இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
மே 18, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …
இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு
திரு. ஜெய.சந்திரசேகரன் அவர்கள்
‘மரபூர்’ ஜெய.சந்திரசேகரன் அவர்கள் ‘ரீச்’ சந்திரா’ என்ற பெயராலும் அறியப்படுபவர். ப்ளாஸ்டிக் மற்றும் தொழில்கள் உற்பத்தி ஆலோசகர் பணியில் இருப்பவர். அத்துடன் புராதனக் கோவில்களில் உழவாரப்பணியைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவர். புராதனச் சின்னங்களின் புனரமைப்பு இவரின் விருப்பப் பணிகள். இவரின் தற்போதைய தீவிர முழக்கம்: எல்லோர்க்கும் வீட்டுக்கு வீடு கழிப்பறை மற்றும் தூய குடிநீர்.
தண்ணீர் …இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை. அதுவும் அதள பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தப்படாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதைப் பெரும்பான்மையானோர் அறியாமலே உட்கொள்வதால் கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பலவகையான உடல் ஊனங்கள், சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
- இதை எப்படி சரி செய்ய முடியும் ? மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?
அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த வேண்டும் .
- இது நடைமுறையில் சாத்தியமா?
சத்தியமாய் இல்லை.
- பின் என்னதான் செய்ய முடியும்?
அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய தொழில் நுட்பமுள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி(water filter) வழங்கினால் முடியும்.
- அட..இரண்டும் எப்படி முடியும் ?
முடியும் என சாதித்திருக்கிறார் இந்தத் தமிழர்…
ஆம்.. புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார். ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில், ஒரு நாள் சம்பள விலையில் ஒரு குடிநீர் வடி கட்டி.. ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத் தேவையில்லாத குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி … என்பதை இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.
இதுமட்டும் உலக எளிய மக்களைச் சென்றடைந்தால் ஒரு தமிழனின் தொண்டுள்ளம் இனம் காணப்படும்.. நாம் தமிழனாய்த் தலை நிமிர்ந்திடுவோம் .. தமிழினம் பெருமை கொள்ளும்.. அவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்பொழுதுதான் உலக ஊடகங்களின் பார்வையின் முன் வந்திருக்கிறது . ஆம் … ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் அரை இறுதிச் சுற்று வரையிலும் அவர் வந்துள்ளார்.
அவர் இறுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறவும், சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரமான வாழ்வும் அனைவரையும் சென்றடையவும் அவருக்கு நமது வாக்குகள் தேவை. இங்கு நமது ஒவ்வொரு வாக்கும் மிகமிக முக்கியமானது. இது உலகச் சுகாதாரம் சார்ந்தது.
திரு. சந்திரசேகரன் வெற்றிபெற கீழ் காணும் சுட்டிக்குச் சென்று வாக்களிக்கலாம், வாக்களிக்க இறுதி நாள் 19ஆம் தேதி மாலை 6 மணி.
வாக்களிக்கும் முறை:
1.http://socialventurechallenge.asia/vote/#top சுட்டியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும்2. பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ-மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.
3. கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள்) கிளிக் செய்யவும்.
[ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட்டு விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு மாறிவிட்டால் உங்கள் ஓட்டு விழுந்துவிட்டது என்று அர்த்தம். (An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)]
4. இறுதி நாளுக்குள் திரு.சந்திரசேகரன் அவர்களது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள்.
உலகச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய /எளிய தொழில் நுட்பத்தில் வடிகட்டி ஒன்றினை வடிவமைத்து அரையிறுதிச் சுற்றில் வெற்றிபெற்ற ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
திரு சந்திரசேகரின் கண்டுபிடிப்பு உண்மையாகவே ஏழைகளுக்கு வரப்பிரசாதம் தான். மின்சார பில் ஏறிக்கொண்டிருக்கும் போது மின்சாரமே இல்லாமல் நீரை வடிக்கட்டுதல் மிகவும் வரவேற்கப்படவேண்டியதுதான் அன்பு துரையை மனமார பாராட்டுகிறேன் .வாழ்த்துகள்
அறிஞர்களுக்கு தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னை உலகிற்கு வரவைத்தவன் எனக்கு வைத்த பணி எத்தனையோ, அறியேன். செய்த பணியும் அவன் பணி. செய்யப்போவதும் அவன் பணி. வல்லமையாளர் – நீங்கள் எல்லாரும்தான். கோயில் கதைகள் வல்லமையில் எழுத முற்பட்டு, பவளா அக்கா உற்சாகப்படுத்தினார். இந்த குடிநீர் வடிகட்டி செய்யும் முயற்சியில் 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அதோடு ரீச் பவுண்டேஷன் பணிகள். திவ்ய தேசமான திருவெள்ளியங்குடி புனரமைப்பு, காட்டுபுத்தூரில் சங்க கால எச்சங்களை கண்டறிய அகழ்வாராய்வு, நடுவில் ஒருசில கோயில் புனரமைப்புகளுக்கான ஆயத்த பணிகள், கல்வெட்டு வகுப்புகள் என்று காலம் நம்மை சரியாக பயன்படுத்துகிறது. இந்த குடிநீர் வடிகட்டியை ஏழை மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் என்னோடு தொடர்பு கொள்ளலாம். கிராமங்களுக்கும், நடுத்தர வர்க்கம் மக்களுக்கும், பட்ஜெட் குடும்பங்களுக்கும் இவற்றை கொண்டு சேர்ப்பதே என் பணி.
இதற்கு இவ்வளவு பெரிய தந்த வல்லமை குழுவிற்கு நன்றி. என் பணிச்சுமை இதனால் கூடுகிறது. ஆனால் .சுகமான சுமை!
வணக்கத்துடன்
சந்திரா