Blog

  • நான் அறிந்த சிலம்பு – 119

     

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    அங்ஙனம் திருமாலைத் தொழுது வலம் வரும் போது
    அங்கே நிலத்தையே பிளக்கும்படி விழுகின்றala
    சிலம்பாற்றின் அகன்ற கரையில்
    வாசமலர்கள் பூத்த கோங்க மரத்தின்கீழ்
    கார்மேகக் கூந்தலையும்
    தொடி அணிந்த தோளையும் உடைய
    பெண்ணொருத்தி தோன்றி,
    “நான் இம்மலையடிவாரத்தில் வசிப்பவள்;
    எனது பெயர் வரோத்தமை.
    இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இம்மையும் எது?
    இம்மை மறுமை இவை இரண்டும் இன்றி
    ஓர் உயிர் செம்மையாக எப்போதும் நிற்பது எங்ஙனம்?

    இதற்குத் தக்க விடையளிப்பவர்
    ஏவிய பணிகள் நன்கு புரிவேன்.
    விடை அளித்தீர்களேயானால்
    பாக்கியம் பெற்ற உங்களுக்கு
    இக்குகையின் கதவை இப்போதே திறந்துவிடுவேன்”
    என்று கூறுவாள்.

    கதவுகள் திறந்து அவள் காட்டும்
    அந்நல்வழி சென்றால்
    பல கதவுகளையுடைய வாயில்களும்
    இடைக்கழியும் உண்டு.
    ஆங்கே, இரட்டைக் கதவுகள் கொண்ட
    வழியொன்று காணப்படும்.

    அந்த வாயிலில் வரையப்பட்ட
    சித்திரப்பாவை எதிரே தோன்றி,
    “இறுதியான இன்பம் எங்கிருக்கிறது என்று
    நீவிர் விடையுரைத்தால்
    வேண்டிய பொருள் தருவேன்” என்றுரைப்பாள்.
    “விடை கூறாது போயினும்
    உமக்கு இடர் செய்யேன்;
    நீங்கள் செல்ல வேண்டிய வழியில்
    செல்ல அனுமதிப்பேன்” என்பாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 108 – 125
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://tamil.thehindu.com/society/spirituality

    Share
  • முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    allmurugan

    அறுபடை வீடுகள்:
    மிகப்பழமை வாய்ந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரிக்கின்றது. இவற்றில் மலையும் மலைசார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான். முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளவன் என்றாலும், அவன் சிறப்பாக வாழும் இடங்களாகக் கருதப்படுபவை இந்த ஆறு படைவீடுகளாகும்.

    முதற்படை வீடு – பழனி – ஸ்ரீபழனி ஆண்டவர்:
    சென்னையிலிருந்து 445 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி. இதற்குச் சித்தன்வாழ்வு, பொதினி போன்ற பெயர்களும் உண்டு. பொதினி என்ற பெயர் மருவி பழனி என்றானது. இங்குள்ள பழனிஆண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது. இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ்பெற்றது.

    பழனி:
    ஆறு படைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழனி. பழனிமலையில் உள்ள முருகனின் சிலை நவ பாஷாணத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம்பெறும் என்று நம்பப்படுகிறது.

    இரண்டாம்படை வீடு – திருச்செந்தூர் – ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
    சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில், தூத்துக்குடி அருகில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது திருச்செந்தூர். திருச்சீரலைவாய், வீராகுபட்டணம், ஜெயந்திபுரம் போன்ற வேறு சில பெயர்களும் இதற்கு உண்டு. இங்கு வழங்கப்படும் பன்னீர்இலை விபூதி மிகவும் புகழ்பெற்றது.

    திருச்செந்தூர்:
    கடல் அலை ‘ஓம்’ என்ற ரீங்காரத்துடன் கரைமோதும் ‘அலைவாய்’ என்னும் பெயருடைய திருச்செந்தூரானது முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறைசெய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரிய மரமாக நிற்க முருகன் தன்தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    மூன்றாம்படை வீடு – திருப்பரங்குன்றம் – ஸ்ரீசுப்ரமணியசுவாமி
    சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது இவ்வூர். இங்கு ஸ்ரீசுப்ரமணியசுவாமி கல்யாணக் கோலத்துடன் காட்சி தருகிறார்.

    திருப்பரங்குன்றம்:
    தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றிபெற்ற மறுநாள் இத்தெய்வீகத் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    நான்காம்படை வீடு – சுவாமிமலை – ஸ்ரீசுவாமிநாதசுவாமி
    சென்னையிலிருந்து சுமார் 309 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. இதற்குத் திருவேரகம், குருமலை, தாத்ரீகரீ, சுந்தராசலம் போன்ற பெயர்களும் உண்டு.

    சுவாமிமலை:
    தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும்கூடத் தெரியாத பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவருக்குக்கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம்கேட்ட இடமே சுவாமிமலை.

    ஐந்தாம்படை வீடு – திருத்தணி – ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி
    சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இவ்வூர். சீபுரணகிரி, தணிகாசலம், மூவாத்திரி, அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. 400 அடி உயர இந்த மலைக் கோயிலில் 365 படிகள் உள்ளன.

    திருத்தணி:
    முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல்மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம்செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின்பு முருகன் வள்ளியைத் திருமணம் செய்துகொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

    ஆறாவதுபடை வீடு – பழமுதிர்சோலை – சோலைமலை முருகன்
    சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது பழமுதிர்சோலை. இதற்குத் திருமாலிருஞ்சோலை, குலமலை, கொற்றை மலை என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒளவைப் பாட்டிக்கு நாவல் பழத்தை உதிர்த்துக் கொடுத்ததால் பழமுதிர்சோலை என்று பெயர்பெற்றது.

    பழமுதிர்சோலை:
    நக்கீரர், ‘இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப்படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்சோலையாகும்.

    அறுபடை வீடுகொண்ட திருமுருகா!
    திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா! முருகா! (அறுபடை)

    பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
    உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா! (அறுபடை)

    வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு – அந்த
    வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
    ஆண்டியின் கோலமுற்று மலைமீது – நீ
    அமர்ந்த பழனி ஒரு படைவீடு! (அறுபடை)

    ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து – நல்ல
    ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
    தந்தைக்கு உபதேசம் செய்த மலை – எங்கள்
    தமிழ்த்திரு நாடுகண்ட சுவாமிமலை! (அறுபடை)

    தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்துத்
    தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல்கிழித்துக்
    கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு – கடல்
    கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு! (அறுபடை)

    குறுநகைத் தெய்வானை மலரோடு – உந்தன்
    குலமகளாக வரும் நினைவோடு
    திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு – வண்ணத்
    திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு! (அறுபடை)

    தேவர் குறை தவிர்த்துச் சினம் தணிந்து – வள்ளி
    தெள்ளுத் தமிழ்க்குறத்தி தனை மணந்து
    காவல்புரிய என்று அமர்ந்த மலை – எங்கள்
    கன்னித் தமிழர்திருத் தணிகை மலை! (அறுபடை)

    கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு – நல்ல
    காட்சிதந்து கந்தன் கருணை தந்து
    வள்ளி தெய்வானையுடன் அமர்சோலை
    தங்க மயில் விளையாடும்பழ முதிர்சோலை! (அறுபடை)

    http://www.youtube.com/watch?v=ZK0dmYHq6oE

    Share
  • ஸ்ரீ விட்டல், பண்டரிபுரம்

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    pandaripuram1

    சமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீவிட்டல், ஸ்ரீருக்மிணிதேவியைச் சேவிக்கும் அற்புதமான  மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது.

    பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம்தான். அந்தப் பழமையான கோயில்தான் பிரதானம். பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். ”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம்.

    “ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி” என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளார்கள்.

    ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட புண்ணிய பூமியாம் இது. அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள், பல இடங்கள், பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் என்று எங்கு சென்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ்தான் அங்கு பாடப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்டுப் பார்க்கப் பார்க்க  நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

    ’பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலைத்  தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப்  பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார் என்றாலும், தற்போது சந்த்ரபாகா நதி (கங்கைக்கும் பழையது – மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது.) நீராடும் நிலையில் இல்லை என்பதால், மிகவும் கவனமாக ஆற்றின் நடுப்பகுதி வரை நடந்து சென்று சிறிதளவு தீர்த்தம் எடுத்து வந்தோம்.

    இனி இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தின் தல வரலாறு, அதன் மகிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், அதையே ’வீடு தேடி வருவான் விட்டலன்’ என்னும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீமுரளிதரன் சுவாமிகள் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ’விஜய் டிவி’யில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருவதைப் பலர் கேட்டிருக்கக் கூடும் என்பதாலும், அந்தப் புராணம் மிகவும் பெரிதாக இருக்கும் காரணத்தாலும், இதில் அத்தனை விபரங்களும் சொல்லாமல், ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் “தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு பிரத்யக்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன்” என்னும் ஐதீகம் அங்கு நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக பல புராணக் கதைகளும் சொல்லப்படுகிறது. அந்தக் கதைகளைக் கேட்டால், ஒரு காலத்தில் நாம் கண்ட ‘தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி’ என்னும் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் படத்தை இந்தப் புராணத்தைத் தழுவி எடுத்திருக்கலாம். சில லீலைகளைப் படித்தால் கேரளத்து குருவாயூர் அற்புதங்களைப் போன்றே இருக்கிறது. பரந்தாமன்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மாநிலம் ஏது?

    முடிந்த வரையில் சிறியதாக்கிச் சொல்ல முயற்சி செய்கிறேன்…

    ஆடி மாதம் (ஜுலை) வரும் ஏகாதசியை மஹராஷ்டரத்தில் ’ஆஷாட ஏகாதசி’ என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடிபோல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரைப் பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் பெரிய பந்தல் போட்டு அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் ”பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ” என்றும் ”விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்” என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்

    லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் சாத்தகி. அவர்களுக்குப் பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் புண்டரீகன். அவன் பிறந்ததும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அழிப்பான், துன்புறுத்துவான். நாய்மேல் கல் வீசுவான்; முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான். அவனுக்குத் திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணிப் புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை. வீட்டில் மனைவி இருக்கும்போதே வெளியில் இன்பம் தேடினான். அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன், “அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன். இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமில்லை… ஆகையால் நான் வீட்டைவிட்டுப் போகிறேன்” என்று கத்தித் தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள்.

    ’தமக்கு ஒரே  மகன் இருந்தும் விதி இப்படி ஆகி விட்டதே!’ என்று வருந்தி எல்லாவற்றையும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். அதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின்மேல் தன் மனைவியுடன் காசிக்குக் கிளம்பினான். வழியில் அவன் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செருப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்துத் தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன் “வாயை மூடிக்கொண்டு வா! அவர்கள் கிழங்கள்…வந்தால் நமக்குத்தான் கஷ்டம்” என்றான் இரக்கமில்லாமல்.

    அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது. அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று மனைவியுடன் அங்கு போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார். பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் புண்டரீகன். அங்கு ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய், ”காசி க்ஷேத்திரம் எங்கு உள்ளது?” என்று கேட்டான். “காசியா? எனக்குத் தெரியாதே“ என்றார் அவர்.  “இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?” என்று சீறிய புண்டரீகனிடம், “காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும்! நீ போகவேண்டும் என்கிறாயே!!” என்றார் கேலியாக.

    அதைக் கேட்டுக் கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் புண்டரீகன். இரவு தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மூன்று பெண்கள் ஆஸ்ரமத்துள் நுழைந்தனர். மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும், அழுக்குடன், கோரமாகவும் இருந்தனர். அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்த அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருத்தி வீடு கூட்டினாள்; மற்றொருத்தி வீட்டைத் துப்புரவாகத் துடைத்து அழகான கோலம் இட்டாள். அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவித் துடைத்து வணங்கினாள்; பின்பு அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம்! மூன்று பேரும் மிகவும் அழகாகச் சுந்தரிகளாக வந்தனர்.

    ”இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள், இப்போது எப்படி இது?” என்று வியந்துபோன புண்டரீகன் அவர்களிடம் ஓடினான். “சுந்தரிகளே! நீங்கள் யார்? சொல்லுங்கள்!” என்று கேட்டபடி ஒருத்தியின் கையைப் பற்றினான். அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறிப் பின் சொன்னாள். “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள். தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து, அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவை செய்கிறோம். இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவை செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம். பாபம் எங்களிடம் சேரச் சேர அவலட்சணமாக மாறுவோம். இங்குத் தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்ம புண்ணியத்தினால்தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய். இனியாவது திருந்தி உன் பெற்றோருக்குச் சேவை செய்! நீ இத்தனை நாட்கள் செய்த பாபத்தைப் போக்கிக் கொள்! உன் துர்க்குணத்தை மாற்றிக் கொள்! தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு!” என்று கூறிவிட்டுச் சென்றனர்.

    புண்டரீகன் ஏதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டதுபோல் மனம் மாறினான். தான் செய்த தவறுகளுக்கு வருந்தினான். பின் கங்காதேவியிடம் கேட்டான், “இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன?” கங்கை சொன்னாள், ”அப்பா புண்டரீகா! இவர் கோவிலுக்குப் போனதில்லை; யாகம் செய்ததில்லை, தான தருமம் செய்ததில்லை. ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வருகிறார். அவர்களே இவரின் தெய்வம். பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும்…பாபங்கள் கரைந்து போகும்!”

    புண்டரீகன் மனம் நெகிழ்ந்து…”தாயே நான் என் பெற்றோருக்குப் பல அநீதிகளை இழைத்து விட்டேன். இப்போது திருந்தி விட்டேன்; இதோ இப்போதே போகிறேன்! அவர்களுக்கு மனம் உவந்து சேவை செய்வேன்” என்றான். காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான். பின் தன் பெற்றோரைத் தேடிக் கண்ணீரால் அவர்தம் பாதங்களைக் கழுவினான். அதன்பின் அவன் உலகமே அவன் தாய் தந்தைதான்! அவனுக்கு வேறு ஒரு சிந்தனையும் இல்லை.

    இதெல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவையை மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார். அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார், ”புண்டரீகா புண்டரீகா!” வெளியிலிருந்து ஒலித்த குரல்கேட்ட புண்டரீகன், “யார்? யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள்! நான் பெற்றோரின் சேவையில் ஈடுபட்டுள்ளேன்” என்று ஒரு செங்கல்லைக் கதவைத் திறந்து வீசிப் போட்டான். அந்த மாயக்கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல்மேல் நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

    வெகு நேரம் கழித்துப் புண்டரீகன் கதவைத் திறந்தான்; பார்த்தான் கண்ணனை. தன்னை மறந்தான்; அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். “இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள்! தங்களுக்குப் போய் செங்கல்லைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே!” என்று வருந்தினான். “புண்டரீகா! உன் சேவையை மெச்சினேன்! ஏதாவது வரம் கேள்!” என்ற கண்ணபிரானிடம், “உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி!” என்றான் புண்டரீகன். ”புண்டரீகா! உன் சேவையினால் புகழ்பெற்ற இந்த இடம் இனிப் ’பண்டரிபுரம்’ என்று நிலைக்கட்டும்! நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்! உன்னை எல்லோரும் ’விட்டல்’ என்று அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள்!” என்றான் கண்ணன். ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் அந்த ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.

    பண்டரிபுரம் கோவிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள் காட்சியளிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை  கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீ விட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள்.

    சாளக்கிராமத்தில் அமைந்த, அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து ”வந்துவிட்டாயா?” என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்கத் தெய்வீகம் நிறைந்த கோவில் இது. தரிசனம் கண்டபின்பு ஏற்படும் பரவசத்திற்கு அளவேயில்லை.

    கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள், துளசிமணி மாலைகள், பஜனைக்குரிய பொருட்கள், சந்தனக் கட்டைகள், வீர சிவாஜியின் படங்கள், ஸ்ரீவிட்டலனின் படங்கள் என்று யாத்திரிகர்களைக் கவரும் வகையில் கொட்டிக் கிடக்கின்றன. தயிரும், பாலும், லஸ்ஸியும் மிகவும் தரமும் சுவையுமாக வழி நெடுகக் கிடைக்கின்றன. மற்றபடி உணவுக்குச் சப்பாத்தியும், சோள ரொட்டியும்தான். ஒரு நாள் வாடகையாக ரூபாய் ஆயிரத்தில் தங்கும் விடுதிகளும் நிறைய இருக்கின்றன.

    எங்கும் பக்தியும், விட்டல் மீதான பிரேமையும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இந்தக் கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரின் மனத்தில் ஏற்பட்டு விட்டல் பக்தியை வளர்க்கும் என்பது திண்ணம்.

    Share
  • மழை

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி இலங்கை 

    வற்றிக் கிடக்கும் வறண்ட பூமியைத்
    தொட்டுத் தழுவும்
    உனது தூய கரங்களுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி!

    இரவென்ன…பகலென்ன…                            rain for kavithai
    வானம் கருக் கொண்டால்
    பூமி மகிழ்கிறது! 

    நீ 
    இல்லாத நாட்களில்
    பொல்லாத புழுக்கம்! 
    இருக்கின்ற நாட்களில் 
    இப் புவியே வழுக்கும்!

    நீ வருகை தருங் காலத்தில்
    வெள்ளம் பாய்ந்தோடும்!
    உனது
    விபரீதப் போக்கினால் 
    கண்ணீர் வெள்ளமும் பாய்ந்தோடும்!

    நதிக் கரைகளில்  அலையடிக்கும்! 
    கடற்கரைகளில் 
    வெண்நுரைப் பூக்கள் 
    விரிகின்ற  மாரிக் காலம்!
    உன்னைச் சுமந்த மேகங்களின்  
    ஊர்கோலம்!

    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
    இந்த
    மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்!!

    மீனோட…
    நாரைகள் தவமிருக்கும்! 
    ஏரோடாத கழனிகளில் 
    ஏரோட…எங்கும் 
    பைங் கூழ் விளைந்திருக்கும்!

    வறுமைத் தளையறுக்கும் 
    வல்லமை உன்னுடையது!
    நீ இல்லையேல் 
    எந்த  மண்தான் பொன்னுடையது?

    கொட்டும் இடிமின்னல் காற்று
    ”கூஹ் கூஹ்”வென்று 
    குரலை ஒலியெழுப்ப
    முட்டும் மரக் கிளைகள் 
    மோதிச்  சல சலக்க…
    கார் கால மேகங்கள் 
    தாவிச் செல்லும் 
    பல்லாக்கிலே
    நீ விற்றிருந்து 
    விஜயஞ் செய்கின்றாய்!
      
    சகாராக்களைச் 
    சல்லாப புரியாக மாற்றும் 
    சக்தி உன்னுடையது!

     நீ கொடைவள்ளல்!
    அள்ளிக் கொடுக்கும் போதுதான்…  
    இடையூறு அதிகம்!

     

    Share
  • ஒரு நாள் போதுமா?

    -ரா.பார்த்தசாரதி

    அன்பு ஊற்றுக்கு இன்று அடையாள  தினம்      mother-and-a-child                                  
    அதுவே அன்னையரை வாழ்த்தும் தினம்!                                                               
    அடுத்த தலைமுறை உருவாக்கிய அணங்கு
    அரும்பணி ஆற்றிய அன்னையெனும் தெய்வம்!

    மங்கலநாண் அணிந்த முதல் நாளாகச்
    சுற்றத்தையும் தன் வாரிசுகளையும் பேணும் பெண்ணாக,
    வித விதமான வினாக்களுக்கு விடையளிக்கும் தாயாக,
    கருக்கொண்ட நாளில் இருந்து தாயின் உருவமாக 

    ஐயிரண்டு திங்கள் அடிவயிற்றில் காத்து,
    சிசுவின் செல்ல உதைகளை நினைத்து,
    சுகமாய் உள்வாங்கித் தழும்புகள் பதிந்தாலும்,
    பிரசவத் துயருற்று, குருதியை பாலாகப் பொழிந்தாலும்,

    ஈன்று எடுத்த தாயை இருகரம் கூப்பி
    வணங்குதல் இயல்பே ஆனாலும் நாம்
    வணங்குவதற்கு ஒரு நாள் போதுமா?

     

    Share
  • உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…

    — கவிஞர் காவிரிமைந்தன்

    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…

    adimaippen

    நல்லோர் வாழ வழியில்லாத நாட்டில் நடப்பது என்ன?
    தன்னலம் தலைவிரித்தாடும் .. பொதுநலம் பூமுகம் வாடும்..
    சர்வாதிகாரியின் கரங்களில் சிக்கி ஒரு சமுதாயம் இழிபடும்..
    இன்னலைத் தீர்க்க இங்கே எவருமே இல்லையா என்கிற ஏக்கம் குரலாய் மேவிடும் வேளை – பாரில் தேவனாய் தோன்றுவான் ஒருவன்.. புராணங்கள் முதலாக புரட்சியில் பூத்த வரலாறுகள் எல்லாம் இந்த பூமியில் சாட்சியாகவே.

    தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
    மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
    மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
    மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

     

    வாலி அவர்களின் வைர வரிகள்.. அடிமைப் பெண் திரைப்படத்திற்காக .. கே.வி.மகாதேவன் இசையில் ..டி.எம்.சௌந்தரராஜன் குரலில் …
    திரைப்படத்தின் முடிவுக் காட்சியாக .. சுயநலத்திற்கு முடிவு கட்டி.. பொதுநலத்திற்கு திறப்பு விழா நடத்தும் காட்சி!

     

    சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
    ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
    இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

     
    ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் அர்த்தங்களைப் பதித்து .. பாடல் வரிகளாக்கித் தந்திருக்கிறார்.
    வண்ணத் தோகை விரித்து மயிலாடும் காட்சியும்.
    விலங்குகளை உதாரணம் காட்டி.. மனிதனைத் திருத்த முயற்சிக்கும் கதையின் நாயகன்…
    புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் அவர்களது நடிப்பில் –
    மக்கள் சபை மகிழ்ச்சியில் கூக்குரலிட .. புதிய சமுதாயம் மலர்கிற காட்சி!

    http://youtu.be/A1TQT3jmg74

    காணொளி -http://youtu.be/A1TQT3jmg74

     

    பாடல்: உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
    உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
    பாடும் பறவை.. பாயும் மிருகம்..
    பாடும் பறவை பாயும் மிருகம்
    இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
    ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

    சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
    ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே
    இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

    வானில் நீந்தும் மேகம் கண்டால் வண்ண மயில்கள் ஆடாதோ ?
    வாழை போல தோகை விரிய வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
    அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
    அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
    இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ?
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

    நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
    நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
    இறைவன் ஒருவன் இருக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்

    தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
    மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
    மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
    மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

     

     

    Share
  • ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!

    கவிஞர் காவிரி மைந்தன்

    மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., 1965ம் ஆண்டில் நடித்து வெளியான, ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்கப்பட்டு, (14.03.2014) தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், 110 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., மறைந்து, 37 ஆண்டுகள் ஆனாலும், அவரது செல்வாக்கு குறையவே இல்லை என்பதை, இந்த படம் நிரூபித்துள்ளது.

    சென்னையில், 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள், மலரும் அனுபவங்களில் மூழ்கினர். அவரது பல படங்கள், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ‘சத்யம்’ திரையரங்கில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். தேர்தல் நேரத்தில் படம் வெளியானதால் அ.தி.மு.க.,வினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    “புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்துக்குள் ஒளித்து வைத்திருக்கிற மயில் இறகை, ஒரு புதையலை பார்ப்பது போல் புத்தகத்தைத் திறந்து பார்த்து மகிழ்ந்து போகும் பள்ளிச் சிறுவர்களைப் போல, ஒரு சில காவியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது, மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.”

    2014ல் திருமதி.சாந்தி சொக்கலிங்கம் அவர்களின் முயற்சியில்.. தயாரிப்பில்.. மறு உருவாக்கத்தில் 1965ல் வெளியான பத்மினி பிக்சர்ஸாரின் பிரம்மாண்டப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பவடிவம் பெற்றது! மார்ச்சு 14.03.2014ல் தமிழகம் முழுவதிலும் புதிய திரைப்பட வரவேற்பை விட அதிகம் பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டது! எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்து திரையரங்குகளில் குவிந்திட திருவிழாக் கோலம் ஒவ்வொரு ஊரிலும்! என்ன இது சாத்தியமா என்கிற கேள்வி பிறக்கிறது! ஆம்! நண்பர்களே.. ஒரு வரலாறு புதிய வரலாற்றை எழுதியது!!

    எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!

    திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?

    உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

    கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?

    மக்கள் திலகம்

    கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

    பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

    கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

    மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

    என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

    அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

    நன்றி – பூங்குழலி – http://mgrsongs.blogspot.ae/

    எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!

    வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!

    அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!

    எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!

    ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!

    அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.

    பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!

    பருவம் எனது பாடல்..

    இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

    கருணை எனது கோயில்.. கலைகள் எனது காதல்!

    முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

    கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

    50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

    பருவம் எனது …

    பருவம் எனது பாடல்paruvam enathu paadal
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்
    கருணை உனது கோயில்
    கலைகள் உனது காதல்

    இதயம் எனது ஊராகும்
    இளமை எனது தேராகும்
    மான்கள் எனது உறவாகும்
    மானம் எனது உயிராகும்
    மான்கள் உனது உறவாகும்
    மானம் உனது உயிராகும்
    தென்றல் என்னைத் தொடலாம் –
    குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
    மலர்கள் முத்தம் தரலாம் –
    அதில்மயக்கம் கூட வரலாம்
    (பருவம்)

    சின்னஞ்சிறிய கிளி பேசும்
    கன்னங்கரிய குயில் கூவும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை எனக்குத் துணையாகும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை உனக்குத் துணையாகும்
    பழகும் விதம் புரியும் –
    அன்பின்பாதை அங்கு தெரியும்
    பயணம் அதில் தொடரும் –
    புதுவாழ்க்கை அங்கு மலரும்

    ஏன் என்ற கேள்வி ?
    பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவைப்பெற்ற மனிதர்கள் நாம்! எது சரி.. எது தவறு? ஏன் இப்படி? என்னும் வினாக்களின் அணிவகுப்பு நெஞ்சில் எழுந்துகொண்டேயிருக்கும்! இதற்கான விடையை அறிந்து அதில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து, அல்லவனவற்றை துறந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? இதோ கதையின் நாயகன் அடிமைப்பட்ட வீரர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய சூழலில் அவர்கள் மனதிற்கு தேவையான பாடங்களை.. அறநெறிகளை.. தர்ம சிந்தனைகளை, புரட்சி விதைகளை.. பொறுமையின் அவசியத்தை.. பொங்கும்தமிழில் எடுத்துவைக்க.. அதற்கேற்ற இசையும் தன் சிம்மக்குரலால் இப்பாடலுக்கு சிறப்பு சேர்த்திட்ட டி.எம்.செளந்திரராஜன் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகுதியானவராக.. வீறுகொண்ட கர்ஜனை விவேகத்துடன் அரங்கேறும் காட்சியிது! மக்கள்திலகத்தின் வாழ்க்கைப்பாதையில் இதுபோன்ற பாடல்கள்தான் அவரின் வெற்றிப்படிகள் என்பது மறைக்கப்படாத ரகசியமாகும்!

    ஏன் என்ற கேள்விen endra kelvi
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

    கேள்விகள் கேட்டதனாலே
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

    கேள்விகள் கேட்டதனாலே
    உரிமைகளை பெறுவதெல்லாம்

    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    உரிமைகளை பெறுவதெல்லாம்

    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    ஏன் என்ற கேள்வி

    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்

    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
    இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
    நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
    இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
    புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
    இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருப்பது ?

    ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

    ஏன் என்ற கேள்வி

    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்

    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
    எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
    சந்தேகம் என்ன ?
    நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
    ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

    நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
    மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்

    நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
    மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
    நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
    அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
    முன்னேற்றம் என்பதெல்லாம்

    உழைப்பவர் உழைப்பதனாலே
    கடமைகளை புரிவதெல்லாம்
    விடுதலை வேண்டுவதாலே

    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    http://www.youtube.com/watch?v=qAHlMihcxzU

    படத்தில் வரும் ஒரு திரைப்பாடல் என்று விட்டுவிடக்கூடிய பாடலா இது? பள்ளியில் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு உணர்த்தப்படவேண்டிய பாடமிது! அடிமைகளின் வாழ்வில் பரவ வேண்டிய வெளிச்சக்கீற்று இந்தப்பாடலில் தெரியவில்லையா? அவர்களின் வாழ்க்கையில் தன்னலம் இல்லாத தலைவனைப் பெற்றுவிட்டால்.. சுதந்திரப் போராட்டம் வெற்றியைத் தொடுவது நிச்சயம்தானே! அருமையான சூழ்நிலைக்கு ஏற்ப.. எழுதப்பட்ட வரிகள்.. கவிஞர் வாலியைச் சார்ந்தது! பாடலின் இடையே வருகின்ற வசனங்கள் ஆர்.கே.சண்முகம் அவர்களுடையது. எத்தனைப் பொருத்தமாய்.. இந்தப்பாடலில் வசனங்கள்!! மறக்க முடியாத மாணிக்க வரிகள் மனதில் பதித்துக்கொண்டால் புதுமை உணர்வுகள் வளரும்! புரட்சியின் பூரண அர்த்தங்கள் விளங்கும்!!

    Share
  • பொன் மாலை

    கே. ரவி

    Plum-tree-poetry

     

    வானளாவி நின்றதென்ன வாமன ஸ்வரூபமோ
    வார்த்தையுள் வளர்வதென்ன மோனஞான தீபமோ
    கானமாகி கானமாகிக் கரைவதேவி தேகமோ
    காதலாகிக் காதலாகிக் கவிதையாக மாறுமோ

    தூண்பிளந்த சிங்கமேதா மோதரன்மா மாயக்கண்ணன்
    ஆதிசேட சயனனேயா லிலைக்கிடந்த நீலவண்ணன்
    பூவமர்ந்த செல்வியேபின் தீயெதிர்த்து நின்றவள்
    சொற்பிளந்து வந்தவளுள் ஜோதியுள்ம லர்ந்தவள்

    கூத்தெடுத்த பாதமேயக் கூற்றுதைத்த தென்னவோ
    தீயுதித்த பாலனைச்செந் தேன்னனைப்ப தென்னவோ
    தந்தமேயோர் எழுதுகோலாய் ஆனதாமது போலவே
    சந்தமேமென் மலர்களாகச் சூட்டுவேன்பொன் மாலையே

     

    Share
  • கல்யாணமாம் கல்யாணம்

     

    கே. ரவி

    images

    காத்துக்கும் பூமிக்கும் கல்யாணமாம் – இது
    காணக் கிடைக்காத வைபோகமாம்
    பூத்துக் குலுங்குமலர் தோட்டங்களாம் – அங்குப்
    பூவெல்லாம் பொறிவண்டுக் கூட்டங்களாம்
    (காத்துக்கும்)

    தோளுக்குப் பட்டாடை அருவிகளாம்
    தொங்கட்டான் போல்சிறு குருவிகளாம்
    காலுக்கு நீரோடை கொலுசுகளாம் – அலங்
    காரத்தில் பலநூறு தினுசுகளாம்
    (காத்துக்கும்)

    மேகங்களே நல்ல மேளங்களாம்
    மின்னல்கள் கூத்தாடத் தாளங்களாம்
    வானத்துத் தேவர்கள் ஆனந்தத் தோடுவந்து
    பூமாரி பொழிகின்ற சாரல்களாம்
    (காத்துக்கும்)

    சிற்றெறும்புக் கூட்டங்கள் ஊர்வலமாம் – புதுச்
    சீர்கொண்டு போகின்ற சிங்காரமாம்
    குட்டைக ளில்தவளைக் கச்சேரியாம்
    குண்டுமல்லிக் கூட்டங்கள் ரசிகர்களாம்
    (காத்துக்கும்)

    நாட்டுக்கு நாடிது நடப்பதுண்டாம் – எழில்
    நாடகமாய் நெஞ்சைக் கவர்வதுண்டாம்
    பாட்டுக்குள் மட்டும்கண் திறப்பதுண்டாம் – அந்தப்
    பார்வைக்குத் தானிது புலப்படுமாம்
    (காத்துக்கும்)

    Share
  • திருமால் திருப்புகழ் (87)

    கிரேசி மோகன்

    ——————————————————————————————————————-

    Navneet Ganga. #krishnafortoday Keshav
    Navneet Ganga. #krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    இருளை ஒழிக்க, இருளில் பிறந்த,
    இருள்நிறம் உற்ற இறைவா, -மருளை,
    மதிக்குக் கொடுக்க, மயங்கு(து) அதனால்,
    விதிவசம் ஆனதே வாழ்வு….(41)

    வாழவன் பக்தியில், வீழவன் பாதத்தில்,
    கூழுக்காட் பட்டுக், குலையாதே, -பாழ்மனமே,
    போக்கத்த போகத்தின், தாக்கத்தில் போகாது,
    நோக்கத்தை, நாரண னாக்கு….(42)

    நாக்கால் நவநீதன், மூக்கால் மணிவண்ணன்,
    கேட்கும் படிசெவியில், கோவிந்தன், -நோக்கும்,
    விழியால் வரதன், விரலால் அரியென்(று),
    ஒழிந்தபோ(து) எல்லாம், ஒழுகு….(43)

    ஒழுக உறிவெண்ணை, கூட்டாளி ஆகப்
    பழகு பயல்கள் பதுங்க, -அழுத,
    விழியோடன்(று), ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
    பழியோடு நிற்கும், பரம்….(44)

    பரம சுகமான, பாற்கடல் நீங்கி,
    நரனாய்ப் பிறந்த, பரமே -ஒருநாள்,
    முலைப்பால் விஷத்தில், தலைகால் புரியாத்,
    திளைப்பால் கருத்தாயோ, தீய்ந்து….(45)

    ———————————————————————————————————

     

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • வென்றிடும் பாரதம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    031810_1447_narendradam1 (1)

    16 வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா நிறைவடைந்து, மக்கள் பெருவாரியாக வாக்களித்து நிலையான ஆட்சிக்குத் தோதான ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனிப்பெருங் கட்சியாகத் தலை நிமிர்ந்து ஆட்சியைப் பிடித்து, பிரதமர் இருக்கையை அலங்கரிக்கப்போகும் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையில், எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதொரு பிரதமராகச் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது நம் இந்திய மக்களுக்கிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலையானதொரு ஆட்சியை அமைத்து சரித்திரம் படைக்கும் பி.ஜே.பி. அரசு போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்யானப் பிரச்சாரத்திற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசும், கட்சியும் இணைந்து மிகச் சிறந்ததொரு ஆட்சியை வழங்கமுடியும் என்று நிரூபிக்கும் அந்த பொற்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம். கட்சியின் வண்ணம் காவியாக இருப்பினும் எண்ணம் பசுமையாக வளமான வாழ்க்கையை அளிக்கப்போவதாக இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது.

    ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒரே இந்தியா, ஒரே சட்டம், என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற நிலை இருந்தால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட சட்டங்கள் தேவையில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தமிழன் காஷ்மீரிலோ அல்லது இமாசலப் பிரதேசத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று குடியேறி தனி மனித சுதந்திரத்திற்குப் பங்கம் வாராத நிலையை எட்டக்கூடிய உரிமையைப் பெற வேண்டும். 370 வது சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போல பிற்படுத்தப்பட்ட மாநிலங்களும் முதல்நிலை மாநிலங்களாக மாறும் வகையில் தெளிவான அணுகு முறைகளும், அதற்கு ஏற்றாற்போலத் திட்டங்களும் அமைத்தால், இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சத்தியம். அதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் கொட்டிக்கிடப்பதும் மறுக்க இயலாத உண்மை.

    கடுமையாக உழைக்கக்கூடிய மக்களும், சரியான வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் எந்த குழப்பமும் இல்லாமல், எவருக்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லாமல் தனிப்பெரும் சக்தியாக, தன்னிச்சையாக நல்ல ஆட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் உயர்திரு மோதி அவர்களின் சரியான வழிகாட்டுதலால் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்று நம்பும் காலம் வந்துவிட்டது. சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதும், சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியதும் போன்ற மிகப்பெரும் பொறுப்புகள் அவசரகால நடவடிக்கைகளாகக் காத்துக்கிடக்கிறது.

    சோசலிசம் என்றால் அனைவரும் ஏழையாவது அல்ல, அனைவரும் வளமாக வாழ்வது என்பதை நிரூபிக்கப்போகும் அரசை வாழ்த்தி வரவேற்போம்! அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆய்வகங்களைப் பயன்படுத்தும் உரிமை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். 30 கோடி மக்கள் முகமுடையாய் என்று பாரதி பாடினான். இன்று 130 கோடி மக்களுக்கும் ஒரே தலைவராக இருந்து வழி நடத்தப்போகும் உயர்திரு மோதி அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்போம்! வெல்க பாரதம்.

    படத்திற்கு நன்றி:

    Narendra Damodardas Modi: The man who gets “famous” for EVERYTHING he does …

    Share
  • 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது

     Moon Colony Model -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
    கால் வைத்து
    நாற்பது ஆண்டுகள் கடந்து
    நாசா மீண்டும்
    விண்ணுளவுப் பயணம் துவங்கும்
    வெண்ணிலவில் குடியேற !
    நுண்ணிய ஏழு கருவிகள்
    மண்தளப் பரப்பை விரிவாய்ப்
    பதிவு செய்யும்.
    துருவப் பகுதியில்
    ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
    தாக்கிடச் செய்து
    தளத்தில் குழி பறித்து
    தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்
    மண்ணுளவு செய்யும் !
    வெண்ணிலவில் குடியேறத்
    விண்வெளித் திட்டமிட்டுள்ளது ரஷ்யா  !
    நிலவில் ஓய்வெடுத்து
    நிரந்தர ஆய்வுகள் செய ஏதுவாகும் !
    செவ்வாய்க் கோள்
    செல்லும் விமானி கட்குத்
    தங்குமிடம் காண, நாசா
    மீண்டும் நிலாப் பயணம் செய்வது
    நீண்ட காலத் திட்டம் !

    ++++++++++++

    Moon Russian Colony

    2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது.  நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும்.  மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும்,  நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப்  பயண முயற்சி செய்யவும்,  நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

    டெமிட்ரி  ரோகோஸின்,  ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர்.  [ஏப்ரல் 11, 2014]

    அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony].   ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது.  ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது.  நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.

    ஐவன்  மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]

     

    Moon Colony Extension

    Moon Research Colony

    நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார்  கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்டத் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது.   அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள்  அம்முறையில் அமைக்கப் படுகின்றன.

    ஆன்ரே  லொலின் [Russian Academy of Cosmonautics Member]  

    நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள் 

    1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து  அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன.  1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ்  என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை”   [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார்.  ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.

    Moon Camp ground

    இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார்.  1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது.   அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன.   பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார்.  ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார்.  1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.

    jay

    நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன.  1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன.  2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார்.   அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது.   ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

    “நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

    Fig 1 Lunar Reconaissancs Mission

    “நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன.  தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும்.  அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும்.  அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.

    டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)

    “நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி.  அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”

    கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)

    Fig 1A Atlas Rocket Launch

    “நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)

    “நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது !  ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”

    குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]

     

    நிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்

    2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது.  அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது.  நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும்.  அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன.  நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது.  இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும்.  முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !

    Fig 1B Second Stage Centaur Rocket

    சூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது.  பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும்,  ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது;  இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது.  விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது.  ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.

    புதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்

    1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது.  1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன.  ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே ! அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன !  2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

    Fig 1E NASA Lunar Satellite

    LRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும்.  “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார்.  நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன,  மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன.  LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.

    LCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்

    LRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும்.  LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket).  அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft).  2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.

    Fig 2 LCROSS to Impact on Moon

    சென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.  அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும்.  சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும்.  சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும்.  அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி.  முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.

    நிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்

    LRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :

    1.  (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) :  கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.

    விண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம்.  மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது.  அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.

    2.  (DLRE) (Diviner Lunar Radiometer Experiment) : வெப்ப எதிரொளிப்புச் சோதனைக் கருவி

    Fig 6 LRO Instruments

    நிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.

    இது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும்.  இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.

    3.  (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.

    புறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி.  துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி.  நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.

    4.  (LEND) (Lunar Exploration Neutron Detector) : நிலவுத் தேடலில் நியூட்ரான் உளவும் கருவி.

    நிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது.  சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி.  இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.

    5.  (LOLA) (Lunar Orbiter Laser Altimeter) : நிலவுத் தேர் இறங்கும் பகுதிகளின் சரிவை (Landing Site Slopes) அளக்கும் கருவி.

    தளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும்.  நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி.  எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.

    6.  (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) :  நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.

    ஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)

    7.  (Mini-RF) (Miniature Radio Frequency) (Technology Demonstration)  சிறு வடிவு ரேடியோ அதிர்வலைக் காமிரா.

    துருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும்.  பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.

    Fig 3 LRO & LCROSS Together

    நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

    முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே ! அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..

    ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

    Fig 4 LRO & LCROSS in Lunar Orbits

    நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!

    ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள்.  பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள்!  நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள்.  நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும்.  நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர்.  நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது.  நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது.  அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும்.  நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும்.  நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது.  பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது.  அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

    Fig 5 Future Plan to the Moon

    21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !

    1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

    LCROSS Impacting the Moon

    ************************

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; Time Magazine.

    1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
    2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
    3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
    3 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811271&format=html (NASA’s Moon Trip)
    3 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603311&format=html (NASA’s Trip to Moon Again)
    4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
    5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
    6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
    7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
    8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
    9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
    10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
    11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
    12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
    13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)

    14 http://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon  [May 6, 2014]

    15. http://www.moondaily.com/reports/Russia_to_begin_Moon_colonization_in_2030_999.html  [May 12, 2014]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) May 17​, 2014.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 18, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. ஜெய.சந்திரசேகரன் அவர்கள்

    PP Chandra copy

    ‘மரபூர்’ ஜெய.சந்திரசேகரன் அவர்கள் ‘ரீச்’ சந்திரா’ என்ற பெயராலும் அறியப்படுபவர். ப்ளாஸ்டிக் மற்றும் தொழில்கள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர். அத்துடன் புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணிகள். இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் தூய குடிநீர்.

    தண்ணீர் …இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை. அதுவும் அதள பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தப்படாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதைப் பெரும்பான்மையானோர் அறியாமலே உட்கொள்வதால்  கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பலவகையான உடல் ஊனங்கள், சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

    • இதை எப்படி சரி செய்ய முடியும் ? மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?

    அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும் .

    • இது நடைமுறையில் சாத்தியமா? 

    சத்தியமாய் இல்லை.

    • பின் என்னதான் செய்ய முடியும்? 

    அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய தொழில் நுட்பமுள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி(water filter) வழங்கினால் முடியும்.

    • அட..இரண்டும் எப்படி முடியும் ? 

    முடியும் என சாதித்திருக்கிறார் இந்தத் தமிழர்…

    ஆம்..  புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார். ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில், ஒரு நாள் சம்பள விலையில் ஒரு குடிநீர் வடி கட்டி.. ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத் தேவையில்லாத குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி … என்பதை இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.

    PP Chandra copy2

    இதுமட்டும் உலக எளிய மக்களைச் சென்றடைந்தால் ஒரு தமிழனின் தொண்டுள்ளம் இனம் காணப்படும்.. நாம் தமிழனாய்த் தலை நிமிர்ந்திடுவோம் .. தமிழினம் பெருமை கொள்ளும்.. அவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்பொழுதுதான் உலக ஊடகங்களின் பார்வையின் முன் வந்திருக்கிறது . ஆம் … ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் அரை இறுதிச் சுற்று வரையிலும் அவர் வந்துள்ளார்.

    அவர் இறுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறவும், சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரமான வாழ்வும் அனைவரையும் சென்றடையவும் அவருக்கு நமது வாக்குகள் தேவை. இங்கு நமது ஒவ்வொரு வாக்கும் மிகமிக முக்கியமானது. இது உலகச் சுகாதாரம் சார்ந்தது.

    திரு. சந்திரசேகரன் வெற்றிபெற கீழ் காணும் சுட்டிக்குச் சென்று வாக்களிக்கலாம், வாக்களிக்க இறுதி நாள் 19ஆம் தேதி மாலை 6 மணி.

    வாக்களிக்கும் முறை:
    1.http://socialventurechallenge.asia/vote/#top சுட்டியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும்

    2. பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ-மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.

    3. கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள்) கிளிக் செய்யவும்.

    [ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட்டு விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு மாறிவிட்டால் உங்கள் ஓட்டு விழுந்துவிட்டது என்று அர்த்தம். (An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)]

    4. இறுதி நாளுக்குள் திரு.சந்திரசேகரன் அவர்களது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள்.

    உலகச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை வடிவமைத்து அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • திருமால் திருப்புகழ் (86)

    கிரேசி மோகன்

    Krishna for today. Venugopal. Watercolour.  Keshav
    Krishna for today. Venugopal. Watercolour.
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Krishna for today Goverdhana series. Watercolour.  Keshav
    Krishna for today Goverdhana series. Watercolour.
    Keshav

     

    புதிரவன் போக்கு புலனவன் தாக்கு
    மதிரதம் மாயையில் மூழ்கக் -கதிரவன்
    போல்தோன்றிக் காரிருள் தோல்சீவிக் காத்திடும்
    மால்வண்ணம் யாமறியோ மே….(36)

    மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
    போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
    சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
    பக்திகர்ம ஞானவழிப் பேறு….(37)

    பேரைப் புகழைப் பலனை எதிர்பார்த்து
    நூறைக் கடந்தும்நீ நோகின்றாய் -பாரோர்
    பரிகசிக்கக் காட்டில் பிணமாகும் முன்பே
    அரிபசிக்(கு) ஆளாகி ஆடு….(38)

    ஆடு நனைய அழுத நரியாக
    வாடுவாய் நெஞ்சே வழியடைத்து -நாடகம்
    சோகமயம் ஆகும்முன் மேகநிற தேகனை
    ஆக விடாதிங்(கு) அழை….(39)

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….(40)

    ———————————————————————————————————————

    Share
  • Demise of Mr N Ramakrishnan

    Dear TLCS Members, Friends and Well Wishers,

    1. We wish to inform that Mr N Ramakrishnan, a life member of the Tamil Language and Cultural Society passed away peacefully on Thursday 15 May 2014 at about 6.30pm.

    2. MrRamakrishnan was working full time with Little India Shopkeepers & Heritage Association?s Secretariat (LISHA) and was closely associated with the Indian Restaurant Association, Singapore (IRAS).

    3. His wake will be held at Blk 148, Tampines Ave 5, #06-268, Singapore 521148 on Saturday, 17 May 2014 from 5 pm onwards.

    4. The cortege will leave his home on Sunday 18 May 2014 at 4 pm. It will proceed first to Little India Arcade and thereafter to Hall 2, Mandai Crematorium. Cremation will be at 6 pm.

    5. On behalf of the Tamil Language and Cultural Society and its members,
    I wish to express our sympathy and heartfelt condolences to the family of the late Mr N Ramakrishnan.

    6. May his soul rest in peace.

    With deepest regards,

    M Harikrishnan
    President
    Tamil Language and Cultural Society

    Share