Featuredதலையங்கம்

வென்றிடும் பாரதம்!

பவள சங்கரி

தலையங்கம்

031810_1447_narendradam1 (1)

16 வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா நிறைவடைந்து, மக்கள் பெருவாரியாக வாக்களித்து நிலையான ஆட்சிக்குத் தோதான ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனிப்பெருங் கட்சியாகத் தலை நிமிர்ந்து ஆட்சியைப் பிடித்து, பிரதமர் இருக்கையை அலங்கரிக்கப்போகும் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையில், எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதொரு பிரதமராகச் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது நம் இந்திய மக்களுக்கிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலையானதொரு ஆட்சியை அமைத்து சரித்திரம் படைக்கும் பி.ஜே.பி. அரசு போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்யானப் பிரச்சாரத்திற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசும், கட்சியும் இணைந்து மிகச் சிறந்ததொரு ஆட்சியை வழங்கமுடியும் என்று நிரூபிக்கும் அந்த பொற்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம். கட்சியின் வண்ணம் காவியாக இருப்பினும் எண்ணம் பசுமையாக வளமான வாழ்க்கையை அளிக்கப்போவதாக இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒரே இந்தியா, ஒரே சட்டம், என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற நிலை இருந்தால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட சட்டங்கள் தேவையில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தமிழன் காஷ்மீரிலோ அல்லது இமாசலப் பிரதேசத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று குடியேறி தனி மனித சுதந்திரத்திற்குப் பங்கம் வாராத நிலையை எட்டக்கூடிய உரிமையைப் பெற வேண்டும். 370 வது சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போல பிற்படுத்தப்பட்ட மாநிலங்களும் முதல்நிலை மாநிலங்களாக மாறும் வகையில் தெளிவான அணுகு முறைகளும், அதற்கு ஏற்றாற்போலத் திட்டங்களும் அமைத்தால், இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சத்தியம். அதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் கொட்டிக்கிடப்பதும் மறுக்க இயலாத உண்மை.

கடுமையாக உழைக்கக்கூடிய மக்களும், சரியான வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் எந்த குழப்பமும் இல்லாமல், எவருக்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லாமல் தனிப்பெரும் சக்தியாக, தன்னிச்சையாக நல்ல ஆட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் உயர்திரு மோதி அவர்களின் சரியான வழிகாட்டுதலால் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்று நம்பும் காலம் வந்துவிட்டது. சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதும், சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியதும் போன்ற மிகப்பெரும் பொறுப்புகள் அவசரகால நடவடிக்கைகளாகக் காத்துக்கிடக்கிறது.

சோசலிசம் என்றால் அனைவரும் ஏழையாவது அல்ல, அனைவரும் வளமாக வாழ்வது என்பதை நிரூபிக்கப்போகும் அரசை வாழ்த்தி வரவேற்போம்! அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆய்வகங்களைப் பயன்படுத்தும் உரிமை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். 30 கோடி மக்கள் முகமுடையாய் என்று பாரதி பாடினான். இன்று 130 கோடி மக்களுக்கும் ஒரே தலைவராக இருந்து வழி நடத்தப்போகும் உயர்திரு மோதி அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்போம்! வெல்க பாரதம்.

படத்திற்கு நன்றி:

Narendra Damodardas Modi: The man who gets “famous” for EVERYTHING he does …

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

     திரு மோடி அவர்களின் வெற்றியில் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இவர் நதிகளை தேசியமாக்கி கங்கையிலிருந்து  காவேரிவரை   நீர் ஓட எவ்வளவு நன்றாக இருக்கும் . தண்ணீர் தட்டுப்பாடே இருக்காதே. புதிய பிரதமந்திரிக்கு என் வாழ்த்துகள் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க