கே. ரவி

images

காத்துக்கும் பூமிக்கும் கல்யாணமாம் – இது
காணக் கிடைக்காத வைபோகமாம்
பூத்துக் குலுங்குமலர் தோட்டங்களாம் – அங்குப்
பூவெல்லாம் பொறிவண்டுக் கூட்டங்களாம்
(காத்துக்கும்)

தோளுக்குப் பட்டாடை அருவிகளாம்
தொங்கட்டான் போல்சிறு குருவிகளாம்
காலுக்கு நீரோடை கொலுசுகளாம் – அலங்
காரத்தில் பலநூறு தினுசுகளாம்
(காத்துக்கும்)

மேகங்களே நல்ல மேளங்களாம்
மின்னல்கள் கூத்தாடத் தாளங்களாம்
வானத்துத் தேவர்கள் ஆனந்தத் தோடுவந்து
பூமாரி பொழிகின்ற சாரல்களாம்
(காத்துக்கும்)

சிற்றெறும்புக் கூட்டங்கள் ஊர்வலமாம் – புதுச்
சீர்கொண்டு போகின்ற சிங்காரமாம்
குட்டைக ளில்தவளைக் கச்சேரியாம்
குண்டுமல்லிக் கூட்டங்கள் ரசிகர்களாம்
(காத்துக்கும்)

நாட்டுக்கு நாடிது நடப்பதுண்டாம் – எழில்
நாடகமாய் நெஞ்சைக் கவர்வதுண்டாம்
பாட்டுக்குள் மட்டும்கண் திறப்பதுண்டாம் – அந்தப்
பார்வைக்குத் தானிது புலப்படுமாம்
(காத்துக்கும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.