Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (109)

     

    – சக்தி சக்திதாசன்
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    அதற்குள் மற்றொரு வாரம் வந்து விட்டதா? கால ஓட்டத்தின் வேகம் கணிக்க முடியாதபடி இருக்கிறது. இயந்திர வாழ்க்கை போல எமது வாழ்க்கை எந்த வித காரணங்களுக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது..

    உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கணிக்கப்படும் பாரத தேசத்தின் தேர்தல் மிகவும் ஒழுங்கான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

    தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியதற்கான சான்றாகத் தென்படுகிறது.

    நான் எந்தவொரு அரசியல் சாயமும் அற்றவன். யார் பதவிக்கு வந்தாலும் நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், சராசரி மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான விழுமியங்களும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று விரும்புபவன்.

    உலகில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதே யாதார்த்தமான கருத்து. ஒரு நாட்டில் சமத்துவமான ஆட்சி நிலவ வேண்டுமெனில் அந்நாட்டின் அரசாட்சியில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம்.

    ஓரே கட்சி பலவருடங்கள் ஆட்சியில் நீடித்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த செயலாக இருக்காது.

    இக்காலகட்டத்தில் இந்திய மக்கள் முற்றுமுழுதாக தேசியரீதியில் ஒரு மாற்றத்தை வேண்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

    அரசியல் கட்சிகள் அதுவும் தேசியரீதியிலான அரசாங்கத்தில் பிரதமராக அல்லது நாட்டின் தலைவராக வருபவர்கள் அத்தகையதோர் குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அன்றி வாழ்க்கை வசதியில் மேல்நிலையில் உள்ளவர்களாகவோ இருக்கும் நிலையைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஆனால் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உழைப்பினால் உயர்ந்து வந்தவர் என்பதனால் நாட்டின் அடிமட்ட மக்களின் வாழ்வின் சுபீட்சத்திற்கு வழிவகுப்பார் எனும் நம்பிக்கை ஒளி சிறுகீறலாக உள்ளத்தின் ஓரத்தில் எழத்தான் செய்கிறது.

    இன்றைய இங்கிலாந்து நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உற்று நோக்கினால் அவர்கள் அனைவரும் வாழ்வில் மேல்நிலையிருப்பவர்களே.

    இங்கிலாந்தின் முக்கியமான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளின் தலைவர்களான பிரதமர் டேவிட் கமரன், எட் மில்லிபாண்ட், நிக் கிளேஹ் என்பவர்களின் வாழ்வாதாரங்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கை வசதிகளின் அளவுக்கோட்டில் மேல்நிலையிலேயே உள்ளார்கள்.

    ஊடகங்களில் இத்தலைவர்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடிவு காணப்போகிறோம் என்று கூறி அதற்கான வழிமுறைகளைக் கொள்கைப்பிரகடனங்களாக வெளியிடும் போது இவர்களுக்கு எப்படி நமது வாழ்வின் தேவைகளின் அவசியம் புரியப் போகிறது என்று சாதாரண மக்கள் அங்கலாய்ப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

    கடந்தவாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் இரண்டு இடங்களில் சரியான வகையில் மட்டிக் கொண்டார். வானொலிப் பெட்டியில் நீங்கள் சாதாரண மக்களின் அன்றாடச் சிக்கல்களை நன்கு அறிந்ததாகச் சொல்கிறீர்களே உங்களுடைய குடும்பத்தின் வாராந்த செலவு என்ன என்று கேட்கப்பட்டபோது 80 ஸ்ரேலிங் பவுண்ஸ் என்று குறிப்பிட்டு விட்டார் போங்கள் !

    போச்சுடா ? கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் எப்படி வாராந்த 80 பவுண்ஸ் செலவில் வாழ்லாம் என்று நாலா திக்குகளிலும் இருந்து கருத்துக்கள் எகிறிப் பாய்கின்றன.

    அது மட்டுமின்றி அடுத்த தேர்தலில் தாம் அரசமைக்க வேண்டுமானல் கன்சர்வேடிவ் கட்சி வசமிருக்கும் தொகுதிகளில் 58 ஜக் கைப்பற்ற வேண்டிய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் 58 தொகுதிகளில் ஒன்றுக்கு விஜயம் செய்திருந்தார்.

    அவ்விஜயத்தின் போது அவரைப் பேட்டி கண்ட ஊடகவியலாளர் அப்பகுதியின் லேபர் கட்சியின் அமைப்பாளரின் செயற்பாடுகளைப் பற்றி வினவும் போது, எட் மில்லிபாண்ட் அவ்வமைப்பாளரின் பெயரைக் கூறி அவர் நகராட்ச்சியின் தலைவராக நன்றாகச் செயற்படுவதாகக் கூறினார். அங்கேதான் மற்றொரு சர்ச்சை லேபர் கட்சியின் தலைவருக்கு எழுந்தது,

    ஆமாம், அவ்வூடகவியளாளர் என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள் இப்பகுதி நகராட்ச்சியில் அதிகாரத்திலிருப்பது கன்சர்வேடிவ் கட்சி, பின் எப்படி உங்கள் கட்சி அமைப்பாளர் நகராட்ச்சிச் சபையில் தலைவராகச் செயற்பட முடியும் ? என்றாரே பார்க்கலாம்!

    நாட்டின் எதிர்க்கட்சியின் தலைவர், நாட்டின் அடுத்த பிரதமர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருப்பவர் தமது கட்சி வெற்றியடைய வேண்டிய ஒரு தொகுதியின் பிரச்சாரத்திற்காக வரும்போது அத்தொகுதியின் நகரசபை ஆட்சி அதிகாரம் யார் கையிலிடுக்கிறது என்பது கூடத் தெரியாமல் வருவதா?

    இவரா எமது நாட்டை வழிநடத்தப் போகிறார்? எனும் கேள்வி மிகவும் பலத்த சத்தத்துடன் பல ஊடகங்களில் குறிப்பாக கன்சர்வேடிவ் கட்சிக்குச் சார்பான ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

    பன்னாட்டு அரசியல் இன்று பல மாற்றங்களுக்குள்ளாகி மீண்டும் ஒரு அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    மக்களுக்காக அரசியல்வாதிகளா? இல்லை அரசியல்வாதிகளுக்காக மக்களா? எனும் கேள்வி இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

    modi_emoஆனால் இந்தியாவின் இன்றைய பிரதமர் தெரிவு மிகவும் நெஞ்சை நெகிழ்வூட்டும் விதமாக அமைந்துள்ளது. முதற்தடவையாக ஒரு பிரதமர் நாடளுமன்றத்தினுள் காலடி வைக்கும் போது தலை வணங்கி விட்டுச் சென்றதைப் பார்க்கும் போது பாராளுமன்ற அரசியலில் அவர் வைத்திருக்கும் அலாதியான மரியாதை மனதுக்குத் தெம்பூட்டுகிறது.

    அவர் பேசும்போது மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசிக் கண்ணீருடன் இந்திய தேசத்தைத் தன் தாயாகவும் இந்திய மக்களைத் தன் சகோதரர்களாகவும் கருதிப் பேசியது மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் உலகெங்கும் உள்ள ஜனநாயக அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்திருந்தது.

    மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் பதவியேற்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவரது திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் மற்றைய நாட்டு அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவார் என எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    படம் உதவி: http://amritasabat.blogspot.com/   –    http://www.coastaldigest.com/images/stories/pictures/May2014/May15/modi_emo.jpg

    Share
  • வான்மதி

    — சங்கர் சுப்ரமணியன்

    young-romantic-indian-couple“நன்கு யோசித்து சொல் வான்மதி… இது நம்முடைய கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம். உன்னுடைய பக்கமிருப்பு என்னுள் கிளர்ந்தெழ செய்யும் உணர்வுகளையெல்லாம் என் வாழ்நாளில் உணரவே முடியாமல் போய் விடுமோ என்றேதான் நான் கவலை கொள்கிறேன். அண்ணன், அம்மா, அப்பா இப்படியான உறவுகளிலிருந்து நீ எப்படி… விடுபட்டு வெளிவந்து விடுவாய் என்று கவலைகொள்கிறாய் . உன் கவலையும் எண்ணமும் எனக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றுகிறது . முதலில் உன்னை புரிந்து கொள். உனக்கே நீ செய்வது சரியென்று தோன்றுகிறதா ..நம்முடைய பழக்கமெல்லாம் பொய்யாகித்தான் போகணுமா… நன்றாக யோசித்துகொள். மறுமுறை எடுத்து கூற நான் உன் பக்கமில்லாமல் போகலாம்…”

    கவலையும் கோபமும் கலந்து அவன் நிற்க . அவள் வார்த்தைகளற்று எதிர் நின்றாள். அவள் வீடும் இவனுமென அவளுடைய மனம் முடிவெடுக்க முடியாமல் தவித்தது. யார் பேச்சு நியாயம் என்பதை எப்படி யோசித்தாலும் அவிழ்க்க முடியாத முடிச்சாக இறுகிக் கொண்டே போனது அவளுக்கள். சார்புதன்மை கொண்ட பெண்னினமே இப்படித்தானோ எனறு அவள் இனம் மேலே வெறுப்பாக உணர்ந்தாள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவும் இல்லையோ. கடவுள் எதற்காக எதிர்மறையான சந்தர்ப்பங்களை வைத்து வாழ்க்கையை சோதிக்கிறான் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது. இலேசான தலையசைப்பும் முகச்சுழிப்புமாக அவன் எழுந்து நடந்தான் . சுற்றியிருந்த வயல்வெளிக்கு நடுவில் அமந்திருந்த அந்த அழகு குன்றின் மேற்புறம் வளர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் நிழலில் இருவர் மட்டும் தனித்திருந்தனர்.

    “ஒவ்வொருமுறை பிரச்சனைகள் வரும்பொழுதெல்லாம் உன்னை உன் மனதிற்குள் முடிக்கொள்ளவே முயலுகிறாய். நானொருவன் உனக்காக எதுவும் செய்ய காத்திருக்கிறேன் என்ற உணர்வு ஏன் உனக்கு வராமலே போகிறது வான்மதி. இதுவரை நடந்துமுடிந்த அத்தனை பிரச்சனைகளும் நான் உன்னை மீட்டு வரும் எல்லைக்குள் இருந்தது. ஆனால் நீ இப்பொழுது எடுக்கும் இந்த முடிவு என்னையே எல்லை கடந்து தூரதள்ளிவிடும். சரியான சிந்தனைகளில் நாம் தீர்மானிக்கும் கணங்களே நம்முடைய வாழ்க்கையின் முன்னிருந்து நம்மை வாழ்தலுக்கு அழைத்து செல்வதாகத்தான் நான் நம்புகிறேன். உறவுகள் எப்பொழுதுமே நம்மை முழுமையாக வெறுத்து தள்ளுவதில்லை. காலம் முன்னிருந்து காயங்களை ஆற்றி சேர்த்து வைத்துவிடும். நாம்தான் அவர்களுக்கான தியாகம் என்பதான கற்பனையான எண்ணத்தில் சுயம் இழக்கிறோம்”

    அவளுடைய இழப்பு என்பது மீட்டெடுக்க முடியாத மரணம் என்பதாகத்தான் அவன் உணர்ந்தான். அவன் மனம் சமாதானப்படுத்த ஆயிரம்ஆயிரமாக வார்த்தைகளை கோர்த்து காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இவள் இல்லையென்றானால் இனி இல்லவே இல்லை என்பதை எண்ணும் பொழுதே இதயம் நடுங்கியது. ஆனால் அவளோ தடுக்க முடியாத உள்ளக்குமுறலில் உடைந்து அழுதாள் . அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கரைபுரண்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

    “வான்மதி உன்னை அழவைக்க வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை . உன்னை நன்கு உணர்ந்ததாலே பேசுகிறேன். முடிவுகளை உன் குடும்பத்திற்கென்று எடுக்காதே. அவர்களை சமாதானப்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி கொள்ளலாம். ஆனால் சந்தரப்பங்களை இழந்தபின் வருத்தத்தில் வாழ்க்கை கஷ்டப்படும். நாளை நான் ஊருக்கு கிளம்புகிறேன் ஒனறிரண்டு மாதங்கள்தான் நான் இந்தியாவிலே இருக்கும் நிலை ஏற்படலாம். ஆகையால் கடைசியாக நான் நாளை ஊருக்கு செல்லும் பேருந்தில் உனக்கும் என் பக்கத்து இருக்கையை எடுத்திருப்பேன். நன்றாக யோசித்து முடிவெடு வான்மதி . உன் முடிவு எதுவென்றாலும் எனக்கு பூரண சம்மதமே. என்னை கஷ்டப்படுத்துவதாக நினைத்து உன்னை வருத்தி கொள்ளாதே. நம் வாழ்க்கை பயணங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.” என்றபடி பக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இறுக்கி பிடித்து கொண்டான். இப்படியான இருப்போடு காலம் கடந்து வாழ்ககை இங்கேயே முடிந்து விடாதா என்ற ஏக்கமே அவள் நெஞ்சில் நிறைந்தது.

    “ஏய் வன்மதி எப்படி இருக்கேடி” குரல் கேட்டு திரும்பி பார்க்க தோழி நின்றிருந்தாள்

    “என்னடி இவ்வளவு லேட்டா வர்ற . ஊர்விட்டு போய்விட்டா பழகியதெல்லாம் மறந்திருவியோ” புன்னகையுடனும் பார்த்த சநதோஷமாகவும் ஒடிச்சென்று தோழியின் கை படித்து உரிமையுடன் வான்மதி கேட்டாள்

    “கொஞ்சம் லேட்டாயிருச்சுடி. அதுக்கே இப்படியா… எங்க யாரையும் கானோம். உன்னோட வீட்டுக்காரரும் இல்ல” என்றபடி புன்னகையுடன் தோழி அவள் பக்கமாக வந்தாள். “அப்பா எல்லாரையும் அழைச்சுட்டு டவுனுக்கு போயிருக்கார். நான்தான் இன்னைக்கு ஊரச் சுத்திட்டு நாளைக்கு சேர்ந்துகிறேன்னு சொன்னேன். அப்பா சிரிச்சுக்கிட்டே உன்னை வரச்சொல்லட்டான்னு கேட்டாரு. அதுக்குதான் நான் போகறத தள்ளிபோடுறேன்னு அவருக்கு புரிஞ்சிரிச்சுன்னு தெரிஞ்சு நானும் சிரிச்சுட்டேன்” என்றாள் புன்னகையுடன்

    இருவரும் பக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். இருபக்கமும் திறந்த அவர்கள் மனது வார்த்தைகளை அள்ளிக்கொட்டியது சரளமாக. ஆடி ஒடி அலுத்தபடி, ஊருக்கு ஒதுக்குபுறம் ஆலமரத்தடியில் ஒத்தையில் தனித்திருந்த பிள்ளையாரின் பக்கமாக இருவரும் அமர்ந்து காரணமின்றி சிரித்ததில் ஆரம்பித்த பேச்சு, தட்டாம் பூச்சி பிடிக்க மார்க்குச்சியை வைத்துக்கொண்டு தெருவெங்கும் சேர்ந்து திரிந்தும், ஒன்றுகூட கிடைக்காமல் அழுதபடி வீடு வர அண்ணன் இருவருக்குமாக பிடித்துகொடுத்த தட்டாம் பூச்சியுடன் நாள் முழுவதும் வளையாடிக் களித்தது, வம்பு பேசும் பையன்களிடம் எனக்காக அவள் இட்ட சண்டை. வெளிநாட்டிலிருந்து வந்த அப்பா கொண்டு வந்ததில் அவளுக்கு பிடித்ததென மறைத்து எடுத்து வந்து கொடுத்தது. அம்மாவிடம் கூட பேச முடியாத இளமையின் இரகசியங்களை பரிமாறிக்கொண்டது என எல்லாமுமாக கடந்த பேச்சு அவனிடம் வந்தது.

    “என்னடி அவனை மறந்துட்டேல்ல” என்று தோழி மெதுவாக கேட்டதும் அவள் கண்களில் வேகமாக கண்ணீர் திரையிட…

    “ஏய்…இதுக்குதான் அத பேசவே வேண்டாம்னுதான் இருந்தேன். ஸாரிடி..” தோழி வருத்தத்துடன் அவளை சமாதானப்படுத்த முயல…

    “என்ன சொல்லனே தெரியல… என்னால அவன் நினைப்பு இல்லாம ஒரு நாள் கூட இருக்கவே முடியலடி… அவனுக்கு என்னை பத்தி சரியா தெரிஞ்சிருக்கு . எனக்குதான் என்னையே தெரியல….நல்லா தூங்கிகிட்டு இருக்கிற நட்ட நடு ராத்தரியில அவன் பக்கத்தில உட்கார்ந்து தலைகோதி விடுறமாதிரி இருக்க.. சடக்குன்னு தூக்கத்திலருந்து விழிச்சா…அப்பறம் மனசு பூரா அவன் நினப்பு புகுந்துகிட்டு இராப்பூரா தூக்கமே வரமாடக்குதிடி.. எப்பவாவது என்னோட புருஷன் எந்திரிச்சு பார்த்தா …ஒன்னுமில்லைங்க வீட்டு நினைப்புன்னு சொல்லி சமாளிக்கிறேன். அவன என்னால மறக்க முடியும்னு தோனலடி . நினப்பு ஒருபக்கம் நிசம் ஒருபக்கம்னு என்னைய இரண்டா சாமி பிரிச்சு கொடும படுத்துற மாதிரு இருக்கு. எதுக்கு இப்படி பொய்யா வாழணும் பேசாம எதையாவது குடிச்சிட்டு செத்து போய்ரலாம்னு கூட இருக்கும். ஆனா இந்த மனுஷன் என்ன தப்பு செஞ்சுதுன்னு என் புருஷனுக்காக வாழுறேன்.”

    “ஏய் என்னடி இது காலம்னு ஒன்னு இருக்கு கன்டிப்பா அது நம்மை மாத்திடும். நீ வீனாப்போட்டு மனச கொளப்பிக்காத… நம்ம பொம்பள சென்மமே அடுத்தவளுங்களுக்காக வாழ்றதுக்குதானே..புருஷனையும் ஆத்தா வீட்டையும் நினைச்சு… அவன மறக்க முடியலன்னாலும் அவனோட நினைப்பை குறைச்சுக்கோடி….”

    “முடியும்னு தோனல.. ஆனா விடுறதுக்கு முடிவெடுத்த மாதிரி மனச கொண்ணுக்கவேண்டியதுதான். அவன எப்படியாவது என்னோட வாழ்க்கைல திரும்ப ஒருதடவை பரர்க்கனும்… பார்த்து உன் நினைப்ப என்னால என்னோட உசருல இருந்து பிரிக்கவே முடியலன்னு அவன்கிட்ட சொல்லி கதறி அழனும்னு தோனுதுடி.. ஊருக்கு ஏதும் வந்தானாடி. எப்படி இருக்கிறான்னு ஏதாச்சும் விஷயம் உனக்கு தெரியுமா…”

    “வந்தாண்டி.. வந்து இந்த ஊர்ல இருந்த சொத்த எல்லாம் அவனை வளரத்த பெரியப்பா பேருக்கே எழுதுக்கொடுத்துட்டான். ஊர்ல அவனோட சொந்தக்காரங்கெல்லாம் யோசிச்சு செய்ப்பான்னு சொன்னாங்க. என்னை பெரியப்பா குறையில்லாம புள்ளையாத்தான் வளர்த்தார். மாடசாமியை நான் என்னுடை சொந்த அண்ணனாத்தான் பார்க்கிறேன் . இதப்பத்தி வேற யாரும் பேசவேண்டாமனு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. சிங்கப்பூர்ல இப்ப வேலை பார்க்கிறானாம். கல்யாணம் இங்கேயே முடிச்சுக்கிலாம்னு அவனோட பெரியப்பா மூலம் பேசிப்பார்த்தாங்க. அவன் ஒரேடியா வேண்டாம்னு சொல்லிட்டானாம். அவனுக்கு மனசுக்கு பிடிச்சவங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டானாம்” என்றாள் தோழி

    “இப்படித்தான் தீர்மானமானிக்கிற பாதையிலதான் மனசு போகணும். மனசு பாதையை தேடக்கூடாதுன்னு எப்பவுமே அவன் சொல்லுவான்….” என்றாள்.

    “என்னடா இப்ப ஜென்னியோட அடிக்கடி உன்ன பார்க்கிறேன்” என்று புன்னகையுடன் கேட்ட நண்பனின் பக்கமாக திரும்பி பார்த்தான்.

    “ஜென்னிக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களும் விருப்பங்களும் நேர்பாதையில் பயணிப்பதில் எங்களுக்கே வியப்பாகத்தான் உள்ளது. வாழ்க்கையைத்தேடி நாம் ஓடுவதாகவும், அதுவே விரும்பி நம்மை நோக்கி வருவதுவுமான சுற்றுப் பயணத்தில் இது இரண்டாவதாக எனக்கு படுகிறது. என்னை சுற்றி வரும் இந்த வாழ்க்கையில் ஜென்னியோடு பயணித்தால் சுகமாக இருக்கும் என்பதாக தோன்றுகிறது. கடக்கும் எல்லா கணங்களையும் இருவருமாக சேர்ந்து கடக்க விரும்புகிறோம். அவளுடன் இருக்கும்பொழுது இவ்வுலகம் எனக்கு இன்னும் கொஞ்சம் அழகில் மெருகேறி மின்னுவதாக தோன்றுகிறது. ” என்றான்

    “ஜென்னியோட ப்ராஜக்ட் முடியப்போகுதே. அவள் விசாவை எக்ஸ்டென்ட் பண்ண போகிறாளா”

    “நாங்கள் இருவரும் இங்கிலாந்திலே குடியேறிவிடலாம் என்று தீர்மானித்துள்ளோம். அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இந்த ப்ராஜக்ட் முடிந்து அவள் திரும்ப இங்கிலாந்து செல்லுவதற்கு முன் எங்கள் திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் சேர்ந்தே அங்கு போய் என்னுடைய விசாவை மாற்றி கொள்ளலாம் என்றுள்ளோம்.”

    “ஜென்னியின் வீட்டில் பேசியாகிவிட்டதா…” நணபனின் கேள்விக்கு

    “சரியான தோழி என்பதாகவே மனத்தில் இருத்தியிருந்த ஜென்னியை, வாழ்க்கையும் ஜென்னியுடனே என்று நான் தீர்மானித்த கணம். அவளுடைய குடும்பத்தை சந்தித்தபின்தான் என்றால் அது ஒன்றும் மிகையில்லை. அப்பா அம்மா இருவருமாக இங்கு வந்திருந்த பொழுது அவள் என்னையும் அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அறிமுகமற்றவன் எனபதாக ஒரு கணம் கூட நான் உணரவில்லை அவர்களுடன் இருந்தபொழுது. எது செய்தாலும், எங்கு செல்ல முடிவெடுத்தாலும் ,எது பேச ஆரம்பித்தாலும் , எல்லோருக்கும் அது பிடித்தமானதாக இருக்கிறதா அல்லது எல்லோரும் அந்த மனநிலைக்கு மாறுவதற்கு உகந்ததான முடிவா என்று நன்கு ஆராய்ந்தபிறகே ஆரம்பிக்கிறார்கள். உடன் வருபவர்களே முக்கியம் என்பதாக யாருக்கேனும் உடன்படாத மனநிலை ஏற்பட்டால் அத்தனையும் கலைத்து வீடு திரும்ப எப்பொழுதும் தயார் நிலையலே அவர்களது செயலோ பயணமோ அமைகிறது. எதற்காக இப்படி என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டால் . என் அப்பாவின் எண்ணம் உடன் வாழும் மனிதனின் சந்தோஷத்திற்கு பின்தான் உலகம் என்பது என்றாள். அற்புதமான அந்த குடும்பத்து உறுப்பினர் என்பதில் நான் பெருமையாக உணர்கிறேன்” பேசி முடிக்கும்பொழுது பெருமிதம் கலந்த புன்னகை அவன் முகத்தில் வழ்ந்தது

    “சந்தோஷம்… ஊரில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டுமெனில் தெரியப்படுத்து. இங்கு செய்யப்படவேண்டிய ஏற்பாட்டுக்கு நான் பொறுப்பு” புன்னகையுடன் நண்பன் கூற

    “ஊருக்கு நான் எப்பொழுதும் ஒரு காட்சி பொருளாகவே இருக்கிறேன். பெற்றோர்களின் இழப்பு, பெரியப்பாவின் வளர்ப்பு, போராட்டமான வாழ்க்கை , இப்பொழுதோ சுகமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு வேலைக்காரன். எதிலும் அவர்களின் இருப்பு பார்வையாளர்கள் என்பதாகவே எனக்கு தோன்றும் . ஆகையால் அவர்களைப்பற்றி பெரியதாக எனக்கொன்றும் கவலையில்லை. பெரியப்பாவிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் கடந்தமுறை நான் ஊருக்கு செல்லும்போதே அவர் தளரந்திருந்தார். அதனால் இப்பொழுது நான் அனுப்பும் பணத்தில் அவருக்கென்றும் மருத்துவ செலவுக்கென்றும் தனித்தனியாக அனுப்புகிறேன். ஆகையால் அவராலும் வரமுடியாது. பெரியப்பா தவிர வீட்டில் என்னுடைய வளர்ச்சியல் பிடித்தவர்களும் இல்லை, வெறுத்தவர்களும் இல்லை. அவர்களுக்கு நான் அவர்கள் ஊரில் வாழ்ந்த ஒரு ஊர்க்காரன்” என்றான்

    “உன்னை தேடுபவர்கள் என்று யாருமே ஊரில் இல்லையா…” நணபன் மறுபடியுமாக கேட்க

    “அப்படி தேடுபவர்கள் யாரும் ஊரிலில்லை. எனக்கென்று இருந்த சொத்துகளையும் நான் பெரியப்பா பேருக்கு மாற்றி விட்டதில் என்னுடைய பெரியப்பா வீட்டில் அனைவருக்குமே சந்தோசம் . என்னை வளர்த்ததற்கு என்னால் அவர்களுக்கு இப்படியாக கைமாறு செய்யமுடிந்ததில் எனக்கும் சந்தோசம். வாழ்க்கை என்னும் இந்த நதிமூலத்தில் கடந்து வந்த பாதைகளை விட சேரும் கடல்தான் முக்கியம் என்று நான் நம்புகிறேன். பதித்து கடந்த தடங்களை திரும்பி பார்க்க எனக்கு எப்பொழுதுமே விருப்பமாய் இருப்பதில்லை. எனக்கு எதுவும் இழப்பென்று தோன்றவில்லை . அடுத்த முயற்சிக்கான உந்து சக்தியாகத்தான் என்னுடைய முந்தைய தோல்விகள் அமைவதாகவே எனக்கு எப்பொழுதும் தோன்றும்..”

    “டேய்… வான்மதி ஞாபகம் இல்லையா.. மறைக்கிறாயா…” லேசான கோபம் கலந்து வேகத்துடன் நணபன் கேட்க..

    “வான்மதி……” நீளபெருமுச்சு விட்டபடி பெயரை மெதுவாக உச்சரித்த அவன்

    “அவள் ஞாபங்களின் உயிர்ப்புகளை நான் மறக்கவோ , மறுக்கவோ அவசியம் இல்லை. அது அதுவாகவே என்னுள் கலந்திருக்கட்டும” அவனுடைய கண்களில் கண்ணீர் மெல்லிய திரையிட்டு அவன் விழி மறைத்தது.

    பட உதவி: http://www.123rf.com/

    Share
  • காதல் நாற்பது (6)

    தனித்த வாழ்வு வேண்டாம்!

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    jay

    என்னைவிட்டு விலகிச் செல்
    என்றாலும்
    உன் நிழலில்தான்
    நிற்க வேண்டும் என்று
    உணர்வு வரும் எனக்கு!

    என் முன்வாசலில் தனித்து நின்று
    ஏகாந்தியாய்
    இருக்க விருப்பமில்லை!
    ஆணை இடுவேன்,
    ஆத்மா நற்பயன் அடைய!

    சூரிய வெளிச்சத்தில் பிறருக்கு நான்
    கை அசைக்கப் போவதில்லை
    மௌனமாய்!

    என் உள்ளங்கை தன்னை
    உன்கரம் தொடுவதால் உண்டாகும்
    இன்ப உணர்வை
    இழந்திட மனமில்லை!

    உன் நெஞ்சு என்னிதயமுடன்
    பின்னிக் கொண்டு
    இரட்டைத் துடிப்பு எழும்போது
    பரந்த புவித் துயர்கள்
    பிரிக்க முனையும்
    இருவரையும்!

    திராட்சையின் சுவைதனை ஒயின்
    பானமும் தருவது போல்
    காணும் என் கனவிலும்,
    புரியும் என் பணியிலும்
    உருவாய் இருப்பது நீயேதான்!
    கடவுள்மீது முறையிட்டுத்
    தொடரும் வழக்கில் அவர்
    காதில் விழுவது உன் பெயரே!

    கடவுள் எனை நோக்கின்
    காண்பது,
    கண்ணுக் குள்ளிருக்கும்,
    இருவரின்
    கண்ணீர்த் துளிகள் !

    ********************

    Poem -6

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    http://members.aol.com/ericblomqu/brownine.htm

    Go from me. Yet I feel that I shall stand
    Hence forward in thy shadow. Nevermore
    Alone upon the threshold of my door
    Of individual life, I shall command
    The uses of my soul, nor lift my hand
    Serenely in the sunshine as before,
    Without the sense of that which I forbore–
    Thy touch upon the palm. The widest land
    Doom takes to part us, leaves thy heart in mine
    With pulses that beat double. What I do
    And what I dream include thee, as the wine
    Must taste of its own grapes. And when I sue
    God for myself, He hears that name of thine,
    And sees within my eyes the tears of two.

    ********************

     

    Share
  • தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

    –கவிஞர் காவிரி மைந்தன்

     

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

     

     

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்சுதந்திரம் என்பது ஒரு மந்திரச் சொல்லாய் முழங்கிய காலம் இந்தியாவில் உண்டு! வந்தே மாதரம் என்றும் மக்கள் தெருவெங்கும் உரக்கக்குரல் கொடுத்த உரிமைக்குரல்கள் கண்ட விடியல்தான் நாம் பெற்ற சுதந்திரம்!

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கவிஞர் முத்துலிங்கம் கற்பனையில் உருவானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது கவிஞரின் உள்ளத்தில், அடிமனதில், குடிகொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாய் காணலாம்!

    புரட்சிப்பாடலில் இடையே பூத்திருக்கும் கற்பனையைப் பாருங்கள்! கவித்துவச் சிந்தனையின் செழுமை முழுமைபெற்ற கவிஞருக்கு வாய்க்கும் அரிய வரிகளிவை!
    தென்பாங்குத் தென்றல் பண்பாடும்நாட்டில்..

    அடக்கு முறைக்கு அடங்க மறுத்த புரட்சியாளனாய்.. கதையின் நாயகன் புறப்பட்டு வருகையில்.. கண்ணில்படும் அவலங்கள் அவன் கருத்தில் நிறைகின்றன சொல்லும் பொருளும் ஒன்றையொன்று இங்கே ஆள்கின்றன. அதனால் கவிதை வாழ்கிறது!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் அளித்த தேவகானங்கள் – பல்விதமானவை என்பதற்கு இப்பாடலும் தக்கதோர் சாட்சியாகும்.
    டி.எம்.எஸ். குரலில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களில் இதுவும் ஒன்று!
    இதில் புலவர் முத்துலிங்கம் பங்களிப்பு கணிசமானது! அதுவே கவிதையானது!!

    http://youtu.be/bMKijer7fZg
    காணொளி: -http://youtu.be/bMKijer7fZg

    திரைப்படம் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா
    இசையமைப்பு – மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி.
    பாடலாசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடல்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடைமைச் சமுதாய் மலர்ந்திட வேண்டும்

    கண்கவரும் கலைகளெல்லாம் வளர்ந்தது இங்கே
    களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
    நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் எங்கே
    நிமிர்ந்தெழுந்தால் தடைகளெல்லாம் உடைந்திடும் இங்கே

    வீரமுண்டு வெற்றியுண்டு.. விளையாடும்களம் இங்கே உண்டு
    வா வா என் தோழா..
    பூனைகள் இனம்போல பதுங்குதல் இழிவாகும்
    புலியினம் நீயெனில் பொருதிட வாராய்.. (வீரமுண்டு)

    தென்பாங்குத் தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
    நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
    நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ வா. வா.. என் தோழா..

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

     

     

    Share
  • அன்னை தெரேஸாவின் பொன்மொழிகள்!

    -தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

     

    annai Therasa for jayabarathan (1910-1997)

    இரத்த உறவில் நான் அல்பேனிய மாது
     குடி உரிமையில் நான் இந்திய மாது
     நம்பிக்கையில் கத்தோலியச் சேவைக் கன்னி. 
      (அன்னை தெரேஸா)

     

    என்றும் தன்னலம் பேணி,
    ஏது காரண மின்றி
    எவ்வித நியாயமு மின்றித்
    தாறுமாறாய்
    ஒவ்வாது நடப்பர் மாந்தர்!
    ஆயினும்
    மன்னித்து விடுக மாந்தரை!

    அருட்பணி செய்துநீ வருகையில்,
    சுயநலம் பேணி முடிவில்
    சுருட்டப் போவதாய்
    உன்மேல்
    குற்றம் சுமத்துவர் மாந்தர்!
    ஆயினும்
    அருட்பணி ஒன்றே மேற்கொள்!

     சாதனை புரிந்து
    வெற்றிநீ பெற்றால்,
    போலித் தோழர் சிலர் ஒட்டுவார்!
    பொய்வேடப்
    பகைவர் சிலர் கிட்டுவார்!
    ஆயினும்
    வெற்றியை நோக்கியே முற்படு!

    நேர்மையாய் நடந்து
    வெளிப்படையாய்ப் பேசி
    வேலை செய்யும் உன்னை
    மானிடர்
    ஏமாற்றி விடுவர்!
    ஆயினும்
    நேர்மையாய் நட!
    வெளிப்படையாய்ப் பேசு!

    பல்லாண்டு கட்டிய உந்தன்
    மாளிகையை
    யாராவ தொருவர்
    துண்டாக் கிடுவர் ஓர் இரவில்!
    ஆயினும்
    உண்டாக்கிவிடு மீண்டும்
    உன்னருள் மாளிகை
    தன்னை!

    பணியில் மூழ்கிஉன் நெஞ்சில்
    அமைதிநீ காணும் போது,
    ஆனந்தம் மேவும் போது
    உன் மீது
    பொறாமைப் படுவர் மாந்தர்!
    ஆயினும்
    ஆனந்தம் அடைவாய் உன்
    அருட்பணியில்!

    இன்று புரிந்த உனது
    நல்வினைப் பணிகளை எல்லாம்
    அடுத்த
    நாளே மறப்பர் மாந்தர்!
    ஆயினும்
    நல்வினைப் பணியே மேற்கொள்!

    உன் முழுத்திறப் பணியைத் தினமும்
    உலகுக் களித்த போதும்
    இன்னும் தேவைப் பணிக்கு
    இருந்தே தீரும் புவிக்கு!
    ஆயினும்
    உன்னால் இயன்ற அருட்பணியை
    முழுத் திறமுடன்
    உலகுக் களிப்பாய் நீயே!

    **************

    1.     http://en.wikipedia.org/wiki/Mother_Teresa [May 10, 2014]

    2.     http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html [September 5, 1997]

    3.     http://www.biography.com/people/mother-teresa-9504160#awesm=~oEQ5Ymt76MENH7

    4.     http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html

    **************

    Share
  • இயற்கை எனும் ஆசான்

     
    கோபாலன்

    images (2)

    விரிந்து விளங்கும் வானம் போல் பரந்த மனம் கொள்ள வேண்டும்

    உயர்ந்து நிற்கும் மலை போல உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும்

    ஓயாத கடல் அலைகள் போல் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும்

    கண்ணுக்குத் தெரியாது உயிரூட்டும் காற்று போல் விளம்பரமின்றி உதவ வேண்டும்

    நெருங்க முடியாத நெருப்பு போல் தீயவை அணுகாது தூய்மையாய் வாழவேண்டும்

    உலகைத் தாங்கி நிற்கும் நிலம் போல் பொறுமையுடன் பொறுப்புகளைச் சுமக்கவேண்டும்

    மலையிலே பிறந்து நிலத்திலே விரைந்து அமைதியாய் கடலில் கலக்கும் நதி போல்

    பிறப்பு முதல் மூப்பு வரை ஆடி ஓடி வாழ்ந்து இறுதியில் அமைதியாய் இறைவனடி நாட

                                                                                                வேண்டும்.

     

     

    Share
  • பெண் பார்த்த படலம்

    இசைக்கவி ரமணன்

    (இன்று எங்கள் 34 ஆவது திருமண நாள். 26 ஆம் திருமண நாளில் எழுதிய ஒரு சிறு குறிப்பை இங்கே இடுகிறேன்)

    என் மனைவியும் நானும், யார் திருமணத்திற்குச் சென்றாலும் ஒரே வாழ்த்துத்தான் சொல்வோம்: ‘நீங்கள் இருவரும் எங்களைப்போல் இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.’

    எனக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று என் தாயார் அழகான கடிதமொன்றை எழுதினார்கள். நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்: ‘சரி; ஆனால் பெண்பெண்ணாய்ப் பார்க்கின்ற பேதைமையிலிருந்து என்னைக் காப்பாற்று.’ எனவே, நான் பெண்பார்க்கப் போவதில்லை என்று நிச்சயமாயிற்று. சில நாட்கள் கழித்து, என் தாயார், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, ‘இவளைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறோம். உன்முடிவு என்ன?’ என்று கேட்டிருந்தார்கள். கொஞ்சம் க்லாக்சோ பேபி போல், சேலையில் சிரமப்பட்டுத் தோற்றமளித்த அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் சொல்லமுடியும்? வாழ்ந்து பார்த்தே புரிந்துகொள்ள முடியாதவர்கள்; அதிலும் பெண்கள்!

    மதுரையிலிருந்த நான், நேரே மீனாட்சி கோவிலுக்குச் சென்றேன். ஒரே சினிமாக்
    காட்சிதான் போங்க!

    காலை வைத்தவுடனேயே எல்லா மணிகளும் சேர்ந்தொலிக்க அடுக்கடுக்காய் தீபாராதனை. நான் கையில் ஒரு கவரோடு நின்றுகொண்டிருக்கிறேன். விறுவிறுவென்று வந்த அர்ச்சகர், வெடுக்கென்று கவரைப் பறித்துச் சென்று, அம்மனின் காலடியில் கிடத்தி, கற்பூரம் காட்டி, பெரிய மாலையைக் கழற்றி என்கழுத்தில் போட்டு, இலையில் ஏகப்பட்ட குங்குமத்தைக் கொடுத்து, கவரைத் திருப்பித்தந்து, ‘எல்லாம் நல்லது போடா,’ என்றாரே பர்க்கலாம்!!

    பிரமித்துப்போன நான், வெளியே வந்தபோது புரிந்துகொண்டேன். தாயாருக்குக் கடிதம் போட்டேன். ‘இவள்தான் என்மனைவி. நான் அவளைப் பார்க்கத் தேவையில்லை. அவள் பார்க்க விருப்பப்பட்டால் நடக்கட்டும்.’ அதன்படி, பிள்ளை பார்க்கும் படலம் (!) பெசண்ட் நகரில் அவள் பெரியம்மா வீட்டில் நடந்தது. பத்மா சுப்ரமண்யம் அவர்களும், அவர்களது அண்ணியாரும் வந்திருந்தார்கள். ( “நீ யாரையாவது பண்ணிண்டுடாதேடா! நாங்க வந்து பாக்கறோம்.”)

    அகன்ற நெற்றி; கொடுவாள் மீசை; பூஞ்சை உடம்பு; விலாவெலும்புகள் தெரிய ஒரு ஆரஞ்சு ஜிப்பா; பெரிய நெற்றியில் கூராகக் குங்குமம். ஏறத்தாழச் சம்பல் கொள்ளைக்காரன் போல் அந்த நாளில் (அந்த நாளிலும் என்கிறார் அப்பா!) தோற்றமளித்த நான் அவர்கள் வீட்டில் நுழையும்போது, ‘என்னடி இது! பொட்டெல்லாம் இட்டிண்டிருக்கான்!’ என்ற பலத்த முணுமுணுப்பும், ‘குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக்காரா’ பாட்டும் என்காதில் விழத்தான் செய்தன!

    ஏதோ ஒரு பந்து பொத்தென்று காலில் விழுந்து தாவியது. அதுதான் பெண்ணென்றார்கள். பெண்வீட்டுக்காரர்கள் ‘ஓ! ஹிந்துஸ்தானியெல்லாம் பாடுவாளே!’ என்று கேட்காத கேள்விக்குப் பலத்த குரலில் பதில் சொல்லிவிட்டுப் பாடச் சொன்னார்கள். அவள் பாடினாள்.. கதவிடுக்கில்
    சிக்கிக்கொண்ட எலியும், கல்லறையிலிருந்து அப்போதுதான் எழுந்த அன்றலர்ந்த பேயுமான குரலைக் கேட்டுப் பீதியுற்று, நாற்காலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நானும் என் நண்பன் சுப்புவும் ஒருவரையொருவர் முழிபிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாய் விபரீதம்
    முடிந்ததும், அருமையான அல்வாவும், போண்டாவும் தந்தார்கள். இன்னொரு ரவுண்டுகூடப் பெண்பார்க்கலாமோ என்று தோன்றியது.

    ‘அவளோடு பேசவேண்டுமே’ என்றேன். ‘இங்கேயே பேசலாமே’ என்றார்கள் பெரியம்மா.
    ’என்னங்க இது, சினிமா ஷூட்டிங் மாதிரி ஆயிருமே’ என்றேன். என் தமிழ் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?! பத்மா சுப்ரமண்யம் அவர்கள், ‘நான் எங்காத்துக்குக் கூட்டிண்டு போறேனே,’ என்க அவர்களால் மறுக்க முடியவில்லை. காரில்தான் அவளுக்கு இந்தக் கவிதையைச் சொன்னேன்:

    பாதையிலே தொலைவில் கிடந்தேன்நான் பார்வை படாதபடி – ஒரு
    போதையிலே உடல்நெய்துவந்தாள் அவள் புன்னகை செய்தபடி – இன்ப
    வேதனையில் மனம் விம்மிநின்றேன் நான் வார்த்தை இழந்தபடி – ஒரு
    சாதனை செய்தது போல்பறந்தா ளவள் காற்றில் சிரித்தபடி..

    அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

    மல்லிகைப் பந்தல் சிலிர்த்தது போலென் மனத்தில் பனித்துளிகள் – நான்
    சொல்லெடுக்க அவள் ஸ்ருதியெடுக்க அங்கு சொர்க்கங்கள் தவமிருக்க
    தெள்ளிய நீர்மடுவே ஒரு தேமலர் வீழ்ந்து தெளும்புதல்போல் – என்
    உள்ளுணர்வூறிய கள்ளுறைக் கவிதையில் உண்மையெனத் தெரிந்தாள்

    அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

    அவளுக்குப் பிடித்தது உடனே தெரிந்தது.

    பத்தூக்காவின் நடன அரங்கு. மாடியில். பெரிய நிலைக் கண்ணாடி. என்னையும், அவளையும் விட்டுவிட்டு, ‘டேய்! உன்ன நம்பி விட்டுட்டுப் போறேண்டா!’ என்று கண்சிமிட்டிச் சென்றார்கள்.

    அவள்தான் அனுராதா. என் காதற் கண்ணம்மா. கவிதைக்குக் கிரியா ஊக்கி. கடுமையான விமரிசகர். ‘இல்லற வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் பரஸ்பர மரியாதைதான். ஒருவரையொருவர் அவரவர் வார்ப்பு எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன்பின், பதியம்போடப்படும் நேசக்கொடிதான், நாளெல்லாம் நன்மலர்களாய்ப் பூத்துக் குலுங்கும்,’ என்பாள். இந்தக் காவல் தெய்வத்தோடு நான் கழித்த இந்த 26 ஆண்டுகளும் இனிமையானவை. பரிசாய் விளைந்தனர் இரட்டை மகன்கள்.

    இன்றுதான் திருமணமானதுபோல் இன்றும் இருக்கிறோம்.

    காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
    கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்

    என்ற பாரதி வாக்கின் பொருளை எனக்கு வாழ்வின் அனுபவமாய்த் தந்த என் மனையாளுக்கு வாழ்த்துச் சொல்லி, இதோ உங்களுக்கு அறிமுகம் செய்தேன்!

    (இதோ! இந்த மணநாளுக்கு அனுவுக்கு எழுதிய கவிதை!)

    ஆல வாயனின் கோயிலிலே

    அன்னை மீனாட்சி சந்நிதியில், ஒரு

    மாலை நேர மணியொலியில், உன்னை

    மனைவியாக்கினாள் மாதங்கி

    காலச் சக்கரச் சுழற்சியிலே

    கடந்தோம் பற்பல காதங்கள்

    சோலையும் பாலையும் சேர்ந்ததுதான்

    சுந்தர வாழ்க்கை ஆகியது!

     

    அருகே இருந்து விமர்சித்தாய்

    அருமைக் குழந்தைக ளைத்தந்தாய்

    கரிய பொழுதுகள் சூழ்கையிலும்

    கலங்கா தென்னோ டுடனிருந்தாய்

    குருவை உணர்ந்து கும்பிட்டாய்

    கூட்டுக்குள்ளே குடில்வளர்த்தாய்

    சிறிதும் பெரிதும் பார்த்துவிட்டாய்

    நிறைவை நெஞ்சில் சேர்த்துவிட்டாய்!

     

    பூவில் புயல்கள் சுழியோடும்

    புனலில் எரிமலை பொங்கிவரும்

    பாவனைகள் பல பந்தாடும்

    பாவலனை நீ கைபிடித்தாய், உன்

    தேவைகள் தீராதிருந்தாலும், நான்

    தெருவில் பாடித் திரிந்தாலும்

    ஆவலோ அன்போ எதனாலோ

    அகலா தென்னுடன் வாழ்கின்றாய்!!

     

    மனதில் குறைகள் எனக்கில்லை

    மறிக்கும் சிறைகள் உனக்கில்லை

    கனவாய் விரையும் வாழ்வினிலே, நாம்

    கவலைப் படவே வாய்ப்பில்லை

    இனிமேல் உன்திசை உனதெனவே

    இதயம் திறந்து சொல்கின்றேன்

    மனதுக் குகந்த வழியினிலே, நீ

    மலர்கள் கொய்து மகிழ்ந்திருப்பாய்!

     

    வாழ்வு முடிந்தது என் முன்னே, புது

    வாசல் திறந்தது கண்முன்னே

    ஊழ்வினை உடம்பைத் தொட்டாலும், உயிர்

    உயரே உயரே பறக்கிறது!

    தாழ்வும் உயர்வும் இல்லாமல், பரா

    சக்தியின் இச்சையில் தொடர்கின்றேன்

    சூழ்வன யாவும் அவள்விருப்பம், என நீ

    கொண்டால் வணங்கி மகிழ்கின்றேன்!

     

    ஆயிரம் பிறைகள் நீ காண்க!

    ஆரோக் கியமாய் நீ வாழ்க!

    வாயினில் இன்சொல் வளர்ந்திடுக!

    வழியில் வாய்மை துணைவருக!

    காயாய்ப் புளித்த கதையெல்லாம், உள்ளக்

    கனிவில் கனியாய் இனித்திடுக!

    போயுன் இலக்கில் பொருந்திக்கொள்! என்

    புண்ணியத்தையும் அருந்திக்கொள்!

    ரமணன்

    Share
  • திருமால் திருப்புகழ் (91)

     

    கிரேசி மோகன்

    Dialogues with Arjuna series. #krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————-

    Dialogues with Arjuna series. #Krishnafortoday keshav
    Dialogues with Arjuna series. #Krishnafortoday
    keshav

    தனித்த திரளே, மனித்த உருவில்,
    ஜனித்தாய் குருவாய் ஜகத்தில், -திணித்த,
    உடலுயிர் ஆவி, உனக்கர்ப் பணித்தேன்,
    கடலேஇச், சிற்றலையைக் கொள்….(61)

    கொள்ளைக் கொடுத்த, கவிசிம்மன் உள்ளத்தைக்
    கொள்ளை அடித்த குதிரையே, -கொள்ளத்,
    தயக்கமேன் என்னை, அயக்ரீவா வந்திப்,
    புயக்கடைப் புண்ணாக்கைப் பார்….(62)

    பாரப்பா என்னுள்ளே, பாரதப் போரப்பா,
    கூறப்பா நேரிடையாய் கீதையை, -பாரப்பால்,
    பாதாள விண்ணுக்குப் பாய்ந்ததிரி விக்கிரமா,
    வேதாள வஞ்சநெஞ்சை, வீழ்த்து….(63)

    வீழ வயதின்றி, வாழ வலுவின்றி,
    ஆழப் புலன்வாய் அகப்பட்டோம், -வேழம்,
    குரல்கொடுக்க அன்று, விரல்சொடுக்கில் வந்த,
    விரல்சக் கரனை வணங்கு….(64)

    வணங்கா முடியாய், வளையா பதியாய்,
    இணங்கா(து) இளமைத் திமிரால், -கணங்கள்,
    கெடுவதன் முன்னம், கடல்நிற வண்ணன்
    அடிதொழ மூப்பும், அழகு….(65)

    ——————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • நம்பிக்கை தரும் நாயகன்

    இசைக்கவி ரமணன்

    கதிரவனுக்குக் கற்பூரம் காட்டுவதுபோலத்தான், கங்கையில் ஒரு குவளை நீரை விடுவதுபோலத்தான், பகவான் ரமணரைப் பற்றி இந்தச் சிறுவன் பேச முயல்வதும்! மீன் நீந்துவது நதியை அளப்பதற்காகவா? சிறுகுருவி பறந்து திரிவது வானை அளக்கவா? இல்லை! பெற்ற பெருங்கருணையைக் கொண்டாட!

    ramana2

    அசையாத மாமலையாய், வடுவேதும் சுமக்காத வானமாய், இன்றும் வாழ்ந்து நம்மை வாழ்விக்கும் ரமணமுனியின் ஆழம் காண முடியாத மெளனத்தை, விளிம்பில் நின்று வியந்து பார்த்தும், மருண்டும் நிற்கின்றேன். புரியவில்லை; அறவே புரியாமலும் இல்லை. எது எப்படியோ, விலக முடியவில்லை! ஏதோ ஒன்று உயிரின் பிடரியைக் கவ்விக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன். நம்மை முற்றும் முடிக்கும்வரை அது ஓயாது என்றே நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் எழுந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆனந்தம். அது, உள்ளே மெளனமாகவும் வெளியே வார்த்தைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

    இதுதான் என் ரமண அனுபவம்! எது தொடர்ந்து இருக்குமோ அதைத்தான் அனுபவம் என்று கொள்ளவேண்டும் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரை. எனவேதான், இதை என் அனுபவம் என்கிறேன். முதலில்,

    1. நாம் எதற்காக ரமணரைப் பற்றிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்?

    நாம் மனிதர்கள். அவர் மாமனிதர். ஒவ்வொரு மனிதனும் மாமனிதனாகலாம். ஆனால், அதற்கு முன்பு, அவன் முழுமையான மனிதனாக ஆகவேண்டும். மகான்களைப் பற்றிப் படிப்பது, பேசுவது, கேட்பது இவற்றின் மூலம், அவர்கள் அடைந்த நிலை நமக்குத் தெரியவரும். நாம் அடையாத நிலை நமக்குப் புரியவரும். அதை எப்படி அடைவது என்ற கேள்வி தோன்றி அதுவே பாதையை வகுக்கும்.

    பொதுவாக மகான்களின் நிலை என்பது என்ன? அமைதி, ஆனந்தம், அன்பு, அறிவு, எளிமை, ஒழுக்கம், நிறைவு, தெளிவு, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அறிய அறிய நெடுகத் தொடர்ந்து வளர்வதே பெரியோர் பெருமை. சொல்லிச் சொல்லித் தீர்வதில்லை சோதியின் பெருமை. சொல்லாமல் மெளனத்திலே காண்பதே அருமை.

    அறியாமை என்னும் இருட்டிலிருந்து, மலினக் குப்பைக் கூளத்திலிருந்து நம்மை மீட்டு நாம் மேன்மையுற வழிவகுப்பதே மகான்களைப் பற்றி நாம் பேசுவதாலும், கேட்பதாலும், படிப்பதாலும் விளையும் பயன்.

    ஓர் ஊரைப்பற்றிய விவரங்களைக் கேட்டால் நமக்கும் அந்த ஊரைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா? அப்படித்தான் இதுவும்!

    2. ரமணர் மகான். நாம் சாதாரண மனிதர்கள். அவர் ஞானி. நாம் அஞ்ஞானிகள். அவர் எங்கே நாம் எங்கே?

    ரமணர் மகான் என்பதிலும் நாம் சாதாரண மனிதர்கள் என்பதிலும் அவர் ஞானி என்பதிலும் நாம் அஞ்ஞானிகள் என்பதிலும்images (1) ஐயமில்லை. உண்மைதான். ஆனால், அவர் எங்கே நாம் எங்கே என்ற கேள்விக்கு என்ன பதில் தெரியுமா? நாம் எங்கே அவர் அங்கே என்பதுதான்! நோயுற்று, உடல் இற்று, உயிர்மட்டும் மிஞ்சியிருந்த வேளையில் அவர்முன்பு நின்று, `ஐயா! எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிடாதீர்கள்!,` என்று அடியார்கள் விம்மி அழுது நின்றார்கள். அப்போது ஒரே வாக்கியத்தைத்தானே திரும்பத் திரும்பச் சொன்னார்? `நான் எங்கே போகமுடியும்?`

    இங்கிருக்கும்போதே அங்குமிருக்க அறிந்தவர்கள் இங்கு, அங்கு என்னும் பேதங்கள் தீர்ந்து எங்குமுள்ள பரம்பொருளாகவே திகழ்கிறார்கள். நாம் எங்கும் இல்லை. அவர்கள் எங்கே இல்லை? ரமணர் இன்றும் இருப்பதால்தான் நாம் அவரைப் பற்றிப் பேசுகிறோம். நாம் அவரை நினைவுகூரவில்லை! அவர் சன்னிதியில்தான் நின்று நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம்!

    ஆம், நாம் எங்கிருந்தாலும் நாம் அணுகி அருளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம், அவர் எங்குமிருக்கிறார். நாம் எப்படி இருந்தாலும் நமக்குப் பொருந்தும் வண்ணம் எல்லாமாகவும் இருக்கிறார். தொடர்ந்து துணையாக வரும்விதம், அவர் நம் உயிரின் உறவாக இருக்கிறார்.

    ரமணர் தனது தந்தையைப் பத்து வயதில் இழக்கிறார். அந்த மரணமோ, தாய், சகோதரர்கள் இவர்களுடைய அழுகையோ அவரிடம் அச்சத்தை ஏற்படுத்தவில்லை; ஆலோசனையைத்தான் தூண்டிவிட்டது. சிதையில் தந்தை எரிந்து சாம்பலானபின், `என்னில் இருக்கும் `நான்` அப்படியே இருக்கிறது; என் தந்தையில் இருந்த `நான்` உடலை நீங்கிவிட்டது,` என்றொரு முடிவுக்கு வருகிறார். தனது 16 ஆவது வயதில் மதுரையில், அந்தத் தெற்கு வாசல் அருகிலுள்ள வீட்டின் மாடியில் தன்னை முடித்துக்கொண்டார். மரண பயத்தை முகமனாக வைத்துக்கொண்டு, அவர் அகண்ட பரிபூரண நிலை எய்தியது ஒப்பற்ற ஆச்சரியம்தான். அதன்பிறகு, அவர் அறியவேண்டிய சேதியோ, பெறவேண்டிய அனுபவமோ எதுவும் இல்லை. இதற்குப் பிறகுதான் அவர் திருவண்ணாமலை செல்கிறார். 1896 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி மதுரையில் மரண அனுபவம். வீட்டை விட்டு வெளியேறியது ஆகஸ்டு 29. அவர் திருவண்ணாமலையில் கால்வைத்தது செப்டம்பர் 1. இடையில் கடந்தது 48 நாட்கள். ஆனால், அவர் பெற்ற மகத்தான அனுபவம், யாருக்கும் தெரியவில்லை! இது ரகசியமில்லை; பணிவு! நாகரிகத்தின் உச்சம்!

    இனி அடையவேண்டியது ஒன்றுமே இல்லை என்னும் பெருநிலையை அடைந்த ரமணரை, 53 வருடங்கள் திருவண்ணாமலையில் நீங்காமல் இருக்கவைத்தது, அவருடைய தேகத்திற்கான பிராரப்தமா? நாம் அனுபவிக்கும் விதியா? இல்லை! இறையின் திருவுள்ளம்! தெய்விகக் கருணையின் நிச்சயம்! எதற்கு? அவர் அடைந்த நிலையை நாமும் அடைவதன் மூலமே நமது துன்பங்கள் தீரும் என்று காட்ட. அதற்கான எளிய, நேரடியான, நாமே பயின்றுகொள்ளக் கூடிய வழிமுறையை நமக்குக் காட்ட. எல்லாம் அடைந்த பிறகும், எளியார்க்கு எளியராய், மிக மேன்மையான வாழ்வை வாழ்ந்துகாட்ட!

    இது நமக்குச் சாத்தியமில்லை என்றால் ரமணரின் தேகம் மதுரையில் அவருடைய 17 ஆம் வயதிலேயே விழுந்திருக்கும். இன்று அவரைப்பற்றிப் பேச நமக்கு எந்தக் குறிப்பும் இருந்திருக்காது. தான் அடைந்த உன்னதமான நிலையை அனைவரும் அடைய முடியும் என்று முழுக்க முழுக்க நம்புவதும், அடையவேண்டும் என்று விரும்புவதும், அடைய வழிசொல்வதுமே மகானின் தலையாய குணங்களாகும்.

    3. ஒரு மகான் எதை விட்டுச் செல்கிறார்?

    நடக்கப் பாதை (நான் யார் விசாரணை, சரணாகதி)
    நல்லுரைகள் (கதைகள், உதாரணங்கள், விளக்கங்கள், அவரவர்க்கேற்ற அறிவுரைகள்)
    தவம்
    தன்னுதாரணம் (எளிமை, எதற்கும் கிளர்ச்சியுறாதிருத்தல், இறுதிவரை அனைவரும் சந்திக்க ஏதுவாய் இருந்தது, ஒவ்வொரு நொடியும் ஊராரின் கண்முன்னே கழிந்தது)

    4. ரமணர் யோகியா, ஞானியா, பக்தரா?

    எப்படிச் சொல்ல? எல்லாம்தான். எதுவுமில்லைதான். இரண்டும் உண்மைதான்! வெட்டவெளியை வானமெனலாம், இடமெனலாம், பரப்பு எனலாம், ஆதாரம் எனலாம். வண்ணம் மேற்கொண்டால் வானம். பூமி சுழலவும் அதில் நாம் நிற்கவும் அனுமதித்தால் இடம், எங்கும் இருப்பதால் பரப்பு. சொல்லிக்கொண்டே போகலாம்; அதுவும் விரிந்துகொண்டே போகும்!

    அவர் ஞானிதான். எதனால்?rama

    எதையும் தனக்கு அயலாக அவர் காணவில்லை
    எவரிடத்திலும், எதனிடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் அவருக்கு இருந்ததில்லை
    ஏற்ற இறக்கங்களோ, மாற்றங்கள் வளர்ச்சிகளோ அவரிடம் காணப்படவில்லை
    அத்யாச்ரமி என்னும் துறவின் பரிபூரண நிலையை ஊரறிய அடைந்தவர் அவர்

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஞானிக்கு, தான் ஞானி என்னும் அபிப்பிராயம் கிடையாது.

    அகண்டமான பேருணர்வே தன்னுடைய இயல்பாக இருந்தார். அதே சமயம், நடைபெறுவன அனைத்தையும் அறிந்தே இருந்தார்.

    பாதாள லிங்க அறையில் தேகத்தைப் பூச்சிகள் அரித்தபடி இருக்கத் தான் அசையாமல் இருந்தது
    இரண்டரை வருட காலம் அசையாமல் இருந்தது
    தன்னை அடித்த திருடர்களை உணவருந்திவிட்டுச் செல்லுங்கள், இன்னும் என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றது
    தானாய் எந்தப் பிரசங்கமும் செய்ததில்லை. ஆனால் 30,000 ஐயப்பாடுகளுக்கு அவர் விடை பகர்ந்திருக்கிறார்
    இறுதிவரை அவருடைய மெளனம் சற்றும் கலையாமலேயே எல்லாம் செய்திருக்கிறார்

    அவர் யோகிதான். எதனால்?

    அவருடைய மரண அனுபவமும் ஞானம் சார்ந்த யோக அனுபவம்தான். யோகம்தான் ஞானத்தைத் தொடரவேண்டும் என்னும் வாசகத்திற்கு அவர் நிதர்சனமான நிரூபணம்
    திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், அவர் உட்கார்ந்தது ஓரிடம், எழுந்தது ஓரிடம் என்றிருந்திருக்கிறார். அது மிக நுண்மையான யோக அனுபவம்
    ஆமைப்பாறையில் நடந்த இரண்டாவது மரண அனுபவமும் யோகம்தான்
    நட்ட நடுப்பகல். மொட்டைப் பாறை. உச்சிக் கதிரவனைக் கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தபடி அவர் இருந்திருக்கிறார்

    அவர் பக்தர்தான். எதனால்?

    திருவண்ணாமலைப் பரதேசிகள் கடைசிப் பந்தியில் உணவருந்தவும் என்றதும், பிச்சைக்காரர்களோடு அமர்ந்துகொண்டது
    கோயில் பிரசாதங்களைப் பணிவோடு ஏற்றுக்கொண்டது
    சில நேரங்களில் கண் கலங்கியதும் உண்டு
    அக்‌ஷரமணமாலை போன்ற இறையருள் இறைஞ்சும் பாடல்கள் புனைந்தார்

    பக்தி இன்றேல் ஞானம் கனிவதில்லை, யோகம் வசமாவதில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய பக்தி என்பது பரிபூரண சரணாகதியே என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் எளிய மனிதராக, ஏழைப் பங்காளனாகத்தான் விளங்கினார். கீரைப்பாட்டி, எச்சம்மாள், மாடுமேய்க்கும் பூவன், கோலி விளையாடும் சின்னக் குழந்தைகள் என்று அவருக்குத்தான் எத்தனை நண்பர்கள்!

    அதுபோல், எல்லா உயிர்களிடத்தும் ஒரேபோல் அன்பு செலுத்தியவர். எனக்குத் தெரிந்து குரங்குக்குப் பிரசவம் பார்த்தவரை நான் கேள்விப்பட்டதில்லை! பெற்ற குட்டியைத் தாய்க்குரங்கு வந்து காண்பித்துப் போன கதையையும் நான் வேறெங்கும் கேள்விப்பட்டதில்லை!

    5. எல்லாம் சரி. ஆனால், ரமணர் நமக்கு விடையைச் சொல்லவில்லையே! கேள்வியைத்தானே நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்?

    நாம் வினாக்களால் அல்லற்படுகிறோம். அவை நம்மைத் துளைத்தெடுக்கின்றன — சின்னக் குழந்தைகளின் சள்ளையைப்போல், மேலதிகாரிகளின் துரத்தல்போல், காவற்துறை விசாரணைபோல்! அந்த வினாக்களை நாம் சுமக்கிறோம். நமக்கு விடைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. கிடைக்கின்றன. அவற்றின்மூலம் புதிய வினாக்கள் கிளைக்கின்றன. இறுதியில், வினாக்களைப் போலவே விடைகளும் சுமைகளாகின்றன. அனுபவங்கள் அயர்ச்சியைத் தருகின்றனவேயன்றி, ஆனந்தம் தருவதில்லை. அறிவுரைகள் எரிச்சலூட்டுகின்றன. நெறிமுறைகளில் பிடிப்பில்லை. வழிமுறைகள் சலிப்பூட்டுகின்றன. எதிலும் ஐயங்கள் எழுகின்றன.

    ஆனால், ரமணர் ஒற்றைக் கேள்வியை எழுப்பி, இதுவரை கற்றை விரித்து நம்மைக் களைப்படைய வைத்த அத்தனைக் கேள்விகளையும் அதனுள் அடக்குகிறார். அதை நம்மை, நாமே, நமக்குள் எழுப்பச் சொல்கிறார். செய்கிறார். இதுதான் அவர் நமக்குச் செய்யும் சேவை.

    நான் யார் என்பதோ விடையற்ற கேள்வி. எந்த விடைகளாலும் அடங்காத கேள்வி. எந்தத் திசைதிருப்பும் முயற்சிகளுக்கும் மசியாத கேள்வி. எந்த மிரட்டல்களுக்கும் பணியாத கேள்வி. இதை நாம்தான் எழுப்புகிறோம். இது வெளியே கேட்கப்படுவதில்லை. இது மனம் என்னும் தளத்தில்தான் எழுகிறது. இந்தக் கேள்விக்கு எந்த பதிலையும் ஏற்க மறுக்கும் மனம், இறுதியில் இந்தக் கேள்வியில் ஒடுங்குகிறது. கேள்வி நம்மில் ஒடுங்குகிறது. மனமும் இன்றி, கேள்வியும் இன்றி நாம் மட்டும் மிஞ்சுகிறோம்.

    இதுவே முடிவு. இதுவே இதற்குமேல் இன்னொன்றில்லாத அனுபவம். இதை நாம் பெறவேண்டும் என்னும் கருணையால்தான், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதை இந்தக் கேள்வியாக்கி அதை நம்மை நோக்கித் திருப்பிவிடுகிறார் ரமணமுனி. பண்டிதரிலிருந்து பாமரர்வரை, வெளிநாட்டவரிலிருந்து உள்நாட்டு கிராமவாசிவரை, பெரும் செல்வந்தரிலிருந்து பரம ஏழைவரை, எல்லோர்க்கும் அவர் இதையேதான் இன்றைக்கும் செய்து வருகிறார்.

    அதுதான் `நான் யார்?` என்னும் கேள்வி. கேள்வி என்று சொல்வதைவிட, விசாரணை என்று சொல்வதே பொருந்தும். பதிலைத் தேடுவது கேள்வி. உண்மையைத் தேடுவது விசாரணை. வினா, விடைகளால் திசைதவறும், விசாரணையோ, நூல்பிடித்தாற்போல் விழைகின்ற உண்மையைவிட்டுக் கண்ணை எடுக்காது!

    6. சரி, நான் யார் என்னும் விசாரணை எதற்கு?

    `தன்னை அறியாமல் அனைத்தையும் அறியத் தலைப்படுதல் அறியாமையன்றோ! தானன்றோ (ஆன்மா) அனைத்தறிவின் மூலம்!` என்பார் ரமணர்.

    துன்பம் வந்து குறுக்கிடாத இன்பத்தை, தொடர்ந்த இன்பத்தை, நிரந்தரமான இன்பத்தைத்தான் ஒவ்வொரு ஜீவராசியும் விழைகிறது. உயிரினங்கள் இன்பத்தை, அறியாமலேயே விழைகின்றன. மனிதன், அறிந்தே விரும்புகின்றான். விலங்குக்குத் தான் விலங்கு என்று தெரியாது. மனிதனுக்கு, தான் மனிதன் என்பதும், அது விலங்கு என்பதும் தெரியும். எனவேதான் அவன் மற்ற உயிரினங்களை வகைப்படுத்தியதுபோல, அனுபவங்களையும் இது இன்பம் அது துன்பம் என்று வகைபிரித்து வாழுகிறான், இன்பம் ஒன்றையே நாடுகிறான்.

    எந்தச் செயலும் புரியாமல், தொடர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமுமாகும்.

    7. மனிதன் ஏன் இன்பத்தை விழைகிறான்?

    ஒவ்வொரு மனிதனும் தன்னை மிகவும் நேசிக்கிறான், அதனால்தான்!

    8. மனிதன் ஏன் தன்னை மிகவும் நேசிக்கிறான்?

    இன்பமே ஒவ்வொரு மனிதனின் இயல்பு. அதனால்தான் மனிதன் தன்னை நேசிக்கிறான்! அந்த இன்பம் அவனுள்ளேயே இருக்கிறது. அது தெரியாததால்தான் அவன் அதை வெளியே தேடுகிறான், பொருள்களில் நாடுகிறான். அனுபவங்களை வேண்டுகிறான். அந்த இன்பத்தைத் தன்னுள் தேடுபவன் தன்னில் ஒடுங்கித் தணிகிறான். வெளியே தேடுபவன் தடுமாறி விழிக்கிறான்.

    “திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்

    சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
    முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
    முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முதல்வனைக் கூவுகின்றாள்
    வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம்-என் வாழ்க்கையைக் காக்கவிலையே
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே”

    என்னும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இதை மிகச் சரியாகச் சித்திரிக்கின்றன.

    தேடுவது இன்பம். நாடுவது வெளியே. கூடுவது துன்பம். குறையெங்கே?

    9. இன்பம் என் இயல்பென்றால், அது என் உள்ளேயே இருக்கிறது என்றால், அது எனக்கெப்படித் தெரியாமல் போகும்?

    தெரியாமலில்லை; புரியாமலிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னியல்பான இந்த இன்பத்தை ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் அனுபவிக்கிறான். சுகமான தூக்கத்தை விரும்பாதவர்கள் உண்டா? அதற்குத்தான் எத்தனை ஏற்பாடு என்பார் ரமணர். அதை அவர் குறையாகக் கருதவில்லை. தானறியாமலேயே தன்னுடைய சுயமான இயல்பை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க விரும்புவது தூக்கத்தில்தான். ஆனால் `தூங்கியது` `விழித்தால்தான்` புரிகிறது. ஏதோ ஒன்று, தூக்கத்தில் நாம் அறியாமல் அனுபவித்த இன்பத்தைப் பதிவுசெய்து வைக்கிறது. அதுதான், காலை எழுந்தவுடன், `சுகமாகத் தூங்கினேன்` என்று நம்மைச் சொல்லவைக்கிறது. விழித்தவுடன் அந்த சுகம் விலகிவிடுகிறது. தூக்கத்தில் ஆளைக் காணோம்; காலையில் அமைதியைக் காணோம்!

    தூக்கத்தில் தான் அனுபவித்த இனம்புரியாத இன்பம், விழித்தவுடன், நினைவுறுத்திக்கொள்ள முடியாத ஞாபகமாகிறது. அதனால்தான் மனிதன், உள்ளே இருக்கும் இன்பத்தை வெளியே தேடத் தலைப்படுகிறான். ஆனால், விழிப்புற்றவர்கள், உறக்கத்தில் துலங்கும் இன்பத்தின் மர்மத்தை விழிப்பிலேயே தேடுகிறார்கள்:

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்images

    தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?

    வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்

    வாடிக்கை எல்லாம் மறந்திருப்பதெக்காலம்?

    நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து

    தான் அவனாய் நின்று சரணடைவதெக்காலம்?

    நான்நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்

    நீநின்ற கோலமதில் நிரவிநிற்பதெக்காலம்?

    உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

    இதயத் திருநடனம் இனிக் காண்பதெக்காலம்?

    பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்

    சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?

    என்று பாடுகிறார் பர்த்திரகிரியார்.

    இந்த இன்பமானது, நமக்குள்ளேயே இருப்பதால், இதை எப்போது வேண்டுமானாலும் நாம் அனுபவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மை நிலை, அதற்காக ஏங்கும் ஏக்கம் இரண்டையும் சேர்த்து,

    இன்றுவருமோ நாளைக் கேவருமோ அல்லதுமற்vallalar

    றென்றுவருமோஅறியேன் எங்கோவே-துன்றுமல

    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

    சும்மா இருக்கும் சுகம்.

    என்று பாடுகிறார் வள்ளலார்.

    கதவைத் தட்டிப் பலபேர் உரக்க அழைத்தாலும், கட்டோடு தூக்கிக்கொண்டுபோய் நையப் புடைத்தாலும், கலையாத தூக்கம் ரமணருடையது என்று அவர் வாயிலாகவே அறிகிறோம். உறக்கத்தின் சுகம், மரண பயத்தில் எழுந்த நான் யார் என்னும் விசாரணையால், விழிப்பு நிலையிலும் வியாபித்து நிலைத்துவிட்டதே ரமணரின் அனுபவம்.

    10. உறக்கத்தில் இருக்கும் நிம்மதி, சுகம், அமைதி ஆகிய என்னியல்பு விழித்தவுடன் ஏன் மறைந்துபோகிறது?

    தேகாத்ம பாவனையால் விளைந்த தேகாபிமானம்தான். ஆன்மா, உடலெடுக்கும்போது அங்கே அகங்காரம், அல்லது ஆணவம் என்னும் தன்னுணர்வு தோன்றி அது தேகமெங்கும் வியாபித்து, தானே தேகம் என்று கருதிக்கொள்கிறது. இதுவே அனைத்துக் குழப்பங்களுக்கும் ஆதி.

    `வடிவத்தைப் (தேகம்) பற்றிக்கொண்டே வடிவமில்லாத ஆணவம் என்னும் பேய் வந்துசேர்கிறது. Spurious offshoot. வடிவத்தைப் பற்றிக்கொண்டே தொடர்கிறது. வடிவத்தைப் பற்றிக்கொண்டே அனைத்தையும் அனுபவிக்கிறது. ஒரு வடிவத்தை விட்டால் இன்னொரு வடிவத்தைப் பற்றிக்கொள்கிறது. அதை யாரென்று விசாரித்தால் ஓட்டமெடுக்கிறது,` என்று ரமணரின் உள்ளது நாற்பது சொல்லும்.

    உறக்கத்தில் இருந்து விழித்தவுடன், சுகம் மறைந்து உலகமும், பொருள்களும், நினைவுத் தொடர்புகளும் அலையலையாகத் தோன்றுவதற்குக் காரணம் இந்த அகங்காரம், அதாவது நான் அல்லது நான் தேகம் என்னும் உணர்வுதான். `ஆணவம் இருந்தால் எல்லாம் இருக்கும். ஆணவம் அகன்றால் எதுவும் இருக்காது. அதை விசாரிக்க, தோற்றங்கள் நீங்கும்.` என்கிறார் பகவான்.

    எனவே, உறக்கத்தில் அறியாமல் அனுபவித்த இன்பத்தை, விழிப்பில் அறிந்து அனுபவிக்கத்தானே நாம் அனைவரும் விழைகிறோம்? அது, தான் யார் என்று தெரிந்துகொள்வதன் மூலமே சாத்தியமாகும். அதற்கு, `நான் யார்?` என்னும் விசாரணையே சிறந்த வழி.

    11. இந்த விசாரணையை யார் நடத்துவது, தேகமா, மனமா?

    தேகத்திற்குத் தான் தேகம் என்ற உணர்வில்லை. தேகாபிமானம் என்பது மனத்தின் வேலைதான். மனம்தான், அறிவு, செயல்கள் இவற்றுக்கு அடிப்படை. மனம்தான் நாம் உலகைக் காண்பதற்கு, அதாவது எதையும் நமக்கு அயலாகப் பார்ப்பதற்குக் காரணம். மனம் தணிந்தால்தான், புற உலகம் என்று ஒன்று தனியே இயங்குகின்றது என்னும் கருத்து நீங்கும். அது விலகாமல் ஆன்மா விளங்காது. ஆன்மாவின் உண்மை விளங்கினால், உலகம் என்ற தனியான தோற்றம் நேராது.

    மனம் என்பது ஆன்மாவில் விளங்கும் ஓர் அதிசய சக்தி. அதன்மூலம்தான் நமக்கு எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனைத்தையும் விலக்கிப்பார்த்தால், எண்ணமல்லால் மனம் என்று ஒன்று தனியாக இல்லை என்பது தெரியவரும்.

    `நான் யார்?` விசாரணை மூலமே மனம் தணிந்து ஆன்மாவில் ஒடுங்குகிறது.

    12. நான் யார் என்பது என்ன?

    மந்திரமில்லை. தந்திரமில்லை. சூத்திரமில்லை. சாத்திரமில்லை. அடிப்படைக் கேள்வி! ஒருவர் நம்மிடம் வந்து நீ யார் என்று கேட்டால் பெயரைச் சொல்கிறோம்; பெற்ற பட்டத்தைச் சொல்கிறோம்; வேலையில் இருக்கும் பதவியைச் சொல்கிறோம். இந்த அடையாளங்களா நாம்? இதில் எதுவுமே நாம் பிறப்பதற்கு முன்னே இருக்கவில்லை. பிறந்த உடனேயும் தோன்றவில்லை. ஆனால் அப்போதும் நாம் இருந்தோம் அல்லவா? எனில் நாம் யார் என்பதே ரமணரின் கேள்வி.

    எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்லப் போகிறேன்? இந்தப் படைப்பு ஏன்? இந்தப் பிறவி எதற்கு? என்பன போன்ற வினாக்களை அடிப்படைக் கேள்விகள் என்கிறார்கள். ஆனால் இந்தக் கேள்விகளெல்லாம் எழுவது யாருக்கு? நமக்கு! எனில் நாம் யார்? அதைத் தெரிந்துகொள்ளாமல், இந்தக் கேள்விகளுக்கு எப்படி விடைகாண முடியும்? ஆனால், நாம் யார் என்று தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளே எழாது, அதாவது அவற்றுக்குத் தேவையே இருக்காது என்பதே பகவானின் உபதேசம்.

    பண்டிதர்களானாலும், பணம்படைத்தோரானாலும், பலமுள்ளோரானாலும், பதவிகள் பல வகிப்போரானாலும், பற்பல திறமைகள் கொண்டோரானாலும், பார்ப்பதற்குப் பேரழகு வாய்த்தவர்களானாலும், பண்பாளர்களேயானாலும், இந்தக் கேள்வி யாருக்கு எழவில்லையோ அவர்கள் பாமரர்களே.

    இந்த அடிப்படைக் கேள்வி யாருக்கு எழுகிறதோ அவர்களே ஆன்மிக ஆர்வலர்கள். அவர்களே பாதையைக் கண்டுகொண்டவர்கள்.

    இந்தக் கேள்வி யாருக்கு முழுதுமாய் எழுந்து முற்றாகத் தீர்ந்ததோ அவர்களே இறுதி இலக்கை அடைந்த ஞானிகள்.

    இந்தக் கேள்வி பாமரருக்கும் கிடையாது, பகவானுக்கும் கிடையாது என்பது அவர்களிடையே இருக்கும் சம்பந்தமில்லாத ஒற்றுமை. Irrelevant similarity. நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும் என்பது போலத்தான்!

    13. சரி, ஆனால் மனமே தேகாபிமானத்திற்கும், எல்லாத் தோற்றங்களுக்கும் காரணம் என்றால், இந்த மனமும் பொய்யென்றால் இந்தப் பொய்யான மனதில் எழும் நான் யார் விசாரணை எப்படி மெய்யுணர்வில் கொண்டு சேர்க்கும்?

    வினையழியத் தேவை வினை; அதுபோல் பொய்மை

    மனமழியத் தேவை மனம்.

    தீயணைக்கத் தீவைப்பார் திக்கறிந்த நுண்ணியர்

    மாயைக்கு மாயை மருந்து.

    விசாரணை, மனத்தில்தான் துவங்குகிறது என்பது உண்மை. மனதின் ஒருபகுதிதான் அதற்குப் பயன்படுகிறது என்பது உண்மை. ஒரு வகுப்பறையில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை `லீடர்` என்று தேர்ந்தெடுக்கிறார்கள், அது போல. மரத்தில் ஆடும் ஊஞ்சல் மரப்பலகையில் ஆனதே! உரத்தில் வளர்ந்த செடியில் பூத்த மலர் உதிர்ந்து உரமாகிறதே!

    எண்ணங்கள் என்பவை இடையறாது முளைத்துக்கொண்டே இருப்பவைதான். தியானம் என்று உட்கார்ந்தால் எப்படி ஊரிலிருக்கும் கொசுக்கள் யாவும் நம் மூக்கு நுனியை நோக்கிப் படையெடுக்குமோ, அப்படித்தான் எண்ணங்களும்! தேனடையில் கல்லெறிந்ததுபோல, புற்று அதிர்ந்து புறப்படும் ஈசற் படைகள்போல எண்ணங்கள் நில்லாமல் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. இந்த சஞ்சலத்தைத்தான், சலிப்பைத்தான், ஓயாத சலனத்தைத்தான் மனம் என்கிறோம்.

    ஆன்மா, வீடு. மனம், கதவு. கதவு வீடில்லை; வீட்டிற்கு அந்நியமுமில்லை. ஆழக் கடலில் அமைதி. மேலே அலைகளின் சலனம். அலைவேறு கடல்வேறு என்று தோன்றினாலும் அலைகள் எழுவதும் விழுவதும் கடலில்தானே? விளக்கும் வெளிச்சமும் ஒன்றா வேறா? திருக்கோயிற் கதவுகள் நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன. எங்கிருந்தும் சன்னிதியை தரிசிக்கலாம். திரும்பவேண்டும். இதுவே பதஞ்சலி பேசும் சித்த விருத்தி நிரோதம். அதை அடையும் மார்க்கமே ரமணரின் நான் யார் விசாரணை.

    எனவே, எண்ணங்களை இடையூறாகக் கருதாமல் நல்வாய்ப்பாகக் கொள்ளலாம். எப்படி? இடையின்றி எண்ணங்களால் பந்தாடப்படுகிறவர்கள்தானே நாம்? இன்றுதானே அவற்றைக் கவனிக்கத் துவங்கியுள்ளோம்? கவனிக்க கவனிக்க அவை வெளியே வரும். ஆம், பகவான் சொல்கிறார்: `உள்ளிருப்பதுதானே வெளியே வரும்? வெளியே வராமல் எப்படி வெட்டுவது? எண்ணங்கள் தன்னிச்சையாய் எழுவது, அவை தீர்வதற்கே! எனவே, விசாரிக்கும் மனத்திற்கு அவை வலிமையே சேர்க்கும்.`

    பகவான் இதனை வெகு எளிமையாகவே சொல்லியிருக்கிறார்: `துவக்கத்தில் அறிவு என்பது புத்திபூர்வமானதே. ஆனால், இடைவிடாத தியானத்தின் மூலம், ஒருவன், தனது புத்தி என்பது ஒரு மகத்தான சக்தியால் வழிநடத்தப்படுகிறது என்று உணர்ந்துகொள்கிறான். ஆசைகள் எதுவும் இல்லாதிருப்பதே மோக்‌ஷம். பின்பு இருமை என்பது கிடையாது.`

    14. நான் யார் விசாரணையின் சுருக்கம் என்ன?

    முதலில் எண்ணம் தோன்றும்
    அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைப்பற்றி அபிப்பிராயமோ அக்கறையோ கொள்ளாமல், அது எழுந்தது யாருக்கு என்று விசாரிக்க வேண்டும்
    எனக்கு என்று பதில்வரும்
    எனக்கு என்றால் நான் யார் என்று விசாரிக்கவேண்டும்
    இந்த வழிமுறையை ஒவ்வோர் எண்ணம் தோன்றும்போதும் கடைபிடிக்கவேண்டும்

    இது எண்ணங்களை திசைதிருப்பாது. மனதை உள்முகப்படுத்தும்.

    இடைவிடாமல் அப்பியசித்தால், எல்லா எண்ணங்களுக்கும் மூலம், நான் என்னும் உணர்வே என்பது தெரியவரும். அந்த உணர்வில் நீங்காமல் நின்றால், அது நீங்கி நான் தானாகி, தானே அனைத்துமாகி விகசிக்கும். அதுவே முடிவு.

    15. ஆனால், நான் யார் என்னும் விசாரணையிலும் நான் என்னும் உணர்வுதானே இருக்கிறது?

    மனத்தைப் பற்றிச் சொன்னது இதற்கு முற்றும் பொருந்தும். ஏனெனில், மனம்தான் அந்த அகங்காரமாகிய நான். தன்மை இருந்தால், முன்னிலை, படர்க்கைகள் தோன்றத்தான் செய்யும். நான் என்று ஒன்றிருந்தால், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், அவை என்று தொடரத்தான் செய்யும். தன்மையின் (நான்) நிஜம் என்னவென்று பார்த்தால், அது தீரும். அத்துடனே முன்னிலை, படர்க்கைகள் தீரும். யாவும் ஒன்றாகச் சுடரும் என்பது பகவானின் விளக்கம். (பக்தராஜ் மஹராஜ்: து ஹைனா பகவான் இஸ்லியே மே ஹூம்!)

    நான் யார் என்று விசாரிக்கும் மனம் இதயத்தை அடைகிறது. (இதயம் என்பது இடப்புறம் இருக்கும் உறுப்பு அல்ல, மனதின் மூலஸ்தானம்) மனம், தன் மூலத்தை அடையும்போது, மனம் தீர்கிறது. அதே கணம், ஆணவம் நொறுங்கிப்போகிறது. நான் – நான் என்று மனம் சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஆன்மாவே நான் – நான் என்று சுடர்கிறது.

    ஆகவே, அடிப்படை நான் என்னும் உணர்வுதான். அதன்மீதுதான் எண்ணங்களாலான மனம் எழுகிறது. அந்த மனதை வைத்துக்கொண்டே நான் யார் என்ற விசாரணையை ஏற்படுத்தி, அதில் உறுதியாக ஈடுபட்டால், மனம் ஞானத் தீயில் வெந்து சாம்பலாகிறது, `பிணம் சுடு தடி போல்.`

    16. இதுதான் எய்த வேண்டிய ஞானமா?

    ஆம். எது அறிவுமில்லையோ, அறியாமையுமில்லையோ அதுவே ஞானம். பொருளறிவு உண்மையான அறிவாகாது. அறிவதற்கு வேறொன்றும் இல்லை என்பதாகவே ஆன்மா ஒளிவிடுகிறது. அங்கே அறிவு என்று அறியப்படவும் ஒன்றுமில்லை. அது சூனியமும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் மாமுனி.

    17. எனில், தவம் என்பது என்ன?

    நாயனா என்று வாஞ்சையோடும் அன்போடும் அழைக்கப்பட்ட காவ்யகண்ட கணபதி, பகவானுடைய கால்களைப் பற்றி, `படித்தும் நான் அறியாமையில் இருக்கிறேன், பலகோடிமுறை மந்திரங்களை ஜெபித்தும் அமைதியின் அனுபவமின்றி இருக்கிறேன், காத்தருள வேண்டும்,` என்று மனமுருகிக் கேட்டுக்கொண்டார். பதினொரு வருடங்களாகப் பேசாதிருந்த ரமணர் வாய்திறந்து சொன்ன வாசகம்:

    நான் எனும் உணர்வு எங்கிருந்து எழுகிறது என்று மனது விசாரித்து அங்கேயே அதன் உற்பத்தி ஸ்தானத்திலேயே ஒடுங்கினால் அது தவம்
    மந்திரத்தின் ஒலி எங்கிருந்து துவங்குகிறது என்று விசாரித்தால், மனது உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கிவிடும். அது தவம்

    இந்த உரையாடலிலிருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடிய சில நுண்மையான சேதிகள் உள்ளன:

    தன்னை அறியத் தலைப்படாமல், வேறெதனையோ நாடி, அது நிறைவேறுவதற்காக மேற்கொள்ளும் வழிகள் மனிதனை முடிவு தெரியாத நெடும்பயணத்தில் ஆழ்த்திவிடும்
    எதற்கு இதை மேற்கொண்டோம் என்ற நோக்கத்தின் நினைவு பிசகிவிடுவதாலும் முடிவு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது
    மனம், முற்றும் ஒடுங்குவதே தவம்
    வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் அங்ஙனம் இருப்பதே தவம்
    விசாரணையின் விளைவே தவம். அல்லாமல், தவத்தில் விளைவு கிடையாது. அது நட்ட விதையைச் சுட்ட தெளிவில் நிலைத்திருப்பது

    `செய்கதவம் செய்கதவம் நெஞ்சே தவம்செய்தால் எய்த முடியாதன எய்தலாம்,` என்பார் பாரதியார். கூர்ந்து நோக்கினால், எய்த முடியாதது தவம். ஏனென்றால் தவம் என்பது செய்யப்படுவதில்லை. அது மனம்தாண்டிய நிலை என்னும் நிகழ்வு. தவத்தில் நிலைகள் உண்டுதான்.

    ஒன்றை விழைந்து செய்யப்படுவது ஆரம்பநிலைத் தவம். தேவர்களும் அசுரர்களும் செய்த தவம் இது. ஒன்றில் இடையின்றி ஒன்றிக் கிடப்பது ஆன்ற தவம். இதுவே ரமணருக்கு இயல்பானது.

    திருவள்ளுவரின் வாக்கும் ரமணரின் அனுபவமும் கச்சிதமாகப் பொருந்துகின்றன

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

    அற்றே தவத்தின் உரு.

    தமக்குற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமையும் ஆகிய அவ்வளவினதே தவத்தின் வடிவாகும்.

    ரமணர், தனக்குற்ற நோயை எப்படிப் பொறுத்துக்கொண்டார், எவ்விதமெல்லாம் எவ்வுயிரிடத்தும் கருணையோடு இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தால் இந்தக் குறளின் பொருள் விளங்கும்.

    தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார்

    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

    தனது தொழிலைச் செய்வார் என்று எவரைச் சொல்லலாம்? துறந்து தவத்தில் இருப்பவரையே! மற்றவர்கள் ஆசையில் அகப்பட்டு, கேடு வரவழைத்துக்கொள்கிறார்கள்.

    ரமணர், தவமன்றி வேறேதும் செய்யவில்லை. சொல்லப்போனால் அதைக்கூட அவர் செய்யவில்லை. அது அவருடைய இயல்பு. அது இன்னும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது!

    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

    மன்னுயிர் எல்லாம் தொழும்

    தன்னுயிர், தான் என்னும் முனைப்பற்றானை, மற்ற உயிர்கள் எல்லாம் தொழும்.

    ஒருமையில் உயிருண்டு ஆளில்லை. அந்த ஒருவனை வணங்காத கோளில்லை.

    துறவைப் பற்றிப் பேசும் குறட்பாக்களும் ரமணரைப் பார்த்து எழுதியது போலவே இருக்கின்றன:

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்

    இந்தக் குறளின் விளக்கம்தான் ரமணரின் நான் யார் விசாரணை!

    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல்

    உற்றார்க்கு உடம்பும் மிகை

     

    யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு

    உயர்ந்த உலகம் புகும்

    18. நன்று; மீண்டும் 1907, நவம்பர் 18க்குச் செல்வோம். நாயனாவுக்காக ரமணர் மெளனத்தைக் கலைத்தாரா?

    இல்லவே இல்லை! நிதம்நூறு விதமாக ஒலிமேவும்போதும் பதறாது வானம் கலையாது மெளனம். வானில்லை வண்ணம் நானில்லை எண்ணம்…

    ரமணரைப் பொறுத்தமட்டில், மெளனத்தில் திளைத்திருப்பதே தவம். தவத்தில் ஆழ்ந்திருப்பதே மெளனம். பேசுவதால் அந்த மெளனம் முறிவதுமில்லை எழுந்து நடப்பதால் அந்தத் தவம் கலைவதுமில்லை. சமாதி நிலைகளைக் கடந்த சகஜமே அவருடைய இயல்பு.

    ஒன்றை அடைவதற்காகச் செய்யப்படுவதில்லை தவம். அனைத்துமான ஒன்றில் ஆழ்ந்திருப்பதே தவம்.

    `மெளனம் என்பது ஒலியற்ற நிலையல்ல. மனமற்ற நிலை.` பேசாதிருப்பது மெளனம் அல்ல. எனினும், ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு, குறைவாகப் பேசுவது நல்லதே.

    மெளனம் பருகவொரு முன்மோனம் வேண்டுவதால்

    மெளனம் பழகல் முறை.

    ஒரு சில நிமிடங்களே நடந்த மரண அனுபவத்தில் ஒரேயடியாக விரிந்துகொண்டது ரமணரின் அகண்ட மெளனம். எந்தப் பேச்சாலும், எதைக் கேட்பதாலும், எந்த நடவடிக்கையாலும் அது எள்ளளவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்தது. சற்றே நாம் சும்மா இருந்தால், இன்றும் நம் இதயத்தின் அடித்தளத்தைத் தொட்டு உயர்த்துகிறது. எனவே, அவர், `மெளனம் என்பது உரத்த பேச்சு,` என்றது எண்ண எண்ண இனிக்கிறது.

    19. இந்த விசாரணையை எல்லோரும் கடைபிடிக்கலாமா?

    நிச்சயமாக! உயிரும் உணர்வும் உடையோர் எவரும், அமைதி விழையும் எவரும். அகலாத ஆனந்தம் வேண்டும் எவரும் இதைக் கடைபிடிக்கலாம். இதில் ஆண் – பெண், ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன் என்ற பேதங்கள் எதுவும் இல்லை.

    நீரில் விழுந்த பொருளை எடுக்க ஒருவன் நீரில் குதிப்பதுபோல, மூச்சையும் பேச்சையும் அடக்கித் தன்னுள் மூழ்கி நான் என்பது எங்கிருந்து துவங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

    எந்த எண்ணத்திற்கும் இடம்கொடாமல், ஆன்மா என்றால் என்ன என்னும் விசாரணை தவிர வேறு எண்ணம் இல்லாதிருத்தலே பேரிறைவனிடம் சரணாகதி அடைவதாகும். அதைப்பணிந்து தஞ்சமடைய வேண்டும். எதைப்பற்றியும் எண்ணாதிருக்க வேண்டும். சுமையை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாய்ப் பயணம் செய்யவேண்டும்.

    20. அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

    அது கைம்மாறு வேண்டா கடப்பாட்டு மாரி! அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அதற்கு எந்தத் தேவையும் கிடையாது. ஆனால், அதுவே திருவாய் திறந்து சொன்னது: `எனக்கென்ன வேண்டும்? ஏது தேவை? வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை உணர்ந்து ஆன்மாவில் நிலைபெறுவதற்கு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்தால், நான் மிகவும் திருப்தியடைவேன்.`

    அதைச்செய்யத் தோதான எல்லாவற்றையும்தான் அவர் வழங்கியிருக்கிறாரே!

    ஆக, ரமணர் நமக்கு வழங்கியிருப்பவை:

    நான் யார் என்னும் விசாரணை
    ஒலி எங்கிருந்து எழுகிறது என்று கவனித்தல்
    தவத்திற்கு விளக்கம்
    பரிபூரண சரணாகதி

    21. சரி, இந்த வழியில் சென்றால், எப்போது முடிவு கிடைக்கும்?

    அது நம் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்தது! `விடுதலை என்பது ஒரு கணத்தில் எய்தப்படுவது. அந்தக் கணத்தில் நிகழ்முறைகள் எதுவும் இல்லை. ஆனால், அந்தக் கணத்தை எய்துவதற்கு வழிமுறைகள், நிகழ்முறைகள் தேவைப்படுகின்றன.`

    ரமணர் கேட்கிறார்: `ஆனந்தம் வேண்டும், நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், ஆணவத்தை விடமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொள்கிறார்கள். அப்புறம் எவ்விதம் இது சாத்தியம்? இரண்டும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. ஆசையற்ற நிலையில் ஆழ்ந்திருப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. ஆணவமோ, ஆசைகளால் போஷிக்கப்படுகிறது. எனவே, ஆணவம் என்பது அறவே தலைதூக்காதபோதுதான் ஆன்ம விடுதலை என்பது சாத்தியமாகும். இதை அடைய சுய விசாரணையே சிறந்த வழி.`

    ஆம், ஆனந்தமும் ஆணவமும் சேர்ந்திருக்க முடியாது. `ராம் இருந்தால் கபீர் இல்லை. கபீர் இருந்தால் ராம் இல்லை,` என்பார் கபீர் தாசர். மனம்தான் நான் என்னும் ஆணவம். மனமிருந்தால் ஆன்ம நிலை தெரியாது. ஆன்மா விழிப்புற்றால் மனம் இருக்காது.

    ஆன்மநிலை அசையாத நிலை. அதாவது எந்தவிதமான சலனமும் அற்ற நிலை. `மேகங்கள் நகர்கின்றன. நிலவு நகர்வதுபோல் தோன்றுகிறது. புலன்களின் சலனம் ஆன்மாவின் சலனமாகத் தெரிவது அறியாமையே,` என்று பகவான் விளக்குகிறார். எனவே, `முயற்சி என்பது மனத்தை ஒரேயடியாகத் தீர்க்கவே.`

    22. எதுவரை இந்தப் பயணம்?

    முன்பே சொன்னதுபோல் அது முயற்சியைப் பொறுத்தது. இதில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன:

    சுய முயற்சி
    இறையருள்
    அருள் இறங்கும் தருணம்

    முயற்சியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மனம், தனது மரணத்திற்கு அஞ்சி குறுக்கே வந்து நிற்கும்! வேடங்கள் புனைந்து நம்மைத் திசைதிருப்பும்! ஆனால், முயற்சி என்பது விடாமுயற்சி ஆகிவிட்டால் பிறகு அதில் மாற்றமிருக்காது.

    இறையருள் என்பது எப்போதும் இருக்கிறது. முயற்சியும் அருள்தான் என்பதை அப்பியாசி பிற்பாடு புரிந்துகொண்டு நெகிழ்கிறான். அவனருளாலே அவன் தாள்வணங்கி. அருள் என்பது எப்போதும் இருக்கிறது என்பார் பகவான். பின்பு நாம் அதை உணர்வதில்லை? ஆசைகளிலிருந்து விலக விலக, புறவுலகில் நம் பற்று நீங்க நீங்க, அருள் விகசிக்கும்.

    ஆனால், முடிவு எப்போது என்ற கேள்விக்கு விடை கிடையாது. அது முழுக்க முழுக்க அந்த இறையின் சித்தமே ஆதலாம், அந்தக் கேள்வியையே எழுப்பாமல், தொடர்ந்து முயன்றிருத்தலே நமது கடமையாகிறது. `பிறகு, ஒருகரம் நீண்டு, நம் கரத்தைப் பற்றி, அப்புறத்திற்கு இழுத்துக்கொள்ளும்,` என்பார் பகவான். கண்ணை அகலத் திறந்துகொண்டு காத்திருப்பதே கடுந்தவம்! `இந்தஜார் மே மஜா ஹை!

    ரமணரின் சிறப்பு அவர் அடைந்த ஒப்பற்ற நிலை மட்டுமல்ல. அந்த நிலையை நாமும் பெறலாம் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தி நம்மை அவருடைய பாதையில் இன்றும் நடத்திச் செல்வதே அவருடைய சிறப்பு. அதற்கு இன்னொரு பெயர், காரணமற்ற கருணை. அதுவே கடவுளின் இயல்பு.

    Share
  • திருமால் திருப்புகழ் (90)

     
    கிரேசி மோகன்

    blogger-image-1138355641

    Kaliyamardhana. Acrylic on canvas. #Krishnafortoday
    Keshav

     
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காத்துபுகா கர்ப்பத்தில், காத்துக் கிடந்தன்று,
    காத்தாய் பரீட்சித்தைக் கார்முகிலே, -பூத்துப்,
    புலனைந்தால், வாடிப் பிறந்திறக்கா வண்ணம்,
    தலையெழுத்தில், போடுகையெ ழுத்து….(56)

    எழுத்தறி வித்தாய், எழுதவைத்திப் பூனை,
    கழுத்தினில் பக்திமணி கட்டி, -வழுத்திடும்,
    ஆஸ்தானப் பாடகனாய், ஆக்கா(து) எனையேற்பாய்,
    சாஸ்தாவாய், எண்ணிச் சுமந்து….(57)

    சுமந்தஅன்னை விட்டு, சுமந்துன்னைத் தந்தை,
    அமைந்தஅன்னை ஆய்ச்சிக்(கு) அளிக்க, -உவந்துநீ,
    அவ்வாழ்வை ஏற்றாய், அவதாரம் என்றறிந்(து),
    இவ்வாழ்வை ஏற்பாயோ இன்று….(58)

    இன்றுபோய் நாளைவா, என்றிலங்கை வேந்தனிடம்,
    அன்றுரைத்த அன்பே, அரிமயமே, -இன்றாகி,
    நேற்றான நாளையே, நேரான வட்டமே,
    கூற்றான காவலா காப்பு….(59)

    காப்பாய் கருவுக்கு, நீர்ப்பையாய் தேரைதனக்(கு),
    ஆப்பொழிந்த ஆன்மாக்(கு) அரவணைப்பாய், -பூப்பாயே,
    யாப்பாய் எனக்குள்ளே, நூற்பாய் கவிதைகளை,
    தோப்பாய் இருப்பேன், தனித்து….(60)

    ——————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

    Share
  • குறளின் கதிர்களாய்…(28)

    -செண்பக ஜெகதீசன்

    தீயவை செய்தார் கெடுத னிழல்தன்னை
    வீயா தடியுறைந் தற்று.
        (திருக்குறள்-208: தீவினையச்சம்)

    புதுக் கவிதையில்…                                                                         shadow-of-a-man
    நிழல் அவனை
    நீங்காது தொடர்ந்துவந்து
    நிற்கும் காலடியில்…

    அதுபோலத்தான்
    அடுத்தவர்க்கு அவன் செய்யும்
    தீமைதரும் கெடுதல்,
    தீராது தொடர்ந்துவந்து
    சேரும் அவனையே…!

    குறும்பாவில்…
    நிழல்போல் தொடர்ந்துவந்து சேரும்
    நீ பிறர்க்குச் செய்த
    தீமைதரும் கெடுதலே…!

    மரபுக் கவிதையில்…
    செல்லு மிடமெலாம் தெடர்ந்துவந்து
         சேர்ந்திடும் நிழலது உன்னடியே!
    தொல்லை பிறர்க்குத் தந்துசெய்யும்
         தீமை தந்திடும் கெடுதலதும்
    நில்லா தென்றும் உந்தனையே
         நீங்கா தெங்கும் தொடர்ந்திடுமே,
    எல்லாம் உன்னைச் சேர்ந்திடுமே,
         எங்கும் தொடரும் நிழல்போலே!

    லிமரைக்கூ…
    உன்நிழல் உன்னைத் தொடர்ந்துன் காலடிக்கே வரும்!
    பிறர்க்குநீ செய்த
    தீமையின் கெடுதல் தொடர்ந்துனக்குத் தொல்லை தரும்!

    கிராமிய பாணியில்…
    போவாதய்யா போவாது
    ஒன்னவுட்டுப் போவாது
    ஒன்னெழலு போவாது
    போற எடமெல்லாம் கூடவரும்
    ஒன்
    காலடியத் தேடிவரும்!

    அதுதான் கத,
    அடுத்தவுனுக்குக் கெடுதல்செஞ்சா
    அதுவுடாது ஒன்னத்தான்
    தொடந்துவரும் ஒன்னத்தான்
    தொல்லதரும் ஒனக்குத்தான்!

    போவாதய்யா போவாது
    ஒன்னவுட்டுப் போவாது
    ஒன்னெழல்போல் போவாது!

     

    Share
  • உன்னருளாலே உன்னடி பணிந்து… (இறைக்கவிதைகள்)

     

    இசைக்கவி ரமணன்

     

    இந்தக் கவிதைகளில் இலக்கியம் விழையாதீர்கள்! இலக்கணமும் தேடாதீர்கள்! எனது தேடலில் நேர்ந்த மனவிம்மல்கள், மின்னல் வீச்சுக்கள், எதிர்பாராத அமைதிக் கணங்கள் இவையே இந்தக் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும். ஒத்த மனமுள்ளோர் உடன்கண்டு கொள்ளலாம்.

    நான் இறைவன் முன்னால் இருகரம் கூப்பி, எப்போதும் நன்றியுடன் நின்றுகொண்டிருக்கிறேன். அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. தன்னை நினைக்க வைத்தானே, அந்த தயைதாங்க முடியாமல் தழுதழுத்து நிற்கிறேன்! அவ்வளவுதான்!

    anju3

    எனவே, சான்றோர் வாக்கையே சற்றே மாற்றி உன்னருளாலே உன்னடி பணிந்து என்று தலைப்பிட்டிருக்கிறேன்.

     

    காப்பு

    முந்தி வினாயகனை மூலத்தின் நாதனை hanuman-vadai-maalai
    வந்தித்தேன்! வாழ்வாம் வரம்பெற்றேன்! உந்தி
    அருவியெனப் பொங்கும் அருந்தமிழைச் சின்னக்
    குருவி அருந்துவதே கூத்து!

     

    என்னிறைக்கு

    உன்னரு ளாலே உன்னடி பணிந்து
    பொன்னடி நிழலில் பூவென நிற்கிறேன்
    புன்னகை என்னும் தென்றலில் சிலிர்க்கிறேன்
    என்றும் நீ என்னவன் என்றும் நான் உன்னவன்
    என்ற நினைப்பிலே எல்லாம் இழக்கிறேன்
    நன்று காதலென் நம்பியே! இனிநான்
    சென்றெதும் காணேன் சேவடி போதுமே!

     

    அனுமனுக்குப் பஞ்சகம்

    1

    ஆகாசம் பூமி அண்டபகி ரண்டம்DSC07426-765973

    அனைத்தும் அதிர்ந்தாடவும்
    அதிர அதிர உதிரும் அழகுமலர் போல்மனதில்
    அகலாத மணமாகவும்
    வாகான சாமரம் ரகுராம நாமமதில்
    வந்துலவும் பூந்தென்றலே!
    வந்துவிளை யாடும்வினை பந்துவிளை யாடும்
    வசந்தக்க ரம்மின்ன லே!
    சோகத் திலங்கையினைச் சுட்டுப் பொசுக்கிவரும்
    சூடா மணிக்கொளியிவன்!
    சுந்தரன்! நிரந்தரன்! சுழன்றிடு மனத்தினில்
    சுகம்தர வரும்சுடரிவன்!
    ஏகாந்த மாய்நெஞ்சில் எங்கோ துளிர்க்கின்ற
    எல்லையில்லா அமுதமே!
    என்றெனது ஜென்மமெனும் குன்றுமனதில் நின்
    றெழுந்தாடும் உன்பாதமே?

     

    2

    உருகிவரும் கரியமனம் கருவிழியின் ஒருவழியில் ssss
    ஒருதுளியில் ஊசலாடும்!
    உதிருமுனம் உனதுமுகம் உளமெங்கும் மிகவந்து
    ஒருவார்த்தை பேசும்! பாடும்!
    பெருகுமுகில் திரைவிலகப் பிறைநிலவு நுதல்பெருகப்
    பீறிட்டெழும் சூறையே!
    பின்னங்க ளாய்ச்சிதறும் பிள்ளை மனத்தோரம்
    பிறழா ஒளிப்புள்ளியே!
    அருளுனது! அன்புனது! அச்சங்க ளேயெனது!
    அறியவைத் தாய்தேவனே!
    ஆடுகட லோடுவிளை யாடுமதி காலையென
    அருகில்வந்தாய் நாதனே!
    பெருகுமொரு நீலப் பிரகாசம் பதங்கொண்டு
    பிரளயம் நடிக்கவேண்டும்! ஒரு
    பெயரற்ற மருவாகப் பித்தன் திரிந்தாலும்
    திருவடி நினைக்கவேண்டும்!

     

    3

    பகலிரவு பகையுறவு பழையகன வென்றுநிதம் anju
    படியுருளும் நினைவுமாயம்! அதில்
    பலகோடி காலப் பனிமலர்கள் பாதப்
    பரல்வீசும் ஞ்சநேயம்!
    சுகம்ராம நாமம்! ரோமாஞ்சனம்! தேகம்
    ரகுராம னின்யெளவனம்!
    சொல்லி முடியாதவொரு சோதியருஞ்சோதிநீ!
    தோள்களோ ரமணமெளனம்!
    அகமென்றும் புறமென்றும் அறியாத ராகப்
    பிரவாகம்! அகண்ட நாமம்!
    அழகுதொழு தேபழகும் மழலையுரு வம்தோளில்
    காய நீலம் குலவும்!
    புகைசுருளும் நெஞ்சில் பொருந்தாம லேகுமுறும்
    பொல்லாத தீக்குழம்பே!
    போதுமினி! மீதமெது? போதவிழும் நேரமிது!
    பாதைமனம் பாதமயமே!

     

    நீளநீ ளப்பெருகும் நிமலமே! நிர்மலம் ANJU DARPANA ALNKM DPBLR B
    நீந்திவிளை யாடுங்கடலே! ஒரு
    நிமிநேர மின்னலில் நித்தமெனைக் கொண்றயிருள்
    நிழலையு மொழித்த அருளே!
    மாளமா ளப்பெருகும் மாயக்க ரங்களில்
    மழலைத விக்கலாமா?
    மன்னனுன் சன்னிதியில் மண்டைசித றும்போதும்
    மெளனித்தி ருக்கலாமா?
    வாளே இருக்கையாய் வாகா யமர்ந்தாலும்
    வாயுந்தன் பெயர்சொல்லுமே!
    வானத்து மீனெலாம் வந்துபொடி யும்போதும்
    வசந்தப்ப தம்பாடுமே!
    கேளாத தேபோலக் கீழ்வானமே இன்னும்
    கிளம்பாதிருக்கலாமா?
    கீற்றான உன்பாதம் ஏற்கத் துடிக்குமனக்
    கடலை மறக்கலாமா? (4)

     

    கஞ்சமலர் போலவரும் பஞ்சமுகம் நெஞ்சிலெழக்Sri Panchamukha Anjaneyar - Gowrivakkam- Chennai
    கலிதொலைந் தேபோகுமே!
    காலவெளி என்ற இரு கண்ணிமை நிலைக்கவொரு
    காந்திமீ றிப்பெருகுமே!
    செஞ்சுடர்க ளத்தனையும் நின்றுபெரு கித்திலக
    மென்றுநித் தம்சுடருமே!
    சேவடி நினைத்தகணம் காவடி எனக்ககனம்
    திசைவிண் டதிர்ந்தாடுமே!
    அஞ்சனையின் நெஞ்சமோர் அழகுவடி வங்கொண்டு
    அண்டமெல் லாம்பெருகுமே!
    ஐயனே! என்றுவிழி மெய்யாய்ப் பனிக்கும்கணம்
    அள்ளவரும் வாயுமுகமே!
    தஞ்சம் தஞ்சம் என்று தாளம்போடும் நெஞ்சம்
    தரையாய்க் கிடக்கவேண்டும்
    சிரஞ்சீவி யாயுந்தன் சிங்காரப் பாதங்கள்
    சுகமாய் நடக்கவேண்டும்! (5)

    Share
  • அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    இப்போது பிடிக்கிறது
    உன்னை                                                                                                              varnas  - abin enru

    ஒவ்வொருவருக்கும்
    ஒரு
    குடும்பப் பெயருண்டு

    என் குடும்பத்திற்கு
    என்னால் பெயர்வர
    எண்ணியிருக்கும்போது
    என்னை
    உன் குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள்

    உண்மையில் நான்
    உன்குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல
    ஆதியில்
    என்குடும்பத்தின் பெயர்
    வேறு

    வரலாற்றுச் சதியில்;
    சகதியில் வந்ததுதான்
    உன்பெயர்

    உன்பெயரில் இயங்க
    ஒருபோதும் உடன்பாடில்லை
    அதுபோல்
    இன்னொருபெயரில் இயங்க
    எள்ளளவும் விருப்பமில்லை

    என்ன செய்வது?
    ஏதாவது ஒரு
    குடும்பத்தைச் சேர்ந்தவனாக
    இருக்கவேண்டுமே?

    எனவேதான் நான்
    உன்
    குடும்ப உறுப்பினன்

    இதுவரை
    உன்னையும்
    உன்னைப் போன்றவர்களையும்
    பிடிக்காது எனக்கு
    ஆனால்
    உன்னைப்போல் யாருமில்லை

    உன்பெயர்போல்
    ஒருபெயரும் வேண்டாமென்பவர்கள்
    என்னைப்போல் மிகச்சிலரே
    நாங்கள்
    உலகின் சிறுபான்மை
    மிகச் சிறுபான்மை
    நாங்கள்தாம்
    சிறுபான்மையின் குரல்!

    இன்னும் சிலர்
    உன்முகவரி
    இருந்துவிட்டுப் போகட்டுமே
    என்பவர்கள்
    ஆனால்…தன்
    குடும்பத்தைத் தாண்டிச்
    சிந்திப்பவர்கள்

    இன்னும் சிலர்
    என்னினும்
    ஆழமாய்ச் சிந்திப்பவர்கள்

     பிறப்பே
    சாபம் என்பவர்கள்
    சகித்துக்கொண்டே
    சவம் ஆனவர்கள்

    அங்கே
    பெண்களின் நிலையோ
    பேசாநிலை
    பெருமூச்சாய்
    முடிகிறநிலை

    அவர்கள்
    வெளிவரமுடியாப்
    பச்சைப் பசுங்கிளிகள்

    சிலர்
    பச்சையாகவே
    உன் வாரிசு என்கிறார்கள்

    நீங்கள்
    போதித்ததைக் காட்டிலும்
    புதிதாய்ப் போதிக்கிறார்கள்
    உங்கள்
    போதையில் இருக்கிறார்கள்

    இவர்கள்
    உங்கள்
    கங்காணிகள் ஆனதால்
    உங்கள் பெயர்
    களங்கமானது

    அன்பையும்
    மனிதத்தையும்
    மருந்தெனவும் எண்ணாதவர்களால்
    எப்படிப் புனிதம் கிட்டும்?

    அதனால்தான்
    நீங்கள் ’அபினென்று’
    அழைக்கப்படுகிறீர்கள்
    நீயும் அபின்தான்
    உன்கோட்பாடுகளில்
    அபத்தமிருக்கிறது
    ஆபத்தில்லை
    குப்பைகளதிகம்
    கூட்டிப் பெருக்கலாம்
    வஞ்சனைகளுண்டு
    கொடூரமில்லை

    எங்களைப் பிரித்துப்
    பார்த்தாய்
    ஆலயத்திலேயே எங்களை
    வெளியே நிறுத்தி
    வேடிக்கை பார்த்தாய்

    ஆலய நுழைவு
    ஆர்ப்பாட்டம் நடத்தினோம்
    வீதியில் நடக்க
    வேண்டிக் கிடந்தோம்

    பின்பு…
    ஆலயத்திற்குள்வர
    நாங்களே விரும்பவில்லை
    ஆண்டவனால் எதுவும்
    ஆகாதென்பதை அறிந்துகொண்டோம்!!

    ஆண்டவனே
    குருக்களிடம்
    கூனி நிற்கும்போது
    ஆண்டவனா தேவை?
    ஆண்டன் சந்நிதியில்
    ஆயிரம் நடக்கிறது
    ஆண்டவன் என்ன செய்தான்?
    தெளிவு பெற்றோம்

     இப்படியான உன்
    அதர்ம ஏற்றத்தாழ்வுகளுக்காக
    அலட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டோம்

    நாங்களே விரும்பிக்
    கர்ப்பக்கிரகத்திற்குள்
    நுழைந்து திரும்பினால்
    எங்கள்
    தலைஒன்றும் போகாது

    விழிப்புற்றால்
    வெற்றி பெறுவோம்
    உணர்ந்துகொண்டோம்

    நெருக்கடியில்லாத
    நிழல்மடி
    உன்குடும்பம்

    யாரோடும்
    நாங்கள் போக
    யாரும்
    எங்களோடு சேர
    தடுப்பவரில்லை
    தண்டிப்பவருமில்லை

    அளப்பரிய சுதந்தரத்தை
    அள்ளித்தருகிறாய்
    விளைவு…?
    உன்னையும் கேள்விகேட்கிறேன்
    உலகையும் கேள்விகேட்கிறேன்

    இவ்வளவு சுதந்தரமாய்க்
    கைவீசி நடக்கக்
    கைகொடுத்துதவும் உன்னைப்
    பிடிக்கிறது எனக்கு

    அடுத்த வீட்டில்
    நடப்பதைப் பார்த்து
    நெஞ்சம் குமைகிறது
    எனினும்
    நிம்மதி எஞ்சுகிறது

    ஒருவகையில்
    நான் கொடுத்துவைத்தவன்

    வானமளக்க
    வாய்ப்பிருக்கிறது

    அவரவர் காட்டும்
    அக்கறையைப் பார்த்து
    உன்மீது
    அக்கறை பிறக்கவில்லை
    அனுதாபம் வரவில்லை

    ஆனந்தச்
    சுதந்தரப் பெருமையில்
    பெருமிதம் கொள்கிறேன்

    உன்னைப்போல் யாரும்
    தாராளமாய் இல்லையே!

    விதிகளைப் பேசி
    உயிர்களின்
    விதிகளின் முடிவைக்
    கங்காணிகள் எடுத்தால்
    கடவுளிருந்து என்னபயன்?
    கடவுளென்பதன் பொருளென்ன??

    தேவை
    நீயா? கடவுளா?
    பெரிய கேள்வி

    ’இரண்டுமில்லை’
    இது என்
    எளிய பதில்

    குழப்பத்தில் இருக்கிறது
    உலகம்

    நீயும் அபின்தான்
    எப்போதும் சொல்வேன்

    அப்படிச் சொல்லவும்
    சொல்லித் திரியவும் தந்த
    உன் தாராளம் கருதி
    உன்னைப் பிடிக்கிறது
    எனக்கு!

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் ( 23)

    -இவள் பாரதி

     

    நட்சத்திரப் பூக்களைக்nivi-192x3001
    கைநீட்டிப் பறிக்க
    ஆசைப்படும் குழந்தையிடம்                                                                    
    கைக்கெட்டும் தூரத்தில்
    மலர்ந்திருக்கும்
    முல்லைப் பூக்களைக்
    கொய்யக் கற்றுத்தருகிறேன்!

    அல்லி இதழில் ஒன்று
    உன் கையில் ஒட்ட
    அந்த ஓரிதழை வாயில் வைத்துச்
    சவைத்துத் துப்புகிறாய்…
    கொய்தபோது கீழே விழுந்த
    ஒன்றிரண்டு பூக்கள்
    நட்சத்திரங்களாகத் தெரிய
    இப்போது இடுப்பிலிருந்து
    நழுவிக் கீழிறிங்க முனைகிறாய்!

    நட்சத்திரப்பூக்கள் காற்றில்
    மெதுமெதுவாய் நகர்கின்றன…
    அதன்பின்னே நீயும் தத்த
    உன் பின்னே நானும்!

     

    Share
  • ஒரு மனம் பல முகங்கள்

    இசைக்கவி ரமணன் 

    எத்தனை முகமடியோ?French_mask

    எத்தனை முகமூடியோ??

    அத்தனையும் பாக்கணும்னா

    ஆத்தாடி ஆகாதே!

    பாக்காம விட்டுப்புட்டா

    பானை நல்லா வேகாதே!!

    பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறியாயிற்று. நீங்கள் என்னதான் முன்கூட்டியே ‘ரிசர்வ்’ செய்திருந்தாலும், செங்கல்பட்டு வரை, சீசன் டிக்கெட்டுக்காரர்கள் காட்டுகிற தயவில்தான் நீங்கள் பிழைக்கவேண்டும். அவர்களுடைய வண்டியில் நாம் ஒண்டிக்கொண்டதுபோல இருக்கும் அவர்கள் பார்வை. ‘ரிசர்வ்’ செய்து பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கீழானவர்கள் என்ற நிச்சயம் அவர்கள் பார்வையின் வெப்பத்தில் உணர முடியும். நாம் எட்டுப்பேர் என்றால் அவர்கள் பத்துப்பேர்கள் இருப்பார்கள். எப்போதும் அப்படியில்லை; சில நேரம் பன்னிரெண்டாகவும் இருக்கும்! அடுத்த குடாவில் இடமிருந்தாலும், அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன பேச்சைத் தொடரும் சாக்கில் சிலர் இங்கு வந்து தொத்திக் கொள்வார்கள். மதுரைவரை செல்பவர்கள் மெளனமாக இருப்பார்கள். எண்ணிக்கைதான் வலு! ஆனால், உள்ளே எள்ளும், கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்கும். அநத்ச் சினம், குழந்தைகள் மீது அடியாக விழும். பெட்டிகள் தேவையில்லாமல் இரைச்சலோடு இழுக்கப்பட்டு மறுபடியும் தள்ளப்படும். டிக்கெட் பரிசோதகர் வந்தால் இவர்களை ஒரு வழி செய்துவிடலாம் என்று கறுவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செங்கல்பட்டுக்காரர்களோ கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘டிக்கெட்ஸ் ப்ளீஸ்’ என்று வருபவரை இவர்கள் பார்க்கின்ற தோரணை இருக்கிறதே! அவர், தான் ஏதோ தவறுசெய்து விட்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, மதுரைப் பயணிகள் பக்கம் திரும்பி, அவர்களிடம் சற்றுச் சிடுசிடுப்போடு கேள்விகள் கேட்பாரே பார்க்கலாம்! அவர் ரொம்பத் தயங்கி மிகவும் மன்றாடினால், செங்கல்பட்டார் லேசாகச் சட்டைப் பையைத் தொட்டுக்கொள்வார்கள்; அவரைப் பார்க்கவே மாட்டார்கள்; பேச்சை விடவே மாட்டார்கள்.

    செங்கல்பட்டுக்காரர் மதுரைக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் போக்கு, மொத்தமாக மாறிவிடும்! “குடும்பத்தோடு பயணம் செய்யவந்தால் இத்தனை இடைஞ்சலா? நாங்கள் நேரத்துக்குச் சாப்பிட்டுப் படுக்க வேண்டாம்?” என்றெல்லாம் நிறையைக் கேள்விகள் சூடாக எழும்!

    இடம்மாறினாலே தடம்மாறி விடுகிறானே மனிதன்! மனிதன் மாறமாட்டானா என்று சிலர் ஏக்கமாய்க் கேட்கிறார்கள். அவன் மாறாதிருக்க மாட்டானா என்றல்லவா கேட்கவேண்டும்!!

    அரசியல், விலைவாசி, சினிமா, வானிலை, வம்பு, அட எதைப்பற்றி வேண்டுமானாலும், பேப்பர் படிக்காமல், டி.வி. பார்க்காமல், ஓடுகின்ற ரயிலில் உட்கார்ந்தபடியே அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? செங்கல்பட்டுக்காரர்களிடம் ‘மணி என்ன?’ என்று கேளுங்கள், போதும்! ஆமாம், சீசன் டிக்கெட்காரர்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலே நண்பர்களாகி விடுவார்கள். காலையில் வீட்டை விட்டவர்கள், இரவில் திரும்பும்போதுதான் எத்தனை உற்சாகம்! பறவைகள் கூடுதிரும்பும் பரபரப்பு! சண்டை ஏதுமில்லை, சந்தடிதான், சற்றே சச்சரவோடு! கவனமாகக் கேட்ட எனக்கு வேர்க்கடலை, டீ எல்லாம் உண்டு!! நம்மைக் கொடுக்கவிட்டால்தானே! மதுரைப் பயணிகள் பக்கம் நான் திரும்பவே இல்லை!!!

    ஒருமுறை…

    அதிகக் கூட்டமில்லை. எனக்கு அடுத்தபடியாக ஒருமனிதர். ஆறடிக்குக் கொஞ்சம் குறைவு; கோதுமை நிறம்; முன்வழுக்கை; நீலச்சட்டை அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மடியில் வைத்துக்கொண்டிருக்கிறார்; பார்க்க இனியவராகத் தெரிகிறார். திடீரென்று, நறநறவென்று பல்லைக் கடித்துக்கொண்டு கடுமையாகத் திட்டுகிறார்:

    “அறிவிருக்கறவன் செய்ற வேலயாடா இது? ஒனக்கு அவ்ளவு ஆங்காரம் இருந்தா எனக்கு எவ்ளவு இருக்கணும். ஹூம்..” என்றார்.

    யாரைத் திட்டுகிறார்? யாரையோ! ஆம், எதிரே இல்லாத யாரையோ!! இதைக்கொஞ்சம் துறுவினால் என்னவென்று அவரை, ‘சார், வண்டி இன்னும் கெளம்பலியே..’ என்று முடிப்பதற்குள், என் பக்கம் திரும்பி, மிருதுவான குரலில், மிகப் பணிவாக, “தூத்துக்குடி வண்டி இன்னும் உள்ள வரல. வந்ததும் சிக்னல் கெடச்சிடும்,. ஒரு பத்து நிமிஷம்தான்,’ என்று ரயில்வே சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுபோல் பதில் சொன்னார். நான், ‘தேங்க்ஸ்’ என்றேன்.

    அடுத்த கணமே, மோட்டு வளைப் பார்வையோடு, “ஏன்? இன்னிக்கு ஏங்கிட்ட ஆட்டற வாலெ அவங்கிட்ட ஆட்டிப் பாரேன்! அறுத்துச் சாக்கடெலெ எறிஞ்சிட மாட்டான்?”

    கூட வந்தவர்களெல்லாம் உறைந்துபோயிருந்தார்கள். எதிரே இருந்தவர், ஒரு தைரியத்திற்காக, ‘மாம்பலத்தில் என்ன அஞ்சு நிமிஷம் நிக்குமா?’ என்று யார்மீதும் குறிவைக்காமல் கேட்டதும், நம் ஆசாமி உடனே அவர்பக்கம் திரும்பி, மிகுந்த நாகரிகமான முறையில், ‘இல்லங்க. இப்பல்லாம் மாம்பலத்தில நிக்கறதில்ல. எக்மோர் விட்டா தாம்பரம்தான். திரும்பி வரப்போ மாம்பலத்லயும் நிக்கும். சும்மாச் சும்மா மாத்தறதுனால ஜனங்களுக்கெல்லாம் பாவம் கஷ்டம்தான்,” என்றார். கேள்வி கேட்டவர் பீதியும், பிரமிப்பும் கலந்து பரிதாபமாகப் புன்னகைக்கத் துவங்கும் போது, அவர், விட்ட இடத்துக்கு அதிவிரைவில் சென்று,

    “டேய்..டேய்..டேய்..எவன்கிட்டடா இதெல்லாம்? ஆங்..எத்தனை நாள் செல்லுண்டா? கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்னு கேள்விப்பட்டிருக்கியாடா?” என்று உடம்பைக் குலுக்கிக் கத்தி விட்டு, மறுபடி கைகளைக் கோத்துக்கொண்டு அடுத்த கேள்விக்குப் பதில்சொல்லத் தயாராகி விட்டார்!

    செங்கல்பட்டு வரை நிற்கவே இல்லை! இறங்கும்போது மிக அமைதியாகப் பையை எடுத்துக் கொண்டார். தான் இதுவரை தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தோமே, அதுவும் பலர் முன்னிலையில், அதிலும் ஆத்திரமாக என்பதான எண்ணங்களின் சாயை கூட அவர் முகத்தில் இல்லை! சாந்தமாக இறங்கிச் சாவகாசமாக நடந்து போனார்!

    இன்னொரு முறை…

    எதிரே ஒரு தந்தையும், மகளும். மகள், நல்ல உயரம். கஞ்சிபோட்டுத் தேய்த்த பளிச்சென்ற ரோஜா நிறப் புடவையில், அந்தப் பெண், அழகாய், அமைதியாய் இருந்தாள். அவள் பார்வையில் சலனமில்லை. தந்தையோ ஏதோ தத்தளிப்பில் இங்குமங்கும் பார்த்த வண்ணமிருந்தார். கண்ணாடி வழியே, அவரது திராட்சைக் கண்கள் துறுதுறுவென்று துள்ளிக்கொண்டிருந்தன. அழகான மகளுடன் பயணம்செல்லும் தந்தையின் மனநிலை எனக்குப் புரியும். ஊரெங்கும் கொள்ளிக் கண்கள்; தந்தையோ, பற்றத் தயாராயிருக்கும், ஆனால் வெடிக்க முடியாத மருந்து. நேரெதிரே இருந்த என்னைப் பார்த்துச் சிரிக்க முயன்று உதடோரம் கோணிக்கொண்ட போது நான் அவரைப் புரிந்துகொண்டதாக எண்ணி அவரை சமாதானப்படுத்துவோம் என்று லேசாகப் புன்னகைத்தேன். அவரால் சிரிக்க முடியவில்லை. அவரது நெற்றியில் சூடு முத்தாய்த் துளிர்த்தது. சரி, இதைப்போய் யோசிப்பானேன் என்று ஒரு புத்தகத்தைப் பிரிக்க முயன்றேன். அப்போதுதான் அது நடந்தது.

    பொம்மை மாதிரி அசையாமல் உட்கார்ந்திருந்த அந்த அழகுப் பெண் திடீரென்று அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது பற்களின் விகாரமும், காரணமற்ற அந்தச் சத்தமான சிரிப்பும் எங்களைப் பீதியில் ஆழ்த்தியது. கிளம்பத் தயாராயிருந்த வண்டியில் ஒரு மயான ரத்திரிச் சூழல் கப்பிக்கொண்டது. தந்தையோ, அவளது கையைப் பற்றிக்கொண்டு, “வேண்டாம்மா, வேண்டாம்மா, இங்கெல்லாம் சிரிக்கக் கூடாது, சத்தமே போடக் கூடாது,” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். உடைத்த எலும்புகளை உண்டியல் குலுக்கிக் கூளி சிரித்தது போலிருந்தது. பேய்ச்சிரிப்புக்கும் ஓர் அளவை உண்டு போலும்! எப்படி திடீரென்று தொடங்கியதோ, அதேபோல் எதிர்பாராமல் தடாலென்று நின்றுவிட்டது அந்தச் சிரிப்பு. எதுவுமே நடக்காததுபோல அந்த முகம் முன்பிருந்த மாதிரியே அமைதியாகி விட்டது. இந்த அழகை வியப்பதா? அந்த விகாரத்தை நினைத்து அதிர்ச்சியுறுவதா? ஒன்றும் புரியவில்லை.

    அந்தத் தந்தை பட்ட பாட்டை எப்படிச் சொல்ல? மீண்டும் திடீரென அவள் சிரிக்கத் துவங்கும்போது அவர் மறுபடியும் அவள் கரத்தைப் பற்றிக் கெஞ்சுவார். நம் முகத்தைப் பரிதாபமாகப் பார்ப்பார். அவளுக்கு உணவு புரிந்தது, ருசி தெரியவில்லை; வாயில் போட்டது போட்டபடியே இருந்தது. மீண்டும் தந்தையின் கெஞ்சல். அவளுக்கு பாத்ரூம் போகவேண்டும். அதற்கும் இவர்தான் துணைசெல்ல வேண்டும். அவளுக்குப் படுக்கை போடவேண்டுமென்றால், பலகையைப் பிரிக்கவேண்டுமல்லவா? அவள் எழுந்தால்தானே? இருந்தது புரிந்தால்தானே எழுவதும் படுப்பதும்? அவளை எப்படியெல்லாமோ கெஞ்சி எதிர்ப்பக்கம் உட்காரவைத்ததும், எங்கள் உதவியுடன் அவசர அவசரமாக அவளுக்குப் படுக்கையை ஏற்பாடு செய்தார். ஏதோவொரு கனவுத் தாயின் மடியில் மிதப்பதுபோல, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.’ தந்தை விட்ட பெருமூச்சில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சோகம் இருந்தது. அவரிடம் பேச்சுக்கொடுக்க யாரும் விரும்பவில்லை. அந்த அளவுக்கு எல்லோருமே இங்கிதமாக இருந்தார்கள். அவர் கழுத்தைச் சாய்த்தபடி ஒருமுறை என்னைத் துயரத்தோடு பார்த்தார். அவரைக் கடந்துசெல்லும் சாக்கில், அவரது தோளை என் இதயத்திலிருந்து அழுத்தினேன்.

    அவர், வாளி வாளியாய்க் கண்ணீரை விழுங்கினார்..

    விதி இரக்கமின்றிக் கிழித்த ஒரு தேவதையின் கவிதையைப்போல் கிடந்தாள் அவள். சித்தம் என்பது நினைவுகளின் தொகுதி. ஒரு கிராமபோன் ரிகார்டு. அதில் கீறல் விழுந்திருக்கிறது. அவளது வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தை அவளால் தாண்ட முடியவில்லை. அவளுக்கு லேசில் முதுமை வராது. மனம் நின்ற தருணம் ஒரு வட்டம். அதை உடல் சுலபத்தில் மீறாது. மிகக் கொடுமையான இளமை, மிகக் கசப்பான அழகு, இருக்க முடியும் என்பதை விக்கித்த தொண்டையில் புரிந்து கொண்டேன்.

    அவளது சித்தத்தின் அமைப்பு ஒருபுறம் இருக்கட்டும். அவளது தந்தையின் மனநிலை? அதில் எங்கோ ஒரு குற்ற உணர்வு அவரது நிம்மதியைப் பருந்தாய்க் கொத்திக் கிழித்துக் கொண்டிருந்திருக்கும். இவர் தந்தை, அவள் மகள், இது உறவு. அட, உறவு இதுதானா? உறவாடல்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் உறவா?

    மலரைப் பறிக்கும்போது ரத்தம் கசிவதாய், மனிதனின் மனத்தில் எத்தனை முகங்கள்! அதில் எத்தனை பாவங்கள்! அவற்றில் வெளிப்படுபவை எத்தனையோ? இருட்டுத் திருட்டு முகங்கள் எத்தனையோ? தானும் காணாமல், தன்னையும் காணவிடாத குருட்டு முகங்கள் எத்தனையோ?

    கண்ட பின்னும்

    கண்டும் காணாதிருக்க முடியாது!

    (காண்போம்)

    குண(வி)சித்திரங்கள் (2)

    அவரை ஊதுவத்தி மாமா என்றுதான் அழைப்போம். அவருடைய இயற்பெயர் என்னவோ தெரியாது. மாம்பலம் சிவா-விஷ்ணு கோவிலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் பஞ்சாங்கம், தோத்திரப் புத்தகங்கள் இவற்றை விற்றுக்கொண்டிருந்தாலும், அவருக்கு ஊதுவத்திதான் அடையாளம். அவர் உடலும் கூட அப்படித்தான் இருக்கும். நங்கைநல்லூரில் எங்கள் வீட்டுக்கு அருகில்தான் இருந்தார். அவர் யார், என்ன செய்கிறார் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் அவரை எதேச்சையாக வியாபாரக் கோலத்தில் கண்ட பிறகுதான் அவருக்கு மேற்படிப் பெயர் நிலைத்துவிட்டது. அவருக்கு ‘ஹிண்டு பேப்பர்’ படித்தே ஆகவேண்டும். வாங்கமுடியாது. அதனால், தினமும், காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து எல்லாப் பக்கங்களையும் அவசரமாக ஒரு புரட்டுப் புரட்டி விட்டுத்தான் செல்வார். அப்பாவுக்கு, அவர் படிப்பதற்கு முன் யாரேனும் பேப்பரைத் தொட்டால் தாங்காது. சம்மதிக்க மாட்டார். நேராகச் சொல்லியும் விடுவார். ஆனால், இவரை ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ஏனாம்?

    ஊதுவத்தி எப்போதும் அதிவேகமாகத்தான் வருவார். அந்த நாலுமுழ வேட்டியில் எப்படித் தடுக்காமல், அது கிழியாமல் அவர் இப்படிப் பறக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கும். நாம் நடந்துவர ஏழு நிமிடங்கள் ஆகுமென்றால், அந்தத் தொலைவை இவர் நான்கு நிமிடங்களிலேயே கடந்துவிடுவார்! அதெல்லாம் சரிதான். ஆனால், அப்படி அவசரமாய் நடந்து வரும்போது, விடாமல் பேசிக்கொண்டே வருவார். தனக்குத்தானே என்று சொல்வதற்கில்லை; ஏனென்றால், அவரைப் பொறுத்தமட்டில், எதிரே யாரோ ஆளிருந்ததாகத்தான் தோன்றியது. அந்த ஆள்மீது அவருக்கெதனால் கோபம் என்பது தெரியாது. ஆனால், கொலைவெறி! கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவர் திடீரென்று, “நா..நா..நா.ய்..ய்..யே..யே” என்று இடது கையை நீட்டிக்கொண்டு, திக்கினாலும் பெருங்குரலில் அவனைத் திட்டி, வலது கையால் எம்பி எம்பி அவன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவார்! எதிரே வரும் சிறுமி பதறிக்கொண்டு காவாயைத் தாண்டி ஓடுவது இன்னும் கண்முன் நிற்கிறது! “ஏ..ஏ..ஏன்கிட்டயா? பல்லப் பேத்துடுவேன், ஓடிப் பூடு,” என்று சொல்லிக் கொண்டே, எங்கள் கேட்டைச் சத்தமாகத் திறந்து உள்ளே நுழைந்து பேப்பரை ஏறத்தாழப் பிடுங்கும் அவரிடம் என் தந்தை என்ன சொல்லத் துணிவார் பாவம்!! பதறி எழுந்தவர், பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஜபமாலையை உருட்டிக்கொண்டிருப்பார். ஊதுவத்தி வெளியே சென்றபிறகு, கண்கள் அனிச்சையாகத் திறக்கும்! சுவாசம் சீராகும்! பேப்பர் படித்து முடித்த கணமே அம்புபோல் விருட்டென்று கிளம்பி விடுவார். சிலசமயம், அம்மாவிடம் காப்பி கேட்பார். கேட்டு முடிப்பதற்குள் சூடான காப்பி வந்துவிடும். அவள் காப்பிக்கு உலக அளவில் ரசிகர் மன்றம் இருக்கிறது. சமையலோ சொல்லவே வேண்டாம், சத்திரக் கரங்கள் வேறு! (அம்மாவுடைய சாப்பாட்டுக்கும், காப்பிக்காகவும்தான் இவனுடைய கவிதையையெல்லாம் கேட்டாக வேண்டியிருக்கிறது என்ற என் நண்பர்களின் முணுமுணுப்புகளைப் பலவருடங்களுக்குப் பிறகுதான் கேட்டேன்!) எனவே, அம்மாவின் காப்பி, ஊதுவத்தியின் நாக்கையும் தொட்டிருக்கிறது! பட்டென்று டபராவைக் கீழே வைத்துவிட்டுப் புயல்வேகத்தில் கேட்டைத் திறந்து வெளியேறி, தெருவில் கால்வைத்த மறுகணமே, ‘அந்த’ ஆளைச் சாடி அறையத் துவங்கிவிடுவார்! ஆனால், பிளாட்பாரக் கடையில் ஊதுவத்தி விற்கும்போது மட்டும் ரொம்பக் கறார்! சல்லிக் காசு குறைக்க மாட்டார். அதே சமயம், அவர் சரக்கு எவ்வளவு அற்புதமானது என்று பெருமையுடன் சொல்வார்!

    ***********

    இன்னொருவர் இளைஞர். பெயரை மாற்றி ரகு என்று வைத்துக் கொள்வோம்! நல்ல படிப்பு; கட்டான உடல்வாகு; கராத்தே பயிற்சி: கண்ணியமான பேச்சு; புதிது புதிதாய்ப் படித்துத் தெரிந்துகொள்ள ஆவல். இதெல்லாம் சரிதான். ஆனால், ஜெயலஷ்மி தியேட்டரைத் தாண்டி, குடிசைகள் நடுவே புகுந்து, ஏரிக்கரை வழியே இறங்கி, வறண்டிருக்கும் ஏரியில் தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கும்போது குடையைப் பிரிப்பாரையா! அவ்வளவுதான்! அப்போதிலிருந்து, ஏரி முடிந்து, அவர் தெருவிளிம்பில் கால்வைக்கும் வரை ஓயாத பேச்சடா சாமி! கைமாற்றிக் குடையைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையை ஓர் அதிகாரிபோல் அசைத்து அசைத்து, அவர் அப்படி என்னதான் விசாரிப்பாரோ, யாரிடம்தான் வாதம் புரிவாரோ! ஊதுவத்தி மாதிரிப் பறக்கமாட்டார். ஏதோ, பழைய ஜமீன் பட்டணப் பிரவேசம் செல்வதுபோல்தான் இருக்கும் தோரணை. இடையிடையே நின்றுவிடுவார்; ஆமாம், நின்று ‘எதிரி’ என்ன சொல்கிறான் என்பதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு, ‘ஓ! இவ்வளவுதானா!,’ என்று ஒரு மமதைச் சிரிப்பை விடுத்து, அவனுக்குப் பதில்சொல்லிவிட்டுத்தான் மீண்டும் நடக்கத் துவங்குவார்! வெள்ளமாய் வெய்யில் கொளுத்திக் கொட்டுகிற அந்த மத்தியான நேரத்தில், தன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஒருவரோடு ரகு நடந்தபடி நடத்தும் வாதங்களைக் கண்ணிமைக்காமல் கேட்பேன்.

    ******

    எனக்குப் பதினொரு வயதிருக்கும். அப்போது நடந்த சம்பவம் இன்றும் நினைவிருக்கிறது. எங்கள் தெருவில் ராமு என்றொருவன் இருந்தான். அந்த வயதில் இன்னொருவர் வயதை அறிவதற்கில்லை! ‘ராமு பெ..ரீ..ய்..ய ஆள்.’ அவ்வளவுதான்! ரொம்ப உயரம்; பாறையைப் பிளக்கக் கூடிய திடகாத்திரமான உடம்பு; உறுதியான கரங்கள். ஆனால், ராமு அதிர்ந்து பேசவே மாட்டான். மிகப்பெரிய பூனைக்குட்டி போலிருக்கும் அவன் பாவனை! அந்த உடம்புக்குப் பொருந்தாத மழலைச் சிரிப்பு; பணிவு. மிகுந்த கூச்ச சுபாவமுள்ளவன். ஒரு கண், ஏதோ பழுதுபட்டிருக்கும். சிறுவயதில், வில்லம்பு விளையாடும்போது அடிபட்டு அப்படி ஆனதாகப் பாண்டிபஜார் தலபுராணத்தில் காணலாம்!

    ராத்திரி ஒன்பது மணியிருக்கும். வானொலியில் ஆங்கிலச் சேதி முடிந்திருக்கும். திடீரென்று தெருவில் ஒரே அமளிதுமளி. வெளியே வந்து பார்த்தால்:

    “டா..ய்..இன்னா நென்ச்சுக்னுக்றீங்கோ?” என்று ஒரு பெரிய குரல்.

    ‘ஏய், வேணாம்பா, ராமு அல்லாம் பாக்குறாங்கப்பா,” என்று ஒரு பதில் குரல். அட! நம்ம ராமுவா!

    “யார்றாவன் ராமு? நான் செண்டர் மணிடா டே.ய்..” என்று நடுத்தெருவில் தொப்பென்று விழுந்தான் ராமு. கூட இருந்தோர் உறவினர்கள் போலும்; அவர்கள் அவனைப் பலவாறாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள், “உனுக்கு இன்னா கொறப்பா? இன்னாத்துக்குத்தான் இப்டி கோராமை பண்றெ?’

    “டா….ய்..மூண் ரூபா எட்தாந்து வந்தனா? கருவாட்டுக் கொளம்பு வக்கச் சொன்னனா? வச்சாளாடா அவ? வச்சாளாடா?” என்று ராமு தெருவில் புரண்டு, தார் ரோட்டை அடித்து நொறுக்க முற்பட்டான்.

    மறுபடியும் அவர்கள், ‘ஏய் இன்னாப்பா, கலாட்டா பண்ணாம வூட்டுக்கு வா ராமு,’ என்றதும், மீண்டும், “டேய்! ராமு எவண்டா ராமு? எங்க்குற ஆளு அவன்? நான் செண்டர் மணிடா! செண்டர்!” என்று மார்பில் அடித்துக் கொண்டான்.

    மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காதது போல், ‘இன்னா ரம்ணு?’ என்று பணிவாகச் சிரித்தபடிச் செல்வான். ஆனால், வாரத்தில் மூணு ராத்திரியாவது ‘செண்ட’ராகிவிடுவான்!

    இப்படிப் பலரை சந்தித்திருக்கிறேன்; தொடர்ந்து சந்தித்தும் வருகிறேன்! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாரயாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆசையில், என் நண்பன் விச்சுவைக் கேட்டேன். ‘அதெல்லாம் நூல் கேசுடா,’ என்றான். அதென்னடா நூல் என்றேன். சிகரெட்டை முழுதாக இழுத்துக்கொண்டு, மேல்வானத்தைப் பார்த்தபடியே பொறுமையாக மூச்சுவிட்டு, குதர்க்கமான சிரிப்புடன் விச்சு சொன்னான்: ‘ஒருநாள் இதே ரெஸ்டாரண்டு. எதிரே நாற்காலி காலி. ‘எக்ஸ்க்யூஸ் மி,’ என்றபடி ஓர் இளைஞன் வந்தான். ‘யாராவது வர்றாங்களா? இங்க ஒக்காரலாமா?’ என்று கேட்டான். ‘ஓ! தாராளமா,’ என்றேன். ‘லைட்டா டீ,’ என்று டேபிளைத் தட்டிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ‘நூல்,’ என்றான். எனக்குப் புரியவில்லை; என்னது? என்றேன். ஒருமாதிரிச் சிரித்தபடி டேபிளுக்குக் கீழே பார்வையைச் செலுத்தி, மறுபடி உயர்த்தி ‘நூல்’ என்றான். இதென்னடா விபரீதமாகப் போகிறதே என்று நினைத்துக்கொண்டே, என்ன வேணும்? என்று கேட்டேன். இப்போது அவன் விழியும், சிரிப்பும் சற்று விகாரமாகி கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டே குரலை உயர்த்தி மீண்டும் ‘நூ..ல்..’ என்றான். நான் எழுந்து விட்டேன். அவன் பேண்டில், தொடைப்பகுதியிலிருந்து ஒரு நூலை நீளமாகப் பிய்த்துக் கொண்டிருந்தான். ஆஹா! இன்று நமக்கு நேரம் சரியில்லையே என்று நான் எழுந்து நழுவப்பார்த்தால், அவன் ‘நூல்..நூல்.’ என்று தலையை ஆட்டிக்கொண்டே பெரிதாய்க் கூச்சல் போட்டான். நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓட்டமாக ஓடி எங்கோ ஓரத்திலிருந்து பார்க்கும்போது அவன் சட்டை கிழிந்து போயிருந்தது. ஓட்டல் சிப்பந்திகள் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.”

    எனக்குக் கதிகலங்கியது. அதேசமயம், விச்சுவைப் பொறுத்தமட்டில், கண்டதும் காணவிரும்புவதும் ஒன்றுதான் என்றும் பட்டது. உடனே என் எண்ணத்தை மோப்பம் பிடித்த அவன், ‘என்ன நம்பலியா?’ என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டான். ஒருமாதிரியாக சமாளித்துக்கொண்டு அவன் ‘நூலாகி’ விடும்முன் எழுந்து வந்தேன்.

    அப்பாவைக் கேட்டாலோ, வழக்கமான கிண்டல்தான் பதில், “இனம், இனத்தோடுதானேடா சேரும்?!” என்றார். முறைத்தேன்; காரணம் புரிந்து, தலையசைத்துச் சிரித்தார்.

    எதையும் பற்றி எவரையும் கேட்பதைக் காட்டிலும், கவனமாகப் பார்ப்பதே நன்று. இல்லையெனில், வெகுநாட்கள் இன்னொருவரின் அனுபவத்தில் சவாரி செய்ய வேண்டியதாய்ப்போகிறது. சவாரி இலவசம்தான் என்றாலும், கால விரயம் என்பது கடுமையான விலைதானே! அதுபோல, வெளியே பார்ப்பதோடு நிறுத்தாமல், உள்ளேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், ஆ! எல்லாம் துல்லியமாகவே தெரிகிறது!

    உள்ளே பார்த்ததை ஊருக்குச் சொல்லப் புகுவதும் ‘நூல்’தானோ? பிரித்துப் பார்ப்போம்!

    குண(வி)சித்திரங்கள் (3)

    ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்

    ஒன்றில் நில்லாமல் அடுத்தடுத்துலாவுவாய்

    (பாரதியார்)

    ஓயாமல் சஞ்சலத்தில் இருப்பதே மனதின் இயல்பு. அசைவு, மனதின் தன்மை. எனவேதான், அதை நிறுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன. சற்றே யோசித்தால், மனம் என்பது எண்ணங்களே! வேறொன்றுமில்லை. ஆயின், எண்ணம் ஏன் நம்மை இந்தப் பாடு படுத்துகிறது? காரணங்களும் தெளிவாகத்தான் இருக்கின்றன! ஒன்று, எண்ணம் நம்வசத்தில் இல்லை. காலையில் நாயுடன் சாலையில் நடைபழகுவோரைக் கவனித்திருப்பீர்கள். வீட்டிலிருந்து இறங்கும் போது, கிரமமாய், செல்ல நாயை அழைத்துக்கொண்டுதான் இறங்குகிறார்கள். தெருவுக்கு வந்ததுமே, அது இவர்களை அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு போகிறது. கம்ப உந்துதல்கள், தெருக்காதல் இவை வேறு! நாய்படாத பாடு படுகிறார்கள்! நாம் எல்லோருமே இப்படித்தான். உறக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. அடுத்தகணம், யாரோ தேனடையில் கல்லெறிந்தது போல, எண்ணங்களின் களேபரம். பிறகென்ன, நாய் வாக்கிங்தான்!

    எனவே, எண்ணங்களின் பின்னே கதியற்று நாம் செல்வது ஒரு காரணம். எண்ணங்களின் தொகை இன்னொரு காரணம்.

    மாணவ, மாணவியர் சீருடை தரித்து, அப்போதுதான் பூத்த மலர்களைப் போல, இளங்காலை ஒளியில் மின்னிக்கொண்டு, இளஞ்சிரிப்புடன், அணிவகுத்து வரிசையாக நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஆசிரியரின் கட்டளைகளுக்கு ஏற்ப அசைய, இயங்கக் காத்திருக்கிறார்கள். இது ஞானியின் மனம்.

    ஒரு படை திரண்டு வருகிறது; அது கோட்டையைப் பிடிக்க வேண்டுமானால் ஒரே வழிதான்; அதுவோ ஓர் ஒற்றைப்பாலம்; அங்கே ஒரு மாவீரன் நின்றுகொண்டு வெட்டிச் சாய்க்கிறான்; படை பின் வாங்குகிறது. இது யோகியின் மனம்.

    ஒரு திருமண வரவேற்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள், வேலையாட்கள், எளியவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நல்லவரும் தீயவரும் கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள். வரவேற்பு வாசலில் நின்றுகொண்டிருக்கும் இளம்பெண், யார் வந்தாலும், அவர்கள் தெரியாதவர்களானாலும், அவர்கள் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும், புன்னகை மாறாமல் பன்னீர் தெளிக்கிறாள்; கற்கண்டுத் தட்டுடன் காத்திருக்கிறாள். இது, பக்தனின் மனம்.

    இவையல்லாத எதுவுமே நம்ம மனம்தான்!

    புற்றீசல் போலப் புறப்பட்டு வந்துயிரைப்

    பற்றி வதைக்கின்ற பாழ்மனமே! வெற்றி

    உனக்கென்றால் வெட்கம்! எனக்கென்றால் சொர்க்கம்!

    மனமே! உனக்குண்டோ மாற்று?

    மனம் என்றால் எண்ணம்தான் என்பது புரியாத வரையிலும், எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று ஆராயாத வரையிலும், இப்படி வெண்பா எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! நாம் சோரச் சோர, தன்வலிமை அதிகரிக்கும் விபரீதம்தான் மனம். ‘மனமே தளை, மனமே விடுதலை,’ என்று கண்ணன் பார்த்தனுக்குச் சொல்கிறான். எனில் என்ன பொருள்?

    ஃ மனம் என்பது ஒரு சக்தியின் களம், அது ஒரு பொருள் அல்ல

    ஃ எண்ணமே மனம்; இடைவிடாத எண்ணங்களல்லாமல், மனம் என்று ஒன்று தனியாக இல்லை

    ஃ இயற்கையிலேயே புலன்களெல்லாம் புறம்நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. புலன்வழியே மனம் சென்று, பொருள்மீது நின்று, அதன்பின்னே நாமும் அலைந்து, போதுமடா சாமி!

    ஃ மனம் அப்படியே இருக்க, நாம் சுதந்திரமாய் இருக்க முடியும். அந்த நிலை, நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது

    எனவே,

    எண்ணமல்லால் ஏதுமனம்? ஏறி அடக்கவோர்

    திண்ணமல்லார்க் கென்றும் திரை

    சரி, எங்கிருந்து வருகின்றன எண்ணங்கள்?

    புறத்திலிருந்துதான்! ஆமாம், எல்லா எண்ணங்களும் பொருள்சார்ந்தவையே. பொருளே புறம். புலனே அதைத்தொடும் கரம். தொட்டதும் எழுவதே எண்ணம். அதன்பிறகு நாம் இயங்குவதில்லை, எண்ணங்கள் ஓர் இயந்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன. எனவேதான், மனம் என்பது நுண்மையான பொருளே என்றும் சொல்கிறார்கள். நாம் பொருளன்று! பொருளை ஆண்டு இயக்கும் வல்லமை பெற்றதே மானிடத்தின் சிறப்பு.

    எண்ணம் வெளியிலிருந்து வந்தாலென்ன, வெளியூரிலிருந்து வந்தாலென்ன, நாம் புலிவாலைப் பற்றி மரத்தைச் சுற்றிக்கொண்டே வருகிறோமே அதற்கென்ன செய்ய என்று கேட்கிறீர்களா! எழுந்த எண்ணத்தின் பின்னே எதனால் கதியற்று அலைகிறோம்?

    ஃ எண்ணங்களின் வேகம்

    ஃ எண்ணங்களின் தொகை

    ஃ எண்ணங்களைப் பிடித்துக்கொள்ளுதல்

    ஃ வாசனை

    இவற்றைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமில்லை; வருக!

    அனுமனைப் பற்றிச் சொல்லும்போது, வாயு வேகத்தைவிட மனத்தின் வேகம் பெரிது. அனுமன் அதைவிட வேகமானவன் என்கிறார்கள். என்ன பொருள்? வேகத்தை விவேகம்தான் வெல்லும் என்பதே! ஒன்று, பிள்ளையாராய் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லையா, ஓடுவதைத் தாண்டி எதிர்நின்று வசக்க வேண்டும். சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் போகிறது; இளைஞன்; கொஞ்சம் போதையில் இருக்கிறான்; அவன் அன்றாடம் இரண்டு கைகளையும் விட்டுத் தலைகோதிக் கொண்டு கறுப்புக் கண்ணாடி வழியே காதல் வீசும் மகளிர் பேருந்து போய்விட்டது; அதைப் பிடிக்க வேகமாய்ச் செல்கிறான்; அங்கே 40 கி.மீ. வேகம்தான் அனுமதி; இவன் 70 கி.மீ. வேகத்தில் பறக்கிறான்; இவனைப் போக்குவரத்துப் போலீஸ்காரர் எப்படிப் பிடிப்பார்? விசில் ஊதி நிறுத்த முடியுமா? அவர் ஒரு 80 அல்லது 90 ல் பறந்து, ஒரு வளைவில் பயலை மடக்குகிறார். அனுமனுக்கு, ராமநாமம்தான் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள்.

    இது சரிப்படாது என்கிறீர்களா? அப்படியானால் பிள்ளையார் வழிக்கு வாருங்கள். ஆற்றங்கரை; அரசமரம்; எதிரே ஓயாத சலனம்; மேலே ஒழிவற்ற சலசலப்பு; வெய்யில், மழை, புழுதிக்காற்று; பக்தர்களின் இடைவிடாத கோரிக்கைகள்; திருட்டு; ஆனால், ஐயா அசைவதே இல்லையே! அதுபோல், எண்ணங்களின் தொகை, அவற்றின் வேகம் எப்படி இருந்தால் நமக்கென்ன, நாம் நாமாய் இருப்போமே, என்று இருக்கலாம்.

    இதுவும் ஒத்துவராது என்கிறீர்களா? என்னதான் உங்கள் பிரச்சினை? ‘எண்ணம் தோன்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஏன் விருப்பம், வெறுப்பு, ஆசை, பற்று இவையெல்லாம் தோன்றுகின்றன? இவற்றால்தானே கூச்சலும், குழப்பமும்?’ இருங்கள்! இதற்குமேல் எதுவும் நீங்கள் சொல்லவேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து பதிலைக் காண்போம்!

    விருப்பு என்பது என்ன? ஒரு பொருள், அல்லது ஆள், அல்லது ஒரு சூழ்நிலை மேல் நமக்கு ஏற்படுவது; அது நமக்கு வேண்டும் என்று தோன்றுவது. அவ்வளவுதானே? சாதாரணமாகத் தோன்றி மறையும் எண்ணத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? இது, திரும்பத் திரும்பத் தோன்றும் எண்ணம்; ஒரே எண்ணம். திரைப்படத்தின் ஃப்ரேம்களைப் போல! பல ஃப்ரேம்கள் சேர்ந்ததுதானே ஒரு சின்னக் காட்சி? ஒரு பொருளின் மீது ‘தங்கி’ விடுவதால் எண்ணம் விருப்பமாகிறது. அது நமக்கு வேண்டும் என்னும்போது ஆசையாகிறது. அது நமக்கே வேண்டும் என்னும்போது பற்றாகி விடுகிறது. அதனால் அச்சமுண்டாகிறது. அதிலிருந்து இருமை என்கின்ற கவலை நேர்கிறது. ‘சொந்தம்’ என்கின்ற உணர்வு ‘பந்தம்’ என்கின்ற விளைவை ஏற்படுத்திவிடுகிறது. எதை நாம் பற்றிப் பயன்படுத்திப் பிறகு அதனிடத்தில் மீண்டும் வைத்துவிடவேண்டுமோ, அது நம் பிடரியைப் பற்றிக் கொள்கிறது. ஆழ்ந்து கவனித்தால், விருப்பே வெறுப்புக்குத் தளமாகிறது. அதன்பிறகு, சீற்றம், குழப்பம், புத்தி பேதலித்தல், பிறகு ஆளே தொலைந்து போதல் என்று தொடர்கின்றன தொல்லைகள்.

    நம் எல்லோருக்கும் இதுதான் பழக்கப்பட்டுப் போய்விட்டது. ஒவ்வொரு மனிதனும் ஊமைக் கவிஞனே என்றொரு பழமொழியுண்டு. இங்கே, எந்த மனிதனும், கொஞ்சம் ‘நூல்’ கேசுதான் என்று சேர்க்க வேண்டியிருக்கிறது. எண்ணத்தின் தீவிரம், அது தோன்றும் அந்த மனிதனின் வலுவின் அளவு, இதைப் பொறுத்தே ஒருவன் தெளிவானவனா இல்லை பைத்தியக்காரனா என்பது தீர்மானமாகிறது. கண்ணாடி முன்பு நின்றுகொண்டு நாம்செய்யும் கொனஷ்டைகள், யாருமில்லாதபோது செய்யும் குரங்குச் சேட்டைகள், குளியலறையில் நமது ஆள்மாறாட்டம், படுக்கையில் நாம் தழுவுபவர் – தழுவ விரும்புபவர், அங்குள்ள ரகசிய வித்தியாசம், நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிறுகல்லை விடாப்பிடியாய்க் கடைசிவரைக் காலால் எத்திக்கொண்டே செல்லுதல், பூட்டைப் பிடித்துத் தொங்கிப்பார்த்துத் தெருவைக் கடக்குமுன் எம்பியெம்பிப் பார்த்தல், ஒரு பாட்டைக் கேட்கும்போது நாமே அந்தக் கதாநாயகனாக பாவித்தல், சாதாரணமாய் இருக்கும்நாம் காரில் ஏறியவுடனேயே தோரணை மாறுதல், கையில் சரியான டிக்கெட்டு வைத்திருந்தும் பரிசோதகர் வரும்போது பயந்து முகம்வெளிறிப்போதல் — இப்படி எத்தனை எத்தனை நம்மில் இல்லை? இவையெல்லாம் அந்த ‘நூல்’ கேசுக்கு ஆதாரமேயல்லவா?

    இப்போது பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வாருங்கள். அந்தப் பெரியவர் தன்னுடனும் பேசிக்கொண்டு, நமக்கும் முறையாகப் பதில்சொல்லிக்கொண்டு வந்தாரே! அவர் மனத்தில் ஒருவரால் ஏற்பட்ட காயம்; அதை அவர் ஆறவிட்டிருந்தால் அத்தோடு போயிருக்கும். ஈயைப்போல் காயத்தின்மேல் உட்கார்ந்து உட்கார்ந்து அது கசிந்துகொண்டே இருக்கிறது. விபரீதமாகச் சிரிக்கும் அந்தப் பெண்ணை நினைவிருக்கிறதா? அவளுக்கென்ன ஆயிற்று? ஏதோவொரு சம்பவம் உள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. அவளைப் பொறுத்தமட்டில், காலம் அந்தக் கட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை. ஏனென்றால், அவள் அந்த சம்பவத்தைக் கடக்கவே இல்லை! அந்த நிகழ்ச்சி அதிர்ச்சிமயமானதாக இருக்கலாம். அதன் விளைவு, சிரிப்பாக இருக்கலாம். நெல், நாற்றாகப் படாதபாடு படுகிறது. வரும்போதே முழுதாக வந்துவிடுகிறது காளான். என்ன சொல்ல? ரகு, நம்மைப் போலத்தான். யாருமில்லாத போது, நம்மில் பலர் எப்படி இருப்போமோ அப்படித்தான் அவனும் இருந்தான். அவன், யாருமில்லை என்ற தைரியத்தில்தானே வறண்ட ஏரியில் பேசிக்கொண்டே வந்தான்? ஊதுவத்தி மாமா? அவர், சரியான ஊசிப் பட்டாசு. யாரும் அவரை எதுவும்சொல்லக் கூடாது. எளியாரை வலியார் மிதிப்பர் என்பது உலக நியதியன்றோ? அலுவலகத்தில் மேலதிகாரி இருக்கிறார். அவர்மேல் பலருக்கும் கோபம் இருக்கிறது. அது மதிய உணவு நேரத்தில் அக்கப்போராகத் துவங்கி வம்பளப்பில் முடிகிறது; வீட்டில் நம்மைத் தழுவவரும் குழந்தை மீது வெடிக்கிறது. அலுவலகத்திற்கு வெளியேயும் பல மேலதிகாரிகள் இருக்கிறார்கள். தபால்காரர், காய்கறி வியாபாரி, பூக்காரம்மா, பால்பையன், பஸ் கண்டக்டர், ஆட்டோக்காரர், சினிமா க்யூவில் முரட்டு ஆசாமிகள், இவர்கள் எல்லோருமே மேலதிகாரிகள்தான்! இவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். இவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நினைப்பை நிறுத்த முடியவில்லை. அழுத்தி வைக்கப்பட்ட கோபம், ஆளை லேசில் விடுவதில்லை. அதிகாரி, மறுபடி அழைக்கும்போது, நாம் சிரித்தபடிக் குழைவதும், அந்தக் கோபத்தின் விகாரமான, பரிதாபமான தோற்றமே! ஊதுவத்தி மாமாவுக்கு எப்போதும் கோபம்! தனிமையில் அவர்தானே ராஜா?! அதனால், தன்னைக் காயப்படுத்தியவர்களை வாய்க்கு வந்தபடி வைது, பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதீதமான சினம், அவர் தோலில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூத்திருக்கிறது. ரயிலில், நாம் முதலில் சந்தித்த பெரியவரும் அது போலவேதான்! என்ன, ஊதுவத்தி மாமா வெடி; இவர் மத்தாப்பு; ஆனால், பகிரங்கப்படுவதில் இருவரும் ஒன்றுதான். ராத்திரி ராத்திரி செண்டர் மணியாகிவிடும் ராமு? இயல்பில், அவன் மிகவும் கூச்சமுள்ளவன் என்று பார்த்தோம்; அவன் மனது மென்மையானது எனினும் தன்னைப் பற்றிய உயர்வான மதிப்பீடுகள் யாருக்குத்தான் இருக்காது? மது உள்ளே போனதும் அது வெளிப்படுகிறது!

    இந்தக் குண(வி)சித்திரங்களில் ரகு ஆரம்பம்; ‘நூல்’ உச்சம். இதில் இன்னும் எத்தனை எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அவ்வப்போது அவர்கள் இங்கே தென்படக்கூடும்!

    ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதை இன்னும் நுணுக்கமாகப் பார்த்துவைத்துக்கொள்வோம்..

    மனிதனின் அமைப்பில் ஒரு கிரமமான வரிசை உள்ளது. மிகச் சுருக்கமாகவேனும் அதை இங்கே தெரிந்து கொள்வது, அல்லது நின¨வுபடுத்திக்கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். வாருங்கள்!

    1. தூல உடம்பு

    அதற்கென்று ஓர் அறிவு இருக்கிறது. அது சிந்திக்கும் அறிவில்லை. ஆயினும், சிந்தனையில் வியப்பை ஏற்படுத்தக் கூடிய அறிவு. உதாரணமாக, பசிக்கிறது. பெரும்பாலும், அது உடலிலிருந்து வரும் சிக்னல். சில நேரம், அது வெறும் நினைப்பே! எப்படியோ, பசிக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சிந்தனைதான் நிச்சயிக்கிறது. எதை, எப்படி, எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்சயிக்கிறோம். கை, (சிலருக்குக் கைகள்!) சோற்றை வாய்க்குள் சேர்க்கிறது. ருசிபற்றி உள்ளே ஒரு விமர்சனம் நடக்கிறது. சாப்பாடு தொடர்கிறது. இதுவரை நம்செய்கை. பிறகு, உணவு செரிப்பது? சத்து உறிஞ்சப்பட்டு சேருமிடம் சேர்வது? வெளியேற வேண்டியவை பிரிக்கப் படுவது? இவைபோன்ற கணக்கற்ற செயல்கள் நமக்குள்ளே நடக்கின்றன. நாம் செய்வதில்லை. இதை body intelligence உடம்பின் அறிவு எனலாம்.

    2. புலன்கள்

    முன்பே கண்டதுபோல், புலன்கள் வெளிப்புறமாய்ப் பொருத்தப்பட்டிருக்கின்றன. புறம் என்பது, பொருள்மயமான உலகம். புலன்கள் மூலமே உலகத்தின் அனுபவம் ஆதாரப்பட்டிருக்கிறது.

    3. மனம்

    மனம் என்றால் எண்ணங்களே என்று பார்த்துவிட்டோம். புலன்களின் தொடர்பு மனமெனும் தளத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடர்பும், தெரிவித்தலும், இடைவிடாமல் நடக்கிறது; இரண்டுக்கும் இடையே கால இடைவெளியும் இல்லை. எனவேதான் எண்ணங்கள் ஓய்வதில்லை. கனவும் உறக்கத்தில் எழும் எண்ணக் குமிழ்களே!

    4. புத்தி

    மேல்மனம் எனலாம். முடிவுகள் எடுக்கப்படும் அலுவலகம். பட்டிமன்றம், விவாதம், மனசாட்சி, ரவுடிக் கட்டு உருவத்தின் ‘நல்லவனா வாய்ந்து இன்னாத்தக் கண்ட? வா ஒரு க்வாட்டரு ஏத்திகினு வெளாவரியா பேசிக்கலாம்,’ போன்ற அதிரடி ‘அறிவுரை’களை, தூய வேட்டி, துண்டு அணிந்து இன்னோர் உருவம் நீதி போதனை சொல்லி மாற்றுவது, நாம் சற்று வருத்தத்துடனே அதன்படி நடப்பது, இவையெல்லாம் புத்தி என்னும் மேடையில்தான்.

    கதவு திறந்திருக்கிறது. உள்ளே ஒரு தேள் கொடுக்கைத் தூக்கியபடி நல்ல காலாகப் பார்த்துப் போடலாம் என்று வருகிறது. கண் பார்க்கிறது; மனம், காட்சியைப் பதிந்து கொள்கிறது; இது தேள்; விஷமுள்ளது; விட்டால் கொட்டிவிடும்; அகிம்சையைக் காந்திக்கு விட்டுவிட்டு ஒரேபோடாய்ப் போடு என்ற முடிவை எடுப்பது புத்தி.

    குறுக்கீடு, அலசல், ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிவும் எடுக்கப்படும் தளம் புத்தி. அதற்கு ஆதாரம் எது?

    5. சித்தம்

    மனச வாட்டுறது ரோசனதானே?

    மனுசன ஓட்டுறது வாசனதானே?

    விருப்பும் வெறுப்பும் வெறும் ஞாபகம்தானே?

    வேசம் மறந்துபோன வேதனதானே??

    சித்தம் ஞாபகங்களின் நூலகம். அங்கே இல்லாததே கிடையாது. நாம் தொட்டதும் நம்மைத் தொட்டதும், இப்பிறப்பும், முற்பிறப்பும். நம் தொடர்பான நமது அனுபவங்கள் அனைத்தின் பாதிப்பும் பத்திரமாகப் பாதுகாக்கப்படிருக்கும் தளம். காக்காக்கடி மிட்டாயிலிருந்து கடவுள் வரை, எல்லாம், ஓஹோஹோ எல்லாம் பதிவாகி இருக்கின்றன. அந்தப் பதிவுகளுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்; அவையே குணங்களுக்கு ஊன்றுகோல். பதிவுகளுக்கு ஒரு போக்கு நேர்கிறது; அதை நிர்ணயிப்பதே வாசனைகள்; எளிதாய்ச் சொன்னால் நினைவுகள்.

    பொதுவாக, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஆயிரக் கணக்கான அனுபவங்கள் சித்தத்தை ஊடுருவுவதில்லை. கடவுள் என்று ஒத்துக் கொள்வீர்களோ, இயற்கை என்று வாதாடுவீர்களோ, எதுவானாலும் இங்கே இதற்கு ஒரு கும்பிடு போடுங்கள்! ஏதோ கொஞ்சநஞ்சம் உள்ளே போவதற்கே இந்தப்பாடு படுகிறோமே, எல்லாம் உள்ளே தங்கிவிட்டால்? நிலைத்த நரகமாகிவிடாதோ வாழ்க்கை?

    ஆனால், மிகவும் தீவிரமான ஆசைகள் சித்தத்தில் வேர்பிடித்துத் தங்கிவிடுகின்றன. கொலையுணர்வு, வெறித்தனமான ஆசைகள் இவை உள்ளே நுழைந்துவிட்டால் அவை வெளியே போவது மெத்தக் கடினம். அவை வேரூன்றிக் கொள்வதோடு, மற்ற எண்ணங்களை மங்கச் செய்து, தாமே பிடிவாதமாக நின்று பேயாடும். சென்ற வாரங்களில் நாம் சந்தித்தவர்கள் இந்த ரகம் இல்லை. பெரும்பாலும், அதிர்ச்சி, இயலாமை இவையே அவர்களது விசித்திரமான நடத்தைக்குக் காரணம். ஆனால், சித்த்த்தின் உள்ளே பேராசை, வெறி இவை நுழைந்துவிட்டால், அவர்கள் வெறியர்களாகி விடுகிறார்கள். அவர்களில் எல்லோருமே வெளியே அம்பலப்பட்டுவிடுவதில்லை. பலர், கைதேர்ந்த கிராதகர்களாக இருக்கிறார்கள். இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதுபோலிருக்கும் முகபாவம், பேச்சு. நடத்தை மட்டும் நரபலி கேட்கும் விதமாயிருக்கும்! மொழி, சாதி, பணம், பதவி என்று பலமுகம் பூணும் இந்த வெறியின் ஒரே நோக்கம் அழிப்பதே ஆளுமை என்பதே!

    சித்தம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், கடவுளைப் பற்றிப் பேசாத சமயங்கள் கூடச் சித்த சுத்தியே முதன்மையான தேவை என்கின்றன. விளக்கங்களில் சிக்காமல் நேரே வருவோம். சித்தம் என்பது கண்ணாடி மாதிரி. தூசு படியாத கண்ணாடி கிடையாது. துணிபோட்டு மூடிவைத்திருந்தாலும், திறந்தவுடனேயே துடைக்க வேண்டியதாயிருக்கிறது!. சலித்துப்போய் விட்டுவிட்டோமென்றால் அப்புறம் கண்ணாடி பார்க்கவே முடியாது. கண்ணாடி பொய்சொல்லாது. அப்படியே உள்ளது உள்ளபடிக் காட்டிவிடும். கொஞ்சம், கருணை காட்டக் கூடாதோ?! புத்தி எடுத்த முடிவு, உபசாரத்திற்கு ஜனாதிபதி உத்தரவுக்குச் செல்வதுபோல், சித்தத்திடம் காட்டப்பட்டு, செயல் நடந்து விடுகிறது.

    செயலின் விளைவு, தேகம், புலன்கள், மனம், புத்தி இவற்றுகில்லை! சித்தத்திற்கே!! எப்படி இருக்கிறது கூத்து! எனவேதான், சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மெத்த அவசியம்; சற்றுக் கடினமும் கூட. முன்பெல்லாம், பண்டாரம், காலையில் அன்னக் காவடி தூக்கிவருவார். கழியில் குலுங்கும் மணியொலி கேட்டு வீட்டிலுள்ளோர் வெளியே வருவார்கள். கழியின் இருபுறத்திலும் செம்புப் பாத்திரங்கள் இருக்கும். அரிசி, அச்சு வெல்லம் போன்றவை அவற்றில் போடப்படும். அந்தச் செம்புப் பாத்திரங்கள் தங்கத்தை மிஞ்சும்படியாக மின்னும்! அத்தனைப் பளபளப்பு! அப்படி, தினந்தோறும் அதைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளக்க வைத்திருப்பதுதான் பண்டாரத்தின் உழைப்பு! அதுதான் சித்த சுத்தி.

    சித்தமும் ஆன்மாவும் ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி இருக்கிறது. சித்தம், ஆன்மாவின் சூழல்; விளக்கைச் சுற்றியிருக்கும் வெளிச்சம் போல! எனவே, அவை இரண்டுபோல் தோன்றும் ஒன்று.

    தேகம், புலன்கள், மனம், புத்தி இவை நமது. சித்தம், ஆன்மா நாம்!

    நாம் பார்க்கும் பொருட்களின் வடிவத்தை மேற்கொள்கிறது சித்தம். அதன்மூலம்தான் நாம், இது நாற்காலி, அது ஆட்டுக்கல் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எதை, ஊன்றிப் பதியம் போடுகிறோமோ அதன் தோட்டமாகவே மாறிவிடும் தன்மை வாய்ந்தது சித்தம். அவரை நட்டால் துவரை முளைக்காது. உண்மையை ஊன்றுவோம்; அது ஓங்கி வளர, அதன் நிழலில் அமர்ந்து குழலூதுவோம்! மனித நேயத்தை ஊன்றுவோம்; அதன் மகத்துவத்தில் மனத் தூய்மை பெறுவோம்! சமூக நலனே வாழ்க்கை என்ற கொள்கையை ஊன்றுவோம்; அதுவே கோட்பாடாக விரிந்து நம் அனைத்துச் சிந்தனைகளையும் கொள்ளட்டும்!

    சித்தன் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே ஏன்? சித்தத்தில் எது தீவிரமாகச் சிந்திக்கப்படுகிறதோ, சித்தம் அதன்மயம் ஆகிவிடுகிறது என்பதைக் காட்டவே!

    அவனிவன் மற்றும் அவையிவை என்னும்

    கவனமே சோற்றினில் கல்

    அவனே இவனே என்னாமல் சிவனே என்றிருந்தால் சித்தமெல்லாம் சிவமயமே! அதன்பிறகே எல்லாம் அவன்செயல் என்று சொல்வது பொருந்தும்!

    அந்தக்கரணம் என்று சொல்லப்படும் இந்த வரிசைக்கிரமம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நம்மையும் பிறரையும் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படைப் பாடமிது. இதைப் புரிந்து கொள்ளாமல், மனித நேயம், உலக சமாதானம் என்பதெல்லாம் வெறும் முழக்கங்களாய் முடிந்துபோகும். விரித்தால் விகாரப்படும் என்பதாலேயே மிகச் சுருக்கமாக இங்கே சொல்லப்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால்,

    சித்தரும் பித்தரே பித்தரும் சித்தரே

    தத்தம் குரலளவே தாம்.

     படத்திற்கு நன்றி:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF

    Share