணார்ந்த தமிழாய் பரவியதே பாரினிலே

    மண்ணிலே நல்லவண்ணம் வாழலாம் என்று
    நம்பிக்கை வித்தினை விதைத்தாரே சம்பந்தர்
    பெண்மையைச் சம்பந்தர் பெருதுமே மதித்தார்
    உண்ணா முலையம்மை ஊட்டிவிட்டா பாலாலே

    சைவத்தை வளர்த்தெடுக்கத் தமிழெடுத்தார் சம்பந்தர்
    அய்யராய் பிறந்தாலும் அகமுழுக்கத் தமிழானார்
    தமிழ்ஞான சம்பந்தன் சைவத்தைப் பரப்புதற்கு
    இறை ஞானத்தோடு இணைத்தாரே இன்தமிழை

    சமணமும் பெளத்தமும் மேலோங்க முனைந்தன
    சைவத்தை நடைமுறையைத் தகர்த்தெறிய வந்தன
    சிவனருளால் திருஞான சம்பந்தர் வந்தார்
    செம்மையுடன் சைவத்தைச் சிறந்தோங்கச் செய்தார்

    சைவத்தை எதிர்த்தன பெண்களை வெறுத்தன
    சங்கீதம் நடனத்தை ஒதுக்கியே வைத்தன
    ஒறுத்ததை வெறுத்ததை  உளங்கொள்ளா சம்பந்தர்
    ஒறுத்ததை வெறுத்ததை உயர்வாக்கி நின்றார்

    சமணமம் பெளத்தமதம் ஒதுக்கியதைச் சம்பந்தர்
    சைவத்தின் வளர்ச்சிக்குத் தானுரமாய் ஆக்கினார்
    சம்பந்தர் உத்வேகம் சம்பந்தர் புதுநோக்கு
    சைவத்தை தாழவிடா தளைந்தோங்கச் செய்ததுவே

    நாவுக்கு அரசரை நற்றமிழால் சம்பந்தர்
    அப்பரே என்றழைத்து அன்பினைக் காட்டினார்
    சம்பந்தர் அப்பர் சைவத்தைப் பரப்புதற்கு
    ஊரூராய்ச் சென்றார் உளமார உழைத்தார்

    இளங்கன்று சம்பந்தர் இயற்கையினை ரசித்தார்
    இயற்கையிலே சம்பந்தர் இறையினையே கண்டார்
    இசைஞானம் மிக்கவவராய் சம்பந்தர் மிளிர்ந்தார்
    பண்ணோடு சந்தங்களை பக்குவமாய் இணைத்தார்

    சந்தத்தின் தந்தையாய் சம்பந்தர் திகழுகிறார்
    அருணகிரிக் காசானாய் ஆகிவிட்டார் சம்பந்தர்
    சம்பந்தர் பலவகையில் பாடல்களைத்  தந்தார்
    தந்தவைகள் அத்தனையும்  தமிழ்சைவச் சொத்தே

    ஞானத் தனிமுதல்வன் நான்மறையைப் போற்றுபவன்
    மேலாக சைவத்தை மேதினியில் உயர்த்தியவன்
    காழியர்கோன் சம்பந்தன் கறைக்கண்டன் பிள்ளையவன்
    ஆழமுடை  தொண்டதனை அகமிருத்தி வைத்திடுவோம்!

    Share
  • யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து!

    யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லூரான் திருவடியில் நாளும்பல அதிசயங்கள்
    நாடிவரும் அனைவருக்கும் நன்மைபல வருகிறது
    நல்லூரின் மண்நடந்தால் நம்வினைகள் பறந்தோடும்
    என்றெண்ணிப் பலபேரும் நாளுமங்கே வருகின்றார்

    தேரடியில் தெய்வவருள் செறிந்தங்கே இருக்கிறது
    தேரடியில் வில்வமரம் யாவருக்கும் தெரிந்ததுவே
    மரத்தடியில் பலரமர்வார் மனமெல்லாம் பலநினைப்பில்
    மால்மருகன் காத்திடுவான் என்பதவர் நினைப்பாகும்

    பற்றற்று வந்தமர்வார் பக்குவத்தைத் தேடிடுவார்
    பக்குவத்தை நாடிடுவார் பைத்தியமாய் தெரிந்திடுவார்
    பார்ப்பவர்கள் விசரென்பார் பரிகசித்து நின்றிடுவார்
    ஆனாலும் அம்மனிதர் விசராகத் திரிந்திடுவார்

    திட்டுவார் கல்லெறிவார் மண்ணெடுத்தும் எறிந்திடுவார்
    கிட்டவே போவதற்கு யாவருமே அஞ்சிடுவார்
    செல்லப்பா திருநாமம் கொண்டவந்த மனிதர்க்குள்
    தேடரிய பொக்கிஷங்கள் பொதுந்துமே கிடந்தனவே

    செல்லப்பர் பொக்கிஷத்தைத் தேடிவந்தார் ஒருவர்
    செல்லப்பரோ அவரைத் திட்டியே தீர்த்தார்
    வந்தவரோ வேதனையால் வதைபட்டு உழன்றார்
    மனஞ்சோர்ந்து போகாமல் பின்தொடர்ந்து நின்றார்

    வேதனையும் சோதனையும் வெற்றியினைக் கொடுக்க
    தெடிவந்த மாமனிதர் யோகர்சுவாமி ஆனார்
    தேடரிய பொக்கிஷங்கள் செல்லப்பா ஈந்தார்
    தெளிந்தநற் குருவாக யோகர்சுவாமி மலர்ந்தார்

    கொழும்புத்துறைக் கொட்டிலிலே யோகர்சுவாமி அமர்ந்தார்
    எண்ணரிய தத்துவங்கள் இதயந்தொடக் கொடுத்தார்
    இனங்கடந்து மதங்கடந்து மொழிகடந்து நின்றார்
    எல்லோரும் விடிவுபெற ஏற்றபல செய்தார்

    பற்றற்று நின்றார் பக்குவமாய் இருந்தார்
    பலருக்கும் வழிகாட்டும் விளக்காக ஒளிர்ந்தார்
    தேடிவரும் அனைவரது தேவைகளை உணர்ந்து
    வாடியவர் செல்லாமல் மனமகிழச் செய்தார்

    படித்தவரும் ஒன்றே பாமரரும் ஒன்றே
    பாரபட்சம் யோகர் சுவாமி பார்ப்பதேயில்லை
    கொண்டுவரும் அத்தனையும் பங்குபோட்டுக் கொடுப்பார்
    கொடுக்கின்றார் மனமுடைய எதையுமவர் செய்யார்

    திருமுறைகள் படிப்பார் தித்திக்கப் படிப்பார்
    வருமடியார் இணைய மனமுருகிப் படிப்பார்
    சிவதொண்டன் நிலையம் தியானத்தின் நிலையம்
    சுவாமிகளை என்றும் நினைக்கவைக்கும் நிலையம்

    ஈழத்தின் ஞானி இணையில்லா ஞானி
    எல்லோரும் நினைக்க வாழ்ந்திட்ட ஞானி
    யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து
    ஆன்மீகச் சொத்தை அகமிருத்தி வைப்போம் !

    Share
  • மன்னித்து ஏற்பதா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மதிய இடைவேளை. அலவலக காண்டீனில் சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும் என்று நினைக்கும்போதே சுயபரிதாபம் பொங்கி  எழுந்தது வேலுவுக்கு.

    பின் என்ன, அவனவன் மனைவி அருமையாகச் சமைத்துக்கொடுத்ததை அவளே அருகில் இருப்பதுபோல் அனுபவித்துச் சாப்பிட, இவன் மட்டும் உப்பு அதிகமாக, அரைகுறையாக வெந்ததை அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டும். சமையலறைப்பக்கமே தலைவைத்துப் படுக்காதவனெல்லாம் அயல்நாட்டுக்கு வந்து சமையல் செய்கிறான், பாவி!

    வேலுவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளவே வந்தவன்போல் அருகில் வந்தான் சாமி.

    “இன்னும் மாமியார் வீட்டிலதான் இருக்காங்களா?” என்று அக்கறையாக விசாரித்தான்.

    அவனை ஒருமுறை சோகமாகப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டான் நம் கதாநாயகன். `தெரிந்துகொண்டே கிளறுகிறான் தடியன்!’ என்று மனதிற்குள் வைதான்.

    சாமியோ எளிதாக அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை. “அப்படி என்னதான் சண்டை ஒங்களுக்குள்ளே?” என்று துருவினான்.

    ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் வேலு. “நம்ப ஆபிசில எல்லாரும் சேர்ந்து மூணு நாள் கெண்டிங் ஹைலாந்துக்கு பிக்னிக் போனோம், இல்லியா? அப்போ..”என்றவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “எனக்கு குளிர் தாங்கல,” என்று ஏதோ சொல்ல, நண்பன் புரிந்துகொண்டு தலையாட்டினான். “குளிருக்கு அடக்கமா மிஸ் வாங்குடன் ஒண்ணா, ஒரே ரூமில இருந்தியாக்கும்! அதுக்கு எப்பவுமே ஒன்மேல ஒரு கண்ணு!”

    “சேச்சே! போரடிக்குதுன்னு அவதான் என் ரூமுக்குள்ள வந்தா. சும்மா பேசிட்டு இருந்தோம். அவ்வளவுதான்!”

    கேலிச்சிரிப்புடன், “நம்பறேன்,” என்ற நண்பன் சற்று யோசித்து, “எவன் வத்திவெச்சானோ! இதுக்குத்தான் உள்ளூரில மாமியார் வீடு இல்லாத பொண்ணாப்பாத்து கட்டியிருக்கணும்,” என்று காலங்கடந்து முணுமுணுத்தான்.

    “ஆகிற வழியைச் சொல்லுவியா!”

    “நீ போய் கூப்பிடேன்!”

    “ஒடனே வந்துடுவாளா?”

    “லேடீஸ் அவ்வளவு சீக்கிரம் மசியமாட்டாங்க.` நீ இல்லாம வீடு வெறிச்சுனு இருக்கு. சாப்பாடே இறங்க மாட்டேங்குது’ன்னு ஏதாவது வசனம் எடுத்துவிடு”.

    “இதெல்லாம் போன தடவையே சொல்லியாச்சு”.

    “இப்படிச் சொல்லிப்பாரேன். ‘ஒன்னோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்போதான் நான் முழுமையா ஆனமாதிரி இருக்கு’, இப்படி ஒரு இளிச்சவாயன் சொன்னா எந்த மனைவிக்கும் கண் கலங்கிடும்”.

    “நம்பறமாதிரி ஏதாவது ஐடியா குடுப்பா”.

    “அட, சொல்றேன், நம்பமாட்டேங்கிறியே! ஒரு படத்தில இப்படித்தான் மனைவியை வழிக்குக் கொண்டுவர்றான் கதாநாயகன்”. அடித்துச்சொன்னான் சாமி.

    அறிவுரை பலத்தது. “அதோட, ‘ஸாரி, ஸாரி’ன்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்.  தலையைக் கலைச்சு விட்டுக்கிட்டு, மூஞ்சியைச் சோகமா வெச்சுக்க. ரெண்டு மூணு நாள் சவரம் வேண்டாம்”.

    நண்பன் சொன்னதையெல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டு, மாமியார் வீட்டுக்குப் போனான் வேலு.

    “எங்கே வந்தீங்க?”

    மனைவியின் கட்டைக்குரலும் மிரட்டலும் புதிதல்ல என்றாலும் சற்று பயம் ஏற்பட்டது. பெரிதாக ஒரு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான்.  “நீ இல்லாம..,” என்று ஏதோ ஆரம்பித்தான். மற்றதெல்லாம் மறந்துபோயிற்று.

    பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த மாமியார், “உள்ளே வா!” என்று மகளை ரகசியக் குரலில் அழைத்துப்போனாள்.

    “எத்தனை நாள் இங்கேயே தங்கப்போறே? போய், அவர் காலிலே விழுந்து, `என்னை மன்னிச்சு ஏத்துக்குங்க’ன்னு கெஞ்சலாச் சொல்லு”. இணையத்தில் பலரும் பார்த்ததை மாமியாரும் பார்த்திருந்தாள்.

    “யார், யாரை மன்னிக்கிறது? நானா தப்பு பண்ணினேன்?” குரல் கத்தலாக வெளிப்பட்டது. “நானா வீட்டில பெண்டாட்டியை விட்டுட்டு, கண்டவளோட வெளியூரில  ரும் போட்டுத் தங்கினேன்?”

    “என்ன இருந்தாலும், நீ  ஒரு பொண்ணு. விட்டுக்குடுக்கறதுதான் வாழ்க்கை”. மாமியார் தத்துவத்தில் இறங்கினாள். “இந்தமாதிரி சமாசாரத்துக்கெல்லாம் அப்பாவை நான் பிரிஞ்சிருந்தா, நீ பிறந்திருக்கவே முடியாது. ஒங்கப்பா ஆடாத ஆட்டமா!”

    சற்றுநேரம் அங்கே  மௌனம் நிலவியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வேலு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று காதைத் தீட்டிக்கொண்டான்.

    “சரிம்மா. நீ இவ்வளவு சொல்றதால போறேன். ஆனா, செய்யாத தப்புக்காக மன்னிப்பெல்லாம் கேக்கமாட்டேன்”.

    தான் ஸாரி சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்ட மாமியார்மேல் அன்பு சுரந்தது வேலுவுக்கு.

    “நீங்களும் எங்ககூட வாங்களேன், அத்தை!” என்றான் உபசாரமாக. மகளைவிட அனுபவம் அதிகம் இருந்ததால் அவளுடைய சமையல் இன்னும் ருசியாக இருக்கும் என்று சப்புக்கொட்டியது அவன் நாக்கு.

    Share
  • விசாகத் திருநாள் வேலவன் திருநாள்!

    விசாகத் திருநாள் வேலவன் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வரம்பெற்ற வல்லரக்கன் வழிதவறி நடந்தான்
    வானவரை வதைப்பதிலே குறியாகி நின்றான்
    வரமீந்த சிவனாரோ கொதித்துமே நின்றார்
    வல்லரக்கன் வழிமாற வழிவகுத்தார் சிவனார்

    வல்லரக்கன் எண்ணாத வழியொன்று கண்டார்
    வரத்துக்கு ஏற்றதாய் வழிசமைத்தார் சிவனும்
    தன்சக்தி கனற்பொறியாய் எழுந்துவிடச் செய்தார்
    கனற்பொறியும் கந்தனாய் உருப்பெற்று வந்தது

    அருவமும் உருவமாகி அறுமுகக் கடவுளாகி
    பெருவுருப் பெற்றுவந்து பேரருள் புரிந்தநாளே
    வைகாசி விசாகமாகி மாசினையகற்றும் நாளாய்
    மாநிலம் மலர்ந்தாக மனமதில் எண்ணுவோமே

    மாறுபட்ட  நின்ற மாவரக்கர் தம்மை
    மாறிவிட  வைத்தான் மால்மருகன் முருகன்
    வேலனவன் கையில் வேல்கொடுத்த நாளாய்
    வைகாசி விசாகம் மனமெல்லாம் நிறைகிறது

    ஆதியும் அந்தமுமும் இல்லா அரும்பொருள்
    சோதியாய் ஆகியே சுடர்விடும் பெரும்பொருள்
    வைகாசி விசாகத்தில் வல்வினை போக்கிட
    கந்தனாய் வந்ததைக் கருத்தினில் இருத்துவோம்

    கந்தனின் பிறப்பொடு பற்பல சம்பவம்
    வைகாசி விசாகத்தில் வந்துமே இணையுது
    அர்ஜ்ஜுனன் அரிய அஸ்த்திரம் பெற்றான்
    நலமிகு நம்மாழ்வார் நாநிலம் பிறந்தார்

    விரதம் இருப்பார் காவடி எடுப்பார்
    வேலவன் சன்னதி அடியார் குவிவார்
    வினைகள் அகற்றிட வேண்டியே நிற்பார்
    வேலவன் வினைகளை அகன்றிட  வைப்பார்

    விசாகத் திருநாள் வேலவன் திருநாள்
    மனவிருள் அகற்றும் மாண்புடைத் திருநாள்
    பொய்யும் களவும் பொடிப் பொடியாகி
    உய்யும் வகையினை உணர்த்திடும் திருநாள்

    நம்பிக்கை வைத்து நாட்களைப் பார்ப்போம்
    நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
    நல்லது நடக்க நம்புவோம் இறையை
    இறையை நம்பினால் எல்லாம் இன்பமே

    நாளும் பொழுதும் நல்லதைச் செய்வோம்
    நாளும் பொழுதும் நல்லதை நினைப்போம்
    தீமை என்பதைத் தீண்டா திரும்போம்
    தினமும் பொழுதும் இறையை நினைப்போம்!

    Share
  • நம்பினார் கெடுவதில்லை!

    நம்பினார் கெடுவதில்லை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நம்பிக்கை என்றால் நம்பிக்கை வேண்டும்
    தும்பிக் கையானை தொழுகிறார் பலபேர்
    பற்பல மதங்கள் பல்வகைத் தெய்வங்கள்
    இப்புவி இருப்பதை எண்ணிட வேண்டும்

    அல்லா என்கிறார் யேசு என்கின்றார்
    அரியே என்கிறார் அரனே என்கிறார்
    அகிலாண் டேஸ்வரி அம்பிகை என்கிறார்
    நம்பிக்கை என்பது நாமமாய் பெருகுது

    உண்டு என்று நம்பிக்கை வைக்கிறார்
    இல்லை என்று சொல்பவர்  இருக்கிறார்
    உண்டா இல்லையா என்பதை நினைக்க
    நம்பிக்கை எதுவெனத் தெளிந்திட வேண்டும்

    பாசம் நேசம் பர்த்ததே இல்லை
    அன்பு கருணை பார்த்ததே இல்லை
    எல்லாம் இருக்கு என்னும் நம்பிக்கை
    எல்லோர் இடத்தும் இறுக்கமாய் இருக்கு

    நிறமும் இல்லை உருவும் இல்லை
    கண்ணால் எவரும் கண்டதும் இல்லை
    இருப்பதாய் நம்பிக்கை இறுக்கமாய் இருக்கு
    விமர்சனம் வெறுப்பை வெளியிட  மாட்டோம்

    இவைகள் அனைத்தும் நிறைந்தது இறையே
    இறையில் நம்பிக்கை தவறா சொல்வீர்
    நம்பிக்கை உருவமே இறையே ஆகும்
    நம்பிக்கை என்றுமே நல்லதே காட்டும்

    நம்பினார் கெடுவதில்லை நம்பினார் வீழ்வதில்லை
    நான்மறையும் நம்பிக்கை நல்வழியும் நம்பிக்கை
    மதங்கூறும் தத்துவங்கள் மகத்தான நம்பிக்கை
    மகத்தான நம்பிக்கை மாநிலத்தில் இறையாகும்!

    Share