-செண்பக ஜெகதீசன்

தீயவை செய்தார் கெடுத னிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.
    (திருக்குறள்-208: தீவினையச்சம்)

புதுக் கவிதையில்…                                                                         shadow-of-a-man
நிழல் அவனை
நீங்காது தொடர்ந்துவந்து
நிற்கும் காலடியில்…

அதுபோலத்தான்
அடுத்தவர்க்கு அவன் செய்யும்
தீமைதரும் கெடுதல்,
தீராது தொடர்ந்துவந்து
சேரும் அவனையே…!

குறும்பாவில்…
நிழல்போல் தொடர்ந்துவந்து சேரும்
நீ பிறர்க்குச் செய்த
தீமைதரும் கெடுதலே…!

மரபுக் கவிதையில்…
செல்லு மிடமெலாம் தெடர்ந்துவந்து
     சேர்ந்திடும் நிழலது உன்னடியே!
தொல்லை பிறர்க்குத் தந்துசெய்யும்
     தீமை தந்திடும் கெடுதலதும்
நில்லா தென்றும் உந்தனையே
     நீங்கா தெங்கும் தொடர்ந்திடுமே,
எல்லாம் உன்னைச் சேர்ந்திடுமே,
     எங்கும் தொடரும் நிழல்போலே!

லிமரைக்கூ…
உன்நிழல் உன்னைத் தொடர்ந்துன் காலடிக்கே வரும்!
பிறர்க்குநீ செய்த
தீமையின் கெடுதல் தொடர்ந்துனக்குத் தொல்லை தரும்!

கிராமிய பாணியில்…
போவாதய்யா போவாது
ஒன்னவுட்டுப் போவாது
ஒன்னெழலு போவாது
போற எடமெல்லாம் கூடவரும்
ஒன்
காலடியத் தேடிவரும்!

அதுதான் கத,
அடுத்தவுனுக்குக் கெடுதல்செஞ்சா
அதுவுடாது ஒன்னத்தான்
தொடந்துவரும் ஒன்னத்தான்
தொல்லதரும் ஒனக்குத்தான்!

போவாதய்யா போவாது
ஒன்னவுட்டுப் போவாது
ஒன்னெழல்போல் போவாது!

 

3 thoughts on “குறளின் கதிர்களாய்…(28)

  1. இந்த வாரம் மரபுக்கவிதை மனதை தொட்டது.

  2. நண்பர் அமீர் கூறியிருப்பது போல் மரபுக் கவிதை மனத்தைக் கவர்கிறது. வாழ்த்துக்கள்.

  3. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    திரு. அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க